மோகனம் 25
காலையிலே அகல்விழியை டிஸ்சார்ஜ் செய்திட, வீட்டிற்கு அழைத்து வந்தார்கள் அருணும் விஷ்வாவும்.
“எங்க வீட்ல யாரையுமே காணோம்?” விழி பார்வையாலே தன் குடும்ப உறுப்பினர்களை தேட, யாருமே இல்லை.
“இன்னும் உனக்கு விஷயம் தெரியாதுல” சொன்ன விஷ்வா,” நேத்து உங்க அப்பாவுக்கு உடம்பு சரியில்லைன்னு ஹாஸ்பிடல் சேர்த்திருக்கோம். அவருக்கு பக்கவாதம் வந்திருக்கு அகல் மா” சிறு கவலையோடு சொன்னான்.
“இவ்வளவு பெரிய நல்ல விஷயத்தை எதுக்கு சோகமா சொல்றீங்க மாம்ஸ். இந்த திகதியை கொண்டாடனும் ” சந்தோஷமாய் சொல்ல, அவள் தலையில் மெல்லமாய் கொட்டினான் அருண்.
தலையை தேய்த்தவாறு அருணை முறைத்து பார்க்க,” என்ன லுக்கு?” என்றான் புருவங்களை உயர்த்தி.
“ஒன்னுமில்லை”என்று சொல்லி நழுவப்பார்த்தவளின் கரத்தினை பிடித்து நகரவிடாது செய்த அருண்,” யாரையும் அவங்களோட ஊனத்தை காட்டி சிரிக்கவோ பேசவோ ஏன் வருத்தத்தை கூட காட்ட கூடாது. அது அவங்களுக்கு எப்படியான மனநிலையை கொடுக்குனு தெரியாது” தன் அனுபவத்தில் கருத்து கந்தசாமி போல் கருத்தை வாரி வழங்க, அமைதியாய் கேட்டிருந்தாள் விழி.
“புரிஞ்சிதா…?”
“ம்ம்… புரிஞ்சிது புரிஞ்சிது” சொல்லி காதை கொடைந்தாள்.
“கொழுப்பு கூடிப்போச்சி…”திட்டியப்படியே கைகளை விட்டான்.
“ரெண்டு பேரும் சண்டை போடாம அமைதியா இருங்க. நான் போய் அவங்களை எல்லாம் கூட்டிட்டு வந்திடுறேன்” சிறுபிள்ளைகளுக்கு சொல்லுவது போல் அறிவுரை கூறிய பின்பே அங்கிருந்து கிளம்பினான்.
விஷ்வா சென்றது தான் தாமதம் சண்டைக்கோழிகள் இரண்டும் சீறிக்கொள்ள தொடங்கியது.
மருத்துவமனை வந்தடைந்த விஷ்வா,” நான் போய் டாக்டரை பார்த்துட்டு வந்திடுறேன். நீங்க ரெடியா இருங்க “சொல்லி மனைவியோடு மருத்துவரை காணச்சென்றான்.
அவர் அவருக்கான மருந்துவகைகள், என்ன சாப்பிட வேண்டும் எது சாப்பிட கூடாது என சில பல அறிவுரைகள் வழங்கியவர், கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள் சொல்லி அனுப்பி வைத்தார்.
அருவிக்கு தந்தைக்கு இப்படியானதில் கவலை ஒருபுறம் இருந்தாலும், அவர் செயலை அவளால் எளிதாக கடந்திட முடியவில்லை.
தனக்கு எதையாவது செய்திருந்தால் கூட அமைதியாய் கடந்திருப்பாள், ஆனால் தன் தங்கைகளுக்கு ஒன்று என்றால் சும்மா இருந்திடமாட்டாள். அதான் பொங்கிவிட்டாள்.
வீட்டிற்கு வீல்ச்சாரில் மூர்த்தி அழைத்து வர பட, அந்த தெருவில் உள்ள மொத்தமும் இவரை தான் வேடிக்கை பார்த்தது.
அதுவே மனிதருக்கு ஒருமாதிரி இருக்க, முகத்தை உற்றென்று வைத்தார்.
“அப்பா வந்துட்டாரு” என்று ஆரத்தி தட்டுடன் வந்த மகளை பார்த்து விழித்தார் சந்திரா.
“என்ன இது?” அருவி தங்கையிடம் வினவ,
“பார்த்தா தெரியலையா க்கா ஆரத்தி தட்டு . அப்பாக்கு எடுக்கலாம்னு தான் இவ்வளோ நேரமும் கால்கடுக்க காத்திருந்தேன்” பாவமாய் முகத்தை வைத்து சொல்ல, தங்கை உறுத்து விழித்தாள்.
“ஆனா எதுக்கு இதெல்லாம்?” அப்போதும் புரியவில்லை அவர்களுக்கு. இவள் இப்படியெல்லாம் செய்ய கூடிய ஆல் கிடையாதே.
“அது… அப்பாக்கு எதுவும் ஆகலைல அதான் ஆரத்தி எடுத்து திருஷ்டி கழிக்கிறேன்” சொல்ல பல்லை கடித்தார் மூர்த்தி.
“ஒன்னும் தேவையில்லை. கொஞ்சம் வழி விடுறீயா ” பல்லை நறநறத்தவாறே கடிக்க,
“சரி போங்க…” என்று வழிவிட்டவள், சந்திராவை நகற்றிவிட்டு அவளே வீல்சாரை தள்ளிக்கொண்டு வந்தாள்.
“எப்படி இருந்த மனிஷன் நீங்க இப்படி ஆகிடுச்சே . உங்களுக்கு இருக்கிற ஈகோனால எங்கக்கிட்ட உதவி எதையும் வேற கேட்கமாட்டீங்களே” நக்கல் போன்ற குரலில் வருத்தமாய் சொல்ல, விஷ்வாவிற்கு சிரிப்பாய் இருந்தது.
அருண் தான் அவளை முறைப்புடன் கண்டன பார்வை பார்த்தான்.
அவனின் பார்வையை கண்டும் காணாது இருந்து கொண்டவள், கிடைத்த சந்தர்ப்பத்தை கைவிட மனமில்லாது தந்தையை தன்போல் புழிந்தெடுத்தாள் .
“இனி நான் மட்டும் தான் அப்பாவை பார்த்துக்கப்போறேன்” சொல்லி மூர்த்தியின் தலையில் இடியை இறக்க, அவர் சந்திராவை கத்தினார்.
“ஏய்! என்னைய கொண்டு போய் ரூம்ல விடு” அடுத்தலாக வார்த்தைகள் குளறிய நிலையில் வர,
“இப்போ தானே சொன்னேன். நான் தான் பார்த்துக்கப்போறேன்னு அப்புறம் எதுக்கு அம்மாவை கூப்பிடுறீங்க? வாங்க நானே உங்களை அனுப்பி வைக்கிறேன்” மொழிய அதிர்ந்து பார்த்தார்.
“வாயாடி விடு நானே அவரை ரூம்ல விட்டுட்டு வரேன்” என்ற விஷ்வா அவரை அறைக்கு அழைத்து சென்றான்.
அகல்விழிக்கு அருவியிடமிருந்து வண்டி வண்டியாய் திட்டு விழ, அதை கேட்டும் கேட்காதது போல் இருந்து கொண்டாள்.
அன்றைய தினம் அப்படியே கழிய, கழுகு கண்ணாய் இருந்து அகல்விழியையும் அருணையும் கவனிக்க துவங்கி இருந்தான் விஷ்வா.
இருவருக்கும் பிடித்தமென்று ஒன்று இருந்தால், அதற்கான வேலையை அவன் செய்தாகிட வேண்டும்.
இதிலும் குடும்ப நபர்கள் இதற்கு சம்மதிப்பார்களா? அருவி என்ன சொல்லுவாள்? அருண் எவ்வாறு ரியாக்ட் செய்ய போகிறான் என ஆயிரமாயிரம் கேள்விகள் அவனுள்.
விடையறிய சில நாட்களே!
அருணிற்கு, விழிக்கு இந்த மாதிரி நடந்தது எதார்த்தமாக நடந்ததுப்போல் தெரியவில்லை. இதில் ஏதோ இருக்குமோ என்று அவன் மனம் அலையலையாய் யோசித்தது.
இந்தநிலையில் அங்கிருந்த ஒவ்வொருவரையும் கழுகு பார்வையால் கவனிக்க தொடங்க, மணியின் முழி செய்கைகள் யாவும் அவனை யோசனைக்குள்ளாக்கியது.
அதனை உறுதி செய்யும் விதமாய் அடுத்தடுத்த சம்பவங்கள் நடைப்பெற்றன.
அருவியை சாக்லேட் ஃபேக்டரிக்கு இன்றுவரை அழைத்து செல்லாதது ஞாபகத்திற்கு வரவே, அவளையும் மகளையும் அங்கே அழைத்து சென்றான்.
அக்காவையும் மாமாவையும் கண்ட விழி, ஓடிவந்து அவர்களை வரவேற்க முன்வர, அவளை முந்திக்கொண்டு மணி அவர்களை வரவேற்று இருந்தான்.
மணி வரவும் அமைதியாய் அப்படியே நின்று விட்டவள், புன்னகையை மட்டுமே இருவருக்கும் உதிர்த்தாள்.
அருவியின் காதில்,” இது நம்ம அகல்மாவா அருவி? இவளுக்கு அமைதின்னு ஒன்னு இருக்கிறதெல்லாம் தெரியுதே” என மச்சினிச்சியை கிண்டல் செய்ய, அவனின் தோளில் அடிப்போட்டவள்,” நீங்க இப்படி பேசியது மட்டும் தெரிஞ்சது சாமியாடிடுவா விஷ்வா” சொல்லி கிளுக்கி சிரித்தாள்.
அந்த சிரிப்பில் விழுந்த காதல் மன்னன்,” இப்படி சிரிக்காத டி. அப்புறம் எனக்கு என்னனமோ தோணுது” உல்லாசமாக கூறியவன் யாரும் அறியாவண்ணம் அவள் காட்டியும் காட்டாது இருந்த இடுப்பில் கிள்ளி வைத்தான்.
அவன் செய்கையில் துள்ளியவள், கணவனை பாசமாய் பார்க்க, விலகி கொண்டு தமையனை காணச் சென்றுவிட்டான் மகளோடு.
சிறிது நாழிகையில் பூவினி தனக்கொரு சாக்லேட் வேண்டுமென அடம்பிடிக்க,விஷ்வா அவளை அழைத்து வந்திருந்தான்.
அங்கே தான் விழியும் வேலை செய்து கொண்டிருக்க, புன்னகை முகமாய் அவளை நோக்கி வந்தவனுக்கு அழைப்பு வரவும் மகளிடம்,” அம்மு! நீங்க சித்தி கிட்ட போய் சாக்லேட் கேளுங்க . அப்பாக்கு போன் வருது பேசிட்டு வந்தறேன்” சொல்லிட்டு மகளை விழியின் பொறுப்பில் ஒப்படைத்து விட்டு போன் பேச சென்றுவிட்டான்.
இங்கே விழியை நோக்கி வந்த பூவினி,” விதி! சாக்கி தா” என கை நீட்ட,
“தர முடியாது போ” முகத்தை திருப்பினாள் விழி.
“விதி…. சாக்கி தா” குழந்தை முரண்டு பிடிக்க, இதனை எல்லாம் தூரத்திலிருந்து கவனித்த மணி அவர்களை நோக்கி வந்தான்.
“சாக்கி வேணும்ன்னா சித்தி சொல்லு. அப்போ தான் சாக்லேட் தருவேன், முடியாதுனா நோ சாக்லேட்”
“முதியாது.. விதி தான் நதா(நல்லா) இருக்கு. அப்படி தான் கூப்பிதுவேன்” சொல்லும் அக்கா மகவை வலிக்காது கிள்ளியவள்,” ஒழுங்கா சித்தி சொல்லு” என்றாள் மிரட்டல் விடும் தொனியில்.
“நோ.. உன்ன அப்பாத்தா சொல்லித்தறேன் இது(இரு)” எனும்போதே அங்கே வந்துவிட்டான் மணி.
“சின்ன பிள்ளைக்கிட்ட இப்படி தான் நடந்துபிய்யா அறிவில்ல?” சுள்ளென விழ, வந்த கோபத்தை அடக்கினாள் விழி.
‘யாரிவன் என்னை பேச இவனுக்கு என்ன உரிமை இருக்கு. இவனுக்கு கீழ் வேலை செய்தால் இவனுக்கு அடங்கி போக வேண்டுமா? ச்சை, இவருக்காக அடங்கி போக வேண்டியது இருக்கே’ மனதோடு அரற்றிக்கொண்டிருந்தாள்.
“உங்கிட்ட தான் பேசிட்டு இருக்கேன். கொஞ்சம் கூட யார்கிட்ட எப்படி நடந்துக்கணும்னு தெர்ல” திட்டி, குழந்தைக்கு ஒரு சாக்லேட் துண்டை நீட்ட, வாங்கிக்கொண்ட பூவினி விழியை பற்றி புகார் வாசித்தாள்.
இவள் சொல்லும் புகாரை கேட்டு கடுப்பான பெண்,” ஏன் டி உன்னைய நான் சித்தின்னு தான டி கூப்பிட சொன்னேன்” மிரட்டலான குரலில் கேட்டகவும் பயந்த குழந்தை மணியிடம் பதுங்கினாள்.
அதில் சீற்றம் கொண்ட மணி இத்தனை நாள் அவள் மீது வைத்திருந்த வன்மத்தை கொட்ட துவங்கினான்.
“ச்சி, நீயெல்லாம் ஒரு பொண்ணா,முதல அருண் சாரை உன்னோட வலையில் வர வைக்க பார்த்த, அவர் சிக்கலனதும் இப்போ விஷ்வா சாரா? நீ வந்ததுல இருந்து நானும் உன்ன கவனிச்சுட்டு தான் இருக்கேன். எப்போ பார்த்தாலும் எம்டி சாரையே நோட்டம் விடுறது. இப்படியான பொழப்பை பொழைக்குறது நீ…” சொல்லி முடிக்கும்முன்பே தூர விழுந்திருந்தான் அருணின் எட்டி உதைப்பில்.
விழுந்த மணி அருண் சாரை அவன் அங்கே எதிர் பார்க்கவே இல்லை.
“சார்! அந்த பொண்ணு…” என்றவன் எதுவோ கூற வருவதற்க்குள் அவனை ஓங்கி மிதித்த அருண்,”யாரு டா நீ எங்க வீட்டு பொண்ண தப்பா பேசுற, கொன்னு பொதச்சிடுவேன் ” கோபம் கொப்பளிக்க அவனை இழுத்து மூக்கில் ஒரு குத்து விட்டான். இத்தனைக்கும் இதற்கு காரணமானவளோ அமைதியாய் அருணை தான் கண்டிருந்தாள். அவளின் இந்த பார்வைக்கு அர்த்தம் அவளுக்கே தெரியவில்லை. ஆனால் அந்த நொடி அருணை தவிர்த்து யாருமே அவள் கண்ணில் விழவில்லை.
“சார்!” மீண்டும் வாயை தொறக்க பார்க்க,
“வாய மூடு நாயே! நீ தப்பா பேசினது எங்க வீட்டு மகாலக்ஷ்மியோட தங்கச்சியை டா” என்று குத்து விட போக அவனை தடுத்திருந்தாள் விழி.
“போதும் நிறுத்துங்க சார்” என்றவளை உறுத்து விழித்தவன்,” உனக்கு இங்க நான் பாஸா அவன் பாஸா?” கேள்வியாய் வினவ,”நீங்க தான்” என்றாள்.
“அப்போ உன்ன நான் அஞ்சு மணிக்கு எல்லாம் வீட்டுக்கு போக சொல்லியிருக்கேன் தான?” அவன் ஆத்திரத்தின் மிகுதியில் வினவ, எச்சில் கூட்டி விழுங்கினாள் பெண்.
அதற்குள் சத்தம் கேட்டு விஷ்வாவும் அருவியும் வந்தனர். மிரண்டு விழித்த குழந்தை பயத்தில் அன்னையிடம் தாவினாள்.
“சொல்லு, சொல்லி இருக்கேன் தான?”
“ம்ம்ம்….” என்றாள் வார்த்தையே வெளி வராத குரலில்.
“அப்றம் ஏன் வீட்டுக்கு போகல?”
“கொஞ்சம் வேலை இருந்தது சார். அதான்…” இழுத்தவளை, கண்டன பார்வை பார்த்தவன்,” நான் உனக்கு அப்படி ஏதும் வேலை கொடுக்கலையே?”
“அது இவரு தான் வேலை கொடுத்தாரு, ஏதோ அர்ஜென்ட் வேலைன்னு நீங்க செய்ய சொன்னதா சொல்லி” விழி கூற, புரியாது பார்த்தார்கள் தம்பதியினர்.
“இங்க என்ன நடக்குது?” புரியாது விஷ்வா கேட்க, அவனோடு அருவியும் அதனையே கேட்டாள்.
“எல்லாம் இந்த நாயால, இவன் தான் பிளான் பண்ணி விழியை அந்த ஸ்டோர் ரூம்க்கு அனுப்பிவச்சி கதவை பூட்டி இருக்கான் ராஸ்கல்” சீற்றம் அடங்குவேனா என்றிருந்தது.
தனது கள்ளத்தனம் தெரிந்துவிட்டதே என்று அதிர்ந்தவன்,சாஷ்டாங்கமாக அவனின் காலில் விழுந்து மன்னிப்பை வேண்டினான்.
“தெரியாம பண்ணிட்டேன் சார் மன்னிச்சுடுங்க” கண்ணீர் விட்டான்.எங்கே போலீசில் பிடித்து கொடுத்துவிடுவார்களோ என்ற பயந்து தான்.
“அருண் சார் விடுங்க” என்று அவன் கைகளை பிடித்து கொள்ள, அவனுள் இருந்த கோபம் அடங்க மறுத்தாலும் அதனை காட்டாது கட்டுப்படுத்தினான். அதில் விட்டால் போதுமென்று தப்பி ஓடிவிட்டான் மணி.
இத்தனை நேரம் வேடிக்கை பார்த்திருந்த விஷ்வாவிற்கு சிரிப்பாய் வந்தது.
அதன்பின் நாட்கள் அதன் போக்கில் செல்ல, விஷ்வா அருணை காண அவனது கேபினுக்கு வந்திருந்தான்.
“உள்ள வரலாமா”கேட்டு கதவை தட்ட,
“அடேய்! உள்ள வா டா” என்றவன் வேலையை பார்த்தான்.
விஷ்வா ஏதும் பேசாது அமைதியாய் இருந்தவன் தமையனை தான் கண்டிருந்தான். அவனுக்கு அண்ணனின் மாற்றங்கள் தெள்ள தெளிவாய் தெரிய துவங்கியது. மகிழ்வாகவும் இருந்தது. ஆனால் அதனை உற்றவன் உணர வேண்டுமே?
தமையனின் பார்வையை புரியாது பார்த்தவன்,” என்னடா அப்டி பார்க்குற?”தன் முகத்தை வேறு தடவி பார்த்தான் ஏதோ இருக்கோ என்று.
“சும்மா பார்த்தேன் டா. ஏன் என் அண்ணனை நான் பார்க்க கூடாதா?” விஷ்வா சொல்லவும், முகம் அஷ்டகோணலானது அருணிற்கு.
“வந்த வேலையை சொல்லு?” என்றதும், பேசினான்.
“அகல் மாவை நம்ம ஸ்கூல்ல வேலைக்கு சேர்த்துக்கலாம்னு இருக்கேன். உன் முடிவு என்ன?” தமைனயனை ஆழம் பார்க்கவே இதனை கேட்டான்.
“ஏன் இங்க என்ன குறைச்சல் வந்தது?” சற்று கட்டமாகவே கேட்டான்.
“அருவி பயப்படுறா டா. உனக்கு தான் உன் தோழியை பத்தி நல்லா தெரியுமே. படுத்தி எடுக்குறா முடியல”
“நான் வேணும்னா டீச்சரம்மா கிட்ட பேசுறேன். இங்க இருந்து அகல்விழியை அனுப்ப முடியாது. இங்க அவளுக்கு செட் ஆகிடுச்சு டா விடு” அருண் பேச பேச அவன் காட்டும் உணர்வுகளை தான் பார்த்திருந்தான்.
விடயத்தை சொன்னதும் அவன் முகத்தில் தெரிந்த ஒரு நொடி ரௌத்திரம் பின் சாதாரணமாய் மாற்றியது. அதன் பின் முகத்தை இறுக வைத்தே பேசியது என்று ஒவ்வொன்றையும் கவனிக்க தான் செய்தான்.
சிரித்தவாறே ” நானே அருவிகிட்ட பேசிக்குறேன்” சொல்லி கிளம்பிவிட்டவன், அடுத்ததாக அகல்விழியிடம் சென்றான்.
“அகல் மா!” என்றழைத்தான்.
“வாங்க மாம்ஸ் ! இங்க என்ன ஏதும் வேலையா வந்திங்களா?”
“ம்ம்…”
“நான் நேரடியாவே கேக்குறேன் அகல் மா. எனக்கு நீ எதையும் மறைக்காம உண்மையை மட்டும் சொல்லு” என்று விஷ்வா புதிர் போட, துணுக்குற்றாள் பெண்.
“சொல்லுங்க மாம்ஸ்”
“அருவி உன்கிட்ட ஸ்கூல்ல வந்து வேலை பாருன்னு சொன்னதுக்கு இங்கேயே பார்க்குறேன்னு சொன்னியாமே, அது ஏன்னு நான் தெரிஞ்சிக்கலாமா?” புருவ முடிச்சுடனே கேட்டான்.
“அது இங்க எனக்கு பழகிடுச்சி…” சொல்ல,
“எனக்கு உண்மை வேணும் அகல்?”
“இது தான் உண்மை….” தயங்கிய நிலையிலே கூறினாள்.
“நான் நேரடியாவே கேக்குறேன். நீ அங்க வர மறுகிறதுக்கு அருண் தான் காரணமா?” கண்கள் இடுங்க கேட்டவனை விழி பிதுங்க பார்த்திருந்தாள்.
“உங்களுக்கு எப்படி?” திணறியவளை பார்த்து,” அப்போ அருணை காதலிக்கிற அப்படி தானே? அவனை பற்றி உனக்கு என்ன தெரியும்னு அவனை காதலிக்கிற?” கேள்வி கணைகள் வந்தன.
“எனக்கு தெரியும் அவரு விடோவர்னு,ஆனாலும் மனசு அவர் பக்கம் தான் போகுது.எத்தனையோ முறை அவர் பக்கம் போற பார்வையை கண்ட்ரோல் பண்ண முயற்சி பண்ணேன் ஆனாலும் முடியல. இந்த காதல் எப்படி வந்ததுன்னு தெர்ல. வந்த காதலை சொல்ல அத்தனை பயமா இருக்கு” என்று சன்ன குரலில் மொழிந்தவளை கண்டு புன்னகைத்தவன்,” அவன் தான் வேணும்னா உனக்கு சில விஷயங்களை நான் சொல்ல விரும்புறேன். அதை கேட்டுட்டு அப்றம் முடிவு பண்ணு” அருணின் மற்றைய பக்கத்தை அவளிடம் சொன்னவன்,” இப்பவும் அருண் தான் வேணும்னு தோணுச்சுனா, நான் வீட்ல பேசி பார்க்குறேன்” என்றான்.
“அப்போ உங்களுக்கு என்னோட விருப்பத்துல பிரச்சனை இல்லையா?” கண்கள் விரிய கேட்டவளை கண்டு புன்னகை உதிர்தவன்,அங்கிருந்து கிளம்பிவிட்டான்.
ஆனால் இவளின் ஆசைக்கு இவளின் கண்ணாளன் அல்லவா செவிசாய்க்க வேண்டும்?