பிருந்தாவனத்தின் மணம் 1

eiIVUXD60677-0a2f92df

பிருந்தாவனத்தின் மணம் 1

அத்தியாயம் – 1

 

மோதலின் ஆரம்பம் நான்!

பிரிதலின் முடிவு நீ!

கூடலின் தொடக்கம் யார்?

ஊடலின் இறுதி யார்?

இதை ஆவலுடன் அறிய

நாமினிதே தொடங்குவோம்

புது காதல் சங்கமம்!

 

 

இயற்கையால் சூழ்நதிருந்த அந்த ஆசிரமம் எப்போதும் போல பெற்றோர் இல்லாத மழலைச் செல்வங்களின் சிரிப்பும் சந்தோஷமும் நிரம்பி வழிந்தது. அதனை ரசித்து பார்த்தபடி இருந்தனர் பிள்ளைகள் இருந்தது சொந்தமில்லாமல் வாழும் முதியவர்கள்.

“போதும் ராணி… நீ தைலம் போட்டு தேய்ச்சதுலயே எனக்கு வலி குறைஞ்சிடுச்சு…” என்று பொக்கை வாயாக இருக்கும் பாட்டி சொல்ல…

“இருங்க பாட்டி… இன்னும் டூ மினிட்ஸ் தான்…” என்று சொல்லி நன்றாக உருவி விட்ட ராணி… அதன் பிறகே கையை எடுத்தாள்.

“இப்ப எப்படி இருக்கு… வலி போச்சா?” என்று இதழில் உறைந்த புன்னகையுடனே கேட்டாள் அவள்.

“பறந்து போச்சுடா கண்ணு…” என்று அவரும் சொல்லிட…

“அப்படியா”

“ஆமா… நீ எப்போதும் சிரிச்சிட்டே நல்லா இருக்கணும் தாயி!” என்று சொல்லி தலையில் வைத்தார் அவர்.

“சரி நீங்க கொஞ்சம் நேரம் இப்படியே படுத்துக்கோங்க… வெளியேலாம் வரவேணாம்…” என்று அன்புக் கட்டளையுடன் சென்றாள் பெண்.

அவளை கண்டதும் குழந்தைகள் சூழ்ந்து கொள்ள… “ராணிக்கா… வரீங்களா… நாம விளாடலாம்…” என்று கத்த…

“வரேன் வரேன்… அதுக்கு முன்ன நம்ம வீட்டுக்கு புதுசா வந்த செல்லத்துக்கு பூவா ஊட்டனும்… அதுக்கு அப்பறம் உங்க கூட விளையாடுவேன்…” என்று சொல்லவும் அவர்களும் சமத்தாக கேட்டுக் கொண்டனர்.

பத்து நாட்களுக்கு முன்பு தான் ஒரு பெண் குழந்தை அந்த இல்லத்தின் முன்பிருக்கும் தொட்டிலில் வைக்கப்பட்டிருந்தது. இவர்களும் அதை எடுத்து பாதுகாப்பாக வளர்த்தனர்.

ராணியோ அந்த எட்டு மாத குழந்தைக்கு பருப்பு சாதத்தை பிணைந்து கதை சொல்லியபடி ஊட்டி முடிக்க… அந்த பிஞ்சோ இவளை பார்த்து அழகாய் சிரித்தது.

ஆனால், அந்த சிரிப்பு அவளுக்கு புன்னகையை வரவழைக்காமல் கண்ணீரையே உண்டு செய்தது.

அந்த இடத்தில் யாரும் இல்லாத காரணத்தால் அவளுக்கு மனம் விட்டு பேச நேரம் கிடைத்தது.

“உன்ன போல தான் என் பொண்ணும் இருப்பா போல… ஆனா நான் ஒரு துர்திஷ்டசாலி அதனால் தான் பத்து மாசம் சுமந்து பெத்த குழந்தையை கூட பார்க்க முடியாம போச்சு… அவ என்கிட்ட பால் குடிக்கும் போது கூட நான் பார்த்ததே கிடையாது… ஏன்னா என் கண்ணை கட்டி வச்சிருப்பாங்க… அவளை ஆசையா தொட்டு… அன்பா கொஞ்சிப் பேசி… நெஞ்சோடு இறுக்கி… பாசமா அரவணைச்சி… இப்படி எதுவுமே நான் பண்ணதில்ல… இதெல்லாம் எவ்வளவு கொடுமை தெரியுமா? நரக வேதனை தான்!” என்று சொல்லும் போதே… அவளின் தாய்ப்பால் சுரக்கும் இடம் அதீத வலியை கொடுத்தது.

“என் பொண்ணுக்கு இன்னேரம் பசிக்கும்ல… அவ சாப்பிட்டு இருப்பாளா? அவளுக்கு ஏதாச்சும் குடுத்து இருப்பாங்களா? அவ பிறந்து ஆறு மாசம் வரைக்கும் அவளுக்கு பால் கொடுக்கற நேரமாச்சு என்னோட இருப்பா… அவ என் மடியில தான் படுத்திருக்கான்னு நினைச்சு சந்தோஷப் பட்டுப்பேன்… ஆனா இப்ப… இந்த மூணு மாசமா அதுக்கு கூட வழியில்லாம போச்சே! எனக்காக இல்லன்னாலும் என் குழந்தைக்காக அவங்க என்னை கூப்பிடுவாங்க அப்படின்னு தான்… நான் வலியில துடிச்சாலும் பரவாயில்லன்னு பால் சுரக்குறதை கூட நிறுத்தாம ஒவ்வொரு நிமிஷமும் வலியில அல்லாடிட்டு இருக்கேன்… இந்த பாலை வீணாக்கும் போதெல்லாம் என்னோட பொண்ணு பசிக்காக வீர் வீர்னு அழுதுட்டு இருக்க போலவே தோணும்… அப்போலாம் என் நெஞ்சு பதறும்…” என்று குழந்தையோடு உரையாடிக் கொண்டிருக்கும் போதே… அது அவளின் மார்பை முட்டியது…

“என்னம்மா… உனக்கு பசிக்குதா? என் குழந்தையோட பசிக்கு தான் பால் குடுத்து பசியாத்த முடியாத பாவி ஆகிட்டேன் நான்… நீயாச்சு குடிச்சி ஆரோக்கியமா இரு சாமி!” என்று சொல்லி அதற்கு பாலை ஊட்டினாள் அன்னையானவள்.

ராணியோ கண்களை மூடி கண்ணீரில் கரைந்துக் கொண்டிருக்க… அந்த குழந்தையோ அப்படியே உறங்கி விட்டிருந்தது.

அதன் பிறகு… குழந்தையை மீண்டும் தொட்டிலில் போட்டுவிட்டு… அங்கிருந்த சில்லென்ற நீரை எடுத்து முகத்தில் அடித்துக்கொண்டு… கண்களை அழுந்த துடைத்து… தன்னை நிலைநிறுத்திக் கொண்ட பிறகே அங்கிருந்து வெளியேறினாள் ராணி.

இந்த குழந்தை வந்ததிலிருந்து இவள் தான் அதற்கு பசியாற்றுவாள். இது பற்றி அங்கிருந்த பாதுகாவலர் அம்மாவுக்கும் தெரியும். அவரும் இவள் பால் கட்டிக் கொண்டு படும் வேதனையை இரு மாதங்களாக பார்த்துக் கொண்டு தானே இருக்கிறார்.

ராணி இக்குழந்தைக்கு பாலுட்டினால் இவளும் வலியில் இருந்து விடுபடுவாள்… அதேசமயம் இந்த அன்னையில்லா குழந்தைக்கும் சத்தான ஆகாரம் கிடைக்கும் என்பதால் அவரும் இதற்கு ஒப்புக்கொண்டார். 

இந்த குழந்தை வந்ததிலிருந்து இவளும் அந்த நரக வலியை அனுபவிக்காமல் அதன் பசியை போக்கி வருகிறாள்.

************

அது ஒரு புகழ்பெற்ற செல்வ செழிப்பான பிரபலங்கள் வந்து செல்லும் மருந்துவமனை. பூங்குழலி என்பது அதன் பெயர்.

எங்கும் ஆடம்பரம்! எதிலும் ஆடம்பரம்! அதில் பிரம்மாண்டமான நவீன மருத்துவம்! இது தான் அந்த மருத்துவமனையின் தாரக மந்திரம்.

பல அடுக்குகளைக் கொண்ட கட்டிடத்தில் பல நோயாளிகள் குடியிருக்கின்றனர். 

மணிமேகலையின் அமுதசுரபியில் எடுக்க எடுக்க அன்னம் குறையாது வருவது போல… இங்கேயும் குணமடைந்து ஆட்கள் செல்ல செல்ல நோயாளிகள் குவிந்த வண்ணமே இருப்பார்கள். வசதி வாய்ப்பு வந்துவிட்டால் அதோடு சேர்த்து உடல் உபாதைகளும் வந்துவிடுகிறதே! பணத்தை பேராசையுடன் சேர்த்து வைப்பவர்கள் எல்லாம் பெரும்பாலும் இங்கு தானே செலவழித்து செல்கிறார்கள். 

பணம் ஈட்டுவது போதுமென்று நிறுத்தி உடலை ஆரோக்கியமாக கவனித்துக் கொண்டால்… இங்கு கொட்டுவதில் பாதி இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவலாம். ஆனால் இதனை தான் ஒருவரும் பின்பற்ற மாட்டார்களே!

அந்த மருத்துவமனையின் ஒரு அறை மாத்திரம் கொஞ்சம் பதட்டமாகவே இருந்தது. ஏனென்றால் அங்கே இருப்பது பூங்குழலி மருத்துவமனையின் முன்னால் நிர்வாக இயக்குனர் மிஸஸ். பூங்குழலி புகழேந்தி.

அவருக்கு தான் இப்போது மருத்துவர்கள் பலர் சூழ தீவிர சிகிச்சை நடந்துக் கொண்டிருந்தது. 

அந்த அறைக்குள் அதிரடியாக நுழைந்தான்… விஹான் ப்ரசாத் புகழேந்தி! புகழேந்தி மற்றும் பூங்குழலி தம்பதியரின் ஒற்றைச் செல்வம். 

அவன் அங்கே பிரவேசித்ததும் சின்னதாக சலசலப்பு தோன்றி மறைந்தது. அவனது கேள்விகளுக்கு பதில் சொல்ல தயாராகினர் மருத்துவர்கள்.

“என் அம்மாக்கு இப்ப எப்படி இருக்கு?” என்று கேட்டபடி தாயை ஆழ்ந்து பார்த்தான் விஹான்.

“ஓவர் ஸ்ட்ரெஸ் சார்… அதே போல அவங்க இதயம் ரொம்ப பலவீனமான இருக்கு… ஏற்கனவே ஒரு அட்டாக் வந்திருக்கு… இதோட சேர்த்து இப்ப ஸ்ட்ரோக்கும் வந்திருக்கு சார்…” என்று சொல்லி விளக்கியவர்… பூங்குழலியின் மருத்துவ குறிப்பை அவனிடம் கொடுத்தார் தலைமை மருத்துவர்.

அதை கொடுத்துவிட்டு அவர் அவசர சிகிச்சை பிரிவில் இருக்கும் வேறொரு நோயாளியை பார்க்க வேண்டிய கட்டாயம் இருப்பதால் உடனடியாக அங்கு சென்று விட்டார்.

தலைமை மருத்துவர் அளித்த கோப்புகளை திருப்பி பார்த்துக் கொண்டே, அங்கே நின்றிருந்த வேறொரு மருத்துவரிடம்… “டிரீட்மென்ட்?” என்க…

“ஹான்! என்ன சார்?” என்று அவர் முழிக்க.‌‌..

“டிரீட்மென்ட் எப்படி போய்ட்டு இருக்கு? எந்த ஸ்பீட்ல இருக்குன்னு கேட்டேன் பிரபாகரன்?”

“எல்லாமே கரெக்டா போய்ட்டு தான் இருக்கு சார்… எங்களால முடிஞ்ச அளவுக்கு பார்த்துட்டு தான் இருக்கோம்… எங்களோட முழு எஃபோர்ட்டும் போட்டுட்டு இருக்கோம் சார்…” 

அவரை மேலிருந்து கீழாக பார்த்து, “எல்லார் கிட்டயும் சொல்ற பதில் தான் என் கிட்டயும் சொல்வீங்களா?” என்று உஷ்ணத்தை அடக்கியபடி கேட்டான் விஹான்.

‘சிடியேஷன் (situation) அப்படி இருந்தா அத தானே சொல்ல முடியும்… வேற என்னத்த சொல்ல முடியும்… இவர் கிட்ட மாட்டிட்டு முழிக்கனும்னு என் தலையில எழுதி வச்சியிருக்கீயே ஆண்டவா!’ என்று மனதில் தன்னை நொந்து கொண்டே… வெளியே மட்டும் பவ்வியமாக, “சாரி சார்…” என்றான் அவனும்.

“ம்ம்… தென்!”

“இப்போதைக்கு மேடமால பேசவோ நடக்கவோ எதுவும் முடியாது சார்… எல்லாமே படுத்த படுக்கை தான்… இத கொஞ்ச கொஞ்சமா தான் சரி செய்ய முடியும்… அதுக்கு மொதல்ல அவங்க ஒத்துழைப்பு தரணும்… அவங்களோட மனசும் உடம்பும் டிரீட்மென்ட்டுக்கு ரெஸ்பான்ட் பண்ண மாட்டேங்குது… அவங்களோட ரெஸ்பான்ட் இருந்தா தானே மருந்து மாத்திரை வேலை செய்யும்… அதுக்கு மொதல்ல அவங்கள சந்தோஷமா பார்த்துக்கணும்… அவங்க என்ன கேட்கிறார்களோ அத எல்லாம் செய்து கொடுக்கணும் சார்… அப்ப தான் அவங்க…” என்று அவன் அடுக்கிக் கொண்டே போக…

“ஸ்டாப் இட்…” என்று கத்தியவன்… “ஏன் இதெல்லாம் எனக்கு தெரியாதா? நானும் ஒரு டாக்டர் அப்படிங்கிறத மறந்துட்டீங்களா என்ன?” என்று சொல்லி… அந்த கோப்புகளை அவரிடம் கொடுத்துவிட்டு…

“இப்ப போய்ட்டு இருக்கும் டிரீட்மென்டை அப்படியே கன்டியூ பண்ணுங்க… என் அம்மாவ 24/7 எக்ஸ்ட்ரா கேரோட நல்ல படியா பார்த்துக்கணும்… அப்படி அவங்க அன்கம்ஃபாட்டபிளா ஃபீல் பண்ற போல யாராவது நடத்துக்கிட்டா… இங்க வொர்க் பண்ணவே முடியாது… காட் இட்!” எனக் கூறி… பத்தாததற்கு மேலும் சிலவற்றை கூறிவிட்டு வெளியேறினான் விஹான்.

அப்போது அவனின் கைபேசிக்கு ஓர் அழைப்பு வர… அதை பார்த்ததும் முகம் மாறினான் விஹான் ப்ரசாத்.

**********

மணக்கும் 🥀🥀🥀

Leave a Reply

error: Content is protected !!