மோகனங்கள் பேசுதடி!15
மோகனங்கள் பேசுதடி!15
மோகனம் 15
விஷ்வாவின் செயலில் பதறிப்போய் அறைக்கு ஓடிவந்த வந்த அருவி மூச்சு வாங்க நின்றிருந்தாள்.
அவள் விஷ்வாவை எந்தளவிற்கு வெறுத்திருந்தாலும், அவள் ஆழ்மனதில் அவனின் மேல் வைத்திருக்கும் அன்பு மெல்ல மெல்ல தூசி தட்டப்பட்டது.
“அய்யோ இப்படி என் மானம் இவன் முன்னாடி போகுதே…?” கூறியவள் நிலைக்கண்ணாடி முன்பு நின்று அவளின் பட்டு கன்னத்தை தொட்டு பார்த்தாள். அன்பும் வெறுப்பும் போட்டிப் போட்டது.
விஷ்வாவிடம் கிடைக்கப்பெற்றது தான் அவள் வாழ்நாளில் கிடைத்த முதல் முத்தம். இதுநாள்வரை அவளுக்கு யாரும் அன்பாக கூட முத்தம் வழங்கியதில்லை.
சிறு வயதிலிருந்தே தந்தையின் அதட்டல் உதட்டலுக்கு பயந்தே காலத்தை ஓட்டி விட்டாள்.
சந்தானமூர்த்திக்கு பெண் பிள்ளைகள் என்றாலே ஆகாது என்றாலும் மூத்த வாரிசாக பிறந்த அருவியை அவர் முற்றிலுமாக வெறுத்து ஒதுக்கினார்.
சிறு வயதிலிருந்து அவளை குத்தி காட்டி வளரவிடாது கொட்டியே வளர்த்திருந்தார். அவளும் அவருக்கு ஏற்றவாறே தான் வளர்ந்தாள்.
இது உலகமல்ல இதை விட அழகான ஒரு உலகம் ஒன்று இருக்கின்றது என்று காட்டியது அவளின் சீனியரான விஷ்வா தான்.
அவள் கல்லூரி படித்த காலங்களில் அவனின் பெயரை ஒருநாளுக்கு ஆயிரம் முறையாவது அழைத்திருவாள்.
அப்படி இருந்த அருவி தான் இன்று அவனை வெறுத்து ஒதுக்க நினைக்கிறாள்.
எத்தனை நேரம் அப்படியே நின்றிருப்பாளோ அவளது அன்னை வந்து அழைக்கவும் தான் நிகழ்காலத்திற்கு வந்தாள்.
“தேனு…” என்று அழைத்தவரை,” சொல்லுங்க ம்மா, என்ன விஷ்யம்…?” கேட்டப்படி அன்னையோடு சோஃபாவில் அமர்ந்தாள்.
“உன்னையும் மாப்பிள்ளையையும் மறுவீட்டுக்கு அழைக்கலாம்னு இருக்கேன் டா” சிறிதான குரலில் சொல்லி மகளை மேலிருந்து கீழாக பார்வையை செலுத்தினார்.
அவரின் பார்வைக்கான அர்த்தத்தை புரிந்து கொண்டவளுக்கு இதழில் ஓரத்தில் முறுவல் வந்தது.
“ஏதோ புதுசா பார்க்கிற மாதிரி பார்க்குறீங்க…? எப்பவும் இருக்கிற உங்க தேனு தான் மா…” கேள்வியோடு பதிலை முன் வைக்க, மகளின் பதிலில் மனம் கவலையானது.
“ஒன்னுமில்லை சும்மா பார்த்தேன் தேனு” சமாளித்தவர்,” நான் கேட்டதுக்கு பதில் வரலையே?” மகளை பார்க்க அவளோ முகத்தை சுருக்கினாள்.
“வேணாம் ம்மா. என்னால அப்பா எனக்கு பண்ணியதை மறக்க முடியாது. அவரோட ஆசைக்கு இரு உயிரை பணயம் வச்சிட்டாரு. அவரை பார்க்கும்போது எனக்கு அவர் செய்தது தான் ஞாபகத்துக்கு வரும் வேணாம்” முடிவோடு சொல்லியவள் எழுந்து கொண்டாள்.
மகளோடு சேர்ந்து சந்திராவும் எழுந்து விட ,”உங்களை எதிர்த்து பேசினதுக்கு என்னை மன்னிச்சிடுங்க ம்மா” கூறி அருவி அந்த அறையை விட்டு வெளியேறினாள்.
போகும் மகளை ஆயாசத்துடன் பார்த்திருந்தார்.
மகளுக்கு எத்தனை பெரிய துரோகத்தை கணவர் செய்துள்ளார். அதை பற்றின சிறு கவலை கூட இல்லாது வீட்டில் ஒய்யாரமாய் அமர்ந்து கொண்டு ஆட்சி புரிகிறார்.
வாழவே கசப்பாய் இருந்தது. வாழ்ந்தாக வேண்டிய கட்டாயம்.
பதினொரு மணிப்போல் மூவரும் கிளம்பி கூடத்தின் முன்பு கிளம்புகிறோம் என்று புறப்பட்டு விட , அவரை “அத்தை “என்றழைப்போடு அவர்களை நிறுத்தியிருந்தான் விஷ்வா.
“சொல்லுங்க தம்பி…”
“உங்களுக்கு ஏதாவது எங்கக் கிட்ட சொல்லன்னும்மா அத்தை…?” விழி உயர்த்தி கேள்வி கேட்பவனை புரியாது பார்த்தார் சந்திரா.
“நீங்க என்ன சொல்றீங்க தம்பி எனக்கு புரியலையே” மாப்பிள்ளையின் கூற்றில் ஒருவித குழப்பநிலை.
“இல்ல அத்தை. உங்களுக்கு என்ன பண்ணணும்னு தோணுதோ அதை தைரியமா பண்ணுங்க “புதிர் போட்ட விஷ்வா மனைவியின் அருகே வந்து அவளின் தோளில் கையினை போட்டு தன்னோடு அணைத்தவன்,” மறுவீட்டுக்கு நாங்க கண்டிப்பா வரோம் அத்தை. நீங்க அதுக்கான ஏற்பாடுகளை பாருங்கள்” சொல்லவும் , விஷ்வாவை அழுத்தத்துடன் பார்த்திருந்தாள் அவனின் மனையாட்டி.
விஷ்வாவின் கூற்றில் ஒரு நொடி சந்தோஷமானாலும், மகளின் முகத்தை பார்த்து சிறிது தயங்கினார்.
“இல்ல தம்பி…அது வந்து…” சந்திரா தயங்க, அவரின் தயக்கங்களை புரிந்து கொண்ட விஷ்வா ” என் மனைவி ஒன்னும் சொல்ல மாட்டா அத்தை. நீங்க மறுவீட்டுக்கு ஆக வேண்டிய வேலையை பாருங்க. நாங்க கொஞ்சம் நேரம் கழிச்சு வரோம் “மனைவியை ஓரக்கண்ணால் பார்த்தவாறே சொன்னான்.
அருவியோ அவனின் அணைப்பில் அவஸ்தையாக நின்றிருக்க,’ இப்படி அனைவரின் முன்பும் அணைத்திருக்கிறானே’ என தவிப்புடனே நின்றிருந்தாள்.
“சரிங்க தம்பி…” புன்னகை முகமாக கூறியவர் மகள்களோடு சந்தோஷமாக கிளம்பினார்.
சந்திரா கிளம்பி செல்லும்வரை அவனின் கையணைப்பிலே தான் இருந்தாள் அருவி.
எல்லாரும் நகர்ந்ததும் அவனிடமிருந்து வழுக்கட்டாயமாக பிரிந்து நின்றவள், ” நாங்க பேசியதை ஒட்டுக்கேட்டியா?” முறைப்புடனே அனல் கக்கினாள்.
“இதுல ஒட்டு கேக்க என்ன இருக்கு… எதர்ச்சியா அந்த இடத்தை கடக்கும்போது காதில் விழுந்தது”
“அப்போ நான் என்ன பதில் சொல்லி இருப்பேன்னு கேட்டிருப்பியே, அப்படி இருந்தும் ஏன்…?”
“இங்க பாரு அருவி ம்மா…” அவளின் தோள்களில் கையை போட்டு தன் முன்னே நிறுத்தி அவள் விழிகளில் தன் விழியை கலக்க விட்டவன் ,” நம்மளை கஷ்டபடுத்திறவங்க முன்னாடி பயந்து ஓடி ஒழியாம ,தைரியமாய் எழுந்து நிற்கனும் டா “தைரிய மூட்ட எண்ணி பேச , அதுவே அவனுக்கு ஆபத்தாய் வந்து நின்றது.
“எனக்கும் கூட ஆசை தான் என்னைய உயிரோட புதைச்ச உன் முன்னாடி நிமிர்ந்து வாழணும்னு. ஆனா விதி உன்னோடு கோர்த்து விட்டு வேடிக்கை பார்க்குதே ” அழுத்தமான குரிலில் நிதானமாக கூற, அவளை வேதனையுடன் பார்த்தான்.
“எதிரியை கூட மன்னிக்கலாம், ஆனா துரோகிய என்ன செய்ய? சொர்கத்தை காடியவனே நரகத்திலும் தள்ளிவிட்டு போனா என்ன பண்றது?” ஆவேசத்துடன் பேசினாலும் குரலில் நிதானம் மட்டும் குறையவில்லை.
பதில் கூற திறனில்லாது விஷ்வா மௌனம் காக்க, கசந்த முறுவல் புரிந்த பெண் அவனின் கைகளை எடுத்து விட்டாள்.
அருவி அவனை கடந்து அறைக்கு சென்றதும், விஷ்வா அமைதியாக தோட்டத்தில் போய் நின்றுவிட்டான்.
அவனால் யாரையும் எதிர்த்து நின்று போராட தைரியம் உள்ளவனுக்கு அருவியை எதிரே கூட நினைத்து பார்க்க முடியவில்லை.
அந்த ஒருநாள் அவர்கள் வாழ்வில் வரமால் இருந்திருந்தால், இன்று இத்தனை கஷ்டப்பட்டிருக்க வேணாம்.
ஆனால் என்ன செய்ய நடந்த நிகழ்வினை நடவாதது போல் மாற்றவா முடியும்?
மாற்ற முடியாது தான் ஆனால் மறக்கடிக்க முடியுமே… தன் காதல் அவளின் வலிகளுக்கு ஒரு வடிகளாக இருக்கும் என்றெண்ணினான்.
காதல் அவள் காயத்தினை மறக்கடிக்க செய்யும்.
அறைக்குள் வந்த அருவிக்கு விஷ்வாவிடம் கடினமாக பேசியதை நினைத்து மனம் சிறிதாக வருந்த கூட செய்தது.
அவனை வெறுக்கும் மனமே அவனுக்காய் சண்டித்தனமும் செய்ய, தடுமாறினாள் பெண்.
சிறிது நேரத்திலே அறைக்குள் நுழைந்திருந்த விஷ்வா அவளின் முன் நின்றான்.
‘என்ன?’ என்பது போல் அருவி அவனை பார்க்க, அவனோ அவளுக்கே உரித்தான புன்னகையை வீசினான்.
அந்த புன்னகையில் கடுப்பான பாவை,” இப்போ என்ன வேணும் உனக்கு..?” சிடுசிடுத்தாள்.
“கிளம்பு அருவி. மறுவீட்டுக்கு போகனும்” சொல்ல,
“என்னைய கேட்டா வரேன்னு சொன்ன, என்னால வர முடியாது. வேணும்னா நீ போய்க்கோ” சொல்லி நகரப்பார்த்தவளை நகராது அவளை பிடித்து கொண்டான்.
அவளின் வலக்கரத்தை தன் கரத்தோடு கோர்த்தவன், அவளை நெருங்கலானான்.
“எ..எ..என்ன பண்ற நீ?” நெஞ்சம் தடதடத்து வார்த்தைகள் தந்தியடிக்க,அவனுக்கோ அதரங்கள் இரண்டும் மெலிதாய் விரிந்தன.
“காதல் பண்ணலாம்னு இருக்கேன் அருவி” உல்லாசமாய் பதில் பேசி, அவளின் ஏகபோக முறைப்புக்கு ஆளானான்.
“லூசா நீ..? முதல்ல தள்ளி போ. அம்மு வந்திட போறா” அவனை நிறுத்திட முயல, அவனோ மோகன புன்னகையை வீசியவன் ” உன்னையும் சேர்த்து தள்ளிட்டு போவேனே தவிர தனியா போற ஐடியா இல்ல பொண்டாட்டி” கூறி நெற்றியோடு நெற்றி முட்டி மூக்குரசினான்.
“கெட் ரெடி அருவி. நான் அம்முவை கிளப்புறேன்”கூறி அவள் கன்னத்தில் லேசாய் தட்டிவிட்டு சென்றான்.
அடுத்த அரைமணி நேரத்தில் மூவரும் கிளம்பி வெளியே வர, மஞ்சுளா யார் கண்ணும் பட்டு விட கூடாதென அவர்களுக்கு சுற்றி போட்டார்.
காரில் அவள் பின்புற அமர பார்க்க, விஷ்வா முறைத்த முறைப்பில் முன்னே அமர்ந்தாள்.
மனைவி தன்னை அறிந்து கொள்வதில் மகிழ்ச்சியானான்.
காரில் குடும்பமாய் பயணம் செய்ய, பூவினி குதுகலமாய் தன் சந்தோஷத்தை அவளின் கைகள் ஆட்டி ஆட்டி அன்னை காதை கடித்தபடி வந்தாள்.
மகள் கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் அருவியும் சலிக்காது பதில் சொல்லவும், மனைவியையும் மகளையும் ஆசையாய் கண்டிருந்தான் விஷ்வா.
அதிலும் அவன் மனைவி ஊதா மற்றும் இளஞ்சிவப்பு நிறத்திலான ஒரு காட்டன் புடவையை உடுத்தியிருக்க, அது அவள் உடலோடு பாந்தமாய் ஒட்டியது.
மனைவியை ஓரப்பார்வையால் அணுஅணுவாய் ரசித்த படி வர, மகளிடம் கதை பேசியவாறே இருந்த அருவிக்கு ஏதோ உறுத்த மெதுவாய் விஷ்வாவின் புறம் திரும்பி பார்க்கவும், கண்ணடித்து பறக்கும் முத்தமொன்றை பறக்க விட, அருவியின் விழிகள் அகல விரித்து முறைத்தாள்.
“என்ன பண்ற நீ…?” பல்லை கடித்தவாறு அடிக்குரலில் மகளுக்கு கேட்காதவாறு சீற,
“லவ் பண்றேன் பொண்டாட்டி…” ஆசையாய் அவளின் விழிகளில் தன் விழியை கலக்கவிட்டான்.
அவன் கண்கள் எதையோ அவளுக்கு உணர்த்த முற்பட, அதனை உதாசீனப்படுத்தினாள் பெண்.
அப்பொழுது மகள் தந்தையிடம் திரும்பி,” அப்பா…” கவிதையாய் அழைக்க,
“சொல்லுங்க ஜூனியர்…”
பூவினியோ தூக்கு என கையை விரிக்க, அருவி தான் ” உன்ன அவங்க வச்சுக்கிட்டா ஓட்ட கஷ்டமா இருக்கும் டா. அப்பா கிட்ட அப்புறம் போவியாம்” சொல்லவுமே மகள் முகம் சுருங்கிவிட, தந்தையால் தாங்க முடியவில்லை.
உடனே காரினை ஓரம் கட்டியவன், மகளை தூக்க அருவியை நெருங்கினான்.
அவனின் இந்த திடீர் நெருக்கத்தில் பெண்ணவள் மனம் தடதடக்க மூச்சை இழுத்து பிடித்தாள்.
அவனோ இதை எதையும் உணராமல் குழந்தையை தூக்க முயன்றான்.
“நானே தரேன்” கூறி குழந்தையை அவன் மடியில் அமர வைத்தவள் ஜன்னல் புறம் திரும்பிக்கொண்டாள்.
பெரும் மூச்சொன்றை விட்டு தன்னை சமன்படுத்தியவளுக்கு குழப்பமாய் இருந்தது.
இப்படியான உணர்வுகள் இவளுக்கு புதிது. இது இரண்டாம் திருமணம் தான். முதல் திருமணத்தில் இவள் மனஉளைச்சலுக்கு ஆளாகியிருந்தாள்.
அதற்கு முழுமுதற்காரணமே விஷ்வா தான். அதுமட்டுமல்லாது முதல் திருமணம் முறிந்து இன்னும் ஒருவருடம் கூட ஆகாத நிலையில், இவன் புறமே மனம் சாய்கிறதே. அப்படியென்றால் தான் என்ன மாதிரியான பெண் முற்றிலுமாக அவளின் சிந்தனையுள் குழம்பி தவித்தாள்.
அதனுடனே வீடும் வந்துவிட, அமைதியாய் இறங்கினாள் அருவி.
ஏனோ இத்தனை நாட்கள் இருந்த வீடு இன்று அவளுக்கு அன்னியமாக தோற்றுவித்தது.
ஆரத்தி எடுக்க சந்திரா வர, மனைவியின் தோளில் கைபோட்டு குடும்பமாய் நின்றான்.
எதற்கும் அருவி அசையவில்லை அமைதியாய் இருந்தாள்.
விழியும் மதியும் அக்காவை பிடித்துக்கொள்ள,அவளோ அமைதி.
மனைவியின் முகத்தை பார்த்தவனுக்கு ஏதோ சரியாக இல்லை என்று தோன்ற, அவளை நோட்டம் விட்டான்.
அருவி பிறப்பிலே அமைதியான குணம் தான்… ஆனால் இந்த அமைதி புயலுக்கு முன் வரும் அமைதி.
மறுவீட்டிற்கு வந்திருந்த மகளையும் மருமகனையும் தாங்கு தாங்கென தாங்கினார் சந்திரா.
சந்தனமூர்த்தியோ அவரது அறையை விட்டு வெளி வரவே இல்லை. அவரை அங்கு ஒரு ஆளாக கூட யாரும் நினையவில்லை.
‘கொஞ்சமாது இங்க நான் ஒருத்தன் இருக்கேன்னு கண்டுக்குறாளுங்களா, இதுங்க போகட்டும் அப்புறம் இருக்கு இந்த சனியனுங்களுக்கு ‘ அறைக்குள் குறுக்கும் நெடுக்கும் நடந்தவாறே வீட்டு உறுப்பினர்களை கருவினார்.
பின்புறம் இருந்த குட்டி தோட்டத்தில் மகளோடு இயற்கையை ரசித்தபடி இருந்த விஷ்வாவை தேடி வந்தாள் அகல்விழி.
“என்ன மாம்ஸ் அக்கா கூட ரொமான்ஸ் பண்ணுவீங்கன்னு பார்த்தா, இங்க நின்னு காத்து வாங்கிட்டு இருக்கீங்க?” மாமனை கிண்டல் செய்ய, அவனோ திரும்பி பார்த்து” ஏன் நான் இன்னும் கொஞ்ச நாள் உயிரோட இருக்க வேணாமா? ஏன் இப்படி உங்க அக்காவோட கோர்த்து விட பார்க்கிற அகல் ம்மா” சொல்லி தலையில் வலிக்காதவாறு தட்டினான் விஷ்வா.
“நான் பெரிய பொண்ணு மாம்ஸ், இப்படி தலையில் அடிக்காதீங்க .அப்புறம் நான் வளர மாட்டேன்” தலையை தேய்த்தவாறே மாமனை முறைத்தாள் அகல்விழி.
தந்தையை சித்தி முறைப்பதை கண்ட குழந்தை பூவினி,” சித்தி…” கோபமாய் அழைக்க,
“என்ன டி?”
“என்கூத பேசாத சித்தி…”அக்காள் மகள் முறைக்கவும், புரியவில்லை அகல்விழிக்கு.
“ஏன் பேசக்கூடாது?”
“நீ என் அப்பாவை முதைக்குற (முறைக்குற) சித்தி… பேசாத” பிஞ்சு விரலை காட்டி கோபமாக சொல்வது போல் கூற, அந்த பிஞ்சு விரலை பிடித்த விஷ்வா” என் செல்லமே…” என ஆசையாய் அந்த விரல்களில் முத்தமிட்டான்.
“அடியாத்தி…” வாயில் கைவைத்துவிட்டாள் அகல்விழி.
“எப்படி எங்க சப்போர்ட்டு…” புருவம் முயர்த்த, தலையில் அடித்து “நல்ல ஆளு சேர்த்து வச்சிருக்கீங்க ” கடுப்பானாள்.
வெளியில் கடுப்பானது போல் காட்டிக்கொண்டாலும் உள்ளுக்குள் மகிழ்ந்தாள்.
அப்போது அங்கே வந்த அருவி குழந்தையை வாங்கிக்கொண்டு விஷ்வாவை சாப்பிட அழைத்தாள்.
மனைவியின் குரல் உற்சாகமின்றி வரவும், துணுக்குற்றான் விஷ்வா. ஆனாலும் அமைதியாய் இருந்தான் .எதுவானாலும் வீட்டிற்கு போய் பார்த்துக்கொள்ளலாம் என்றிருக்க, அருவி அவன் தலையில் அம்மிக்கல்லை போட தயார்நிலையில் இருந்தாள்.
மருமகன் மறுவீட்டிற்கு வந்திருக்கவுமே, நிலத்தில் ஊர்வது நடப்பது எல்லாமே இருந்தது .
சிக்கன் பிரியாணி , சிக்கன் கரி, மட்டன் சுக்கா, மீன் வறுவல் , மீன் குழம்பு , முட்டை , தயிர் பச்சடி என வகைவகையாய் செய்து அடுக்கலையை அடுக்கி வைத்திருந்தார்.
டைனிங் டேபிளில் அமர்ந்ததுமே, பெரிய வாழை இல்லை மகளுக்கும் மருமகனுக்கும் போட்டவர், ஒவ்வொன்றாய் இலையில் வைக்க தொடங்கினார்.
“என்ன அத்தை இது…? இப்படி எல்லாத்தையும் வச்சா என் குட்டி வயிறு எப்படி தாங்கும்?”
“முதல் தடவை வந்திருக்கீங்க தம்பி ,இது கூட செய்யலைன்னா எப்படி சொல்லுங்க?”
“ஏதோ இது இனி நான் வரவே மாட்டேங்கிற மாதிரி நீங்க இன்னைக்கே எல்லாத்தையும் செய்து வச்சிருக்கீங்க…?” சாதாரணமாக சொல்ல, பதறி போன்னார் சந்திரா.
“வேணாம் தம்பி… இப்படி பேசாதீங்க” வேகமாக சொன்னவர் முகம் வாடிவிட்டது.
அவரின் கவலை படிந்த முகத்தை காண கஷ்டமாக போனது விஷ்வாவிற்கு.
“அம்மா அவரு சொன்னதில் என்ன தப்பிருக்கு? நீங்க இப்படி ஒரே நேரத்தில் எல்லாத்தையும் செய்து வைத்தா எப்படி தான் சாப்பிட முடியும்? மூச்சு முட்டிடும் ம்மா ” ஒரு வித இறுக்கமான குரலில் அவள் மொழிந்திட, மகளின் பேச்சில் கூம்பிப்போய்விட்டது சந்திராவிற்கு.
அந்த நொடியை இலகுவாக்க நினைத்த விஷ்வா, ” அத்தை மதி எங்க?” என்று வினவ,
“எக்ஸாம் நெருங்குதுல தம்பி அதான் அவ படிக்கிறா” சொல்லவும்,” அவளையும் வர சொல்லுங்க அத்தை. எல்லாரும் சேர்ந்தே சாப்பிடலாம்” கூறவுமே,” சூப்பர் மாமா” என்று கைதட்டினாள் அகல்விழி.
யாருக்கோ வந்த விருந்து போல் அமைதியாய் உணவருந்தினாள் அருவி. அவளின் ஒவ்வொரு நடவடிக்கையும் அவளின் குணத்திற்கு மாறுபட்டதாக இருந்தது.
அகல்விழி சென்று மதியை கூப்பிட்டு வர, அனைவருக்கும் சாப்பாடு பரிமாறப்பட்டது.
குடும்பமாக சேர்ந்து சாப்பிட, மூர்த்தி பசி இருந்தும் அறையிலே இருந்தார்.
“இந்த சந்திரா என்னத்தை கிழிக்கிறாளோ, புருஷன் இங்க சாப்பிடாம இருக்காரே கொண்டு வந்து கொடுப்போம்னு இருக்கா, எல்லாம் ஒன்னு சேர்ந்து கூத்தடிக்குதுங்க” பொருமிதள்ளினார் மூர்த்தி.
அனைவரும் சாப்பிட்டு பின்பக்கம் சென்றுவிட, விஷ்வா மூர்த்தி இருந்த அறை கதவை தட்டினான்.
சந்திரா தான் சாப்பாடு கொண்டு வந்திருப்பா என்று நினைத்து கதவை திறந்தவருக்கு, சிரித்த முகமாக விஷ்வா காட்சியளித்தான்.
“நீயா…? இங்க என்ன பண்ற…?” ரௌத்திரத்தை அடக்கி சாதாரணமாய் கேட்க முயற்சி செய்தார்.
“நானே தான் மாமோய்.பாவம் சாப்பிடாம இருப்பீங்களேன்னு புவா கொண்டுவந்திருக்கேன்” சொல்லி அவரை தள்ளிக்கொண்டு உள்ளே வந்தான் விஷ்வா.
“உன்ன யாரு உள்ள வர சொன்னது, வெளிய போ. இந்த சந்திரா எங்க போய் தொலைஞ்சா “காட்டமாய் அவர் சொல்லியதை தூசி தட்டினான் மருமகன்.
“உங்கள சாப்பிட வைக்காம போக மாட்டேன் மாமோய். அத்தையும் பாவம் எவ்வளவு தான் செய்வாங்க. அதான் நான் வந்திட்டேன்” என்றவன் நமட்டு சிரிப்புடன் தட்டை எடுத்து சாப்பாட்டை வைத்து ரசம் ஊற்றினான்.
“ஆஆ காட்டுங்க மாமா ” சாப்பாட்டை பிசைந்து அவரை நெருங்க, மூர்த்தியோ” என்ன பண்ற நீ..?” கால்களை பின்னே வைத்தார்.
“ஆஆ காட்டுங்க” சிணுங்கலுடன் கூறி அவரை வம்படியாக பிடித்து ஊட்டிவிட முயன்றான்.
ஒரு வாயை வைத்தவருக்கு கண் கலங்கிவிட்டது. அளவுக்கு அதிகமான காரத்தினாலும் உப்பினாலும் இரு விழிகளிலிருந்தும் கண்ணீர் ஆறாய் கொட்டியது.
அடுத்தடுத்த வாயை வேகமாய் ஊட்டிவிட்டவன் அவரின் நிலையை கண்டு உளமாற ரசித்தான்.
“என்ன ஒரு கண்கொள்ளா காட்சி” சொல்லி,” இது சும்மா ஒரு ட்ரைலர் தான் மாமனாரே . என் அருவி, குழந்தைகளை கஷ்டப்படுத்தினதுக்கு உன்னை உயிரோட சாவடிக்காம விடமாட்டேன்”அழுத்தகுரலில் கூறி விட்டு நகர்ந்தான்.
இரவு போல் மூவரும் வீட்டிற்கு வந்துவிட, போகும்போது அருவியிடம் இருந்த புன்னகை வரும்போது மறைந்திருந்தது… மறைய வைத்திருந்தனர்.
அதனின் தாக்கம் விஷ்வாவை தாக்க இருந்தது.