ரசவாச்சியே விழி சாச்சியே!

அத்தியாயம் – 17

“டாடி… எனக்கு இந்த காலேஜ் பிடிக்கவே இல்லை. என்னை சென்னை உமேரா காலேஜ்ல சேருங்க டாடி.” அசோகனை பிடித்து நச்சரித்துக் கொண்டிருந்தான் ஆரியன்.

“டேய்! இங்க நீ ஜாயின் பண்ணி ஒரு வருஷம்தான்டா ஆகுது. இப்போ போய் இப்படி சொல்லுற அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். நீ இங்கயே படி. இதுவும் உமேரா மாதிரி பெரிய காலேஜ்தான்.” பல்லை கடித்தார் அசோகன்.

“நோ! நான் அங்கதான் படிப்பேன். இல்லன்னா நான் படிக்கவே இல்லை.” கோபத்துடன் கூறியவன் தன் அறைக்குள் நுழைந்துக் கொண்டான்.

  அறையில் வந்து முடங்கியவன் மனம் அன்று நடந்த நிகழ்வுக்கு பயணித்தது.

மாவட்ட அளவிலான இன்டெர் காலேஜ் போட்டி ஆரியன் காலேஜில் நடைபெற்றது. பலதரபட்ட காலேஜில் இருந்து நிறைய மாணவர்கள் கலந்துக்கொண்டனர்.

அந்த மாணவர்களில் சைதன்யாவும் அடக்கம். அவளது குறும்பு பேச்சும், பாந்தமான அழகும் அவனை ஈர்க்க அவளை ரசித்துப் பார்த்தான்.

அவர்கள் வந்திறங்கிய வேனில் காலேஜின் அட்ரஸை குறித்துக்கொண்ட ஆரி அவளிடன் நட்பை பெற விரும்பினான்.

போட்டியில் இடைவேளை விடவும், சைதன்யாவும் அவள் தோழியும் கேண்டீன் நோக்கி செல்வதை கண்டவன் தன் நண்பனை அழைத்துக்கொண்டு சைதன்யா இருந்த திசையை நோக்கி நடந்தான்.

சைதன்யாவும் அவள் தோழியும் அமர்ந்து காஃபி குடித்துக்கொண்டிருக்க, அவர் அருகில் இருந்த சேரில் அமர்ந்தான் ஆரி.

“ஹாய்…” என்றான் சைதன்யாவை பார்த்து.

“ஹாய்…” என்றபடி அவனை பார்த்து சிரித்தாள் அவள்.

“சென்னையா?” அவன் கேட்க,

“எஸ்…” என்றவள் தன் தோழியிடம் விட்ட பேச்சை ஆரம்பிக்க,

“என்ன குரூப்?” அடுத்த கேள்வியை அவள் முன் வைத்தான் ஆரியன்.

அவனை திரும்பி ஒரு பார்வை பாத்தவள், “வாடி” என அருகில் இருந்தவளை இழுத்துக்கொண்டு நடந்தாள்.

“பேர் கேட்டியாடா…” நண்பன் முரளி கேட்க,

“அவ ஐடி கார்ட்ல பாத்துட்டேன்டா. சைதன்யா… பேர் நல்லா இருக்குல்ல…” பல்லை காட்டினான் ஆரியன்.

“என்னடா சீரியஸா…” அவன் கேட்க,

“கட்டினா இவளைதான்டா கட்டணும்.” என்றான் முகத்தை சீரியஸாக வைத்துக் கொண்டு.

“சரி சரி… வா…” அவனை அழைத்துக்கொண்டுப் போட்டி நடக்கும் இடத்துக்கு சென்றான் முரளி.

இந்த வருடம் பரிசை தட்டி சென்றது சைதன்யா காலேஜ். அன்று மாலை அவளை பார்க்கலாம், பேசலாம் என்று இவன் காத்திருக்க, அவனால் அவளை காணவே முடியவில்லை.

அன்று பிறகு சைதன்யாவை ஆரி பார்க்கவே இல்லை. அவன் காலேஜில் பல போட்டிகள் வைத்தனர். அவள் காலேஜில் இருந்தும் மாணவர்கள் வர அவளை மட்டும் காணவில்லை.

நண்பர்களுடன் ஒருநாள் சென்னைக்கு அவளை பார்க்க சென்று வந்தான். ஆனால் அவளை காணமுடியவில்லை. அவள் பேர் மட்டும் வைத்துக்கொண்டு அவனால் ஒன்றும் செய்யமுடியவில்லை.

ஆனால் தினமும் முகநூலில் அவளை தேடுவதை வழக்கமாக்கிக்கொண்டான். இப்பொழுது ஒருவாரத்துக்கு முன் இதே போல் சைதன்யா பேரை முகநூலில் தேட கண்ணில் சிக்கினாள்.

உமேரா காலேஜ் முன் நின்று போட்டோ ஒன்றை அப்லோட் செய்திருந்தாள். உடனே ப்ரெண்ட் ரெக்விஸ்ட் ஒன்றை தட்டி விட்டான்.

ஆன்லைனில்தான் இருந்திருப்பாள் போல உடனே டெலீட் செய்திருந்தாள்.

மீண்டும் விட, டெலீட் செய்திருந்தாள். இப்படி பத்து முறையும் அவள் டெலீட் செய்ய யோசனையானான் ஆரி.

‘தன்னை மறந்து விட்டாளோ?’ என்ற கவலை மனதை அரிக்க, முகநூல் பக்கத்தில் இருந்த தன் போட்டோவை நீக்கிவிட்டு பள்ளியில் படித்த பொழுது எடுத்த போட்டோ ஒன்றை அப்லோட் செய்தவன், மீண்டும் ரிக்விஸ்ட் அனுப்பினான்.

இந்த முறை அவனது ரிக்விஸ்ட் டெலீட் செய்யப்படாமல் இருந்தது.

‘அவள் தன்னை மறக்கவில்லை.’ மிகவும் குதுகலமானான் ஆரியன்.

தனது ரிக்வெஸ்ட் அப்செட் செய்யப்படும் என்று இரவு பன்னிரெண்டு மணி வரை காத்திருக்க கடைசி வரை அப்செட் செய்யவே இல்லை.

காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி போல் காத்திருந்து காத்திருந்து நேரம் கடந்ததுதான் மிச்சம்.

தூக்கம் வேறு கண்ணை சுழற்ற, அப்படியே தூங்கிப்போனான். அடுத்தநாள் காலையில் பார்க்க அப்பொழுதும் அப்செட் செய்யவில்லை. அன்று ஞாயிற்றுகிழமை வேறு.

டெலீட் செய்தாலாவது மீண்டும் ரிக்வெஸ்ட் கொடுக்கலாம். இவள் அதையும் செய்யவில்லை. ஆன்லைனில்தான் இருந்தாள். ஆனால் இவனது ரிக்வெஸ்ட் கண்டுக்கொள்ளப்படாமல் இருந்தது.

அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை அவனுக்கு. ‘எப்படியாவது அவளிடம் பேச வேண்டும். என்னை நினைவிருக்கிறதா?’ என்று கேட்கவேண்டும் என்று ஆசை அதிகரித்தது.

அவளை சந்தித்து கிட்டத்தட்ட ஒருவருடம் முடிந்து விட்டிருந்தது மனம் படபடக்க, யோசிக்க ஆரம்பித்தான் ஆரியன்.

யோசனையின் முடிவுதான் அவள் படிக்கும் கல்லூரியில் படிக்க செல்வது. ஆனால் அசோகனின் மறுப்பு அவனை மிகவும் கோபப்படுத்தியது.

“அண்ணா…” அறை கதவை வந்து தட்டினாள் ஆரா.

“என்ன தனும்மா” அறைக்குள் இருந்து குரல் கொடுத்தான் ஆரியன்.

“கதவை திற.” வெளியே நின்று இவள் கூற,

வந்து கதவை திறந்தவன், ‘என்ன?’ என்பது போல் நிற்க,

அவனை தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தவள், “எதுக்குண்ணா அப்பாவை கோபப்படுத்துற… அப்பா பாவம்ணா.” தந்தைக்காக வக்காலத்து வாங்கினாள் ஆரா.

“போ தனும்மா. எனக்கு இந்த காலேஜ் பிடிக்கவே இல்லை. நான் சென்னைக்கு போகணும்.”

“எங்களை எல்லாம் விட்டுடாண்ணா போக போற.” என்றாள் பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டு. அவளுக்கு ஆரியன் என்றால் உயிர். இப்பொழுதுதான் பன்னிரண்டாம் வகுப்பில் அடியெடுத்து வைத்திருக்கிறாள் ஆரா.

“அண்ணன் படிக்கத்தான் போறேன்மா. வாரத்துல ஒன்ஸ் இங்க ஓடி வந்திடுவேன். என் தனும்மாவை பார்க்காம இருக்க முடியுமா?” அவள் கன்னத்தை பிடித்து கெஞ்சியவன், “நீ சொன்னா டாடி கேட்பாங்கடா. அண்ணனுக்காக கேட்குறியா?”

“சரிண்ணா உனக்காக டாடி கிட்ட சொல்லுறேன்.” என்றவள் அசோகனை நோக்கி சென்றாள்.

“டாடி…” அறை கதவை திறந்துக் கொண்டு உள்ளே வந்தாள் ஆரா.

“என்னடாம்மா.” ஃபோனில் யாரிடமோ காச் மூச் என கத்திக் கொண்டிருந்தவர், மகளை பார்த்ததும் வார்த்தைகள் தேனாக வந்தது.

“அண்ணன் சென்னை போகட்டும்பா.” என்றாள் ஒற்றை வாரத்தையாக.

“அவன் தனியா போனா சரி வராதுடா…” அவர் இழுக்க,

“நோ டாடி… அவன் போகட்டும்.” பிடிவாதம் பிடிக்க,

“அடியே… நீ சொல்லுற மாதிரிலாம் ஆட முடியாதுடி.” அவளின் பின்னே வந்த ஆண்டாள் பல்லைக் கடித்தார்.

“உன்கிட்ட நான் ஒன்னும் சொல்லவே இல்லை. நான் என் டாடி கிட்ட பேசிக்கிட்டு இருக்கேன். நான் சொன்னா என் டாடி கேட்பாங்க. அப்படிதானேப்பா…” மகள் அசோகனின் கன்னத்தை பிடித்து கெஞ்ச,

“நீ சொன்னா டாடி செய்யாம இருப்பேனா. சரிடா கண்ணா. அண்ணன் சென்னைக்கு போகட்டும்.” உத்தரவு கொடுக்க,

“டேய்… நீ அவளை செல்லம் குடுத்து கெடுக்கிற.” எச்சரித்தார் ஆண்டாள்.

“குழந்தைம்மா அவ…” அவரிடம் கூறியவர் மகன் சென்னைக்கு செல்லும் ஏற்பாடு செய்ய ஆரம்பித்தார்.

“நீ பண்ணுறது எதுவும் சரியில்ல அசோகா. அவளுக்கு ரொம்ப செல்லம் குடுக்கிற.” ஆண்டாள் கூறியது அவர் காதில் ஏறவேயில்லை.

                                           ***

சென்னை,

ஆரியனுக்கு சென்னையில் எல்லா ஏற்பாடும் செய்துக் கொடுத்திருந்தார் அசோகன். அவருக்கு விசுவாசமான சமையல்காரர் ஒருவரையும் அவனோடு அனுப்பிருந்தார் அவர். அவர்களுக்கு சொந்தமான அப்பார்ட்மெண்டில் தங்க வேண்டும் என்ற கட்டளையுடன் அவனை சென்னை அனுப்பினார்.

அன்று காலேஜ் முதல்நாள் சைதன்யாவை பார்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் காலையிலே காலேஜ் வாசலை மிதித்தான் ஆரியன்.

மெயின் கேட் அருகில் இருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தான் ஆரியன். உள்ளே வாசலில் நுழையும் பொழுது அவள் முன் செல்ல வேண்டும் என்ற ஆர்வத்துடன் காலை ஆட்டியடி அமர்ந்திருந்தான்.

இன்றும் சைத்தன் காரில் வந்தாள் சைதன்யா. எப்பொழுதும் போல் வாசலில் இறக்கி விட்டு சைத்தன் செல்லவும், இவள் உள்ளே நுழைந்தாள்.

இவள் வருவதையே பார்த்துக் கொண்டிருந்த ஆரியன், “ஹாய்…” என்றபடி இவள் உள்ளே நுழையவும் இவள் முன் வந்து நின்றான் அவன்.

   ஒரு நொடி அதிர்ந்தவள், அவனை பார்த்து விழித்தாள். அவளது முழியை கண்டு மீண்டும், “ஹாய்” என்றான்.

“யார் நீ?” என்றாள் அவனை பார்த்து. இங்கு படிக்கும் நாளில் இருந்து  அவனை பார்த்ததுப் போல் அவளுக்கு தெரியவில்லை.

“என்னை உனக்கு தெரியலையா?” என்றான் ஏமாற்றத்துடன்.

“நீ யார் ஃபஸ்ட்?” என்றாள் கடுப்பாக.

“ஒஹ்… சாரி.” என்றவன் தன் டிபார்ட்மென்ட்டை நோக்கி நடந்தான்.

அவளிடம் இதை எதிர்பார்க்கவில்லை ஆரி. மனம் மிகவும் வலித்தது. அவளை கஷ்டப்பட்டு தேடி, அவள் எதிரில் வந்து நின்றால், ‘நீ யார்?’ என்கிறாள் அவனால் தாங்கவே முடியவில்லை. 

தன் டிபார்ட்மென்ட் நோக்கி செல்ல, அங்கிருந்தவர்கள் அவனை கண்டு, ‘ஹாய்’ போட அவர்களை நோக்கி கையை அசைத்தவன் இருக்கையில் வந்தமர்ந்தான்.

ஒவ்வொருவரும் அவனை பற்றி விசாரிக்க, ஏதோ ஒரு போக்கில் கூறிக் கொண்டிருந்தான். அதே நேரம் வாசலில் வந்து நின்றாள் சைதன்யா.

‘என்னை நினைவு வந்துவிட்டதோ.’ ஆர்வமாய் அவளை பார்க்க, அங்கிருந்த ஒரு பெண்ணை நோக்கி அவள் கையசைக்க,

‘யார்?’ என்று இவன் எட்டிப் பார்த்தான். அன்று காலேஜில் பார்த்த அவளது தோழி அமர்ந்திருந்தாள்.

“ஹேய்… சாரா.” என்றபடி அவளது அருகில் வந்தமர்ந்தாள் சைதன்யா.

இன்பமாய் அதிர்ந்தான் ஆரியன். மனதில் சந்தோஷ சாரல் வேறு வீசியது. அவன் எதிர்பார்க்காத நிகழ்வு இது. அவனும் அவளும் ஒரே டிபார்ட்மென்ட். இதை அவன் எதிர் பார்க்கவே இல்லை.

அதன் பிறகென்ன… அருகில் இருந்தவர்களுடன் சந்தோஷ அரட்டை ஆரம்பித்துவிட்டான்.

அன்று முழுவதும், அவன் அவளை வகுப்பில் பார்த்ததோடு நிறுத்திக் கொண்டான் அவளிடம் பேசவேண்டும், அவனை நினைவிருக்கிறதா என்று கேட்கவேண்டும் என்று எதுவும் அவன் யோசிக்கவில்லை.

மாலை வீட்டுக்கு சென்றதும், முதல் வேலையாக அவளுக்கு கொடுத்த ரிக்வெஸ்டை அவனே டெலீட் செய்திருந்தான். அவளும் அதை கண்டுக் கொள்ளவில்லை.

இப்படியாக ஒரு மாதம் கடந்தது. அவளை தினமும் காலேஜில் பார்ப்பான். ஆனால் பேசவேண்டும் என்று நினைக்கமாட்டான். அங்கு எல்லாரிடமும் நன்கு பழகுவான்.

பணக்காரன், ஏழை என்ற பாகு பாடு இல்லாமல் நன்றாகவே பழகுவான். இதெல்லாம் அவன் அப்பாவுக்கு கொஞ்சமும் பிடிக்காது. தகுதி பார்த்து பழகும் ரகம் அசோகனும், ஆராவும். ஆனால் இவன் அப்படியல்ல. எல்லாரிடமும் நன்கு பழகுவான்.

வார இறுதி நாட்களில் நண்பர்களை வீட்டுக்கு அழைத்து கும்மாளமிடுவான். அத்தனையும் சமையல்காரர் அசோகனுக்கு அறிவித்து விடுவார்.

அடுத்த நாள் வந்து இவனை திட்டி செல்வார். இல்லையென்றால் போனில் பாடம் எடுப்பார். எல்லாவற்றையும் இந்த காதில் கேட்டு அந்த காதில் பறக்க விடும் ஆரியன் மீண்டும் அதே வேலையை செய்வான்.

அவர் எதையெல்லாம் செய்யாதே என்று கூறுகிறாரோ அதை எல்லாம் அவன் சந்தோஷத்திற்காய் சந்தோஷமாய் செய்வான்.

   இப்படியாக நாட்கள் வேகமாய் கரைந்தது. அவன் அவளிடம் பேச முயற்சிக்கவில்லை. அவள் தோழி சாராவிடம் கூட நன்கு பேசுவான் அவள் வருவதை பார்த்தால் விலகி சென்றுவிடுவான்.

பல நாட்கள் சைதன்யா இவனது செயலை கவனிக்கவில்லை. கவனித்து பார்த்தபொழுது தெரிந்தது, அவன் வேண்டும் என்றே செய்கிறான் என்று.

யோசித்து பார்த்தாள், ‘ஏன் அப்படி செய்கிறான்?” யோசித்ததில் அன்று அவளிடம் அவன் பேசவந்ததும் இவள் முகத்தை திருப்பியதும், நினைவு வர சிரித்துக் கொண்டாள்.

அன்று பிறகு, இவனை பார்க்கும் நேரம்லாம் சிறிய சிரிப்பை அவனுக்கு அளிப்பாள். தன் கூடவே படிப்பவன், முதல்நாள் அவனாக பேசவந்து தான் முகத்தை திருப்பியது அவளுக்கே ஒருமாதிரியாக இருக்க, அவனை கண்டால் சிரிக்க பழகிக் கொண்டாள் சைதன்யா.

அவளது புன்னகை அவனை உற்சாகபடுத்த, வீட்டுக்கு சென்றவன் அவளுக்கு முகநூலில் அனுப்பிய அழைப்பை டெலீட் செய்தவன், இன்று காலேஜ் அணிந்து சென்ற உடையுடன் ஒரு செல்ஃபி ஒன்றை பதிவேற்றி அவளுக்கு அழைப்பு விடுத்தான்.

அவனது ஃபோட்டோவை பார்த்ததும், அவனை அடையாளம் கண்டுக் கொண்டவள் அடுத்த சில நிமிடங்களில் அழைப்பை ஏற்றிருந்தாள் சைதன்யா.

சைதன்யா தனக்கு மெசேஜ் செய்வாள் என்று இவன் காத்திருக்க, அவன் ஏதாவது சொல்வான் என்று இவள் காத்திருந்தாள்.

ஆக மொத்தம் இருவரும் எதுவும் பேசவில்லை. அடுத்தநாள் காலேஜ் சென்ற ஆரியன், யோசித்துக் கொண்டிருந்தான். ‘அவளுக்கு தன்னை நினைவு இருக்குமா?’ யோசனை பலமாக இருக்க,

“ஹாய்…” அவன் முன் வந்து நின்று கையை ஆட்டினாள் சைதன்யா. யோசனையில் இருந்த அவன் அவளை கவனிக்கவில்லை.

“ஆரி…” முதல் முறையாக அவனை பேர் சொல்லி அழைக்கிறாள் சைதன்யா.

அவள் ஒற்றை அழைப்பில் பரவசமானான் அவன். “ஹாய்” என்று அவளை பார்த்து சிரிக்க,

“ஃப்ரெண்ட்ஸ்” என்று அவன் முன் கையை நீட்ட, சிறு யோசனைக்கு பின் அவள் கை பற்றினான் அவன்.

“அன்னைக்கு உன்னை அடையாளமே தெரியல. அதுதான் உன்கிட்ட பேசவேயில்ல. சாரி…”

“பரவால்ல விடு.” இவன் கூற,

“நேத்து உன் ப்ரோஃபைல் பார்த்த பிறகுதான் தெரிஞ்சது. நீ அவன்னு…” சொல்லி சிரிக்க,

“என்ன கிண்டலா…” இவன் முறைக்க,

“ஹேய்… நிஜமா இல்லடா… நீ என்னை ஞாபகம் வைச்சிருக்கல்ல… அதுவே பெரிய ஆச்சரியம். உன்னைநான் நினைச்சு பார்க்கல…” இவள் கூற, இப்படியாக இவர்கள் நட்பு வளர்ந்தது.      

இரண்டாம் ஆண்டு முடியும் தருவாயில், அவளை முதலில் பார்த்ததில் இருந்து அவளை தேடியது, தேடி கிடைத்ததும் இங்கு வந்தது வரை நாள் போக்கில் அவளிடம் கூறியவன் தன் காதலையும் அவளிடம் கூறினான்.

அவளுக்கு என்ன கூறுவது என்று தெரியவில்லை. ‘அவன் இப்படி கூறுவான்’ என்று அவள் எதிர்பார்க்கவும் இல்லை.

அவனிடம் எதுவும் கூறாமல் இருந்தவள், நேராக போய் நின்றது சைத்தனிடம்தான்.