பூவை வண்டு கொள்ளையடித்தால்

கொள்ளை 32

 

பெட்டியோடு இறங்கி வரும் தன் மருமகளை என்ன சொல்லி, அவளைத் தடுக்கயென புரியாமல் விழித்தார் முத்து.

சபையில் குற்றவாளியாக நிற்கும் தன்னிடம் நியாயத்தைக்  கேட்காமல் தீர்ப்பை வழங்கியது போலானது அவரது நிலைமை.

கையைப் பிசைந்து நிப்பவரால், அவளைத் தடுக்க முடியவில்லை. இறங்கி வரும் அவளுக்கு, முத்துவைப் பார்க்க பார்க்க, தனக்குள் குற்ற உணர்வு மேலோங்கியது.

தன் அழுகையைக் கட்டுபடுத்தி, விழிகளில் விழைந்த நீர்த்துளியைத் துடைத்தவாறு கீழ் இறங்கி வந்தாள்.

“அத்தை,….” என அவர் அருகில் வந்தவள், “முத்து சாரி… எனக்கு  இந்த முடிவு தான் சரின்னு தோணுச்சு, நீ என் மேல கோபமா இருக்கேன் தெரியும். ஆனா, உன்னை ரொம்ப மிஸ் பண்ணுவேன்… சின்ன வயசுல இருந்தே நீ என் கூடயே இருந்துருக்கலாம். இப்படி ஒரு உறவுக்காகத் தானே நான் ஏங்கிட்டு இருந்தேன்..ஐ கோன்ன மிஸ் யூ…” தாயைப் போல அரவணைத்து, கொஞ்சிப்  பார்த்துக் கொண்ட,  அத்தையை(மாமியாரை) யாருக்கு தான் பிடிக்காது. அவரை அணைக்க,

“என்னைத் தொடாத டி, என்னை விட்டுப் போகணும் முடிவு பண்ணிட்டேல, ஒன்னும் வேணாம் உன் அணைப்பும் பாசமும்.. இங்க இருந்து போ.. என் கண்ணு முன்னாடி நிக்காத, கண்டிப்பா இதுக்கு சேர்த்து வச்சு உன்னை கொடுமைப் பண்ணுவேன். ” என ஒரு விரலை நீட்டி எச்சரிக்கைச் செய்வதில்கூட அவரது அன்பு பிரதிபலித்தது.. அந்தச் செல்லக் கோபம் கூட தன் மேல் காட்டும் அளவற்ற பாசமாகத் தான் தெரிந்தது. 

சிறு முறுவலுடன், ” நீ எப்படி கொடுமைப் பண்ணுவன்னு எனக்கு தெரியாதா முத்து. உன்னை, நீயே கொடுமைக்கார மாமியாரா நினைச்சுக்காத. அதெல்லாம் உனக்கு செட் ஆகாது .. அப்றம் உன் கொடுமை அனுப்பவிக்க ஐ அம் வெய்ட்டிங்.” என அவள் கூற, ” ச்சீ … போடி இங்க இருந்து ” வாய் வார்த்தையாகச் சொன்னாலும் உள்ளுக்குள் போகாதே என்று ஆயிரம் முறைச் சொல்லிவிட்டார். அவரைக் கண்டு முறுவலித்தவள், அவரை விட்டு நகர,

” திரும்ப வந்துரு டி”   அடக்க முடியாமல்  கூறிவிட்டார்.. அதற்கும் சிரித்தவள், அங்கிருந்து நகர்ந்து, லட்சுமணன், ராமன், வேதா, நிவி ஆதி, வாணி ,ஷாலு என அனைவரிடமும் சொல்ல, அவளை அணைத்து விட்டுப்  போகாதே என்று கெஞ்சித் தான் விட்டனர். அவர்களுக்கு  சிரிப்பை  மட்டுமே பதிலாக தந்தவள், சகுவிடம் வந்தாள்.

” சகு, உன் உடம்பையும்  பார்த்துக்கோ தாத்தாவையும் பார்த்துக்க,  அதான் ரெண்டு மருமகள்,  பேத்தி இருக்காங்கள அவங்களை வேலைப் பார்க்க சொல்லி, நீ உன் ஹெல்த் பார்த்துக்கோ சகு. நான் வரேன்..” என்றவள் அவர் காலில் விழுந்தி ஆசிர்வாதம்  வாங்கினாள்.

அவள் தலையைத் தொட்டு ஆசிர்வாதம் தந்தவர்,” இங்கயே இரு விஷ்ணு பேட்டி, இங்க உனக்கு மருமகளா இருக்கப் பிடிக்கலைன்னா, எங்க பேத்தியா இரு, இந்த வீட்டை விட்டுப் போகாத பேட்டி…” என்றவரைக் கட்டி அணைத்து விட்டு நகரப் போனவளை, தடுத்து, அந்தச்  சின்ன குரல்..

” விஷ்ணு….” எனக் கபி, அழுதுக் கொண்டே அவள் காலைக் கட்டிக்கொள்ள,  அவனைத் தூக்கிக்கொண்டவள், ” டுயூட், ஏன் அழுகுறீங்க?” அவன் கண்ணைத் துடைத்தவாறு கேட்டாள்.

“ஏன் டுயூட், என்னை விட்டுட்டுப் போற? இங்கே இருக்கலாம்ல… ” மழலை மொழியில் தன் அன்பை மொழிய ” எனக்கு அம்மா ஞாபகம் வந்துருச்சு டுயூட் அவங்கள தான் பார்க்கப் போறேன். அவங்கள பார்த்துட்டு வந்திடுறேன்… ஓ.கேவா”என்றதும், ” ஓகே . ஆனா, சீக்கிரமா வந்தரணும்”  என எச்சரிக்கை விட,  அதுவும் அழகாக இருந்தது. அதற்கு அவள் தலையை அசைத்து, அவனுக்கு முத்தம் ஒன்றை வைத்துவிட்டு, அவனை இறக்கினாள்., அனைவரையும் ஒரு முறை பார்த்தவள்,தன் அறையை நோக்கிச் விழிகளைச் செலுத்த, அவளுக்கு ஏமாற்றம் அளிக்காமல்  அவளுக்கு காட்சிக் கொடுத்தான் மயூரன். 

ஒரு நிமிடம் அவனைக் கண்ணில் நிரப்பிக் கொண்டு, அங்கிருந்து விடைப்பெற்றாள்.

‘ எதற்கு நீ அவனைத் தேடுகிறாய்?. எதற்கு நீ மீண்டும் வருகிறேன் வாக்குக் கொடுக்கிறாய்? உனக்கு இங்கு மீண்டும் வர, எண்ணம் இருக்குறது போலயே!’ அவள் மனம் சுட்டிக்காட்ட, அதைப் புறம் தள்ளி விட்டு அங்கிருந்து சென்றுவிட்டாள், அவளோடு பலராமனும் சென்றார்.

அவள் சென்றதும், வெறுமையாக இருந்தது அந்த வீடு, அவரவர் கனத்த மனதோடு அறைக்குச் செல்ல, வைகுண்டம் தான் தன் குடும்பத்தின் சந்தோசத்தை எண்ணிக் கலங்கினார்.

இருவரும் மும்பை விமான நிலையத்திற்கு வந்தனர்… பயணச்சிட்டை வாங்கியவர், விஷ்ணு அருகே அமர்ந்தார்.

இருவரும் விமானத்திற்காக காத்திருந்தனர்… ” நீ எடுத்த முடிவு சரியா விஷ்ணுமா? ” அவள் கைப்பற்றி மகளின் வாழ்க்கையை எண்ணிக் கேட்டார்.

” என் முடிவு சரிதான்பா. அவங்களை ஏமாத்தி அந்த  வாழ்க்கையை நான் வாழணும்மா அப்பா? என்னால அது முடியாது.  அந்த வாழ்க்கையைத் தேடி நான் போலயே. அது எனக்கான வாழ்க்கையும் இல்லை. என் மனசு சொல்லுறதைத் தான் செய்தேன்.”என்றாள். தன் முடிவில்  எந்தவொரு மாற்றம் இல்லை என்பது  அவள் முகத்தில் தெளிவாக  தெரிய,  அத்தெளிவினைக் கண்டவருக்குப் புரிந்து விட்டது.  அவள் முடிவுலிருந்து, அவள் மாற மாட்டாள் என்று..

” ஆனா, நீ மனசு சொல்றதை தான் கேட்டு செய்தியா விஷ்ணுமா, எனக்கு என்னமோ உன் மூளையக் கேட்டு  இந்த முடிவை எடுத்தது போல இருக்கு… மறுபடியும் சொல்லுறேன், இது பண்ணு அத பண்ணு நான் சொல்லல மாட்டேன்.. உன் வாழ்க்கை இது. நீ தான் முடிவு எடுக்கணும். உன் முடிவுக்கு நான் கட்டுப் படுறேன். ” என அவளுக்கு ஆதரவாக இருந்தார்.. அவர் தோளில் மெல்ல சாய்ந்தாள். விமானமும் வர, இருவரும் மதுரைக்குச் சென்றனர்.

விமானத்தில் அமர,ஏனோ அவனுடன் பயணித்த நினைவுகள் எண்ண அலைகளாய் வந்து அவளை மோதியது. நெஞ்சை முட்டும் அத்தாலி, மயூரனின் நினைவுகளையும் சேர்த்து முட்டியது. கடைசியாக அவன் சொன்ன வார்த்தையும்  முத்தமும் இம்சை செய்தது. கண் மூடும் பொழுதெல்லாம்  வந்து நின்றது..

இமைக்குள்
சிக்குண்ட
அவன்
நினைவுகள்
இம்சை செய்து
தூக்கத்தைப்
பறித்து
துக்கத்தைக்
கொடுக்கிறது..

இருவரும் மதுரையை வந்து அடைந்தார்கள்…

மொழி, உணவு, சுவை என எல்லாம் மாறிக்  அரைகுறையாக, ஏனோ தனோ  என இருந்த நாட்கள் இன்று தான் முழுமைப் பெற்றது போலானது.  நம்மூர் வாசம், மொழி, இடம் என வந்த பின்பு ஏதோ ஒரு  புத்துணர்ச்சி.  முகத்தில்  அப்படி ஒரு பிராகாசம்… அங்கிருந்து நேராக இரயில் நிலையத்திற்கு வந்தனர்.

அவ்வாயலுக்கு வந்த பின், அவள் கண்கள் தானாகவே, அவர்கள்  முதன் முதலாக அமர்ந்து பருகிய தேநீர் கடையைப் பார்த்துவிட்டு திரும்பியது..

அங்கேயும் பயணச்சீட்டைப் பெற்றுக் கொண்டு வாடிப்பட்டுக்குச் சென்றனர்.

அவர்கள் இருவரும் பயணித்த ரயிலாக இருந்தது. மேலும் அவன் ஞாபகத்தையே தூண்டியது.. அதை மீறி அவளால் இயல்பாக இருக்க முடிய வில்லை என்பது முகம் கலக்கத்தில் தெரிந்தது..

” ஏன் விஷ்ணுமா? உன் முகம் தெளிவு இல்லமா இருக்கு, என்னடா நினைச்சுட்டு இருக்கா? ” அவள் தலையைக் கோதியவாறு கேட்டார்.

” அப்பா, தாத்தா என்னை ஏத்துப்பாரா? நான் செத்துட்டேன்னு கருமாதி  பண்ணவர். இப்போ நான் திரும்பி வந்ததும் என்னை ஏத்துப்பாருன்னு நினைக்கிறீங்களா? இந்த உண்மை எல்லாம் தெரிஞ்சா,  உங்க மேலயும் கோபப்படுவார்… அவர் கிட்ட நீங்க, என்ன சொல்லப் போறீங்க? நான் வேணா, மதுரையில ஹாஸ்ட்டல்   தங்கிக் கட்டுமா? ” தன் தந்தைக்காக தாத்தாவை எண்ணிப் பயந்தாள்.

” விஷ்ணுமா, இன்னும் அப்பா மேல உனக்கு நம்பிக்கை வரலையா? அப்பா, உன் தாத்தா பேச்சைக் கேட்டு உனக்கு எதிரா பேசிடுவேணும், இல்லை அமைதியா நிப்பேனும்  நினைக்கிறீயா? ” அவளுடைய பயத்தினால், அவருக்கு அவ்வாறு சந்தேகம் எழ,

” இல்லபா, நான் அப்படி  நினைச்சு உங்க கிட்ட சொல்லல, உங்களையும் தாத்தா திட்டுவார்ன்ற பயம் தான்ப்பா. எனக்கு உங்க மேல நம்பிக்கை இல்லாம இல்லை நிறைய இருக்கு. ஆனா, என்னால தாத்தா உங்களை ஏதாவது சொல்லிடுவாரோ கொஞ்சம் கலக்கம் தான் . என்னால உங்களுக்கும் உங்க அப்பாக்கும் சண்டை வேணாம் பா” அவர் நெஞ்சில் சாய்ந்துக் கொள்ள, அவர் அமைதியாகவும் அதே நேரம் தீர்க்கமாகவும் முடிவினை எடுத்தார்..

வாடிப்பெட்டி ஸ்டேஷன் வந்ததும் இறங்கியவளுக்கு தோன்றிய முதல் எண்ணமோ,

‘இது மோசமான ஊராச்சே டா, சாகாமலே,  செத்துட்டான்னு சொல்லிக் கருமாதி வச்சு, சோத்தை ஆக்கி தின்ன ஊராச்சே… நாம வேற, முழுசா உயிரோட வந்துருக்கோம். நமக்கு படையல போடுருவனுங்களோ, இல்லை நம்மல படையல போட்டுருவனுங்களோ, விஷ்ணு நீ கால் வைக்கிற இடமெல்லாம் உனக்கு கன்னி வெடியா வைக்கிறனுங்களே! ‘ தனக்குள்ளே கிலிப் பிறக்க, எவ்வளவு நேரம் தான் அவளும் முகத்தில் காட்டாமல்  மறைத்து இருப்பாள். 

வீடு வர, வயிற்றில் புளி மற்றுமின்றி  அனைத்து மளிகைப் பொருட்களும் உள்ளே கரைந்துக் கொண்டு இருந்தது..

வண்டி கேட்டை தாண்டி வீட்டின் முன் நிற்க, “இறங்குமா” அவர் குரலில் தன்னிலைக்கு. வந்தவள், மெதுவா கதவை திறந்துக் கொண்டு இறங்கினாள்..

செத்துப்  போனவள் உயிரோடு வர, அங்கே வேலைச் செய்துக் கொண்டிருந்தவர்கள் அவளைக் கண்டு பயந்தனர்..

சிலருக்கு தெரியும், பெரிய  வீட்டில் இதெல்லாம் சாதாரணம் என்று, வேலை  செய்யும் அனைவரும் அங்கு நடக்கப் போகும் விபரீத்தைக் காண வந்த பார்வையாளர்கள் தான்.

” அம்மா, அக்கா வந்துட்டா….” பவ,ஜெய ஸ்ரீயின் குரலுக்கு மொத்த குடும்பமும் வாசலுக்கு வந்தது.

தன் குடும்பத்தைக் கண்டதும் அழுகை முட்டிக்கொண்டு வந்தது..  யாரும் அவளை  நெருங்கவும் இல்லை, உள்ள வா என்றும் அழைக்கவுமில்லை.. பார்த்தவாறே நின்றிருந்தனர்.

“ருக்கு, அம்மா…”  அவள் அழைப்பில் பிரிந்த ஏக்கம் இருக்க, வீட்டுப் பெரியவருக்குப்  பயந்து, அழுதவாறு  சிலைப்போலவே நின்றனர்.

” என்ன சசி நீயுமா? உன்  பிள்ளை, ஏக்கமா கூப்பிடுது, பார்த்துட்டு நிக்கிறீயே! இவங்களுக்கு தான்  பாசம், அன்பு, இல்ல, பெத்த உனக்கும் மா? வா சசி” என்றதும் தன் மகளைப் பார்த்ததும் ஓடிவந்துவர், அணைத்துக் கொண்டு அழுதார். தன் மகள் முழுதாய் வந்து நிற்பதைக் கண்ட தாயவளின் நெஞ்சில் பால்வார்க்க,முகம் முழுதும் முத்தமிட்டு அணைத்துக் கொண்டார்..

“அக்கா,….”என சாரதியும் ஓடிவந்து சேர்த்து அணைத்துக் கொண்டான்.. அங்கே  பாசப் போராட்டம் நிகழ, அதைக் கண்டு அலட்டிக்கொள்ளாமல் அங்கு வந்தார் வாசுதேவ் கிருஷ்ணன். தி கிரேட் மீசைக்காரர்.. அவரைத்தொடர்ந்து, அவர் ஈன்ற, மீசைகளும் வந்து நின்றனர்.

“பலராம… யாரு இது? எதுக்கு இங்க கூட்டிட்டு வந்துருக்க, நம்ம வீடு ஒன்னும் சத்திரம் இல்லை கண்டவங்களும்  இங்க வந்து தங்க…” குரலில் கடுமையைக் காட்டினார்.

‘ மீசைக்கு, என்னைத் தெரியாதாமா, நான்  யாரோவாமா, போட்டோ  போட்டு கறிச் சோறு திங்கும் போது தெரிலையா நான் யாருன்னு? போயா சால்ட் பேப்பர் தலையா’   அவரை மனத்தில்  மானசீகமாக திட்டினாள்..

” நம்ம வீடு, சத்திரம் இல்லை தான் பா. ஆனா, என் பொண்ணோட பொறந்த வீடு இது… அதான் அவ, இங்க வந்துருக்கா…” என்றார் தைரியத்தோடு,

தன் பேச்சுக்கு எதிர் பேச்சு பேசும் பலராமனைக் கண்டு அதிர்ந்தார்.. அவர் மட்டுமில்லை  பலராமனின் உடன் பிறப்புகளும் தான்.

” பொண்ணா? உன் பொண்ணு  செத்துப் போய் இரண்டு  மாசம் ஆச்சே! யாரை நீ பொண்ணுன்னு கூட்டிட்டு வந்துருக்க? “

” என் பொண்ணு எங்க ப்பா செத்தா, அவளை நீங்க தானே கொன்னீங்க..  செத்துடான்னு சொல்லி ஊருக்கே விருந்து போட்டிங்க… கொஞ்சம் கூட மனசாட்சி  இல்லாம…”  பற்களைக் கடித்தவாறே கத்தினார்..

” பலராமா, நம்ம அப்பாவையா எதிர்த்து பேசுற? என்னடா இது பழக்கம்? ” ஜெயராமனும்  கத்திக் கேட்க,

” புதுசா தான் அண்ணா, ஆனா ரொம்பனால பேசணும் மனசுல போட்டுவச்சுருந்தது ..என் பொண்ணு  திரும்ப வந்துருக்கா, அவளை வா ன்னு கூப்பிட கூட இங்க யாருக்கும் நெஞ்சுல   கொஞ்ச பாசம் கூட இல்லையா? ” அனைவரையும் பார்த்துக் கேட்க,

“அவ தான் யாரும் வேணாம்,  போனாளே!இப்ப மட்டும் எதுக்கு வந்தா? என்ன கூட்டிட்டு ஓடுனவன் நடுத் தெருவுல விட்டுட்டுப் போயிட்டானா? ” என கேட்கவும்,
பெண்களுக்கு எல்லாம் உடல் கூசிப் போனது என்றால், விஷ்ணுக்கு சொல்லவா வேணும் கோபம் கொண்டு வாய்திறக்க, அவளைத் தடுத்தார் பலராமன்..

” அண்ணா, அவ உனக்கும் பொண்ணு தான்  மறந்திடாத, வார்த்தை அளந்து பேசு… அவன் ஒன்னும் யார்கூடவோ ஓடிப்போகல உங்க கொடுமையால தான்,  நான், அவளை இங்கே இருந்தது போகச் சொன்னேன்.. நான் தான் அவள மும்பையில இருக்க என் தங்கச்சி வீட்டுக்கு அனுப்பிவச்சேன்..  போதுமா” என்றதும் பேரதிர்ச்சி தான் வீட்டில் உள்ளோருக்கு.

அனைவரும் அவரை கேள்வியாகப் பார்க்க, அவர் அனைத்து  உண்மையை கூறி முடித்தார்..

“துரோகி… பெத்த அப்பாகே எப்படிடா உனக்கு துரோகம் பண்ண தோணுச்சு… இத்தனை நாள் எங்களை ஏமாத்திட்டீயே டா…” ஜெயராமன், அவர் சட்டையை உலுக்க,” நானா ஏமாத்தினேன்? நானா துரோகம் பண்ணினேன்? இதோ இங்க   நிக்கிறாரே இவர் தான் நம்ம அம்மா ல இருந்து இதோ என் பொண்ணு வரைக்கும் துரோகம் பண்ணிருக்கார்..

இல்ல, அப்பா  பேச்சைத் தட்டாத புள்ளைய இருத்திருக்கோமே,  என்னைக்காவது அண்ணிக்கு நீ புருசனாவும, உன் பசங்களுக்கு நல்ல தகப்பனாவும் இருந்திருக்கியா?   உன் பொண்ணுக்கு, ஒரு காட்டு  மிராண்டியைக் கட்டிவச்சு அவ, சந்தோசத்தைப் பறிச்சாரே அது உனக்கு தெரியுமா? அடுத்து உன் புள்ளைக்கு பிடிக்காது வாழக்கையைக் கொடுத்து, கெடுக்கப் போறாரே .அது உனக்கு தெரியுமா?  பூம் பூம் மாடு மாதிரி தலையாட்டுறீயே, உன் பசங்க கிட்ட ஒரு  வார்த்தைப் பிடிச்சிருக்கா  கேட்டீயா?
தாத்தா… தாத்தா… உன் புள்ளை அவர் பின்னாடியே சுத்திவானே, இப்ப கேளு அவர் பண்றது சரியான்னு…” அவர் வார்த்தைகள் நெருப்பாய் விழுக  அர்ஜுனுக்கோ இப்போது தான் சுட்டது..

சொச்சம் மிச்சமாக இருக்கும் தாத்தாவின் தங்கையின் மகன் பேத்தி, வைரம்மாளைக்  கட்டிக் வைக்க முடிவெடுத்திருந்தார் மீசை.. அது அவனுக்குச் சுத்தமாகப் பிடிக்க வில்லை… இப்போது தான் தாத்தாவைப் பற்றித் தெரிய ஆரம்பித்தது…

அவன் கண்களில் கண்ணீர் தேங்கி நின்றது,’ ஏன்டா உனக்கு வந்தா ரத்தம் எனக்கு வந்தா தக்காளி சட்னியா, மீசைக்காரர் புத்தியை இப்பவாது தெரிஞ்சுகோ’  என்ற எண்ணம் வழியே தன் தமயனுக்கு  உரைத்தாள்.

முகம் கோபத்தில் இறுகி இருக்க, மற்றவர்கள் யாவரும்  தயக்கத்தோடு இருந்தனர். ” நான் இங்க வந்தது என்  பொண்ணைச் சேர்த்துக்கோங்க கெஞ்ச இல்லை… என் பொண்டாட்டியையும் என் மகனையும் கூட்டிட்டுப் போக தான்..” என்றார். விஷ்ணு அவர் கூறியத்தைக் கேட்டு அதிர்ந்தாள்.

ருக்கு பதற, ” என்னடா பேசுற, ராமா… நீ ஏன் டா இந்த  வீட்டை விட்டுப் போகணும்?  விஷ்ணுவ மன்னிப்பு கேக்கச் சொல்லு, அவர் அவளை ஏத்துப்பார்டா, அதை விட்டுட்டுப் போறேன் சொல்லாதடா..” மகனை எண்ணி அழுக,

” என் பொண்ணு எந்த தப்புமே பண்ணல அவ ஏன் மா மன்னிப்பு கேக்கணும்? திரும்ப நாங்க உள்ள வந்து, மறுபடியும் என் பொண்ணோட வாழ்க்கையை அழிக்க மாற்றார் என்னமா உறுதி… அவர் கெளவுரவத்தை விட்டுட்டு நாங்க தான் முக்கியம், எப்போ சொல்லுறாரோ அப்ப, நான்  இங்க என் குடும்பத்தைக் கூட்டிட்டு வரேன்  மா ” என்றவர்,தனது முடிவில் நிலையாக நின்றார்.தனது உடைமைகளை ஏற்கெனவே மகனிடம் சொல்லி எடுத்து வைக்கச் சொல்லிருந்தார். அவனும் எடுத்து வர, அங்கிருந்து நால்வரும் கிளம்பினார்கள்.

அவர்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாத நிலைமை அவ்வீட்டாருக்கு.. ருக்கு தான் ஒப்பாரி வைத்து விட்டார்.

மதுரைக்கு வந்தவர்கள், தன் நண்பரின் உதவியால் வாடகைக்குத் தங்கி இருந்தனர்..

ஒருவாரம் கடந்த நிலையில் அழகான காலையில், விஷ்ணுவின் கையில் பாலைத் திணித்துவிட்டுச்  சசி செல்ல, குடித்துக் கொண்டு  வாசலில் வந்து நின்றாள். தன் பக்கத்துவீட்டில் புதுசாக ஆள் வந்திருப்பதாக சசி கூற, யாரென அவள் வீட்டை எட்டிப் பார்க்க, உள்ளிருந்து  வந்தவனைக் கண்டதும் குடித்தப் பாலைத் துப்பினாள்…

அவனைக் கண்ட விழிகள் மீனைப் போல் அங்கும் இங்கும் நீந்தியது…

கொள்ளைத் தொடரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!