நினைவு தூங்கிடாது 8.2

நிழல்

அளவுகடந்த துன்பத்தை அனுபவிக்கிறேன் என வருத்தம் கொள்ளாதே, உனக்காக எல்லை இல்லா சந்தோஷம் காத்திருக்கும் மறந்துவிடாதே 

நள்ளிரவு நேரம். எங்கு திரும்பினாலும் இருள். பெயர் தெரியாத விலங்குகளின் பயங்கர சத்தம். தான் விடும் மூச்சுக்காற்றும் பேரிரைச்சலாக. சுற்றியிருந்த மரங்கள் அனைத்தும் கரும் பூதங்களாக, திக்குத் தெரியாத காட்டில் தன்னந்தனிமையில் அவள் மட்டும். அவளை சூற்றி பயம், பயம், பயம் மட்டுமே.

மயக்கம் போட்டு விழுந்து விடுவோமோ என்ற பயம். மிருகங்கள் தன்னை அழித்து விடுமோ என்ற பயம். எந்த மரத்தில் எந்தப் பேய் தொங்கிக் கொண்டிருக்கிறது என்ற பயம். மீண்டும் உயிருடன் வெளியே செல்வோமா என்ற பயம்.

பயம் என்பதே அறியாத அந்தப் பதினேழு வயது வளர்ந்த குழந்தை, பயத்தின் மொத்த உருவமாக, அந்த காரிருளில் திசை தெரியாமல், அவன் பெயரும் தெரியாமல், அவள் வைத்த பெயரை கொண்டு “கட்டவண்டி சார், கட்டவண்டி சார். எங்க இருக்கீங்க? எனக்கு ரொம்ப பயமாயிருக்கு” என பயத்தில் பரிதவித்து தேடிக்கொண்டிருந்தாள். 

 தன்னுடன் இணைந்து வந்துகொண்டிருந்த மனிதரை திடீரென காணவில்லை. இந்த இருளில் எங்கே தேட? பயத்தின் மொத்த உருவமாக தவித்தாள் பாவை.

‘நாம் தவறு செய்கிறோமோ?’ என மனதில் பயம் சூழ்ந்தது. 

அவள் நினைவு முழுவதும் மாலையில் ஈஸ்வருடன் நடந்த பேச்சுக்கு இழுத்து சென்றது.

காலையில் பிருந்தாவுடனும், தன் குட்டி செல்லங்களுடனும், மகிழ்ச்சியுடன் பொழுதை கழித்த அமிர்தா, சரியான நேரத்திற்கு ஏதேதோ காரணங்களை கூறி, பிருந்தாவையும்  பசங்களையும் தவிர்த்து, தனியாக ஆற்றங்கரையை அடைந்தாள். 

அங்கு இவளுக்கு முன்பாகவே ஈஸ்வர் காத்திருந்தான். ‘ஆயிரம் வேலைகள் தலைக்குமேல் குவிந்திருக்க, அனைத்தையும் விடுத்து, ஒரு சிறு பெண்ணிற்காக ஏன் இங்கே காத்திருக்கிறோம்?’ என சிந்திக்காமல் அவளின் வரவை எதிர்பார்த்திருந்தான். 

சரியான நேரத்திற்கு அவள் வந்து சேர, அவளை கண்ட நொடி, ஈஸ்வர் மனதில் ஆயிரம் மத்தாப்புக்கள் வெடித்து சிதறியது. ஆனால் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் ஒரு சிறு தலையசைவுடன், “பரவாயில்லை இன்னைக்காவது சொன்ன நேரத்துக்கு வந்துட்ட.”

“நான்லாம் சொன்ன சொல்லை மீற மாட்டேன்.” என முகத்தை தோள்பட்டையில் இடித்துக் கொண்டாள். 

அவளது துடுக்கு பேச்சை ரசித்தாலும், அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் “ஆமாமா சொல்லிட்டாங்க ஊருக்குள்ள. சொன்ன சொல் மீறமாட்ட இந்த நீலாம்பரி, ஆனால் மாங்காய் மட்டும்தான் திருட்டுவான்னு.” என்றான் நக்கலாக. 

“எந்தக் களவாணி பய இப்படி ஒரு வதந்தியை கிளப்பிவிட்டது?” அவன் விளையாடுகிறான் என்பது புரியாமல் பொங்கினாள்.

வந்த சிரிப்பை வாய்க்குள் அடக்கிக் கொண்டு,”ஒருத்தர், ரெண்டு பேர்ன்னா சொல்லலாம். ஊர்ல இருக்க அம்புட்டு பேரும் அதுதான் சொல்றானுங்க.” 

ஊரில் விசாரித்திருந்தால், அவளை அவ்வாறு சொல்வதற்கான வாய்ப்புகள் அதிகம், என்பதை தெரிந்ததாலே அவன் சொல்வது அனைத்தையும் நம்பினால் இந்த பேதை. அவன் எப்போது ஊரில் விசாரித்தான் என்பதை யோசிக்க மறந்தாள்.

அவள் பசங்களுடன் சேர்ந்து செய்யும் சேட்டைகள் அவ்வாறு. அவளுக்கு வேண்டும்போது மாங்காய் கொய்யா போன்ற பழங்களை யார் தோட்டத்திலிருந்து வேணாலும் பறித்து செல்வாள்.

ஊரின் செல்லப்பிள்ளையாக சுற்றித்திரியும் அமிர்தாவின் சேட்டைகளை அனைவரும் ரசிக்கவே செய்தனர். அவள் எவ்வளவுக்கு எவ்வளவு சேட்டைகள் செய்தாலும், உதவி என்று கேட்டால் தன்னால் முடிந்ததை நிச்சயமாக அவர்களுக்கு செய்வாள்.

சிறிது நேரம் அவளுடன் கதை அளந்து கொண்டு இருந்தவன், 

திடீரென ஞாபகம் வந்தது போல், “ஆமா நேத்து நீ என்ன கல்லால் அடிச்சு தூக்கு தண்டனை உனக்கு கொடுக்கணுமே?”