நினைவு தூங்கிடாது 5.2
நினைவு தூங்கிடாது 5.2
நிழல்
உன் முகம் காண
என் கண்கள் ஏங்குதடி
உன் விழி அசைவில்
என் உலகம் இயங்குதடி
உன் மடியில்
என் உயிர் பிரிந்தால் மகிழ்வேனடி
உன் மேல் உண்டான உணர்வை
என்னவென்று நான் சொல்ல
முன்தின மாலையிலிருந்து ஏதோ சிந்தனையோடு, மௌனமாக சுற்றித்திரிந்த அம்முவை பார்த்து, பிருந்தா, கஸ்தூரி இருவரும் அச்சமடைந்தனர்.
அவள் தனக்குள்ளேயே எதற்காகவோ மருகி கொண்டிருக்கிறாள் என்பதை உணரமுடிந்த அவர்களால், அதற்கான காரணத்தை அறிய முடியவில்லை. எவ்வளவோ கேட்டுப் பார்த்தாள் பிருந்தா, அம்முவிடமிருந்து பதில் கிடைக்கவில்லை.
ஓரிடத்தில் நில்லாமல் தேனீபோல் துருதுருவென, அங்கும் இங்கும் சுற்றித் திரியும் அம்மு, மௌனமாக வீட்டிற்குள் அலைவதை அவர்களால் தாங்க முடியவில்லை.
எப்போதும் போல் கஸ்தூரி காட்டு வேலைக்கு சென்றுவிட வீட்டில் அம்முவும் பிருந்தாவும் மட்டும் தனித்திருந்தனர். அப்போதும் அம்முவின் மௌனம் தொடர, அதில் சலிப்படைந்த பிருந்தா, அவளை முன்பு போல் கலகலப்பாக மாற்ற என்ன செய்யலாம் என தீவிர சிந்தனையில் ஆழ்ந்தாள்.
பிருந்தாவின் சிந்தனை, அம்முவின் தோழமைகளிடம் முடிந்தது. அவர்களுடன் விளையாடினால் அம்மு பழைய நிலைக்கு திரும்புவாள் என்பதை உணர்ந்து, ஒரு நான்கு வீடு தள்ளி இருந்த சோட்டுவை அழைத்து,
“சோட்டு நேத்துல இருந்து அம்மு கொஞ்சம் மூட் அவுட்ல இருக்கா. அவள வெளியில கூட்டிட்டு போயி விளையாடுங்க. அப்பதான் அவ சரியாவா.” என உடன்பிறப்புக்காக தூது சென்றாள்.
“என்னது அம்மு டல்லா இருக்காளா? நான் இப்பவே போய் பாக்குறேன் பிந்து அக்கா.” என்று உடனே,”அம்மா நான் அம்மு கூட விளையாட போறேன்” தன் அன்னையிடம் தெரிவித்துவிட்டு தன் மற்ற நண்பர்களையும் அழைக்க ஓடிவிட்டான்.
முழுபரிட்சை முடிந்து பள்ளி விடுமுறையில் அனைவரும் வீட்டில் இருந்ததால் விளையாட்டுக்கு எந்த தடையும் இல்லை.
‘டேய் சோட்டு நான் உனக்கு அக்கா, அம்மு உனக்கு பிரண்டா டா? எல்லாம் நேரம்.’ எனத் தலையில் அடித்துக் கொண்டே வீட்டை அடைந்தாள்.
சிறிது நேரத்திலேயே அந்த சின்னச் சிட்டுக்கள்,”அம்மு வா விளையாட போலாம்” என அவளை இழுத்துச் சென்று விட்டனர்.
‘இனி அம்மு பழையபடி கலகலபாகிவிடுவாள்’ என்ற நம்பிக்கையோடு, பிருந்தா முகத்தில் புன்னகையுடன் அவளின் வேலையில் இறங்கிவிட்டாள்.
அப்படி என்ன வேலை? பிளாஸ்டிக் வயரில் கூடை பின்னுதல். இது பொழுதுபோக்குக்காக அல்ல வருமானம் ஈட்டுவதற்காக.
கூடை பின்னுவதற்கு தனித்தனி கணக்கு உள்ளது. கூடையின் அடிப்பாகம், கூடையின் உடல்பகுதி, கைப்பிடி என தனி கணக்கு உள்ளது. ஒரு கூடையை முழுதாக முடித்துக் கொடுத்தால் அதற்கு சொற்ப பணம் கிடைக்கும்.
சிலர் அவர்களே சந்தையில் போட்டு வியாபாரம் செய்வார்கள். பிருந்தாவைப்போல் பெண்கள் வியாபாரம் செய்ய முடியாத காரணத்தால், வீட்டிலிருந்தே பின்னி அதிலிருந்து வருமானத்தை ஈட்டுகின்றனர்.
அதேபோல வீட்டிலேயே செடிகளை பயிரிட்டு அதில் வரும் காய்கறிகள், பழங்கள், பூக்கள் என அனைத்தையும் மொத்த வியாபாரிகளிடம் குடுத்து பணமாக பெறுகிறார்கள். அந்த பொருட்கள் அனைத்தும் தரமானதாகவும் சுத்தமானதாகவும் இருக்கும்.
நாம் ஷாப்பிங் மால் சென்று ஒரு பொருளை வாங்கும்போது எந்தவித பேரமும் பேசாமல், அவர்கள் என்ன விலையை நிர்ணயிக்கிறார்களோ, அது ஆயிரமாக இருந்தாலும் சரி, லட்சமாக இருந்தாலும் சரி கேள்வி கேட்காமல் வாங்கி செல்வோம். ஆனால் தன் வயிற்றுப் பாட்டிற்காக பாடுபடும் சிறு சிறு வியாபாரிகளிடம், நாம் பேரம் பேசி அவர்களின் உழைப்பை விலை பேசுகிறோம். நம்மிடமிருந்து அவர்கள் வாங்கும் ஐந்து ரூபாயையும், பத்து ரூபாயையும் வைத்து, அவர்கள் மாட மாளிகை கட்ட போவதில்லை. நாம் குடுக்கும் பணம் ஒருவரின் வயிற்றுப் பசியைப் போக்கும்.
பிருந்தாவும் தன் அன்னைக்கு உதவியாக வீட்டிலிருந்தே கூடை பின்னுதல், காய்கறி பயிரிடுதல், துணி தைப்பது என தன்னாலான சிறுசிறு உதவிகளை தன் குடும்பத்திற்கு செய்கிறாள்.
அமிர்தாவுக்கு பாட்டும், படிப்பும் வருமளவு வீட்டு வேலைகள் வரவில்லை. பிருந்தா குடும்ப சூழ்நிலையை உணர்ந்து, வீட்டு வேலை, கைத்தொழில்களை கற்றாள். அமிர்தா தன் கவனத்தை படிப்பில் காட்டி எப்போதும் வகுப்பில் முதல் இடத்தை தக்க வைத்துக்கொள்வாள்.
இதுவரை எனக்கு இது வேண்டும், அது வேண்டும் என இரு பெண்களும் கஸ்தூரியிடம் கேட்டதில்லை. குடும்ப சூழ்நிலையை உணர்ந்து நடந்து கொள்ளும், தன் இரு செல்வங்களையும் நினைத்து கஸ்தூரிக்கு எப்போதுமே பெருமை உண்டு.
பிருந்தாவும் கஸ்தூரியும் தங்கள் உழைப்பால் களைப்படையும் நேரத்தில், அமிர்தாவின் உயிரோட்டமான பேச்சுகளும் செயல்களுமே அவர்களுக்கு பூஸ்ட். சோர்ந்து அமரும் நேரத்தில் அமிர்தாவின் சீண்டல்களும் விளையாட்டுகளும் அவர்களை சுறுசுறுப்படைய வைக்கும்.
என்னதான் கஸ்தூரி அம்மா அமிர்தாவை திட்டினாலும், அவளின் குறும்புகளை வெகுவாக ரசிப்பார்.
பாவம் பிருந்தா அறியவில்லை. வெளியே செல்லும் அம்மு மீண்டுமொரு வம்பை வாங்கிக் கொண்டு, அதையும் அவர்களிடமிருந்து மறைத்து வைக்கப் போகிறாளென்று.
†††††
“அம்மு நீ மூட் அவுட்டா இருக்கேன்னு பிந்து அக்கா சொன்னா. என்னாச்சு?” என சோட்டு வினவ, அனைத்து பிள்ளைகளும் “என்னது அம்மு மூட் அவுட்டா? என்னாச்சு அம்மு?” என அதையே கோரஸ் பாடினார்கள்.
அனைவரையும் முறைத்த அம்மு,”நேத்து அந்த கட்டவண்டி கிட்ட என்னை மாட்டி விட்டுட்டு, நீங்க எல்லாம் தப்பிச்சு போய்ட்டீங்கள. நான் உங்க கூட பேச மாட்டேன். உங்க கூட கா” சிறுபிள்ளையாக அவர்களிடம் முகம் திருப்பினாள்.
“ஐயோ அம்மு! அந்த காரில் வந்த அண்ணா முறைச்ச முறைப்பில் நாங்க பயந்து போய்ட்டோம். இப்ப நினைச்சாலும் பயமாயிருக்கு” என்ற கிட்டு பயந்து கொண்டே, அந்தக் கார் காரன் எங்காவது தென்படுகின்றனா? என சுற்று முற்றும் பார்வையை ஓட்டினான்.
“போடா கிட்டு அவன் கார் காரன் இல்லை, கட்டவண்டி. சரியான திமிர் பிடிச்ச கட்டவண்டி.” என பல்லை கடித்தாள். அவன் தன்னை மிரட்டியதிலும் முத்தமிட்டதிலும் அவன் மேல் வெறுப்பு ஏற்பட்டிருந்தது.
அவர்களுக்கு பதில் அளித்தாலும் மீண்டும் முகம் திருப்பினாள்.
“நீ எங்க செல்ல அம்மு தானே. எங்கிட்ட கோச்சிக்காத செல்லம்.” என அம்முவின் தாடையைப் பிடித்து செல்லம் கொஞ்சி, அவர்களுக்கு தெரிந்த அளவு அவளை சமாதானப் படுத்தினார்கள்.
இன்னமும் முகம் திரும்பியிருந்த அம்முவிடம்,”நாங்க செஞ்ச தப்புக்கு, நாங்க வேணா தோப்புக்காரணம் போடுறோம்.” என அனைவரும் காதைப் பிடித்துத் தோப்புக்காரணமிட ஆரம்பித்தார்கள்.
அவர்களின் அன்பில் கரைந்த அம்முவும் அவர்களிடம் புன்னகையை சிந்த, அவர்கள் ஓடி வந்து அவளை அணைத்து கொண்டு, மாறி மாறி முத்தமழை பொழிந்தனர். கவித்துவமான காட்சி. காண இரு கண்கள் போதாது.
கள்ளங்கபடமற்று பாசத்தை மட்டும் கொண்டு, உருவான வயது பேதமற்ற, அழகான நட்பு. அந்த அழகான நட்புகளிடமிருந்து தேவதையை பிரிக்க, விதி அரக்கன் காத்துக்கொண்டிருக்கிறான்.
அவர்களது கொஞ்சல்கள் முடிந்தபின்,”அம்மு நேத்து அந்த அண்ணா உன்னை அடிச்சுட்டாரா? அதனாலதான் எங்க மேல கோபமா இருந்தியா?” பிங்கி சரியான நுழை பிடித்தாள். பெண்களுக்கு சூச்சம புத்தி அதிகம்.
அவன் அடித்திருந்தால் கூட பரவாயில்லை, அவன் செய்த கீழ்த்தரமான செயலை, அந்த குழந்தைகளிடம் எவ்வாறு சொல்வது? என தயங்கிய அம்மு, கோபத்தில் முகம் சிவக்க,
“இப்ப எதுக்கு அந்த கட்டவண்டிய பத்தின பேச்சு. வாங்க நம்மபோய் யார் தோட்டத்தில் இருந்தாவது மாங்கா பறிக்கலாம்.” என அவர்களை இழுத்துச் சென்று ஒரு தோட்டத்தில் புகுந்தாள்.
மாங்காய் என்றவுடன் குழந்தைகளின் கவனமும் திசைமாறி, மீண்டும் அந்தப் பேச்சை பேசாமல் அவள் பின் சென்றனர்.
பாவம் அவள் அறியவில்லை இந்த தோட்டம் அந்த கட்டவண்டிக்கு சொந்தமென்று.
அந்த கட்டவண்டி காரன் அவளை ஆற்றங்கரையோரம் வர சொன்னதை மறந்து பிள்ளைகளோடு பிள்ளையாக விளையாடி கொண்டிருந்தாள்.
†††††
“அம்மு, அங்க பாரு ரெண்டு கொத்து இருக்கு அதை அடி.” என்றான் கிட்டு அம்முவிடம்.
“எங்கடா இருக்கு? ஒழுங்கா சொல்லி தொலை? என் கண்ணுல படல.” தன் கரத்திலிருந்த கவட்டையை முகத்திற்கு நேராக பிடித்து, ஒரு கண்ணை மூடி மறு கண்ணால் தேடிக்கொண்டே, கிட்டுவை மிரட்டிக் கொண்டிருந்தாள் அம்மு.
“ஐயோ அம்மு! அங்க பாரு. அந்த இரண்டு கிளைகள் சேருர இடத்தில, பெரிய பெரிய மாங்கா ஓட ரெண்டு கொத்து இருக்கு.” என்றான் நாவில் எச்சில் ஊற.
இப்போது அந்த மாங்காயை கண்டுவிட்ட, அம்மு,”ஹே பார்த்துட்டேன்” மகிழ்ச்சியோடு அந்த மாங்காயை, தன் கவட்டையை கொண்டு குறி வைத்தாள்.
அம்முவும் கிட்டுவும் மரத்திலிருந்த மாங்காயில் கவனமாக இருந்தார்கள். மீதியிருந்த பசங்கள் கீழே கிடந்த மாங்காயை பொருக்குவதில் கவனமாக இருந்தார்கள்.
சரியாக அதே நேரம் அம்முவின் வரவிற்காக ஆற்றங்கரையோரம் காத்திருந்த ஈஸ்வரன், அவள் வரவில்லை என்றவுடன், கோபத்தில் அவளைத்தேடி கிளம்பிவிட்டான்.
அவள் பெயரும் தெரியாமல், வீடும் தெரியாமல் அவளை எங்கு சென்று தேடுவது? தன் காரை எடுத்துக்கொண்டு அந்த ஊர் முழுவதும் ஒரு சுற்று சுற்றி வந்துவிட்டான். ஆனால் அவன் தேடும் நபர் மட்டும் அவன் கண்களில் அகப்படவில்லை.
தோல்வி! தன்னுடைய முதல் தோல்வி ஒரு சிறு பெண்ணிடம், இதுவே அந்த சிம்மத்தின் கோபத்தை அதிகரிக்க போதுமானதாக இருந்தது.
முன்னப்பின்ன தெரியாத ஊரில், அவள் பெயர் கூட தெரியாமல் அவளை எங்கே என்று தேடுவது? யாரிடம் கேட்பது? ஈஸ்வரனின் கோபம் கொஞ்சம் கொஞ்சமாக அவளின் மேல் ஏறிக்கொண்டிருந்தது.
ஊர் முழுதும் சுற்றியலைந்தும் அவளை கண்டுபிடிக்க முடியாத கோபத்தில்,’என்னை ஏமாத்திட்டு போய்ட்டீல, நீ என் கையில மாட்டாமலா போவ? அப்ப உன்னை கவனிச்சுக்கிறேன்?’ என மனதில் கறுவிக் கொண்டே தங்கள் தோட்டத்தை அடைந்தான்.
யாருமில்லாத தோட்டம். தோட்ட வேலை செய்பவரும் அவரின் சாலையில் (தோட்டத்தில் இருக்கும் வீட்டின் பெயர்) இருந்தார்.
ஈஸ்வர் தனது காரை தோட்டத்தின் வெளியே நிறுத்திவிட்டு, சத்தமில்லாமல் நடந்து வந்தான்.
அவன் கால்களில் மிதிபடும் சருகுகளின் சத்தத்தோடு, சில பேச்சுக் குரல்கள் கேட்க அவன் செவிகள் கூர்மை அடைந்தது. பசங்களின் பேச்சு குரல். பசங்கள் எனத் தெரியவும் அவன் கால்கள் திசை மாறி பயணித்தது.
திடீரென மூளையில் ஒரு பளிச்சிடல். தன் நீலாம்பரியின் முகம் மின்னி மறைந்தது.’இது அவர்களாக இருக்குமோ?’ என சந்தேகம் எழுந்தது. கால்கள் தானாக அவர்களின் பேச்சு வந்த திசையை நோக்கி முன்னேறியது.
‘எதற்காக அவளை தேடுகிறோம்?’ என்ற மனதின் கேள்விக்கு, ‘என்னை ஏமாற்றி சென்றுவிட்டாள்.’ என்று மூளை தவறான பதில் அளித்தது. ஒழுங்காக மனதின் கேள்வியை முழுதாக ஆராய்ந்து இருக்கலாம். அவனின் பொல்லாத நேரம் மூளை அவனது மனதை அடக்கி விட்டது.
அவனது செவியை அதிகம் அடைந்தது அம்மு என்ற பெயர். அந்தப் பேச்சு குரல்களில் தன்னவளின் குரலை அடையாளம் கண்டுகொண்டான்.
குரலை அடையாளம் கண்டு கொண்டது போல், மனதையும் அறிந்து கொண்டிருந்திருக்கலாம்?
†††††
நேராக சென்று அவள் எதிரே சற்று தள்ளி நின்றான். மாம்பழத்தை அடிப்பதில் கவனமாக இருந்தவளும் அவனை கவனிக்கவில்லை.
அவள் கரத்தில் இருந்த கல் பறந்தது.
அவள் உதட்டில் இருந்த புன்னகை மறைந்தது.