ராகம் 1

ராகம் 1
நினைவு தூங்கிடாது கதையின் சுருக்கம்
நாயகிகள்: அமிர்தா (மித்ராலினி, அம்மு), பிருந்தா (பிந்து)
நாயகர்கள்: ருத்ரேஷ்வரன், ரிஷி வர்மா.
பசுஞ்சோலை கிராமத்தில், தன் விதவை தாய் கஸ்தூரி மற்றும் தன் உடன் பிறந்த இரட்டை சகோதரி பிருந்தாவுடன் வசித்து, தன் குட்டி தோழமைகளுடன் சிறகடிக்கும் பதினேழு வயது அழகான பட்டாம்பூச்சி அமிர்தா (அம்மு).
கவலைகள் இன்றி சுற்றி திரியும் பெண்ணின் வாழ்க்கையில் புயல் என நுழைகிறான் ருத்ரேஸ்வரன்.
தன் அன்னையின் ஊரான பசுஞ்சோலை கிராமத்தில் இருக்கும், தன் தாத்தா பாட்டியின் வீட்டுக்கு, திருவிழாவிற்காக தன் அன்னை அம்பிகா தேவியுடன் வரும் ருத்ரேஸ்வரன், அம்முவை கண்ட நொடி அவளிடம் மனதை பறிகொடுக்கிறான். அதை உணராமல் அவளை வாட்டி வதைக்கிறான்.
ருத்ரேஸ்வரனை பின்பற்றி, அவனது கேடுகெட்ட நண்பர்களும் அந்த கிராமத்தில் நுழைகிறார்கள். பிருந்தாவிடம் வம்பு செய்த அவர்களை அமிர்தா அறைந்து விடுகிறாள். அவளை பழிவாங்க தக்க தருணத்திற்காக காத்திருக்கிறார்கள் நண்பர்கள்.
இந்நிலையில் பிருந்தாவை ருத்ரேஸ்வரனுக்கு திருமணம் செய்ய பெரியோர்கள் முடிவு செய்தார்கள். சிறு பெண் அம்முவிடம் தன் மனம் தடுமாறுவதை உணர்ந்த ருத்ரா, அதற்கு முடிவு கட்ட திருமணத்துக்கு சம்மதித்து, நிச்சயமும் முடிந்தது.
ருத்ராவை கெட்டவனாக மனதில் பதிந்திருந்த அமிர்தா, அவனிடம் திருமணத்தை நிறுத்த சொல்லி வாக்குவாதம் செய்ய, தடுமாறும் மனதுடன் இருந்த ருத்ரா அவர்களது தனிமையை தனக்கு சாதகமாக்கி, அம்மன் கழுத்தில் இருந்த மாங்கல்யத்தை எடுத்து அமிர்தாவின் கழுத்தில் கட்டி விட்டு, நாட்டை விட்டே சென்று விடுகிறான். அதில் தன்னிலை மறந்து மருகி தவிக்கிறாள் பெண்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய அவனது நண்பர்கள் இருவர், அமிர்தாவை கடத்திச் சென்று கெடுத்து விடுகிறார்கள். அதில் ஒருவனை கொன்று தப்பிக்கும் அமிர்தா, நம் நாயகன், திரை நட்சத்திரம் ரிஷிவர்மாவிடம் அடைக்கலம் ஆகிறாள்.
ரிஷிவர்மாவின் உதவியுடன் மித்ராலினி என்ற பெயரில் திரையுலகில் கால் பதித்து, விருது வாங்கும் அளவு உயர்ந்து நிற்கிறாள்.
தன் காதலை உணர்ந்த ருத்ரேஸ்வரன், அம்மு என்கின்ற அமிர்தாவை தேடிச் செல்ல, அவனுக்கு கிடைத்ததோ அவள் இறந்து விட்டால் என்ற பேரிடி. அத்தோடு திருமணத்தை வெறுக்கும் ருத்ரேஸ்வரன், நான்கு வருடங்களுக்கு பிறகு அவளை சந்திக்கிறான். கட்டாயப்படுத்தி தன்னுடன் ஒரு படத்தில் நடிக்க வைத்து, அவளது மனதை மாற்றி, அவளுக்கு தீங்கு செய்த தன் நண்பனை பழிவாங்கி, அவளை கரம் பிடிக்கிறான்.
தீ விபத்தில் தன் அன்னை உயிரிழப்பதை கண்டும், தன்னால் தான் தன் சகோதரியை கடத்தி விட்டார்கள் என்று நினைத்தும் பிருந்தா மனநலம் பாதிக்கப்படுகிறாள்.
அவள் சரியாகி மித்ராலினி (அமிர்தா) மேல் அவள் காட்டிய அன்பை கண்டு ரிஷிவர்மாவுக்கு அவளை பிடித்து போக, அவளது சம்மதத்துடன் அவளை கரம் பற்றினான்.
இனி இரண்டு வருடங்களுக்குப் பிறகு:
ராகம் 1
கிழக்கில் சூரியன் உதித்து சில மணி நேரங்கள் கடந்த நிலையில், சூரிய கதிரின் வெப்பம் பூமியை சுட்டெரித்தது. அதேபோல் இன்றைய நாளின் தொடக்கம் பலருக்கு வெப்பத்தையும், சிலருக்கு குளிர்ச்சியையும் பரிசாக வழங்க காத்திருந்தது.
காலை பதினோரு மணி, காக்கிச்சட்டைகளும், கருப்பு கோட்டுகளும், வெள்ளை வேட்டி சட்டைகளும் சுதந்திரமாக உலாவி கொண்டிருந்த அந்த இடத்தில், ஆங்காங்கே சில வண்ண துணிகளும் கண்ணில் பட்டது. அது சென்னை உயர் நீதிமன்ற வளாகம்.
எப்போதும் விரைப்பான போலீஸ்களும், முறைப்பான குற்றவாளிகளும், கடுப்பான வக்கீல்களும், கூலை கும்பிடு போடும் அரசியல்வாதிகளும் அதிகமாக இருக்கும் அந்த வளாகத்தில், என்றும் இல்லாத அளவு செய்தியாளர்களின் நடமாட்டம் அதிகமாக காணப்பட்டது.
ஏன்?
இன்றைய முக்கிய செய்திகாக. அது விருது வாங்கிய பிரபலத்தின் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றியது. சிறு விஷயம் கிடைத்தாலும் அதை பெரிது படுத்திவிடும் ஊடகங்களுக்கு, லட்டு போல் ஒரு செய்தி கிடைத்தால் விட்டுவிடுவார்களா என்ன?
மற்றவர்களின் வாழ்க்கையை பற்றி தெரிந்து கொள்வதில், அப்படி என்னதான் சந்தோஷம் இருக்கிறதோ? அதிலும் திரையுலக நட்சத்திரங்களை பற்றி தெரிந்து கொள்வது என்றால், அனைவருக்கும் லட்டு சாப்பிடுவது போல் தித்திப்பாக இருக்கிறது.
ஒன்றுமே இல்லாத விஷயத்தை நூறாக்கி, நூறை லட்சமாக்கி, லட்சத்தை கோடியாக்கும் வித்தைக்காரர்களுக்கு, இப்போது கிடைத்திருப்பது ஜாக்பாட். ஏற்கனவே நூறாக்கிய செய்தியை, இப்போது லட்சமாக மாற்ற காத்திருந்தார்கள்.
“என்னப்பா இது, மணி பதினொன்றரை ஆச்சு, இன்னும் ஒருத்தரும் வெளிய வர காணோம்.” சலிப்பாக கேள்வி பிறந்தது, புதிதாக பத்திரிக்கையில் வேலைக்கு சேர்ந்த பெண்ணிடம்.
“வருவாங்க, வருவாங்க வராம எங்க போக போறாங்க? டாப் ஸ்டார்ஸை பார்க்கிறதுனா சும்மாவா?” என்றாள் மற்றொருவள் ஆர்வமாக.
“அதுக்கு எவ்வளவு நேரம் காத்திருக்கறது?” என மீண்டும் சலித்தால் முதலாமவள்.
“இன்னைக்கு தமிழ்நாட்டோட ஹாட் டாபிகே இது தான். சுடச்சுட செய்தி போட்டா நமக்கு நல்ல பேரு கிடைக்கும். நம்ம பத்திரிக்கையோட சேல்ஸ் அதிகமாகும். நம்ம இன்சென்டிவும் உயரும். அதுக்கு கொஞ்சம் கஷ்டப்படலாம் தப்பில்லை.” என்றவள், சுற்று முற்றும் பார்த்து தன் சத்தத்தை குறைத்து, “ரிஷியை பாக்குறதுக்கு எவ்வளவு நேரம் வேணாலும் காத்திருக்கலாம். என்ன அழகு!!!” என நாயகனின் அழகை சிலாகித்தாள்.
அவளது பேச்சில் ஆர்வமான முதலாமவள், “அட போப்பா, எனக்கு ருத்ராவை தான் ரொம்ப பிடிக்கும். உடம்பை என்னம்மா மெய்ன்டேய்ன் பண்றார். என்ன கம்பீரம்? ஒரு படத்துல நடிச்சாலும் என்னோட மனச அள்ளிக்கிட்டார்.” ரசித்து சொன்னாள்.
“நீ சொல்றதும் சரிதான். அவர் அந்த படத்தில் நடிச்சதே மித்ராவை கல்யாணம் பண்ணிக்கன்னு ஒரு வதந்தி இருக்கு. அதேபோல் ரிஷியும் எந்தவிதத்திலும் அவருக்கு குறைஞ்சவர் இல்லை.”
“ம்ம். அவரோட பார்வை ஒரு தடவை என் மேல் படாதான்னு ஆசையா இருக்கு.” என்றவளின் கண்களில் அவ்வளவு ஆசை.
இவர்களது பேச்சை கேட்டுக் கொண்டிருந்த புகைப்படக்காரன், “நீங்க நல்லா கவலைப்படுங்க. ரெண்டு பேத்தோட பார்வையும், லாடம் கட்டின குதிரை மாதிரி மித்ராலினியை தாண்டி வேறு எங்கும் போகாது.”
“ருத்ராவோட பார்வை மித்ரா மேல் இருப்பது நியாயம். ரிஷியோட பார்வை ஏன்? சம்திங், சம்திங்.” என புருவமேற்றி கேட்டாள் பெண்.
“இருந்தாலும் இருக்கும். மித்ராவை ருத்ரா கூட பார்த்ததை விட ரிஷி கூட பார்த்தது அதிகம்.” என்றாள் மற்றவள் இகழ்ச்சியாக. ‘இது உண்மையா?’ என்று அடுத்தவளின் பார்வை புகைப்படக்காரணை தொட்டது.
“ரிஷி, மித்ராவின் திருமண தேதி அறிவிப்பு வருமென காத்திருந்த எல்லாருக்கும் கிடைத்தது, ருத்ராவுக்கும் மித்ராவுக்கும் ஏற்கனவே கல்யாணம் முடிஞ்சதுன்ற செய்தி. அது எந்த அளவுக்கு உண்மைன்னு தெரியாது. கொஞ்ச நாள்ல ரிஷிக்கும் மித்ராவோட டிவின் சிஸ்டருக்கும் கல்யாணம் முடிஞ்சது.” என்றான் புகைப்படக்காரன்.
“அப்ப வர செய்தி எல்லாம் உண்மைதானா?”
“அது உண்மையா தெரியாது. ஆனா கோழி தன் குஞ்சை பாதுகாக்கிற மாதிரி, ரிஷி மித்ராவை பாதுகாத்துக்கிட்டு இருக்கார். அவரைத் தாண்டி யாராலும் மித்ராவை நெருங்க முடியாது.” என்றான் கோபமும், பொறாமையும் கலந்து. அவனது கனவு கன்னியுடன் பேச முடியவில்லை என்ற ஆதங்கம் அவனிடம்.
இவர்கள் வெளியே வழக்காடிக் கொண்டிருந்த அதே நேரம், நீதிமன்ற வளாகத்தினுள் விவாகரத்து வழக்கு நடைபெற்றது.
★★★
“மியூச்சுவல் டைவர்ஸ்க்கு அப்ளை பண்ணி இருக்கீங்க. இதில் உங்க ரெண்டு பேத்துக்கும் சம்மதமா?” என்ற நீதிபதியின் கேள்விக்கு, பெண்ணின் கண்கள் தவிப்பாக ஆண் அவனை தொட்டது. “எனக்கு சம்மதம்.” என்றான் எந்தவித தயக்கமுமின்றி. பெண்ணின் முகம் வாடிவிட்டது.
“எனக்கும் சம்மதம்.” வார்த்தைக்கு வலிக்குமோ என சொற்கள் வந்தது பெண்ணிடம். அதை கேட்கவும் ரிஷிவர்மாவின் கண்கள் தவிப்புடன் மித்ராலினியை அடைந்தது. அவளது பார்வையோ இயலாமையுடன் ரிஷியை கண்டது. இவர்களது பார்வை பரிமாற்றத்தை கண்ட ஒரு ஜீவனின் வயிறு எரிந்தது.
“ஒரு வருஷம் ரெண்டு பேரும் பிரிஞ்சு இருக்கணும். இதற்கு நடுவில் மூணு கவுன்சிலிங் அட்டென்ட் பண்ணனும். அப்பறமும் பிரிவது என முடிவெடுத்தால் உங்களுக்கு டைவர்ஸ் கொடுக்கப்படும்.” என முடித்தார் நீதிபதி.
நீதிபதியின் சொற்களை கேட்டதும் ருத்ரேஷ்வரனின் கண்கள் தன்னவலை முறைத்தது. பதிலுக்கு அலட்சிய பார்வையை அவனுக்கு பரிசாக வழங்கினால் அவனின் நீலாம்பரி. (மித்ராலினி என்கின்ற அமிர்தா) ருத்ரேஷ்வரனால் தன் பற்களை நர நரவென கடிக்க மட்டுமே முடிந்தது.
தனது ஐந்து மாத குழந்தையை கைகளில் தாங்கியிருந்த பிருந்தா, தன் தங்கையை இயலாமையுடன் வெறித்தாள். யாரையும் கண்டுகொள்ளாத அமிர்தா ரிஷிவர்மாவை நெருங்கி, “வரு நம்ம கிளம்பலாம்.”
“மிரு நான் சொல்றதை கேளு. நீ எடுத்திருக்க முடிவு தப்பு.”
“வரு இப்ப வரியா? இல்லை நான் தனியா போகவா?” என அழுத்தமாக கேட்டாள் வருவின் மிரு.
ரிஷி பதில் சொல்வதற்கு முன் காந்திமதி (ருத்ரேஸ்வரனின் தாய் வழி) பாட்டி அவளை நெருங்கி, “அம்மு நான் சொல்றதை கேளு. இப்ப இருக்க நிலைமையில் நீ இங்க இருக்க வேண்டாம். என் கூட வந்துடு. பிந்துவும் அங்கதான் இருக்கா.”
“எனக்கு என்ன பாட்டி? நான் நல்லா இருக்கேன். வரு, அவர் குழந்தையை எப்படி பார்த்துக்குவாறோ, அதே மாதிரி என்னை உள்ளங்கையில் வச்சு பாத்துக்குவார். நான் அங்க வரல.” என்றவளின் பார்வை ருத்ரேஸ்வரனை வெட்டியது.
அவளது பேச்சில் கோபம் கொண்டவன், “பாட்டி அவகிட்ட ஏன் கெஞ்சிட்டு இருக்கீங்க? ஏற்கனவே முடிவு பண்ணியாச்சுல, அவ இஷ்டப்படி என்னமோ பண்ணட்டும். நீங்க கிளம்புங்க.”
“ஈஸ்வர் நான் சொல்றதை நீயாவது கேளுப்பா.”
“வேண்டாம் பாட்டி. முடிவு பண்ணினதை மாத்த வேண்டாம். எது நடக்கணுமோ அது நடந்தே தீரும். நான் கிளம்புறேன். நீங்களும் சீக்கிரம் ஊருக்கு போய் சேருங்க.” என்றவன் வேகமாக வளாகத்தின் பின் வாசல் வழியே வெளியேறினான். அவனுக்கு செய்தியாளர்களை சந்திக்க விருப்பமில்லை.
அவன் செல்லும் வரை அம்முவின் பார்வை, ஏக்கத்துடன் அவனை பின் தொடர்ந்து, ஏமாற்றத்துடன் கவிழ்ந்தது. வெளியே செல்லும் கடைசி நொடி திரும்பிய ருத்ரேஸ்வரனின் பார்வையில் பட்டது தன்னவலின் ஏமாற்ற முகம். ‘இது நீயா தேடிகிட்ட ஒன்னு. நல்லா அனுபவி.’ என்று நினைத்தவனின் மனமும் வலித்தது.
ரிஷி ஒரு பெருமூச்சுடன், ருத்ரேஷ்வரனின் சகோதரன் (பெரியம்மா பையன்) கார்த்திகிடம் கண்ணை காட்டி, பிருந்தா மற்றும் குடும்பத்தாரை, பின் வாசல் வழியே அழைத்து செல்ல கூறினான்.
பிருந்தாவின் பார்வை தவிப்புடன் தன்னவனை கண்டது. அவனோ தன் கண்களை இறுக மூடி, தன்னால் தன் மிருவின் வாழ்வு கேள்விக்குறி ஆவதை நினைத்து மருகி, தன் உணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வர போராடினான்.
அனைவரும் வெளியேறிய பின் ரிஷிவர்மாவும் மித்ராலினியும் தங்கள் உணர்வுகள் அனைத்தும் வடிய, புன்னகை எனும் பொய் முகமூடி அணிந்து, அவர்களது பி ஏ மற்றும் நண்பரான கிரிதரனுடன் இணைந்து செய்தியாளர்களை சந்திக்க திடமாக முன் வாசல் வழியே வெளியேறினார்கள்.
★★★
நட்சத்திரங்களின் வரவுக்காகவே காத்திருந்த செய்தியாளர்கள் அவர்களை சுற்றி வளைத்தனர். அனைவரின் முகத்திலும் வருத்தத்தை விட ஆர்வமே அதிகமாக இருந்தது.
பெயரளவில் தங்கள் வருத்தத்தை தெரிவித்தவர்கள், தங்களுக்குத் தேவையான தகவலை சேகரிக்க,
“மித்ரா மேம் இந்த டைவர்ஸ நீங்க முழு மனசோடு ஏத்துக்கறீங்களா?”
அவர்களை கண்டு மித்ரா, ரிஷியின் மனம் அருவருத்தாலும் வெளியே இன் முகத்துடன் அவர்களது கேள்வியை எதிர்கொண்டனர்.
“நான் ஏத்துக்கிறதுனாலையோ இல்லை ஏத்துக்காதனாலையோ எதுவும் மாறப் போறதில்ல. நடப்பது நடந்தே தீரும்.” என்ற அவளது பதிலை கேட்ட அனைவருக்கும் சப் என்றானது.
“ரிஷி ஸார் இந்த டைவர்ஸ பத்தி உங்கள் அபிப்பிராயம் என்ன?”
“இந்த டைவர்ஸ் சம்பந்தப்பட்டவர்களின், அதாவது கணவன் மனைவியின் தனிப்பட்ட விஷயம். அதை பொதுவில் விமர்சிக்க நான் தயாரா இல்லை.”
“இது எப்படி தனிப்பட்ட விஷயமாகும். இந்த டைவர்ஸ்க்கு காரணமே உங்க இரண்டு பேத்தோட பழக்கம். அப்ப நாங்க கேள்வி கேட்பது தப்பில்லை.”
பல்லை கடித்தவன், “எங்கள் பழக்கம் நட்பை தாண்டி வேற எதுவும் இல்லை.”
“ஆனால் நான்கு மாதங்களுக்கு முன் வெளியான வீடியோ, உங்களுக்குள் இருக்கும் உறவு நட்பு மட்டும் இல்லை என்று தெளிவாக காட்டியதே?”
“அந்த நிகழ்வு திட்டமிட்ட சதி என்று ஏற்கனவே நிரூபித்து விட்டோம்.”
“ஆனால் அதன் காட்சிகள் உண்மை தானே. ஒரு இரவு முழுவதும் மித்ரா மேம்மும் நீங்களும் ஓர் அறையில் தனித்து இருந்திருக்கீங்க? அதுதான் இப்போ டைவர்ஸில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கு.” என்ற அவர்களின் கேள்விக்கு ரிஷிவர்மாவின் முகம் இறுகியது.
அதைக் கண்ட மித்ராலினி கோபம் கொண்டு, “எங்களுக்கு நடுவில் இருக்கும் உறவை பற்றி உங்களுக்கு நிரூபிக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. எங்கள் மனசாட்சிக்கு நாங்கள் உண்மையா இருந்தா அது போதும். உங்கள் இஷ்டப்படி என்ன வேணும்னாலும் எழுதிக்கோங்க. வி டோன்ட் கேர்.” என்றவள், ரிஷி வர்மாவின் கரத்தை பிடித்து தர தரவென இழுத்து சென்று காரில் ஏற்றி அவளும் ஏறிக் கொண்டாள்.
அவர்களுடன் கிரியும் வாகனத்தில் ஏறியதும் வாகனம் வேகம் எடுத்தது. அவர்களது பின்னோடு வந்த செய்தியாளர்கள் ஏமாற்றம் அடைந்தார்கள்.
ரிஷிக்கும் மித்ராவிற்கும் தெரியும் நாளைய தலைப்புச் செய்தியே தாங்கள் தான் என்று. ஏற்கனவே இதுபோல் பல வதந்திகளில் மாட்டியவர்கள் இவர்கள். இதை தூசி போல் கடந்துவிட்டனர். இதற்கெல்லாம் பழக்கப்படாத பிருந்தாவின் நிலைதான் கவலைக்கிடமானது.
ஸ்ருதி சேருமா?
ராகம் இசைக்கும்