மிரட்டும் அமானுஷ்யம் 1
மிரட்டும் அமானுஷ்யம் 1
மிரட்டல் 1
நள்ளிரவைக் கடந்த நேரம்… பூச்சிகளின் ரீங்காரம் அந்த இரவின் இசையாய் காதுகளில் ஒலிக்க, தங்களின் காலடி சத்தம் அந்த இசைக்கேற்ற தாளமாய் அவர்களின் இதயத்தில் பயத்தை விதைத்துக் கொண்டிருந்தது.
“ப்ச் நா தான் சொன்னேன்ல, இங்க வர வேண்டாம்னு… நா சொன்னா ஏதாவது கேக்குறீங்களா…” என்று அவள் அலுத்துக்கொள்ள…
“ஸ்ஸ்ஸ் இதோட இருபது தடவ இத சொல்லிட்ட… சலிச்சுக்காம இந்த சிசுவேஷன என்ஜாய் பண்ணு… இந்த மாதிரி அட்வென்ட்சுரஸ் அனுபவம் எல்லாம் எப்பவாவது தான் கிடைக்கும்…” என்றான் அவன்.
“யப்பா சாமி இந்த ஒரு அனுபவமே போதும்… இனிமே இப்படி அட்வென்ட்சர் த்ரில்லுன்னு எதுக்காவது என்ன கூப்பிட்டீங்கனா அவ்ளோ தான்…” என்று தன் எரிச்சலை அவன் மீது காட்டியவள், ‘ச்சை ரொமான்டிக்கா இந்த நைட்ட ஸ்பெண்ட் பண்ண ஒரு இடத்துக்கு கூட்டிட்டு போங்கன்னு சொன்னா, இப்படி பேய் படத்துக்குள்ள போன மாதிரி ஒரு இடத்துக்கு கூட்டிட்டு வந்திருக்காரு…’ என்று முணுமுணுத்தாள்.
இவர்களின் இந்த சிறு சண்டையில், அதுவரை கைகளைப் பிணைத்தபடி நடந்தவர்கள், தங்களை மறந்து கைகளை விட்டிருந்தனர்.
அப்போது மூச்சு வாங்க வேண்டி நின்றவள், தன்னை யாரோ உற்று நோக்கும் உணர்வு கொண்டவளாய் சுற்றும் முற்றும் பார்த்தாள். அவளின் கண்களுக்கு யாரும் தட்டுபடவில்லை. ஏதோ பிரமை என்றெண்ணியவளாய் தன் கண்களை வேகமாய் சுழற்ற, அவளின் வேக சுழற்சியில், அவளிற்கருகில் இருந்த புதரின் மறைவில் யாரோ இருப்பது போல் தோன்றியது.
சற்று தணிந்த பயம் மீண்டும் ஜெட் வேகத்தில் உயர, தனக்கருகே இருந்த கணவனைத் தேடினாள் அவள். அவனோ இவளை விட்டு சில அடி தூரம் சென்றிருந்தான்.
‘அடப்பாவி இப்படி விட்டுட்டு போயிட்டியேடா…’ என்று மனதில் நினைத்தவள், வேகமாக அவனருகே சென்று கைகளைப் பற்றிக் கொண்டாள்.
ஜிள்ளிட்டிருந்த அவளின் கைகளில் நடுக்கத்தை உணர்ந்தோ, அவளின் கைகளை இறுகப் பற்றிக் கொண்டான்.
“டேய் இங்க இருந்து போயிடலாம் டா…” என்று அவள் பயத்துடன் கூற…
“ம்ம்ம்…” என்ற ஒற்றை வார்த்தையே அவனின் மறுமொழியானது.
ஒருவழியாக அந்த இருட்டை கடந்தவர்கள் முன் கம்பீரமாக காட்சியளித்தது அந்த மரவீடு… முழுக்க முழுக்க மரத்தினால் செய்யப்பட்ட அந்த வீடு மஞ்சள் விளக்கின் ஒளியினால் ஜெகஜோதியாக இருந்தது.
அதைக் கண்டு ஆச்சரியத்தில், வாய் பிளந்தவள், “வாவ் விக்கி சூப்பரா இருக்கு இந்த வீடு… இதுக்காக தான் என்ன இவ்ளோ தூரம் அலைய வச்சியா… பட் உன் செலக்ஷன் பக்கா… இங்கயே நம்ம ஃபர்ஸ்ட் அனிவெர்சரிய கொண்டாடலாம்…” என்று கண்களில் கனவுகளுடன் அந்த வீட்டில் காலடி எடுத்து வைத்தாள்.
“ஆமா… உனக்ககாக தான் இங்க நான் கூட்டிட்டு வந்தேன்…” என்று கரகரப்பான ஒலி தனக்கு பின்னால் கேட்க, இதுவரை வீட்டைக் கண்ட ஆர்வத்தில் பயத்தை மறந்திருந்தவள், மீண்டும் அதற்கு ஆட்பட்டவளாய், அவ்வீட்டின் முதல் படியில் நின்றுகொண்டு திரும்பிப் பார்த்தாள்.
அங்கு அவளைத் தவிர வேறொருவர் இருப்பதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை.
பயத்துடன், “வி…வி..க்…கி…” என்று அழைத்தாள். பயத்தில் வார்த்தைகள் வெளிவராமல் சதி செய்ய, தன்னை சுற்றியுள்ளவற்றை நோட்டமிட ஆரம்பித்தாள்.
கண்ணுக்கு புலப்பட்ட வரை புதர்களும் முட்செடிகளுமே இருந்தன. அப்போது தான் காற்றில் வீசும் ஒரு வித துர்நாற்றத்தை உணர்ந்தாள். அவளின் மனம் படபடவென அடித்துக் கொண்டது.
மெல்ல திரும்பி அந்த வீட்டை பார்வையிட்டவள், அதிர்ச்சியில் அந்த படியிலிருந்து தடுக்கி கீழே விழுந்திருந்தாள்.
இவ்வளவு நேரம் ஜெகஜோதியாக காட்சியளித்த வீடு, பல கோரங்களில் சிக்கி சீரழிந்ததாய் காட்சியளித்தது.
அதைக் கண்டவள் மனதில், ‘எப்படியாவது இங்கிருந்து தப்பிக்க வேண்டும்’ என்று எண்ணிக் கொண்டவள், அங்கிருந்து எழ முற்பட, அவளின் கால்களை ஏதோவொன்று பிடித்திருப்பதாக தோன்றியது.
அந்த இருட்டில் சரியாகத் தெரியாமல் கண்களை கூர்மையாக்கி பார்க்க, அங்கிருந்த முட்செடி, அவளின் கால்களை ஒன்றோடொன்று சேர்த்து பிணைத்திருந்தது. அதிலிருந்த முட்கள் அவளின் கால்களை பதம் பார்க்க, சற்று நேரம் அதிர்ச்சியில் உறைந்திருந்தவள், வேதனை தாங்க முடியாமல், “ஆ….” என்று கத்தினாள்.
அடுத்த நொடி, நிலம் பிளந்து அங்கிருந்து வெளிவந்த கரம்… பாதி எரிந்தும் எரியாமலும், தோல் பீய்ந்து, ரத்தம் சொட்டு சொட்டாக வழியும் கரம் அவளின் வாயை பொத்தியிருந்தது.
இங்கு அவளால் ‘விக்கி’ என்று அழைக்கப் பட்டவனோ, அவளின் அலறலில், “நித்து….” என்று கத்தினான்.
சற்று நேரத்திற்கு முன்பு, தாங்கள் வந்த பாதை தவறானதோ என்று எண்ணியவன், தன் மனைவியிடம் கூறினால், அவளிருக்கும் கோபத்தில் தன்னை அடித்து விடுவாள் என்று புரிந்தவனாய், அவளை விட்டு சற்று முன்னே சென்று, தன் நண்பனிற்கு அழைத்து விலாசத்தை கேட்டான்.
தாங்கள் செல்லும் இடத்திற்கு, முக்கிய சாலையில் இன்னும் சிறிது தூரம் சென்று பின் வரும் கிளை சாலையில் செல்ல வேண்டும் என்று நண்பனின் மூலம் அறிந்தான். அதை எப்படி அவளிடம் கூறுவது என்ற யோசைனையிலேயே திரும்பியவன், அங்கு தன் மனைவியைக் காணாமல் பதட்டமானான்.
‘இவ எங்க போனா…’ என்று அவளைத் தேடும்போது தான், அவளின் அலறல் சத்தம் கேட்டது.
அவளின் ஆபத்து உணர்ந்து, வேகமாக அந்த இடத்தை அடைந்தான். ஆனால் அங்கு அவன் கண்டதோ, தன் மனைவியை ஏதோ ஒன்று அந்த வீட்டிற்குள் இழுத்து செல்வதும், அவள் அந்த வீட்டிற்குள் சென்று மறைந்தவுடன் அந்த வீடு மாயமாய் மறைந்து போவதும் தான்.
அவனோ நடந்த நிகழ்வுகளிலிருந்து வெளிவராதவனாக, அந்த வீடிருந்த இடத்தையே வெறித்துக் கொண்டிருந்தான்.
பின் நிகழ்விற்கு திரும்பியவன், நடந்தததை நம்ப முடியாமல் அருகில் சென்று பார்த்தான். அங்கு ஒரு வீடிருந்ததற்கான அடையாளமே இல்லை.
தன் மனைவி இனி இல்லை என்பதை நம்பமாட்டாதவனாய் அவளைத் தேடி அந்த சூனிய பூமியில் அலைந்தான். ஒன்றுமே இல்லாத இடத்தில் இல்லாத ஒன்றை எவ்வளவு நேரம் தேட முடியும்….
விரக்தியின் விளிம்பில் இருந்தவனின் தொண்டையில் இருந்து, ‘நித்தூ…உ…’ என்று கத்தினான்.
தூக்கத்தின் பிடியில் இருந்த ஜான்வி, அடித்துப் பிடித்து எழுந்திருந்தாள். உடல் முழுக்க வேர்த்திருந்தது. அப்போது தான் கவனித்தாள், மின்விசிறி ஓடவில்லை அவள் இரவு போட்டுவிட்ட விளக்குகளும் அணைந்திருந்தன.
‘ச்சே பவர் கட்…’என்று முணுமுணுத்தவள் மெதுவாக கட்டிலை விட்டு இறங்கினாள். சுவரை தடவிக் கொண்டே சென்றவள், அங்கிருந்த மேஜையில் தயாராக வைக்கப் பட்டிருந்த மெழுகுவர்த்தியை ஏற்றினாள்.
மெழுகுவர்த்திலிருந்து வந்த ஒளி இருட்டை சிறிது விலக்க, சுவரில் தெரிந்த உருவத்தை பார்த்து பயந்தாள்.
‘ச்சே நம்ம நிழல் தானா…’ என்று ஆசுவாசப்பட்டவளாய் அவள் நகர்ந்து செல்ல, அவளின் நிழலோ அவளுடன் நகராமல் அங்கேயே நின்றது.
அமானுஷ்யம் தொடரும்…
இன்றைய அமானுஷ்ய இடம்
பான்கர்ஹ் கோட்டை (Bangarh fort)
இந்தியாவில் அமானுஷ்ய இடம் என்று சொன்னால் முதலில் நினைவிற்கு வருவது பான்கர்ஹ் கோட்டை. இக்கோட்டை ராஜஸ்தான் மாநிலத்தில் ஆல்வார் மாவட்டத்தில் உள்ளது. தலைநகர் ஜெய்ப்புரில் இருந்து சுமார் 52 கிலோமீட்டரில் அமைந்துள்ள இக்கோட்டை பல அமானுஷ்ய ஆய்வாளர்களின் ஆர்வத்திற்கு தீனி போடும் இடமாய் கருதப் படுகிறது. மேலும் இதைப் பற்றிய வட்டாரக் கதைகளினால், இதில் ஆர்வமுடையவர்கள் பலர் இக்கோட்டையை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
மாலை நேர சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு இக்கோட்டைக்குள் செல்ல அனுமதி இல்லை என்று Archeological survey of India கூறுகின்றது.
பின்கதை:
இக்கோட்டை 17ஆம் நூற்றாண்டில், மான் சிங் என்பவரால் அவரது மகன் மாதவ் சிங்கிற்காக கட்டப்பட்டது. அவர்களின் வம்சாவளி இளவரசியான ரத்தினாவதி பேரழகி என்று போற்றப்படுபவள். அவளின் 18ஆம் அகவையில், அவளின் அழகிற்காகவே சுற்றுப்புற ராஜ்ஜியத்தில் இருந்து பலர் அவளை மணம் முடிக்க கோரிக்கை விடுத்தனர் என்றும் சொல்லப்படுகிறது. அத்தகைய அழகியான ரத்தினாவதியின் அழகில் மயங்கி அவளை அடைய விரும்பினான் மந்திரவாதி ஒருவன். ஒரு நாள் அவள் சந்தைக்கு வரும்போது, வாசனை திரவியங்கள் விற்கும் வனிகனாக அவள் முன் தோன்றினான் அவன். ஒரு வாசனை திரவியத்தை அவள் முன் நீட்டி முகர்ந்து பார்க்கச் சொன்னான். அந்த வாசனை திரவியத்தில் வசிய மருந்தை கலந்து அவளை அடைவதே அவனின் திட்டம். ஆனால் இதை அறிந்த ரத்தினாவதி அந்த வாசனை திரவியத்தை அவன் அருகில் இருந்த கல்லின் மீது தூக்கி வீச, அந்த கல் உயிர் பெற்று பெரிதாகியது, அவனின் மந்திர சக்தியினால். அதில் வசிய மருந்து கலந்ததால், அந்த மந்திரவாதியின் வசியத்திற்கு உட்பட்ட அந்த கல் மந்திரவாதியை அணைத்து (!!!) அவனின் இறப்பிற்கு காரணமானது. சாகும் தருவாயில் அந்த மந்திரவாதி ரத்தினாவதிக்கு சாபம் கொடுத்தான். அவளும் அவளின் மக்கள் அனைவரும் பசி, பஞ்சத்தால் இறந்து அக்கோட்டையிலேயே ஆவியாய் சுற்றுவர் என்றும் அவர்களுக்கு மறுஜென்மம் என்பதே கிடையாது என்பதும் அச்சாபம். அவன் இறந்த சில நாட்களிலேயே அவன் சாபம் பலிக்க, இன்னமும் அக்கோட்டையில் அவர்களின் ஆவிகள் சுற்றித் திரிவதாக கூறுகின்றனர்.
அதற்கடுத்த காலங்களில், பல்வேறு தரப்பினர் அக்கோட்டையை புணரமைக்க பணிகளை செய்தாலும், ஏதாவது தடங்கல் வந்து அக்காரியத்தை தடை செய்து கொண்டிருக்கிறது.
இன்னும் அங்கு வாழும் சொற்ப கிராமத்தவர்கள், அவர்களின் வீட்டில் மேற்கூரை கட்டுவதில்லை. அப்படி ஏதாவது ஒரு வீட்டில் மேற்கூரை கட்டினாலோ, கட்டியவுடன் இடிந்து விழுவதாகக் கூறுகின்றனர்.
இரவு அனுமதி இல்லாதபோதும், சிலர் ஆராய்ச்சிக்காகவும், சிலர் பந்தயத்திற்காகவும், பலர் புரளிகளை நம்பியும் அங்கு செல்கின்றனர். அப்படி இரவு நேரத்தில் அங்கு செல்பவர்களில், பலர் காணாமல் போகின்றனர். சிலர் திரும்பி வந்தாலும், மர்மமான முறையில் இறந்து போகின்றனர் என்றும் அங்கிருக்கும் மக்கள் கூறுகின்றனர்.
இதனை செய்வது அந்த மந்திரவாதியை பழி வாங்க காத்திருக்கும் ரத்தினாவதியின் ஆவியா…? உங்களின் கருத்து என்ன…