மயங்கினேன் பொன்மானிலே – 14

பொன்மானிலே _BG-39b43ee5

மயங்கினேன் பொன்மானிலே – 14

அத்தியாயம் – 14

“என் மேல கோபம்னா என்னை அடிச்சிருக்கலாமே பங்காரு. ஏன் பங்காரு, அந்த சின்ன பொண்ணை அடித்த? சொல்லு பங்காரு” வம்சி கேட்க, மிருதுளா எதுவும் பேசவில்லை.

மடமடவென்று அறைக்குள் சென்றாள் தன் பெட்டியை எடுத்து துணிகளை அடுக்கினாள்.

“பங்காரு, இப்ப என்ன நடந்திருச்சுன்னு நீ பெட்டியை எடுக்கற?” வம்சி அவளை தோள் தொட்டு தன் பக்கம் திருப்பி புரியாமல் கேட்டான்.

அவள் அவன் கைகளை உதறிவிட்டு, மீண்டும் துணியை அடுக்கினாள்.  

“என் கேள்விக்கு பதில் சொல்லாமல், நீ இங்க இருந்து போக முடியாது பங்காரு? நான் உனக்காகத் தானே பங்காரு எல்லாரையும் எதிர்த்து நிற்கறேன். உனக்கு என்ன தான் பிரச்சனை பங்காரு ?” அவன் கோபத்தில் முகத்தை சுளித்தான்.

“உங்களுக்கு உண்மையிலையே தெரியலையா?” அவள் கேட்க, “சத்தியமா தெரியலை பங்காரு” அவன் பரிதாபமாக சொன்னான்.

“என்ன நடக்கணும்? என் குழந்தை…” அவள் ஆரம்பிக்க, “அம்மா, தாயே அந்த விஷயத்தை இப்பதைக்கு விடு. இன்னைக்கு என்ன பிரச்சனை? அதை மட்டும் சொல்லு” அவன் சீற,

“சரி குழந்தை பஞ்சாயத்தை அப்புறம் வச்சிப்போம். நீங்க நான் சொல்றதை நம்பலை. என் மேல் நம்பிக்கை இல்லாத மனுஷன் கூட நான் எதுக்கு வாழனும்?” அவள் கறாராக கேட்க, “நான் எப்ப பங்காரு உன்னை நம்பாமல் இருந்தேன்?” அவன் ஒன்றும் புரியாமல், தன் தாடையை தடவினான்.

“நீ ங்க கேட்டதுக்கு என்ன அர்த்தம்?” மிருதுளா இப்பொழுது மெத்தையில் அமர்ந்து கொண்டு கேட்டாள்.

“நான் என்ன கேட்டேன்?” சத்தமாக சிந்தித்துவிட்டு, “ஓ…என் மேல உள்ள கோபத்தில், ஏன் சிந்துவை அடிச்சன்னு கேட்டதா?” அவன் அவளை பார்த்து புன்னகைத்தான்.

‘இது என்ன ஆளை மயக்கும் புன்னகை?’ அவள் முறைக்க, “நீ என் மேல உள்ள கோபத்தில் தானே அவளை அடிச்ச?” அவன் மீண்டும் கேட்க, “லூசா நீங்க? அவ தப்பு செஞ்சா நான் அடிச்சேன்.” அவள் கோபமாக கூறினாள்.

“ம்… சிந்து விஷயத்தில் நீ சொல்றது சரி. எனக்கும் அந்த சந்தேகம் இருக்கு” அவன் கூற, ‘அப்ப. இவங்க நான் சொன்னதை நம்பாமல் இல்லையா?’ அவள் இப்பொழுது அவனை யோசனையாக பார்த்தாள்.

அவர்கள் பிரச்சனையை தற்காலிகமாக ஒதுக்கி வைத்துவிட்டு, “உங்களுக்கும் சந்தேகமா?” அவள் ஆச்சரியமாக கேட்டாள்.

“ம்… எனக்கா வரலை பங்காரு. ஆனால், அவள் பிரௌசிங் ஹிஸ்டரி டெலிட் பண்ணான்னு சொன்னியே… அதுக்கு அப்புறம்…” அவன் இரு கைகளையும் பின் பக்கமாக ஊன்றி, அவன் பேச்சை நிறுத்த, “நீங்க கூட என்னை திட்டினீங்களே?” அவள் நியாபகமாக கேட்க, அவன் அவளை முறைத்து பார்த்தான்.

“நான் உன்னை அப்படியே திட்டிட்டேன்…நீயும் பயந்துட்ட?” அவன் எகிற, “நம்ம சண்டையை அப்புறம் வச்சிப்போம். சிந்து விஷயம்” அவள் தெரிந்து கொள்ளும் நோக்கில் கேட்டாள்.

“நீ சொன்னதும் உன்னை மறுத்து பேசினாலும், நீ காரணம் இல்லாமல் சொல்ல மாட்டியேன்னு, நான் அக்கா வீட்டிலும் அவளை கவனிச்சேன் பங்காரு… அங்கையும் பிரௌசிங் ஹிஸ்டரி பார்த்தேன் டெலிட் ஆகிருந்தது.நான் ரொம்ப சீரியஸா எடுத்துக்கலை பங்காரு. அவளுக்கு அப்படி ஒரு பழக்கம் இருக்கலாமில்லை?” அவன் யோசனையோடு நிறுத்தினான்.

‘அப்ப இவங்க நான் சொன்னதை நம்பாமல் இல்லை…’ அவள் கோபம் சற்று வடிய ஆரம்பித்தது.

“அவ கிட்ட இப்ப இரண்டு ஐஃபோன் இருக்கு. பழசு உடைஞ்சிருச்சுனு சொல்லி தானே, அவ புதுசு வாங்கினா?” அவள் கேட்க, அவன் நெற்றி சுருங்கியது.

“அவ அந்த ஐஃபோனை போர்வைக்குள் ஒளிச்சு வச்சிருந்தா” அவள் படபடக்க,

“…” அவனிடம் மௌனம்.

“நான் இதை கேட்டதுக்கு சிந்து ரொம்ப பேசினா, அதுக்கு தான் அவளை அடிச்சேன். என்னவோ, நான் உங்க மேல உள்ள கோபத்தில் தான் அவளை அடிச்சேன்னு சொல்றீங்க?” அவள் சிடுசிடுக்க,

“இப்பவும் நான் சொல்றேன் பங்காரு. நீ என் மேல் உள்ள கோபத்தில் தான் சிந்துவை அடிச்சிருக்க” அவன் கூற, அவள் அவனை இப்பொழுது புரியாமல் பார்த்தான்.

“சிந்துவை அடிக்க நமக்கு என்ன உரிமை இருக்கு?” அவன் கேட்க, “ஐஃபோன் வாங்கி கொடுக்க மட்டும் உரிமை இருக்கா?” அவள் இப்பொழுது கடுப்பாக கேட்டாள்.

“வாங்கி கொடுத்தா அடிக்கலாமா பங்காரு?” அவன் கேட்க, அவளிடம் இப்பொழுது மௌனம்.

“நான் அக்காவுக்காக செய்யறேன். செய்றதுக்கு மட்டும் தான் உரிமை இருக்கு. அவங்க வீட்டில் உரிமை கொண்டாட நமக்கு உரிமை இல்லை” அவன் கூற, ‘இதில் எல்லாம் தெளிவு தான். இப்படிப்பட்ட வீட்டுக்காக என் குழந்தையை கொல்லணுமா?’ அவள் அவனை வெறுப்போடு பார்த்தாள்.

“நீ என்கிட்டே சொல்லிருக்கணும். இல்லை, அக்கா கிட்ட சொல்லிருக்கணும்” அவன் கூற, “உடனே அக்காவும் தம்பியும் நான் சொல்றதை கேட்டுட்டு தான் மறுவேலை பார்ப்பீங்க” அவள் நக்கலாக கூறினாள்.

“நாங்க கேட்கலைன்னா, நீ அடிப்பியா? உங்க வீட்டில் யாரவது சொந்தத்தில் இருக்கிற பெண்ணை நீ இப்படி அடிப்பியா? உங்க சொந்தகாரங்க உன்னை சும்மா விடுவாங்களா?” அவன் இப்பொழுது அவள் முகம் நிமிர்த்தி கேட்டான்.

அவள் முகத்தை குனிந்து கொள்ள, “நான் இப்பவும் சொல்றேன் பங்காரு. உனக்கு என் மேல் கோபம். அந்த கோபத்தில் அவளை அடிச்சிட்ட… இல்லை, சிந்து என்னை சொல்லி உன்னை ஏதாவது சொல்லிருக்கணும்” அவன் யூகிக்க, அவள் விழிகள் தான் அகப்பட்டு கொண்டதை வெளிப்படுத்த,

“அப்ப, சிந்து எதுவோ சொல்லிருக்கா?” அவன் புருவத்தை உயர்த்த, அவள் எதுவும் பதில் கூறவில்லை.

“நீ என் கிட்ட சொல்ல மாட்ட பங்காரு. ஏன் தெரியுமா? நீ என்னை நம்ப மாட்ட” அவன் கூற, அவள் இப்பொழுது விழித்தாள்.

“நான் அப்படி என்ன பெருசா தப்பு பண்ணிட்டேன்? உடனே, குழந்தைன்னு ஆரம்பிக்காத…” அவன் சற்று நிறுத்தி, “நான் தான் தெரியாம பண்ணிட்டேன்னு சொல்றேனில்லை? உன்னை அது இப்படி பாதிக்கும்னு நான் நினைக்கலை. அது தான் தெரியாமல் பண்ணிட்டேன்” அவன் கூற, “இது என்ன சட்டி பானையை உடைக்குற விஷயமா? தெரியாமல் பண்ணிட்டேன்னு மன்னிப்பு கேட்குறதுக்கு?” அவள் முணுமுணுத்தாள்.

“நான் யார் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கணும்? சொல்லு. உண்மையில் மனம் வருந்தி எல்லாம் நான் மன்னிப்பு கேட்க மாட்டேன். ஆனால், உனக்காக கேட்பேன். உன் வருத்தத்தை அது தான் சரி செய்யுமுன்னா நான் கேட்குறேன். உன் காலில் விழணுமா? இல்லை உங்க அம்மா, அப்பா காலிலா?” அவன் இப்பொழுது கடுப்பாக கேட்டான்.

“ஆனால், நீ எப்ப என்னை புரிஞ்சிப்ப பங்காரு? நான் உன்னை சந்தேக படுற ஆளா? நான் சாதாரணமா, என் மேல் உள்ள கோபத்தில் தான் சிந்துவை அடிச்சன்னு சொன்னேன். அதுக்கு நான் உன்னை நம்பாத மாதிரி ரியாக்ட் பண்ற? அப்படி பெட்டியை தூக்கிட்டு கிளம்புற?” அவன் கண்களை சுருக்கினான்.

அவள் எதுவும் பேசவில்லை. “நான் உன்னை முழுசா நம்பறேன். நீ செய்த விதம் தான் தப்புனு சொல்றேன். ஆனால், நீ என்னை நம்பலை.” அவன் கோபமாக கூறினான்.  

“ஏன் தெரியுமா? உன் மனசில் வம்சி கெட்டவன்… கெட்டவன்… கெட்டவன்… அப்படியே பதிஞ்சிருச்சு.” அவன் இப்பொழுது குரலை உயர்த்தினான்.  

“நான் என்ன விதத்தில் கெட்டவன்? சொல்லு, ஒரு காரணம் சொல்லு…” அவன் கேட்க, அவள் பேசவில்லை.

“என்னை எதிர்த்து ஒரு காரணம் சொல்லேன். நீ ஏன் பங்காரு என்னை நம்ப மாட்டேங்குற? நீ சொன்னதை நான் உடனே கேட்கலைன்னா?” எங்கோ திரும்பி இருந்த அவளை தன் பக்கம் திருப்பி கேட்டான்.

“எந்த புருஷன் இந்த உலகத்தில், வாம்மா பொண்டாடி நீ சொல்றதை கேட்க தான் நான் காத்திருக்கேன்னு சொல்லுவான். அதெல்லாம் இல்லைனு ஒரு நாள் கடுப்பில் சொல்ல கூடாதா?” அவன் கேட்க, ‘இது எப்படி எல்லாமே அவங்க செய்றது சரி மாதிரியே பேசுறாங்க?’ அவள் அவனை யோசனையாக பார்த்தாள்.

“நான் உன்னை நம்புவேன். நீ சொல்றதை சந்தேகப்படுற கேவலமான புத்தி எனக்கு கிடையாது” அவன் வேகமாக எழுந்து அறையை விட்டு வெளியே சென்றான்.

‘நான் தான் தப்பா?’ அவளுள் யோசனை பரவ, ‘மிருதுளா… இல்லை… இப்படியே பேசி பேசி உன்னை குழப்பி விட்டிருவாங்க’ அவள் அவன் பின்னோடு சென்றாள்.

“உங்க அக்கா பேசினதெல்லாம் சரியா?” அவள் கேட்க, “தப்புத்தான் பங்காரு.” அவன் அழுத்தமாக கூறினான்.

“அக்கா, ஏதோ தெரியாம பேசிட்டாங்க” அவன் ஆரம்பிக்க, “உங்க அக்கா தெரியாம பேசுவாங்க. ஆனால், நான் எல்லாமே தெரிஞ்சே செய்யறேன். அப்படி தானே?” அவள் கேட்க,

“பங்காரு…” அவன் அவளை வேகமாக இழுக்க, அவள் அவன் மீது மோதி நின்றாள்.

“ஏன் பங்காரு என்னை கோபப்படுத்துற? நான் இன்னைக்கு அங்க நடந்த சம்பவத்துக்கு அப்புறமும் இன்னைக்கு பங்காருவை வருத்தப்படுத்த கூடாதுனு தான் நான் நினைச்சேன். ஆனால், நீ நான் கேட்டதை கூட சரியா புரிஞ்சிக்கலை” அவன் கூற, அவள் விலகி நின்று கொண்டாள்.

“நீ அக்காவை தப்பாவே பார்க்குற” அவன் கூற, “எங்க அக்கா உன்னை என்ன பண்ணா? நம்ம வீட்டுக்கு வந்து உன்னை அதிகாரம் செய்தாளா? இல்லை திட்டீனாங்களா? இல்லை, உன்னை ஊரு உலகத்தில் எங்கையாவது விட்டுக்கொடுத்து பேசினாங்களா? என்னைக்காவது என்கிட்டே ஏதாவது சொல்லிருப்பா… நானும் அதை மறைத்ததில்லையே… அதை அப்படியே உன்கிட்ட சொல்லிருப்பேன்… உனக்கு ஏன் என் அக்கா மேல இவ்வளவு வெறுப்பு?” அவன் கேட்க,  

“உங்க அக்கா எனக்கு பிரச்சனை இல்லை. நீங்க தான் எனக்கு பிரச்சனை. எப்பப்பாரு… அக்கா அக்கான்னு பேசியே, என்னை சாவடிக்கறீங்க. உங்க வாயால் அக்கா அக்கானு கேட்டாலே எனக்கு உடம்பெல்லாம் எரியுது.” அவள் இப்பொழுது கோபமாக கத்தினாள்.

அவன் அவளை சற்று அதிர்ச்சியாக பார்த்தான்.

“நான் பங்காருனு உன் பெயரை சொல்ற அவளுக்கு என் அக்கா பெயரை சொல்றதில்லையே பங்காரு.” அவன் பரிதவிப்போடு கேட்க,

“சொல்றதில்லை… ஆனால், நம்ம வீட்டில் சின்ன விஷயம் நடந்தாலும், உங்க அக்காவோட தலையீடு இருக்கு.” அவள் கூற, “அக்கா, என்னைக்கு எதை சொன்னாங்க?” அவன் கோபமாகவே கேட்டான்.

“இது தான்… இதை தான் சொல்றேன்… உங்க அக்கா விஷயம் வந்தா உங்க குரல் உயரும்… உங்க பங்காரு காணமால் போய்டுவா… உங்க ரத்தம், நாடி, இதய துடிப்பு எல்லாம் உங்க அக்காதான்…” அவள் கூற,

“பங்காரு…” அவன் வருத்தத்தோடு அழைத்தான்.

“நான் எது செய்தாலும், உங்க ரெண்டு பேருக்கும் ஒண்ணா தான் செய்யறேன்…” அவன் கூற, அவள் அவனை அருவருப்பாக பார்த்தாள்.

“எங்க அக்காவுக்கு ஏதாவது வாங்கினால், நான் அதை உனக்கு வாங்காமல் வந்ததே இல்லை…” அவன் கூற, “எக்ஸாக்ட்டலி… எனக்கு எதாவது வாங்கிட்டு வந்தாலும், உங்க அக்காவுக்கு நீங்க வாங்காமல் வந்ததில்லை…” அவள் கூற, இரண்டுக்கும் என்ன வித்தியாசம் அவன் புரியாமல் அவளை பார்த்தான்.

“நாம எங்கையாவது வெளிய போகணுமுன்னா, வீட்டில் பெரியவங்க இருந்தா சொல்லிட்டு போகலாம். இல்லை, கேட்டுட்டு போகலாம். ஆனால், இங்க உங்க அக்காவுக்கோ, அக்கா பிள்ளைக்கோ, இல்லை உங்க மாமாவுக்கோ வேலை இல்லன்னா தான் நாம வெளிய போக முடியும்.” அவள் கூற,

‘இதுவெல்லாம் நாட்டில் ஒரு பிரச்சனையா?’ என்பது போல் அவளை பார்த்தான் வம்சி.

“நான் உங்க அக்கா வீட்டை பத்தி எதுவும் தப்பா பேசலை. உங்க அக்கா நல்லவங்கன்னு வெச்சிப்போம்.” அவள் கூற, “வச்சிப்போமா?” அவன் அவளை உற்று பார்க்க,  

“சரி… நல்லவங்க… சிந்து சின்ன பொண்ணு. உங்க மாமாவும், உங்க அக்கா மாமியாரும் காரியவாதி… நான் அதையும் தப்புன்னு சொல்லலை. இன்னைக்கு உலகத்தில் பாதி பேர் அப்படி தான் இருக்காங்க. அப்ப பிரச்சனை எங்க இருக்கு?” மிருதுளா அவன் முன் வந்து கோபமாக கேட்டாள்.

பேச்சு சுவாரஸ்யத்தில் அவள் அவனை நெருங்கியதை அவள் கவனிக்கவில்லை.

அவள் அவன் அருகாமையை ரசித்தான். அவள் சுவாசக்காற்றை சுவாசித்தான்.

“பங்காரு…” அவன் ஆழமான குரலில் அழைத்தான்.

“நானும் நீ சொல்றதை தான் சொல்றேன் பங்காரு. அக்கா, பாவம்… அவங்க வீட்டில் எல்லாரும் சராசரி மனிதர்கள். அதை வைத்து நாம சண்டை போட வேண்டாம். அவங்க செயலை பார்த்து நானும் கோபப்பட்டிருக்கேன். ஆனால், எனக்கும் நிதர்சனம் இப்ப புரியுது. ஆனால், நீ சின்ன பொண்ணு இல்லையா? எல்லாரையும் நியாயமா இருக்கணும்னு உலகம் தெரியாமல் நினைக்குற” அவன் கூற, அவள் அவனை மௌனமாக பார்த்தாள்.

“தப்பு உன்கிட்ட தான் பங்காரு. நீ தான் எல்லாத்தையும் தப்பா பார்க்குற.” அவன் அவள் முடியை ஒதுக்கி மென்மையாக பேசி புரிய வைக்க முயன்றான்.

மிருதுளாவின் கோபம் ரத்தம் , நாடி , இதயத் துடிப்பு என்று ஏற அவள் நெஞ்சம் மேலும் கீழும் வேகவேகமாக ஏறி இறங்கியது.

‘மிருதுளா… பொறுமை… பொறுமை…’ அவள் நிதானிக்க, “நான் ஒன்னு சொல்லட்டுமா பங்காரு?” அவன் கேட்க, அவள் அவனை கூர்மையாக பார்த்தாள்.

“இன்றைய பெண்கள் பிரச்சனை என்ன தெரியுமா? உறவுகளை கையாள தெரியலை… அந்த காலத்தில், பெரிய மாமியார், சின்ன மாமியார், நாலு நாத்தனார் இப்படின்னு பலர் இருந்தாலும் அவங்க எல்லாரையும் அழகா கையாண்டாங்க. அவ்வளவு ஏன், என் அக்கா பாவம் தான். ஆனால், அக்கா அவங்க மாமியாரை எப்படி அழகா கையாளுவாங்க தெரியுமா?” அவன் கேட்க, அவள் கோபம் இன்னும் பன்மடங்காக ஏறியது.

“அந்த திறமை உனக்கு இல்லை பங்காரு” அவன் கூற, இப்பொழுது அவள் நக்கலாக சிரித்தாள்.

“எத்தனை உறவுகள் இருந்தாலும், அவங்க யாரும் கணவன் மனைவிக்கு இடையில் இப்படி வந்திருக்க மாட்டாங்க. நாம நிக்குற நெருக்கத்தை பாருங்க” அவள் அவர்களுக்கு இடையில் இருக்கும் இடைவெளியை காட்டினாள்.

“காற்று கூட போக முடியாதில்லை?” அவள் கண்களில் வழக்கத்திற்கு மாறாக வன்மம் தெரிந்தது.

“ஆனால், உங்க அக்கா இருக்காங்க” அவள் கூற, “பங்காரு…” அவன் பதறினான்.

“இப்ப மட்டுமில்லை… எப்பவும்… நீங்க எந்த நேரத்தில் என் ரூமுக்கு தினமும் வரணுமுன்னு உங்க அக்கா, இல்லைனா உங்க அக்கா குடும்பம் தான் முடிவு பண்ணுது. தெரிஞ்சி பண்றங்களா, இல்லை தெரியாமல் பண்றங்களா? எனக்கு தெரியாது. ஆனால், அவங்க தான் முடிவு பண்றாங்க” அவள் அழுத்தமாக கூற, “பங்காரு…” அவன் பரிதாபமாக அழைத்தான்.

“எங்க ஊரில் கல்யாணம் முடிஞ்சவங்க வெளியூர் போனா அதை ஹனிமூனு தான் சொல்லுவோம். அதுக்கு உங்க அக்கா பொண்ணு வாரா. ஏன் ஹனிமூண்ணுன்னா என்னன்னு உங்க அக்காவுக்கு தெரியாத அளவுக்கு உங்க அக்கா அப்பாவியா?” அவள் கேட்க, அவன் அவளை வினோதமாக பார்த்தான்.

வம்சி வேண்டும் என்ற எண்ணத்தோடு அவள் பொறுமையாக இருந்த காலம் என்று ஒன்று இருந்தது. இன்று?

“ஐயோ… மன்னிச்சிருங்க. உங்க அக்காவை நான் குறை சொல்லலை. விடுங்க… நாம தான் அப்ப ஹனிமூன் போகலியே… சனிமூன் சாரி ஃபமிலி டூர் போனோம்.” அவள் கூற, அவன் எதுவும் பேசவில்லை.

“வெளிய போகணுமுன்னா உங்க அக்கா குடும்பம், ஹனிமூன் போனா உங்க அக்கா பொண்ணு… சரி அதை விடுங்க…” அவள் அங்கிருந்த சோபாவில் அமர்ந்தாள்.

அவன் அவளுக்கு எதிரே இருந்த சுவரில் சாய்ந்து நின்றான், ‘என் பங்காருக்கு இப்படி ஓர் முகம் உண்டா’ என்ற கேள்வியோடு அவளை பார்த்து கொண்டிருந்தான்.

“நாம குழந்தை பற்றி முதலில் பேசும் பொழுது வந்தது உங்க அக்கா வீட்டு பணத்தேவை. அடுத்தால வந்தது உங்க அக்கா பொண்ணு சடங்கு… நான் எவ்வளவு பொறுமைசாலி பாருங்க. நான் சின்னச்சின்னதா சண்டை போட்டாலும், உங்க கிட்ட பொறுமையா தான் இருந்தேன்.” அவள் நிறுத்த, அவள் பேசட்டும் என்று காத்திருந்தான் வம்சி.

“ஆனால், எல்லாத்துக்கும் முத்தாய்ப்பா வச்சீங்க பாருங்க ஒரு ட்விஸ்ட். என் குழந்தையை என்கிட்டே கேட்காமலே கொன்னீங்களே… அதுவும் உங்க அக்கா இரண்டாவது குழந்தைக்காக!” அவள் கூற, அவனிடம் மௌனம்.

“எல்லாம் செஞ்சிகிட்டு… நான் நல்லவன்… நான் நல்லவன்… இப்படி சொன்னா போதுமா? நீங்க அயோக்கியனா இருந்திருந்தா கூட, நாலு பேருக்கு என் மேல் பரிதாபமாவது வரும். நான் உங்க கிட்ட இருந்து தப்பிச்சு போக முடியும். குடி, சிகரெட் இதெல்லாம் இருந்தா வெளிய சொல்ல முடியும். ஆனால், இது என்ன மாதிரி பிரச்சனைன்னு எனக்கு சத்தியமா தெரியலை. ஊரு உலகத்தில் எல்லா பொண்ணுங்களும், என்னை மாதிரி தான் கஷ்டப்படுறாங்களா? இல்லை நான் மட்டும் தான் இப்படி இருக்கேனா?” என்று அவன் சட்டையை பிடித்தருந்தாள் மிருதுளா.

“எனக்கு தெரியலைங்க. நீங்க பங்காரு பங்காருன்னு சொன்னாலும், என் வாழ்க்கையில் நீங்க இல்லை. உங்க அக்கா தான் இருக்காங்க. நான் சாப்பாடு பண்ணினா கூட, ஒன்னு அங்க சாப்பிட்டுட்டு வருவீங்க. இல்லை, எங்க அக்கா சுட்ட தோசை மாதிரி இல்லைன்னு சொல்லுவீங்க. தோசையில் என்ன இருக்கு. எல்லாரும் அரிசியும் உளுந்தும் போட்டுத் தான் செய்யறோம். வட்டமா தான் ஊத்துறோம்.” அவள் பேச,

‘என் மேல் இத்தனை குற்றசாட்டுகளா?’ என்று அவன் அவளை கண்களை விரித்தான்.

“உங்க அக்கா வராதா இடம்ன்னா, அது நாம் ரெண்டு பேரும்…” அவள் வார்த்தைகளை நிறுத்த, “பங்காரு…” கண்களில் கண்ணீர் மல்க, அவன் கையெடுத்து கும்பிட்டான்.

“போதும் பங்காரு… நீ இவ்வளவு இறங்கி பேச வேண்டாம். என்னால தாங்க முடியலை பங்காரு” அவன் குரல் உடைய,

“ஐயோ… நான் இறங்கல… இறங்கி போன என் வாழ்க்கையை பத்தி பேசிட்டு இருக்கேன்” அவள் நிதானமாக கூறினாள்

“வலிக்குதுல்ல? வார்த்தையால் கேட்கும் பொழுதே வலிக்குதில்லை? என் வாழ்க்கை இப்படி தான் இருக்கு. எனக்கு எப்படி வலிக்கும்?”

“உங்க அக்கா அப்பாவியாவே இருந்துட்டு போகட்டும். நல்லவங்களாவே இருந்துட்டு போகட்டும். எனக்கு அவங்களை பிடிக்கலை. தப்பு யார் மேல? என் மேலையா? இல்லை உங்க மேலையா?” அவன் முன் தலை சரித்து கேட்டாள்.

“ஏதோ இன்னைக்கு எனக்கு சப்போர்ட் பண்ணிடீங்க. உடனே நான் உங்களை நம்பணுமா? எப்படி நம்புவேன்? எனக்கு தெரியமா, மாத்திரை கொடுத்து குழந்தையை அழிச்சிட்டு வெட்கம் இல்லாம, என்னை நம்பலையான்னு கேள்வி கேட்கறீங்க?” அவள் முகத்தை அசூயையாக சுளித்தாள்.

“என்னை என்ன பண்ண சொல்ற பங்காரு? என் அக்காவை விட்டுட்டு ஒரேடியா வரசொல்றியா?” அவள் பேசிய அனைத்தையும் விடுத்து அவன் காரியத்தில் கண்ணாக கேட்டான்.

“நான் அப்படி கேட்க கொடும்பாவி இல்லை. நான் அப்படி கேட்டாலும் நீங்க உங்க பங்காருவை விட்டுக்கொடுப்பீங்களே தவிர…” அவள் பேச, அவன் இடைமறித்தான்.

“என் பங்காருவை நான்…” அவன் பேச, அவள் தன் கைகளை தூக்கி அவன் பேச்சை நிறுத்தினாள்.

“உங்க பங்காரு புராணம் போதும். நான், குழந்தையை இழந்த அப்ப இருந்த மனநிலையில் என்னால் உங்க கிட்ட தெளிவா பேச முடியலை. ஆனால், இப்ப நான் தெளிவா இருக்கேன். ஏதோ என்னால் முடிந்த அளவு கொஞ்சம் கேள்வி கேட்டுட்டேன்” என்று கூறி, அவள் வைத்த கோரிக்கையில் அவன் உடைந்து போனான்.  

 ‘இவள் மட்டும் தான் இப்படியா? இல்லை எல்லா பெண்களும் இப்படியா?’ என்ற கேள்வி அவன் மனதில் அமர, ‘இவன் மட்டும் தான் இப்படியா? இல்லை எல்லா ஆண்களுமே இப்படி தானா?’என்று கேள்வி அவள் மனதில் வந்து அமர்ந்தது.

 மயங்கும்…

Leave a Reply

error: Content is protected !!