பூந்தளிர் ஆட… 16

பூந்தளிர்-16

சரியாக பதினெட்டு மாதங்களுக்குப் பிறகு…

சுவிட்சர்லாந்து ஜூரிஸ் நகரத்தின் மார்க்கெட் ஏரியா! டிசம்பர் மாதத்தின் பனிப்பொழிவிலும் அத்தனை உற்சாகங்களுடன் அந்த சந்தைப் பகுதி பலதரப்பு மக்களால் நிறைந்திருந்தது. வரப்போகும் கிறிஸ்துமஸ் திருநாளில் தேவகுமாரனை வரவேற்பதற்கான மகிழ்ச்சி அனைவரின் உள்ளங்களிலும் விரவி இருக்க, ஆர்ப்பாட்டம் கொண்டாட்டம் தான் அங்கே!

ஆடல் பாடலுடன் அங்கே வருவோரை இன்னும் உற்சாகப்படுத்தி தங்களுக்குரிய வருமானத்தை ஈட்டிக் கொண்டிருந்தனர் பல குழுவினர். வெளிநாடு என்றாலும் திருவிழா, ஷாப்பிங், மார்கெட் என்று வந்து விட்டால் ஜனத்திரள் ஒன்றாய் கூடி குதூகலிப்பதில் எந்த நாட்டிலும் மாறுவதில்லை.

ஊரையே உறைய வைக்கும் பனிப்பொழிவையும் தாண்டி வியாபாரச் சந்தை வெகு ஜோராக களைகட்டியிருந்தது. ஜெர்கின், கிளவுஸ், ஜாக்கெட்ஸ், லெதர் ஷூக்களில் தங்களை மறைத்துக் கொண்டு தமிழ்நாட்டின் ஜோடி ஒன்றும் அந்த சந்தையை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தது.

“என்னை விட்டு எங்கேயும் போயிடாதே சுட்கி! ஜஸ்ட் நீ மிஸ் ஆயிட்டா, இந்த கூட்டத்துல உன்னை தேடித் பிடிக்கிறது ரொம்ப கஷ்டம். இன்னைக்கு வேற ஸ்னோஃபால் ஹெவியா இருக்கு.” மனைவியின் கையை கெட்டியாக பிடித்துக் கொண்டு கடைகளை பார்வையிட்டான் இம்ரான்.

“என்னை பத்தி கவலபடாதே சிக்கு… ஃபர்ஸ்ட் நீ வந்த வேலையைப் பாரு!” கணவனின் பேச்சினை தட்டிக் கழித்தாலும் ஹனியாவின் கைகள் தன்போக்கில் அவனது கைகளை கெட்டியாகப் பிடித்துக் கொண்டன.

“ம்ப்ச்… டூ மச் இரிட்டேட்டிங்! உன் கையை பிடிச்சிருக்கிற ஃபீலே எனக்கு வரல!” கிளவுஸ் அணிந்திருந்த இருவரின் கைகளையும் பிடித்துக் கொண்டு சிறுவனாக உச்சுக் கொட்டினான்.

“கமான் சிக்கு, நான் எங்கேயும் மிஸ் ஆக மாட்டேன். யூ மே கோ மேன்!”

“நீ சேஃபா இருப்ப… பட், நான் மிஸ் ஆகிட்டா? உன்னை எப்படி தேடுறதுன்னு கூட எனக்கு தெரியாது சுட்கி! சோ, டோன்ட் லீவ் மீ அலோன்!”

பரிதாபத்தில் சொன்னானா? பரிகாசத்தில் சொன்னானா? அது சொன்னவனுக்கு மட்டுமே வெளிச்சம்! தினசரி ஏதாவது ஒரு பேச்சில், ‘என்னை விட்டுப் போய்விட மாட்டாயே!’ என்ற பச்சாதாபத்துடன் மனைவியிடம் உச்சுகொட்டி விடுவான் இம்ரான்.

அவனுக்கு இவள் காதல் மனைவி. இவளுக்கு அவன்? அது இவளுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். கணவன் சொல்வதை எந்தவித உணர்வுமின்றி கேட்டுக்கொண்டு வேடிக்கை பார்த்தபடி நடக்க ஆரம்பித்தாள் ஹனியா. ஆனால் அவனின் கைகளை இறுக்கமாக பிடித்துக் கொள்ள மறக்கவில்லை.

இவர்களுக்கு திருமணமான நாளிலிருந்து இருவரின் சம்பாஷனைகளும் இப்படித்தான் செல்கின்றன. வீட்டுப் பெரியவர்களின் வேண்டுதலோடு, தனக்கு பிடித்தமான பெண் இவள் என்ற எண்ணமும் உந்தித் தள்ளியதில் எந்தவொரு கேள்வியுமின்றி ஹனியாவை கை பிடித்திருந்தான் இம்ரான்.

ஏற்கனவே இவளது முந்தைய வாழக்கை முறையை ஒன்றுக்கு பலமுறை தனது தாய் ஆயிஷாவின் வாய்மொழியில் தெரிந்து கொண்டிருக்க, அதனைத் தாண்டிய எந்த விசாரணையையும் இவன் மேற்கொள்ளவில்லை.

தாயின் பேச்சைக் கேட்டு தானாக திருமணம் செய்துகொள்ள முன்வருபவனை ஹனியாவால் தட்டிக் கழிக்கவே முடியவில்லை என்று சொல்வதை விட, அவளுக்கு அந்த வாய்ப்புகள் வழங்கப்படவில்லை.

இம்ரான் உடனான திருமணம் முடியும் வரையில் இவளது குரலாக தந்தை ஹக்கீமின் குரல் ஒலித்துக் கொண்டிருக்க, திருமணம் முடிந்த பிறகு அத்தை ஆயிஷாவின் குரல் ஒலிக்க ஆரம்பித்தது.

சிறுவயதில் சுட்கி, சிக்கு, என்றழைத்து விளையாடிய பொழுதுகளை மனதில் நிறுத்திக் கொண்டே இம்ரானும் அவளுடனான வாழ்க்கையை தொடங்கி விட்டான்.

‘என்னை நம்பி வந்து விட்டாள். இனி இவளுக்கு எல்லாமுமாக நான் இருக்க வேண்டும்’ என நினைத்தானே ஒழிய, அவ்வாறு தான் இருப்பதை மனைவியான ஹனியா விரும்புகிறாளா என்பதை கேட்கவும், அறிந்து கொள்ளவும் அடியோடு மறந்து போனான்.

கடமையாக ஒரு வாழ்க்கை மிகச் சுலபமாக சகல சௌபாக்கியகளுடன் அவளுக்கு அமைந்தது. வாசனை திரவியம் மற்றும் அழகு பராமரிப்பிற்கான கிரீம், லோஷன் இத்யாதி வகைகளை முதல்தரமான பொருட்களில் தயாரித்து ஏற்றுமதி செய்து வரும் குடும்பத் தொழிலை இம்ரானும் சேர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறான்.

இவனது அண்ணன் இந்திய அளவில் வியாபாரா அபிவிருத்திகளை கவனித்துக் கொள்ள, இவனோ நாடுநாடாக அலைந்து அதே வேலையை சற்றும் அலுக்காமல் செய்வான். கூடவே காதல் மனைவியையும் அழைத்துக் கொண்டு சுற்றச் சொன்னால், இவனுக்கு கசந்தா போகும்?

இன்றும் இந்த ஜூரிஸ் நகரத்தின் சந்தையில் தங்களின் பொருள் கிடைக்கும் இடங்களைக் காண ஒரு சக வாடிக்கையாளனாக இந்த பனிப்பொழிவில் வந்து விட்டான்.

ஊரின் சீதோஷண நிலையைக் விளக்கி, மனைவியை மார்க்கெட்டிற்கு வர வேண்டாமென்று கூற, முகம் கூம்பிப் போனாள் ஹனியா.

“ரூம்ல எனக்கும் போர் அடிக்கும் சிக்கு! ப்ளீஸ், நானும் வர்றேனே!” சிணுங்கலுடன் மனைவி கிளம்பி நிற்க,

“வேணாம்டா… ரெஸ்ட் எடு! உன்னோட ரிலாக்செஷன் தான் இப்ப எனக்கு முக்கியம்.” இம்ரான் கூறவும் ஹனியாவின் சட்டென்று கண்கள் கலங்கிப் போனது.

“ஐ அம் ஆல் ரைட் சிக்கு!”

“நோ, யூ ஆர் நாட் ஃபைன், சுட்கி!”

“இப்படி தனியா விட்டுட்டுப் போனாத்தான் நான் சஃபர் ஆவேன். அது அப்படியே ஸ்ட்ரெஸ்ல போயி முடியும்.” சோர்வாய் முடித்தவளின் வார்த்தை, இவனை அதீதமாய் அசைத்துப் பார்த்ததில் மனைவியை அழைத்துக் கொண்டு வந்திருந்தான்.

கடவுளின் கருணைக்கொடையாக திருமணம் முடிந்த மூன்றாம் மாதத்திலேயே ஹனியாவிற்கு குழந்தை உருவாகி விட குடும்பத்தினர் அனைவருமே மகிழ்ந்தனர். ஆனால் கருவை சுமப்பவளின் மனதிலோ சொல்ல முடியாத பாரம் ஏறிப்போனது.

‘இரட்டை பிள்ளைகளைப் பெற்றும் வளர்க்க துப்பில்லாதவளுக்கு இப்போது மூன்றாவது குழந்தை தேவையா? அந்த பிள்ளைகள் எங்கு வளர்கிறார்களோ! யார் பொறுப்பேற்று பராமரிக்கிறார்ளோ!’ இமாலயக் கேள்விகள் முன்னை விட அதிகமாய் அவளை தாக்கத் தொடங்கியதில், அதன் கனம் தாளாமல் உள்ளுக்குள் புதைந்து போகத் தொடங்கினாள்.

பெற்ற பிள்ளைகளைப் பற்றிய விவரங்களை அந்த நேரத்தில் பலவிதமாக தந்தையிடம் கேட்டும் ஹக்கீம் பதில் கூற மறுத்து விட்டார். இதற்கு முன்னரும் கேட்டிருக்கிறாள் தான். அப்போது இத்தனை தவிப்பு இவளுக்குள் ஏற்படவில்லை.

மீண்டும் இவள் சூல் கொண்ட நேரத்தில் இருந்துதான் இந்த வரையறுக்க முடியாத பெருந்தவிப்பு. அதை எப்படி சமன் செய்து கொள்வதென்றும் இவளுக்கு பிடிபடவில்லை. ஒவ்வொரு முறை கேட்கும் போதும் பெற்றவரின் வார்த்தை இவளை கூறு போட்டு கொன்றுவிடும்.

“எங்கே இருக்கோ, யாருக்கு தெரியும்? என் கடமை பிள்ளைகளோட உரிமையான இடத்துல அதுங்களை விட்டுட்டு வந்துட்டேன். இனி அவங்க பாடு!” ஒரேடியாக தட்டிக் கழித்தலில் அன்றைய நாளின் முறையாக மரித்துப் போனாள்.

“குழந்தை, ஆண் வீட்டுக்கு மட்டும்தான் வாரிசுன்னா இப்ப எனக்கு பொறக்கப் போற குழந்தையையும் உங்க பேரப் புள்ளையா ஏத்துக்க மாட்டீங்களா அத்தா? நான் உங்க வாரிசு இல்லையா? நான் பெத்த புள்ளைக்கு உங்கமேல உரிமை இல்லையா?” பல நாட்களாக ஹனியாவின் மனதிற்குள் அழுத்திக் கொண்டிருந்த கேள்விகள், ஒரு வழியாக வெடித்து கொண்டு கிளம்பி விட, பதில் சொல்ல முடியாமல் திகைத்தே நின்றார் ஹக்கீம்.

ஆரம்ப காலங்களில் ஒரு குடும்பத்தின் வாரிசில் ஆண், பெண் பேதம் பார்க்கும் மரபு எங்கும் இல்லை. விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை, சகோதரத்துவம் இவற்றை வழிவழியாக பேணுவதற்காகவே ஆணை முன்னிறுத்தி, அவனுக்கு பக்கபலமாக நின்று தோள் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே பக்குவமுள்ள சகோதரியை பின்னிருத்தினர் நம் முன்னோர்கள்.

இதனை தீர விசாரித்து அறிந்து கொள்ளாத இக்கால சமூகத்தினர் ஆணின் முன்னிருப்பை மட்டும் முன்னிறுத்தி பெண்ணை பின்னுக்கு தள்ளி இருபாலருக்கும் இடையே பேதமையை உண்டாக்கி விட்டனர். அவை அப்படியே வாழ்வியல் முறைமைகளிலும் தொடர்புபடுத்திவிட அங்கே ஆரம்பித்தது இருவருக்குமான உயர்வும் தாழ்வும். காலப்போக்கில் அதுதான் சட்டமென சாஸ்வதமாகியும் விட்டது.

வாரிசில் ஆணுக்கும் பெண்ணுக்கும் சம உரிமை உண்டு. அந்த வாரிசுகளுக்கு முன்னோர்களின் சொத்தை அனுபவிக்க மட்டுமல்ல, அவர்களின் சுக துக்கங்களையும், பாவ புண்ணியத்தின் பலன்களையும் அனுபவிப்பது கட்டாயக் கடமையாக முன்னிறுத்தப் படுகிறது.

‘இவற்றை எல்லாம் எடுத்துச் சொன்னால் தன் மகள் புரிந்து கொள்வாளா?’ உள்ளுக்குள் யோசித்து மூச்சடைத்து நின்ற ஹக்கீமின் முகம் மகளை நேருக்குநேராக பார்க்க முடியாமல் நொடிநேரம் தாழ்ந்து போக, மகளின் கன்னத்தில் பளீரென அறைந்தார் தாய் ஜன்னத்.

“யாருகிட்ட என்ன பேச்சுலே பேசிட்டு இருக்கே? நீ செஞ்ச பாவத்தை கழுவ வழி தெரியாமத்தான் நாயா அலைஞ்சு எங்கேயோ ஒரு இடத்துல உன் பாரத்தை இறக்கிட்டு வந்திருக்காரு உங்க அத்தா! உன் பார்வைக்கு, அவர் கொடுமைக்காரரா தெரியலாம். ஆனா எங்களைப் பொறுத்தவரைக்கும் உன்னோட பாவத்துல பங்கெடுத்து தன் தோள் மேல தூக்கி போட்டு சுமக்கிறாரு! ஒழுங்கு மருவாதையா அவருகிட்ட மாப்பு கேளு!

நடந்ததை மறந்துட்டு நல்ல மருமவளா வாழுறேன்னு உங்க அத்தைக்கு சத்தியம் பண்ணிக் கொடுத்தப்புறம் தான் நீ அங்கே வாழப்போயிருக்க… அதையும் மனுசுல நிறுத்து! பொண்ண வளக்கத் தெரியாம வளத்து விட்டாரு இந்த பெரிய மனுஷன், இவர் மவளும் வாக்கு தவறிட்டான்னு எங்க மக்க மனுசங்களே எங்க மூஞ்சியில காறித் துப்புற மாதிரி பண்ணிப்புடாதேலே! அப்புறம் யோசிக்கவே மாட்டோம். அவேன் தான் கதின்னு மண்ணுக்குள்ள ஓறங்க போயிடுவோம்!” மூச்சை பிடித்துக் கொண்டு ஜன்னத் பேசியதில் மொத்தமாய் வாயடைத்துப் போனாள் ஹனியா.

ஒவ்வொரு விசயத்திற்கும் இப்படி மிரட்டிப் பேசியே மகளை தங்களின் இஷ்டத்திற்கு பணிய வைத்து விடுகின்றனர் இவளின் பெற்றோர்கள். மகள் நல்லதொரு வாழ்க்கை வாழ்வதற்கு அவர்களுக்கு இதை தவிர வேறு உபாயம் கிடைக்கவில்லை.

தனக்குத்தானே தண்டனை கொடுத்துக் கொள்ளவும் வழியில்லாமல் கனத்த மனதுடன் புதிய வரவினை எதிர்பார்த்து நடமாட ஆரம்பித்தாள் ஹனியா. இவளின் மிதமிஞ்சிய அமைதியும் ஒரு கட்டத்தில் அவளது உள்ளத்தில் தாங்கவியலாத பாரமாக ஏறிக்கொண்டு மிகுந்த அழுத்தம் கண்டது.

உடைத்து கொட்டவோ, வெடித்துச் சிதறவோ வாய்ப்புகளற்ற நிலையில் அழுத்தத்தின் எதிரொலி வயிற்றில் இருக்கும் கருவில் எதிரொளித்தது. சரியாக மூன்று மாதத்தின் ஆரம்பித்தில் வளர்ச்சி கொண்ட குழந்தை கர்ப்பத்திலேயே சிதைந்து உதிரமாக வடிந்து போனது.

காரண காரியங்களை கண்டறிந்து பலவித மருத்துவ சிகிச்சைகளை மேற்கொண்டு ஹனியாவை இயல்பு நிலைக்கு மீட்டெடுத்தனர். பல அமர்வுகளில் மருத்துவ ஆலோசனையும் கொடுக்கப்பட்டது.

மிதமிஞ்சிய மன அழுத்தமே கருச் சிதைவிற்கு காரணமென குடும்பத்தாரிடம் சொல்லப்பட்டது. அதிலிருந்து வெளியே வர இவளது கவனத்தை திசை திருப்பியே ஆகவேண்டும் என்கிற கட்டாயத்தில் இம்ரான் மனைவியை கவனித்துக் கொள்வதை தனதாக்கிக் கொண்டான்.

வீட்டில் இருந்தே மூன்றுமாத தொடர் சிகிச்சையில் நல்லபலன் தெரிந்ததும் மீண்டும் மனைவியை விட்டுவிட்டு தொழில் ரீதியான பயணம் மேற்கொண்டான். எந்நேரமும் கண்ணுக்குள் வைத்து, கைகளில் பொத்தி பார்த்துக் கொண்ட கணவன், தன்னை விட்டு அகன்றதும் மீண்டுமொரு தடுமாற்றம், பரிதவிப்பு எல்லாம் சேர்த்து ஹனியாவை அலைகழிக்க வைத்தது.

அந்த நேரத்து மகிழ்வாக மீண்டும் இவள் கரு தாங்கி நிற்க முன்னை விட அதிக கவனிப்பு என்ற பெயரில் பெரியவர்கள் இவளை வீட்டுச் சிறைக்குள் அடைத்து வைத்தனர்.

தொழிலை கவனிக்கச் சென்றவனுக்கு உடனடியாக திரும்ப முடியாத நிலை. இவளுக்கும் மனதில் இருக்கும் தவிப்பினை வெளியே சொல்ல முடியாத ஆற்றாமை. தன்னை பற்றியே எந்நேரமும் சிந்தித்து தாழ்த்திக் கொள்ளும் கழிவிரக்கம் எல்லாம் சேர்ந்து, இம்முறை மூன்றாம் மாத முடிவில் இரண்டாம் முறையாக கரு கரைந்து காணாமல் போனது.

இதனைத் தொடர்ந்து குடும்பத்தில் பெரும் சலசலப்பு. மாமியாராக மாறிய அத்தையின் மாற்றம் தன்னை மட்டுமல்லாது தனது பெற்றவர்களையும் வாய்மொழியாகவே நிந்திக்க ஆரம்பிக்க, ஹனியாவிற்கு புகுந்த வீட்டில் இருப்பதே பெரும் தண்டனையாகிப் போனது.

“நான் உடனே குழந்தை பெத்துக்கணும் சிக்கு. நீ என் பக்கத்துல இருந்தா மட்டுமே அது நடக்கும்னு நினைக்கிறேன்! சேவ் மீ ப்ளீஸ்!” வெட்கம் விட்டு கணவனிடம் கேட்கும் அளவிற்கு புத்தி பேதலித்துப் போனாள் ஹனியா.

தந்தை, அண்ணனிடம் வீட்டின் நிலைமையை கேட்டறிந்த இம்ரானும் மறுபேச்சு பேசாமல், தேனிலவு என்ற பெயரில் மனைவியை அழைத்துக் கொண்டு உலகத்தை சுற்றிப் பார்க்க வந்துவிட்டான்.

ஒரு மாதமோ, இருபது நாட்களோ என்ற ரீதியில் ஒவ்வொரு நாட்டையும் தற்போது வரை மகிழ்வுடன் சுற்றிக் கொண்டு இருக்கிறது இந்த ஜோடி. இடையில் சிறு சுணக்கமோ வருத்தமோ ஏற்பட்டாலும், காதலை மொழியால் செய்கையால் உணர்த்தி தங்களை மீட்டுக் கொள்வதில் மிகத் தீவிரமாகி இருந்தனர்.

இதோ இப்போதும் அவ்வாறு ஒருவரையொருவர் பற்றிக் கொண்டு சந்தையில் நடந்துவர, கூட்டத்தின் இடிபாடுகளில் சிக்கிக் கொண்ட திருடன் ஒருவன், எவரின் கைகளுக்கும் அகப்படாமல் எதிர்பட்டவர்களை முண்டியடித்துக் கொண்டு ஓடிக் கொண்டிருக்க, அவனை இழுத்து பிடித்து நிறுத்தினான் இம்ரான்.

“வந்த இடத்துல பிரச்சனை வேண்டாம் சிக்கு!” முணுமுணுப்பாய் இவள் சொல்லும் நேரத்தில்,

“தேங்க்ஸ் சர்!” மூச்சு தெறிக்கும் வார்த்தையின் ஒலியினைக் கேட்டு நிமிர்ந்து பார்த்தாள்.

சர்வலட்சணங்களுடன் இன்னுமே அதீத வாளிப்பான தோற்றத்துடன் படபடப்பு குறையாமல் நின்றிருந்தான் ராம்சங்கர். திருடனிடம் இருந்த தனது வாலெட்டினை கைப்பற்றும் வரையில் அவனுமே இவளை நிமிர்ந்து பார்க்கவில்லை.

‘காவல் நிலையத்தில் புகார் அளித்து என்னை ஒப்படைத்து விடாதே!’ கெஞ்சிய திருடனை, “கெட் லாஸ்ட்!” என வெறுப்போடு அவனை அனுப்பி வைத்த பிறகே இம்ரானை பார்த்து, “தேங்க்ஸ் அகெய்ன் சர்!” மீண்டும் நன்றி கூறிய ராம்சங்கர்,

“ஐ அம் ராம்!” என அறிமுகப்படுத்திக் கொண்டு கை நீட்ட,

“ஐ அம் இம்ரான்!” பதிலுக்கு கை கொடுக்க முயன்றவனை தடுத்து நிறுத்தினாள் ஹனியா.

“போதும் சிக்கு, போகலாம்!” வெட்டி விட்டவளின் பேச்சினை கேட்டுத்தான் அவளைப் பார்த்தான் ராம்சங்கர்.

“வெயிட் சுட்கி, இவ்ளோ தூரம் வந்து தமிழனை பார்த்துருக்கோம். லிட்டில் செலிபிரேஷன் வித் ஹாட் டிரிங்க்ஸ்!” என்றவன்,

ராமிடம் திரும்பி, “உங்களுக்கு ஓகேவா ராம்?” இம்ரான் தன்போக்கில் திட்டமிட்டு பேசியதை இருவருமே ரசிக்கவில்லை.

ஹனியா வெறுப்போடு கேட்டுக் கொண்டிருக்க, ராம் மிதமிஞ்சிய மகிழ்ச்சியோடு இம்ரானின் பேச்சினை காற்றில் பறக்கவிட்டான்.

“லுக்கிங் கார்ஜியஸ் ஹனி பேப்… இவர்தான் உன் கரண்ட் பார்ட்னரா? சொல்லவே இல்ல! தெரிஞ்சிருந்தா செகண்ட் அப்ளிக்கேஷன் போட்டுருப்பேனே!” உளறிக் கொட்டியவனை முறைக்க முடியாமல் தோற்றாள் ஹனியா.

“வாட் டு யூ சே மிஸ்டர்?” இம்ரான் கண்டிக்க,

“டோன்ட் வொரி மிஸ்டர், எப்படியும் இந்த வெகேசனுக்கு பிளான் பண்ணி நீங்க வந்துருப்பீங்க! நான் உங்களை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன். பட், நெக்ஸ்ட் பார்ட்னரா வீ வில்…” என்று ராம் மேற்கொண்டு தொடரும் பொழுதே அவனை கன்னம் பழுக்க அறைந்திருந்தாள் ஹனியா.

“ஒஹ் காட்!” இரு ஆண்களும் ஒரேசேர அதிர்ந்து நின்ற நேரத்தில்,

“உன் காலை தூக்கு சிக்கு!” என்றவளின் குரலில் நிகழ்விற்கு வந்தனர்.

இவள் அறைந்த அதிர்வில் இவளது செல்பேசியும் கீழே விழ, குனிந்து எடுப்பவளாக இம்ரானிடம் பேசிவிட்டு, அவனது கனமான லெதர் ஷூவினை கழட்டி, அதனைக் கொண்டே ராம்சங்கரை தாக்கத் தொடங்கினாள்.

“ஹேய் இடியட், வாட் இஸ் திஸ் ஹனி?” அலறிய ராம்,

“ஹேய் மிஸ்டர், அவளை கண்ட்ரோல் பண்ணு மேன்!” இம்ரானிடம் கூறும் நேரத்தில் அவனுமே அந்த முயற்சியில் இறங்கியிருந்தான்.

“வேணாம் சுட்கி! எதுவா இருந்தாலும் பேசித் தீர்த்துக்கலாம்.” தடுக்க முன்வந்தவனையும் தள்ளிவிட, அவனும் கூட்டத்தின் இடையில் சென்று மாட்டிக் கொண்டான்.

ராம் அடி வாங்குவதை பார்த்துக் கொண்டே கூட்டம் நகர்ந்து கொண்டிருக்க, சொற்ப நபர்களே நின்று வேடிக்கை பார்த்து காரணம் கேட்டனர்.

ஹனியாவின் கோபத்தை பார்த்து அவளை தடுக்க தயங்கியவர்கள், ராமை விலகி நிறுத்த முயற்சிக்க, அப்போதும் விடாமல் பின்னால் வந்து அவனை அடித்து ஓய்ந்தாள் ஹனியா.

“செத்துப் போடா நாயே… ஒரு பொண்ணு ஒரு தடவ வழி மாறிப் போனா அப்படியே வாழ்ந்து முடிப்பான்னு நினைச்சியா? யார் என்னன்னு கூட கேக்காம புருஷன் பொண்டாட்டிய பத்தி தப்பா பேசுவியா? கொலைகாரா… பச்சோந்தி, நீ ஏன்டா என் கண்ணுல பட்டுத் தொலைஞ்ச?”” குரலை உயர்த்தி கர்ஜித்தவள் தொண்டையை செருமி அவன் முகத்தில் காறி உமிழ்ந்து துப்பினாள்.

இத்தனை அதிரடியை யாரும் எதிர்பார்க்கவில்லை. அவளுக்குள் இருந்த அழுத்தங்கள் ஏமாற்றங்கள் உடைப்பெடுத்த வெள்ளமாய் ஆர்பரித்துக் கொண்டிருக்க அவளை தடுக்கவோ பிடிக்கவோ எவரும் முன்வரவில்லை. அவளுக்கும் ஆத்திரம் அடங்கவில்லை.

“என்னடி? என்னை ரேப்பிஸ்ட் ரேஞ்சுல பேசுற? நீ மட்டும் யோக்கியமா?” அடி வாங்கிக் கொண்டு பதிலுக்கு ராமும் கேள்வி கேட்க ஆரம்பிக்க, அங்கு நின்றிருந்த மக்களுக்கு இவனது, ‘ரேப்பிஸ்ட்’ வார்த்தை மட்டுமே புரிந்து போனது.

“கால் தி போலீஸ்!” நான்கைந்து பேர் சலசலக்கத் தொடங்கிவிட அதற்குள் இம்ரான் வந்து சேர்ந்தான்.

“நோ… நோ!” என தடுத்தவன், ‘இது எங்களின் பிரச்சனை. நாங்களாவே பேசித் தீர்த்துக் கொள்கிறோம்.’ என்று நயந்து பேசி அவர்களை அனுப்பி வைத்தான்.

அதுவரையிலும் இருவரின் தர்க்கங்களும் ஓயவில்லை. விடாமல் பதிலுக்குபதில் பேசி தூற்றிக் கொண்டனர்.

“நீ கர்ப்பம், பிள்ளையென்று வந்து நின்றது பிடிக்கவில்லை.” விலகிப் போனதின் காரணத்தை கூறிய ராம், ‘இப்பொழுதும் நான் உன்னை வெறுக்கவில்லை.’ என்று கூறி, மீண்டும் பல அடிகளை பரிசாக வாங்கிக் கொண்டான்.

இவளது பலத்திற்கு துணை நின்று நன்றாகவே அடி வெளுத்து வாங்கியது அந்த லெதர் ஷூ. பணத்திற்கான உழைப்பை அது கொடுத்துக் கொண்டிருந்தது.

‘திருமணத்தில் ஈடுபாடில்லாதவன், பிள்ளைக்காக என்னைத் தேடி வருவாயென நம்பியே பிள்ளைகளை பெற்றுக் கொண்டேன்!’ என்று உடைந்து கதறினாள் ஹனியா.

“உன்மேல லவ் இருந்ததோ இல்லையோ நம்பிக்கை இருந்தது ராம்! வெளிநாட்டுல வாழ்க்கையில் எனக்கொரு நல்ல பாதுகாவலனா இருந்தவன் நீ! அதே பாதுகாப்பான வாழ்க்கையை உன்கூட ஷேர் பண்ணிக்க ஆசைப்பட்டேன். என் பேரன்ட்சை கன்வின்ஸ் பண்ணி உன்னை கல்யாணம் பண்ணிக்கிற முடிவுல இருந்தேன். ஆனா எதையும் முன்கூட்டியே உடைச்சு வெளியே சொல்லிக்காதது தான் என்னோட தப்பு! அதுவே எல்லா தவறும் நடக்க காரணமாயிடுச்சு ராம்! யூ ஆர் லையர்! யூ ஆர் எ கிரேட் ஈகோயிஸ்ட் ராம்! மன்னிப்பு கேட்டு என் முன்னாடி வந்து நின்னுடாதே, கேட் லாஸ்ட் ஃபார் எவர்!” தொண்டைக் கிழிய மூச்சு விடாமல் கத்தி ஒய்ந்தாள்.

“கூல் டவுன் ஹனி… பீபி ரைய்ஸ் ஆகுது. உனக்கு நல்லதில்லடா!” சமாதானப்படுத்திய இம்ரான் கண்ணசைவில் ராமை போகச் சொல்ல, அவனோ அசையாமல் நின்றிருந்தான்.

“லுக் மிஸ்டர், உன் முகம் பார்க்கவும் எனக்கு பிடிக்கல… என் வொய்ஃப் ஹெல்த் மட்டுமே எனக்கு முக்கியம் அதனாலதான் உன்னை சும்மா விடுறேன். இல்லன்னா உன்னை…” பல்லைக் கடித்த வேகத்திலேயே அவனது அடக்கப்பட்ட கோபம் தெரிந்தது.

“என்னை மறுபடியும் சேர்த்துக்கறேன்னு சொல்லி உன் ஆசையை எனக்கு புரிய வைக்கப் பார்க்காதே பன்னாடை நாயே! போயி உன் குழந்தைங்கக முகத்தைப் பாரு… அது சொல்லும் நான், உன்னை எந்த அளவுக்கு நம்பி காதலிச்சேன்னு! எல்லாத்தையும் சாம்பலாக்கி புதைச்சுட்டியே ***!” என்று தொடர்ந்தவளின் வார்த்தைகள் நீண்டு கொண்டே செல்ல, எதையும் தடுக்க இயலாமல் அமைதியாக நின்றான் இம்ரான்.

பேச்சினை நிறுத்தி மூச்செடுத்த நேரத்தில் கணவனின் அருகாமையை உணர்ந்ததும் ஊமையாகிப் போனாள்.

“மறந்து போயும் தமிழ்நாட்டுல கால் வச்சுடாதே! உன்னை வெட்டி கூறு போட, என் மாமா வாசல்ல அருவாளோட உக்காந்திருக்காரு, பொழைச்சு போ!” அருவெறுத்த குரலில் இம்ரான் பேச, அத்தனை அவமானமாக உணர்ந்தான் ராம்சங்கர்.

“நீங்களும் என்னை தவிக்க விட்டுப் போயிட மாட்டீங்களே மச்சான்!” கணவனாக அவனை முழுமனதுடன் ஏற்றுக் கொண்டதை, அழைப்பிலேயே தெரிவித்து விட, தனது இதழ் அணைப்பில் அவளுக்கு நம்பிக்கை அளித்தான் இம்ரான்.