நினைவு தூங்கிடாது 16.2

நிஜம் 16

விருது வழங்கும் விழா முடிந்த ஒரு வாரத்திற்கு பிறகு:

ஐந்து நட்சத்திர விடுதியின் டான்ஸிங் ஃபிலோர்

மங்கிய ஒளியிலும் காதை கிழிக்கும் ஓசையிலும், பல இளம்பெண்கள் மற்றும் ஆண்கள், தங்களை மறந்து ஆடிக்கொண்டிருந்தனர் இல்லை இல்லை  அப்படிச் சொல்லக் கூடாது வரம்பு மீறி கொண்டிருந்தனர்.

அந்த அறையின் மங்கிய ஒளியை மேலும் மங்கலாக்க,  பளிச்சென்ற நிலா முகத்துடன்,  ஒரு அழகிய இளம் பெண் நுழைந்தாள்.

அவள்! வானில் இருக்கும் நட்சத்திரங்களுக்கு போட்டியாக, இன்றைய மண்ணுலக நட்சத்திரம்,  திரையுலகின் முடி சூடா அரசி, பல காளையர்களின் கனவுக் கன்னி மித்ராலினி.

அவளது விழிகள் யாரையோ தேடிக் கண்டுகொண்டது. அந்த விழிகளில் தான் எத்தனை பளபளப்பு,  தன் இரையை வேட்டையாடக் காத்திருக்கும் புலியின் பளபளப்பு.

அவள் விழி வட்டத்தில் சிக்கியது,  வளர்ந்து வரும் இன்றைய இளம் தொழிலதிபர் சூரஜ் உதயகுமார். இதழ்களில் தவழ்ந்த இகழ்ச்சி புன்னகையுடன் அவனை நெருங்கினாள்.

அவள் அழகில் மயங்கிப்போன ஆடவன் மது உண்ட வண்டின் நிலையில். “வெல்கம் கார்ஜியஸ்.” அவள் கரத்தை பற்றி தன்னை நோக்கி இழுத்துக் கொண்டே, “எவ்வளவு நேரம் உனக்காக வெயிட் பண்றது? கம் டார்லிங், லேட்ஸ் டான்ஸ்” என அவளின் தோளில் ஒரு கையையும், இடுப்பில் ஒரு கையையும் இட்ட சூரஜ், அவளை தன் கையணைப்பில் கொண்டு வந்தான். அவன் தொட்ட இடங்கள் கம்பளிப்பூச்சி ஊர்வது போல் உணர்ந்த பெண், ‘காரியம் முக்கியம்’ என பல்லைக் கடித்து சகித்துக் கொண்டாள். 

சிறிது நேரம் அவளுடன் நெருங்கி ஆடிய ஆடவனின் உணர்ச்சிகள் தூண்டப்பட்ட நிலையில்,”டான்ஸ் போதும் டார்லிங். லேட்ஸ் கோ டு ரூம்” என அவளை  அழைத்து கொண்டு, தனது அறைக்கு சென்றான்.

அவனது அறைக்கு செல்லும் வழியிலேயே, அவனை மயக்கமடைய வைத்து ரிஷியின் உதவியுடன் அவனை கடத்தியிருந்தாள் மித்ரா.

அந்த ஐந்து நட்சத்திர விடுதி அவனுக்கு சொந்தமானது. அவன் செய்யும் லீலைகள் எதற்கும் தடயங்கள் இருக்கக்கூடாதென, அவன் இருக்கும் நேரங்களில் கண்காணிப்புக் கருவிகள் எதுவும் செயல்படாது. இதை அறிந்தே பெண் செயல்பட்டாள்.

†††

இரண்டு நாட்களுக்குப் பின்னர் தலைப்புச்செய்தி:

“வளர்ந்து வரும் இன்றைய இளம் தொழிலதிபர் சூரஜ் உதயகுமார் மாயம். இரண்டு நாட்களாகத் தேடுதல் வேட்டை நடந்து கொண்டிருப்பதாக  நம்பிக்கை வட்டத்திலிருந்து தகவல் கிடைத்துள்ளது.”

அதை குரூரமாக, உதட்டில் உறைந்த புன்னகையுடன், வெறித்திருந்தது ஒரு  உருவம். 

அந்த உருவம் மித்ராவாகிய அம்முவைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்?

அவளது பார்வை சூரஜை அடைத்து வைத்திருந்த அறையை நோக்கி திரும்பியது. அந்த அறை, எங்கு வைத்து இவளை, அவன் நாசம் செய்தானோ? அதே அறை. 

“ஏய் அமிர்தா, ஒழுங்கா என்னை விட்டுடு. இல்லை விளைவுகள் பயங்கரமாயிருக்கும்.” என உறுமிக் கொண்டிருந்தான் கட்டப்பட்ட நிலையிலிருந்த சூரஜ்.

அவன் குரலைக் கேட்ட அம்மு, பெண் வேங்கையாக அந்த அறைக்குள் நுழைந்தாள். “என்னடா வேணும் உனக்கு? உன் முன்னாடி தானே நிற்கறேன், என்ன பண்ண முடியும் உன்னால்?” என்றாள் இகழ்ச்சியாக.

“ஒழுங்கா என்னை விட்டுடு இல்லைனா உனக்கு தான் பிரச்சனை.” அவனின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்ட பெண்,

“என்ன பிரச்சனை வரப்போகுது? உன்னால் ஒரு ம… புடுங்க முடியாது. உனக்கு ஒரு ஹாட் நியூஸ், எல்லா செய்தி சேனல்களிலும் உன்னை பற்றிய செய்திதான் வருது என்னவென்று தெரியுமா? “தொழிலதிபர் சூரஜ் உதயகுமார் மாயம். இரண்டு நாட்கள் தேடுதல் வேட்டை.” என்றாள் அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு. 

“எவ்வளவு தேடினாலும் உன்னை கண்டுபிடிக்க முடியாது. உன்னோட கெட்ட நேரம் உனக்கு சொந்தமான இந்த இடம் உன் பெற்றோர்களுக்கு கூட தெரியாது. அவ்வளவு அயோக்கியத்தனம் பண்ணியிருக்க.” என்று நிறுத்தி அவன் கண்களுக்குள் ஊடுருவி,

“பார்த்தியா உன்னோட நேரம், நீ அயோக்கியத்தனம் பண்றதுக்காக கட்டிவச்ச மாளிகை, உன்னோட கல்லறையாக போகுது. இங்கே வச்சு எத்தனை பெண்களோட வாழ்க்கையை நீ அழிச்சிருக்க, இப்ப அதற்கான தண்டனையை அனுபவிக்கபோற” என்றாள் கடின குரலில். 

ஆம் அந்த மாளிகையில் பல பெண்களின் கண்ணீர்க் கரைகள் கலந்திருக்கிறது. இந்த மனித மிருகமும், அன்று அம்முவால் கொல்லப்பட்ட மனித மிருகமும், தாங்கள் ஆசைப்பட்ட பல பெண்களை இங்கே வைத்து நாசம் செய்திருக்கிறார்கள்.  

இவர்களின் இந்த கருப்புப் பக்கத்தை தெரியாத ஈஸ்வர், ‘தன்னை போலவே, தங்களை நாடி வரும் பெண்களுடன் மட்டுமே இணைகிறார்கள்’ என நினைத்திருந்தான். 

பல பிரபலமான நடிகைகள் பணத்துக்கும் புகழுக்கும் ஆசைப்பட்டு, இவர்களுக்கு அடிபணிந்து போயினர். அவர்களின் ஆசைக்கு அடிபணியாத பெண்களை மிரட்டி பணிய வைத்தனர். மிரட்டியும் பணியாத பெண்களை இந்த மாளிகைக்கு கடத்திவந்து நாசம் செய்திருக்கின்றனர்.

அவர்களது இலக்கு எப்பொழுதும் மேல்மட்ட பெண்களாக மட்டுமே இருந்தது. அவர்களை எதிர்த்த அம்மு மட்டுமே இதிலிருந்து விதி விலக்கு. அவர்களது இலக்கு எப்பொழுது மாறியதோ? அப்போதே அவர்கள் விதியும் மாறியது அம்முவால்.

அவர்களது இந்த குணத்தை அறிந்த பெண்,’தன் அந்தஸ்து உயர வேண்டும் அப்போதுதான் அவனை நெருங்க முடியும். அதற்கு ஒரே வழி தான் பிரபலமாக வேண்டும்.’ என்பதை உணர்ந்து கொண்டு, திரையுலகில் கால் பதிக்க ரிஷியின் உதவியை நாடினாள். அவள் இலக்கு அடைந்தது விருது வழங்கும் நிகழ்ச்சியின்போது. 

ஆம், ருத்ரா மித்ராவை நான்கு ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த, அதே விருது வழங்கும் நிகழ்வில்தான், சூரஜும் அவளைக் கண்டான். தான் நாசம் செய்த பல பெண்களில் அம்முவும் ஒருவள். அதனால் சூரஜுக்கு அவளை அடையாளம் தெரியவில்லை. 

அவள் அழகில் மதிமயங்கி அமர்ந்திருந்தான் சூரஜ். மேடையிலிருந்த மித்ராவின் பார்வை முழுவதும் கூட்டத்திலிருந்த தன் இரையின் மீதே இருந்தது. ‘அவள் தன்னை பார்க்கவில்லை’ என்ற கோபத்தில், திரையுலகத்தை வெறுக்கும் ருத்ரா அவளுடன் நடிக்க சம்மதம் தெரிவித்திருந்தான்.

விருது வழங்கும் விழாவில் அம்முவை கண்ட சூரஜுக்கு, அவளின் மேல் மோகம் தலைவிரித்தாடியது. அவள் வேண்டுமென அவனின் ஒவ்வொரு அணுக்களும் சத்தமிட, அம்முவை அழைத்து,”ஹே கார்ஜியஸ்! நான் சூரஜ். எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு. ஒரு நாள் நீ எனக்கு வேண்டும். எப்போது என்னோட ஆசையை தீர்த்து வைக்கப்போற” என்றான் போதை ஏறிய குரலில்.

அவனின் அந்த அழைப்பிற்காகவே காத்திருந்த பெண்ணும் உடனே தன் சம்மதத்தை தெரிவித்திருந்தாள். உடனடி சம்மதத்தில் கொஞ்சம் கூட சந்தேகம் வராது சூரஜ், அவளை அடையும் நாளுக்காக காத்து இருந்தான்.

தற்போது அம்முவிடம் மாட்டி கொண்டு முழி பிதுங்கி நிற்கிறான்,”நான் அன்னைக்கே சொன்னேன் என் கிட்ட வச்சுக்காத அப்பறம் நீ உயிரோடவே இருக்க மாட்டேன்னு கேட்டியா?” என்றவள் அவனை நெருங்கி,

“இந்த கை தானே என்னை தொட்டது. எத்தனை பெண்களை அழித்தது. இது இனி உனக்கு தேவையில்லை” என அவன் கையை உடைத்தாள்.

“இந்த கண்கள் தானே என்னை ரசித்தது.” என்று கண்ணை குருடாக்கினாள். 

அதற்குமேல் மெல்லிய மனம் படைத்த பெண்ணால், செல்ல முடியவில்லை ரிஷியின் மார்பில் தஞ்சம் அடைந்தாள். 

ரிஷியும் அவளை சமாதானப்படுத்தி, அங்கிருந்து அழைத்துச் சென்றான். கூலிப்படையினரிடம் சூரஜின் பொறுப்பை ஒப்படைத்து, அவனை அங்கயே கொன்று, அதே வீட்டில் புதைக்குமாறு உத்தரவிட்டிருந்தான். 

சூரஜை பழிவாங்க மித்ரா எடுத்துக் கொண்ட ஒவ்வொரு முயற்சிக்கும், பக்கபலமாக நின்றனர் ரிஷி, கிரிதரன், கார்த்திக்.

†††

“இதுதான் நடந்தது ருத்ரா. என்னை நாசமாக்கியவன் இப்போது உயிரோடு இல்லை. இனியாவது என்னை தொந்தரவு பண்ணாத. இந்த படம் முடியவும் நீ யாரோ? நான் யாரோ?” 

“உன்னை விடரதா? அதை அப்புறம் பார்க்கலாம். இப்போ பிந்து எங்க?” 

ஒரு பெருமூச்சுடன்,”நாளைக்கு காலையில கூட்டிட்டு போறேன். இப்ப என்னைக் காணாமல் என்னுடைய வரு தவிச்சு போயிருப்பான். நான் போகணும்.”

ருத்ரா ஏதோ சொல்ல வாயை திறந்து, சொல்ல முடியாமல் தலையசைத்து அவளை அழைத்துக்கொண்டு அவள் இல்லம் சென்றான். 

அங்கு வீட்டிலோ எந்த பரபரப்பும் இல்லாமல் அனைவரும் சமையல் செய்து கொண்டிருந்தனர். இந்தக் காட்சியைக் கண்ட அம்முவின் காதில் புகை வராத குறை.

“ஒரு சின்ன பிள்ளையை காணமே, அவளைத் தேடுவோம்ன்னு கொஞ்சமாவது அக்கறை இருக்கா? ஜாலியா சமையல் செஞ்சிகிட்டு இருக்கீங்க?” என இடுப்பில் கை வைத்து அவர்களை முறைத்து நின்றாள்.

“இதோ இங்க இருக்கிற நல்லவரு, உன்கிட்ட விஷயத்த வாங்காமல் சும்மா இருக்கமாட்டார். அதை தெரிந்ததால்தான், அவருக்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுத்தேன்” என கார்த்திக்கும் ரேகாவும் ருத்ரேஷ்வரை கை காட்டினர். 

“யூ டூ வரு? என்னைக் காணாமல் தவச்சு போயிருப்பின்னு நினைச்சா? அவங்க கூட சேர்ந்து…” என முடிக்க முடியாமல் கண்கலங்கினாள். ருத்ராவிடம் பகிர்ந்த தன் பழைய வாழ்க்கை, அவளைத் தவிப்பில் ஆழ்த்தியிருந்தது.

ரிஷி அவளை சமாதானப்படுத்தும் முன், அவளருகில் நின்ற ருத்ரா, அவள் தோளில் கை போட்டு தன் அனைப்பிற்கு கொண்டுவந்து,

“நான் கூட தான் நாலு வருஷமா நீ இல்லாமல் தவிச்சி போயிட்டேன்.” அவனை ஒரு மாதிரியாகப் பார்த்தபெண், அவன் கரங்களை விலக்க முயன்று கொண்டே,

“அதுதான் இவ்வளவு சீக்கிரம் என்னை தேடி வந்தயா?” என்றாள் அலட்சியமாக. அவளை தன்னிடமிருந்து விலக்கி,

“எல்லாம் இந்த கார்த்திக் பண்ண வேலை. நீ உயிரோட இல்லை என்று சொல்லி, என்னை திசை திருப்பிவிட்டான். எனக்கு சினிமா பார்க்கிற பழக்கம் இல்லாததால் உன்னை கண்டுபிடிக்க முடியாமல் போய்விட்டது.” என கார்த்திகை முறைத்தான்.

“ஆமாம் நான் தான் சொன்னேன். அவள் உயிரோடு இருக்கறது தெரிஞ்சா, அவளை தேடி நீ போயிருப்ப. அவளுக்கு இருந்த கொஞ்ச நஞ்ச நிம்மதியும் மொத்தமா பரி போயிருக்கும். அவ ‘படத்துல நடிக்க போறேன்’ சொல்லவும், எங்கே உன் கண்ணுல மாட்டிடுவாளோன்னு பயந்தேன். ஆனால் அவளின் நல்ல நேரம் உனக்கு படம் பார்க்கிற பழக்கம் இல்லை.”

“அப்பாவுக்கு உடம்பு சரியில்லாததால் அந்த அவார்ட் பங்ஷனுக்கு போனேன். இல்லைனா இன்னும் என் அம்முவை தெரியாமல் இருந்திருப்பேன். எல்லாம் உன்னால்” என குற்றம்சாட்டினான்.

“அதான் இப்ப தெரிஞ்சிருச்சு இல்ல போ போய் உன் வேலையை பார்” 

“நீ வீட்டுக்கு வருவ இல்ல அப்ப கவனிச்சுக்கிறேன். இப்ப கிளம்புறேன்” என விடைபெற்றான்.

†††

மறுநாள் காலையில் அம்மு வாக்களித்தது போலவே, அவளை அழைத்துக்கொண்டு பிந்து இருக்கும் மருத்துவமனைக்கு விரைந்தான் ஈஸ்வரன்.

அந்த மனநல மருத்துவமனையின் ஒரு அறையில், வெற்று சுவற்றை வெறித்து கொண்டிருந்தாள் பிந்து. அவளை நெருங்கிய அம்மு,”பிந்து உன்னோட அம்மு வந்திருக்கேன். என்னோடு பேசு” என ஆரம்பித்து ஏதேதோ பேச முயற்சித்தாள். எதற்கும் பிந்துவிடம் மாற்றமில்லை. 

அம்முவை நெருங்கிய ஈஸ்வர் அவள் தோளில் கை வைத்து,”ரிலாக்ஸ் அம்மு. பிந்துக்கு சீக்கிரம் சரியாகும்.” என சமாதானப் படுத்த முயன்றான்.

அவன் குரலைக் கேட்டு அம்மு,”எல்லாம் உன்னால் தான் ஈஸ்வர். நீ எங்க வாழ்க்கையில் வராமல் இருந்திருந்தால், நல்லா இருந்திருப்போம். எல்லாம் உன்னால்தான் ஈஸ்வர்.” என சீறினாள்.

ஈஸ்வர் என்ற பெயர் பிந்துவிடம் மாற்றத்தை கொண்டு வந்தது. அவளின் நினைவுகள் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டது.