நெஞ்சத்தில் நீ,வஞ்சத்தில் நான் -20

சாரதா பொதுவாகவே அன்பான பெண், தாயில்லாமல் வளர்ந்ததால் அந்தச் சோகத்தை மறைக்கவே துடுக்குத்தனத்தோடு கலகலப்பாகவும் மாறியவர், அதை எப்பொழுதும் பிறரை துன்புறுத்தவென்று பயன்ப்படுத்தியதில்லை.

அறிவழகனின் மேல் அளவு கடந்த காதலை வளர்ந்துக் கொண்டவரால் அவரின் வாயிலிருந்து வரும் பழிச்சொற்களையும், இழிச்சொற்களையும் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

அது அவரின் இயல்பு, மென்மையான மனம் படைத்தவரால் தன்னை தாக்கி ஒருவன் பேசியதில் அழுகை முட்டிக்கொண்டு வந்து அவரை வதைத்தது. ‘தன் பக்க நியாயத்தைக் கேட்காது பழி போடும் ஒருவனிடத்தில் தான் காதல் வயப்பட்டிருக்கிறோம்’ என்று தன்னையே நொந்துக்கொள்ள மட்டுமே அவரால் முடிந்தது.

அறிவழகனின் கேவலமான வார்த்தைகள் தந்த தாக்கத்திலும் வலியிலும் அழுகை ஒற்றை கோடாய் நிற்காது வழிய, சாரதா அழுதுக்கொண்டே இருந்தார். 

சாரதாவை பழிவாங்கத் துடித்த அந்தக் கேவலமான பிறவி தன் முதல் வெற்றியை ஒரு ஏளன சிரிப்போடு பார்த்துக்கொண்டிருந்தது. பின், 

“உன் அழுகை முடிந்தது என்றால், அடுத்து ஆகவேண்டியதை பார்ப்போமா?”என்றது அடுத்த வேதனை கொடுக்க.

பெண்களுக்கே உண்டான பயத்தில் தனிச்சை செயலாகப் பின்னே நகர,” ஹே, ஓவரா பண்ணாத, என்னோட தேவை ஒரே ஒரு முறை, அதன் பின் நீ போகலாம், இங்க நடந்தது பற்றி நான் யாரிடமும் கூறமாட்டேன்” என்றது வக்கிரமாக.

இன்னமும் பயந்து அவர் சுவற்றோடு மோதிக்கொள்ள, அவரை வக்கிரமாக நெருங்கியவர் ‘நீரிலிருந்து வெளியே எடுத்தால் ஒரு மீன் எவ்வாறு துடிக்குமோ’ அப்படி துடித்தவரின் எதிர்ப்புகளுக்குக் கொஞ்சமும் மதிப்பளிக்காது கொடுரமாய் வேட்டையாடியது அந்தக் கேடுக்கெட்ட பிறவி.

ஒரு முறை, ஒரே முறை சாவின் விளிம்புக்குச் சென்று வந்தார் சாரதா. சொன்னது போலவே தன் தேவையை முடித்துக் கொண்ட அந்தப் பிறவி சாரதாவின் உடைகளை அவரின் முகத்தில் எறிந்து விட்டு “போ… இனி எவன் கூட வேணும்னாலும் போ…”என்றது.

அழுதழுது ஓய்ந்தவர் எப்படி தன்னை சீர்ப்படுத்திக்கொண்டு வெளியே வந்தார் என்பதை அவரே அறியமாட்டார். தன்னை மறந்து உலகம் மறந்து ரோட்டின் ஓரத்தில் கால்களுக்கு நில் என்ற கட்டளையிடப்படாமல் நடந்துக்கொண்டே இருந்தவர் ஒரு இடத்தில் மயங்கி இருந்தார்.

மறுநாள் காலை ரவி திரும்புகையில், ஒரு பெண் நடுரோட்டில் கிடப்பதை பார்த்தவர் அருகே சென்று பார்க்க. அங்குச் சாரதாவை அவர் கனவிலும் எதிர்ப்பார்க்கவில்லை, அங்கு வந்த ஒரு காரில் லிப்ட் கேட்டு அவரை அவசரமாக மருத்துவமனையில் சேர்க்க, அவரைப் பரிசோதித்தவர்களுக்கு அவரின் நிலை பிடிப்பட.

ரவியிடம் வந்தவர்கள் அவர் யார் என்று கேட்க, “நான் அவர்களின் நண்பன்” என்று தன்னை அறிமுகம் செய்ய, “சரி, அவங்க வீட்டிலிருந்து யாரையாவது கூப்பிடுங்க”என்று விட்டனர்.

ஒன்றும் புரியாது விழித்தவர், உடனடியாகச் சென்று சாரதாவின் தந்தையை அழைத்து வந்தார். மருத்துவர்கள் அவரிடம் விஷயத்தைப் பகிர்ந்திட நெஞ்சை பிடித்துக்கொண்டு சரிந்து விட்டார் அவர் அங்கயே அவருக்கும் ட்ரீட்மென்ட் துவங்க, ரவிக்கு ஏதோ தவறாய் பட்டது. ஒரு அளவுக்கு அவரால் அதைப் புரிந்துக்கொள்ளவும் முடிந்தது.

தந்தை, மகள் என இருவரையும் பார்த்துக்கொண்டவர், இரண்டாவது நாள் சாரதா கண் விழிக்கவும் அவரிடம் எதுவும் கேட்காதவர் “உனக்கு ஒன்றுமில்லை “என்று மட்டும் கூறினார்.

வாழ்க்கையையே வெறுத்துவிட்டிருந்தார் சாரதா, ‘ஒன்றுமில்லை என்று சொன்னால் அது சரியாகிவிடுமா? நடந்த அனைத்தையும் மாற்றத்தான் முடியுமா?’ மனம் ஊமையாய் கதறியது. 

சாரதாவின் தந்தைக்கு சிறிது சரியாகியதும் அவரும் பல முறையில் “என்ன நடந்தது? யார் போன்ற கேள்விகளை” கேட்டுப்பார்த்தார் வாயைத் திறக்கவேயில்லை சாரதா. மனம்வெறுத்து போய் அவரும் விட்டுவிட்டார், வீட்டிற்கும் வந்துவிட்டனர். ஒரு அறையில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார் சாரதா. ரவி இடை இடையே வந்து அவரைத் தேற்ற முயன்றார் முடியவில்லை…

இப்படியே சில நாட்கள் போக… தன் உடலின் சில மாற்றத்தை உணர்ந்தார் சாரதா, அது உணர்த்திய செய்தியில் ஆடிப் போய் விட்டார். ஒரு நாள் அதிகாலையில் தந்தையிடம் எதுவும் கூறிக்கொள்ளாது மருத்துவமனை சென்றிருந்தார். உலகத்தின் அத்துனை கடவுள்களையும் மனதில் வேண்டிக்கொண்டார் ‘அது மட்டும் எனக்கு வேண்டாம் என்று’ கடவுள்களும் அவருக்குக் கருணை காட்டவில்லையோ!

மறுநாள் ரிப்போர்ட்டில் அவரின் கர்ப்பம் உறுதியாகி விட, உடைந்துவிட்டார் சாரதா ‘என்ன தீங்கு செய்தேன்? யாருக்கு தீங்கு செய்தேன்? யார் கொடுத்த சாபம் இது?” என்று வேதனையாய் நினைத்து மருகியவர். அடுத்த என்ன என்ற கேள்வி துரத்த… முழுநேரமும் அழுகையில் கரைந்தார்.

நீ எப்படி இருந்தாலும் நான் வளர்வேன் என்று வயிற்றில் உள்ள ஏதும் அறியா புனித உருவம் தன் வளர்ச்சியை உற்றாருக்கு உரைத்திட  வெறும் வாயை மென்றவர்களுக்கு அதற்குப் பெரிய தீனியாய் கிடைக்க.

சாரதாவின் மொத்த வாழ்வை அவர் அவரின் விருப்பத்திற்கு தகுந்தார் போல் ஒரு கதையை வடிவமைத்து அதில் யார் கதை சிறந்தது என்று போட்டியிட்டு கொண்டிருந்தனர்.

மகள் வீட்டை விட்டு வெளியவே வருவதில்லை. தந்தை அப்படியில்லையே உழைக்க வேண்டுமே, தன் மகளைப் பற்றிய அவதூறுகள் அவரின் காதையும் கடிக்க தாங்கிக்கொள்ள முடியவில்லை அவரால், ஒரு தந்தை கேட்கக்கூடாத வார்த்தைகள் தன் மகளைப் பற்றி.

நேராக அவரின் மகளின் அறைக்குச் சென்றவர், அவரின் காலில் விழுந்து கதறியே விட்டார், அவரின் மன்றாடல் “யார் என்று கூறு, என் உயிரைக் கொடுத்தாவது திருமணம் செய்து வைக்கிறேன் “என்பதாகவே இருந்தது. ஏளனத்தோடு அவரைப் பார்த்தவர் முதல்முறை தன் வாயைத் திறந்து அந்தப் பேரைச் சொன்னார்.

அதை உள்வாங்கிக் கொண்டவர் ரவியிடம் உரைக்கக் கொதிநிலைக்கு சென்ற ரவி அறிவை கொல்லும் ஆத்திரத்தில் இருக்க அவரை அமைதிப்படுத்தியவர், அறிவை காண வேண்டும் என்றார். அதன் படி மறுநாள் செல்லத் திட்டமிட்டனர் காலையில் கிளம்பி அவர் வெளியே வருகையில் சாரதாவும் அவரை எதிர்க்கொண்டார்.

“நானும் வருகிறேன்” என்று மட்டும் உரைத்தார் அழுத்தமாக. தன் மகளின் இத்தனை அழுத்தம் அவரையும் வந்தடைய “சரி வா”என்றுவிட்டார்.

அவரை எங்கெங்கோ தேடி இறுதியில் விளையாட்டு மைதானத்தில் கண்டுப்பிடித்தார்கள், அவரிடம் சென்று “தம்பி, நான் உங்களோடு பேச வேண்டும்” என்றார் சாரதாவின் தந்தை அமைதியாக.

 

“நீங்க யாரு ? எனக்கு உங்களை தெரியாது “என்று அவர் வெட்டும்பேச்சுடன்.

நான் சாரதாவின் தந்தை”என்றார் மறுபடியும்.

“யார் சாரதா? எந்தச் சாரதா” என்றார் ஒன்றும் அறியாதது போல்.

“தம்பீ, ப்ளீஸ்ப்பா, ஒரு பத்து நிமிஷம் பேசிட்டு போய்டுவோம்” என்றார் தன்மையாகவே.

“இங்க பாருங்க, முன்ன பின்னத் தெரியாதவங்களோட நான் ஏன் பேசணும்?”என்று திமிராய் உரைத்தவரின் பேச்சில் கண்கள் கலங்கி அவனின் காலில் விழுந்தவர் “தம்பி என் பெண் உங்கள் பிள்ளையைச் சுமக்கிறாள்” என்றார் கண்ணீரோடு.அவரைத் தன்  காலால் எட்டிமிதித்தவன்.

“யார் பிள்ளைக்கு யார் பொறுப்பெடுக்கிறது, உங்க பொண்ணு எவன் கூடவோ போய்ப் பிள்ளை வாங்கிட்டு வருவா, அவனை என் பிள்ளை ஆக்கிவிட நினைச்சா முடியுமா…?” என்றார் அறிவு.

அவனின் செயலிலும் வார்த்தையிலும் சினம் தலைக்கேற அவனின் சட்டை  காலரை பிடித்துவிட்டார் ரவி.

தன் சட்டையிலிருந்து அவரது கையைப் பிரித்தெடுத்த அறிவும் “என்ன வேண்டும் உனக்கு?”என்றார் எரிச்சலுடன்.

“என்ன வேணுமா? நியாயம் வேணும் டா, பொறுக்கி நாயே”என்றார் கோபத்தோடு.

“நியாயமா? நான் ஒன்னும் வக்கீலோ நீதிபதியோ இல்லையே”என்றார் நக்கலாக.

“டேய், முஞ்சி முகறையெல்லாம் பேத்திடுவேன் சொல்லிட்டேன்”என்றார் பற்களை நறநறத்துக்கொண்டு.

“இங்க பாரு தேவையில்லாம இங்க வந்து என் டைமை வேஸ்ட் பண்ணாதீங்க, என்னனு தெளிவா சொல்லிட்டு கிளம்புங்க”என்றார் அகங்காரமாக.

“சாரதாவை ஏன் டா இப்படி பண்ணின,”என்றார் ரவி கண்களில் தீயோடு.

“ஹே, என்ன விளையாடுறியா? நான் என்ன பண்ணினேன் உன் சாரதாவை”என்றார் அந்த உன் சாரதாவில் அழுத்தம் கொடுத்து.

“ச்சீய், வாயை மூடு, வெக்கமாய் இல்லை எனக்குச் சாரதா நல்ல தோழி மட்டுமே”என்று அவர் வெடிக்க.

“தோழியாமே, ஊர் ஊராய் சுற்றியது, ஒரே வண்டியில் சுற்றியது எல்லாம் பார்த்தால் அப்படி தெரியவில்லையே…”என்று இழுக்க.

‘பளார்’ என்று அறையும் சத்தத்தில் அனைவரும் அதிர்ந்து நோக்க, சாரதா தான் அறைந்திருந்தார் கண்களில் அனலோடு.

“வாயை மூடு டாப்பொறுக்கி நாயே, நீ யாரு டா எங்களைப் பற்றிப் பேச, உனக்கு என்ன உரிமை இருக்கு?” என்று அவர் கேள்வி கேட்க.அவரைத் தடுத்த அவரின் தந்தையும் “பொறுமையாய் இரு” என்று கெஞ்சினார்.

“நீங்கள் இருங்கள் அப்பா, இவனை நான் கேட்கனும், என் மனசுல உள்ளது அத்தனையும் கேட்கனும்… ஆமாம் டா நான் உன்னை அன்று அடித்தது தப்பு, நான் உன்னைத் தவறாய் புரிந்துக்கொண்டேன், ஆம் நீ, நான் நினைத்ததை விடக் கேவலமான ஜென்மம், உன்னைச் செருப்பால் அடிச்சிருக்கணும்” என்றவரின் வார்த்தைகளும் சரி கண்களும் சரி அக்னி பிழம்பாய்.

“ஏய்…”என்று அறிவு விரல் நீட்டி எச்சரிக்க 

அவரைவிடச் சத்தம் அதிகமாய் “ஏய்…, என்ன ஏய் கீய்னு சொல்ற இங்கையே செருப்பு பிய்யனுமா? ஆமா நீ யாரு முதலில் ஆமா நான் தெரியாம தான் கேக்குறேன், நான் யாரை வேணும்னாலும் லவ் பண்ணுவேன், உன்கிட்ட ஏன் டா அதைச் சொல்லணும்?” என்று நிதானமாகக் கேட்டவர் பின்

“ஒரு பெண் அதாவது அவள் ஒருவனோடு என்ன மாதிரி உறவு முறையில் இருக்கிறாள்ன்னு நீங்களே எப்படிடா முடிவு பண்ணிக்கிறீங்க? யார் உங்களுக்கு அந்த உரிமையைக் கொடுக்கிறது? இந்த நாடு என்னைக்கோ சுதந்திரம் வாங்கிடுச்சு டா, ஆனால் ஒருவள் ஒருத்தனை காதலிப்பது தப்புனு இன்னமும் எப்படி டா சொல்லிட்டு திரியறீங்க?”

“சுதந்திரம் என்பது பொதுவானது, அது மனிதனின் சுதந்திரமாகவே கருதப்படுகிறது, மனிதன் என்றால் அதில் அனைவரும் அடங்குவர், ஆண்கள் நீங்கள் எது செய்தாலும் சரி அதுவே ஒரு பெண் செய்தால், தவறு கூட அல்ல பாவம், நடத்தைக்கெட்டவள், என்று பெயர் சூடி விடுவீர்கள், நீயும் அதே தானே செய்தாய், உன் நோக்கம் என்னைக் கேவலமானவள் என்று இந்த ஊர் முன் நிற்கவைப்பது. அதுவும் சிந்தனையையே குறிக்குது”

“இதற்கு எதற்குச் சுதந்திரம் என்னும் பெயர் ஆண் சுதந்திரம் என்று அதை மாற்றி உங்கள் அக்கிரமங்களை பகிரங்கமாகவே நடத்த வேண்டியது தானே…?”

“நான் அவரை விரும்புறதும், அவர் என்னை விரும்புறதும் எங்கள் இருவரின் தனிப்பட்ட விஷயம், இதைப் பற்றிக் கருத்து சொல்ல நீ யார்? ஆமாம், நான் அவரைத் தான் விரும்புகிறேன், அதில் எங்கள் இருவரின் தவறு என்று எதுவுமேயில்லை, பிடித்தது காதலிக்குறோம், உனக்கு எங்க எரியுது”என்றார் கனலோடு.

அறிவழகனுக்கு பற்றி எரிந்தது. ஆம் இப்படி தன்னை கேள்வி கேட்பார் என்று அவரும் நினைக்கவில்லையே, அதுவும் அவரின் கேள்விகள் அவரை அவமானம் கொள்ள வைத்தது.

“என்ன சொன்னாய், ஊர் சுற்றினேனா?ஆம் சுற்றினேன், அதில் உன் பிரச்சனை என்ன? காதல் கொண்ட இருவர் நாங்கள், நான் கஷ்டப்பட கூடாதென்றும் என் கால் நோகக் கூடாது என்றும் எனக்காக ஒவ்வொன்றையும் அவர் பார்த்துப் பார்த்துச் செய்கிறார், அது எனக்குப் பிடித்திருக்கிறது, அது உனக்குப் பிடித்தால் என்ன பிடிக்காட்டி என்ன? அதைப் பற்றி எனக்கென்ன கவலை.

எனக்கு ஒருவனை பிடிக்கிறது என் சொந்த, நான் மட்டுமே முடிவு எடுக்க வேண்டிய விஷயம் வேற எவனாவது உள்ளே வந்தால் செருப்பால அடிப்பேன்”என்று ஆக்ரோஷமாகக் கூறியவர் மயங்கிச் சரிய.

அவரைத் தாங்கிக்கொண்ட ரவி, அவரைத் தெளிய வைக்கும் முயற்சியில் இறங்க, சாரதாவின் தந்தையோ அறிவின் காலில் விழுந்திருந்தார்.

கண் விழித்த சாரதா தன் தந்தை கண்டு பதறி,” அப்பா எந்திரிங்க, இவன் காலில் ஏன் விழுறீங்க, ஏன் காலில் விழுவதிலே இருக்கீங்க? உங்கள் பெண்ணின் வாழ்வை கெடுத்தவனிடமே வாழ்க்கை கேட்பது எப்படி முறை ஆகும் நீங்கள் இப்படி இருப்பதால் தானே ஆடுகிறார்கள்.”

“நீங்கள் இவனின் காலை உங்கள் கைகளால் பிடிப்பதற்கு பதில் அரிவாளால் வெட்டியிருந்தால் சந்தோஷப்பட்டிருப்பேன், என்னைப் பழி தீர்க்கவென்று ஒரு காரியத்தைச் செய்தவன் கையிலே என்னை ஒப்படைப்பது சரியா? உங்கள் மகளை வேசி என்று வக்கிரமாகக் கூறியவனிற்கு வாழ்நாள் முழுமைக்கும் வேசியாய் போய் இருனு சொல்வது தான் முறையா?”

கைகளால் வாயைப் பொத்திக்கொண்டு அழுதார் அந்தப் பாசமான தந்தை, “உங்களை இவனிடத்தில் கூப்பிட்டு வந்தது, இவனைப் பற்றி அறியவைத்து, இவனுக்கு நீ மனைவியாய் வாழ்வதை விட என் மகளாய் இருந்துவிட்டு செத்துப்போன்னு நீங்கச் சொல்வீங்கனுதான்” என்றவர் பின்.

“நீ, என்ன தான் பொய்க்கூறி மறைத்தாலும் உன் வாரிசு என் வயிற்றில் உள்ளது, நான் நினைத்தால் இதற்கு நீ தான் அப்பன் என்று நிச்சயம் நிரூபிக்க முடியும்…அதைப் பண்ண நான் விரும்பலை, ஏன்னா இவன் என் பிள்ளையாய் மட்டுமே இருக்கணும்னு நான் ஆசைப்படுகிறேன் இவன் உன் பிள்ளைனு நிரூபிச்சு உனக்கும் இவனைப் பங்களிக்க நான் விரும்பவில்லை.இது உன் பிள்ளை இல்லை, இதைக் கடைசி வரைக்கு நீ நியாபகம் வெச்சுக்கனும்…”என்றவர். 

“இனிமே நீ யாரோ நான் யாரோ என்றவர் தன் தந்தையையும் ரவியையும் அழைத்துக்கொண்டு திரும்பியும்  பாராது சென்றிருந்தார்

செவிலியர் ஒருவர் வந்து அவர்களின் நினைவைக் கலைக்க, கடந்த காலத்திற்குள் சென்று வந்த இருவரின் கண்களும் ஈரமாய் இருந்தது.

செவிலியர் சென்றதும்,” சாரு சாரிடா” என்றார் கண்களில் கண்ணீரோடு

“விடுங்க எல்லாம் விதி, நடந்தது நடந்து போச்சு”

“மன்னிச்சுட்டேன்னு சொல்ல மாட்ட இல்ல உனக்கிட்ட நான் வந்து அஞ்சு வருசம் ஆச்சு, பல தடவை உன்கிட்ட மன்னிப்பு வேண்டிட்டேன், ஆனால் உன்னால் என்னை மன்னிக்க முடியலையே” என்றார் வேதனையாக.

அமைதியாய் இருந்தார் சாரதா பின்” முடியவில்லை, எத்தனை எத்தனை கஷ்டங்கள், வேதனைகள், துக்கங்கள் என்னையும் பார்த்துக்கொள்ளாது, தந்தையும் பார்க்காது, நம் பிள்ளையையும் கவனிக்காது. என் இளமை காலம் முழுவதையும் அழுகையில் மட்டுமே கரைத்தேன் இழந்தது எத்தனை, வார்த்தைகளால் கூறி முடிவதா நான் அனுபவித்தது” என்றவர்.

“உங்களை மன்னிக்கக் கூடாது என்பது என் எண்ணமல்ல முயற்சி செய்கிறேன் முடியவில்லை” என்றார் வருத்தத்தோடு.

“புரிகிறது சாரதா, அப்பொழுது வேணும்னா உன்னைப் புரிந்துக்கொள்ளாது நான் தவறிழைத்திருக்கலாம் இப்பொழுது மாட்டேன், என் கவலை எல்லாம் நம் பிள்ளை என்னைப் போல் ஆகிவிட கூடாது”என்றார் வருத்தத்தோடு.

அவரின் வருத்தம் இவரையும் வதைக்க” நான் வரேன் கூப்பிட்டு போங்க” என்றார் முடிவு எடுத்தவராக.பின்,” என்னால் அந்த வீட்டில் தங்க முடியாது வேற வீடு பாருங்கள்” என்று முடித்துக்கொண்டார்.

**********