நினைவு தூங்கிடாது 12
நினைவு தூங்கிடாது 12
நிழல் 12
நீ இல்லாமல் போனால்
என் உயிர் மட்டுமே மிஞ்சும்
என உன்னை துளைத்து
அறிந்துகொண்ட என் துரதிர்ஷ்டத்தை
என்னவென்று நான் சொல்ல
அம்முவின் கழுத்தில் தாலியை கட்டிவிட்டு, அவளை அம்போவென விட்டு சென்ற ஈஸ்வர், மிகுந்த குழப்பத்துடனே வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்டான். அவனது நினைவலைகள் முழுவதும் அம்மு மட்டுமே நிறைந்திருந்தாள். அங்கு வேலையில் ஆழ்ந்திருந்தாலும், அம்முவின் முகம் அவ்வபோது அவன் கண்முன்னால் மின்னி வர்ணஜாலம் காட்டியது.
‘அம்முவிடமிருந்து விலகி செல்ல தானே நினைத்தேன். பிறகு எப்படி தாலியை கட்டினேன்? அவள் என்னை பற்றி என்ன நினைப்பாள்?’ மனதின் கேள்விக்கு, ‘வேறு ஒரு பெண்ணுடன் தன் திருமணத்தை உறுதி செய்துகொண்டு, அவள் கழுத்திலும் தாலி கட்டிய மகா உத்தமன், என உன்னைப்பற்றி ரொம்பபபப பெருமையா நினைப்பாள்’ என அவன் மூளை எள்ளி நகையாடியது.
அவளிடம் அத்து மீறி நடந்து அவள் உணர்ச்சிகளுடன் விளையாடி இருக்கிறேன். அதனால் ஏற்கனவே என் மீது கோபத்தில் இருந்தாள். இப்போது நான் செய்துவைத்த காரியத்தால், என்னை முழுதாக வெறுத்து ஒதுக்கப் போகிறாள்.
அவள் எப்போது என்னை விரும்பி? எப்போது என்னை ஏற்றுக்கொண்டு? எப்போது அவளுடன் குடும்பம் நடத்துவது? உனக்கு கல்யாணம்ன்னு ஒன்னு, இந்த ஜென்மத்தில் நடக்காதுடா ஈஸ்வரா’ என நினைத்துக் கொண்டிருந்தவனின் மனதில் தீடீரென தோன்றிய மின்னலுடன், சந்தோஷ சாரல். ‘என்னது அம்மு உன்னை விரும்பியா? அப்போ நீ அவளை விரும்பறையா?’ என்ற மூளையின் கேள்விக்கு,
சிறிதும் தாமதமில்லாமல்,’ஆம் நான் அவளை விரும்புகிறேன். என் உயிருக்கும் மேலாக விரும்புகிறேன். இனி அவளைத் தவிர வேறு யாருக்கும் என் வாழ்வில் இடமில்லை’ என மனம் பதில் அளித்தது. அந்த பதிலில் மகிழ்ச்சியடைந்தவன், வானத்தில் பறக்காத குறை. இப்போதே சிறகு முளைத்து, தன்னவளிடம் சென்று விட மாட்டோமா? என ஏங்கி தவித்தான்.
‘நீ செய்து வைத்திருக்கும் காரியத்திற்கு, அவள் உன் முகத்திலாவது முழிபாளா? என்று யோசி’ என அவன் மனதை அதட்டியது மூளை.
மனதுக்கும் மூளைக்கும் நடந்த சொற்போரில் மிகவும் பலவீனமானவன்,’இப்போ ரெண்டு பேரும் அமைதியா இருங்க. நான் இந்தியாவுக்கு போக பல நாட்கள் ஆகும். அதற்குள் அவளுக்கு என் மேல் இருக்கும் கோபம் தீர்ந்து விடும். அப்பறம் ஈஸியா அவளை சமாதானப்படுத்தி, வீட்டில் சொல்லி அவளைத் திருமணம் செய்து கொள்வேன். ஆண் ஒன்று, பெண் ஒன்று ரெண்டு புள்ளைங்க பெத்துக்கணும்’ என வரிசையாக மனக்கோட்டை கட்டி கொண்டிருந்தான்.
பாவம் அவன் அறியவில்லை அந்த மனக்கோட்டை, மணல்கோட்டையாக சரிய போகிறதென்று; அவன் ஆசைகள் அனைத்தும் தூள்தூளாக சிதறப்போகிறதென்று; தன் வாழ்வையே வெறுத்து நடைபிணமாக வாழ போகிறானென்று:
†††††
அவன் சென்ற வேலை இழுத்துக்கொண்டே இருந்தது. அந்த வேலை முடிய கிட்டத்தட்ட ஆறு மாதங்களை எட்டியிருந்தது.
‘மூன்று மாதத்தில் திருமணம்’ என முடிவு செய்திருந்தார்கள். இப்போது நான் நாட்களை கடத்திக் கொண்டிருக்கிறேன். அம்மாவிடம் இருந்து நல்ல அர்ச்சனை கிடைக்கப் போகிறது. ‘எப்படி அதை சமாளிப்பது?’ என்று சிந்தித்து கொண்டிருந்தான்.
அவனே வியக்கத்தக்க வகையில், அவனிடம் ‘எப்போது திரும்பி வருவாய்? உன்னால் திருமணம் தடைப்பட்டுக் கொண்டே இருக்கிறது?’ இப்படி எந்தவிதமான கேள்வியும் வரவில்லை. அதில் கொஞ்சம் குழம்பி போயிருந்தான்.
திருமணம் குறித்து பேச்சு வந்தால், அதை மறுப்பது என்ற முடிவில் தான் இருந்தான். ஆனால் அதை பற்றிய எந்த வித கேள்வியும் இல்லாததால் குழம்பிப்போனான். ‘என்ன ஆயிற்று அம்மாவுக்கு? ஏன் என்னிடம் கல்யாணத்தை பத்தி பேசலை? எப்போதும் வெளிநாடு வந்தால், திரும்ப எப்ப வருவ? என கேட்டுகிட்டே இருப்பாங்க. ஆனால் இந்த தடவை அப்படி எந்த கேள்வியும் இல்லை. எதனால் இப்படி? அம்முவுக்கு நான் தாலி கட்டியது தெரிந்து, எதுவும் பிரச்சினை ஆகிவிட்டதா?’ என தனக்குள் குழம்பியவனுக்கு, அன்னையிடம் கேட்கும் துணிவு வரவில்லை.
பிஸினஸ் உலகில் சிம்மசொப்பனமாக இருப்பவன், தன் அன்னையிடம் மட்டும் கொஞ்சம் அடங்கித்தான் இருப்பான். அவரிடம் மறுத்து கூறினாலும், கடைசியில் அவர் ஆசைக்கு விட்டுக்கொடுப்பான், பசுஞ்சோலை கிராம பயணமே அதுக்கு நல்ல சான்று. அவன் முகம் எப்போதும் கடுகடு என கோபமாக இருப்பதால், தேவி அவனிடம் பேசவே அஞ்சுவார்.
அவனிடம் இயல்பாக பேசியது அம்மு மட்டுமே. அவனுக்கு புரிந்தது,’அம்மு தன் கோபத்திற்கு பயந்து தான் சொல்வதைக் கேட்கவில்லை. அவளை யாராலும் அடக்கியாள முடியாது. ரொம்ப துணிச்சல் காரி. பந்தால் காரை உடைத்தது அவள் தவறு. அந்தத் தவறுக்கு தண்டனையாகவே, தான் சொல்வதைக் கேட்டால்’ என்பதை முதல் நாளிலே புரிந்து கொண்டான். இருந்தாலும் அவளுடன் நேரத்தை செலவு செய்ய விரும்பியே, அவளை மிரட்டுவது போல் தன் ஆசைக்கு வளைத்தான்.
‘எப்போதிருந்து அவளை விரும்ப ஆரம்பித்தேன்?’ என்ற கேள்விக்கு,’அவளை பார்த்த முதல் நொடியே, உனக்கு அவள் மீது ஈர்ப்பு தோன்றிவிட்டது. அவள் உன்னவளென அப்போதே உன் மனதில் பதிந்து விட்டது. அதனால்தான் அவள் வேறு ஒருவருடன் சிரித்து பேசிக் கொண்டிருந்ததை, கண்டு உனக்கு கோபம் பொங்கி எழுந்தது. பந்தால் காரில் அடித்தது உனக்கு பெரிய விஷயமே கிடையாது. ஆனால் அதை சாக்காக வைத்து அவளிடம் நெருங்க முயன்றாய்.
உன்னை அலட்சியம் செய்து, கார்த்திக்கின் கரம்பற்றியதை கண்டு, அவனை கொல்லும் வெறி வந்தது. இந்த வெறி கூறவில்லையா உன் காதலை?
அன்று காட்டில் வைத்து அவள் உன்னிடம் அடைக்கலமாகிய போது உன் உயிர் உருகியது, அவள் மயங்கி உன் மீது சரிந்தபோது, உன் உயிர் துடித்தது. அந்த உருகளிலும் துடிப்பிலும் இல்லாத காதலா?
அவளுக்கு உடல்நிலை சரியில்லை என்று தெரிந்தபோது, அவளுக்காக நீ தவித்த தவிப்பில் தெரியவில்லையா உன் காதல்?
உன் அறையின் ஜன்னலில், அவள் முக தரிசனத்திற்காக தவம் கிடந்தாய், அந்த தவம் காட்டவில்லையா உன் காதலின் வரத்தை?
எங்கே உன் மனம், அவள் மீது படர்ந்து விடுமோ என அஞ்சியே, அவளின் ஏழ்மை நிலையை அவளுக்கு சுட்டிக்காட்டுவது போல் உனக்கு நீயே கூறி கொண்டாய். உன் நண்பர்கள் வந்தபோது, அவர்கள் கண்களில் அம்மு பட்டுவிட கூடாது என்று நீ பட்ட பாடு சொல்லவில்லையா உன் காதலின் ஆழத்தை?
உன்னையும் மீறி அன்று ஆற்றில் வைத்து, உன் வசம் இழந்து, அவளிடம் அத்துமீறினாய். எங்கே தனிமையில் சந்தித்தால் அவளை முழுதாக ஆட்கொண்டு விடுவோமோ? என அஞ்சியே அவளிடம் இருந்து விலகினாய், அந்த நெருக்கம் கூறவில்லையா உன் காதலின் தித்திப்பை?
எப்போதும் சிறு பெண்ணாக உனக்கு காட்சியளித்தவளை, அன்று கோவிலில் பாவாடை தாவணியில் பெரிய பெண்ணாக பார்க்கவும், உன் மனம் உன் கட்டுப்பாட்டை முற்றிலும் இழந்தது. மீண்டும் அவளை ஆற்றங்கரை வரவைத்து அவளுடன் வம்பு பேசி, நேரத்தை கடத்தி அவளை ரசித்து கொண்டிருந்தாய், அந்த ரசனையில் தெரியவில்லையா உன் காதல்?
‘எங்கே உன் ஸ்டேட்டஸை மறந்து அவளிடம் சரணடைந்து விடுவாயோ?’ என அஞ்சியே உன் அன்னை கேட்கவும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தாய். ஆனால் மணமகளாக உன் அருகிலிருந்த பெண்ணை பார்க்ககூட விரும்பாமல், அம்மு மட்டுமே உன் கண்களை நிறைத்தாள், அந்த நிறைவில் இல்லாத காதலா?
அவள் உன்னை ‘பொறுக்கி’ என்றதில் உனக்கு கோபம் வந்தாலும், ‘எங்கே அவள் உன்னை முழுதாக வெறுத்து விடுவாளோ? உனக்கு அவள் கிடைக்காமல் போய்விடுவாளோ?’ என அஞ்சியே, அவள் கழுத்தில் தாலி கட்டினாய், அதில் தெரியவில்லையா உன் காதலின் தீவிரம்.
தன் காதலின் வீரியத்தை உணர்ந்த அந்த சிம்மராஜாவின் முகத்தில் வெட்கத்தின் சாயல். ஆண்களின் வெட்கம் கூட ஒருவித கம்பீர அழகு.
அவள் முன்னால் போய்,’பார் முழுதாக அம்முவின் கட்டவண்டியாக மாறி நிற்கும், உன் ஈஸ்வரை பார்’ என சொல்ல வேண்டும் சொன்னபின் அவள் முகம் காட்டும் வர்ண ஜாலங்களில், தொலைய வேண்டும் என பல பல கற்பனைக் கோட்டைகளை கட்டினான்.
அம்முவின் மீதான தன் காதலை உணர்ந்தவன், உணராமல் போனது
தாலி என்ற பெயரில் ஒரு மஞ்சள் கயிறை கட்டி, ஒரு சிறு பெண்ணை அம்போ என விட்டு வந்தோமே, அவள் என்ன ஆனால் என கொஞ்சமாவது சிந்தித்திருக்க வேண்டாமா?
†††††
காலம் யாருக்கும் காத்திருக்காமல் ஓடி மறைந்திருந்தது. ஆறு நீண்ட, நெடிய மாதங்களை வெளிநாட்டில் கழித்த ருத்ரேஸ்வரன், தன் பயணத்தை முடித்துக் கொண்டு தாயகம் திரும்பினான்.
அவன் திரும்பிய மறுநாளே, ஓய்வெடுக்கும் எண்ணம் சிறிதுமின்றி, தன் தேவதையை காண, பசுஞ்சோலை கிராமத்தை நோக்கிய அவன் பயணம் தொடங்கியது.
விசில் அடித்துக்கொண்டே உல்லாச மனநிலையோடு, காரை ஒட்டிக்கொண்டிருந்தவனின் மனம் ‘டீன் ஏஜ் பையன் மாதிரி பிகேவ் பண்ற ஈஸ்வரா. கொஞ்சம் அடக்கி வாசி. உன் வேகத்தை பார்த்து என் நீலாம்பரி பயந்திட போறா’ என தனக்குள் கூறி புன்னகைத்துக்கொண்டான்.
அவன் அறியவில்லை இன்னும் சற்று நேரத்தில் அந்தப் புன்னகை துணி கொண்டு துடைத்தது போல் அழிய போகிறதென்று.
மின்னல் விரைவுடன் பசுஞ்சோலையை அடைந்தவன், வீட்டிற்கு செல்ல மனமின்றி அம்முவை சந்திக்கும் ஆற்றங்கரையை அடைந்தான்.
‘எங்காவது தன்னவள் தென்படுகிறாளா?’ என தேடிக்கொண்டிருந்தான். அவன் விழிகளுக்கு கிடைத்தது என்னவோ ஏமாற்றம் மட்டுமே. அவளை காணாத கண்ணும் பூத்து போனதுவோ?
கார் ஸ்டியரிங்கில் தலைசாய்த்து தன்னவளுடனான ஊடல், கூடலை மனதில் அசைபோட்டுக் கொண்டிருந்தான். சரியாக அந்த நேரம் அங்கே வந்த கார்த்திக் ருத்ரனின் வாகனத்தை தேடி கண்டுப்பிடித்தான்.
நெற்றி சுருங்க, புருவங்கள் முடிச்சிட அந்தக் காரை நெருங்கிய கார்த்திக், ஓட்டுனர் இருக்கையிலிருந்த ஜன்னல் கதவை தட்டினான்.
இனிய நினைவில் தன்னை தொலைத்திருந்த ஈஸ்வர், ஜன்னல் தட்டும் ஓசையில்,’தன்னவள் வந்து விட்டாளோ?’ என ஆர்வமாக தன் பார்வையை திருப்பினான். அங்கிருந்த கார்த்திகை கண்டு ஈஸ்வரின் முகம் சுருங்கியது.
ஒரு நொடியில் தன் முகத்தை வழக்கமான இறுக்கத்திற்கு மாற்றிக்கொண்ட ஈஸ்வர், காரைவிட்டு இறங்கி கதவடைத்து, அதில் தன் முதுகைச் சாய்த்துக்கொண்டு, ஒருகாலை மற்றொரு காலின் மீது வைத்து, தன் கைகளை பேண்ட் பாக்கெட்டில் விட்டு ஸ்டைலாக நின்றான்.
‘உன்னால் ரெண்டு பொண்ணு வாழ்க்கையே போச்சு. உனக்கு ஸ்டைல் கேக்குதா?’ என இகழ்ச்சியாக நினைத்தான் கார்த்திக்.
“உன்னோட காரை பார்த்ததா பிரெண்ட்ஸ் சொன்னாங்க. வீட்டுக்கு போகாம ஏன் இங்கே நிற்கிற? உன் கிட்ட தனியா பேசணும்.” என்று ருத்ராவின் முகம் பார்த்தான்.
அதில் ‘என்னோட பர்சனல் விஷயத்தில் தலையிடாதே. நீ வந்த காரணத்தை மட்டும் சொல்லு?’ என செய்தி இருந்தது.
அதை புரிந்து கொண்டவன்,”பிந்து அவ விரும்பின பையனை கல்யாணம் பண்றதுக்கு வீட்டை விட்டு போய்டா?” என அவன் முகம் பார்த்தான்.
“யார் பிந்து? அவ வீட்டை விட்டு போனா எனக்கு என்ன?” அசட்டையாக கேட்டான்.
“பிந்து, பிருந்தா உனக்கு நிச்சயம் செய்த பெண்.” மின்சாரம் தாக்கியது போல் திகைத்துப் போனான். ‘ஐயோ எனக்கு நிச்சயம் பண்ண பொண்ணு பெயர் கூட ஞாபகம் இல்லையே. அடியே நீலாம்பரி! என் நினைவுகள் முழுவதையும், இப்படி களவாடிக் கொண்டயே. உனக்கே இது நியாயமா?’ என செல்லமாக அவளை மனதில் கொஞ்சி கொண்டான். முகத்தில் திகைப்பு மட்டும் மாறவே இல்லை.
அவன் திகைத்த முகத்தை பார்த்துக்கொண்டே,”அமிர்தாவும், அவங்க அம்மாவும், ஃபயர் ஆக்சிடென்ட்ல இறந்துட்டாங்க.” அடுத்த வெடியை கொளுத்தி போட்டான். இச்செய்தியை கேட்ட ருத்ரேஸ்வரனுக்கு ஹை வோல்டேஜ் மின்சாரம் தாக்கியது. ‘நான் பார்க்க ஆசைப்பட்ட பெண். என் கண்ணில் படாமலே இந்த உலகை விட்டுப்போய்ட்டாளா?’ என மனம் வருந்தினான்.
“உன்கிட்ட எப்படி சொல்லுறதுன்னு வீட்ல எல்லாரும் யோசிச்சிட்டு இருந்தாங்க. நீ பாரின்ல தனியா இருக்கப்ப சொன்னா ரொம்ப கஷ்டபடுவ. அதனால் உன் கிட்ட சொல்லல. நீ திரும்பி வரவும் நான் சொல்லிடறேன்னு பொறுப்பை ஏத்துக்கிட்டேன்.” என் கடமை முடிந்தது. என கையை கட்டிக்கொண்டு அவன் முகத்தை கூர்ந்து பார்த்தபடி நின்றான் கார்த்திக்.
செய்தியைக் கேட்டதும் முகத்தில் அதிர்வு தோன்றினாலும், அதை இயல்பான ஒரு செய்தியாகவே எடுத்துக்கொண்டான் ஈஸ்வர். வந்த காரியம் முடிந்தது என கிளம்பபோன கார்த்திகை தடுத்த ஈஸ்வர்,”அம்முவை பார்க்கணும். அவ எங்க இருப்பா? உனக்கு தெரியுமா? ரேகாவுக்கு மட்டுமில்லை, உனக்கும் அவ ஃப்ரெண்டு தான?” தன் இயல்பையும் மீறி சரமாரியாக கேள்வி எழுப்பினான்.
இப்போது அதிர்வது கார்த்திகின் முறை. அவன் கேள்வியில் குழம்பிப்போன கார்த்திக், அவன் முகத்தையே சந்தேகமாக பார்க்க “என்ன? என் முகத்தில் படமா ஓடுது? இப்படி பாக்குற.” என்றான் எரிச்சலாக.
“நீ நல்லா தான் இருக்கியா? இல்ல சொன்னதை உடனே மறக்கும் வியாதி எதுவும் இருக்கா?” என்றான் நக்கலாக.
“என்ன உளறல் இது?” சிம்மகர்ஜனை.
“பின்ன விடிய விடிய ராமாயணம் கேட்டு, விடிந்ததும் சீதைக்கு ராமன் சித்தப்பா என்று சொன்ன மாதிரில இருக்கு.”
புரியாத பார்வையோடு கார்த்திகை வெறித்திருந்தான் ருத்ரேஸ்வரன். அவன் ஏதோ பெரிதாக கூற போகிறான் என மனம் முரசு கொட்டியது. அதே மாதிரி ஈஸ்வரனின் தலையில் இடியை இறக்கினான் கார்த்திக்.
“இவ்வளவு நேரமும் நான் பேசிக் கொண்டிருந்தது, அம்மு என்கின்ற அமிர்தாவை பற்றி தான்” அலுங்காமல் குலுங்காமல் ஈஸ்வரனின் தலையில் ஆர்டிஎக்ஸ் பாம்மை எறிந்தான்.
அதற்கு மேல் வேறு எதுவும் கேட்கும் துணிவில்லாத ஈஸ்வர், ருத்ரேஸ்வர் அந்த நிமிடத்திலிருந்து நடைபிணமானான்.
அம்மு இந்த உலகத்தில் இல்லை என்பதை அவனால் நம்பவே முடியவில்லை.
வீட்டுக்கு சென்று குடும்பத்தாரை பார்க்கும் விருப்பமின்றி சென்னை சென்றவன், அதன்பின் கடந்த மூன்றரை வருடங்களாக பசுஞ்சோலை கிராமத்துப் பக்கம் தலை வைத்து கூட படுக்கவில்லை .
†††††
அதிர்ச்சி சற்று விலகிய பிறகு, அவன் முட்டாளாக இருந்ததை புரிந்து கொண்டான்.
‘அன்று தோட்டத்தில், தன் சகோதரியுடன் விளையாடிய அம்முவை மட்டும் கண்ட நான், அருகில் இருந்த பிருந்தாவை பார்க்காமல் முட்டாளாக இருந்திருக்கிறேன்.
அன்று காட்டிற்கு சென்றபோது ‘நான் தான் அமிர்தா’ என்று அம்மு சொன்னதை நம்பாமல் முட்டாளாக இருந்திருக்கிறேன்.
அமிர்தாவின் பாடலை கேட்டு கோவிலில் நுழைந்த நான், சன்னிதானத்தின் முன் கண்மூடி கைக்கூப்பி நின்ற அம்மு தான் அந்தப் பாடலைப் பாடினால் என்பதை எப்படி உணராமல் போனேன்? அவள் பேசும் குரலை அடையாளம் கண்டு கொண்ட நான், பாடும் குரலை இப்படி அறியாமல் முட்டாளாக இருந்திருக்கிறேன்.
பிருந்தா யாரோ ஒரு பெண்ணாக இருந்தாள், தன்னை அம்மு இந்த அளவு எதிர்க்க வேண்டிய அவசியமில்லை என்பதை யோசிக்காமல் முட்டாளாக இருந்திருக்கிறேன்.
எனக்கு நிச்சயம் செய்த பெண் எங்கு இருக்கிறாள்? என்ன செய்கிறாள்? என்பது கூட தெரியாமல் முட்டாளாக இருந்திருக்கிறேன். அப்போதே அவளைப் பற்றிய செய்தியை கேட்டிருந்தால், என் மூளை தேடிய அமிர்தாவும், என் மனம் விரும்பிய அம்முவும், ஒருவரே என்பதை கண்டுகொண்டு, பிருந்தா உடனான திருமணத்தை நிறுத்தி, அம்முவை கைபிடித்திருப்பேனே. இப்படி எல்லாத்தையும் கோட்டை விட்டுவிட்டு நிற்கும் சூழ்நிலை வந்துவிட்டதே என மருகி தவித்தான்.
‘அம்மு ஃபயர் ஆக்சிடென்டில் இறந்துவிட்டாள்.’ இந்த வாக்கியமே திரும்பத் திரும்ப தன் மனதிற்குள் சொல்லி நம்ப வைக்க முயன்றான் ருத்ரேஸ்வரன்.
“தன்னவளுடன் இருந்த அந்த பத்து நாட்களே சொர்க்கம்” என அந்தப் பத்து நாட்களை, மனதில் திரும்பத் திரும்ப அசைபோட்டு கோடிமுறை அவளுடன் நினைவில் வாழ்ந்திருப்பான்.
ஏற்கனவே தொழில் உலகில் சிம்மசொப்பனமாக இருப்பவன். இப்போது அனைவரும் பேசவே அஞ்சி நடுங்கும் அளவு இறுகி போனான்.
அதன் பிறகு அம்பிகா தேவி அவனை திருமணத்திற்கு வற்புறுத்த,”இனி தன் வாழ்வில் திருமணம் என்பதே கிடையாது” என உறுதியாக கூறி மறுத்து விட்டான். வேற எந்த பெண்ணையும் ஏறெடுத்து பார்க்காமல், திருந்திய ராமனாக அம்முவை மட்டுமே மனதில் கொண்டு வாழ்ந்து வருகிறான்.
மித்ராலினி அவன் கண்ணெதிரே வந்து நிற்கும்வரை, திருமணம் என்ற ஒன்றையே மறந்திருந்தான். அவனுள் மறித்து போயிருந்த உணர்வுகளுக்கு உயிர்கொடுத்து, அவனின் உணர்ச்சிகளோடு சதிராடுகிறாள் இந்த சதிகாரி …ம்மு.