வெண்பனி 27

IMG-20220405-WA0023-2ecd95e0

பனி 27

சூரியனின் ஆதிக்கம் பூமியை ஆள தொடங்கிய நேரம். மிதமான வெப்பம் சுகமாக உடலை தழுவியது. கண்ணுக்கு குளிர்ச்சியாக, வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கியது.

காதல் கொண்ட பெண்மை, ஆண்மையின் முகம் காண முடியாமல், விழியை சுழற்றி, அவனை தவிர சுற்றியுள்ள அனைத்தையும் கண்டது. மனதிலோ பரபரப்பு. ‘அவன் எதற்கு தன்னை அழைத்தான்?’ என அரிந்து கொள்ளும் ஆர்வம் பாவையிடம். ‘எப்படி பேச்சை ஆரம்பிப்பது?’ என தயக்கம் ஆடவனிடம். சில நிமிடங்கள் யுகமாக கழிந்தது.

ஆழ்ந்த மூச்சை எடுத்து, தன்னை ஆஸ்வாசப்படுத்திக் கொண்டு,”தனா நம்ம கல்யாணம் பண்ணிக்கலாமா?” என நேரடியாக விஷயத்திற்கு வந்தான் அன்பரசன். 

தன் செவியை தீண்டிய வார்த்தைகள் நிஜமா? என திகைத்து அவனது முகம் கண்டாள் தனலட்சுமி. ‘உன் காதில் விழுந்த வார்த்தைகள் நிஜம்’ என அவன் பார்வை சொன்னது.

அதில் பாவையவளோ இன்பமாக அதிர்ந்தாள். அந்த இன்ப அதிர்வு தனலட்சுமிக்கு மட்டுமில்லை, அவர்கள் அருகில் இருந்த பனிமலரின் உருவத்துக்கும்.

இப்போது அவர்கள் இருப்பது ஸ்னோ ரேஸ் ரிசார்டின் கார்டனில். அன்பு தாயகம் திரும்பி இரண்டு மாதங்கள் முடிந்தது. இந்த மூன்றரை வருட இடைவேளை, அன்புக்கு தனாவின் மேலிருந்த கோபத்தை போக்கியிருந்தது.

“காத்திருக்கேன் அன்பு” கண்களில் பளபளப்புடன், தன் சம்மதத்தை கூறினாள் தனா. அவர்களை கட்டியணைத்து வாழ்த்து கூற, பனிமலரின் கைகளும் மனதும் துரு துருத்தது. அது முடியாத தனது இயலாமையை நினைத்து வருத்தம் மேலோங்கியது. அடுத்து அவர்கள் நின்றது கதிரின் முன்.

“ஓகே நான் வீட்ல பேசுறேன்.” என்றவனின் பார்வை பனிமலரின் புகைப்படத்தில் பதிந்தது.’நான் சொல்லாமலே உன் ஆசை நிறைவேற போகுது பனி. அதை அனுபவிக்க நீ என் கூட இல்லாமல் போயிட்ட. ஏன் இப்படி என்னை தனியா தவிக்க விட்டுப்போன?’ என மனதோடு மறுகினான். 

ஆம்! கதிர் பனியின் கடைசி ஆசையை, அன்புவிடம் சொல்லவில்லை. அவளுக்கு என்ன நேர்ந்தது என மட்டும் சொல்லி, இதை சொல்லாமல் தவிர்த்தான். பனியின் ஆசைக்காக, தனாவை, அன்பு திருமணம் செய்தால் அது அவர்கள் காதலுக்கு இழுக்கு. மனம் தெளியாமல் இணைந்தால், அன்புவின் மனதில் காலம் முழுவதும் ஒரு நெருடல் இருந்து கொண்டே இருக்கும். அங்கு மகிழ்ச்சி காணாமல் போய்விடும். அதனால் அவனாக தெளிந்து வர வேண்டும் என பனியின் ஆசையை மறைத்திருந்தான். இப்போது தானாகவே அனைத்தும் கைகூடியது.

கதிரின் வேதனை முகத்தை, புகைப்படத்தில் இருந்த பனிமலர், எப்போதும் போல் அழகான புன்னகையுடன் பார்த்தாள். அருவமாக இருந்த பனிமலர், கண்ணில் வருத்தத்துடன் பார்த்தாள்.

†††††

அதே நாள் எதிர்பாராத விதமாக கௌதம், கதிரின் சந்திப்பு நிகழ்ந்தது. இருவரும் பக்கத்து ஊர் என்பதால், அவர்களது சந்திப்பு இடை இடையே நிகழ்வது தான். பனிமலரின் மறைவுக்கு பின் இன்று தான் சந்திக்கிறார்கள்.

பாதியாக உடல் எடை குறைந்து, ஏனோ தானோவென  உடுத்தி, முகம் சோர்ந்து நின்ற கதிரை கண்டு கௌதம் திகைத்தான். எப்போதும் வசீகரிக்கும் தோற்றத்தில் இருக்கும், கதிரின் உருவம் அவன் கண்முன் தோன்றியது. அதிலும் திருமணத்திற்கு பிறகு உலகையே வென்ற களிப்போடு சுற்றியவனின் இன்றைய நிலை, பார்க்கவே பரிதாபமாக இருந்தது.

திருமணம் எனவும் பனிமலரின் அழகு வதனம் கௌதமின் கண்முன் தோன்றியது. கதிரின் மேல் உண்டான பரிதாபம் மறைந்து, கோபம் உண்டானது. மன ஆழத்தில் அழுத்தி வைத்திருந்த, பனிமலரின் மீதான காதல் மேலெழுந்தது.

“இப்படி அற்பாயுசில் அவளை பறி கொடுக்கத்தான், என்னை மிரட்டி அவளை கல்யாணம் பண்ணுனயா? உன் மிரட்டலுக்கு பயந்து நான் விலகினேன்னு நினைச்சியா? நோ. நீ மலரை நல்லா பாத்துக்குவன்னு நம்பிதான் விலகினேன். ஆனா நீ அதை செய்ய தவறிட்ட. அவளை ஒழுங்கா பார்த்திருந்தா காப்பாத்தி இருக்கலாம். நான் பெரிய தப்பு பண்ணிட்டேன். நான் விலகாம இருந்திருக்கணும். அப்ப அவ உயிரோட இருந்திருப்பா.” என பொரிந்து தள்ளிய கௌதம் அங்கிருந்து சென்றான்.

(கௌதமின் மனம் மாறி ‘வேறு பெண்ணை திருமணம் செய்ய வேண்டும்’ என இறைவனிடம் வேண்டி, அவனிடமிருந்து நாம் விடை பெறுவோம்.)

கௌதமின் குற்றச்சாட்டில் கதிர் அரசன் கல்லாக சமைந்து நின்றான். பனிமலரின் அருவம்,”டேய் அறிவு கெட்ட கௌ. என் கதிர் மாமா கூட ஏன்டா சண்டை போடுற? என்னை உள்ளங்கையில் வைச்சு தாங்கிய, என் மாமாவை பத்தி உனக்கு என்ன தெரியும்? பார் நீ பேசுறது கேட்டு, என் மாமா எவ்வளவு கவலைப்படுது. இரு உன் மண்டையை உடைக்கிறேன்.” என கௌதமை வசை பாடி, அவன் தலையில், தன் கை கொண்டு கொட்ட முயன்றாள். பாவம் அதுவோ அவன் தலையின் உள் சென்று மார்பில் வெளியே வந்தது. பனிமலர் பாவமாக உதடு பிதுக்கி நின்றாள். 

மனம் கணக்க தன் இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு, கதிர் இல்லம் சென்றான், அங்கு காத்திருக்கும் அடுத்த பிரச்சினையை பற்றி தெரியாமல். அவன் பின்னாலே பனிமலர் ஏறிக் கொண்டாள் . 

†††††

இல்லம் அடைந்ததும், நேரே தன் அறைக்கு சென்றவன் நின்றது பனியின் புகைப்படத்தின் முன். “கண்ணம்மா அந்த கௌவுதம் எவ்ளோ பேசுனான்னு கேட்டியா? நான் உன்னை சரியா பாத்துக்கலையாம். அதுனாலதான் நீ சீக்கிரம் போய்ட்டயாம். அவனை அடுச்சு பல்லை உடைக்கணும் போல கோபமா வந்துச்சு.

ம்ச் ஆனா அவன் சொல்றதும் நிஜம்தான. நான் உன்னை கல்யாணம் பண்ணாம இருந்திருந்தா, நீ வேற வீட்டுக்கு போயிருப்ப. அப்ப அவங்க கூட இயல்பா இருந்திருப்ப. உன்னோட கஷ்டத்தை அவங்க கூட ஷேர் பண்ணியிருப்ப. கொரோனாவை ஆரம்பத்திலேயே கண்டு புடிச்சு, சரி பண்ணி இருக்கலாம். இப்படி கடைசி நிமிஷத்துல தெரிஞ்சு, உன்னை தொலைச்சிட்டு நின்னிருக்க வேண்டாம்.” என புகைப்படத்துடன் பேசினான்.

“கதிர் மாமா, அவன் லூசு மாதிரி உலறுறான். நீயும் அவன் கூட சேர்ந்து புலம்புற. உன்னை என்ன பண்ணலாம்?” என அவனை போல், புலம்ப மட்டுமே முடிந்தது பனிமலரால். இப்போதுதான் தான் நிற்கும் இடம் உணர்ந்து,”நான் எப்படி உள்ள வந்தேன்?” என திகைத்து விழித்தாள். ஆனால் மனம் ஆனந்த கூத்தாடியது.

ஆம்! பனிமலரின் ஆன்மா அந்த இல்லத்திற்குள் நுழைந்து விட்டது. கடவுள் படங்கள் இருக்கும் வீட்டில் தன்னால் நுழைய முடியாது, என இத்தனை நாள் நுழைய முயலாமல் இருந்தவள். கதிரின் துயரை காண முடியாமல், தன்னை மறந்து அந்த வீட்டினில் இன்று நுழைந்துவிட்டாள்.

ஒரு பெருமூச்சுடன் தன்னை தூய்மைப்படுத்திக் கொண்டு, இதழினியை காண சென்றான் கதிர். 

உடலை உறுத்தாத குட்டி ஃபிராக் அணிந்து, துவலைப்பொடி மனம் கமல, குட்டி தேவதை இதழினி தன் செப்பு இதழ் பிரித்து அழகாக சிரித்து அவனை மயங்கினாள். அவனும் தன் கவலைகளை மறந்து குழந்தையுடன் ஐக்கியமானான். இவர்களை கண்ட நர்ஸ் சித்ரா,’பாவம் இந்த தம்பி. மனைவியை ரொம்ப நேசிச்சிருக்கும் போல, இப்படி உருகுழஞ்சு போய்ட்டார்.’ என வருந்தினார்.

“பாப்பாவை நல்லா பார்த்துக்குறீங்க அக்கா. ரொம்ப நன்றி.” மனம் நிறைந்து நன்றி கூறினான் கதிர். 

“என்ன தம்பி பாப்பாவை பார்த்துக்க நன்றி சொல்லிட்டு? அது என்னோட கடமை.” பதறினார் சித்ரா.

“நீங்க பாப்பாவை கடமைக்காக பார்க்காம, உங்க சொந்தமா பார்த்துக்கறீங்க. உங்களை மாதிரி ஒருத்தர் கிடைச்சது, நாங்க செஞ்ச புன்னியம் அக்கா.” உணர்ந்து கூறினான்.

“இப்படி பெரிய வார்த்தை சொல்லாதீங்க தம்பி. போன ஜென்மத்தில் என்ன பாவம் பண்ணுனேனோ? எனக்கு ஒரு குழந்தையை சுமக்கிற பாக்கியம் கிடைக்கல. இதழினி குட்டி கூட இருக்கறது மனசுக்கு நிறைவா இருக்கு.” மனம் நெகிழ்ந்தார்.

அதற்குமேல் ஓன்றும் சொல்லாமல், சிறிது நேரம் விளையாடிவிட்டு, இதழினியை சித்ராவின் பொறுப்பில் விட்டு, வரவேற்பறை சோபாவில் தளர்ந்தமர்ந்தான். மனதின் சோர்வு உடலை தளர்த்தியது. 

அவன் வரவும் அவனுக்கு தேனீரை வழங்கினார் சுசிலா. அவனின் நிலை கண்ட பெற்ற மனம் தவித்தது. அதை குடிக்கும் வரை காத்திருந்த சுகந்தி தன் நாடகத்தை ஆரம்பித்தார்.

“அரசு கண்ணா, இன்னும் எவ்வளவு நாள் போனவள நினைச்சு வருந்துவ? பாப்பாவுக்கும் அம்மா வேணும்ல. இப்பவும் ஒன்னும் கெட்டு போகல, பேசாம தீப்தியை கல்யாணம் பண்ணிக்கோ. அவ பாப்பாவ பாத்துக்குவா” என மனதில் நஞ்சை வைத்து, இதழில் தேனை தடவி பேசினார்.

“அம்மா நான்…” ஏதோ சொல்ல முயன்ற தீப்தியை தடுத்து,”நீ சின்ன பொண்ணு. நாங்க பேசுறோம் நீ கம்முன்னு இரு.” என அவளின் வாயை அடைத்தார். அவளும் சிடுசிடுவென முகத்தை வைத்து அமைதி காத்தாள். 

பனிமலரோ, சுகந்தியின் பேச்சுக்கு எதிர் பேச்சு பேசாமலிருந்த கதிரை முறைத்து நின்றாள். 

“நீ ம்ன்னு ஒரு வார்த்தை சொல்லு. அடுத்த முகூர்த்தத்தில் கல்யாணத்தை முடிச்சிடலாம்.” தொடர்ந்து தேனோழுக பேசினார்.

“எனக்கு ஏற்கனவே கல்யாணம் முடிஞ்சுது. எனக்கு மனைவினா அது பனிமலர் மட்டும்தான்.” என்றான் கதிர் உறுதியாக. அவன் வார்த்தையில் பனிமலரின் உள்ளம் குளிர்ந்தது. 

“உனக்கு மனைவி தேவை இல்லாமல் இருக்கலாம். ஆனால் உன் குழந்தைக்கு ஒரு தாய் வேணும். அதையும் நல்லா யோசிச்சு நாளைக்கு உன் முடிவை சொல்லு.” என்றார் சுகந்தி.

அன்று கார்த்திகேயனை நிறுத்திய அதே இடத்தில், இன்று கதிர் அரசனை நிறுத்தி இருந்தது விதி.

கதிர் அரசின் முடிவு?

†††††

“அம்மா நான் அவனை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்.” என்றாள் தீப்தி திமிராக.

அவளது வார்த்தையில் எரிச்சலான சுகந்தி,”உனக்கு என்ன பைத்தியமா புடிச்சிருக்கு? அவனை வேண்டாம் சொல்ற. சின்ன வயசுல இருந்து அவன்னா உனக்கு இஷ்டம் தானே?”

“அது அப்போ. எப்போ அவளை கல்யாணம் பண்ணினானோ, அப்பவே எனக்கு வேண்டாம்னு தூக்கி போட்டுட்டேன். இப்ப நான் என்கூட வேலை பார்க்குற ஒருத்தரை விரும்புறேன்.”

“மாச சம்பளம் வாங்குறவன் தானே. அவனை தூக்கிப்போட்டு, அரசுவை கல்யாணம் பண்ணிக்க.” என்றார் அலட்சியமாக.

“அது முடியாது நாங்க லிவ் இன் ரிலேஷன்ல இருக்கோம்.” என்றா தீப்தி அதைவிட அலட்சியமாக.

சுகந்திக்கு புரியவில்லை, “அப்படினா?” என்றார் குழப்பமாக.

“நாங்க மதுரைல ஒன்னா ஒரே வீட்டில் இருக்கோம்.” அழுங்காமல் அவர் தலையில் இடியை இறக்கினாள்.

“என்னடி சொல்ற உனக்கு என்ன பைத்தியமா புடிச்சிருக்கு?” அவளை அடிக்க கையை ஓங்கினார்.

அவர் கையை தடுத்து பிடித்தவள்,”இப்ப எதுக்கு கையை ஓங்குற?”

“நீ பண்ண காரியத்துக்கு, உன்னை அடிக்காமல் கொஞ்சு வாங்கலா?”

“நான் இப்ப என்ன தப்பா பண்ணிட்டேன்? இதெல்லாம் இப்ப சகஜம் ஆயிடுச்சு.” என்றாள் சாதாரண குரலில்.

தீப்தியின் பேச்சை சுகந்தியால் ஜீரணிக்க முடியவில்லை. தான் எப்பேர்ப்பட்ட வாழ்க்கையை அவளுக்கு அமைத்து கொடுக்க முயன்றால், இவள் என்ன இப்படி பேசுகிறாள்? என நொந்து போனார்.

ஒரு முடிவெடுத்தவர் அவளது மனசை கலைத்தார்.”அரசுவை நீ கல்யாணம்  பண்ணிக்கிட்டா, முக்கால்வாசி சொத்து உனக்கு தான் வரும். ஆளும் நல்ல வாட்டசாட்டமா, வசீகரமா இருக்கான். அவனைவிட நீ பழகுறவன் எந்தவிதத்தில் உயர்ந்தவன்? எந்தவகையிலும் அவன் அரசுவின் கால்தூசிக்கு வரமாட்டான்.” என்றவரின் கண்களில் ஆசை மின்னியது.

“அதுக்காக அவ பெத்த புள்ளைக்கு, என்னை ஆயா வேலை பார்க்க சொல்லுறயா?”

கட்டெறும்பு ஊர, கல்லும் தேயும், அதே போல் தீப்தியும் சுகந்தியின் பேச்சுக்கு துணைப்போனாள்.

“யாரடி இவ கூறுகெட்டவளா இருக்கா? அந்த மலரை எப்படி ராசி இல்லாதவன்னு, சொல்லி வீட்டை விட்டு துரத்துனேனோ, அதே மாதிரி அவ பெத்ததையும் துரத்திடலாம்.” 

“அந்த மலருக்கு, அவ பாட்டி தாத்தா இருந்தாங்க. அவங்க கிட்ட அவளை கொடுத்தாங்க. இந்த பிள்ளைக்கு தான் அப்படி வெளிய போக வழியே இல்லையே?” முகம் சுளித்தாள் தீப்தி.

“அம்மா, மகள் எல்லாரும் ராசி இல்லாதவங்க, இந்த புள்ளை வீட்ல இருந்தா உயிர் சேதம் ஏற்படும், தொழில் நஷ்டம் ஏற்படும்னு சொல்லி, ஏதாவது அனாதை ஆசிரமத்தில் விட்டுடலாம்.” என்றார் சுகந்தி ஈவு இரக்கமின்றி.

“மாமா அதுக்கு ஒத்துக்கும்னு நினைக்கிறாயா?”

“கல்யாணம் வரைக்கும் விரச்சுகிட்டு தான் இருப்பாங்க. அதுக்கு அப்புறம் பெட்டி பாம்பா அடங்கிடுவாங்க. அப்பறம் நீ சொன்னா என்னவேனா செய்வான். இதை செய்யமாட்டனா?”

“அது முடியுமா?” சந்தேகமாக கேட்டாள் தீப்தி.

“உன்னோட அப்பா, அந்த மீனாவை அதுதான் என்னோட சக்களத்தியை காதலிச்சு கல்யாணம் பண்ணுனார். அவளையே மறக்கவச்சு என்னோட குடும்பம் நடத்த வைக்கலயா? நான் சொல்லுறதை கேட்க வைக்கலயா? இந்த அரசு என்ன பிசாத்து பையன். சந்தர்ப்பவசத்தால் அவளை கட்டிக்கிட்டான். அவனை ஈசியா வளச்சுடலாம்.” என்றார் கதிரை பற்றி தெரியாமல்.

மகளின் சந்தேக பார்வையை உணர்ந்து,”எப்பவும் அவங்க ரெண்டு பேத்துக்கும் ஆகவே ஆகாது. சண்டை போட்டுக்கிட்டே இருப்பாங்க. கல்யாணத்துக்கு அப்புறம் அவளையே அவன் சுத்தி சுத்தி வரலையா? நீ அவன்கிட்ட கொஞ்சம் தாராளமா பழகுனா உன் காலடில விழுந்துடுவான்.” என்றார், ஒரு தாயாக தன் மகளிடம் என்ன பேசுவது என்ற விவஸ்தை இல்லாமல்.

“எல்லாம் சரி. முதல மாமா கல்யாணத்துக்கு சம்மதிக்குமா?” சந்தேகமாக.

“அதுக்கும் ஐடியா வச்சிருக்கேன். இங்க பாரு.” என கையில் இருக்கும் வஸ்துவை காட்டினார்.

“என்னமா இது?”

“போதை மருந்து. இன்னைக்கு அவன் சாப்பிடுற சாப்பாட்டில் கலந்துடரேன். அவன் போதையில் இருக்கும் போது அவன் ரூம்க்கு போய், கொஞ்சம் அப்பிடி இப்படி இருந்து, அவனை மயக்கிடு. அப்பறம் நம்ம இழுத்த இழுப்புக்கு வந்துதானே ஆகணும்.” என வில்லி சிரிப்பை சிரித்தார்.

தீப்தியோ ஆசையாக போதை மருந்தை பார்த்தாள்.

பனிமலரின் ஆன்மாவோ, அவர்களை கொலைவெறியுடன் பார்த்தது. ஒன்னும் செய்யமுடியாத இயலாமையில், அது சென்று நின்ற இடம்???

†††††

சொன்னதுபோல யாருக்கும் சந்தேகம் வராதளவு, சுகந்தி, கதிரின் உணவில் போதை மருந்தை கலந்தார். அந்த வஸ்துவும் அவன் உடலில் கலந்தது. அது கலக்கும்போது, அவனது உடலில் பல மாற்றம். கண்கள் மயக்கத்தில் சொருகியது. தன் தலையை உலுக்கினான். மேலும் தள்ளாடியது. உடல் பறப்பதுபோல் லேசானது. கதிர் நிதானிக்க முயன்று, முடியாமல் தன் அறையில் சென்று படுக்கையில் விழுந்தான். உடலில் இளமை தேடல் அதிகரித்தது.

“பனி ஐ பேட்லி நீட் யூ பிசிக்கலி.” வாய் குழறியது. கைகள் தன் இணையை துழாவியது. அப்போது ஒரு வளைகரம் அவன் கரத்தில் சிக்கியது. அதை தன்னோடு இழுத்து சேர்த்தனைத்தான். 

பிறகு????????????  

போதை தெளிந்து விடியும் விடியல், அவனின் வாழ்க்கை பாதையை மாற்றப்போகிறது. எவ்வாறு ????