மோகனங்கள் பேசுதடி!13

eiL5KAD79398-342d7409

மோகனம் 13

காலச்சுழற்சியில் அன்பு கொண்ட இரு நெஞ்சங்களுமே ,இன்று எதிர்மறையாக நின்று மோதலில் வெடித்து ஆறாத ரணமாய் காயங்கள் உருவாக்கி மறையாது பார்த்தது. இரு நெஞ்சுகளுக்கும் இருவேறு காயங்கள்.

வரமென அவள் வாழ்வினுள் சிறு புள்ளியாய் நுழைந்திருந்த விஷ்வா, இன்றோ அவளுக்கு அவனொரு சாபமாய் மாறியதேனோ?

வாழ்க்கை என்னும் வட்டத்தில் அருவியின் வாழ்வு பந்து போல் ஒவ்வொருவரால் சுழற்றியடிக்கப்பட்டது.

மணமக்கள் இருவரும் விஷ்வாவின் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டனர். சம்பிரதாயங்கள் அனைத்தும் முடிந்து அருவியை ஒரு அறையை காட்டி அதில் ஓய்வெடுக்க கூறிவிட்டனர்.

அருவி உளம் இப்போது அக்னிபிழம்பாய் எரிந்து கொண்டிருந்தது. ஆனால் அதை காட்ட துணிவு இல்லை. அவன் முன் அப்படியே இருந்திட முடியாதே?

இந்த திருமணத்தில் யாருக்கும் பெரிதாக சொல்ல எதுவுமில்லை. சிறியவர்களின் ஆசைக்காக நடந்தது.

பெரியவர்களின் எண்ணங்களுக்கு மாறுப்பட்ட விடயமாக, சிறியவர்கள் மகிழ்ச்சியில் துள்ளி குதிக்காத குறை தான்.

அதிலும் அகல்விழிக்கும் அருணிற்கு இதில் மட்டற்ற மகிழ்ச்சி.

குழந்தை அன்னை மடியில் ஒய்யாரமாய் அமர்ந்து அவளை கடுப்பேற்றியது.

” மம்மி நாம இனி அப்பா கூத தான இதுப்போம்” குழந்தை மகிழ்வாய் கேட்க, முகத்தை அஷ்ட கோணலாக மாற்றினாள் அருவி.

“அம்மு…” அதட்டல் விட,

“சொல்லு மம்மி. அப்பா கூத தானே இதுப்போம். வா நாம போய் என்னோத டெதியை எத்துட்டு வந்துடுவோம்” சொல்ல,

“உனக்கு யாரு சொன்னது அவன் தான் உன் அப்பான்னு” கோபமாய் மகளிடம் கேட்க,

“மம்மி இது கூத உனக்கு தெதியாதா?” கையை நீட்டி அவள் முறைப்புடன் சொல்ல,

“எங்க சொல்லு பார்க்கலாம்?”

“என் ஃப்ரெண்ட்ஸ் அப்பா எல்லாம் என்ன பண்ணுதாங்களோ , அதெல்லாம் சீனிஅரும் செஞ்சாங்க. அப்போ அவரு அப்பா தானே” பிள்ளை சொல்லவும், அருவியின் மனம் கலங்கியது.

இவளின் தந்தையை கூட இவள் இப்படி பாசமாக அழைத்தது இல்லை. எதிலுமே ஒரு ஒதுக்கம் இருவரிடமும் இருக்கும். தந்தை தான் என்றாலும் அவளின் முன்னாள் கணவன் ஒருநாளும் பிள்ளையிடம் தந்தையாக இருந்ததில்லை. ஏன் அவளை ஒரு உயிராக கூட மதித்ததில்லை.

இப்போது அருவிக்கு புரிகிறது மகள் தந்தையின் பாசத்திற்கு எத்தனை ஏங்கிருக்கிறாள் என்று.

அதற்காக எல்லாம் விஷ்வாவை கணவனாக ஏற்க முடியுமா? அது இவளின் கனவில் கூட நடக்க இயலாத ஒன்று. அவன் தனக்கு செய்தததற்கு தான் காலியாய் மாறி அவனை அழித்திருக்க வேண்டும். ஆனால் காலம் இப்போது அவனின் தாலியை வாங்கி அவனுக்கு மனையாட்டியாக்கியது.

எல்லாம் விதி…இல்லை இல்லை அனைவரும் செய்த சதி…

மகள் அன்னையை இரண்டு முறை அழைத்தவள்,எந்தவித பதிலும் இல்லாமல் போக சுதந்திரமாக பறந்தாள்.

பெண் பிள்ளை இல்லா வீட்டில் இன்று வீடு முழுக்க பெண் பிள்ளைகள்.

மஞ்சுளாவுடன் விழியும் மதியும் ஒட்டிக்கொள்ள, அவர்களுள் ஒருவராய் பாந்தமாய் நுழைந்து கொண்டார்.

அருண் வந்தவர்களை கவனித்து கொள்ள, அவனை பாவமாக பார்த்தனர்.

அதனை எல்லாம் கண்டு கொள்ளாது, தம்பியின் வாழ்வு செம்மையுற வேண்டும் என்று வேண்டுதல் வைத்தான்.

அவர்களுக்குள் என்ன பிரச்சனை என்றெல்லாம் அருணிற்கு தெரியாது. அவனுக்கு தெரிந்த ஒன்று அருவியை கையால தெரிந்த ஒருவன் விஷ்வா மட்டுமே என்று தான். அவனிடம் மட்டுமே இப்பெண் அடங்கவும் மிஞ்சவும் செய்கிறாள்.

அதனால் தான் துணிந்து தம்பிக்காகவும் அருவிக்காவும் இதில் இறங்கியதே.

இனி இவர்கள் கொண்டு செல்வதில் தான் இருக்கு அவர்கள் வாழ்க்கையே.

இரவு நேரம் வரையும் அருவி அந்த அறையை விட்டு வெளிவராமல் இருக்க, சந்திரா தான் மகளை எழுப்ப அறைக்குள் வந்தார்.

இருளடைந்த அறையை வெளிச்ச மூட்டிய சந்திரா,” தேனு எழுந்துக்கோ மா” என அவளை எழுப்பிவிட, எழ விருப்பம் இல்லாமல் படுத்தே இருந்தாள்.

“தேனு நேரமாகுது பாரு மா. அடுத்த சடங்குக்கு தயாராகணும்” சொல்ல வெடுக்கென்ன எழுந்தமர்ந்தாள்.

எழுந்தவள் ஏதும் பேசாது அமைதியாக அமர்ந்தே இருக்க, இவளின் அமைதிக்கு மாறாக சந்திரா பேசினார்.

“எங்க உன்னோட இந்த வாழ்க்கையையும் உங்க அப்பா கெடுத்து விட்டுடுவாரோன்னு நினைச்சேன். முதல் வாழ்க்கை தான் உனக்கு சரிவர அமையல. இந்த வாழ்க்கையாவது உனக்கு சந்தோசத்தை குடுக்கணும். மாப்பிள்ளை ரொம்ப நல்ல விதமா நடந்துக்கிறாரு. அவரு உன்ன நல்லா பார்த்துக்குவாருன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு” அவர் பாட்டுக்கு கதைத்து கொண்டே போக இங்கே இவளிடம் மௌனம் மட்டும் தான்.

அதற்குள் மஞ்சுளா கையில் புடவையுடன் வருகை தர, அந்த புடவையை ஒருவித வெறுப்புடன் பார்த்தாள்.

“தேனு ம்மா” பாசமாக அழைக்க,

“ம்ம் அத்தை” அவருக்கு பதில் கூறினாலும் பார்வை என்னவோ அந்த புடவை மீதே தான்.

கடந்த கால வாழ்வு நினைவில் வந்து கசந்தது.

“வாங்க சம்பந்தி ! இப்போ தான் எழுந்தா, இதோ கிளம்ப சொல்றேன்” சந்திரா படபடக்க சொல்ல,

“பொறுமையா கிளம்பட்டும். இது அவங்க வாழ்க்கை சம்பந்தி” என்றவர் மருமகள் பக்கம் சென்றார்.

“இந்த புடவை ஒரு சம்பிரதாயத்துக்கு தான். வாழ போறது நீங்க தான் ” சூசகமாக சொல்லி அவள் தலையை கோதி விட்டவர் அறையை காலி செய்தார்.

இரவு நேரம் நெருங்க அருவியை தவிர்த்து அனைவரும் சாப்பாடு மேஜையில் அமர்ந்திருக்க, விஷ்வா முகத்தில் என்றும் இல்லாத புன்னகை குடிகொண்டிருந்தது. பார்த்த மஞ்சுளாவிருக்கு மகனின் இந்த சந்தோஷம் எப்போதும் இருக்க வேண்டும் என வேண்டுதல் வைத்தார்.

“என் ஜூனியர் தங்கத்துக்கு சாப்பிட என்ன வேணும்?” மகளோடு ஐக்கியமாக, குழந்தை அவன் மடியில் அமர்ந்து இது இது என ஒவ்வொரு பாத்திரமாய் காட்டியது.

அவனும் மகள் சொன்னதை எல்லாம் ஒரு தட்டில் வைத்தவன், அவளுக்கு ஊட்ட தொடங்கினான்.

“டேய்! போய் தேனை கூட்டிட்டு வா டா. அவ இன்னும் சாப்பிட வரல பாரு” மஞ்சுளா சொல்ல,

“அவளுக்கு சாப்பாட்டை மேலயே கொடுத்து விட்டுடுங்க ம்மா. இங்க நம்மளோட சாப்பிட கொஞ்சம் அனீசியா பீல் பண்ணுவா. கொஞ்சம் அவ செட்டாகுற வரைக்கும் அவளை எதிர் பார்க்க வேணாமே” அவளின் தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு அவளுக்காய் விஷ்வா பேச , அதில் அருவியின் குடும்பம் நெஞ்சம் மகிழ்ந்தது.

சந்தானமூர்த்தி மாலையே வீட்டிற்கு சென்றுவிட்டார்.‌இங்கே இருந்து விஷ்வாவை எதிர்க்கொள்ள அவருக்கு சுத்தமாக விருப்பமில்லை. அதனால் விரைவிலே கிளம்பிவிட்டார்.

விஷ்வாவோ அவளுக்காய் யோசித்து பேச, அறைக்குள் புடவையை கட்டி நிலைக்கண்ணாடி முன்பு அமர்ந்திருந்தவளோ அவனை திட்டி தீர்த்தப்படி இருந்தாள்.

அவனை திட்டுவதால் மனம் கொஞ்சம் சமன்பட்டது.ஆனாலும் அவன் செய்தவைகள் எல்லாம் நம்பிக்கை துரோகம் தான்.

நட்பு என்று வார்த்தையால் சொல்ல முடியாத அழகிய உறவை காதலென்று சொல்லி அந்த நட்பையே இன்று கொச்சை படுத்திவிட்டான்.

நிலைக்கண்ணாடியில் தன் அலங்காரத்தை பார்க்க பார்க்க ஆத்திரம் தான் வந்தது.

“இவன் பண்ற ஃப்ராடு தனத்துக்கு நான் கஷ்டப்பட வேண்டியதா இருக்கு. யாரைக் கேட்டு இப்படி எல்லாம் பொய் சொன்னான்.இவன் மூஞ்சிலே முழிக்க கூடாதுன்னு நினைக்கிற என்னை இந்த கடவுள் இப்படி சோதிச்சுட்டாறே” உள்ளுக்குள் அவனை திட்டி தீர்த்தாள்.

“அக்கா” என்ற அழைப்போடு மதி உள்ளே வர, அவளை கண்டதும் பாவையின் விழிகள் சிறிது கண்ணீரை தேக்கியது.

“மதி மா! வா டா உள்ள” அன்பொழுக தங்கையை உள்ளே வரவேற்றாள்.

“அக்கா இந்தா உனக்கு சாப்பாடு மாமா கொடுத்து விட்டாரு” மதி சொல்ல கோபம் மூண்டது பெண்ணுக்கு.

அமைதியான பெண்ணவளை விஷ்வா என்ற மனிதன் சூறாவளியாய் மாற்றியிருந்தான்.

“மதி! என்னை மன்னிச்சிடு டா” தன்னால் அவளுக்கு ஏற்பட்ட கஷ்டத்திற்கு மன்னிப்பு வேண்ட,

“எதுக்கு இந்த சாரி?”புரியாது மதி வினவ,

“என்னால தானே உனக்கு இந்த கஷ்டம் எல்லாம்” மனவேதனையுடன் அவள் மொழிய, அவளை பார்த்து சிரித்த மதி ,” அப்போ இந்த டையலாக் நான் தானே சொல்லணும். நீ சொல்ற? என்னால தானே உனக்கு இத்தனை கஷ்டம்” முகம் சுருக்கி கவலையுடன் சொல்லவும் அக்காளின் மனம் தாங்கவில்லை.

“மதி மா” என அவளை அணைத்துக்கொண்டு ஆறுதல் படுத்தினாள்.

இருவருக்குமே அந்த அணைப்பு தேவைப்பட்டது. இத்தனை நாட்களில் ஒருவருக்கொருவர் வருத்தத்துடன் தான் அழைந்தனர்.

இருவரையும் அந்த அறையின் வாசல் முன்பு சாய்வாக நின்று கைகளை மார்புக்கு நடுவே கட்டி கண்ணில் பாசத்தை தேக்கி வைத்து அவர்களையே சிரிப்புடன் பார்த்திருந்தான் விஷ்வா.

“என்ன மாம்ஸ் அக்காவை சைட் அடிக்கிறீங்களா” கேட்டப்படி விழி வருகை தர,

“உன் அக்கா இவ்வளோ நேரம் என்னை அடிக்காம இருக்கிறதே பெருசு. நானே பயந்து போய் இருக்கேன் நீ வேற”

“ஏது என் அக்கா உங்களை அடிக்க போறாளா? ஏன் மாம்ஸ் காமெடி பண்ணிட்டு இருக்கீங்க? அவ கொசுவை கூட அடிக்க மாட்டா. புள்ள பூச்சியை பார்த்து இப்படி சொல்றீங்களே”

“என் பொண்டாட்டி கொசுவை வேணா அடிக்காம இருக்கலாம். அதுக்கும் சேத்துவச்சு நான் வாங்கபோறேன். நான் செஞ்ச பாவத்துக்கான தண்டனை உன் அக்கா மூலமா கிடைக்கப்போகுது” புன்னகையுடனே சொல்ல, விஷ்வாவை தான் விழி பார்த்தாள்.

“உண்மையை சொல்லலாமே மாமா? எதுக்கு இத்தனை கஷ்டம்?”

“எந்த உண்மையை சொல்ல சொல்ற நீ? அவளுக்கு தெரிஞ்சது தான் உண்மை அகல் மா. நீ எங்களை விட்டு தள்ளு, உன்னோட படிப்பில் மட்டும் கவனத்தை வை ” சொல்லி மாடிக்கு சென்றுவிட்டான்.

போகும் விஷ்வாவை கவலையுடன் பார்த்திருந்தாள்.

*******

இங்கே நல்ல நேரம் பார்த்து அருவியை விஷ்வாவின் அறைக்கு அழைத்து சென்றனர்.

என்ன தான் மஞ்சுளா மருமகளுக்காக பேசியிருந்தாலும் ஒரு தாயால் அவளை அப்படியே விட முடியவில்லை.

கடந்த கால வாழ்க்கையை நினைத்து வருங்காலத்தை மகள் கெடுத்துக்கொள்வாளோ என்று பயந்து போனார் சந்திரா.

இன்னாள் வரை அவள் எதற்கு டிவேர்ஸ் செய்தால் என்று யாருக்கும் தெரியாது. கல்யாணத்திற்கு பின்பு மகளை காண்பதே அறிது என்றாகிவிட, எங்கிருந்து அவளின் பிரச்சனைகளை அறிந்து கொள்வது.

வாய்விட்டு சொல்லும் பெண்ணாக இருந்தால் கூட ஏதாவது தெரிந்திருக்க வாய்பிருக்க, இவள் தான் பேசா மடந்தை ஆகிற்றே. மனதினுளே அத்தனை கஷ்டத்தை வைத்து கொள்வாள்.

“இங்க பாரு தேனு, கடந்த காலத்தை நினைச்சு கிடைச்ச வாழ்க்கையை கோட்டை விட்டுடாத. மாப்பிள்ளை நல்ல விதமா தான் தெரியுறாரு. அவரை அனுசரிச்சு போ. உங்களுக்குள்ள இருந்த பிரச்சனையை காட்டி அவரை தள்ளிவச்சிடாத தேனு” புத்தி மதி கூறியே அவளை அனுப்பி வைத்தார்.

அறைக்குள் வந்தவளுக்கு ஏனோ மூச்சு முட்டியது போல் உணர்வு.

ஒரே நாளில் அத்தனை பேரையும் தன்போல் இழுத்திருந்தான். அதிலும் அவள் மகள் அவனை விடவே இல்லை. காலையிலிருந்து அப்பா…அப்பா…என்று அவன் பின்னாளே சுற்றியது குழந்தை.

அவனின் ஆளுயர புகைப்படம் பெரிதாக அறையின் ஒருப்புற சுவற்றில் மாட்டப்பட்டிருக்க, பார்த்த அருவிக்கு அவனை கொல்லும் அளவிற்கு ஆத்திரம் வந்தது.

“எத்தனை நேரம் என்னோட ஃபோட்டவையே வச்ச கண்ணு வாங்காம பார்ப்ப அருவி” அவள் பின்னால் கேட்ட குரலில் திடுக்கிட்டு போனவள், திரும்ப பார்க்க கால் தடுமாறி கீழே விழப்பார்த்தவளை தன் கரத்தால் இடையை பிடித்து நிறுத்தியன்,” என்னைய நீ நேர்லையே பார்க்கலாம் அருவி மா ” கூறி அவன் பிடித்திருந்த இடையில் அழுத்தத்தை கொடுத்தான்.

சில நொடிகள் தான் பெண் அவனின் ஆளுகையில் அமைதியாய் நின்றது எல்லாம். சுயம் பெற்றவள் அவனை தள்ளிவிட்டு கோபத்தோடு அவனை முறைத்தாள்.

“என் அருவி எப்படி இருந்தாலும் அழகு தான்” உல்லாசமாய் கூறியவன் அவளை நெருங்கி வர,அப்போது தான் அவன் குளித்திருக்க அவன் முகத்தில் வலிந்த சொட்டு நீர் அவன் மார்பில் பட்டு தெரித்தது.

அவள் முன் வெறும் டவ்வளோடு நிற்க, பெண் உடனே திரும்பி கொண்டாள்.

“இப்படியா ஒரு பொண்ணு முன்னாடி நிற்கிறது?”

“இங்க எனக்கு தெரிஞ்சு என் பொண்டாட்டி மட்டும் தான் இருக்கா. அவ முன்னாடி இப்படி எல்லாம் நிக்கலாம் தப்பே இல்ல” அவள் மேனி உரச நின்றான்.

இவனின் செய்கையில் பாவையவள் திடுக்கிட்டு ஓரடி முன்னே நடந்தாள்.

“ச்சீ…” சொல்லி நகரப்பாரத்தவளை நகரவிடாது தன் பிடியில் நிறுத்தியவன், அவள் காது மடலில் மெதுவாய் கிசுகிசுத்தான்.

“உனக்கு மட்டும் தான் என்னைய எல்லாமும் பார்க்க உரிமை இருக்கு. அதே தான் எனக்கும் அருவி மா. இந்த உன்னோட சீனியரை ரொம்ப வெயிட் பண்ண வைக்காத” கூறி அவளின் பட்டு கன்னத்தில் பச்சக்கென்று ஒரு முத்தத்தை அழுந்த பதித்து விட்டு மறைந்தான்.