மயங்கினேன்.! கிறங்கினேன்.! 8

eiS8VZ63923-e6bda7bf

அத்தியாயம் 08

காந்திமதியிடம் பேசிய பிறகு மனது கோபத்தாலும் சிறிது நிம்மதியாலும் திளைத்திருந்தது.

அவனால் காந்திமதி பேசியதை அவ்வளவு சுலபமாக எடுத்து கொள்ள முடியவில்லை. தான் பெற்ற பெண்ணையே தன்னிடமிருந்து பெற காசு தர நினைக்கிறாரே அவர் எப்படிப்பட்ட ஜீவனாக இருக்க முடியும்.

நடந்தது என்னவென்றால் , நிச்சயம் முடிந்து அறைக்குள் வந்த வெற்றி சரியான நேரத்திற்காக காத்திருக்க , அப்போது கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தார் காந்திமதி.

இவர் எதற்காக இங்கே வந்திருக்கிறார் என்ற பார்வை பார்க்க

காந்திமதி அதனை புரிந்து கொண்டு ,” உனக்கு எவ்வளவு பணம் வேணும் சொல்லு . நான் தரேன்  ” என கராராக பேச

” ஞே ” என விழித்தான் வெற்றிமாறன்.

” என்ன பேசுறீங்க நீங்க.?” புரியாமல் அவன் வினவ

” என் பொண்ணை விட்டுட்டு ஓட உனக்கு எவ்வளவு பணம் வேணும்னு சொல்லு இதோ செக் கொண்டு வந்திருக்கேன் உடனே பணம் தந்திடுறேன் ” என பேரம் பேச

” மைண்ட் யூயர் வேர்ட்ஸ்.. என்ன பேசுறீங்க நீங்க. உங்க பொண்ணை பணத்துக்காக கல்யாண பண்ணிக்க போறேன்னு நினைக்கிறீங்களா ” என ஆக்ரோஷமாக கேட்டான்.

” ஆமாம் அதில் என்ன சந்தேகம் உனக்கு. எவ்வளவு பணம் வேணும்னு சொல்லு நான் தரேன். அதை வாங்கிட்டு மண்டபத்தை விட்டு ஓடிடு “

” அப்போ எவ்வளோ பணம் தருவீங்க. நான் இங்கே இருந்து வெளியே போறதுக்கு ” என வெற்றி இப்படி கேட்கவே காந்திமதிக்கு இதழில் சாதித்து விட்ட புன்னகை வந்தது.

” சபாஷ் .இது தான் எனக்கு வேணும். சரி நீயே சொல்லு உனக்கு எவ்வளவு வேணும்னு “

” உங்க பொண்ணு தானே அப்போ நீங்களே சொல்லுங்க.?” என கைக்கட்டி நின்றான் வெற்றிமாறன்.

” இருபது லட்சம் தரேன் போதுமா “

” அவ்வளவு தானா.?”

” ஐம்பது லட்சம் தரேன். இதுக்கு மேல முடியாது.”

” அப்போ சரி செக் எழுதி தாங்க..”

பணம் பத்தும் செய்யும் என்ற பழமொழிக்கு இணங்க இங்கே காந்திமதி வெற்றியிடம் செய்து காட்டினார்.

தான் நினைத்த விடயம் நடக்க போகிற சந்தோஷத்தில் ஐம்பது லட்சத்திற்கு செக் எழுதி கொடுத்தார் காந்திமதி.

இதனை வெளியே இருந்து கேட்ட அம்மு கண்ணீரோடு தன் அறைக்கு  ஓடிவிட்டாள்.

அதனை வாங்கிய வெற்றி , அந்த அறையே எதிரொலிக்கும் படி சிரித்தவன் ,” நீங்க இப்போ என்ன காரியம் செய்திருக்கீங்கன்னு தெரியுமா.?”

” நீங்க பெற்ற பெண்ணை விலை பேசியிருக்கீங்க.‌ இது அந்த பொண்ணுக்கு எவ்வளவு பெரிய அசிங்கம்னு தெரியுமா. ஒரு அம்மாவா இருந்திட்டு இப்படியா பண்ணுவீங்க. அசிங்கமா தெரியலை ” முகத்தை சாந்தமாக வைத்து கொண்டாலும் அவனது பேச்சில் அத்தனை கடுமை இருந்தது.

” டேய்…..” என கத்த

” அடங்குங்க அத்தையாரே.! ஏதோ நல்ல காரியத்தை பண்ணி , அதை நான் தப்பா கேட்ட மாதிரி சீன் போடுறீங்க “

” பணத்தை கையில வாங்கிட்டோம்னு திமிருல பேசுறியா ” என எகத்தாளமாக பேச

” பணம்… இந்த பணம் யாருக்கு வேணும் ” என அவர் கண்ணு முன்னாடியே துண்டு துண்டாக கிழித்து அவர்கள் முகத்தில் தூக்கி எறிந்தான்.

” இதை எடுத்துகிட்டு கிளம்புங்க. உங்கள மாதிரி ஒரு ஆளை நான் பார்த்ததே கிடையாது. பெத்த பொண்ணையே ச்சை . நீங்க ஒரு அம்மாவா இருக்க உங்களுக்கு தகுதியே கிடையாது.”என பொறுமையை இறுக்கி பிடித்து பேசினான்.

” இவ்வளவும் நான் என் பொண்ணுக்காக தான் செய்தேன். ” என அமைதியாக காந்திமதி சொல்ல

” என்ன.? ” என்று அதிர்ந்தான் வெற்றிமாறன்.

” ஆமா. என் பொண்ணுக்கு என்னோட அண்ணன் மகன் துரைபாண்டியை தான் பிடிச்சு இருந்தது. ஆனா அது அவளோட அப்பாக்கு பிடிக்கலை . அதான் உடனே உங்களோட சம்பந்தம் வச்சிக்கிட்டாரு. அவளுக்கு இந்த கல்யாணம் பிடிக்காததுனால தான் ஊருக்கே வராம இருந்தா. இதோ இன்னைக்கு காலையில தான் வந்தா.” என காந்திமதி கண்ணீர் விட்டு சொல்ல

அதனை கேட்ட வெற்றிக்கு முதலில் நம்புவதா வேண்டாமா என்று சிந்தித்தவன் தாயார் கூட சொன்னாரே பெண் இன்று காலையில் வந்தாள் என்று. அப்போ இவர் கூறுவது சரியாக இருக்குமோ.. பணம் கொடுத்து பெண்ணை வாங்க பார்த்தவராயிற்றே அப்போ பொய்யா கூட இருக்கலாம் என்று இருவேறு மனநிலையில் அவன் மனம் யோசித்தது.

” என்ன வேண்ணாலும் இருந்துட்டு போகடுமே . ஒரு பொண்ணை பெற்ற அம்மா மாதிரி நீங்க நடந்துக்கள . இப்படி ஒரு காரியத்தை நீங்க செய்திருக்கீன்னு தெரிஞ்சா உங்க பொண்ணோட மனசு எவ்வளோ வேதனைபடும். ஒரு விஷயத்தை செய்யும் போது அதை பல தரவை யோசிச்சு பண்ணுங்க ” என முகம் சுழியாமல் அறிவுரை சொல்லியவன் ,

” நானே இந்த கல்யாணத்தை எப்படி நிறுத்தன்னு தான் பார்த்ததுண்டு இருக்கேன். சோ இப்படி ஏதும் உங்களோட தரத்தை நீங்களே கீழ இறக்கிடாதீங்க ” என அவரை வெளியே அனுப்பி வைத்தான் வெற்றி.

வெளியே வந்த காந்திமதிக்கு தன்னையே அசிங்கம் படுத்திவிட்டானே என அவன் மீது வஞ்சம் வைத்தார்.

நினைவில் இருந்து மீண்டவன் அடுத்த ஒரு மணி நேரத்தில் , பெண்ணின் அறை முன்பு நின்று கதவை தட்ட , திறந்த பெண்ணின் முகத்தை கண்டு அதிர்ச்சியடைந்தான்.

” இனியா.. நீ எங்க இங்க.? ” அதிர்ச்சி மாறாமல் கேள்வி கேட்க

இனியா எதுவும் பேசாமல் அமைதியாக நின்றாள்.

” உனக்கு உங்க அத்தான் கூட கல்யாணம்னு தானே சொன்ன.? ஆனா இப்போ இங்க இருக்க.?”

” மணப்பொண்ணு அறையில நான் இருந்தேன்னா , அப்போ அந்த மணப்பெண் நான் தானு அர்த்தம் ” என்றாள் மெதுவான குரலில்..

” ஹோ காட்.. ஐம் சோ ஹேப்பி..எங்க அந்த பொண்ணு கிட்ட எடுத்து சொல்லி கல்யாணத்தை நிப்பாட்ட ரொம்ப நேரம் ஆகுமோன்னு நினைச்சேன். தேங் காட்‌ இப்போ அது நீயா போயிட்ட “

இனியாவின் முகத்தில் விரக்தியாக ஒரு சிரிப்பு மட்டுமே வந்தது. வேறெதுவும் அவள் பேசவில்லை என்பதை விட பேசும் நிலையில் அவள் இல்லை.

” உனக்கு பெருசா சொல்ல வேண்டிய எந்த அவசியமும் இல்லை. எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பமில்லை. இதை நீ எல்லார்கிட்டயும் உனக்கு விருப்பம் இல்லைன்னு சொல்லிட்டு இந்த கல்யாணத்தை நிப்பாட்டிடு “

“……..”

” நீயா நிப்பாட்டின்னா தான் ‌இந்த கல்யாணம் நிக்கும்..”

“…..”

” என்னால இந்த கல்யாணத்தை நிறுத்த முடியாது .‌ அது எங்க அப்பா என்னை ப்ளாக் மெயில் பண்ணி வச்சிருக்காரு. அவரை மீறி என்னால எதுவும் செய்ய முடியலை. அதுக்காக இந்த கல்யாணத்தை பண்ணிக்கவும் விருப்பமில்லை ” என்றவனின் பேச்சில் மனதால் அடிப்பட்டு போனாள் பெண்ணவள்.

அவன் மேல் அவள் வைத்திருந்த மலைப்போல் அன்பினை சிறுக சிறுக உடைத்தெறிந்து கொண்டிருந்தான்.

” ப்ளிஸ் , இந்த கல்யாணத்தை எப்படியாவது நிறுத்திடு டா. நான் என்னோட இசையை தேடி கண்டு பிடிச்சு அவ கூட சந்தோஷமான ஒரு வாழ்க்கை வாழனும் ” என்று அவன் பேசிக்கொண்டே போக

இனியா அமைதியாக அனைத்தையும் கேட்டாள்.

” இந்த கல்யாணத்தை நிறுத்திடுவ தானே ” என அவளை பார்க்க

அவளோ கண்களில் இருந்து கண்ணீர் இப்பவா அப்பவா என வெளியே வர காத்திருந்தது.

அவள் மௌனமாக இருக்கவே ,” நிறுத்திடுவ தானே. உன்னால எப்படி வேற ஒரு பொண்ணை காதலிக்கிற பையனை கல்யாணம் செய்து கொள்ள முடியும் சொல்லு ” என அவளின் மனசை கரைக்கும் நோக்கோடு பேசினான்.

” நான் நிறுத்திடுறேன்..” என்றாள் பட்டென்று..

அதில் சந்தோஷம் கொண்டவன் அவளை அணைத்து விடுவித்து தனது நன்றியை கூறி வெளியேற பார்த்தவன் திரும்பி ,

” நான் தான் உனக்கான மாப்பிள்ளைன்னு உனக்கு முன்னாடியே தெரியுமா என்ன “

” ம்ம் தெரியும் . தெரிஞ்சு தான் பயமில்லாமல் வண்டியில் வந்தேன் ” என்றவள் திரும்பி நின்றுக்கொண்டாள்.

” ஓகே ஃபைன். நான் கிளம்புறேன் கதவை சாத்திக்கோ ” என்று சென்றுவிட்டாள்.

அவன் சென்றதும் கத்தி அழுக வேண்டும் போல் இருந்தது. ஆனால் அது அவளால் முடியவில்லை. இருக்கும் இடம் கருதி அழுகையை இதழ்கள் கடித்து வரவிடாமல் செய்தாள்.

இருவருமே அடுத்த நாளின் விடியலை நோக்கி காத்திருக்க , அவர்களை சோதிக்காமல் அந்த விடியல் விடிந்தது.

எப்படியும் திருமணத்தை அவள் நிறுத்திவிடுவால் என்ற நம்பிக்கையில் , திருமணத்திற்காக  தன்னை தயார்படுத்திக் கொள்ள ஆரம்பித்தான்.

அந்த நேரம் பார்த்து ” மச்சான் ” என ஓடி வந்து கட்டிக் கொண்டான் கௌதம்.

” அசிங்கம் பண்ணாத மச்சி. என்னைய விடு ” என்று அவனை அணைத்து விடுவித்தான்.

” என்ன இனி மேல் உன்ன நினைச்ச நேரத்துக்கு கடிக்க முடியுமா சொல்லு “

” ஏன் உன் கைய தானம் பண்ண போறீயா என்ன.?”

” அட ச்சீ ! நல்ல நாள் அதுவுமா என்ன பேசுற டா நீ .பண்ணி பையலே “

” அப்புறம் ஏன் கட்டிப்பிடிக்க முடியாதுன்னு சொன்ன “

” அதான் மச்சான் , இனி கட்டிக்க கடிக்க என எல்லாத்துக்கும் தான் என் தங்கச்சி இருப்பாளே. இனிமே பாஸ் பிசி தான் போ ” என கிண்டலடிக்க

‘அய்யோ இந்த கொசு தொல்லை தாங்களையே ‘ என நினைத்தவன் வெளியில் ” பாப்போம்! பாப்போம் ! இப்போ போய் முதல கிளம்பு” என்று அவனை துரத்தி விட்டு கல்யாணத்திற்கு தயாரானான்.

அப்போது உள்ளே வந்த அவனது தந்தை பரமசிவம் ,” என்ன கல்யாணம் நடக்காதுன்னு கனவு கண்டுட்டு இருக்கீயா மகனே “

” எனக்கு பிடிச்சவளோட நடக்க போகும் நாளையே எண்ணி தான் கனவு காணுறேன் ப்பா ” என்றான் அவனும் தந்தைக்கு நிகராக

“உன்னோட கல்யாணம் நிற்கும் நீ ஆசைப்பட்ட பெண்ணோட கல்யாணம் பண்ணிக்கலாம்னு கனவுள கூட நினைக்காத. ஏன்னா , உன்னோட வாழ்க்கைக்கு அர்த்தம் அம்மு தான் “

” சரி டா மகனே .நீ ஜோரா கிளம்பு நான் போய் மற்ற வேலைகள் எல்லாம் பார்க்கிறேன் ” என்று நகர்ந்து விட்டார் பெரியவர்.

நல்ல நேரம் ஆரம்பமாகியது. பரமசிவத்திற்கு தன் மகனின் திருமணத்தை பாரம்பரியமாக பண்ண வேண்டும் என்ற ஆசை இருந்ததால் , அதை சம்பந்தி வீட்டாரிடம் சொல்ல அவர்களும் அதற்கு சரி என்று ஒத்துக் கொண்டனர்.

சிறிது நேரத்திலே மகனை ஐயர் அழைக்க , அவனும் பொம்மை போல் வந்தான். கல்யாணம் நிற்கும் என்ற நம்பிக்கையுடன்..

முதலில் மணமக்களுக்கான கிரியைகள் தொடங்கப்பட்டன.

மணமேடையின் முன் மாப்பிள்ளையான வெற்றியை கிழக்கு நோக்கி உட்கார வைத்து அடுத்து வெற்றியின் வட பக்கத்தில் பரமசிவத்தை அமர வைத்து பக்கவாட்டில் விஜயாவை நிற்க வைத்தார் ஐயர்.

ஐயர் மந்திரங்களை சொல்ல பரமசிவம் சொல் படியே விநாயகர் பூஜை செய்து பஞ்ச கவ்வியம் இருவருமாக வாங்கி அருந்தி புனிதப் படுத்தி கொண்டார்கள்.

அதேப்போல் வெற்றியும்  விநாயகரை வணங்கி தாய், தந்தையிடம் ஆசி பெற்றான். அதன் பின் அவனுக்கான காப்பை வலது கையில் கட்டிவிட்டு அவனுக்கான முகூர்த்த வேஷ்டி சட்டையை மஞ்சள் தடவி அணிந்து வருமாறு ஐயர் கொடுத்து விட , அவனும் கடமைக்காக வாங்கி உள்ளே சென்றான் கௌதமோடு.

இவனுக்கு அடுத்து இனியாவிற்கும் செய்ய , அவளுக்கான காப்பை இடது கையில் கட்டிவிட்டு அவளுக்கான உடையை கொடுத்து விட்டார்.

முகூர்த்த  ஆடையை அணிய வைத்து வெற்றியை அழைத்து வர , அவனும் அவர்கள் சொல்லும் அனைத்தையும் செய்தான். அவனுக்கு இனியாவின் மீது நம்பிக்கை தும்பிக்கை அளவிற்கு இருந்தது.

திருவிளக்குகள் முன்னால் ஐந்து நுனி வாழை இலைகள் விரித்து , மத்தியில் ஒரு இலையும் கிழக்கு மேற்கு தெற்கு வடக்கு பக்கமாக நான்கும் என ஐந்து இலைகளை போட்டு தண்ணீர் தெளித்து ஐந்து இலைகளின் மீதும் பொங்கலிட்டு வைத்துள்ள சாதத்தை படைத்தனர். இத்துடன் வெல்லம் நெய் வாழைப்பழம், தேங்காய் துண்டு ஆகிய பொருள்களையும் இட்டு பஞ்ச தேவதைகளான சிவன், விஷ்ணு, இந்திரன்,சந்திரன் ஆகியோருக்கு வெற்றியின் வீட்டாரை சேர்ந்த அவன் அத்தை  பூஜை செய்தார்.

அதன்பிறகு வெற்றியின் வலது கையின் மேல் வெற்றிலை பாக்கு, பழம் வைத்து அவனின் கையைப்பிடித்து கையின் மேல் வைத்துள்ள தாம்பூலம் மீது நீர் விட்டுக் கொண்டே மண மேடையை வலம் வந்தவர் , இலைகளின் மேல் படைத்த படைப்பு முன்பாக வணங்கி முடித்தார் அவனின் அத்தை.

அதன்பின் , வெற்றியை மணமேடையில் வடக்கு பக்கமாக அமர வைத்தனர்.

கௌதமோ அனைத்தையும் ஒரிடத்தில் அமர்ந்த படி கவனிக்கலானான். பிற்காலத்தில் தான் இதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில்.

அவனிடம் யார் சென்று சொல்வது , இது தான் நம் இந்து முறை கல்யாணம் என்று. இப்போது‌ எல்லாம் அனைத்து சடங்குகளும் நடக்கிறதில்லை. அவரவர்களுக்கு ஏற்ற மாதிரி திருமணத்தை நடத்தி கொள்கின்றனர். பாரம்பரியம் என்பது சிறிது சிறிதாக மறைய தொடங்கியது.

  வெற்றி வந்தமர்ந்த சிறிது நேரத்திலே பெண்ணை அழைத்து வந்தனர். அவளையே ஒரு கெஞ்சல் பார்வை பார்த்து வைக்க , அவளோ குனிந்த தலை நிமிராமல் நடந்து வந்தாள்.

வெற்றிக்கு நிமிடங்கள் செல்ல செல்ல கலக்கமாக இருந்தது. இத்திருமணம் நிற்குமா என்று.?

திருமணம் நிற்கும்படியான ஒரு நிகழ்வும் இந்த நொடி வரை நடக்கவில்லையே. இதில் காந்திமதி வேற அவனை உறுத்து விழித்து கொண்டிருந்தார்.

துரைப்பாண்டியோ எதுவும் செய்ய முடியாத நிலையில் ஓரமாக நின்று வேடிக்கை பார்த்தான்.

அவனுக்கு இனியாவை தாரை வார்த்து கொடுக்க பிடிக்கவில்லை என்றாலும் அமைதியாக இருக்க வேண்டிய சூழ்நிலையில் தள்ளப்பட்டிருந்தான்.

தூரத்தில் இருந்த படியே வெற்றியை எவ்வளவு முடியுமோ அவ்வளவு முறைக்க செய்தான்.

தேவதை போல் தன் பக்கத்தில் வந்தமர்ந்த இனியாவை பார்த்தவன் , மெதுவான குரலில் அவளிடம் கிசுகிசுத்தான்.

” ஏய் ! எப்போ தான் கல்யாணத்தை நிறுத்த போற நீ.?” என்க அவளோ அவன் சொன்னது கேட்காதது போல அமைதியாக இருந்தாள்.

” ஏன் இனியா அமைதியா இருக்க.? ப்ளிஸ் டூ சம்திங் பா. டைம் போயிட்டே இருக்கு இன்னும் கொஞ்ச நேரத்துல தாலி கட்ட சொல்லிடுவாங்க “

அவள் எதுவும் பேசவில்லை அமைதியாக ஐயர் சொல்லும் மந்திரங்களை திரும்ப சொல்லிக் கொண்டிருந்தாள்.

இனியாவின் அமைதி வெற்றிக்கு புளியை கரைத்து. தனது இசை இனி தனக்கில்லையா என்று பயந்து போனான்.

” அய்யோ கடவுளே என்னை காப்பாற்று ” என மனதால் வேண்டிய படி இருக்க , அதற்குள் அந்த பொன்தாலி அனைவராலும் ஆசிர்வதிக்கப்பட்டு வந்திருந்தது.

ஐயர் மந்திரங்கள் ஓதி , பொன்தாலியை அனைவரிடமும் காட்டி மாப்பிள்ளையிடம் நீட்டினார்.

அவனோ இனியாவை கோபம் கொப்பளிக்க பார்த்தவன் , அதை வாங்காமல் அமைதியாக அமர்ந்திருக்க , பக்கத்தில் இருந்த பரமசிவம் ” வாங்கு ” என மெதுவான குரலில் அதட்டலிட

அவரை முறைத்தபடி வாங்கியவன் , இனியாவின் சங்கு கழுத்தருகில் கொண்டு வந்தவன் ,” உன்னை சும்மா விடமாட்டேன்.  எனக்கு பண்ணின துரோகத்துக்கு நீ அனுபவிப்ப . இனி இந்த வெற்றியை வேற மாதிரி பார்ப்ப ” என கோபமாக மொழிய , கலங்கிய விழிகளோடு வெற்றியை நோக்கினாள் பெண்.

அவனும் அவளை பார்த்தபடியே மூன்று முடிச்சிட்டு தன்னில் சரிபாதியாகினான்.

உதவிக்காக தொடங்கிய இவர்கள் பயணமானது , இன்று உயிர் விடும் வரை ஒருவருக்கொருவர் துணை என்பதுபோல் ஆரம்பமானது.

இதில் இருவரும் கடைசிவரை பயணிப்பார்க்களா.? இல்லையா.?