பூவை வண்டு கொள்ளையடித்தால்

பூவை வண்டு கொள்ளையடித்தால்

கொள்ளை 31

 

குடும்பம் மொத்தமும் அதிர்ச்சி பிடியில்   இருந்தது. வைகுண்டம் கூறியதை யாரும்  எதிர்ப்பார்க்கவே இல்லை. “ என்னங்க, என்ன பேசுறீங்க நீங்க? எதுக்குங்க எல்லாரையும் வீட்ட விட்டுப் போகச் சொல்லுறீங்க?” சகு, அவர் அருகே  வந்து கேட்டார்.

“ என்ன செய்யச்  சொல்ற சகு, என்னை ஏமாத்தின அவங்களைக் கூடவே வச்சுருக்கச் சொல்லுறீயா?  என் கிட்ட ஒரு வார்த்தைக் கேட்கணும் கூட தோணல இவங்களுக்கு. இவங்களா ஒரு முடிவு எடுப்பாங்க, நான் அதை ஏத்துக்கணுமா? சொல்லு சகு ஏத்துக்கணுமா?  சரி, இவன்  இங்க விஷ்ணுவ கூட்டிட்டி வந்தானே! ஒரு வார்த்தை, என்கிட்ட விஷ்ணு யாருன்னு சொன்னானா? இந்தக் குடும்பத்துல நான் தான் எல்லா முடிவையும் எடுக்கணும் சொல்லல, அதுக்காக, நீங்களே எல்லா முடிவையும் எடுங்க, என்னை எதுவும் கேட்காதிங்கணும் நான் சொல்லல, இந்தக் குடும்பத்துல என்னையும் ஒரு மனுசனா மதிச்சு, என்கிட்டையும் சொல்லுங்க தானே சொல்லுறேன். அது உங்களுக்குத் தப்பா தெரியுதா? அப்போ என்னை மதிக்காத இடத்துல நான் ஏன் இருக்கணும்? நான் போறேன். இவங்க  இங்க இருக்கட்டும்.” என்றார்  வேதனைக் கலந்த கோபத்தில்.

மனிதனாய் பிறந்த யாவருக்கும் தன்னை மதிக்க வேண்டும், தன்னிடம் கேட்டு செய்ய வேண்டும் எண்ணம்  இருப்பது இயல்பு தானே. அதிலும், வீட்டில் உள்ள அனைவரும்  பெரியவர்களிடம் கேட்டு செய்வது என்பது சிறுவயதிலிருந்து  விதைத்த விதை. அது வளரும், நம்மோடு சேர்ந்தே வளர்கிறது. வயதானோர் பெரும்பாலும் எதிர்பார்ப்பது இதைத் தான். வைகுண்டமும்  அதைத் தான் எதிர்ப்பார்கிறார். ஏற்கெனவே  லட்சுமணன் தன்னிடம் சொல்லாமலே காதலித்து திருமணம் செய்துக் கொண்டதையே ஏற்க முடியாமல் அவர்களைத் தள்ளி வைத்திருந்தார்.  இப்போது, மீண்டும் அவ்வாறே செய்தால் அவருக்குக் கோபம் வருவது சரிதானே அதில்  தவறேதும் இல்லையே..

“அப்பா, நாங்க உங்களை ஏமாத்தினது தப்பு தான்.எங்களுக்கு அப்போ வேற வழித் தெரியலப்பா. நீங்க எங்க கிட்ட சகஜமா கூட பேசல, அதான் நாங்க எதுவும் உங்க கிட்ட சொல்லல. நாங்க இங்க இருந்ததே யாரோ போலத்தானே பா. இங்க எங்களுக்குப் பேசக் கூட நீங்க உரிமைக் கொடுக்கலையே. அங்க மாமா,  விஷ்ணுவ, அவளுக்குப் பிடிக்காத மாப்பிள்ளைக்குக் கட்டிவைக்க முடிவு எடுத்திருந்தார். பலராமன் என்கிட்ட சொல்லி  அழுதப்போ, எனக்கு அவனுக்கு உதவிச் செய்யணும் தான் தோணுச்சு. உங்களை மதிக்கக் கூடாதுன்னு இல்லப்பா, அவனுக்கு உதவிச் செய்யணும் எண்ணம் மட்டும் தான். எங்களை மன்னிச்சிடுங்க” தந்தை முன் கைக்கூப்பி நின்றார் லட்சுமணன்.

” மாமா , உங்களுக்கு அப்பாவைப் பத்தி நல்லாவே தெரியும்.. அவர் பிடிச்ச முயலுக்கு மூணு காலுன்னு நிக்கிறவர். அவர் தங்கச்சி மகனுக்கு என் பொண்ணைக் கட்டிக்கொடுக்கணும் ஒத்தக் கால்ல நின்னார்.. எனக்கு அவரை எதிர்த்து பேச தைரியம் இல்லை மாமா. ஏற்கெனவே அண்ணன் மகளை, மூத்த பையனுக்குக் கட்டிக் கொடுத்து, அவ வாழ்க்கையே வீட்டோட முடிஞ்சு போச்சு மாமா. அவ சந்தோசமா இருக்காளா? இல்லையா? கேக்க கூட முடியாத அப்பங்கரானுங்களா நாங்க இருக்கோம். பொண்ண கட்டிக்கொடுத்தா போதும், அவன் நல்லவனா? கெட்டவனா? எப்படி பட்டவன்,பொண்ணை நல்லா வச்சு வாழ்றான்னு பார்க்கிறதே இல்லமாமா. எங்க அப்பா, கட்டிவனோடு தான் வாழணும், செத்து அங்கே சமாதி ஆனாலும் ஆகட்டும். ஆனா, பொறந்த வீட்டுக்குப் பிரச்சினைன்னு வரக்கூடாதுன்ற எண்ணம் கொண்டவர் .. அங்க அவர், என் அம்மா ல இருந்து, என் கடைசிப் பொண்ணு வரைக்கும் அடிமையா தான் பார்க்கிறார். என் அர்ஜுன் கூட அப்படித்தான் நினைக்கிறான். என் பொண்ணைக் கட்டிக்கப் போறவணும் அதே இனம் தான். அவனுக்கு அடிமையா என் பொண்ணு வாழக்கூடாது நினச்சேன். லட்சுமணன் கிட்ட உதவிக் கேட்டேன். மயூரனைப் போல மாப்பிள்ளைக் கிடைக்க நான்  கொடுத்து வச்சுருக்கணும் மாமா. உங்க ரத்தம் அவன்,உங்களைப் போல தான் இருக்கான்.

உங்களைப் பார்த்து தான் பெண்களை எப்படி மதிக்கணும்  நான் கத்துக்கிட்டேன்.
என் தங்கச்சி, இங்க நிம்மதியா இருக்க காரணம் நீங்க தானே மாமா.. உங்களுக்கு அவங்க மேல கோபம் இருந்தாலும். ஒரு குறையும் இல்லாம பார்த்துக் கிட்டீங்க.. எனக்கு இது பேராசை தான் மாமா, என் பொண்ணும் இந்த  வீட்டுல சந்தோசமா வாழணும். உங்களைக் கேட்காம நாங்க பண்ணது தப்பு தான். நீங்க அப்பா மேல கோபமா இருக்கும் போதும். நாங்க இதை சொன்னா, நீங்க ஏத்துக்க மாட்டீங்க தான். உங்க கிட்ட சொல்லல மாமா.. அப்ப, எனக்கு என் பொண்ணு வாழ்க்கைத் தான் முக்கியமா பட்டுச்சு…  நான் வேணாம் இந்த வீட்ட விட்டுப் போயிடுறேன். என் பொண்ணும் தங்கச்சியும் நிம்மதியா இருந்தாலே போதும் மாமா. அவங்களை சேர்த்துக்கோங்க மாமா” அவர் காலில் விழுந்தார்.  அவர்  விழுந்ததும், சற்று  தள்ளிப் போனவர். ” பலராம, எழுந்திரி என்ன பண்ற நீ? ” பதறிப் போய் அவரை எழ வைத்தார். வைகுண்டத்தின் அருகினில் வந்த ராமன்,

” அப்பா, உங்களுக்கு மாமாவைப் பத்தி தெரியாதா? நீங்களே,  அத்தையை நெனச்சு பீல்  பண்ணிருக்கிங்க.. உங்களுக்கு மாமா மேல தானே கோபம் இவங்க என்னப்பா பண்ணாங்க? இவங்க பண்ண தப்பை நான் நியாயப் படுத்தல, ஆனா அவங்க பண்ண  தப்புல உள்ள நியாயத்தைத் தான் சொல்லுறேன். இதுவே நீங்களும் மாமாவும் ராசியா இருந்தா, கண்டிப்பா நீங்க, லட்சுமணனுக்கு  முத்துவை தான் கேட்டுருப்பிங்க, ஏன் மயூரனுக்கு, நாம விஷ்ணுவைத் தான் பொண்ணு கேட்டுருப்போம்.. இப்ப உங்களுக்குத்  தெரியாம நடந்தது தான் உங்க கோபம்ன்னு புரியுதுபா.. ஆனா அப்ப, நாம  தம்பியை ஒதுக்கி தானே வச்சுருந்தோம்.. எப்படி நம்ம கிட்ட அவன் சொல்லிருப்பான்? நாம வாய்ப்பே கொடுக்காம ஏன் சொல்லலைன்னு கேட்டா எப்படிப்பா? மறுபடியும் அந்தத் தண்டனையை அவனுக்குக் கொடுக்காதிங்கப்பா ” அவர் கரம் பற்றிக் கெஞ்ச,  பழுக்க மறுக்கும் காயா அவர் மனம், கனிந்த முதிர் கனியல்லவா…. மெல்ல மெல்ல இளகியது..

அவர் தன் மகன், மருமகள்,  பேரன் பேத்தியைக் காண,  அவர்கள் முகத்தில், முன்பு தோன்றிய அதிர்ச்சியும் மாறி இப்போது மன்னிப்பு வேண்டி ஏங்கி  நிற்க, கோபம் சுமந்த அவர் மனம், மெல்ல மெல்ல  அதை இறக்கி வைத்துக் கொண்டுருந்தது..

மற்றவர்கள் முகத்தில் இருந்த சிறு கலக்கமும்  விலக ஆரம்பித்தது. ஆனால், விஷ்ணுவிற்குத் தான் இருப்புக் கொள்ளவில்லை. மீண்டும் அவரை ஏமாற்ற வேண்டாம் என்று எண்ணம் தோன்றியது. இன்றே இப்போதே உண்மையைச் சொல்ல வேண்டும். இல்லையேல்  இன்னும் மறைத்து தன்னை தானே நோகடித்துக் கொள்ள வேண்டாம் என்று முடிவெடுத்தவளாக  மயூரனைப் பார்க்க, அவள் சிந்திக்கும் போதே அவன் கண்கள் அவளை அளவெடுத்தது.

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்…’ என்ன  மன்னிச்சிடு மயூரன், இனியும் நான் தாத்தாவை ஏமாத்த விரும்பலை… உண்மையைச் சொல்லிடலாம். இனியும் என்னால  இங்க இருக்க முடியாது. நான் ஊருக்குப் போறேன். வருணோட நினைவுகளைச் சுமந்துட்டு உன் கூட வாழ முடியாது மயூ. என்னால உன்னை முழு மனதோடு ஏத்துக்க முடியல. உன் காதலுக்கு நான் தகுதியானவள் இல்லை. நான் இப்போ இங்க இருந்து  போறது தான் உனக்கும் எனக்கும் நல்லது.. சாரி டா’  எண்ணியவளுக்கு விழியோர விளிம்பில் கண்ணீர்த் துளி எட்டிப்பார்க்க, யாரும் அறியா வண்ணம் துடைத்துக் கொண்டாள்.

அவள் முகத்தில் படர்ந்த சிந்தனை ரேகையை  ஆராய்ந்தவன்,அவள் என்ன செய்ய போகிறாள் என கலக்கம் வந்தது ‘இவ முகமே, சரி இல்லை. எதுவும் நெனைச்சுட்டு இருக்காளா? இல்லை உண்மையைச் சொல்லணும் முடிவு பண்ணிருக்காளா?  இப்போ தான் மனுஷன் மலை இறங்கிருக்கார்.. மறுபடியும்  இவ ஏத்த, பிளான்  பண்ணிருக்காளோ! தேவுடா, இந்தப் பேட் இமாஜினருக்கு என் காதல் புரியவே புரியாதா…’  அவளைக் கலக்கத்தோடு பார்த்தான்.. அவன் எண்ணியது போலவே, இந்த சரியான நேரத்தில்  தப்பான  முடிவை எடுத்தவள் அதைச் செயல்படுத்தவும் தொடங்கி விட்டாள்..

” தாத்தா… ” என அவர் கரத்தைப் பற்றியவள்.. ” இந்த வீட்டு மூத்த மனுசனா, நீங்க எதிர்பார்கிறது சரி தான் தாத்தா. அதுக்காக, நானும் உங்க கிட்ட மன்னிப்புக் கேட்டுகிறேன்.  இனியும்  நான் எதையும் மறைக்கல தாத்தா..  எல்லாத்தையும் உன்கிட்ட சொல்லிடுறேன்..” என்றதும் அந்த நால்வரும் முழிக்க ஆரம்பித்தனர்.

இன்னும் விஷயங்கள் இருக்கிறதா என்பது போல பார்த்தார் வைகுண்டம்.
அவள், வருணைக் காதலிப்பதிலிருந்து அவர்கள் போட்ட நாடகம் அனைத்தையும் கூறி முடிக்க, அனைவருக்கும் அதிர்ச்சி என்றால், வைகுண்டதுக்கும் சகுக்கும் நெஞ்சு வலி வராதா குறைதான்… பாவம் வயதானவர்கள் அல்லவா…

” தாத்தா, நீங்க எல்லாரும் என் சொந்தம்ன்னு எனக்குத் தெரியாது. நான் என் வருனைத் தான் தேடி வந்தேன். அவனைத் தான் நான் காதலக்கிறேன். நீங்க, ஷாலுவை மயூரனுக்கு கட்டிவைக்கிறதா முடிவுப் பண்ணதுனால தான், நாங்க இரண்டு பேரும் கணவன் மனைவியா நடிக்க முடிவு எடுத்தோம். நாங்க எவ்வளவு சுயநலமா யோசிச்சுருக்கோம் இப்பதான் புரிந்தது தாத்தா.. எல்லா உண்மையும் தெரிஞ்ச உங்களுக்கு, இதுவும் தெரியணும் தான்  நான் இப்போ இதைச் சொல்றேன். ப்ளீஸ் தாத்தா, அத்தை, மாமாவையும் மயூரனை  மன்னிச்சுடுங்க.. அவங்க எல்லாரும் எனக்காக, என்னைக் காப்பாத்த தான் இதெல்லாம் செஞ்சு, அதை உங்க கிட்டயும் மறைச்சிருக்காங்க.. அவங்களை ஏத்துங்கோங்க தாத்தா. நானும் அப்பாவும் இனி இந்தக் குடும்பத்துக்கு தொந்தரவா இருக்க மாட்டோம். நாங்க போறோம்.. ஆனா, ப்ளீஸ் தாத்தா, அவங்க மேல கோபப்படாம, எப்பயும் போல  இந்தக் குடும்பத்தோடு சந்தோசமா இருங்க தாத்தா… இது என்னோட ரெகுவஸ்ட்” அவர் முன்  கைகூப்பி நின்றாள்..

அவள் கூற, அந்த நால்வருக்கும் இடியை இறக்கியது போலானது.. பலராமன் மகளின் முடிவை எண்ணி அதிர்ந்தவர் அவள் அருகில் வந்து, ” விஷ்ணுமா, என்ன சொல்லுற ? நீ இங்க வாழணும் தானே நாங்க இவ்வளவும் செஞ்சோம். இப்ப இப்படி சொன்ன என்னமா அர்த்தம்.  நீ ஏன் இந்த முடிவை எடுத்த? வேணாம்  விஷ்ணு இது போல வாழ்க்கை,நீ  நினைச்சாலும் கிடைக்காதுமா… நீ மயூரனோட  சந்தோசமா வாழணும்மா. அதான் இந்த அப்பாக்கும் வேணும்… உன் முடிவை மாத்திக்கோமா” எனக் கெஞ்சவும்

” அப்பா, நீங்க எனக்காக இவ்வளவு செஞ்சீங்க தான். ஆனா, இது எல்லாமே எல்லாரோட, ஆசிர்வாதத்தால கிடைச்ச வாழ்க்கை இல்லப்பா. ஏமாத்தில கிடைச்சது. எனக்கு அது வேணாம் பா, ப்ளீஸ் பா, தாத்தாவையும் பாட்டியை ஏமாத்தி அவங்க நிம்மதியா வாழ்ந்தாங்களா மாமாவும் அத்தையும்? இல்லையே அது போல, தான் எங்க வாழ்க்கையும். அப்படி, நாங்க
வாழறது  தான் உங்க ஆசையா சொல்லுங்க பா? ” அவள் கேட்ட அமைதியாகி விட்டார்..

மற்றவர்களோ பார்வையாளர்களாகவே நின்றுக் கொண்டிருந்தனர். யாருக்காக என்ன பேசுவத்தென்று  தெரியாமல் விழித்தனர். அவர்களால் வைகுண்டத்தையும் எதிர்த்துப் பேசவும் முடியவில்லை, விஷ்ணுவிற்கு ஆதரவாகவும் நிற்க முடியவில்லை.

ஆனால்  மயூரன் தான் அவள் முடிவில் நொறுங்கிப் போனான். செக்கரை நிரம்பிய விழிகளை, தேங்கியது என்னவோ, வலி, இயலாமையே.. அவளை இழுத்து, கட்டிணைத்து, நீ என் மனைவி, என்னை விட்டுப் போகாதே என்று கத்தணும் போல ஒவ்வொரு செல்லும் அவனைத் தூண்ட, மனம் அவளைத் தனக்குள் புதைத்துக் கொள்ள ஆவலைக் கொடுக்க, மூளை மட்டுமே அவனின் நிலையை உணர்த்தியது..

அவள் உன் காதலியே தவிர உன் மனைவியல்ல, அவள் உன்னைக் காதலிக்கவில்லை. அவள் உனக்கு உரிமைக் கொடுத்திட வில்லை. இது ஒரு தலைக் காதல் என்று அவனைக் கட்டிப் போட்டது.
விழிகள் நீரோடு, தனது கை முஷ்டியை இறுக்கியவன் அனைத்து உணர்வுகளைக் கடினப் பட்டுக் கட்டுபடுத்தினான்.

அவனை எண்ணி தாய் மனது, கண்ணீர் வடித்தது.. தன்னை நினைத்து ஏங்கும் ஒரு ஜீவனை எண்ணிப்பார்க்காமல் அவளுக்காக,அவள் முடிவை எடுக்க, பெத்த மனமே அவனை எண்ணிக் கலங்கியது.

வைகுண்டத்தின் அமைதியை, அவளுக்குச் சாதகமாக்கிக் கொண்டவள், தனாவைக் கண்டதும் அவர் முன்னே வந்து நின்றாள்.. ” என்னை மன்னிச்சிடுங்கமா, உங்க கனவு ஆசையை எல்லாத்தையும் நான்
கலைச்சுட்டேன். ஒரு தாயாய் உங்க ஆசை தப்பில்லை.. தன்னோட மகளுக்கு நல்ல வாழ்க்கை அமைச்சுக் கொடுக்கணும் நினைச்சது எப்படி தப்பாகும், என் அப்பாவே அப்படி நினைச்சதுனால தான் எனக்குத் தெரியாமலே இவ்வளவும் செஞ்சுருக்கார்.. நீங்க என் மேல கோபப்பட்டுப் பேசியதும், திருந்தி எனக்கு ஒண்ணுனா துடிச்சதும், நீங்க எனக்கு இன்னொரு அம்மா தான் தெரிஞ்சீங்க. ப்ளீஸ் ம்மா, ஷாலுக்குப் பிடிச்ச மாப்பிள்ளையைக் கட்டிவைங்க. அதுவும் எல்லாரோட ஆசிர்வாதத்தோடு பண்ணிவைங்க. நான் வரேன் மா…” என்றவள் அங்கு நிற்காமல் விறு விறுவென்று மாடி ஏறினாள்.

அவள் செல்வதைக் கண்டதும் மனம் படைத்த தாயவளோ, தன் மகனின்  அருகில் வந்து, ” டேய் மயூ அவளைத் தடுத்து நிருந்துடா, ஏன்டா இப்படி சிலைப் போல நிக்கிற, அவளைப் போகவேணாம் சொல்லுடா.” முத்துவின் தீண்டலில் உயர்பெற்றவன், தனது அன்னையின் உந்துதலில் அவளைத் தேடிச் சென்றான்..

அங்கே அவள், தனது பெட்டியில் அவளது பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்..

அவள் புஜத்தினைப் பிடித்து தன்னருகே இழுத்தான்.. ” எப்பயும்  உன்னைப் பத்தி மட்டுமே யோசிப்பியா விஷ்ணு. என் காதலைச் சொல்லியும் உனக்கு புரியலையா? நீ  இல்லாத அந்த ஐஞ்சு மணி நேரத்துல பித்துப் பிடித்து பைத்தியகாரன் போல அலைஞ்சேன் டி. நான் அப்படி அலையனும் தான் உனக்கு ஆசையா, இங்க நீ, எனக்குப் பொண்டாடியா இருக்க வேணாம்.. என் கண்ணுல படுற திசையில் இரு டி… எப்படியும் என் காதலை உனக்குப் புரிய வச்சுடுவேன்.. ப்ளீஸ் டி என்னை விட்டுப் போகாத டி. நீ இல்லாம எதுவுமே முடியாது விஷ்ணு.. ப்ளீஸ் விஷ்ணு.” மண்டியிட்டுக் கதறினான்  கெஞ்சினான்.

அவன் கெஞ்சலில் மனம், வளைந்தாலும், எடுத்து முடிவில் நிலையாக நின்றாள்.

” மயூ, நான் உன்னைக் காதலிக்கல டா. என்னால வருணை மறக்க முடியல, இதுல  உன்னைப் பார்க்கும் போது எனக்குக் குற்ற உணர்வு தான் தோணுது… எனக்கு கொஞ்சம் டைம் வேணும் மயூரன். நான்… நான்…. போறேன் ப்ளீஸ் என்னைப் போக விடு மயூ..” சங்கடத்துடன் அவள் நெழிய அவளை ஒரு நொடிக் கண்டவன் எழுந்து   நின்றான்.

” உனக்கு டைம் கொடுத்தா என் காதலைப் புரிஞ்சுபியா விஷ்ணு.. வருணை மறந்து என்னை ஏத்துப்பியா? ” என்றதும், அவனை பாராமல் பதில் சொல்லத் தயங்கினாள்..

” சொல்லு விஷ்ணு,  உனக்கு நான் டைம் கொடுத்தா என்னை ஏத்துப்பியா?” அவன் முகம் ஏந்தி, கேட்டு நின்றான்

” மயூ, ப்ளீஸ் என்னைப் போக விடு, என்னால உனக்கு எந்தப் பதிலும் சொல்ல முடியாது… நான் போறேன்..” அவனிடம் தன் கையை விடுவித்துக் கொண்டு தன்
பெட்டியைத் தூக்கி நகரப் போனவள் மீண்டும் அவன் முன் வந்து நின்றாள்.

தன் கழுத்தில் உள்ள தாலியைக் கழட்டியவள், அவன் கையில் திணித்து விட்டு மீண்டும் செல்ல அதை ஒரு நொடிப் பார்த்தவன், அவளைப் பிடித்து இழுத்தான், ” இந்தத் தாலி உனக்குச் சொந்தமானது தான்.. இது உன்னைத் தவிர யாருக்கும் சொந்தமாகாது. இந்தத் தாலியை எப்படி உனக்கு சொந்தமானதோ, அதே போல நீயும் எனக்கும் மட்டும்  தான் சொந்தம்.. எனக்குப் பொண்டாடின்னா அது விஷ்ணு தான். உனக்கு புருஷன் அது இந்த மயூரன் தான்.. மாறாது எப்போதும்… டைம் தானே எடுத்துக்கோ ஆனா,  முடிவு என்கூட வாழுறதா தான் இருக்கணும்.. ஐ  ஆம் வெய்ட்டிங் விஷ்ணு… லவ் யூ…” அவள்  இதழில் , நீ என்னுடையவள் என்று முதல் முத்த முத்திரையிட்டான்..

அவனைப் பிடுத்து தள்ளியவள், கன்னத்தைப் பதம் பார்த்துவிட்டு சென்றாள்..

கொள்ளைத் தொடரும்..

Leave a Reply

error: Content is protected !!