நிரல் மொழி 12.1
நிரல் மொழி 12.1
நிகில்… மிலா, ஜெர்ரி பற்றிக் கேட்டதும்,
மறுமுனையில், “மூனு இடத்திலேயும் தேடினோம். ஆனா, அவங்க ரெண்டும் பேரும் அங்கே இல்லை” என்றார் காவலர்.
நிகில் அமைதியாக இருந்தான்.
“நீங்க… அவங்க ரெண்டு பேரும் மிஸ்ஸிங்-ன்னு ஒரு கம்பளைன்ட் கொடுங்க”
“ம்ம்ம், கொடுக்கிறேன்” என்றான்.
“அப்புறம், உங்க ஃபிரண்ட் பேமிலி…” என்று ஷில்பா பற்றிக் கேட்கத் தொடங்கும் போதே,
“சார்… ஷில்பா பத்தி எதுனாலும், நீங்க என்கிட்டயே கேட்டுக்கோங்க” என்று முடித்துவிட்டான்.
“அவங்களுக்கு யாரும் இல்லையா?” என்று கேள்வி கேட்டவர், அதன் பின்னும் சில கேள்விகள் கேட்டார்.
அவர் கேட்ட கேள்விக்கு, நிகில் பதில் சொல்லி முடித்ததும்… இருபுறமும் அழைப்புத் துண்டிக்கப்பட்டது.
கைப்பேசியை வைத்துவிட்டு, முரளியைப் பார்த்தான்.
“என்னாச்சு நிகில்?” என்று கேட்டார்.
“மிஸ்ஸிங்-ன்னு கம்ப்ளைன்ட் கொடுக்கச் சொல்றாங்க” என்றான் விரக்தியில்.
“இதுவும், அந்த நல் கேர் வேலைதானா?” என்று கோபத்துடன் கேட்டார்.
“அவனைத் தவிர, வேற யாரா இருக்கும்” என்று கவலைப்பட்டான்.
“வொரி பண்ணாதீங்க நிகில். நீங்க கம்ப்ளைன்ட் மட்டும் கொடுங்க! நம்ம, கமிஷ்னர்-கிட்ட சொல்லி… இந்தக் கேஸ்-க்கு ப்ரையாரிட்டி கொடுக்கச் சொல்லாம்” என்று, அவனுக்கு நம்பிக்கை கொடுக்கப் பார்த்தார்.
அக்கணம் நிகிலின் கைப்பேசிக்கு, மீண்டும் ஓர் அழைப்பு வந்தது.
எடுத்துக் பார்த்தான்!
இலக்கங்கள் மட்டுமே வந்தது.
‘யாரின் கைப்பேசி எண்?’ என்று கண்மூடி யோசித்தான்.
நியாபகம் வந்தது!
அழைப்பு அண்ணியிடமிருந்து!!
‘எதற்கு?’ என்று யோசித்தவனுக்கு, ஓர் சந்தேகம் வந்தது.
உடனே, “ஷில்பா பத்தின விஷயம் நியூஸ்ல வந்திருச்சா, முரளி?” என்று கேட்டான்.
“ம்ம்ம், வந்திருக்கலாம்” என்றார்.
இதற்குள், நிகிலின் கைப்பேசி அழைப்பு நின்று… மீண்டும் வர ஆரம்பித்திருந்தது.
மீண்டும் நிகிலின் அண்ணிதான்!
அழைப்பை எடுக்காமல், “முரளி உங்க ஃபோன் கொடுங்களேன்” என்று அவசரமாகக் கேட்டான்.
“என் ஃபோன்?” என்று கேள்வியாகப் பார்த்தார்.
“வீட்டுக்குப் பேசப் போறேன். அதான்” என்றான்.
“ஓ!” என்றவர், அவரின் கைப்பேசியைக் கொடுத்தார்.
அவரிடமிருந்து கைப்பேசியை வாங்கி, ஆஷாவின் கைப்பேசிக்கு அழைத்தான்.
அழைப்பு ஏற்கப்பட்டதும், “அண்ணி” என்றான்.
மறுமுனையில் அமைதிதான்.
அவனுக்குப் புரிந்தது. ஷில்பாவின் முடிவு, அவர்களாலும் ஜீரணிக்க முடியாத விடயம் என்று!
வருத்தங்கள் அதிகமாக இருந்ததால், சற்று நேரம் இருவருக்குமே வார்த்தைகள் வரவில்லை.
நிகில் தன்னைத் தைரியப் படுத்திக் கொண்டு, “அண்ணி சொல்லுங்க” என்றான் கனத்த குரலில்.
தொண்டயைச் செருமிக் கொண்டு, “நிகில்… அம்மா-க்கு” என்று ஆஷா சொல்லும் போதே… அழுகை வந்து, வார்த்தையை நிறுத்தினாள்.
“அண்ணி, அம்மாக்கு என்னாச்சு?” என்று நிகில் பதறினான்.
“ஷில்பா பத்தி டிவி-ல பார்த்தோம். அதைப் பார்த்ததும், அம்மாக்கு பிபி ஷூட் அப் ஆகி, மயங்கிட்டாங்க. அதான் ஹாஸ்பிட்டல்-ல அட்மிட் பண்ணியிருக்கோம்” என்றவள் குரல் அழுதது.
“ஐயோ அண்ணி, ஏன் இப்படி?” என்று தவித்தான்.
காலையிலிருந்து அவனுக்கு கிடைக்கும் செய்திகள் எதுவேமே சரியில்லையே!
அதனால்தான் தவிக்கிறான்!
அவன் பதறுவதைப் பார்த்து, ‘என்ன?’ என்று முரளி கேட்டார்.
அவர் கேட்பதைக் கவனிக்கும் நிலையில் அவனில்லை!
“டென்ஷனாகாத நிகில். அம்மாக்கு இப்போ நார்மல்-தான். ஈவினிங்… இல்லைன்னா நாளைக்கு காலையில டிஸ்சார்ஜ் ஆகிடுவாங்க. சரியா?” என்று தன் அழுகையைக் குறைத்து, அவனுக்கு ஆறுதல் சொல்ல ஆரம்பித்தாள்.
“வேற ஒன்னுமில்லை-ல அண்ணி” என்று கவலையில் கேட்டான்.
“அப்படி ஏதாவது இருந்தா, உன்கிட்ட சொல்லுவேன்ல?”
“ம்ம்ம்!” என்றவன், “பார்த்துக்கோங்க அண்ணி! என்னால இப்போ அங்க வரமுடியாது” என்று சொல்லி, தன் நிலையை நினைத்து நொந்து கொண்டான்.
“புரியுது நிகில். அம்மாவை, நான் பார்த்துப்பேன்” என்று சொல்லி, அவனைத் தேற்றினாள்.
“ம்ம்ம்”
“நிகில் ஒரு விஷயம்”
“சொல்லுங்க அண்ணி”
“அது… இன்னைக்கு அங்க வர முடியாது. நாளைக்கு காலையில வர்றோம். சரியா?” என்றவள் குரல், மீண்டும் கவலையாக மாறியது.
‘இதைப் பற்றித் தான் யோசிக்கவே இல்லையே? அவர்கள் இங்கே வந்தால்… என்ன செய்ய? எப்படிச் சமாளிக்க?’ என்று யோசித்துக் கொண்டிருந்ததான்.
அவனிடம் அமைதியைக் கண்டு… “நிகில்” என்று அழைத்தவளிடம்,
“ஆங்! சொல்லுங்க அண்ணி” என்றான்.
“நானும்… அத்தையும் நாளைக்கு வர்றோம். இன்னைக்கு நைட்… மிலா அம்மாவும், மீராவும் வருவாங்க” என்றாள்.
‘இன்று இரவா??!!
இன்னும் தன் நிலைமை, மிலாவின் நிலைமை பற்றிச் செய்திகளில் வரவில்லையா?
இல்லை, இவர்கள் பார்க்கவில்லையா?
இதை எப்படிச் சமாளிக்க?’ என்று நெற்றியில் முடிச்சுகள் விழ யோசித்தான்.
“அதான் நிகில் ஃபிலைட் டிக்கெட்…” என்று ஆஷா பேசிக் கொண்டே போகும் போது,
“அண்ணி, எதுக்கு தனித்தனியா வந்துகிட்டு! எல்லாரும் சேர்ந்தே வாங்க. நான் சமாளிச்சுப்பேன்” என்று முடிவு சொன்னான்.
“ஏன் அப்படிச் சொல்ற?”
“அது… இங்க ஷில்பா… போஸ்ட் மாட்டம்… ஷில்பா… ப்ச், அண்ணி! ஒரு ரெண்டு நாள் கழிச்சு வாங்களேன்” என்றான் சமாளிக்க முடியாமல்!
“உனக்கு… மிலாக்கு… சப்போர்ட் வேண்டாமா?” என்று கேட்டாள்.
“சப்போர்ட்… சப்போர்ட்… நான் சமாளிச்சுப்பேன். நீங்க ரெண்டு நாள் கழிச்சே வாங்க” என்று மீண்டும் அதையே சொன்னான்.
“நீ ஏன் இப்படிச் சொல்ற? வேற ஏதும் பிரச்சனையா?” என்று சந்தேகமாகக் கேட்டாள்.
“இல்லை அண்ணி. அம்மா ஹெல்த் கன்டிஷன் நினைச்சு சொன்னேன் ”
“ஓ!” என்றவள், “அதான் சொல்றேன் நிகில். இன்னைக்கு வேண்டாம், நாளைக்கு வர்றோம்னு” என்றாள்.
“ம்ம்ம் சரி” என்றவன், “அண்ணி ஹாஸ்ப்பிட்டல்-க்கு பணம் வச்சிருக்கீங்களா?” என்று கேட்டான்.
“ஒன் டே-தான? இருக்கு நிகில். பட்… சடன் புக்கிங்-ல, பிலைட் டிக்கெட்தான் ரொம்ப அதிகமா இருக்கு. நீ டிக்கெட் புக் பண்ணிடு”
“அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன். வேற ஏதும் வேணுமா?”
“ம்கூம்!” என்றவள், “இது என்ன நம்பர்? புதுசா இருக்கு? உன் ஃபோன் என்னாச்சு?” என்று கேள்வி கேட்டாள்.
“என் ஃபோன் ஸ்பீக்கர் வொர்க் ஆகலை. அதான்.. இந்த நம்பர்” என்று சொல்லி, சமாளித்தான்.
“ஓ!”
“அண்ணி! ரெண்டு நாள் கழிச்சு, உங்களுக்கு டிக்கெட் புக் பண்றேன்” என்றான் மீண்டும்.
“அதெல்லாம் முடியவே முடியாது. நீ, அங்க கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்க. நாங்க எப்படி இங்க நிம்மதியா இருப்போம்?
ஒழுங்கா, நாளைக்கு டிக்கெட் புக் பண்ற” என்று கொஞ்சம் கோபம், கொஞ்சம் கண்டிப்பு கலந்த குரலில் சொன்னாள்.
“ம்ம்ம் சரி!” என்றவன், “ஆனா, எல்லாருக்கும் நாளைக்கே புக் பண்றேன். தனித்தனியா வர வேண்டாம்” என்றான் அழுத்தமாக!
“ம்ம்ம் சரி!”
“அண்ணன்களுக்கு தெரியுமா?” என்று கேட்டான்.
“ம்ம்ம், தெரியும்! சொல்லிட்டேன். லீவ் கேட்டு… ரெண்டு மூணு நாள்-ல டிக்கெட் புக் பண்ணி வந்திடுவாங்க”
“சரி! அம்மா-வை பார்த்துக்கோங்க”
“ம்ம்ம் சரி! ஆனா, அங்க வர்ற வரைக்கும் எனக்கு நிம்மதியே இருக்காது. ரொம்ப கஷ்டமாயிருக்கு. ஷில்பாக்கு ஏன் இப்படி நடந்தது?” என்று அழும் குரலில், புலம்பினாள்.
“அழாதீங்க அண்ணி” என்றவன், “அம்மா முழிச்சிருங்காங்களா?? அவங்ககிட்ட பேசணும்” என்றான்.
“இரு கொடுக்கிறேன்” என்று பாமினி இருந்த அறைக்குள் சென்று, அவரை எழுப்பி உட்கார வைத்தாள்.
‘என்ன?’ என்பது போல், ஓய்ந்து போய் பாமினி பார்த்தார்.
“நிகில்… பேசுங்க அத்தை” என்று கைப்பேசியைக் கொடுத்தாள்.
கைப்பேசி வாங்கவே, அவருக்கு கை நடுங்கியது.
அவருக்கு மிகவும் பிடித்தமான பெண் அல்லவா? அவளுக்கு ஏற்பட்ட முடிவை, அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
“ம்மா எப்படி இருக்கீங்க?” என்று நிகில் கேட்டதும், ஏதேதோ புலம்பிக் கொண்டே பாமினி அழ ஆரம்பித்தார்.
அவன் ஆறுதல் சொல்லலாம்!
ஆனால், ஆறுதல் சொல்லும் நிலையில் அவனில்லை!
ஆறுதல் தேடும் நிலையில்தான் இருந்தான்!!
ஆதலால், அமைதியாக இருந்தான்.
பாமினி… அழுது, பதறுவதைப் பார்த்த ஆஷா… அவரிடமிருந்து கைப்பேசியை வாங்கினாள்.
மேலும், “போதும் அத்தை. இப்படியே அழுதா, இன்னும் உங்க உடம்பு மோசமாகும்!” என்று சொல்லி,
திலகத்திடமும், மீராவிடமும்… அவரைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு, வெளியே வந்தாள்.
“நிகில்”
“சொல்லுங்க அண்ணி”
“நாளைக்கு டிக்கெட் பண்ணிடு”
“சரி அண்ணி!” என்றவன், “ஈவினிங் கால் பண்றேன்” என்று சொல்லிவிட்டு, அழைப்பைத் துண்டித்தான்.
என்ன செய்ய? யாரைச் சமாளிக்க? என்று புரியவில்லை!
ஷில்பா, அம்மா விடயங்களால்… இந்த முறை, மிலா… ஜெர்ரி பற்றி… அண்ணி கேட்கவில்லை.
அடுத்த முறை அழைக்கும் பொழுது, அவர்களைப் பற்றிக் கேட்டால்… என்ன பதில் சொல்ல? என்று தெரியவில்லை.
இல்லை, தான் சொல்வதற்கு முன்பே செய்திகள் பார்த்துத் தெரிந்து கொண்டால்… எப்படி தாங்குவார்கள்?
கண் மூடி யோசித்தான்.
பின்…
நாளை காலை வரை… அம்மாவைப் பார்த்துக் கொள்வதிலே, மூவரின் கவனம் இருக்கும்.
யாருக்கும் செய்திகள் பார்க்க வாய்ப்பிருக்காது!
எனவே, தன்னைப் பற்றி… மிலா, ஜெர்ரி நிலை பற்றி… ‘எப்படிச் சொல்ல?’ என்று யோசிக்க… நேரம் இருக்கிறது.
இப்போது யோசிக்க வேண்டியது வேறு, என்று முடிவெடுத்து… முரளியைப் பார்த்தான்.