நீயாக நான், நானாக நீ

ei9FFR645091-07345605

நீயாக நான், நானாக நீ

 

அத்தியாயம் 14

இரு நாட்களாகவே ஆகாஷின் முகம் யோசனையில் சுருங்கியிருக்க, பூமி எவ்வளவோ கேட்டும், “ஒன்றுமில்லை…” என்று கூறிவிட்டான். அன்று காலையிலும் பூமி எழுவதற்கு முன்பே, அவனிற்கு வேலை இருப்பதாக பூமிக்கு அலைபேசியில் செய்தி அனுப்பிவிட்டு கிளம்பிவிட்டான்.

அதைக் கண்ட பூமிக்கு தான் மனம் ஒருநிலையில் இல்லை. ‘என்னாச்சு இந்த அஷுக்கு… இவனும் டென்ஷனாகி, நம்மளையும் டென்ஷன் ஆக்குவான் பக்கி…’ என்று திட்டினாலும், மனதின் ஓரத்தில் இருந்த பயம் அவளின் நிதானத்தை சோதித்துக் கொண்டு தான் இருந்தது.

அலைபேசியில் ஒரு கண்ணை வைத்துக் கொண்டே அலுவலகத்திற்கு கிளம்பினாள். அசோக் அவளை அழைத்துச் செல்லும்போது, அவனிடமும் ஆகாஷைப் பற்றி வினவ, அவனோ, “தெரியலையே பூமி… என்கிட்ட அவன் எதுவும் சொல்லலையே…” என்று கூற, அவளின் பயம் அதிகரித்தது.

அலுவலகத்திலும் பூமியின் நேரம் யோசனையிலேயே கழிய, அவளின் சிந்தனையை கலைப்பது போல் அவளின் அலைபேசி ஒலித்தது. அதில் ரூபாவின் பெயரைக் கண்டதும், பரபரப்பாக அதை உயிர்ப்பித்து, “அஷுக்கு என்னாச்சு…?” என்று வினவினாள்.

“அது வந்து… அண்ணா… வந்து…” என்று ரூபா தயங்க, “என்னாச்சுன்னு ஒழுங்கா சொல்லித்தொல டி…” என்று கத்தினாள் பூமி.

ரூபாவும் பூமியின் பொறுமையை மேலும் சோதிக்காமல் நடந்ததை கூறத் துவங்கினாள்.

“நம்ம சினேகாக்கு இன்னும் வாரத்துல கல்யாணம் டி… அதுக்காக அவ இன்னிக்கு ஊருக்கு போக வேண்டியதா இருந்துச்சு… போன வாரத்துலயிருந்தே அவ ஒரு மாதிரி இருந்தா… அவகிட்ட கேட்டா, சரியா தூங்கலன்னு ஏதோ சொல்லி சமாளிச்சா… நாங்களும் கல்யாண டென்ஷன்ல அப்படி இருக்கான்னு விட்டுட்டோம்… ஆனா இன்னிக்கு காலைல ஒரு அஞ்சு மணிக்கு, ரிஷா எனக்கு கால் பண்ணி, ‘சினேகா சூசைட் அட்டெம்ப்ட் பண்ணிட்டா…’ன்னு சொன்னா.. எனக்கு பயங்கர ஷாக் டி… எங்க அம்மாவ எப்படியோ சமாளிச்சு, அவங்க வீட்டுக்கு போற வழில தான் அவங்க அண்ணாக்கு கால் பண்ணிடுவாங்களோன்னு தோணுச்சு… ஆனா நான் அவங்களுக்கு திரும்ப கால் பண்றதுக்குள்ள, அவங்க அண்ணாக்கு கால் பண்ணி சொல்லிட்டாங்க டி… சாரி டி அண்ணாவ இந்த ப்ராப்ளம்குள்ள இழுத்து விட்டதுக்கு…” என்றாள் ரூபா.

பூமியோ, ஒரு நொடி தோழிக்காக கவலைப்பட்டாலும், அடுத்த நொடியே, ‘லூசு… இத என்கிட்ட சொல்றதுக்கு என்ன… நானும் ஹெல்ப் பண்ணிருப்பேன்ல…’ என்று தன்னவனை மனதிற்குள் திட்டினாள்.

ரூபாவிடம், “இதுக்கு ஏன் டி சாரி சொல்ற… என்கிட்ட சொல்லிருந்தா நானும் ஹெல்ப் பண்ணிருப்பேன்ல… சரி அத விடு சினேகா எப்படி இருக்கா இப்போ…?” என்று பூமி கேட்க, “அவ இப்போ இங்க இல்ல டி…” என்று ரூபா தயங்கியபடியே கூறினாள்.

“என்ன டி சொல்ற… அதுக்குள்ள ஊருக்கு போயிட்டாளா… அவளுக்கு அந்த கல்யாணத்துல இஷ்டமில்லன்னா எதுக்கு டி அனுப்புனீங்க… அதுவும் இந்த மாதிரி நேரத்துல…” என்று ரூபாவை பேச விடாமல் கேள்வி கேட்க, “ப்ச் என்ன பேச விடு பூமி…” என்றாள் ரூபா. பூமி அமைதியானதும் மீண்டும் கதை கூறத் துவங்கினாள் ரூபா.

“சினேகா கல்யாணம் பிடிக்கலன்னு மட்டும் சூசைட் பண்ண ட்ரை பண்ணல… அவளுக்கு வேற ஒருத்தன பிடிச்சதும், அவன் சொன்ன டைமுக்கு வராம போனதும் தான் காரணம்…” என்று ரூபா கூற, அதிர்ந்தாள் பூமி.

“ஹே ரூப்ஸ் என்ன டி சொல்ற… அவ லவ் பண்ணாளா.. அதுவும் நமக்கு தெரியாம… இத்தன வருஷம் பழகிருக்கோம், நம்மகிட்ட கூட சொல்லலையே டி…” என்று பூமி கவலையுடன் கூற, “ப்ச் விடு டி… அவள பத்தி தான் உனக்கு தெரியும்ல…” என்று ரூபா தான் பூமியை சமாதானப் படுத்தினாள்.

“ஆனா அவ லவ் பண்றது ரெண்டு நாளைக்கு முன்னாடியே அண்ணாக்கு தெரியும் டி…” என்று ரூபா அடுத்த அதிர்ச்சியை பூமிக்கு கொடுக்க, ‘ஓ அதான் அவன் ரெண்டு நாளா ஒரு மாதிரி இருந்தானா…’ என்று நினைத்தவள், “எப்படி தெரியுமாம் உங்க அண்ணாக்கு…” என்றாள் சிறிது கோபத்துடன்.

அவளின் கோபத்தை உணர முடியாத நிலையில் இருந்த ரூபாவோ, “அவ ஆளோட பேசுறப்போ கேட்டுருப்பாங்க போல டி… அவகிட்ட விசாரிசப்போ, அவ ஊருலயே ஒரு பையன லவ் பண்ணதாகவும், அந்த பையன் இப்போ ஃபாரின்ல வேலை பாத்துட்டு இருக்குறதாகவும் சொன்னாளாம். கல்யாணத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடியே வந்து ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்குறேன்னு சொன்னானாம்.. அந்த நம்பிக்கைல தான் இவ்ளோ நாள் அமைதியா இருந்தாளாம்… ஆனா ஒரு வாரத்துக்கு முன்னாடி அந்த பையன் ஏதோ வேலை இருக்கு வரதுக்கு ரெண்டு நாள் ஆகும்னு சொல்லவும் இவளுக்கு பயமாகிடுச்சு… அப்போ பேசிட்டு இருக்கப்போ தான் அண்ணாவும் பாத்துருக்காங்க… அன்னிக்கே அண்ணா அவள வீட்டுல பேச சொன்னங்களாம்… அவங்க கூட அவளுக்காக பேசுறேன்னு சொன்னங்களாம்… ஆனா இவ தான் பயங்துட்டு நேர்ல போய் பேசிக்குறேன்னு சொல்லிட்டாளாம்… ஆனா இந்த லூசு எதையெதையோ நெனச்சு பயந்து, அவ ரூம்ல தூக்கு போட்டுக்க முயற்சி பண்ணிருக்கா… நல்ல வேள அங்குட்டு வந்த ரிஷா ஜன்னல் வழியா அவ பண்ற காரியத்தை பார்த்து கத்த, அவளும் ஸ்வேதாவும் எப்படியோ சினேகாவ காப்பாத்திருக்காங்க…” என்றாள்.

பூமிக்கு அதைக் கேட்டு என்ன கூறுவதென்றே தெரியவில்லை. இப்படி கோழையாக இருக்கும் தோழியை எண்ணிக் கவலை கொள்வதா, இல்லை அவளின் விருப்பத்திற்கு மதிப்பு கொடுக்காமல் கௌரவம் கருதி திருமணம் செய்து வைக்க காத்திருக்கும் அவளின் பெற்றோரை எண்ணி நொந்து கொள்வதா என்று புரியாமல் பெருமூச்சு விட்டாள்.

அப்போது பூமியின் மனம் அவளின் தந்தையை எண்ணியது. திருமண விஷயம் தவிர, அவர் எப்போதும் அவளின் விருப்பத்திற்கு தடை விதித்ததில்லை. ஆகாஷிற்கு திருமணம் செய்து கொடுப்பது கூட, அவளே அறியாத மனதை அவர் அறிந்ததாலோ என்று யோசிக்கத் துவங்கினாள்.

ரூபா மேலும் தொடர்ந்தாள். “நானும் அண்ணாவும் அங்க போனதுக்கு அப்பறம் வேக வேகமா அவள ஹாஸ்பிடல் கூட்டிட்டு போனோம்… அண்ணா தான் ஏதோ சொல்லி அவளுக்கான ட்ரீட்மெண்ட் தொடங்க வச்சாங்க… உண்மைலேயே அண்ணா இல்லனா நாங்க எப்படி சமாளிச்சுருப்போம்னே தெரியாது…” என்று கூறவும் தன்னவனை நினைத்து பெருமை கொண்டாள் பெண்ணவள்.

“அவளுக்கு ட்ரீட்மெண்ட் போயிட்டு இருக்க சமயத்துல, அவ மொபைலயிருந்து அவ லவருக்கு கால் பண்ணா, அவன் அவளுக்கு சர்ப்ரைஸ் தரணும்னு அவகிட்ட சொல்லாம இந்தியா வந்துட்டானாம்… உடனே அவன ஹாஸ்பிடல் வர சொல்லிட்டு வச்சுட்டாங்க அண்ணா…” என்று ரூபா கூறியதும், “நல்லா சர்ப்ரைஸ் குடுத்தான்… அப்பறம் என்னாச்சு..?” என்று கேட்டாள் பூமி.

“அப்பறம் என்ன அவன் வந்ததும் மேடம் டேம ஓபன் பண்ணிட்டாங்க… அவங்கள தனியா பேச விட்டுட்டு நாங்க வெளிய வந்துட்டோம்… அப்போ அவ மொபைலுக்கு அவங்க அப்பா கிட்டேயிருந்து கால் வந்துச்சு… அவரு ஆளுங்க அவள கூப்பிட வரதாகவும், அவங்க கூட அவள வர சொல்லியும் சொல்லிட்டு அந்த மனுஷன் வச்சதும் இவ மறுபடியும் அழுகைய அரம்பிச்சுட்டா… அண்ணா எவ்ளோவோ சொல்லி பாத்தாங்க, அவள அப்பா கிட்ட பேச சொல்லி… ஆனா அவ கேக்கவே இல்ல… இப்போவே ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணனும்னு பிடிவாதம் பிடிச்சா… வேற வழியில்லாம அண்ணாவும் அவ லவரோட பிரெண்டும் அவங்கள கூட்டிட்டு போனாங்க… அவங்க போன பத்து நிமிஷத்துலயே அவள தேடி அவங்க அப்பா ஆளுங்க இங்க வந்தாங்க… அண்ணா சொல்லிக் குடுத்த மாதிரியே, அவ அப்போவே ஊருக்கு கிளம்பிட்டான்னு சொன்னோம்… ஆனா அவங்க நம்பாம, ரெண்டு பேரு இங்கேயே எங்கள கண்காணிச்சுட்டு இருந்தாங்க… இப்போ அவங்களுக்கு ஏதோ கால் வந்துச்சு டி… கோபமா பேசிட்டே இங்கயிருந்து கிளம்பி போயிட்டாங்க… அவங்க இவ்ளோ நேரம் இங்கயே இருந்ததால, என்னால உனக்கும் கால் பண்ணி சொல்ல முடியல… அவங்கள பாத்தாலே ரவுடி மாதிரி தெரியது டி… எனக்கு என்னமோ பயமா இருக்கு பூமி…” என்று ரூபா கூறி முடித்ததும் பூமிக்கும் பயமாகத் தான் இருந்தது.

“நீ அஷுக்கு கால் பண்ணியா…” என்று பூமி கேட்க, “ரிங் போயிட்டே இருக்கு டி…” என்று பயத்துடன் ரூபா கூறினாள்.

“சரி நான் கால் பண்ணி பாக்குறேன்..” என்று ரூபாவின் அழைப்பைத் துண்டித்தாள்.

கைகள் நடுங்க ஆகாஷிற்கு அழைத்தாள் பூமி. நான்கு முறை அழைத்தும் அவன் எடுக்க வில்லை என்றதும் பூமியின் கண்கள் கலங்க, மூளை அடுத்து என்ன செய்ய வேண்டுமென்று கட்டளையிடாமல் வேலை நிறுத்தம் செய்தது.

சட்டென்று அவளிற்கு சுந்தரின் நினைவு வந்தது. வேக வேகமாக சுந்தரின் எண்ணை அழுத்தியவள், அவனின் குரலிற்காக காத்திருந்தாள்.

சுந்தர் அழைப்பை ஏற்றதும், “ஹலோ சுந்தர்… எனக்கொரு உதவி செய்ய முடியுமா..?” என்றாள் பூமி.

அவனி(ளி)ன் குரலிலிருந்த பதட்டத்தை உணர்ந்த சுந்தர், “என்னாச்சு ஆகாஷ்… ஏன் இவ்ளோ டென்ஷனா இருக்க…” என்றான் சுந்தர்.

பூமியும் விஷயத்தை சுருங்க சொல்லியவள், “ப்ளீஸ்… அவளுக்கு எப்படியாவது ஹெல்ப் பண்ண முடியுமா…” என்றாள்.

“கூல் ப்ரோ… நான் இங்கே பக்கத்துல தான் இருக்கேன்… நான் இப்போவே அங்க போறேன்… அண்ட் என்னோட பிரெஸ் டீமையும் அங்க வரசொல்றேன்…. மேபி பிரெஸ் இருக்குறது தெரிஞ்சா, அவங்க அடிதடில ஈடுபட மாட்டாங்கன்னு நெனைக்குறேன்… நீ கவலைப்படாத… அங்க போயிட்டு சூழ்நிலை எப்படி இருக்குன்னு சொல்றேன்…” என்று பேசிவிட்டு வைத்ததும் தான் பூமிக்கு சற்று நிம்மதியாக இருந்தது.

மீண்டும் ஒருமுறை ஆகாஷிற்கு அழைத்தாள், ‘ப்ளீஸ் அஷு பிக் தி கால்…’ என்று வேண்டிக்கொண்டே…

*****

இங்கு ஆகாஷோ பதட்டத்தின் உச்சத்தில் இருந்தான். ஏற்கனவே திருமணத்திற்கான ஆவணங்களை முறைப்படி பதிந்திருந்தாலும், இது பெரிய இடத்து பிரச்சனை என்று யூகித்த சார்பதிவாளர் அவர்களின் திருமணத்தை அங்கீகரிக்க தயங்கினார்.

ஆகாஷ் தான் அவரை பேசியே அதற்கு சம்மதிக்க வைத்திருந்தான். அதிலேயே அவன் சோர்ந்தும் போயிருந்தான். இடையிடையே அவனிற்கு நிறைய அழைப்புகள் வர, அவற்றை அவன் கண்டுகொள்ளவில்லை.

ஒரு வழியாக திருமணத்திற்கான வேலைகள் அங்கு ஆயத்தமாக, சற்று நிதானித்தான், ஆகாஷ். அப்போது அவனின் அலைபேசியைக் கண்டவன், பூமியின் எண்ணிலிருந்து நிறைய அழைப்புகள் வந்திருக்க, ‘ப்ச்… இவள வேற சமாளிக்கணுமே…’ என்று எண்ணிக் கொண்டிருக்கும் வேளையில் மீண்டும் அவளிடமிருந்தே அழைப்பு வந்தது.

அவன் அழைப்பை ஏற்கவும், ‘அந்த ரவுடி கும்பல் வெளியில் நிற்கின்றனர்…’ என்ற தகவல் வருவதற்கும் சரியாக இருந்தது. அதை பூமியும் கேட்டிருந்தாள்.

“அஷு நீ உடனே கிளம்பி வா…” என்றாள் பூமி. அப்போது அவளிற்கு அவளின் ‘அஷு’வின் நலனே பெரிதாக தோன்றியது. அவனை உடனே காண வேண்டும் என்ற தவிப்பே, அவளை இப்படி பேசத் தூண்டியது.

“லூசா பூமி நீ… இங்க எவ்ளோ பிரச்சன நடந்துட்டு இருக்கு… இப்போ உடனே கிளம்பி வர சொல்லுற…” என்று தன் கடுப்பை அவள் மீது காட்டினான்.

அவனை எப்படியாவது அங்கிருந்து கிளப்ப வேண்டும் என்று எண்ணிய பூமி, “ப்ச்… இப்போ நீ இருக்குறது என் உடம்புல ஆகாஷ்… இதே நான் அங்க போயிருந்தா நீ என்ன சொல்லிருப்பன்னு கொஞ்சம் யோசிச்சு பாரு… அதே தான் உனக்கு இப்போ சொல்றேன்…” என்று ஏதேதோ கூறி அவனின் முடிவை மாற்ற முயற்சித்தாள்.

“பூமி என்ன டென்ஷன் பண்ணாத… உனக்கு உன் உடம்பு மேல தான கவலை… உன் உடம்புக்கு எதுவும் ஆகாது… சோ இப்போ தயவு செஞ்சு கால் கட் பண்ணு…” என்று கோபத்தில் வார்த்தைகளைக் கொட்டிவிட்டான்.

அவ்வார்த்தைகள் நேராக பெண்ணின் இதயத்தை சென்றடைந்து அவளை வதைத்தது. அவளின் மனமோ, ‘எவ்ளோ ஈஸியா என் உடம்பு மேல தான் அக்கறைன்னு சொல்ற… உன்மேல இருக்க அக்கறை உனக்கு புரியலையா அஷு… அன்னிக்கும் இப்படி தான் சொன்ன…’ என்று உள்ளுக்குள்ளே அழுதது. உடனே அழைப்பைத் துண்டித்து விட்டாள்.

பூமி அழைப்பைத் துண்டிக்கவும் தான், சற்று முன் பேசிய வார்த்தைகள் நினைவிற்கு வர, ‘ஷிட்… என்ன பேசி வச்சுருக்க இடியட்… யாரு மேலயோ இருக்க கோபத்த அவகிட்ட காமிச்சுருக்க…’ என்று அவனையே திட்டிக் கொண்டவன், பூமிக்கு அழைத்தான். இது பூமியின் முறை போல… அவனின் அழைப்பை அவள் ஏற்கவில்லை.

அதே நேரம் சாட்சி கையெழுத்து போட ஆகாஷை அழைக்க, அவனும் சென்று விட்டான்.

அங்கு திருமணம் நடந்து முடியவும், சினிமாவில் வருவது போல் ரவுடிகள் நுழையவும் சரியாக இருந்தது. அதன் பின்னர் அங்கு வாக்குவாதம் நடக்க, பெண்ணின் தந்தையும் அங்கு வந்துவிட்டார். அவருக்கு முன் பத்திரிக்கையாளர்கள் அங்கு வந்துவிட மகளை எதுவும் சொல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார்.

பத்திரிக்கையாளர்கள் சினேகாவின் தந்தையிடம், “நீங்க உங்க பொண்ணோட காதலுக்கு ஒத்துக்காததால தான் அவங்க ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிட்டாங்களாமே… வேற ஜாதின்னு ஒத்துகலையா சார்… நீங்க உங்க பொண்ணோட காதலனைக் கொன்னுடுவேன்னு மிரட்டுனீங்களாமே…” என்று அவரவர் யூகங்களை வைத்து கேள்விகளால் அவரை துளைத்தெடுத்தனர்.

இதனால் தன் வியாபாரம் பாதிக்கப்படுமோ என்றெண்ணியவர், சிறந்த வியாபாரியாக அவர்களிடம் பேச ஆரம்பித்தார்.

பிரச்சனை ஓரளவிற்கு முடிந்தது போல் தெரிய, ஆகாஷ் சினேகாவிடம் சென்றான். அவளருகே இருந்த விவேக் (சினேகாவின் கணவன்), “ரொம்ப தேங்க்ஸ் மா பூமி.” என்றான்.

அவனைக் கண்ட ஆகாஷ், “இனிமே சூழ்நிலை புரிஞ்சுட்டு சர்ப்ரைஸ் பிளான் பண்ணுங்க…” என்று கூறினான். பின்பு சினேகாவிடம் திரும்பியவன், “இனிமேலாவது எதுனாலும் தைரியமா ஃபேஸ் பண்ண பாரு…” என்று கூறினான்.

பின் அவர்களிடம் விடைபெற்றவனை பிடித்துக் கொண்டான் சுந்தர். “ஹே பூமி… உனக்கு கொஞ்சமாச்சும் அறிவிருக்கா… என்ன பண்ணபோறன்னு யாருக்கிட்டயும் சொல்லாம தான் செய்வியா…” என்று திட்ட, ஆகாஷோ மனதிற்குள், ‘அடுத்து இவனா…’ என்று சலித்துக் கொண்டான்.

“அங்க ஆகாஷ் உனக்காக எவ்ளோ டென்ஷனா இருக்கான் தெரியுமா…” என்று அவன் கூறியதும் பூமியின் நினைவு வந்தது. மேலும், ஆகாஷ் தனக்கு அழைத்து பேசியதை சுந்தர் கூற, பூமி தனக்காக இவ்வளவு செய்திருப்பதை எண்ணி அவளின் மேல் காதல் கூடியது. அவன் வார்த்தைகளால் அவளை வருத்தியதும் நினைவிற்கு வர, ‘இன்னிக்கு உனக்கு அடி கன்ஃபார்ம் ஆகாஷ்…’ என்று நினைத்தான்.

தான் கிளம்புவதாகக் கூறி சுந்தரைக் காண, “நீ போ… எனக்கு இங்க கொஞ்சம் வேலையிருக்கு… அத முடிச்சுட்டு வந்து உன்ன கவனிச்சுக்குறேன்.” என்று அவளை பத்திரமாக அனுப்பி வைத்தான்.

செல்லும் வழியில் மீண்டும் பூமியின் எண்ணிற்கு முயற்சி செய்ய, அது அணைத்து வைக்கப்பட்டிருந்தது. அவன் உடனே அசோக்கிற்கு அழைத்தான்.

“டேய் மச்சான் பூமி எங்க…?” என்று ஆகாஷ் அசோக்கிடம் கேட்க, “அவளுக்கு உடம்பு முடியலன்னு அப்போவே வீட்டுக்கு கிளம்பிட்டா டா… காலைலயிருந்தே அவ டல்லா தான் இருந்தா… ஏதாவது பிரச்சனையா டா…” என்றான் அசோக்.

“அதெல்லாம் ஒன்னுமில்ல மச்சான்… நான் வீட்டுக்கு தான் போயிட்டு இருக்கேன்… நான் பாத்துக்குறேன்…” என்றான்.

*****

வீட்டிற்கு வந்த பூமிக்கு அவனின் வார்த்தைகளே மனதில் சுழன்று கொண்டிருந்தது. ‘அவன் எப்படி அப்படி சொல்லலாம்…’ என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.

அவளின் மனச்சாட்சியோ, ‘நியாயப்படி பார்த்தா நீ தான் பதறிருக்கணும்… பாதிக்கப்பட்டது உன் பிரெண்டு… அங்க உதவி பண்ணிட்டு இருக்கவனையும் கிளம்பி இங்க வர சொன்னா அவனுக்கு கோபம் வராதா… இப்போ நீ அங்க இருந்துருந்து ஆகாஷ் உன்ன வான்னு கூப்பிட்டா உனக்கும் கோபம் வரத்தான செய்யும்… அவனே டென்ஷன்ல இருக்கும்போது இவ வான்னு சொன்னதும் எல்லாத்தையும் விட்டுட்டு வந்துடனுமாம்…’ என்று அவனிற்கு கொடி பிடித்தது.

‘ஹே நீ எனக்கு தான மனச்சாட்சி… அப்போ எனக்கு தான சப்போர்ட் பண்ணனும்… ஹும் என்ன தான் இருந்தாலும் அவன் எப்படி என்ன பாத்து அப்படி சொல்லலாம்…’ என்று மீண்டும் அதிலேயே வந்து நின்றாள்.

பூமிக்கு புரிந்து தான் இருந்தது. அவ்வார்த்தைகள் அவனின் பதட்டத்தின் வெளிப்பாடு என்று… இருந்தாலும் அவன் வந்து சமாதானப்படுத்தும் வரை இப்படி தான் இருப்பாள். அவனின் ஒரு ‘சாரி’ தான் அவள் கேட்க விரும்புவது… ஆகாஷ் அதை புரிந்து நடப்பானா…

 

தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!