ராட்சசியே உன் ரட்சகன் நான் 7

IMG-20211115-WA0021-b2ee36fd

ராட்சசியே உன் ரட்சகன் நான் 7

 

வேணியின் நாட்கள் மிக மிக மெதுவாக நகர்வது போன்ற தோற்றத்தை தந்தது. பாண்டியிடம் இரண்டு நாட்கள் தங்கி வந்ததற்கு, கௌரி மகளை முடிந்த மட்டும் வைது தள்ளி இருந்தார். 

 

“என்னவோ நான் விருப்பப்பட்டு அவனோட இருந்துட்டு வந்தது போல பேசுறீங்க ம்மா. கதிருக்காக தான் இதெல்லாம்” வேணி சொன்னதும், அவரும் அமைதியாகிவிட்டார். 

 

தாத்தா, “கதிர் அங்க நல்லா இருக்கானாமா, பாண்டி மகனை நல்லா பாத்துக்கிறான் இல்ல?” என்று அக்கறையாக விசாரிக்க, வேணி அவருக்கு தலையை மட்டும் அசைத்துவிட்டு நகர்ந்து கொண்டாள்.

 

ஜீவாவிடம் தான், அங்கு சென்றது, பாண்டி அவளிடம் பேசியது என்று அனைத்தையும் கொட்டினாள். அவனும் நிதானமாகவே கேட்டுவிட்டு, “அங்க உனக்கு எந்த பிரச்சனையும் ஆகலயே?” என்று பரிவாக கேட்டான். அவள் இல்லையென்று தலையசைக்க, அவளை ஆதரவாக தோள் சாய்த்துக் கொண்டான். 

 

கதிருக்காக வழக்கு போடலாம் என்று வேணி சொல்லவும், அவனும் விசாரிப்பதாக சொன்னான். இப்போதைக்கு அவளின் ஒரே ஆறுதல் ஜீவா மட்டும் தான். அவனும் அவளுக்காக எதையும் செய்ய தயாராக இருந்தான்.

 

கதிர் இல்லாத வீட்டில், உயிர்ப்பற்ற வெறுமை சூழ்ந்து வேணியை மந்தமான மனநிலைக்கு தள்ளியது. மனம் எதிலும் செல்லாது மகனை பிரிந்த வருத்ததில் முடங்கி போயிருந்தாள் வேணி. ஏனோ,  கிருஷ்ணவேணியின் நினைவுகள் வேறு அவளை அதிகமாக ஆக்கிரமித்தது. 

 

கிருஷ்ணவேணி, தங்கையை விட மூன்று வயது பெரியவள். அவள் பார்வைக்கு அழகாகவும் இயல்பில் துறுதுறு குணத்தையும் படபட பட்டாசு பேச்சையும் கொண்டிருந்தாள். சாதாரண இளவயது பெண்களைப் போல சினிமா பார்ப்பதில் தீவிரமான ரசனையும் கொண்டிருந்தாள். அவளுக்கு தோதாக அவள் அப்பா சுந்தரமும், மகள்களோடு வாரத்தில் ஒருமுறையாவது திரையரங்கம் சென்று வரும் பழக்கம் வைத்திருந்தார்.

 

எல்லாம் இயல்பாக போவது போலத் தான் இருந்தது. ஆனால், கிருஷ்ணவேணிக்கு வரன் பார்க்கும் பேச்சில் தான் எல்லாமே மாறி போனது. 

 

“வேணி… நான் கிங்க லவ் பண்றேன்!” என்று கிருஷ்ணா தான் மறைத்து வைத்திருந்த காதலை முதல் முதலில் வேணியிடம் சொன்னாள்.

 

அப்போதெல்லாம் கிங் என்பவன் பற்றி வேணிக்கு ஒன்றுமே தெரியாது. ஏன் அந்த பேயரே அவளுக்கு வித்தியாசமாகத் தெரிய, “யாரு கிருஷ்ணா, கிங்கு, டைகருன்னு பேரை வச்சிக்கிட்டு? நிஜமா நீ மனுஷன தான் லவ் பண்றியா இல்ல, வண்டலூர் ஜூல பார்த்துட்டு வந்து சிங்கத்தை லவ் பண்றியா?” வேணி விளையாட்டாக கேட்க, கிருஷ்ணா அவளை இரண்டடி வைத்து கிங்கை பற்றி கதை கதையாக சொன்னாள். அவள் விவரித்த அவர்களின் காதல் கதையில், வேணிக்கு தூக்கம் தான் வந்தது. 

 

கிருஷ்ணா வேலை பார்க்கும் ரீசார்ஜ் கடையில், கிங் வந்து போக, இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது. அவன் அடிதடி கலாட்டா என்று அங்கங்கே செய்ததைப் பார்த்து, அவனை ஹீரோ ரேஞ்சுக்கு கற்பனை செய்துகொண்டு விருப்ப ஆரம்பித்திருக்கிறாள். 

 

கிருஷ்ணவேணி பாண்டியிடம் தன் காதலை சொன்ன பிறகும், “உன்க்கும் என்க்கும் செட்டாகாது, கிளம்பு!” என்று கிங் விலகி போகவும், அவன்மீதான இவள் நேசம் மேலும் கெட்டிப்பட்டு இருக்கிறது. அவளின் காதல் நச்சரிப்புகளை தாங்க முடியாமல் சமீபத்தில் தான் அவனும் சம்மதம் தெரிவித்திருக்கிறான். 

 

கிருஷ்ணா அரை நாள் முழுதாக சொன்ன கதையில், ஓரளவுக்கு வேணியால புரிந்துகொள்ள முடிந்தது இவ்வளவுதான்.

 

“கிங்கு ரொம்ப நல்லவன்டீ, பாவம் அப்பா, அம்மா,‌ குடும்பம்னு அவனுக்கு யாரும் இல்ல. ப்ச் அவ்வளவா படிக்கல வேற. இப்ப ஏதோ கிடைக்கிற வேலையை செஞ்சுட்டு இருக்கான். அவன நான் கல்யாணம் பண்ணிக்கிட்டு அவனுக்கு கிடைக்காத எல்லாத்தையும் நான் கொடுக்கணும். அவனை சந்தோசமா என் நெஞ்சுக்குள்ள பொத்தி வச்சு பார்த்துக்கணும்.” என்று கிருஷ்ணா உருக்கமாக சொல்லிக்கொண்டே போக, வேணி மண்டை காய்ந்து போய் அக்காவை பார்த்தாள்.

 

“கொஞ்சம் நிறுத்து கிருஷ்ணா… உன் ஆளுக்கு குடும்பம் இல்ல, அப்படினா வீடும் இருக்காது. படிப்பும் இல்ல, நிலையான வேலையும் இல்ல… இது எதுவுமே இல்லாம, எப்படி அவன கட்டிக்கிட்டு சந்தோஷமா… வாழ்வ? யோசிச்சு பார்க்க மாட்டியா நீ?”

 

அன்று அக்காவை கேட்ட கேள்வி வேணிக்கு இப்போதும் நன்றாகவே நினைவு இருக்கிறது. அதற்கு கிருஷ்ணா சொன்ன பதிலை கேட்டு இவள் வாயடைத்து போனதும் கூட நினைவிருந்தது.

 

“இப்ப அவன்கிட்ட இதெல்லாம் இல்லனா என்ன, இனி எவ்வளவோ சம்பாதிக்கலாம். எனக்காக என் கிங்கு எதுவேணாலும் செய்வான்! அவனால செய்ய முடியாததுனு இந்த உலகத்துல எதுவுமே இல்ல தெரியுமா?” என்று கற்பனையில் பேசியவள்,

 

“அப்பா மட்டும் அவனை எனக்கு கட்டிவைக்க சம்மதிச்சா போதும். நம்ம வீட்ட அவன் வீடா பார்த்துக்குவான். நம்ம அப்பா, அம்மாவ அவனோட அப்பா, அம்மாவா நினச்சு பாசம் காட்டுவான். உன்னயும் அவனோட தங்…” என்று கனவுபோல சொல்லிக்கொண்டு போனவளை, தலையில் அடித்து வேணி தடுத்திருந்தாள்.

 

“கொஞ்சமாவது புத்தியோட பேசு க்கா, ஏதோ சினிமால நடக்கிற மாதிரி கதைக்கட்டிட்டு போற நீ. அப்பா உனக்காக கவர்மெண்ட் மாப்பிள தான் வேணும்னு, பிரைவேட் வேலையில இருக்கறவனை எல்லாம் கழிச்சு கட்டிட்டு இருக்காரு. நீ இதுல ஒன்னுமில்லாதவனை வீட்டோட மாப்பிள்ளயா கொண்டுவர பிளான் போடுற. அப்பா கண்டிப்பா இதுக்கெல்லாம் ஒத்துக்கவே மாட்டாரு. நீ ஆகறதை யோசிச்சு பாரு” எனவும்,

 

கிருஷ்ணா சற்றும் அலட்டிக்கொள்ளாமல், “எங்க கல்யாணத்துக்கு அப்பா ஓகே சொன்னா அவருக்கு நல்லது, இல்லனா நான் ஓடிபோய் கிங்க கட்டிக்குவேன். எதுக்காவும் கிங்க விடமாட்டேன். அவனும் என்னை விடமாட்டான்.” என்று உறுதியாக கூறி சென்றாள்.

 

அதன்பிறகு வேணிக்கு மனம்‌ பதற ஆரம்பித்தது. கிருஷ்ணாவின் காதல், அவளது உளறல் எதுவுமே சரியாகபடவில்லை சின்னவளுக்கு. இதைப்பற்றி யாரிடம் சொல்வது என்று தவித்தவள், அன்று இரவெல்லாம் யோசித்தாள். மறுநாள் தாத்தாவிடம் மெல்ல, கிருஷ்ணா காதல் பற்றி சொன்னாள். 

 

முதலில் அதிர்ந்த தாத்தாவும் பேத்தி வாழ்க்கை என்பதால் பொறுமையாகவே கையாள நினைத்தார். மகன், மருமகளிடம் விஷயத்தை எடுத்துச் சொன்னவர், ஆத்திரப்படாமல் அந்த கிங்கை பற்றி விசாரித்துவிட்டு முடிவெடுக்கலாம் என்றார். சுந்தரம், கௌரிக்கு ஆத்திரம் வந்தாலும், நிதானத்தை இழுத்துப் பிடித்துக்கொண்டனர். 

 

அதுவரை கிங் என்பவன் ஒரு ரௌடி என்று கிருஷ்ணவேணி, தங்கையிடம் கூட சொல்லவில்லை. சுந்தரம் விசாரித்ததில், தங்கள் மகள் ஒரு அடிதடி செய்யும் அடியாளை விரும்புகிறாள் என்று தெரிய வர, குடும்பமே பதறிப்போனது.

 

தாத்தாவும், வேணியும் எவ்வளவு எடுத்து சொல்லியும், சுந்தரம் மிரட்டி பார்த்தும், கௌரி அடித்து வெளுத்தும், கிருஷ்ணவேணி தன் மனதை மாற்றிக் கொள்வதாக இல்லை. 

 

“எனக்கு கிங்கு வேணும், இல்லனா நான் தூக்குல தொங்கிடுவேன்!” என்று மிரட்டல் விட்டவள், பிடிவாதமாக உண்ணாமல் இருந்து, அறை கதவைத் தாழிட்டு கொண்டு தற்கொலைக்கும் முயன்றாள். பெற்றவர்கள் போராடி கதவை உடைத்து அவளை மீட்டிருந்தனர்.

 

வரவுக்கும் செலவுக்கும் இடையே கோடு போட்டு, சின்ன சின்ன சந்தோசத்தை பகிர்ந்து வாழும் சாதாரண குடும்பம் அவர்களுடையது. எண்ணெய் இட்ட பழைய இயந்திரம் போல மெதுவாக நகரும் அவர்கள் வாழ்க்கை முறையில், ஒரு ரௌடியை சேர்த்துக் கொள்ளும் தைரியமும் அவர்களுக்கு இருக்கவில்லை.

 

எனவே, “உன்ன இருபது வருஷம் பார்த்து பார்த்து வளர்த்தது, இப்படி உன்ன சாக விடறதுக்காக இல்ல. நீ சாகற வரைக்கும் போனதுக்கு அப்புறம் உன்கிட்ட எங்களால போராட முடியாது மா…

 

உன்ன ஆசையா பெத்து ஒரு குறையும் இல்லாம வளர்த்துவிட்ட எங்கமேல கொஞ்சநஞ்சம் பாசமிருந்தா, அந்த ரௌடி பயல மறந்திட்டு எங்க பேச்சை கேட்டுட்டு இரு. உனக்கு நல்ல வாழ்க்கைய நான் அமைச்சு கொடுப்பேன். இல்ல, உனக்கு அவன்தான் முக்கியம்னா… அவன்கிட்டயே போயிடு! நாங்கெல்லாம் செத்து போயிட்டோம்னு மொத்தமா தலைமுழுகிட்டு போயிடு…” சுந்தரம் வெறுத்துபோய் சொல்லிவிட்டார். கிருஷ்ணவேணியும் அதற்குமேல் யோசிக்கவில்லை வீட்டைவிட்டு வெளியேறி விட்டாள்.

 

கல்லூரி முடிந்து மாலை வீடு வந்துசேர்ந்த வேணி, அழுது ஓய்ந்து போயிருந்த அம்மாவையும் அப்பாவையும் பார்த்து அவளுக்கும் அழுகை தான் வந்தது.  

 

‘அவசரப்பட்டு தப்பான முடிவு எடுத்துட்ட கிருஷ்ணா!’ என்று அக்காவிற்காக மனம் வெதும்பி கொண்டாள்.

 

அன்றைய நாளின் நினைவு மீட்டலில், ‘அப்ப நீ யோசிக்காம எடுத்த முடிவால தான் கிருஷ்ணா, உன் வாழ்க்கையும் பாதில முடிஞ்சு போச்சு. இப்ப உன் மகன் கதிரு, அந்த ரௌடிகிட்ட சிக்கிட்டு இருக்கான்.’ என்று இன்றும் வேணி வெதும்பி கொண்டிருந்தாள். 

 

***

 

ஒருவாரம் கழிந்த நிலையில், 

 

மாலை கல்லூரி முடிந்து பேருந்துக்காக வேணி நின்றிருந்த வேளையில், பாண்டியின் கார் அவளெதிரில் வந்து நின்றது. 

 

அவன் காரை கண்டதும், வேணியின் சோர்வெல்லாம் பறந்து போக, விரைந்தோடி சென்று, காருக்குள் கதிரை தேடினாள். ஆனால் அங்கு கதிர் இருக்கவில்லை. பாண்டி மட்டும் தான் முகம் இறுகிப்போய் ஓட்டுநர் இருக்கையில் உட்கார்ந்திருந்தான்.

 

அவனைப் பார்த்து, “கதிர் வரலையா? இப்ப எப்படி இருக்கான்? என்னைத் தேடினானா?” என்று பரிதவிப்பாக கேட்டவளை, நெற்றி தசைகள் சுருங்க பார்த்தவன், பதில் பேசாமல் காரின் முன் கதவைத் திறந்து விட்டான்.

 

வேணி மறுப்பேதும் சொல்லாமல் ஏறி அமர்ந்துகொள்ள, பாண்டியின் கைகள் காரின் வேகத்தைக் அதிகரிக்க, கார் சாலையில் பறந்தது.

 

“கதிரை ஏன் அழைச்சிட்டு வரல? அவனுக்கு மறுபடியும் உடம்புக்கு முடியலயா? இப்படி அடிக்கடி உடம்புக்கு வந்தா குழந்தை உடம்பு தாங்குமா… உன்னால பார்த்துக்க முடியலனா கதிரை எங்கிட்டயே கொடுத்துடேன் ப்ளீஸ்” அவள் கெஞ்சி கேட்க,

 

“ஏய் கம்முனு கிட, சும்மா நைநைன்னு. கதிருக்கு ஒன்னில்ல நல்லாகீறான். இப்ப நான் வந்துகினது வேற மேட்டர்.” என்று சிடுசிடுப்பாக சொன்னவனை, அவள் கடுகடுப்பாக முறைத்துவிட்டு திரும்பிக் கொண்டாள்.

 

அவன் சொன்ன, அந்த வேற மேட்டர் என்னவென்று இவளும் கேட்கவில்லை, அவனும் சொல்லவில்லை. எப்படியோ கதிர் பையனை பார்க்க போகிறோம் என்ற நிம்மதியோடு இருக்கையில் சாய்ந்து கண்மூடிக்கொண்டாள் வேணி.

 

***

(நானும் கிங்க பேசிக்க சொல்லி எம்மா தபா சொல்லிக்கிறது. அவன் வாய தொறக்கவே இல்ல. சாரி பா, இந்த எபில சென்னை தமிழ் மணக்கல, நெக்ஸ்ட் எபில மணக்கும்.)