மயங்கினேன் பொன்மானிலே – 17

பொன்மானிலே _BG-12002638

மயங்கினேன் பொன்மானிலே – 17

அத்தியாயம் – 17

மிருதுளா வம்சி இருவரும் இரவு உணவை கொஞ்சம் பேச்சினோடும், சிரிப்பினோடும் முடித்து கொண்டனர்.

 மிருதுளா மனதில் இதமான உணர்வு. அவன் தவறே செய்திருந்தாலும் எல்லாம் மாறும் என்ற நம்பிக்கை. அந்த நம்பிக்கை அவள் மனம் எங்கும் பரவவும், ‘விவாகரத்து வேண்டும் என்ற தானே வந்தேன்.’ அவள் அறிவு சட்டென்று விழித்துக் கொண்டது. ‘இவன் மாறவில்லை என்றால் விவாகரத்து தான்.’ அவள் மனம் அடித்து கூறியது.

‘ஓ… வம்சி தன் தப்பை உணர்ந்திட்டா? உன் குழந்தையை கொன்னவனோடு சேர்ந்து வாழுவியா?’ அவள் மனசாட்சி இடித்துரைக்க, அவள் தலையை உலுக்கி கொண்டாள்.

“பங்காரு, என்ன யோசனை?” அவள் முகத்தின் குழப்ப ரேகைகளளை பார்த்து அவன் அக்கறையோடு கேட்டான். “ஒண்ணுமில்லை…” அவள் தலை அசைக்க, “ரொம்ப யோசிக்காத பங்காரு. எல்லாம் கொஞ்சம் நாளில் சரியாகிடும்.” அவன் அவளை சமாதானம் செய்யும் குரலில் கூறினான்.

“ம்… நான் கிளம்புறேன்” அவள் கிளம்ப எத்தனிக்க, “எனக்கு வேலை இருக்கு பங்காரு. இல்லைனா, நானே உன் கூட வீட்டிற்கு வந்துருவேன். நீ இப்ப தனியா போகணுமே? நம்ம கடை பையனை கூட வர சொல்லவா?” அவன் கேட்க,

“அதெல்லாம் வேண்டாம். இங்க தானே இருக்கு வீடு. நான் வீட்டுக்கு போயிட்டு உடனே கூப்பிடுறேன்” அவள் கூறிவிட்டு அங்கிருந்து கிளம்ப எத்தனிக்க, அவள் சேலை நாற்காலியில் மாட்டிக்கொள்ள அவள் அதை குனிந்து எடுக்க, அங்கு அவள் அவன் அக்கா வீட்டு கூடையை பார்த்ததும் அவள் இதயம் ஒரு நொடி நின்று துடித்தது.

‘அப்ப, அக்கா வீட்டில் இருந்து சாப்பாடு வந்திருக்கு. என்கிட்டே மறச்சிருக்காங்க. அக்கா விஷயம்ன்னு வந்தா மட்டும் என் கிட்ட எல்லாம் பொய், பித்தலாட்டம்.’ அவள் மனநிலை சட்டென்று மாறியது.

அவள் கூடையை பார்த்ததை அவன் கண்டுகொண்டான். அவன் முகத்தில் புன்னகை. அவளை பார்த்து சிரித்தான். “என்ன சிரிப்பு… பொய்யை சொல்லிட்டு?” அவள் பட்டென்று கேட்டாள்.

“பொய் இல்லை பங்காரு. என் பங்காரு வருத்தப்பட கூடாதுன்னு விஷயத்தை மறைச்சேன். நான் உன்கிட்ட கொடுத்த வாக்கு அப்படி” அவன் கூற, ‘ஓ… அக்காவை பத்தி பேச மாட்டேன்னு சொன்னாங்கன்னு இதை என் கிட்ட சொல்லலையா?’ அவள் கண்களை விரித்து பார்த்தாள்.

அவள் பார்வையில் அவன் கட்டுண்டு போனான். “இப்ப மட்டுமில்லை பங்காரு. எப்பவும் நீ வருத்தப்பட கூடாதுனு தான் நான் செய்யறேன்.” அவன் ஆழமான குரலில் கூற, “நான் கிளம்புறேன்…” அவள் மடமடவென்று கிளம்ப, அவன் அவளை பரிதவிப்போடு பார்த்தான்.

அவள் கிளம்பிய வேகத்தில் அவள் பெருவிரல் கதவருகே இருந்த சுவரில் இடித்து கொள்ள, “அம்மா…” அவள் அலறினாள்.

“பங்காரு…” அவன் துடிதுடித்து போனான். அவள் கால்களை பிடித்து கொள்ள, அவன் அவளை கைகளில் அலேக்காக தூக்கினான்.

“என்னை இறக்கி விடுங்க. பெருவிரலில் தான் அடி. அதுவும் இடிச்ச நொடி தான் வலிச்சுது. இப்ப அவ்வளவு வலி இல்லை.” மெல்லிய வலியை மறைத்து கொண்டு அவளை பேச, அவன் அவளை கைகளில் ஏந்தி கொண்டு நடந்தான்.

“ஒரு சின்ன காயத்துக்கு, இப்படி ரொமான்டிக் ஹீரோ மாதிரி என்னை தூக்க வேண்டாம். இறக்கி விடுங்க.” அவள் குரலில் வலியின் சாயல் சற்று குறைந்துவிட, “அது என்ன ரொமான்டிக் ஹீரோ மாதிரின்னு சொல்ற? நான் ரொமான்டிக் ஹீரோ இல்லையா?” அவன் சற்று அழுத்தமாக கேட்டான்.

அவன் குரலில் இருந்த அழுத்தம், அவள் தேகத்தை தீண்டிய விரல்களிலும் இருக்க, அவள் இதயம் சற்று வேகமாக துடிக்க ஆரம்பித்தது.

“என்னை இறக்கி விடுங்க” அவள் இப்பொழுது கறாராக கூற, “நான் கேட்ட கேள்விக்கு பதில். நான் ரொமான்டிக் ஹீரோ இல்லையா?” அவன் முகம் அவள் முகத்தின் அருகே அதன் உரிமை நிலைநாட்டிக்கொள்ள, அவன் சுவாசக்காற்று அவள் சுவாசக்காற்றை ரசனையோடு தீண்டிக்கொண்டது.

“என்னை இறக்கி விடுங்க, இல்லைன்னா நீங்க கேட்குற கேள்விக்கு நான் ஏதாவது ஒன்னு கிடைக்க ஒன்னு சொல்லிடுவேன்” அவள் அவன் மார்ப்பில் குத்த, அவள் அறியாமல் அவள் காட்டிய உரிமையை ரசித்து அவளை நாற்காலியில் அமர வைத்தான்.

அவள் முன் மண்டியிட்டு, அவன் அவள் பெருவிரலை பார்க்க, “பங்காரு, சின்ன காயமுன்னு சொன்ன… எவ்வளவு இரத்தம் பாரு” அவன் இப்பொழுது பதறினான்.

“அதெல்லாம் ஒண்ணுமில்லை” அவள் கூற, “என்ன ஒண்ணுமில்லை. இரு நான் மருந்து போடுறேன்” அவன் தொழிலாளர்களுக்கு வைத்திருக்கும் முதலுதவி பெட்டியை எடுத்துக்கொண்டு வந்தான்.

அவள் பாதத்தை கைகளில் ஏந்தி அவன் அவள் பெருவிரலை தொட, அவள் உடலில் மெல்லிய நடுக்கம். அவள் தன் காலை உருவிக்கொள்ள முயல, ‘நான் என்ன யாரோவா?’ அவனுள் சினம் கிளம்பியது.

அவன் அவள் பாதத்தை அழுத்தமாக பிடித்து மருந்திட, “என் காலை விடுங்க” அவள் இப்பொழுது அதிகாரமாக கூற, “பங்காரு… நான் உன்னை விட மாட்டேன்.” அவன் குரலில் இப்பொழுது அழுத்தம் கூடி கோபம் வெளிப்பட்டது.

அவள் மௌனிக்க, அவன் அவள் முகத்தை நிமிர்ந்து பார்த்தான். அவன் முகத்தில் அக்கறையும், கண்களில் காதலும் கரை புரண்டு ஓட, அவள் கண்கள் அதை கவனிக்க தவறவில்லை.

“பங்காரு…” அவன் ஏக்கமாக அழைக்க, அவள் முகத்தை திருப்பிக் கொண்டாள்.

அவள் முகத்தை திருப்பிக் கொள்ளவும், “நிறைய இரத்தம் வருது பங்காரு. மருந்து போட்டு நான் விலகிடுறேன். உனக்கு வலிக்குமில்லை?” இப்பொழுது அவனை போல் அவன் குரலும் இறங்கியது.

“என்ன நிறைய இரத்தம்? என்ன பெரிய வலி? அன்னைக்கு எவ்வளவு இரத்தம்? அன்னைக்கு எவ்வளவு வலி தெரியுமா? இப்ப இவ்வளவு அக்கறை காட்டுறீங்க? இதே வலி உங்க அக்காவுக்காக வந்தா பரவால்லை அப்படி தானே?” அவள் வெடித்து அழ,

“பங்காரு…” அவன் எழுந்து அவளை இடையோடு அணைத்து கொண்டான்.

“என்னை அழ வைத்த உங்க கிட்டயே என்னை ஆறுதல் தேட சொல்லறீங்களா?” அவள் அவனிடமிருந்து திமிறி விலக எத்தனிக்க, அவன் பிடி இறுகியது.

 “நான் மட்டும் தான் உன் காயத்துக்கு மருந்து பங்காரு. எல்லாத்தையும் சீக்கிரம் சரி பண்ணிடுறேன் பங்காரு” அவன் கண்களிலிருந்து வழிந்த கண்ணீர் அவள் தோளை தொட்டது.

தோளை தோட்ட அந்த கண்ணீர் துளிகள் அவள் மனதின் ஏதோ ஓர் ஓரத்தையும் தொட்டது. கோபத்தையும் கண்ணீரையும் அன்பையும் ஒரு சேர வெளிப்படுத்த ஆரம்பித்தாள் மிருதுளா.

அவன் அணைப்பில், அவன் அருகாமையில், “நான் உங்களை விட்டு பிரிந்து போயிருக்கணும். நீங்க செய்த வேலைக்கு, உங்கள் முகத்தில் முழிக்காமல் போயிருக்கணும்.” அவள் கோபத்தில் வெடிக்க, “பங்காரு… இப்படி எல்லாம் பேசாத பங்காரு” அவன் குரல் உடைந்தது.

“என்னால் பேச மட்டும் தானே முடியும். ஏதோவொரு காரணம் சொல்லிட்டு நாய் குட்டி மாதிரி உங்களை சுத்தி சுத்தி வரனே. இத்தனை பண்ண உங்க மேல எனக்கு இவ்வளவு அன்பானு எனக்கே என்னை நினைச்சா கேவலமாவும் அருவருப்பாவும் இருக்கு” அவள் கண்ணீர் அவன் சட்டையை நனைக்க, அவன் அவளை விலக்கினான்.

அவள் கண்ணீரை துடைத்தான். “நாய் குட்டின்னுல்லாம் சொல்லாத பங்காரு. நீ எனக்கு தேவதை பங்காரு.” அவன் அவள் முகத்தை கைகளில் ஏந்தி கூற, “தேவதையை இப்படி தான் அழவைப்பாங்களா?” அவள் வெடுக்கென்று கேட்டாள்.

அவள் பேச்சை ஒதுக்கி, “எனக்கு அம்மா பாசம் தெரியாது பங்காரு. அக்…” அவன் எதையோ கூற ஆரம்பித்து நிறுத்திவிட்டான்.

“பொறுப்புன்னு நான் வாழ்ந்த காலம் நிறைய. இப்பல்லாம் நீ எனக்கு அம்மா பாசத்தை கற்று கொடுக்குற மாதிரி இருக்கு பங்காரு.” அவன் அவள் முன் மண்டியிட்டு அமர்ந்தான்.

“எல்லாத்தையும் சரி பண்றேன் பங்காரு” அவன் கண்களில் கண்ணீர் மல்க அவள் கைகளை பிடித்து கெஞ்சினான்.

அவன் அறியவில்லை. மனிதர்களை அவன் கட்டுக்குள் கொண்டு வரமுடியும். ஆனால், இறைவன்?

அவள் எதுவும் பேசவில்லை. அவன் அலைபேசியில் வெளிச்சம்.

“சைலன்ட் மோட்ல போற்றுகீங்க போல. உங்க அக்காவா தான் இருக்கும். பேசுங்க. நான் கிளம்புறேன்” அவள் எழுந்து கொள்ள, “நான் இன்னைக்கு பைக்கில் வந்திருக்கேன். நாம சேர்ந்து போவோம். நீ தனியா போக வேண்டாம். கொஞ்சம் நேரம் வேலை இருக்கும். நான் முடிச்சிட்டு வரேன். நீ இங்கயே இரு” அவன் கூறிவிட்டு, தன் தமக்கையிடம் பேச ஆரம்பித்தான்.

மிருதுளாவின் கண்ணீரில், பேச்சில் வம்சி சற்று உணர்ச்சி பெருக்கில் இருந்தான்.

“அக்கா…” அவன் அழைக்க, “தம்பி, பூரி சாப்பிட்டியா?” பத்மப்ரியா கேட்க, “இல்லை அக்கா. இன்னைக்கு மிருதுளா சாப்பாடு கொண்டு வந்துட்டா” அவன் கூற,

“என்ன தம்பி நீ? காலைலையும் மதியானமும் உன் பொண்டாட்டி சமைத்ததை தான் சாப்பிடுற. ஒருவேளை அக்கா செய்ததை சாப்பிட கூடாதா?” பத்மப்ரியா பாசமாக கேட்டார்.

“முன்னாடியே சாப்பிட்டுட்டேன் அக்கா” தற்காலிகமாக பொய்யை அள்ளி வீசினான்.

மிருதுளா எங்கோ பார்த்தடி உணர்ச்சி துடைத்த முகத்தோடு அமர்ந்திருந்தாள்.

“என்னை விட உன் பொண்டாட்டி வேகமா இருக்கா போல?” பத்மப்ரியா சிரித்து கொண்டாள்.

“அக்கா, உனக்கு எதுக்கு கஷ்டம். இனி நீ எனக்குன்னு தனியா சாப்பாடு எதுவும் குடுத்து விடாத அக்கா. எனக்காக ஏதாவது செய்தா, ஒரு ஃபோன் பண்ணு. நானும் மிருதுளாவும் சேர்ந்தே வந்து சாப்பிட்டறோம்.” அவன் பொறுமையாக நானும் மிருதுளாவும் ஒன்று தான் என்று நாசுக்காக எடுத்துரைக்க முயன்றான்.

மிருதுளா பார்வையை அவன் பக்கம் திருப்ப, அவன் புருவத்தை உயர்த்தி, ‘என்ன?’ என்று வினவ, அவள் தலையை குனிந்து கொண்டாள்.

அவன் முகத்தில் அவன் மீசை மடிய மென்னகை. ‘எல்லாத்தையும் சரி செய்யறேன் பங்காரு.’ அவன் மீண்டும் உறுதி எடுத்து கொண்டு தன் தமக்கையிடம் பேசி முடித்தான்.

அவன் வேலையை முடிக்கும் வரை அவள் காத்திருக்க இருவரும் ஒன்றாக வீடு திரும்பினர்.

‘பங்காருவை எப்படி சரி செய்வது?’ இதுவே அவன் தீவிர சிந்தனையாக இருக்க, அந்த வார விடுமுறை நாளுக்கு முன் அதற்கு அவன் தீர்வும் கண்டு பிடித்திருந்தான்.

***

“பங்காரு, நாம ஒரு ட்ரிப் போவோமா?” என்று அவன் கேட்க, “ஹனிமூனா?” அவள் அதிர்ச்சியாக அவனை பார்த்து கேட்டாள்.

“ம்… அப்படியும் சொல்லலாம்” அவன் கூற, “கல்யாணம் முடிஞ்ச உடனே போனா தான் அது ஹனிமூன். கல்யாணம் முடிஞ்சு பல வருஷம் கழித்து அப்படி ஒரு எண்ணம் உங்களுக்கு வந்தா, அது ஹனிமூன் கிடையாது.” அவள் திரும்பி கொள்ள, அவன் அவளை பின்னோடு அணைத்தான்.

“பங்காரு ப்ளீஸ்… நம்ம பிரச்சனை முதலில் அங்க தான் ஆரம்பிச்சது. நான் ஒவ்வொண்ணா சரி பண்ண பார்க்குறேன். வேண்டாமுன்னு சொல்லாத ப்ளீஸ்.” அவள் தோளில் அவன் தாடையை பதித்து அவன் குரல் கெஞ்சியது. கொஞ்சியது.

“…” அவளிடம் மௌனம். “ஹனிமூன் எல்லாம் இல்லை. நாம மட்டும் தனியா ஒரு ட்ரிப். உனக்கும் ஒரு மனமாற்றம்.” அவன் கேட்க, அவள் எதுவும் பதில் பேசவில்லை.

அவள் மௌனத்தை சம்மதமாக எடுத்துக்கொண்டு, “டார்ஜிலிங் போகலாமா? குலுமணாலி போகலாமா?” அவன் வேகவேகமாக திட்டம் தீட்ட ஆரம்பித்தான்.

‘இவங்க செய்த வேலைக்கு… நான் இவங்க கூப்பிட்டா போகணுமா?’ மிருதுளாவின் மனம் கொதித்தது.

“பங்காரு, நீ சொல்லு. நாம எங்க போகலாம்?” அவன் கேட்க, “மாமா…” அழைப்பினோடு உள்ளே நுழைந்தாள் சிந்து.

“வா சிந்து” நமட்டு சிரிப்போடு அழைத்தாள் மிருதுளா.

அன்று அத்தையின் மீதிருந்த கோபத்தில் சிந்து அவளை திரும்பியும் பார்க்கவில்லை. “என்ன பண்ணிட்டு இருக்கீங்க மாமா?” அவள் கேட்க, “உங்க மாமா டூர் போலாமுன்னு சொன்னாங்க. அது தான் எங்க போலாமுன்னு தேடிகிட்டு இருக்காங்க” அவள் கூற, சிந்துவின் கவனம் தன் அத்தையின் பக்கம் திரும்பியது.

“சூப்பர் மாமா. நாம மூணார் போனோமே அந்த மாதிரியா. நானும் வரேன் மாமா. இந்த தடவை அம்மா, அப்பா எல்லாரையும் கூட்டிட்டு போகலாம். அம்மாவும் ட்ரைன்ல ட்ராவல் பண்ணலாம்னு போன செக்கப்ல டாக்டர் சொன்னாங்க.” சிந்து கூற, வம்சியின் முகம் கறுத்தது.

சில மணித்துளிகள் பேசிவிட்டு, சிந்து கிளம்பிவிட, “மிருதுளா…” அவன் கர்ஜித்தான்.

“இப்ப எதுக்கு சிந்து கிட்ட சொன்ன?” அவன் கோபமாக கேட்க, “நான் எதார்த்தமா சொன்னேன். சிந்துவும் பதார்தமா வீட்டு நடப்பை சொல்றா” மிருதுளா தன் தோளை குலுக்கி கொண்டு தன் வேலையை தொடர ஆரம்பித்தாள்.

“நீ எதார்த்தமா சொல்லலை வேணுமினே தான் சொல்லிருக்க” அவன் கூற, “ஆமா, நான் வேணுமினே தான் சொன்னேன்னு வச்சிக்கோங்களேன். நாம என்ன திருட்டு கல்யாணமா பண்ணிருக்கோம்? உங்க அக்கா கிட்ட என் பொண்டாட்டியோட ஹனிமூன் போறேன்னு சொல்ல வேண்டியது தானே. இதில் என்ன தப்பு?” அவள் கேட்க, அவன் அவளை கூர்மையாக பார்த்தான்.

“நீங்க என்னை மட்டும் கூட்டிகிட்டு போனால், நான் எங்க வேணும்ன்னாலும் வரேன். மீன் குட்டி, ஆட்டு குட்டி எல்லாம் கூட வந்தா அவங்களை மட்டும் கூட்டிட்டு போங்க. நான் உங்க கூட வரலை.” அவள் கறாராக கூறினாள்.

அவள் வைத்த கோரிக்கை அவனுக்கு சற்று கடினம் தான் என்றாலும், அவள் உரிமை அவனுக்கு பிடித்திருந்தது.

மயங்கும்…  

Leave a Reply

error: Content is protected !!