நிரல் மொழி 13.1
நிரல் மொழி 13.1
‘நல் கேர்’ இடத்தில்…
கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தபடி… மிலா நிமிர்ந்து பாத்தாள்.
அந்த அறையின், மறுபுறத்தில் ‘நல் கேர்’ அமர்ந்திருந்தான்.
அவனும், மிலாவைப் திரும்பிப் பார்த்தான்.
இருவரின் கண்களும் நேற்று இரவு நடந்த கொடூரத்தை நினைத்துப் பார்க்க ஆரம்பித்தன.
நேரம் 11.15 (நேற்றைய இரவு)
தங்களை நோக்கி இரண்டு பேர் வருவதைக் கண்ட ஷில்பா, “மிலா… உள்ளே ஏறு” என்று பதற்றத்தில் கத்தினாள்.
“ஷில்பா… நிகில்…” என்று மிலா அழ ஆரம்பித்தாள்.
“மிலா! நிகில்… அவனைப் பார்த்துப்பான்!! ப்ளீஸ் நீ கார்ல ஏறு” என்று சொல்லி, ஷில்பா காரினுள் ஏறினாள்.
டிக்கியில் இரும்புக் கம்பி கொண்டு அடித்ததில், ஜெர்ரி ‘ப்பா’ என்று சொல்லி விழித்துவிட்டான்.
‘மிலா.. ஜெர்ரி அழறான் பாரு” என்று ஷில்பா சொன்னதால், பின்புறமிருந்து ஜெர்ரியைத் தூக்கி… மிலா, தன் மடியில் வைத்துக் கொண்டாள்.
என்னவென்றே புரியாமல், மிலா மடியில் இருந்து கொண்டு ஜெர்ரி முழித்தான்.
காருக்குள் பார்த்துவிட்டு, தன் அப்பா இல்லாததைக் கண்டு… ஜெர்ரி அழ ஆரம்பித்தான்.
மிலா, அவனை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு… சமாதனப் படுத்தினாள்.
பேய்மழை பெய்து கொண்டிருந்தது!
பளிச் பளிச்சென்று கண்ணைப் பறிக்கும் மின்னல் ஒளி வேறு!
நள்ளிரவை நெருங்கும் நேரம் என்பதால், ஆள் அரவம் ஏதுமில்லை!
முடிந்த அளவு ஷில்பா வேகமாகச் சென்றாள். இருந்தும், நினைத்த அளவிற்கு வேகம் வரவில்லை.
பயம்! பதற்றம்!!
ஏன் இப்படி? என்ற பயம்!
‘நிகில் நிலையென்ன?’ என்ற பதற்றம்!
‘நம்மால் தப்பிக்க முடியுமா?’ என்ற பயம்!!
‘இல்லை, தப்பித்துவிட்டோமா?’ என்ற குழப்பம்!!
கைகள் இரண்டும், ஸ்டியரிங்கை பிடிக்க முடியாமல் நடுங்கின.
பல்லைக் கடித்துக் கொண்டு, ஸ்டியரிங்கை அழுத்திப் பிடித்துக் கொண்டாள்.
ஆக்ஸிலேட்டர்… பிரேக்… கிளட்ச் என்று மாறி மாறி வேலை செய்ய கால்கள் மறுத்தன!
இதனூடே… மிலாவும் ஜெர்ரியும் பயந்து போய், விம்மி விம்மி அழுது கொண்டிருந்தனர்.
தன் பயத்தை மறைத்து… “அழாத மிலா. ஜெர்ரி பயப்படப் போறான்” என்றாள் ஷில்பா காரை ஓட்டியபடி.
கண்ணீரைத் துடைத்தபடி, “நிகிலுக்கு என்னாச்சின்னு தெரியலை ஷில்பா. அவனைப் பார்க்கணும் போல இருக்கு” என்றாள் ஏங்கியபடி!
“ஒன்னும் ஆகியிருக்காது. நீ பயப்படாத” என்று, இன்னும் காரின் வேகத்தை அதிகப்படுத்தினாள்.
கொட்டும் மழையில்…
வழுக்கும் சாலையில்…
வெட்டும் மின்னலில்…
குறைவான வெளிச்சத்தில்…
ஒரு பதினைந்து நிமிட வேகமான பயணத்திற்குப் பின்,
மெதுவாக காரின் வேகத்தை குறைத்து, பின்னால் திரும்பித் திரும்பி… ஷில்பா பார்த்தாள்.
இன்னும் கொஞ்சம் காரின் வேகத்தைக் குறைத்தாள்! மீண்டும் திரும்பிப் பார்த்தாள்.
அவளின் செயலைக் கண்ட மிலா, “என்ன ஷில்பா பார்க்கிற?” என்று கேட்டாள்.
“யாரும் வர்றாங்களான்னு பார்த்தேன்” என்றாள் ‘ரியர் வ்யூ மிர்ரரி’-ல் சாலையைப் பார்த்தபடி!
ஜெர்ரியைச் சமாதானம் செய்து கொண்டே, மிலாவும் பின்னே திரும்பிப் பார்த்தாள்.
சம்பவம் நடந்த இடத்திலிருந்து வெகு தூரம் வந்தது தெரிந்ததும், ஷில்பா காரை சாலையின் ஓரத்தில் நிறுத்தி சுற்றும் முற்றும் பார்த்தாள்.
இதே நேரத்தில்… சம்பவ இடத்தில்… இவர்கள் இருவரையும் துரத்தி வந்த அடியாட்கள்…
“ச்சே தப்பிச்சிட்டாங்க” என்று சொன்னான், இரண்டு அடியாட்களில் ஒருவன்.
“இப்போ என்ன பண்ண?” என்று மற்றொருவன் கேட்கும் போதே, அவர்களில் ஒருவனுக்கு ‘நல் கேரிடம்’ இருந்து அழைப்பு வந்தது.
“ஹலோ” – அடியாள்.
“அவனை முடிச்சாச்சு?” என்று ‘நல் கேர்’ அதிகாரமான குரலில் கேட்டான்.
“இல்லை. அடிச்சிட்டு இருக்காங்க. ஆனா, அவன் திருப்பி அடிக்கிறான்”
‘நல் கேர்’ அதிர்ச்சியுடன்… ‘திருப்பி அடிக்கிறானா?’ என்று, தனக்குள் கேள்வி கேட்டான்.
‘நல் கேர்’ பேசாமல் இருப்பதைக் கண்டு, “இங்க இன்னொரு பிரச்சனை” என்றான் அடியாள்.
“என்ன?”
“அவன்கூட வந்த ரெண்டு பொண்ணுங்க போலீஸ் ஸ்டேஷன் போறாங்க” என்றான் அடியாள் படபடவென்று!
“போலீஸ் ஸ்டேஷன்…??” என்றான், ‘நல் கேர்’ மீண்டும் அதிர்ச்சியுடன்!
“ஆமா, அவன்தான் போகச் சொன்னான்” என்று அடியாள் சொன்னதும்,
“பின்னாடியே துரத்திக்கிட்டுப் போக வேண்டியதுதான?” என்று ‘நல் கேர்’ பல்லைக் கடித்துக் கொண்டு கேட்டு, கோபப்பட்டான்.
“அது…”
“முதல பைக் எடுத்திட்டு அவங்களை பாலோவ் பண்ணுங்க” என்று, கட்டளை இட்டான்.
“எங்க போறாங்கன்னு தெரியாம எப்படி பாலோவ் பண்ண?”
“நான் சொல்றேன். முதல கிளம்புங்க. அன்ட் ஃபோன் கட் பண்ணாதீங்க” என்று அழுத்திச் சொன்னதும்…
அவர்கள் இருவரும், சாலையின் சுவர்களில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பினார்.
‘நல் கேர்’ யோசிக்க ஆரம்பித்தான்.
இது என்ன புது பிரச்சனை? என்று எரிச்சலடைந்தான்.
கூட யாரும் இல்லை என்று நினைத்தோமே? இவர்கள் யார்? என்று கோபம் வந்தது.
நேற்று, பேசிய பிறகும் காவல் நிலையம் போகாதவன், இன்று ஏன் போகிறான்? என்று சந்தேகம் வந்தது.
“ஹலோ” என்றான் அடியாள், கொட்டும் மழையில் நனைந்தபடி!
“அந்த ரெண்டு பேரும் யாருன்னு தெரியுமா?”
“தெரியலை” என்றான் பைக்கை ஓட்டிக் கொண்டே!
‘யாரா இருக்கும்? ஒருவேளை அந்த ப்ராடைக்ட் மேனேஜரோ?
அப்படியென்றால் இன்னொரு பெண் யார்?’ என்று ‘நல் கேர்’ யோசிக்கத் தொடங்கினான்.
“ஹலோ” என்றான் அடியாள், பைக்கை ஓட்டிக் கொண்டே.
“கொஞ்சம் யோசிக்க விடுங்க” என்று சொல்லி… ‘நல் கேர்’ யோசித்தான்.
இரண்டு நிமிடங்களில்… ‘நல் கேர்’ யோசித்து முடித்து, “அவங்க பேரு ஏதாவது தெரியுமா?” என்று கேட்டான்.
இப்போது அடியாள் யோசிக்க ஆரம்பித்தான்.
“சீக்கிரம் சொல்லு” என்று ‘நல் கேர்’ அவசரப்படுத்தினான்.
“ஆங்! அதுல ஒருத்தி சொன்னா… ‘மிலா உள்ளே ஏறு-ன்னு’ ” என்று அடியாள் சொன்னதும்,
‘மிலா? இது யார்?’ என ‘நல் கேர்’ யோசித்தாலும், “ஒரு நிமிஷம் வெயிட் பண்ணுங்க” என்றான்.
முதலில், அவர்கள் இருவரும் எங்கிருக்கிறார்கள்? என்று தெரிய வேண்டும்.
‘எப்படிக் கண்டுபிடிக்க?’ என ‘நல் கேர்’ தனக்குள் கேள்வி கேட்டான்.
உடனே பதில் கிடைத்தது!
விரல்கள் விசைப்பலகையில் ஓசை வரும் வண்ணம் வேலை பார்த்தன.
ஏற்கனவே, நிகிலின் கைப்பேசியை ‘ஹேக்’ செய்து வைத்திருந்தான்.
அப்படி ஹேக் செய்த பிறகு, அவனது கைப்பேசியின் ‘கான்டக்ட் டீடெயில்ஸ்’ எடுத்து, தனியாக சேமித்து வைத்திருந்தான்.
எதற்காவது… எப்போதாவது… தேவைப்படுமென்று!
இதோ, இப்போது அது அவனுக்கு உதவுகிறது!
‘கான்டாக்ட் லிஸ்ட்-ல்’… ‘மிலா’ என்ற பெயரைத் தேடி, அவளின் கைப்பேசி எண்ணைக் கண்டுபிடித்தான்.
அடுத்து, ‘லொகேஷன் ட்ராக்கர்’ மூலமாக, மிலாவின் கைப்பேசி எந்த இடத்தில் இருக்கிறது என்று பார்த்தான்.
இடம் தெரிந்ததும், மீண்டும் தன் கைப்பேசியைக் காதிற்குக் கொடுத்தான்.
“ஹலோ, அந்தக் கார் இந்த லொகேஷன்ல போய்கிட்டுருக்கு” என்று ஒரு இடத்தைச் சொன்னான்.
“ம்ம்ம்”
“உங்களால போக முடிஞ்சா போங்க. இல்லைன்னா அந்த ஏரியா-ல உங்க ஆளுங்க யாரும் இருந்தா அனுப்பி, அந்தக் காரை ஸ்டாப் பண்ணுங்க. அவங்க போலீஸ் ஸ்டேஷன் போகக் கூடாது. புரியுதா?” என்று கடகடவென உத்தரவிட்டான்.
“இனிமே நாங்க பார்த்துக்கிறோம்” என்று அழைப்பைத் துண்டிக்க போன அடியாளிடம்,
“ஏய்! ஏய்! கட் பண்ணாத” என்று ‘நல் கேர்’ சொன்னதும்,
“சொல்லுங்க” என்றான் அடியாள்.
“அவங்களை எதுவும் செஞ்சிடாத! ஸ்டாப் பண்ணி வச்சிட்டு, அங்கேயே நில்லுங்க. அடுத்து என்ன செய்யணும்னு நான் சொல்றேன்” என்று சொல்லி, அழைப்பைத் துண்டித்தான்.
அதன்பின் பைக், கன மழையிலும் கடும் வேகத்தில் பறந்தன.
நேரம் 11:45
ஷில்பா… மிலா…
சாலையின் ஓரத்தில் நிறுத்தப்பட்ட காரினுள்…
“என்னாச்சு ஷில்பா?” என்றாள் பதற்றத்துடன் மிலா.
“வேகமா போகணும்னு வந்தாச்சு. இது எந்த ஏரியா??” என்று காருக்குள் இருந்து கொண்டே, வெளியே பார்த்தாள்.
கார் கண்ணாடியில் வந்து விழும் மழையினால், ஒன்றுமே தெரியவில்லை.
“மேப்-ல பார்க்கலாம்-ல ஷில்பா?” என்றாள் மிலா, கலக்கம் நிறைந்த குரலில்.
“நெட் யூஸ் பண்ணவே பயமா இருக்கு” என்றாள் ஷில்பா எரிச்சலுடன்.
“ஏன் ஷில்பா?”
“நிகில் ப்ளூடூத் யூஸ் பண்ணதுக்கு அப்புறம்தான் ப்ராப்ளம் வந்தது. அதான்?”
“அது, கார்ல ப்ராப்ளம் இல்லையா?” என்று மிலா புரியாமல் கேட்டாள்.
மிலாவிற்குப் பதில் செல்லாமல்… பதற்றத்துடன், அரக்க பரக்க ஷில்பா எதையோ தேடிக் கொண்டிருந்தாள்.
“என்ன தேடுற ஷில்பா? என்கிட்ட சொல்லு” என்றாள் மிலா.
“என் ஃபோன் வேணும்” என்றாள் கால்களின் கீழே தேடிக் கொண்டே!
“இப்போ யாருக்கு ஃபோன் பண்ணப் போற?”
“100-க்கு கால் பண்ணி, ஹெல்ப் கேட்கலாம்ல??” என்று சொல்லும் போதே…
காரின், ‘ரியர் வியூ மிர்ரரில்’ இரண்டு பைக்குகளில் முகப்பு விளக்கின் வெளிச்சம் தெரிந்தது.
ஷில்பா கண் இமைக்காமல், ஒரு முழு நிமிடம்… அந்த ஒளியைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
சட்டென காரைக் கிளப்பினாள்.
பர்ஸ்ட் கியர் போட்டதும், ஆக்ஸிலேட்டரை அழுத்தி மிதித்தாள்.
எடுத்தவுடன், அப்படி ஒரு வேகத்தில் கார் சென்றது.
“ஷில்பா என்னாச்சு? ஏன் இப்படி டிரைவ் பண்ற?” என்று மிலா கத்தினாள்.
‘அதெப்படி பின்தொடர முடியும்?’ என்று யோசித்த ஷில்பா, மீண்டும் காரின் வேகத்தைக் கூட்டினாள்.
“என்னாச்சு ஷில்பா?” என்று கேட்டு, மிலா அழுதாள்.
“ஒன்னுமில்லை. நீ பேசாம இரு” என்றவளுக்கு, கைகள் நடுங்கின.
கார் கண்ணாடியில்… தூரத்தில் தெரிந்த பைக் இரண்டும், கொஞ்சம் கொஞ்சமாகத் தன் காரை நெருங்கி வந்து கொண்டிருப்பது தெரிந்தது.
ஷில்பாவும் காரின் வேகத்தை அதிகப்படுத்திப் பார்த்தாள்.
ஆனால், அதைவிட வேகத்தில்… அந்த இரண்டு பைக்கும் நெருங்கி வந்து கொண்டிருந்தன.
ஷில்பா பின்னாடி திரும்பிப் பார்த்தாள். ஷில்பாவின் பயத்தைக் கண்டு, மிலாவும் பின்னே திரும்பிப் பார்த்தாள்.
“பாலோவ் பண்றாங்களா?” – மிலா.
“ம்ம்! ஆனா, எப்படின்னுதான் தெரியலை” என்ற ஷில்பாவின் குரல் நடுங்கியது.
ஷில்பாவின் வேகத்தைக் கண்டு, மிலாவிற்குப் பயம் வந்தது. எனவே, “ஷில்பா, கொஞ்சம் பார்த்துப் போ… ” என்றாள்.
“ச்சே இந்த மழை வேற?!” என்று சொல்லி முடிக்கும் பொழுது, ஒரு பைக்… ஷில்பா இருக்கை இருக்கும் கதவின் அருகில் வந்தது.
காருக்கு இணையான வேகத்தில், நூலிழை இடைவெளியில்… அந்த பைக் வந்து கொண்டே இருந்தது.
கார் போகும் வேகத்தில்… ஜெர்ரியை இறுகப் பிடித்துக் கொண்டு, மிலா கண்களை மூடிக் கொண்டாள்.
பதற்றத்தில் ஷில்பாவிற்கு ‘என்ன செய்ய?’ என்றே தெரியவில்லை.
‘பயப்படாதே பயப்படாதே’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டே, காரின் வேகத்தை அதிகப்படுத்தினாள்.
கனமழையினால், சாலையை சரியாக கணிக்க முடியவில்லை.
குத்துமதிப்பாக ஓட்டினாள். ஆனால், வேகமாக ஓட்டினாள்.
இக்கணம், மற்றொரு பைக்! மிலா, இருந்த பக்கத்தின் கதவை ஒட்டிக் கொண்டு வந்தது.
தன் பயத்தை மறைத்து, எதிரே வந்த பாலத்தின் மேல்… ஷில்பா காரை ஏற்றினாள்.
பைக் இரண்டும்… இன்னும் இன்னும் நெருங்கி வந்தன. காரை நிறுத்தச் சொல்லி, காரின் கதவுகளில் கைகளால் அடித்தனர்.
நான்காவது கியரில் இருந்து கொண்டு, காரின் வேகத்தை ஷில்பா கூட்டினாள்.
இதனால்… இந்த நொடியில்… பைக்கிற்கும் காருக்கும் 10 அடி இடைவெளி இருந்தது.
இன்னும் வேகமாகப் போனால், தப்பித்து விடலாம் என நினைத்து…
அந்தப் பாலத்தின் ஏற்றத்தில், ஐந்தாவது கியர் மாற்றி, காரை வேகமாக நேரே செலுத்தினாள்.
ஆனால், அந்த இடத்தில பாலத்தின் திருப்பம் இருந்தது.
நேராகச் செல்லக் கூடாது. திரும்ப வேண்டும்!
ஆனால், ஷில்பா அதைக் கவனிக்கவில்லை. காரைத் திருப்பவுமில்லை.
வேகமாகி சென்று, பாலத்தின் நடைமேடையில் ஏறி… பக்கச் சுவரின் மேல் கார் மோதியது.
இடித்த வேகத்தில்…
பாலத்தின் பக்கச் சுவர் கொஞ்சம் உடைந்தது!
காரின் முகப்பு விளக்குகள் நொறுங்கின!
ஷில்பாவும் மிலாவும் முன்னோக்கிச் சரிந்தனர்.
காரின் ‘ஏர் பேக்’ வந்தது.
இருவரும், வெள்ளை நிறத்தில் வந்த பலூனில் மோதினர்.
இருவருக்கும் அதிர்ச்சி! ஜெர்ரியை, மிலா தனக்குள் புதைத்துக் கொண்டாள்.
மொத்தத்தில் கார் நின்றுவிட்டது!
ஒரு அரை நொடி கழிந்தது!
அதிர்ச்சியில் இருந்து மீண்ட ஷில்பா, ‘அடுத்து என்ன செய்ய?’ என்று தெரியாமல், காரின் கதவைத் திறந்து வெளியே வந்தாள்.
அவள் காரை திறந்து வெளியே வந்து நின்றதும்…
அதே நேரம்…
அதே வினாடி…
அதே நொடி…
பின்னே துரத்திக் கொண்டு வேகமாக வந்த பைக், அவளின் முன் வந்து உரசிக் கொண்டு நின்றது.
ஷில்பாவிற்கும், பைக்கின் முன் சக்கரத்திற்கும் இடைவெளி இல்லை.
ஆனால், அவளை இடித்துத் தள்ளவில்லை.
பைக்கில் வந்தவன் பிரேக் பிடித்து வண்டியை நிறுத்திவிட்டான்.
இருந்தும்… ஷில்பா ‘ஆ.. மிலா’ என்று அலறி, கீழே சரிந்தாள்.
பைக்கில் வந்தவன் அதிர்ச்சியுடன் பார்த்தான்.
இன்னொரு பைக்கில் வந்தவனும், காரின் அருகே வந்து நின்று, ‘அச்ச்சோ’ என்பது போல் தலையில் கை வைத்தான்.
அதிர்ச்சியில் இருந்து வெளிவந்த மிலா, ஷில்பா கத்துவதைக் கண்டு வெளியில் பார்த்தாள்.
“ஐய்யோ ஷில்பா… ” என்று பதறி, ஜெர்ரியைத் தூக்கிக் கொண்டு, காரிலிருந்து இறங்கினாள்.
“டேய்! ஏன்டா இப்படிப் பண்ண?” என்றான் இரண்டாவது பைக் ஆள்.
“நான் ஒன்னும் பண்ணலை. பைக்கில முன்னாடி வச்சிருந்த கம்பி குத்திடிச்சு” என்றான் முதல் பைக் ஆள்.
ஆம்! பைக்கின் முன்னே வைக்கப்பட்டிருந்த கூரான இரும்புக் கம்பி, ஷில்பாவைக் குத்தியிருந்தது.
வயிற்றில் இருந்து ரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது.
ஷில்பா சாலையில் சரிந்திருந்தாள்.
எல்லாம் ஓரிரு வினாடிகளில் நடந்து முடிந்திருந்தது.