நெருப்பின் நிழல் அவன்! 12

அத்தியாயம்: 12

சிறு வயதில் இருந்தே யாரிடமும் சுடு சொல் கேட்டு பழகி இருக்காத சாந்தவிக்கு ஈஸ்வரனின் வார்த்தைகள் காயத்தை மட்டுமே கொடுத்தாலும் அவனின் அன்பு வேண்டும் என்றே பாவையின் மனம் எதிர்பார்த்தது. நேற்றைய இரவின் கூடலில் ஈஸ்வரனுக்கு தன் மீது இருந்த கோபம் போய் விட்டது என்று நினைத்து மகிழ்ந்த சாந்தவிக்கு அவன் கொடுத்த சேலை இன்னும் சந்தோசத்தையே கொடுத்தது.

முதன் முதலில் அவன் வாங்கி தந்த சேலை என‌ அவள் மனம் சந்தோசத்தில் குதிக்க ஈஸ்வரனோ அதை நொடியில் இல்லாமல் போக செய்திருந்தான்.

ஈஸ்வரனின் வார்த்தையில் சாந்தவியின் முகத்தில் இருந்த புன்னகை நொடியில் மறைந்து விட கண்ணாடியில் தன்னை பார்த்தாள். அதுவரை தனக்கு அழகாய் தெரிந்த சேலை அழகு குன்றி தெரிந்ததோடு.. உடலில் எரிச்சலை கொடுக்க, சேலையை கழட்டி கட்டிலில் வீசியவளின் மனம் கோபத்தில் துடித்தது. அவளவன் யாரோ ஒருத்திக்கு சேலை வாங்கியதை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

வேறு உடை ஏதும் அறையில் இல்லாததால் தலையில் முடிந்திருந்த டவலை எடுத்து தோளில் போட்டு போர்த்திக்கொண்டு வெளியே வந்தவள் படிகட்டின் அருகே சற்று உள் தள்ளி மறைந்து நின்று “சாரு..” என்று சாரதாவை அழைத்தாள்.

ஹாலில் ரத்தினத்துடன் மற்றும் மிதுனுடன் அமர்ந்து பேசி கொண்டிருந்த சாரதா.., சாந்தவி அழைத்ததை கவனிக்கவில்லை. ஆனால்.. கவனிக்க வேண்டியவன் கவனித்து விட்டான். சாந்தவியை வேண்டும் என்றே காயப்படுத்தி விட்டு கீழே வந்த ஈஸ்வரன் அன்றைய நியூஸ் பேப்பரை எடுத்துக்கொண்டு அமரவும் சாந்தாவி… சாரதாவை அழைக்க, அவள் எதற்கு அழைக்குறாள் என்று புரிந்து கொண்டவன், சாந்தவி அழைத்ததை சாரதா கவனிக்காமல் இருக்கவும் பேப்பரை மடித்து வைத்து விட்டு எழுந்து சென்றான்.

தன் அழைப்பிற்கு சாரதாவிடம் இருந்து எந்த பதிலும் இல்லை என்றதும் மீண்டும் “சாரு…” என்று சற்று கோபமாக கத்திய சாந்தவிக்கு கழிவிரக்கத்தில் தொண்டை அடைத்தது. தான் இருக்கும் நிலை மனதை அழுத்தியது. ஈஸ்வரனின் சொல் நெருஞ்சி முள்ளாக மனதை குத்தியது. ஆனால் இதன் எல்லாவற்றிற்கும் அவள் மட்டுமே காரணம் என்பதால் வலியை மனதோடு புதைத்து கொண்டாள்.

இப்போது சாந்தவி அழைத்தது சாரதாவிற்கு கேட்டு விட “சாவி… கூப்பிடுறா ஆங்கிள். போய்ட்டு வரேன்..” என்று சாரதா எழ போக.., “அதான்… சக்தி போறானே! நீ இருமா..” என்று ரத்தினம் தடுத்து விட்டார்.

மேலே வந்த ஈஸ்வரன் அறைக்கு வெளியே அரைகுறை உடையுடன் நின்ற சாந்தவியை பார்த்து “என்ன டி இது… கோலம்” என்று கோபமாக அதட்ட, ஈஸ்வரனை முறைத்த சாந்தவி அவனை கண்டு கொள்ளாமல் மீண்டும் சாரதாவை கூப்பிட போக, அவள் வாயை போத்தி இடுப்பை சுற்றி கைப்போட்டு அறைக்கு தூக்கி வந்தவன் “இப்போ.. எதுக்கு வீடே அதிருர மாதிரி கத்திட்டு இருக்க? என்னடி உன் பிரச்சனை..!!” என்றான் அதட்டலாக.

சாந்தவி பதில் பேசாமல் இறுக்கமாக நிற்க, அவள் உதாசீனம் ஈஸ்வரனுக்கு கோபத்தை கொடுக்க, அவள் தாடையை அழுத்த பற்றி தன்னை நோக்கி திருப்பியவன் “கேட்டா.. கேட்ட கேள்விக்கு பதில் வரனும். உன் அப்பன் வீட்டு திமிரை என்கிட்ட காட்ட கூடாது…” என்றவன் “சேலையை ஏன்டி கழட்டி வீசி இருக்க..? என்ன திமிரா…?!” என்று கேட்க,

“யாருக்கோ வாங்குன சேலை எனக்கு வேண்டாம். நீங்க யாருக்கு வாங்குனிங்களோ அவங்களுக்கே போய் குடுக்க…” என்று சாந்தவியும் அத்திரத்துடன் கூற.

அவளை ஏளனமாக பார்த்த ஈஸ்வரன் “என்னடி இது அநியாயமா இருக்கு..!! அடுத்தவ கட்டிக்க இருந்தவனை மட்டும் ‘நான் தான் கட்டிப்பேன் னு’ கல்யாணம் பண்ணுவ.. ஒரு சேலையை கட்டிக்க மாட்டியா!!” என்றான் குரலில் வியப்பு காட்டி ஏளனமாக.

“உங்களுக்கு அந்த பொண்ணை பிடிக்கலைன்னு சொன்னதுனால தான் கல்யாணம் பண்ண ஒத்துக்கிட்டேன்…” என்று சாந்தவி கூறும் போதே “நான் எப்போ சொன்னேன் பிடிக்கலைனு..!” என்று ஈஸ்வரன் இடையிட, சாந்தவி அதிர்ந்தாள் “என்ன சொல்கிறான்..!! அந்த பெண்ணை இவருக்கு பிடிக்கும் என்றா..!!” என்று நினைத்தவள்

“நீங்… நீங்க பேசவே இல்லை. அதான்.. அந்த பொண்ணு கல்யாணத்தை நிறுத்துனதா தானே சொன்னாங்க…” என்று மனம் படபடக்க கேட்டாள்.

“பச்… எனக்கு கால் பண்ற பழக்கம் இல்லை. அது என் கேரக்டருக்கு சூட் ஆகாத விசயம். காலேஜ் படிக்கும் போதும் அம்மா தான் டெய்லி நைட் கால் பண்ணுவாங்க‌.. நான் அம்மாகே கால் பண்ணது இல்லை. அதிலேயும் இப்போ கல்யாண வேலை பிஸ்னஸ் னு பிஸியா இருந்ததுனால பேச டைம் கிடைக்கலை. அத அவ.. தப்பா புரிஞ்சிக்கிட்டு கல்யாணத்தை நிறுத்திட்டா…” என்றான்.

உமையாள் தினமும் இரவு கால் செய்யும் போது இவன் கால் செய்ய வேண்டிய அவசியம் என்ன என்று யோசிக்காத சாந்தவி அவன் சொன்னதை உண்மை என்று நம்பினாள். ஈஸ்வரனுக்கு இன்னொரு பெண்ணை பிடித்திருக்கிறது என்பதை ஏற்று கொள்ள முடியாத பாவையின் மனம் உள்ளுக்குள் உடைந்து நொறுங்கியது. அதன் வலி கண்ணில் பிரதிபலிக்க அவனை வெறித்து பார்த்தவள் “அப்… அப்போ நே.. நேத்து எங்கிட்ட..” என்று இரவு கூடலை நினைவுட்ட வார்த்தையை கோர்க்க முடியாமல் சாந்தவி தடுமாற

அவள் பார்வையின் தடுமாற்றத்தையும், வார்த்தையின் திணறலையும் வேடிக்கை பார்த்த ஈஸ்வரன் “நேத்து நைட் நடந்ததை பற்றி கேக்குறியா..!!” என்று கேட்க, சாந்தவி “ஆம்..” என்று தலையசைக்கவும் “விட்ட சவாலை மறந்துட்ட போல..!!” என்றான் ஒரு மாதிரி குரலில்.

ஈஸ்வரனின் வார்த்தையில் அதுவரை சாந்தவியிடம் இருந்த திடம் நொடியில் அகன்று விட, தோய்ந்து மடங்கி கீழே அமர்ந்தவள் கதறி அழுதாள். ஈஸ்வரன் வேறு பெண்ணை மனதில் நினைத்தான் என்பதையே தாங்க முடியாதவள்… விட்ட சவாலுக்காக தான் தன்னை நெருங்கினான் என்பது சாந்தவியை நிலைகுலைய செய்தது.

குமரன் செய்த குற்றத்திற்கு தன் பெண்மையை அழித்தவன் மேல் ஆத்திரம் கட்டுக்கடங்காமல் வர ஆவேசமாக ஈஸ்வரனின் சட்டையை பிடித்தவள் “ஏன்டா… இப்படி பண்ண..!?, ஏன் இப்படி பண்ண…!!, அவளை தான் பிடிக்குனா அப்பவே சொல்லி இருக்கலாம் இல்லை! நான் ஒதுங்கி இருப்பேனே… ஏன் சொல்லாம விட்ட?!, இதுக்கு நீ என்னை கொன்னு போட்டுருக்கலாம்…” என்று கதற.

அவளை தன்னிடம் இருந்து விலக்கிய ஈஸ்வரன் “கொலை பண்ணுனா ஒரு நாள் ல எல்லாம் முடிஞ்சிருமே…, இப்போ நீ அழறதை உன் அப்பன் பார்ப்பானா டி..?!” என்று சந்தேகமாக கேட்க,

அவனை கண்ணீருடன் ஏறிட்டவள் “அதான்… உயிரோட வச்சி கொல்லுறியா…??” என்று கேட்கும் போதே உள்ளிருந்த வலி கண்ணீராக திரண்டு விழுந்தது சாந்தவிக்கு.

முகத்தில் எதையும் வெளிக்காட்டாமல் நின்ற ஈஸ்வரனின் உள்ளம் சாந்தவியின் கண்ணீரில் தடம் புரள.., அதற்கு மேல் அங்கே நின்றால் அவளை தானே சமாதானமாக அணைத்துக்கொள்வோம் என்று நினைத்தவன் அறை கதவை அடைத்துவிட்டு வெளியேறி இருந்தான்.

என்ன தான் அவர்களின் நெற்றைய கூடல் விட்ட சவாலுக்காக என்று ஈஸ்வரன் கூறினாலும் அதை சாந்தவியால் ஏற்று கொள்ள முடியவில்லை. அவன் தன்னை காயப்படுத்தவே இதையெல்லாம் பேசுகிறான் என மூளை கூக்குரலிட்டாலும், அது தான் உண்மை என ஏற்றுக்கொள்ள விடாமல் மனதில் அவளவனின் பேச்சு நினைவு வந்து வதைத்தது. தன்னை என்ன செய்தாலும்… ஈஸ்வரனை குறைவாக எண்ணாத மனதை நினைத்து அவளுக்கே அவள் மேல் வெறுப்பு வர அப்படியே அமர்ந்து இருந்த சாந்தவின் முன் ஒரு கவர் வந்து விழுந்தது.

அது அவர்கள் ஊட்டியின் இருந்து வரும் போது எடுத்த உடை இருந்த கவர். சாந்தவி.. நிமிர்ந்து ஈஸ்வரனை பார்க்க அவனோ அவள் தூக்கி வீசி இருந்த புடவையை எடுத்து கபோர்ட்டில் வைத்து பூட்டிவிட்டு அவளிடம் வந்தவன் “இன்னொரு முறை இப்படி..” என்று அவளை சுட்டி காட்டியவன் “ரூம்பை விட்டு வெளிய வந்த…!! அப்பறம் இந்த சக்தீஸ்வரனோட இன்னொரு முகத்தை பார்ப்ப..” என்று கூறி திரும்பி செல்ல போனவன் மீண்டும் அவளிடம் வந்து “ஒன்று சுய புத்திய வளர்த்துக்கோ… இல்லையா..! சொல் பேச்சி கேட்டு பழகு.. அப்போ தான் உண்மை எது சரி எதுன்னு புரிஞ்சிக்க முடியும்..” என்று பூடமாக கூறியவன் வீட்டை விட்டு வெளியேறி இருந்தான்.

ஈஸ்வரன் கோபமாக சென்றதை பார்த்த சாரதா எழுந்து சாந்தவி அறைக்கு வந்தவள்.. அங்கே தரையில் அமர்ந்து அழுது கொண்டிருந்த சாந்தவியை பார்த்து பதறி அருகில் வந்தவள் “சாவி என்னடி ஆச்சு…” என்று கேட்கவும் தமக்கையை பார்த்ததும் “சாரு..” என்று அவளை அணைத்து கொண்ட சாந்தவி அழுகையில் கரைய “என்ன ஆச்சு டி சொல்லு.., சும்மா அழுதுட்டே இருந்தா நான்‌ என்ன நினைக்குறது டி..” என்று சாரதா கேட்க “நாம.. இங்.. இங்க இருக்க வேண்டாம்.. எனக் எனக்கு இங்க பிடிக்கலை வா.. நாம.. நம்ம வீட்டுக்கே போவோம்..” என்று தேம்பினாள்.

சாரதா எவ்வளவு சமாதானம் செய்து என்ன நடந்தது என்று கேட்டும் “வீட்டை விட்டு போக வேண்டும்..” என்பதை தவிர சாந்தவி வேறு எதுவும் சொல்லாமல் இருக்க, ஈஸ்வரனுடன் சண்டை என புரிந்து கொண்ட சாரதா, சாந்தவியை தேற்றி உடை மாற்ற வைத்தாள். சாரதாவை பொருத்தவரை ஈஸ்வரனுக்கு இது விருப்பம் இல்லாத திருமணம், அதிலும் சாந்தவிக்கும் ஈஸ்வரனுக்கும் இடையில் முன்பே சண்டை இருக்க அந்த கோபத்தில் திட்டி விட்டான்… போலும்… என்று நினைத்தவள் சாந்தவியை சமாதானம் செய்து உடன் இருந்து பார்த்து கெண்டாள்.

ஊட்டிக்கு சென்றதில் இருந்தே ஆலைக்கு செல்லாததால் ஈஸ்வரனுக்கு வேலை தலைக்கு மேல் குவிந்து கிடந்தது. இதில் அவன் ரத்தினத்திற்கு தெரியாமல் செய்யும் கட்ட பஞ்சாயத்து வேலையும் வரிசை கட்டி நின்றது. எளிதில் கோபம் வந்து யாரையும் சட்டென்று கை நீட்டும் பழக்கம் கொண்டவனுக்கு எதிரிகளுக்கு சொல்லவா வேண்டும். அதிலும் இவன் குணம் அறிந்து சிலர் அவர்கள் காரியத்திற்கு பணம் கொடுத்து இவனிடம் முடித்து கேட்க ஈஸ்வரனும் வேலையை முடித்து கொடுத்து விடுவான். ஈஸ்வரனை பொறுத்தவரை தோழில் என்று இல்லாமல் தன் கோபத்தை வெளிக்காட்டும் வழி அவ்வளவே. மாலை வரை ஆலை வேலைகளை பார்த்தவன். நில தகராறில் கவனிக்க வேண்டிய ஒருவனை கவனித்து விட்டு வீடு வர நள்ளிரவு ஆகி இருந்தது.

ஈஸ்வரன் அறைக்கு வந்த போது சாந்தவி சோஃபாவில் காலை குறுக்கிக் கொண்டு படுத்திருக்க அவள் தூக்கம் கலையாமல் சென்று ஃபிரஷ் ஆகி வந்தவன் லைட்டை அனைத்து விட்டு படுக்கவும் உடல் சோர்வின் காரணமாக தூக்கி இருந்தான்.

காலையில் சாந்தவி எழுந்து கொள்ளும் முன்பே எழுந்து வெளியே சென்று இருந்தான். இப்படியே இரண்டு நாட்கள் செல்ல, சாந்தவியின் முகத்தில் இருந்த வாட்டம் உமையாளை யோசிக்க வைத்தது‌. ஈஸ்வரன் விடியும் முன்பே வெளியே கிளம்பி செல்வதையும்.. சாந்தவி அறையை விட்டு வெளியே வராமல் இருப்பதையும் கவனித்த உமையாள் ஈஸ்வரனுக்கு அழைத்தார்.

அவன் போனை எடுத்ததும் “ஏன்டா நீ மட்டும் இப்படி இருக்க..?!” என்று ஆதங்கமாக கேட்டார். உமையாள் என்ன சொல்ல வருகிறார் என்று புரியாத ஈஸ்வரன் “என்ன மா..!” என்று கேட்கவும் “பேசாத டா..! உன் மேல அவ்வளவு கோபம் வருது சக்தி‌. எனக்கு பிறந்துட்டு எப்படி டா இப்படி அரக்கன் மாதிரி மனசாட்சியே இல்லாம இருக்க..!!, உனக்கு கல்யாணம் பண்ணி வச்சா ஊரை போல நீயும் நல்லா இருப்பனு தான்டா அந்த பொண்ணு வேண்டாம்னு போனாலும் சாந்தவியை கல்யாணம் பண்ணி வச்சேன். ஆனா உன்னால வர பொண்ணும் சேர்ந்து கஷ்டப்படுவானு நினைக்கலை சக்தி..!”,

“உனக்கு பிடிக்குதோ..! இல்லையோ..! சாந்தவி உன் பொண்டாட்டி… அதை மறந்துடாத. அவ உன்னை நம்பி தான் இங்க வந்தா…, இப்போ சாப்பிட கூட செய்யாம ரூம்குள்ளேயே இருக்கா டா.., என்னடா பண்ணுன அந்த பொண்ண..!” என்று கோபமாக கேட்டவர் “அம்மா… நிம்மதியா இருக்கனும்னு நினைச்சா…! சாந்தவியோட சேர்ந்து வாழு. நான் உன் ஒருந்தனுக்காக மட்டும் தான் இன்னும் நடமாடிட்டு இருக்கேன் சக்தி. அது உனக்கே தெரியும்..! அப்பறம் உன் இஷ்டம்…” என்று தன் மனதில் இருந்த ஆதங்கத்தை எல்லாம் படபடவென மகனிடம் கொட்டியவர் ஈஸ்வரன் பதில் பேசும் முன்பே அழைப்பை துண்டித்து இருந்தார்.

உமையாளின் கோபம் ஈஸ்வரனிடம் நன்றாக வேலை செய்ய அன்று வேலையை முடித்து கொண்டு சீக்கிரமாக வீட்டிற்கு வந்தவன், அவன் அறைக்கு செல்ல.. பக்கத்து அறையில் கேட்ட சாந்தவி சத்தத்தில் நின்றவன், அடுத்து உள்ளே சாந்தவி பேசியதை கேட்டு முகம் இறுக பற்களை கடித்தான்.

“சாரு.. நானும் ஊட்டிக்கே வரேனே..!! எஸ்டேட்ல வேலை பார்த்துகிட்டு அங்கவே இருந்துக்குறேன்… எனக்கு இங்க இருக்க பிடிக்கலை..” என்று கூற, “நோ… இனிமேல் உன் லைப் இங்க தான். எதுவா இருந்தாலும் நீ பேஸ் பண்ணி தான் ஆகனும். ஹஸ்பன்ட் அன்ட் வைப் குள்ள சண்டை சாதாரணம் இதுக்கெல்லாம் வீட்டை விட்டு வரேன்னு சொல்ல கூடாது. போக போக சரி ஆகிடும்..” என்று சாரதா சாமாதானம் கூற “அப்படி இல்லை… அவங்களுக்கு என்னை..” என்று சாந்தவி ஏதோ கூறும் போதே அறை கதைவை தட்டி விட்டு உள்ளே வந்த ஈஸ்வரன்,

“வெளிய போகனும் கிளம்பு…” என்று கூறி விட்டு வெளியேறி விட, சாந்தவி கண்டுகொள்ளாமல் அமர்ந்து இருக்க, சாரதா “என்னடி அவங்க வெளிய போகனும்னு கூப்பிட்டுட்டு போறாங்க.. நீ பேசாம இருக்க போ…” என்று வற்புறுத்தி சாந்தவியை அனுப்பி வைக்க, வேண்டா வெறுப்பாக அவர்கள் அறைக்கு வந்த சாந்தவி “எங்க போகனும்..” என்றாள் எரிச்சலாக,

“ஏன்..! சொன்னாதான் வருவியா..?” என்று கேட்டவன் அவளை இழுத்து தன் கை வளைவில் நிறுத்த,

“நீங்க சொன்னாலும் நான் வர்லை என்னை விடுங்க…” என்ற சாந்தவி அவன் கையை விலக்க பார்க்க, நரம்புகள் முறுக்கேறி திடமாக இருந்த அவன் கைகளை அவளால் அசைக்க முடியவில்லை.

“ஏன் வர்ல.. காரணம் சொல்லு..” என்றவன் அவளை தன்னுடன் சேர்த்து அணைக்க, “விடுங்க என்னை இனிமேல் என் பக்கத்துல வந்திங்கனா அப்பறம் இருக்கு உங்களுக்கு…” என்று திட்டியவள் அவன் மார்பில் அடிக்க அதை சாதாரணமாக வாங்கி கொண்ட ஈஸ்வரன் “அப்பறமா என்ன இருக்கு..? இப்பவே தா வாங்கிக்குறேன்…” என்று அவள் இதழை நெருங்கியவன் கைகள் அவள் வெற்றிடையை தேட அப்போது தான் அவள் சுடிதார் போட்டிருப்பதை பார்த்தவன் “என்ன‌ டிரெஸ்டி இது கன்டிராவியா இருக்கு… கை வைக்க இடம் இல்லை” என்க,

சாந்தவிக்கு அவனை அடித்து நொறுக்க தோன்றிய மனதை அடக்கி கொண்டு வெளியே உக்கிரமாக ஈஸ்வரனை முறைத்தவள் அவனை தள்ளிவிட்டு விட்டு அறையில் இருந்து வெளியேற போக.. அவளை செல்லவிடாமல் தடுத்து… அவளை இழுத்து தன் மேல் போட்டு கொண்டவன் அவள் இதழை சிறை எடுத்து இருந்தான்.

ஈஸ்வரனிடம் இருந்து விடுபட முடியாமல் போன சாந்தவியின் விழி நீர் ஈஸ்வரன் கன்னம் தொட்டு செல்ல முகம் இறுக அவளை தன்னை விட்டு விலக்கியவன் “கிளம்பு போலாம்…” என்று விட்டு பாத்ரூமிற்குள் நுழைந்து கொண்டான்.

அதன் பிறகு சாந்தவியும் ஏதும் பேசாமல் கிளம்ப அவளை மதுரையில் பிரபலமான மாலுக்கு அழைத்து வந்தவன் நேராக புட் கோர்ட் அழைத்து சென்றான். உமையாள் போனில் திட்டும் போதே சாந்தவி சரியாக சாப்பிடுவது இல்லை என்று கூறி இருக்க சாப்பிட்டுவிட்டு அடுத்து பார்த்துகொள்ளலாம் என்று வந்து விட்டான்.

ஏதோ சிந்தனையுடன் கை நகத்தை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த சாந்தவியின் தோற்றம் ஈஸ்வரனை என்னவோ செய்ய “சாந்தவி…” என்று அவள் கை பற்ற, அவனை நிமிர்ந்து பார்த்தவள் “நான் ஒன்னு கேக்குறேன் உண்மைய சொல்றிங்களா..?!” என்றாள் தயக்கமாக,

“கேளு.., பட் இப்போ இல்லை.. சாப்பிட்ட அப்பறமா கேளு… பதில் சொல்றேன்..” என்று ஈஸ்வரன் கூற அவன் முகம் பார்க்காமல் எங்கோ பார்த்தவள் “எனக்கு பசி இல்லை…” என்றாள்.

“அது எப்படி உனக்கு மட்டும் இரண்டு நாளா பசிக்காது..” என்று கேட்டவன் “நீ என்னை கல்யாணம் பண்ணுனதால தான் சாரதாவும், மிதுனும் இப்போ நம்ம வீட்டுல இருக்காங்க… நீ இப்படி சோக கீதம் வாசிச்சிட்டு சாப்பிடாமா இருந்தா… அவங்களுக்கு இங்க இருக்க தோனுமா…” என்று கேட்க

“அப்போ… இப்போ கூட சாரதா ஊருக்கு போய்டுவானு தான் என்னை சாப்பிட சொல்றிங்களா…?!” என்று சாந்தவி வெடுக்கென கேட்க, ஆத்திரத்தில் பல்லை கடித்த ஈஸ்வரன் “பைத்தியமா டி நீ..!! நான் என்ன கேட்கிறேன்…! நீ என்ன பதில் சொல்ற…” என்றான்.

ஈஸ்வரனின் அன்றைய பேச்சிலேயே உழன்று கொண்டிருந்த சாந்தவி அவளை தவிர எதையும் யோசித்திருக்கவில்லை. அவள் என்ன மனநிலையில் இருக்கிறாள்..!அவளுக்கு என்ன வேண்டும் என்று அவளுக்கே தெரியாத நிலையில் இருக்க இதில் அடுத்தவரை பற்றி நினைவு வரவில்லை. ஈஸ்வரனின் செய்கை வேறு பேச்சி வேறாக இருக்க இதற்கு என்ன காரணம் என்று தான் அவளின் நினைவு மொத்தமும் இருக்கிறது. முன்பு குமரனை காரணம் காட்டி வலிகளை மட்டும் தந்தவன் இப்போது சிறிது சந்தோசத்துடன் சேர்த்து வலியை தருகிறான்.

இதோ… இப்போதும் அவள் சாப்பிடாதது தெரிந்து அழைத்து வந்துள்ளான் என்று அவன் செய்கை கூறுகிறது. கேட்டால் ஒத்து கொள்ள மாட்டான். சந்தோஷப்படுத்துபவன் ஏன் வலியை தர வேண்டும்..??, வலிகளை தர நினைப்பவன் ஏன் துளி சந்தோசம் தந்து அதை பறித்து கொள்ள வேண்டும்..?? அப்படி நான் என்ன செய்து விட்டேன்..?? என்று சாந்தவியின் எண்ணம் பலவற்றையும் நினைத்து மறுக, அவள் முக மாற்றத்தை கவனித்த ஈஸ்வரன் சாந்தவி உதட்டில் வலிக்கும் படி சுண்டி விட்டான்.

“ஸ்… ஆ.. ” என்று வலியில் முகம் சுழித்தவள் ஈஸ்வரனை முறைத்து பார்க்க “என்னடி யோசனை..!” என்றான் அதட்டலாக.

“இனிமேல் பாத்துக்குறேன்..” என்றாள் அவனை முறைத்து கொண்டே.
இன்னும் பல கேள்வி கேட்பாள் என்று நினைத்திருந்த ஈஸ்வரனுக்கு சாந்தவியின் புரிதலான பதில் சிறு வியப்பை தர.. அவளை கூர்ந்து பார்த்தவனின் இதழில் தானாக வந்து அமர்ந்தது சிறு கர்வ புன்னகை. தன் சரிபாதி தான் விளக்கம் கூறாமலேயே அவனை புரிந்து கொல்ல முயல்கிறாள் என்றதில் வந்த கர்வம் அது.

“சரி என்ன சாப்பிடுற..?” என்று ஈஸ்வரன் மீண்டும் கேட்க, “பசி இல்லை… எதுவும் வேண்டாம்..!” என்று சாந்தவி பழைய பல்லவியையே பாட பேரரை அழைத்து இருவருக்கும் சேர்த்து ஆர்டர் செய்தான்.

“நான் உங்க கிட்ட கேட்டேனா…” என்று சாந்தவி கேட்கவும் “ஏதோ… கேட்கனும் னு சொன்னியே..! என்ன கேட்கனும் இப்போ கேளு..” என்று ஈஸ்வரன் பேச்சை மாற்ற “அது.. அது…” என்று எப்படி கேட்பது என்று தெரியாமல் சாந்தவி திணற,

அவள் திணறலை பார்த்த ஈஸ்வரன் “கேள்வி வில்லங்கமானது போல..!” என்று ஒற்றை புருவம் மேல் ஏற்றி கேட்க, “இல்லை.. ஆமா…” என்று திணறியவள் “அந்.. அந்த பொண்ண மனசுல வச்சி என்னோட…” என்று கூறவும் “ஜஸ்ட் ஸ்டாப் இட்….” என்று கத்திய ஈஸ்வரனின் கண்கள் இரண்டும் ரத்தம் என் சிவந்து இருக்க அவனின் பார்வையே சாந்தவியை கூரு போட்டது.

கோபத்தை அடக்க முடியாமல் டேபிலில் கையை மீண்டும் மீண்டும் குத்தி கொண்டவன் “என்னை பார்த்தா உனக்கு எப்படி தெரியுது டி..!” என்று அடி குரலில் உறுமியவன் “இனிமேல் உன்னை தொட்டா… கேளு” என்று அவளிடம் சீறி விட்டு எழுந்து செல்ல போக

ஈஸ்வரனின் கோபமே சாந்தவியின் கேள்விக்கான பதிலை கூறி விட இத்தனை நாள் மனதில் இருந்த பாரம் நொடியில் இறங்கி விட அவன் கையை பிடித்து கொண்டவள் “ப்ளீஸ்.. எல்லாரும் பாக்குறாங்க… இருங்க” என்று கெஞ்ச “எவன் பார்த்தா எனக்கு என்ன..!? கையை விடு…” என்று ஈஸ்வரன் அடக்கப்பட்ட ஆத்திரத்துடன் கூற

“ப்ளீஸ்….” என்ற கெஞ்சல் பார்வையுடன் அவன் கையை விடாமல் அவனை அமர வைத்த சாந்தவி, அவளும் அவன் அருகில் அமர.., அவளை உதறிவிட்டு எழுந்து எதிர் இருக்கையில் சென்று அமர்ந்த ஈஸ்வரன் அவளை உறுத்து விழிக்க, சாந்தவி பார்வையை தழைத்து கொண்டாள்.

சற்று நேரத்தில் சாப்பாடு வந்து விட இப்போது ஈஸ்வரனுக்கு சாப்பிடும் மனநிலை இருக்கவில்லை “நீயே.. சாப்பிடு” என்று எல்லாவற்றையும் அவள் முன்பாக தள்ளி வைத்தவன் அவள் பதில் பேசாமல் இருக்கவும் ஏதோ உறுத்த நிமிர்ந்து பார்த்தான்.

சாந்தவியின் பார்வை அவன் பின்னால் ஒரே இடத்தில் அதிர்ந்து பார்ப்பதை பார்த்த ஈஸ்வரன் “யாரை பாக்குறா..!” என்று நினைத்துக்கொண்டே ஒரு பக்கமாக சாய்ந்து திரும்பி பார்க்கவும்.. அவன் கழுத்தின் ஒரு இஞ் இடைவெளியில் துப்பாக்கி குண்டு உறசி சென்றது.

நூலிலையில் உயிர் தப்பியவன் துளி பதட்டம் இல்லாமல் குண்டு வந்த இடத்தை கழுகின் பார்வையுடன் ஆராய்ந்தவனுக்கு சட்டென்று எதிரில் இருந்த மனைவி நினைவு வர திரும்பி சாந்தவியை பார்க்க அவள் தலை சாப்பாட்டின் மேல் சார்ந்திருந்தது.

நிழல் தொடரும்…