நெருப்பின் நிழல் அவன்! 2

நெருப்பின் நிழல் அவன்! 2

அத்தியாயம்: 2

‘நேற்றைய நினைவு காற்றோடு’ என்பது போல் சாரதா, சாந்தவி இருவரும் நேற்றைய எண்ணங்களை பறம் தள்ளி வைத்து விட்டு காலையில் எழுந்ததில் இருந்து சுறுசுறுப்பாக வேலை செய்து கொண்டிருந்தனர்.

அவர்கள் பெற்றோர் அவர்களை விட்டு பிரிந்த போது… திக்கு தெரியாத காட்டில் திசை மாறிய பறவை என என்ன செய்வது என்று தெரியாமல் தங்களுக்குள் ஒடுங்கி கொண்டவர்கள்…, சில நாட்களில் நிதர்சனத்தை உணர்ந்து தங்களை தாங்களே…. தேற்றி கொண்டு, அதில் இருந்து வெளி வந்தனர்.

தங்களுக்கு யாரும் இல்லை என்று மனம் வருந்தாமல்… தனக்கு ஒரு தங்கை இருக்கிறாள் என்று சாரதாவும், தனக்கு ஒரு தமக்கை இருக்கிறாள் என்று சாந்தவியும், உணர்ந்து தங்களை இயல்புக்கு மீட்டு கொண்டனர். பண பிரச்சினை பல இருந்த போதும்…. மன நிம்மதி இருக்க, கடவுளும் தங்களுடன் இருப்பதாக நினைத்து உழைப்பை மட்டும் பற்றி கொண்டு தைரியமாக இருந்தனர்.

இன்றும்… என்றும் போல்.. தங்கள் பிரச்சனைகளை தூரம் தள்ளி வைத்து விட்டு, காலையில் எழுந்ததும் சாரதா வாசல் கூட்டி தெளிக்க, சாந்தவி கோலம் போட…, சாந்தவி சாதம் வைக்க, சாரதா குழம்பு வைக்க என்று வேலையை பகிர்ந்து செய்தனர். சமையல் முடித்து சாரதா குளித்து வந்து மதிய உணவினை இருவருக்கும் எடுத்து வைத்து கொண்டிருக்க, சாந்தவி குளிக்க சென்றிருந்தாள்.

உணவு எடுத்து வைத்து கொண்டிருந்த சாரதா வாசலில் கேட்ட காரின் ஹாரன் சத்தத்தில் தவிப்புடன் வாசலை பார்க்க… அங்கே முகம் கடுகடுக்க காரில் அமர்ந்து இருந்தான் மிதுன்.

ஊட்டியில் உள்ள விரல் விட்டு எண்ண கூடிய செல்வந்தர்களில் இவனும் ஒருவன். ஆறு அடி உயரத்தில்… திராவிட நிறத்தில்… கலையான முக அமைப்பு. உடன் பிறந்த ஒரு தங்கை மட்டுமே திருமணம் முடிந்து சென்னையில் வசிக்கிறாள்.

மிதுனுக்கு சாரதாவை படிப்பு முடித்து தொழிலை கவனிக்க ஆரம்பித்த பிறகே… தெரியும். சாரதாவின் அமைதியான குணம் மிதுனுக்கு பிடிக்க, அந்த பிடித்தம் சில நாட்களில் காதலாக மாறியது. உடனே தன் காதலை சாரதாவிடமும் தெரிவித்தான். ஆனால்..! சாரதா ஏற்று கொள்ளவில்லை. சாதாரணமாக பெண்களுக்கே இருக்கும் பயம் சாரதாவிற்கும் இருக்க… தனக்கு காதலிக்கும் எண்ணம் இல்லை என்று உறுதியாக மறுத்தவளை, மிதுன் பேசி பேசியே… கரைத்து தன் காதலையும் கைபற்றி கொண்டான்.

இப்போது இரண்டு வருடமாக இருவரும் காதலிக்கின்றனர். மிதுன் வீட்டில் அவன் பெற்றோர் அவன் திருமண பேச்சை எடுக்க, இனிமேலும் காலம் தாழ்த்த வேண்டாம் என்று முடிவு செய்து அவன் பெற்றோரிடம் சாரதா மீதான தன் காதலை சொல்லி விட அவர்கள் ஒத்து கொள்ளவில்லை.

“ஒரு அன்றாடம் காச்சியை…, அதுவும்..! தங்களிடமே கூலி வேலை செய்யும் பெண்ணை ஒரு நாளும்… மருமகளாக ஏற்று கொள்ள மாட்டோம்” என்று கூறி மறுத்து விட, மிதுனும் “எனக்கு திருமணம் என்று ஒன்று நடந்தால் அது சாரதாவுடன் தான். அது உங்க சம்மதம் இல்லை என்றாலும் நடக்கும்….” என்று உறுதியுடன் கூறி விட்டான்.

வீட்டில் நடந்ததை சாரதாவிடம் கூறி அவளிடம் பதிவு திருமணத்திற்கு ஒப்புதல் கேட்க, சாரதா ‘அவன் பெற்றோர் சம்மதித்தால் மட்டுமே திருமணம்’ என்று விட… மிதுனுக்கு சாரதா மேல் கோபம்.

திருமணம் முடிந்து குழந்தை பிறந்து விட்டால்… பெற்றோர் சரி ஆகி விடுவர்! என்பது மிதுன் எண்ணமாக இருக்க, சாரதாவிற்கோ ‘ஒரே வீட்டில் இருந்து, ஒருவர் முகம் ஒருவர் பார்க்காமல்… சண்டையிடுவது சரி வராது. பெற்றவருக்கு தெரியும் பிள்ளைக்கு எது நல்லது என்று. பெற்றவர்களாக… அவர்களுக்கும் ஆசைகள் இருக்கும்! அவர்கள் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்ய கூடாது…’ என்பதில் உறுதியாக இருக்க என.. சில நாட்களாக இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடுகளுடன் சென்றது.

இன்று… சாரதாவிற்கு செமஸ்டர் எக்ஸம் இருக்க பஸ்சில் சென்றால்… அவள் சரியான நேரத்திற்கு செல்ல முடியாது என்பதால்.., சாரதாவை அழைத்து செல்ல வந்த மிதுனுக்கு…, அவன் வந்திருப்பது தெரிந்தும்… வெளியே வராமல் இருக்கும் சாரதா மீது கோபம் வர, ஹாரனை விடாமல் அழுத்தினான்.

வேலைக்கு செல்ல கிளம்பி வெளியே வந்த சாந்தவி, ஹாரன் சத்தத்தில் வெளியே வந்தவள்… மிதுனை பார்த்து “ஹாய்… மாமா சார்! என்ன… உங்க காற்று இன்றைக்கு காலையிலையே இந்த பக்கமா வீசுது?!!” என்று சிரிப்புடன் வினவ, மிதுன் சாந்தவியை முறைத்து பார்த்தான்.

அவனின் முறைப்பில் “அச்சோ…. நான் பயந்துட்டேன்.. மாமா சார்!” என்று மிதுனை பார்த்து பயந்தது போல் போலியாக பாவனை செய்தவள், “சாரு… நம்ம மாமா சார் பார்க்க ரொம்ப…. டெரரா இருக்காரு. சோ… நீ சொன்ன மாதிரி!! நாம இவரை ரிஜக்ட் பண்ணிடலாமா??” என்று உள் நோக்கி சாரதாவை பார்த்து கேட்டு விட்டு, திரும்பி மிதுனை பார்க்க, அவன் முகம் முன்பை விட அதிக கோபத்தை காட்டியது.

“ம்… கூம், இது சரி படாது… நீங்க கன்ஃபார்ம் ரிஜக்ட் தான்!” என்று சாந்தவி இடுப்பில் கை வைத்து மிதுனை பார்த்து பாவமாக கூற, உதடுகளை சிரிப்பது போல் “ஈ…..” என்று வைத்து கொண்ட மிதுன் “இப்படி இருந்தா பொண்ணு தருவிங்களா மேடம்??!!” என்று பணிவாக கேட்பது போல் கேட்க, “ம்…. நாட் பேட் தான்! இருந்தாலும் யோசிச்சி சொல்றேன்” என்று சாந்தவியும் தோரணையாக பதில் கூற மிதுன் தன் கோபம் மறந்து சிரித்து விட்டான்.

“ஹான்… இது எப்படி இருக்கு!” என்று சாந்தவியும் சிரிக்க “சரி… வாலு, காலேஜ்கு லேட் ஆகிட்டு. உன் அக்காவை வர சொன்னேனா..! காலேஜ்ல டிராப் பண்ணிட்டு நான் என் வேலையை பார்க்க போவேன்..” என்க

“சாப்பிட்டுட்டு வருவா…” என்ற சாந்தவி “நீங்களும் வாங்களேன்… சேர்ந்து சாப்பிடுவோம்” என்று மிதுனையும் அழைக்க, “நான் இப்ப தான் சாப்பிட்டுட்டு வரேன், நீ.. போய் சாப்பிடு போ..” என்று மிதுன் கூற…

“பச்… நீங்க எங்க வீட்டுல எல்லாம் சாப்பிடுவிங்களா!!, சரி… வேயிட் பண்ணுங்க வருவா…” என்று விட்டு சாந்தவி உள்ளே செல்ல, அவள் பேச்சில் மிதுனும் காரில் இருந்து இறங்கி அவள் பின்னே செல்ல, அவன் வருவதை ஓர கண்ணால் பார்த்து சிரித்து கொண்டே உள்ளே ஓடிய சாந்தவி “சாரு… மாமா வராங்க, சாப்பாடு எடுத்து வை…” என்று கூறி விட்டு அவளும் சாரதாவிற்கு உதவி செய்தாள்.

சாரதாவும், மிதுன் சாப்பிட வந்த சந்தோஷத்தில்.. அவனுக்கு சாப்பாடு வைத்து கொடுத்தாள். மிதுன் அவளை கடுகடுவென்று பார்க்க, சாரதா “ப்ளீஸ்… ” என்று அவனை சிறு கெஞ்சல் பார்வை பார்த்தாள்.

அதற்கு மேல் மிதுனின் கோபமும் நிலைக்கவில்லை. சின்ன சிரிப்புடன் சாந்தவி அறியாமல் சாரதாவிற்கு இதழ் குவித்து பறக்கும் முத்தத்தை அனுப்ப… அவள் வெட்கத்தில் தலை குனிந்து கொண்டாள்.

அதன் பின் சாந்தவியும் சாப்பிட வர மூவரும் அமர்ந்து சாப்பிட்டனர். மிதுனும், சாரதாவும் உணவு உண்டு முடித்ததும் கிளம்பி காலேஜ் சென்று விட, சாந்தவியும் அவள் சாப்பாட்டை முடித்து கொண்டு… உணவு பாத்திரத்தை ஒதுங்க வைத்து விட்டு வேலைக்கு கிளம்பி சென்றாள்.
####
உமையாள் காலை சமையல் வேலை எதையும் கவனிக்காமல் ஹாலின் சோஃபாவில் அமர்ந்து…., ஈஸ்வரன் எப்போது கீழே வருவான்! என்று மாடியையே பார்த்து கொண்டிருக்க, அவருக்கு எதிர் இருக்கையில் இருந்த ரத்தினம் நொடிக்கு ஒரு முறை அவரை முறைத்து பார்த்தார்.

அவரின் பார்வையை உணர்ந்த உமையாள் “இப்போ எதுக்கு… ஆந்தை கண்ணை உருட்டி முழிச்ச மாதிரி முழிக்குறிங்க?” என்று காட்டமாக கேட்க, “இன்னும் உன் புள்ள உன் பேச்சை கேட்டு உன் கூட துணி எடுக்க கடைக்கு வருவான்னு நம்பிட்டு இருக்கியே…. அதான் பார்த்தேன்!” என்று ரத்தினம் கூற, “அதுக்கு ஏன்.. முறைச்சி பாக்குறிங்க?” என்றார் உமையாள் கோபமாக.

“என் பார்வையே அப்படி தான் டி! மனுசன் பார்த்தது ஒரு குத்தமா!!?” என்று ரத்தினம் கேட்கவும்…. உமையாள் பார்த்த பார்வையில் அவர் அங்கிருந்து எழுந்து சென்று விட, உமையாளுக்கு மனம் சோர்ந்து போனது.

ஈஸ்வரனுக்கு இந்த முசுடு குணம் எப்படி வந்தது என்று அவருக்கு புரியவில்லை. ரத்தினம் கோபகாரர் தான்… ஆனால் உறவினர்களிடம் எல்லாம் அன்பாய் பேசும் மனிதர். ஈஸ்வரன் போல் எப்போதும் முகத்தை இப்படி பாறை போல் வைத்து கொண்டெல்லாம் இருக்க மாட்டார். அதிலும் ஈஸ்வரின் குணத்தை நினைத்தாலே தலை சுற்றியது உமையாளுக்கு. எல்லா பெற்றோரையும் போல் அவரும் தன் மகனுக்கு ‘திருமணம் செய்து வைத்தால் சரி ஆகி விடுவான்’ என்று நினைத்து “பெண் பார்க்கட்டுமா?” என்று ஈஸ்வரிடம் கேட்க, ‘திருமணம் செய்யும் எண்ணம் இல்லை’ என்று கூறியவனை பல நாள் பட்டினி இருந்து…, அழுது கரைத்து…, பேசி சம்மதம் வாங்கி பெண் பார்க்க…, அடுத்து பெண் பார்க்க வர முடியாது என்று விட்டான்.

பையனை பார்க்காமல் யார் பெண் தருவார்கள்!!, அதுவும்… இந்த காலத்தில்?!, அப்படியும்… ‘தன் பிள்ளைக்காக’ என்று அங்கே.. இங்கே.. தேடி, பெண் வீட்டாரிடமும் பேசி… போட்டோ வாங்கி இவனிடம் காட்டினால், போட்டோவை பார்க்காமலேயே… ஒரே வார்த்தையில் பிடிக்கவில்லை என்று விட, நொந்து போன உமையாள் கடைசியில் ‘அவன் இன்னும் திருமணம் வேண்டாம் என்ற எண்ணத்தில் தான் உள்ளான்’ என்று புரிந்து கொண்டு, இனிமேல் அவனிடம் சம்மதம் கேட்டால் சரி வராது… என்று அவனுக்கே தெரியாமல் பெண் பார்த்து அவர்களிடம் அனைத்தையும் பேசி சம்மதம் வாங்கி, திருமணத்திற்கு முந்தைய தினம் நிச்சயம், மறுநாள் திருமணம், என்று பேசி முடித்து பத்திரிக்கையை அடித்த பிறகே ஈஸ்வரனிடம் கூறினார்.

அவன் ஒத்துக்கொள்ள மாட்டான்…, அவனை ஒத்துக்கொள்ள வைக்க தான் நிறைய பேச வேண்டும் என்று உமையாள் பக்கம்… பக்கமாக…, யோசித்து அவனிடம் பேச, ஈஸ்வரனோ உமையாளை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்தவன் அதன் பிறகு அவருடன் பேசுவதையே நிறுத்தி கொண்டான். ஆனால்… “திருமணம் வேண்டாம் நிறுத்திடுங்க” என்றோ!! “வர மாட்டேன்…” என்றோ எதுவும் சொல்லாததே உமையாளுக்கு பெரும் தெம்பாக இருக்க, அதன் பிறகு சற்று தைரியமாகவே கல்யாண வேலைகளை பார்த்தார்.

இப்போதும் ‘முகூர்த்த பட்டு எடுக்க வர மாட்டேன்…’ என்றவனை எப்படி சம்மதிக்க வைக்க என்ற யோசனையுடனே மகன் வரும் வழி பார்த்து அமர்ந்து இருக்க, ஈஸ்வரன் ஜீன்ஸும்.. நேவி புளூ நிற மேல் சட்டையும் அணிந்து கிளம்பி வர, உமையாளுக்கு புரிந்து விட்டது… ‘அவன் தன்னுடன் வர போவது இல்லை’ என்று,

உமையாள், ஈஸ்வரனை அழுத்தமாக பார்க்க… அவன் நேராக உமையாளிடம் வந்தவன் “ஃபிரண்ட்க்கு பத்திரிக்கை வைக்க ஊட்டி போறேன். கல்யாணத்துக்கு முதல் நாள் காலையில் தான் வருவேன். சும்மா… சும்மா… போன் பண்ணாதுங்க, கல்யாண வேலை எதுக்கும் நான் வர மாட்டேன். என்னை கூப்பிடாதிங்க…” என்று கூறி விட்டு வாசல் நோக்கி செல்ல,

“சக்தி நில்லு….” என்றார் உமையாள் கோபமாக, ஈஸ்வர் “என்ன..?” என்று பார்க்க, “உன்கிட்ட கேட்காம கல்யாணத்துக்கு முடிவு பண்ணுனதால மட்டும் தான்…. நீ பண்ற எல்லாத்துக்கும் பொறுத்து போறேன். என்னை கோபப்படுத்தாத” என்றார் கடுமையாக, வார்த்தை கோபமாக வந்தாலும் ‘இதற்கு மேல் நான் தாங்க மாட்டேன்’ என்று கண்களில் கண்ணீர் குளம் கட்டி நின்றது.

“அதை தான் நானும் சொல்றேன். உங்களுக்காக… மட்டும் தான்! நீங்க எங்கிட்ட கேட்காம ஏற்ப்பாடு பண்ணாலும்.. இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சேன். இல்லைனா… எப்பவோ இந்த கல்யாணத்தை நிறுத்தி இருப்பேன்” என்றான்.

“நான்.. உன் விருப்பம் கேட்டப்போ! நீ சரியா பதில் சொன்னதா எனக்கு நினைவு இல்லை! சக்தி” என்றார் உமையாள் சற்று ஆதங்கமாக.

“எனக்கு பிடிக்கலை என்று சொன்னதா எனக்கு நியாபகம் மா..” என்று ஈஸ்வரும் பதில் பேச, “அப்போ… உனக்கு இந்த பொண்ணை பிடிக்கலையா?!!” என்று உமையாள் ஒரு மாதிரி குரலில் கேட்க, திரும்பி அவரை பார்த்த ஈஸ்வரன் “பிடிக்கலை….” என்றான் அழுத்தம் திருத்தமாக.

“சக்தி…!!!” என்று உமையாள் திகைக்க, “நான் கிளம்பறேன் மா. இதுக்கு மேல என்னை எதும் கேட்காதிங்க, உங்க விருப்பப்படி கல்யாணம் நடக்கும்” என்று கூறி விட்டு சென்று விட, உமையாள் அப்படியே நின்றிருந்தார் அடுத்து என்ன என்று புரியவில்லை.

#####

ஊட்டியில் மாலை நான்கு மணியில் இருந்தே வானம் மேகமூட்டம் சூழ்ந்து… மழைவரும் அறிகுறியுடன்… இருள் கவிய தொடங்கி இருந்தது. பனி காற்று ஊசியாக உடலை துளைத்து செல்ல…, தலையில் மங்கி குள்ளாவுடன், தாவனியின் முத்தானையை தோளோடு போர்த்தி கொண்டு சிறு ஓட்டமாக ஓடி வந்து எதிரில் இருந்த கடைக்குள் நுழைந்த சாந்தவி “ஹாய்… அண்ணாச்சி” என்றாள் ஆர்ப்பாட்டமாக.

“வா சாந்தவி… என்ன இந்த நேரத்துல வந்து இருக்க?” என்ற அண்ணாச்சி ( கடை ஓனர்) எதிரில் இருந்த கடிகாரத்தில் மணி பார்க்க, அவர் பார்வையை தொடர்ந்து சாந்தவியும் பார்த்தாள்… மணி ஏழு என்று காட்டியது. “வீட்டுல அரிசி, பருப்பு தீர்ந்துட்டு அண்ணாச்சி. நான்… சாரு வாங்கிருப்பானு நினைச்சேன்! அவ எக்ஸம்க்கு படிச்சதுல இதை மறந்துட்டா… இப்போ தான் அவளும் வாங்கலைனு தெரிஞ்சது, அதான் ஓடி வந்துட்டேன்…” என்றாள் சிரிப்புடன்.

“தனியாவ வந்த? நேரம் நல்ல இருட்டிடுச்சே..” என்ற கடைகாரரின் அக்கறையான விளிம்பில், “இல்லையே…!!! என் பாடி கார்ட்ஸ் பக்கத்து தெருல வெயிட் பண்றாங்க” என்று கண்ணடித்து கூறிவிட்டு கடை உள்ளே சென்று விட்டாள்.

அந்த அண்ணாச்சி கடை தான் சுற்று வட்டாரத்தில் சற்று பெரிய கடை. அனைத்து பொருட்களும் கிடைக்கும். அதனால் சுற்று வட்டாரத்தில் உள்ள மக்களும் இங்கே தான் வந்து பொருட்கள் வாங்குவர்.

சாந்தவியின் வீட்டிற்கு காட்டு வழியே சென்றால் பத்து நிமிட நடையில் சென்று விடலாம். சுற்று பாதையில் சென்றால் அறை மணி நேரம் ஆகும். அதனால் தான் கடைகாரர் சாந்தவியிடம் அக்கறையுடன் விசாரித்தது சிறு பெண் காட்டு வழியே தனியாக வந்திருக்கிறாளே என்று.

அண்ணாச்சியிடம் வம்பிலுத்து விட்டு கடைக்குள் சென்று வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்களை எடுத்து கொண்டிருந்த சாந்தவி கண்ணில் எதிரில் இருந்த “சக்தி தேங்காய் எண்ணெய்” என்று பெயரிட்டு அடுக்கப்பட்டிருந்த எண்ணெய் பாக்கெட் பட, விசம சிரிப்புடன் அதில் ஒன்றை எடுத்து கொண்டு…. கல்லா முன்னால் அமர்ந்து இருந்த அண்ணாச்சியிடம் சென்றவள்,

“அண்ணாச்சி இது… என்ன?” என்றாள் சற்று கோபமாக ஒன்றும் அறியாத பிள்ளை போல். அவள் பின்னால் நின்றவனின் புருவங்கள் ஆராய்ச்சியில் மேல் ஏறியது அறியாமல்.

சாந்தவியை சிறு முறைப்புடன் பார்த்த அண்ணாச்சி “எண்ணெய்..” என்றார். “ஹான்… அது எங்களுக்கு தெரியாது பாருங்க, இந்த பிராடு கம்பேனி எண்ணெய வாங்காதிங்கனு போன தடவையே சொன்னேன் தானே!!?, அப்படி… சொல்லியும் கேட்காம வாங்கி இருக்கிங்கனா… என்ன அர்த்தம்?!” என்று சாந்தவி அதிகாரமாக கேட்க

அவரும் “என்ன அர்த்தம்…” என்று அவளை போலவே கேட்க,

“எங்களை மாதிரி பாமர மக்களை ஏமாத்த பாக்குறிங்கனு அர்த்தம். இருங்க… இருங்க… உங்க கடையையும், இந்த சக்தி எண்ணெய் கம்பேனியையும் பேஸ் புக்குல போட்டு… இழுத்து மூட வைக்குறேன்” என்றாள் முகத்தில் குறும்பு மின்ன, ஆனால்… சாந்தவி உணரவில்லை, அவள் பின்னால் நின்றவனின் கண்களில் கனல் ஏறியதை.

‘விளையாட்டு வினை ஆகும்…’ என்பதை அறியாத சாந்தவி மேலும் “பணம் சம்பாதிக்க என்ன வேணும்னாலும் செய்வானா அந்த கம்பேனி ஓனர்??” என்று கோபம் போல் கேட்க

“சக்தி கம்பேனி எண்ணெயை மாதிரி தரமான எண்ணெய் எந்த கம்பெனியும் தரது இல்லை. அது மக்களுக்கு தெரியும்… நீ பேஸ் புக் என்ன! எந்த புக்ல வேணும் என்றாலும் போடு…, வரத நாங்க பாத்துக்குறோன்” என்று அவரும் சாந்தவிக்கு சமமாக பதில் பேசினார்.

அவருக்கு சக்தி கப்பேனி மேல் அத்தனை மரியாதை வந்திருந்தது. அவர்கள் செயலில். போன முறை வந்த பொருட்கள் தரம் சரி இல்லை என்று போன் செய்து புகார் செய்ததும் ‘அந்த எண்ணெயை விற்பனை செய்ய வேண்டாம் என்றும் அவர் வாங்கிய பொருட்களுக்கு ஈடான தரமான பொருளை தந்து விடுவதாக’ கூறியது… மட்டும் இல்லாமல்! இரண்டு நாட்களில் பொருட்களை கொண்டு வந்து தந்து விட்டு தரமற்ற‌ பொருட்களை அவர்கள் கண் முன்னே அப்புறப்படுத்தி இருந்தனர். அப்போது சாந்தவியும் அங்கே தான் இருந்தாள்.

அண்ணாச்சி சக்தி கம்பேனியை பற்றி உயர்த்தி பேச, சாந்தவி அவரை வம்பிலுக்கும் நோக்கில் “அது அவர்கள் குறை. அதை அவர்கள் சரி செய்ததில் பெரிதாக பேச என்ன இருக்கிறது!?” என்று வம்பிலுத்து விளையாடி குறும்பு சண்டையிட்டு கொண்டாள்.

இப்போதும் அதே நினைவில் அந்த எண்ணெயை எடுத்து வந்து… அவரிடம் வம்பு வளர்க்க, அதற்கு அவர் பதில் கொடுக்க “ஓகோ… அவ்வளவு தைரியமா?? நாளைக்கு பாருங்க… பேஸ் புக்குல லைவ் போட்டு… நடந்தது என்ன னு அத்தனையும் புட்டு… புட்டு.. வைச்சி.. சக்தி கம்பேனியை திவால் பண்ணி…. உங்க கடையையும் முட வைக்குறேன்….” என்று வீராப்பு பேச, அண்ணாச்சியும் “நீ செய்… பார்த்துக்கலாம்” என்று அலுங்காமல் பதில் கொடுக்க

“பாருங்க…. நாளைக்கு தெரியும்!! இந்த சாந்தவி யார்னு…!” என்றாள். தன் பின்னே நின்றவனின் இதழ்கள் இகழ்ச்சியில் வளைந்திருக்க, கண்கள் இரண்டும் வஞ்சத்துடன் தன்னை பார்ப்பதை உணராமல்… மீண்டும் உள்ளே சென்று தனக்கு தேவையாக பொருட்களை வாங்கி கொண்டு, பத்து ரூபாய் மில்க் சேக் ஒன்றும் வாங்கி கொண்டு “சரி அண்ணாச்சி பாய்…” என்க,

“இந்த ராத்திரி தனியா போய்டுவியா சாந்தவி!!? நான் கொண்டு விட்டுட்டு வரவா?!” என்று அண்ணாச்சி அக்கறையுடன் கேட்க, “ஏது…. நீங்க கொண்டு விடுறிங்களா..??? கடையை இப்படியே போட்டுட்டா..!!??” என்று சற்று அதிர்ந்து கேட்டவள் பின்பு “அதெல்லாம் வேண்டாம். நானே… போட்டுவேன்” என்று கூறிவிட்டு சிரித்தவள் “என்னை விட்டுட்டு நீங்க திரும்பி வரும் போது… வெறும் கடை தான் இருக்கும். அதையும் நம்ம மக்கள் பட்டா மாத்துனாலும் ஆச்சரிய படுறதுக்கு இல்லை!” என்று கூறி விட்டு மிக் சேக்கை குடித்து கொண்டே நடந்தாள்.

காட்டு பாதையில் சென்றால் சீக்கிரமா சென்று விடலாம் என்பதால் அந்த வழியே வந்தவள், காட்டு விலங்கு எதுவும் குறுக்கே வராமல் இருக்க

தாத்தா தாத்தா கள வெட்டி,
பொந்துல யாரு மீன் கொத்தி…
எதிருள வரது நான் தாங்கோ…
குறுக்க யாரும் வராதுங்கோ…
நான் ஒரு பயந்த புள்ளங்கோ…
ஐயோ.. ஐயோ.. பாவங்க…, என்று
சத்தமாக பாடி…! கத்தி கொண்டே வந்தாள்.

காட்டு விலங்குகள், மனிதர்கள் சத்தம் கேட்டால் ஒதுங்கி சென்று விடும் என்று கிராம புறங்களில் வாழும் மக்கள்.. இரவு நேரம் காட்டு பக்கம் சென்றால் பாட்டு பாடுவது வழக்கம்.

பாடுகிறேன் என்று கத்தி கொண்டே வந்த சாந்தவி, நாய் குரைக்கும் சத்தத்தில் திரும்பி பார்த்தவளின் இதயம் தொண்டை குழியில் வந்து தாளம் தப்பி துடித்தது… அவள் நெஞ்சி உயரம் இருந்த நாயை பார்த்து.

“ஆத்தாடி… எம்மாம் பெருசா இருக்கு…!! இது வரைக்கும் இப்படி ஒரு நாயை பார்த்ததே இல்லையே…, காட்டு நாயா இருக்குமோ…!! இருக்கும்… இருக்கும்… எப்பா!!! இதை வீட்டுல வச்சி வளர்த்தா சொத்தை இல்ல விக்கனும்!!” என்று தனக்கு தானே பேசி கொண்டவள் அதன் குரைப்பு சத்தத்தில் அதை பார்த்து “நான் சொல்லிட்டே தானடா வந்தேன்… எதிர்ல வராதா… நான்‌ பயந்த புள்ளனு! பின்ன ஏன் டா வந்த??” என்று அதை திட்ட

அதற்கு என்ன புரிந்ததோ அது இன்னும் சத்தமாக குரைத்தது. “சரி… இரு கோப படாத… பசி வந்தா கோபம் வர தான் செய்யும்… சாப்பிடாம வந்தது உன் தப்பு! இரு… நீ சாப்பிட ஏதாவது தரேன்..” என்றவள் அதற்கு ‘சாப்பிட போடுவது போல் ஏதாவது இருக்கா!’ என்று மளிகை பொருட்களை ஆராய்ந்து.., ஒன்றும் இல்லை என்றதும் மீண்டும் பாவமாக நாயை பார்த்தாள். கையில் இருந்த மில்சேக்கையும் பயத்தில் தவர விட்டிருந்தாள்.

சற்று நேரம் இருவரும் அசையாமல் நிற்க, அந்த நாய் நெருங்கி வராமல் அங்கே நின்றே குரைப்பதை பார்த்த சாந்தவி “சாந்தவி… விடு ஜுட்….” என்று ஓட போகவும் பைரவ் குரைத்து கொண்டே சாந்தவியை கடிக்க பாய்ந்திருக்க,

“அம்மாஆஆஆ” என்ற சத்தத்துடன் சாந்தவி எதிர் பக்கம் இருந்த பள்ளத்தில் விழுந்திருந்தாள்.

கீழே விழுந்ததில் அடிபட்டு… தோள்பட்டையுடன் சேர்த்து கையும்.., இடுப்பும்…, பயங்கரமாக வலிக்க, பல்லை கடித்து கொண்டு வலி பொறுத்து வலது கையை ஊன்றி எழுந்து கொள்ள பார்க்க கையை அசைக்க முடியவில்லை.

விரலை அசைத்தாலே வலி உயிர் போனது. அழுகையில் கண்ணீர் ஆறாக பெறுக, யாராவது உதவி செய்தால் மட்டுமே இங்கிருந்து செல்ல முடியும் என்று புரிய “யாராவது இருக்கிங்களா!!? ஹெல்ப் பண்ணுங்க ப்ளீஸ்…” என்று சாந்தவி ஈனஸ்வரத்தில் கத்த, கண்கள் மயக்கத்தில் சொருகியது.

அவள் கண்கள் சொருக கொஞ்சம்.., கொஞ்சமாக…, தன் நினைவை இழக்கும் போது… இருளில் இருண்டு கண்கள் மட்டும் உருக்கிய லாவா பிளம்பு என காட்சி தர, ஒரு நிழல் உருவம் தன்னை நோக்கி வருவது மங்கலாக தெரிய… “ப்ளீஸ் ஹெல்ப்…” என்று சாந்தவி உதடுகளை அசைக்க, அந்த உருவம் அவளை சாதாரணமாக தூக்கி தோளில் போட்டு கொண்டு செல்ல, அதை உணர்ந்த சாந்தவி எதிர்ப்புகள் இன்றி ஈஸ்வரனின் தோளிலேயே தன் சுய உணர்வை இழந்து இருந்தாள்.

மீளுமோ உணர்வுகள் உயிருடன்!!

நிழல் தொடரும்…

Leave a Reply

error: Content is protected !!