மயங்கினேன் பொன்மானிலே – 28

பொன்மானிலே _BG-3736ca1a

அத்தியாயம் – 28

வம்சி தன் மனைவியின் வருகைக்காக காத்திருந்தான். செவிலியர் இரு குழந்தைகளை கொடுக்க, ஒன்றை மிருதுளாவின் தாய் வாங்கிக்கொள்ள, மறுகுழந்தையை மிக மிக ஆசையாக வாங்கி கொண்டான் வம்சி. அந்த மென்மையான ஸ்பரிசம் அவனை தீண்டவும் அவனுள் இன்ப மின்சாரம் பாய்ந்தது.  

‘சிறு புள்ளி…’ அவன் சொன்ன வார்த்தையின் முழு அர்த்தம் அவன் கைகளில் இருக்க, அவன் விரல்கள் நர்த்தனம் ஆட அவன் கண்களில் கண்ணீர் சூழ்ந்தது. அந்த கண்ணீர் துளி குழந்தையின் மீது பட்டதும், தந்தையின் கண்ணீரை பிடிக்காத குழந்தை போல் அது, “வீல்…” என்று அலற, அவன் தன்னோடு அந்த குழந்தையை சேர்த்துக்கொண்டான். ஒரு குழந்தையின் அசைவு அவன் ஸ்பரிசத்தை தீண்ட, அவன் கண்கள் ரோஹிணியிடமிருக்கும் மற்றொரு குழந்தையிடம் சென்றது. அவன் கண்கள் இருபக்கமும் சுழன்று, இரு குழந்தைகளின் செய்கையை ரசிக்க, அவன் மனமோ ‘இரு கண்கள்’ போதவில்லை என்று வருந்தியது.

‘பங்காரு, குழந்தைகளை பார்த்திருப்பாளா?’ அவன் கண்கள் குழந்தைகளுக்கு இடையே தன் மனைவியை தேடியது. சில மணித்துளிகளில் அவர்களுக்கு தனியறை கொடுக்கப்பட, மிருதுளாவும் அழைத்து வரப்பட்டாள். துவண்டிருந்த தன்னவளை கரிசனத்தோடு பார்த்தான். அருகே சென்று, அவள் தலைகோதி அவளை ஆழமாக பார்த்தான். அவன் கைகளை அழுந்த பற்றி, அவனுக்கு ஆறுதல் கூறுவது போல் முறுவலித்தாள். இருவருக்குள்ளும் நிறைவு. மௌனம்.

பத்மப்ரியா குடும்பத்தோடு குழந்தைகளை பார்க்க வந்தாள். “அக்கா, என் குழந்தைகள் எப்படி இருக்காங்க?” அவன் கேட்ட தொனியில், ‘நம்ம குழந்தை…’ அவள் சற்று முன் பேசிய வார்த்தைகள் நினைவுக்கு வர அவள் தம்பியை ஆழமாக பார்த்தாள். “என் குழந்தைகள்… என் குழந்தைகள்…” என்று

அவன் பேச்சு குழந்தைகளை சுற்றியே இருக்க, குழந்தைகளோ அழுதழுது அதன் தாயையே சுற்றி வந்தது. தான் கேட்க நினைத்ததை கேட்க முடியாமல் குழந்தைகளை பார்த்துவிட்டு அமைதியாக சென்றுவிட்டாள் பத்மப்ரியா.

உடல்நிலை தேறி சில நாட்களில் மிருதுளா வீடு திரும்பினாள். ஒரு மாதம் கழித்தே குழந்தைகளுக்கு பெயர் வைப்பதாக முடிவு செய்தனர். இடையே நெருங்கிய உறவினர் வீட்டிற்கு ஓரிரு நாள் செல்ல வேண்டிய சூழ்நிலை மிருதுளாவின் பெற்றோருக்கு உருவாகவே, அன்று வம்சியும் மிருதுளாவும் குழந்தைகளை சமாளித்து கொண்டிருந்தனர்.

இரு குழந்தைகளையும் முன்னே போட்டு கொண்டு அதன் கால்களை தன் கன்னத்தில் வைத்து கொண்டு, இரு குழந்தைகளும் அவன் கன்னத்தை மிதிக்க, அதை ரசித்து கொண்டிருந்தான் வம்சி. தன் விரலை, ஒவ்வொரு குழந்தையின் ஒரு கைக்கு இடையில் கொடுத்து கொண்டு, “அப்பா… சொல்லுங்க…. அப்பா சொல்லுங்க…” என்று கொஞ்சி கொண்டிருந்தான்.  

‘ஆமா, பிறந்த மறுமாசமே இவங்களை அப்பான்னு கூப்பிட்டுரும்’ குழந்தைகளும் அவனும் இருக்கும் அறைக்குள் நுழைய எத்தனித்த மிருதுளா அவர்களை மனநிறைவோடு பார்த்தாள். அவன் தன்னை மறந்து குழந்தைகளை கொஞ்சிக் கொண்டிருந்தான். இப்பொழுது மடமடவென்று உள்ளே சென்று அவனை, “தட்…” என்று அடித்தாள்.

“பங்காரு…” என்று அவன் தன் கண்களை ஆசையாக விரிக்க, “சும்மா நடிக்காதீங்க… எப்பப்பாரு குழந்தைங்க தான். நான் இனி உங்களுக்கு யாரோ தான்” அவள் முகம் திருப்பிக் கொள்ள, “பங்காரு…” அவன் எழுந்து அவளை சுற்றி வளைத்தான். அவள் திமிர, “பங்காரு…” அவன் கொஞ்சலான, கெஞ்சலான அழைப்பே அவள் மனதை தொட, அவள் திமிராமல் அமைதியாக நின்றாள்.

“தாயருகே சேயாகி தலைவனிடம் பாயாகி சேயருகே தாயாகும் பெண்ணே…

நீர் நினைத்தால் பெண் நினைத்தால் கரைகள் யாவும் கரைந்து போகக் கூடும்”

அவன் அவள் கன்னத்தை இழைத்துக் கொண்டே செவியோரம் கிசுகிசுப்பாக  உள்ளம் உருகி பாட, அவன் பாடிய வரியில் அவள் கரைந்து போய், அவனை பார்க்க, “எனக்கு தாயும் நீ தான்… பாயும் நீ தான். என் முதல் சேயும் நீ தான். எனக்கு எல்லாமே என் பங்காரு தான்” அவன் உணர்ச்சி பெருக்கோடு கூற, அவளுக்கு வார்த்தைகள் வரவில்லை. “எனக்கு குழந்தைகள் இவ்வளவு சுகம்முனு தெரியாது பங்காரு. எனக்கு இவ்வளவு சந்தோஷத்தை தருவாங்கன்னு தெரியாது பங்காரு.” அவன் கண்களில் கண்ணீர் மல்கியது.

“நான் சிந்துவை சின்ன வயசில் பார்த்திருக்கேன். ஆனால், அப்ப என்னை மாமாவும், அவங்க அம்மாவும் சிந்து பக்கத்தில் எல்லாம் விட மாட்டாங்க. அவளும் ஏதோ அழுத்திட்டே இருப்பா. அக்கா கஷ்டப்படுறது மட்டும் தான் எனக்கு தெரியும். வளர்ந்த பிறகு தான் அவ என் கூட இருக்கா. அவ வளர்ந்த பிறகுன்னு சொல்லலாம். இல்லை, நான் அந்தஸ்த்து ரீதியா வளர்ந்த பிறகுன்னு சொல்லலாம். இப்படி சின்ன குழந்தைகளை எல்லா நான் தொட்டு என்ன! பக்கத்தில் இருந்து கூட பார்த்ததில்லை. முதல் பாதி வாழ்க்கையில் என்னை சோதிச்ச கடவுள் இப்ப எனக்கு வரம் கொடுத்திருக்கான் பங்காரு” அவன் அவள் முன் மண்டியிட்டான்.

அவள் பதற, “பங்காரு…” அவளை இடையோடு அணைத்து கதறினான். “தப்பு பண்ணிட்டேன் பங்காரு. இந்த குழந்தைகளை புள்ளின்னு சொல்லிட்டேனே. எனக்கு இப்படி எல்லாம் தெரியலை பங்காரு. நீ எனக்கு அந்த ஆண்டவன் கொடுத்த வரம் பங்காரு.” அவன் கூற, அவர்கள் வீட்டின் கதவு தட்டப்படும் ஓசை கேட்டது.

“குழந்தையை கேட்க கூடாது” என்று உதய் எவ்வளவோ கூறியும், ‘பெயர் வைக்கும் முன் கேட்டே தீர வேண்டும்.’ என்ற உறுதியோடு பத்மப்ரியா வந்திருந்தாள்.

மிருதுளா அவர்களை வரவேற்க, வம்சி தன் தமக்கையை இன்முகமாக வரவேற்றான். குழந்தை பிறக்குமுன் இருந்த தவிப்பு, இப்பொழுது அவனிடம் இல்லை. அவன் தெளிவாக இருந்தான்.

“தம்பி, நான் சிந்துவுக்கு துணையா ஒரு குழந்தையை கேட்டேன். நீயும் தரேன்னு வாக்கு கொடுத்த” பத்மப்ரியா நேரடியாக விஷயத்திற்கு வர, மிருதுளாவின் உலகம் தட்டாமாலை சுற்றியது. ‘இது தான் என்னிடம் இவங்க மறைத்த விஷயமா?’ மிருதுளா வம்சியை பார்க்க, அவனோ தன் அக்காவிடம் ஆமோதிப்பாக தலை அசைத்து கொண்டிருந்தான். மிருதுளாவுக்கு பேச வாய் வரவில்லை.

‘அம்மா, நான் ஒருத்தி இங்க குத்துக்கல் மாதிரி உயிரோட இருக்கேன். என்னை இவங்க ரெண்டு பேரும் மதிக்கிற மாதிரியே தெரியலையே. பேசட்டும், என்னதான் பேசுறாங்கனு பார்ப்போம்.’ அவள் வெடிக்கும் எரிமலையாய் உள்ளுக்குள் குமுறியப்படி அவர்களை பார்க்க,

“நான், இன்னைக்கு கொஞ்சம் நேரம் இதில் எனக்குன்னு ஒரு குழந்தையை எடுத்திட்டு போகட்டுமா?” என்று பத்மப்ரியா கேட்க, “ஒரு குழந்தை என்ன அக்கா? என் இரண்டு குழந்தையையும் நீங்க எடுத்திட்டு போகலாம். என் குழந்தைகள் மேல் உங்களுக்கு இல்லாத உரிமையா?” வம்சி சிரித்த முகமாகவே கூறினான். மிருதுளா, உதய் இருவரும் அங்கு மௌன சாட்சியாக நிற்க, பத்மப்ரியா சற்று குழம்பிப் போனாள்.  

“எடுத்திட்டு போங்க அக்கா. என் குழந்தைகள் உங்க வீட்டுக்கு வராமலா? சிந்துவுக்கு துணையா வளராமலா? எடுத்திட்டு போங்க அக்கா. ஆனால், ஒரு அத்தையா மட்டும் தான் அக்கா. நான் அம்மா, அப்பா இல்லாம வளர்ந்த மாதிரி என் பிள்ளையும் ஏன் அம்மா அப்பாவை பிரிந்து வளரனும்?” அவன் கேட்க, “தம்பி, அம்மா அப்பா இல்லைனு ஏண்டா நினைக்குற? அது தான் நாம எல்லாரும்….” அவள் பேச, “இல்லை அக்கா, என்னால் என் குழந்தைகளை யாருக்கும் விட்டுத்தர முடியாது. என் குழந்தைகள் என் கிட்ட தான் இருப்பாங்க” அவன் உறுதியாக கூற, உதய் முகத்தில் நிம்மதியும், புன்னகையும் வந்தமர்ந்தது. ஆனால், மிருதுளாவின் முகத்தில் குழப்ப ரேகைகள்.

“நீ கொடுப்ப தம்பி. அக்காவுக்காக நீ கொடுப்ப. நீ என் கிட்ட வாக்கு கொடுத்திருக்க. ஆனால், உன் பொண்டாட்டி உன்னை தடுத்திருப்பா. அவளுக்கு நானும், என் பெண்ணும் சந்தோஷப்பட்டிருவே கூடாது” அவள் கூற, “அக்கா, மிருதுளாவுக்கு விஷயமே தெரியாது. நான் அவ கிட்ட சொல்லவே இல்லை. அவளுக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லை அக்கா” அவன் கூற,

“உன் பொண்டாட்டியை நீ விட்டுக்கொடுப்பியா?” அவன் கேட்க, “நான் ஏன் அக்கா, என்  பொண்டாட்டியை விட்டுக்கொடுக்கணும்? என் அக்காவை நான் எங்கையும் விட்டுக்கொடுக்க மாட்டேன். அதே மாதிரி தான் என் மிருதுளாவையும் எங்கையும் விட்டுக்கொடுக்க மாட்டேன். இந்த விஷயத்தில் மிருதுளாவுக்கு சம்பந்தம் இல்லை அக்கா. இது என் தனிப்பட்ட முடிவு” அவன் அழுத்தமாக கூறினான்.

“அன்னைக்கு வாக்கு கொடுத்தீயே தம்பி. நான் எத்தனை மாசமா என் வீட்டில் என் தம்பி எனக்கு கொடுக்க போற பிள்ளை வளரப்போகுதுனு ஆசையா இருந்தேன் தெரியுமா?” பத்மப்ரியா கண்கலங்க, “தப்புதான். என்னை மன்னிச்சிரு அக்கா. நான் அன்னைக்கு வாக்கு கொடுத்தது முதல் தப்பு. அதுவும் குழந்தையோட அம்மா கிட்ட கேட்காம வாக்கு கொடுத்தது இரண்டாம் தப்பு. ஆனால், அன்னைக்கு நான் சூழ்நிலை கைதி அக்கா” அவன் குரல் தழுதழுத்தது.

“நீ சூழ்நிலை கைதி இல்லை. சந்தர்ப்பவாதி” என்று பத்மப்ரியா கோபமாக கூற, “அண்ணி…” மிருதுளாவின் குரல் உயர்ந்தது. “பார்த்தியா, உன் பொண்டாட்டி குரல் எப்படி எகிறுதுன்னு?” பத்மப்ரியா நக்கலாக பேச, “பங்காரு…” அவன் விழிகள் மறுப்பு தெரிவிக்க அவன் குரல் கெஞ்சியது. “ரொம்ப நல்லாருக்கு தம்பி. பொண்டாட்டி எகிறா, புருஷன் நீ கெஞ்சுற?” பத்மப்ரியா சிடுசிடுத்தாள்.

“அக்கா, நீங்க சொல்ற மாதிரி நான் சந்தர்பவாதியாவே கூட இருக்கலாம். அன்னைக்கு என் கண் முன்னாடி இருந்தது என் அக்கா மட்டும் தான். உயிருக்கு போராடுற நிலையில் என் அக்கா மட்டும் தான். நான் வாக்கு கொடுத்தேன். அப்ப, என் குழந்தையை தர முடியாதுன்னோ இல்லை என் மனைவி கிட்ட கேட்கனுமுன்னோ எனக்கு சொல்ல தெரியலை. தோணலை அக்கா. என் பங்காரு கிட்ட பக்குவமா சொல்லணும்னு தான் நினைத்தேன். அப்புறம் என் கண்முன்னாடி என் குழந்தைகளை சுமக்கிற என் மனைவிகிட்ட எனக்கு சொல்ல முடியலை அக்கா. அவ மட்டுமே நிறைந்து நின்னா. குழந்தை பிறந்த பிறகு சொல்லணும்னு நினச்சேன் அக்கா.” அவன் கண்கள் கலங்கியது.

“என்னை பார்த்து முறைக்குற குழந்தை. என்னை பார்த்து சிரிக்குற குழந்தை. என்னை எட்டிமிதிக்குற குழந்தை. என் மனைவிகிட்ட பசியாருற குழந்தை இதை நான் எப்படி அக்கா தானம் பண்ண முடியும். நான் அவ்வளவு நல்லவன் எல்லாம் கிடையாது அக்கா. நான் சூழ்நிலை கைதியா…  சந்தர்ப்பவாதியானு எனக்கு தெரியலை அக்கா. ஆனால், சுயநலவாதி. என் அக்கா நல்லாருக்கணும்னு ஒரு தம்பியா சுயநலவாதி. என் மனைவி சந்தோஷமா இருக்கணும். வருத்தப்பட கூடாதுனு சுயநலவாதி. என் குழந்தைகள் எனக்கு வேணும்முனு நினைக்குற நல்ல குணமும் கெட்ட குணமும் கொண்ட சராசரி மனிதன் அக்கா நான்” அவன் மொந்தென்று அங்கிருந்த சோபாவில் அமர்ந்தான்.

“அன்னைக்கு, நீ வாக்கு கொடுத்திருக்க வேண்டாம் தம்பி. நானாவது என் மனசில் ஆசையை வளர்க்காம இருந்திருப்பேன். பிள்ளை இருந்தும் எனக்கு பிள்ளை ஆசை. அதுவும் என் தம்பி பிள்ளைன்னு ஒரு சந்தோஷ கனவு” அவன் கால் மாட்டில் அவள் கண்ணீர் உகுக்க, மிருதுளாவுக்கு பத்மப்ரியாவை பார்க்க பாவமாக இருந்தது. ‘அம்மா, அப்பா இல்லாமல் அக்கா தம்பியாக மட்டும் வளருவது எத்தனை கொடுமை. கணவன், குழந்தை என்று வந்த பின்னும் இவர்கள் பாசத்திற்கு ஏங்குபவர்கள்’ என்றே அவர்கள் மேல் அவளுக்கு கருணை சுரந்தது.

“நீ அன்னைக்கு வாக்கு கொடுத்திருக்க வேண்டாம் தம்பி” பத்மப்ரியா விம்ம, “அன்னைக்கு, நான் வாக்கு  கொடுக்கலைனா, எனக்கு அக்கா இல்லாமல் போயிருக்குமே. எனக்கு அக்கா வேணுமே” அவன் பரிதாபமாக கூறினான்.

“அதை விட உனக்கு உன் பொண்டாட்டியும், பிள்ளையும் வேணுமே” கோபமாக கூறிக்கொண்டு சரேலென்று எழுந்தாள். “நான் தான் தம்பி தம்பின்னு உன் பின்னாடி வரேன். நீ எனக்காக என்ன செஞ்சிருக்க? என் திருமண வாழ்க்கையிலிருந்து, நான் உனக்கு செய்ததை எல்லாம் சொல்லிக் காட்டினால் நீ தாங்குவியா? நான் சொல்ல மாட்டேன் தம்பி. நீ நல்லா இரு. நீ உன் மனைவி, உன் குழந்தைன்னு நல்லா இரு” தன் தம்பியிடமிருந்து வந்த முதல் ஏமாற்றத்தை தாங்க முடியாமல் வார்த்தைகளை சிதறவிட்டாள்.

“என் தம்பி பிள்ளை பொண்டாட்டின்னு நல்லாருக்கட்டும். ஆனால், எனக்கு இப்படியொரு தம்பி வேண்டாம்.” தன் கண்களை துடைத்தபடி வீட்டை விட்டு மடமடவென்று வெளியேறினாள்.

தன் தமக்கை கூறிய கடைசி வார்த்தையில் அதிர்ச்சியில் உறைந்து நின்றான் வம்சி.

மயங்கும்…