அத்தியாயம் 29
குழப்பமே வந்து விட்டு, பயிற்சி பெரும் வைத்தியர் ஒருவர் பரிசோதித்துவிட்டு உடனடியாக சிகிச்சை முறையில் குழந்தைகளை பிரசவிக்க ஆயத்தமாக்க, உயர் வைத்திய அதிகாரி ஒருவர் வந்து மீண்டும் பியானாவை பரிசோதிக்க அவள் நிலைகுலைந்திருந்தாள்.
“குழந்தைக்கு தலை திரும்பி இருக்கும்போது எப்படி சிசேரியன் பண்ணுவீங்க” என்று உயர் வைத்தியர், அவருக்கு கீழ் வேலை பார்க்கும் வைத்தியர்களிடம் அதட்டலாக கேட்டார்.
இது முதல் பிரசவம் என்பதால் பிரசவ வலியை அறிந்திருக்கவில்லை அவள். பிரசவ அறையில் என்ன செய்யவேண்டும் என்பதுகூட தெரியாமல் நிலை தடுமாறினாள்.
“டாக்டர் குழந்தைங்க எப்படி இருக்காங்க. இது சூட்டு வலிதானே?” என்றவள் கேட்க, தாதியர் ஒருவர்தான் பதில் கூறினார்.
“அம்மா உனக்கு லேபர் பெயின். இன்னும் கொஞ்ச நேரத்துல குழந்த பொறந்துரும்” என்று ஒரு தாதியர் கூறினார்.
“குழந்த பொறந்துருமா!” என்றவுடன் பயங்கரமாய் மூச்சு அடைக்க ஆரம்பித்தது அவளுக்கு.
“பேஷண்டுக்கு வீசிங் வந்துட்டு ஆக்சிஜன் குடுங்க” என்றார் வைத்தியர்.
‘முழுசா எட்டு மாசம் கூட இல்ல. அதுக்குள்ள டெலிவரியா, ஏன், என்னாச்சு? இப்போ பேபி கிடைச்சா குறைப்பிரசவம் ஆகிருமே’
“அம்மா வலி தாங்க முடியலயே!” என்று அவள் கத்தும் சத்தம் புறஞ்சேயனின் காதை சென்றடைந்தது.
“மிஸஸ். புறஞ்சேயன், ஒரு குழந்தையோட தலை திரும்பியிருக்கு அதான் உங்களுக்கு பெயின். இன்னும் கொஞ்சம் நேரத்துல நார்மலா டெலிவரி ஆகிரும். லேசான வலியோட வந்திருந்தா இன்ஜக்ஷன் போட்டு அனுப்பிருப்போம். கர்ப்ப பை வாய் கிட்ட பேபி வந்துட்டு சோ டெலிவரி பண்ணிதான் ஆகனும்” வைத்தியர் சாதாரணமாக கூறினார்.
“குழந்தைங்க சேஃபா இருக்காங்களா டாக்டர்” பியானாவிற்கு ஒரு தாயாக குழந்தைகளை நல்லபடியாக ஈன்றெடுக்கவேண்டும் என்ற சிந்தனை மட்டும் ஆழப்பதிந்தது.
“யெஸ்”
வெளியே புறஞ்சேயன் தடுமாறிக்கொண்டு இருக்க ஒரு தாதியர் குழந்தைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி வருமாறு கூறிவிட்டு சென்றிருந்தார்.
“என்ன வேர்லின் பேபிக்கு திங்க்ஸ் வாங்க சொல்லுறாங்க?”
“சாரி மாம்ஸ், கொஞ்ச நேரத்துல பேபி டெலிவரி ஆகிரும்”
“அது எப்படி, இப்போதானே தேர்ட்டி ஒன் வீக்” மனதளவில் சோர்வடைந்தாலும் வெளியே காட்டிக்கொள்ளவில்லை அவன்.
“ரெண்டு பேபிக்கும் தனித்தனியா எல்லாம் இருக்கதால வயித்துல இடம் போதாது. சோ சீக்கிரம் டெலிவரி ஆகிரும்”
“இப்ப என்ன வேர்லின் பண்றது? பியூ வேற கத்தி கத்தி அழுறளே, ஆண்டவா!” ஒரு நிமிடம் முகத்தில் கையை வைத்து எடுத்தான். கண்ணெல்லாம் சிவந்திருந்தது.
“பேபிக்கு நான் திங்க்ஸ் வாங்கிட்டு வாரேன். நீங்க இங்கயே இருங்க மாம்ஸ்”
“இந்த லாக்டவுன்ல எங்க போய் வாங்குவ, நான் போயிட்டு வாரேன்”
“அக்கி உங்கள கூப்பிடுவாங்க”
“நீ பார்த்துக்க” என்று கூறிவிட்டு அவ்விடத்தை நகர்ந்தான்.
கைபேசியை எடுத்து வினயிக்கு அலுவலகத்தை திறக்குமாறும், யுவாவிடம் அவனுக்கு தெரிந்த கடைகளில் சில பொருட்களை வாங்கி கொண்டு வருமாறு கூறினான்.
இப்போது அலுவலகத்தை நோக்கி சீருந்தை எடுத்து வேகமாக சென்றான்.
ஆடை தொழிற்சாலை நடத்தும் முதலாளியின் குழந்தைக்கு ஆடை தேடிச் செல்லும் அவலம் நேர்ந்தது அவனுக்கு.
வேலை பார்க்கும் இருபெண்களை அவசரமாக வேலை தளத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தான்.
“டேய் வினய், பியானாக்கு டெலிவரி ஆகப்போகுது. பேபி டிரஸ் தைச்சு வை. நான் வெளிய கொஞ்சம் போய் திங்க்ஸ் வாங்கிட்டு வரேன்”
“என்ன புறா உளற?”
“பியானாக்கு வருத்தம் வந்து ஆஸ்பிடல் போனோம் டா டெலிவரிக்கு எடுத்துட்டாங்க டா. இதுக்கு மேல எதும் கேக்காத நான் வந்து பேசுறேன்” என்று தலைகால் புரியாமல் ஓடிச்சென்று மீண்டும் சீருந்தை செலுத்த ஆரம்பித்தான்.
“டெலிவரி டைம் உங்கிட்டவே இருக்ககூடாதுன்னு நினைச்சேன். கடவுள் விதிய மாத்தி வச்சிட்டாரு. பியூமா என்னபாடு பாடுறாளோ தெரியலயே” என்றவன் கண்களிலிருந்து வழியும் நீரை துடைத்தபடி வண்டியை வேகமாக செலுத்தினான்.
இங்கு பியானாவோ, ‘நான் பிறக்கும் போது இப்படிதான் கஷ்டப்பட்டிங்களா அம்மா’ என்று தன் தாய் பட்ட வேதனையை எல்லாம் உணர ஆரம்பித்தாள்.
“உன்னோட ஹஸ்பண்ட கூப்பிடவாமா?” என்று தாதியர் கேட்க, ஆம் என்று தலையை அசைத்தாள்.
வலியின் உச்சக்கட்டத்தில் கதறி கதறி அழ ஆரம்பித்தாள் பியானா.
உள்ள வந்த வேர்லின், “மாம்ஸ் பேபிஸுக்கு டிரஸ் வாங்க போயிருக்காங்க”
“அவர சீக்கிரம் வர சொல்லு வேர்லின்” என்று முக்கித் திணறி கூறினாள்.
பனிக்குடத்தை வைத்தியர் உடைத்துவிட வலியில் உயிரே போய்விடும் என்பது போல், “சேய்யூ” என்று கத்தினாள்.
“நீங்க கத்தும் போது பேபிஸ் பயப்படுவாங்க. வெளிய வரமாட்டாங்க. தயவு செஞ்சு சத்தம் போடாதீங்க. மத்த ப்ரெக்னன்ட் லேடிஸ் பயப்படுவாங்க” என்று தாதியர் கூறியவுடன் ஊமையாய் அழ ஆரம்பித்தாள்.
வேர்லின் தமக்கை பாடும்பாட்டை பார்த்து பிரசவ அறையிலிருந்து வெளியேறினாள்.
உடலில் இருக்கு நரம்புகள் எல்லாம் ஒரே நேரத்தில் முறுக்குவது போலும் முதுகு தண்டும் இடுப்பெலும்பும் நொறுங்குவது போன்ற வலி ஏற்பட பற்களைக் கடித்துக்கொண்டு இறைவனை பிரார்த்திக்க ஆரம்பித்தாள் பியானா.
“ரெண்டு பேபி இருக்கறதால புஷ் பண்ணக்கூடாது. நீங்களே டிரை பண்ணுங்க. உங்களால முடியும் இன்னும் டிரை பண்ணுங்க”
முடிந்தளவு முயற்சித்தாள். குழந்தையின் தலை வெளியே தெரிய ஆரம்பிக்க, இழுத்து பிடித்த மூச்சை விட்டாள். குழந்தை மீண்டும் சற்று உள்ளே சென்றிருந்தது.
“நீங்க விடாம டிரை பண்ணுங்க. குழந்த கொஞ்சம் உள்ள போயிருச்சு”
மீண்டு விடாமல் முயற்சித்து, “ஆஆ…” என்று தொடர்ந்த சத்தம் “அம்மா…” என்று முடிவடைய முதல் மகவு அழுகையுடன் அவதரித்தது.
அந்த அழகை காண்பதற்கு கூட நேரமில்லை. அடுத்த குழந்தை பெறுவதற்கு தயாராக, அடுத்த நான்கு நிமிடங்களில் இரண்டாவது குழந்தை பிறந்தது.
கண்களில் ஆனந்த நீர் வழிந்தாலும் அதில் புறஞ்சேயன் அருகில் இல்லை என்ற ஏக்கமும் கலந்ததிருந்தது. அதன் பின்னர் குழந்தைகள் இருந்த பையை வெளியே எடுக்க தான் புரிந்தது குழந்தைகளைவிட பைதான் பெரிதாக இருந்தது என்று.
பிறந்த குழந்தைகளைச் சுத்தம் செய்ய கூடயில்லை. முன்கூட்டியே அடைகாக்கும் கருவியை(இன்குபேட்டர்) வரவழைத்து அப்படியே குழந்தைகளை அதில் வைத்து, குழந்தைகள் தீவிர பிரிவுக்குக் கொண்டு போனார்கள்.
பிரசவத்திற்கு பின்பு மயக்கம் வருமென்று படத்தில் பார்த்த காட்சிகள் எல்லாம் பொய்யானது அவளிடம். குழந்தைகள் பற்றிய சிந்தனை அதிகரிக்க ஆரம்பித்தது.
என் உடலும் உணர்வும் சிதறி தொங்கிட
தாதி என்னிலிருந்து உன்னை பிரித்தெடுத்து
என்மேல் போடவில்லையே
நீராட்டவும் இல்லையே
கண்ணாடி குடுவையில் வைத்து
ஆக்சிஜன் பொருத்த
பெற்ற நெஞ்சம் நொறுங்கியதே
அந்தப்பக்கமாக குழந்தைகளைக் கொண்டு செல்ல, இந்தப்பக்கமாக புறஞ்சேயன் வந்து சேர்ந்தான்.
“இப்போதான் பேபிஸ கொண்டு போறாங்க மாம்ஸ். கொஞ்ச தூரம்போனா பார்க்கலாம் வாங்க” என்று வேர்லின் புறஞ்சேயனின் கையைப் பற்ற, உடனே தட்டிவிட்டான்.
“முதல்ல பியூவதான் பார்ப்பேன்” என்று கூறிவிட்டு பிரசவ அறைக்குள் நுழைய, “சார் வெளிய போங்க. ஸ்டிச் பண்றோம்” என்று கூற வெளியே வந்து விட்டான்.
அவ்விடத்தில் கண்ட காட்சி, இரத்தம் வழிந்தோடிய வெறும் தசைப்பிண்டம்! தன்னவளின் பெண்ணுறுப்பிற்கு பெரினியர் அறுவைசிகிச்சை நடப்பதைப் பார்த்தவன், இருக்கும் இரண்டு குழந்தைகளே போதும் வேறு குழந்தையே வேண்டாம் என்கிற அளவில் சில்லு சில்லாய் அவன் மனதை நொறுக்கியது அக்காட்சி.
‘என் பியூமாக்கு எவ்ளோ வலிச்சிருக்கும், துடியா துடிச்சிருப்பாளே’ என்ற எண்ணத்தில் கண்கள் அழுவதற்கு சிவக்க ஆரம்பிக்க, “சார் உள்ள வந்து பாருங்க” என்று தாதியர் கூற, அருகில் இருக்கும் அறைக்குள் ஓடிச்சென்றான்.
தன்னவனை பார்த்தவுடன், “சேய்யூ…” என்று கத்தினாள் அவள்.
ஓடிச்சென்று தன்னவளைக் கழுத்தோடு கட்டியணைத்தான். “ரொம்ப வலிச்சுதா மா?”
“ம்” என்று அவன் கவலை குரலிலும் ஆறுதல் தேடினாள்.
“நம்ம சிங்கக்குட்டிங்க எங்க? பொண்ணா, பையனா?”
“பேபி ரூமுக்கு கொண்டு போயிட்டாங்க சேய். பொண்ணும் பையனும். பேபிய என் மேல போடவே இல்ல சேய். குளிப்பாட்டவும் இல்ல. ஆக்சிஜன் வச்சி கொண்டு போனாங்க. எனக்கு பயமா இருக்கு” என்று கூறியவள் உதட்டை கடித்து கண்கள் பிதுங்க நீர் கசிய ஆரம்பித்தது.
“நான் பேபிஸ பார்த்துட்டு வாரேன் இரு” என்று அவளிடம் இருந்து குழந்தைகளைப் பார்ப்பதற்கு சென்றான்.
குழந்தைகள் தீவிர பிரிவு அறையின் வாசல் நின்று கொண்டிருக்க, அவனை பார்த்து வெளிய வந்த தாதியர், “சார் ஏன் வெளிய நிக்குறீங்க?”
“என்னோட குழந்தைங்க இங்க இருக்கிறதா சொன்னாங்க. அதான் பார்த்துட்டு போகலாம்னு இருக்கேன்”
“இல்ல சார். கொரோனா அதிகமா இருக்கதால வெளியிலிருந்து வர யாரையும் உள்ள ஹெலவ் பண்ண மாட்டோம். உங்க பேபிஸுக்கு ட்ரீட்மென்ட் நடக்குது. இங்கு இருக்க பேபிஸ் எல்லாமே ப்ரீமெச்சூர் பேபிஸ்தான். சோ, சீக்கிரமாவே இன்ஃபெக்ஷன் ஆகிரும். பேபியோட அம்மா மட்டும் பார்க்கலாம்”
“ஓகே ஓகே சிஸ்டர், பேபிஸ கவனமா பார்த்துக்கோங்க” என்று கூறிவிட்டு முகத்திலும் மனதிலும் சலனத்தோடு மீண்டும் பியானாவின் அறைக்கு திரும்பினான்.
“சேய் பேபிஸ பார்த்தீங்களா, யார மாதிரி இருக்காங்க?”
“இல்லாடா” என்று தாதியர் கூறியதைக் கூறினான்.
“இப்பவே பார்க்கனும் போல இருக்கு சேய். எல்லார் கைலயும் அவங்க அவங்க குழந்த இருக்கு, ஆனா எங்கிட்ட மட்டுமில்ல” என்று அழ ஆரம்பித்தாள்.
“அக்கி, ஆஸ்பிடல் ரூல் படி ஒரு நாளைக்கு நாலு நேரம்தான் குழந்தைய பார்க்கலாம். உன்னைய பார்த்துகிறதுக்கு ஆள் இருக்கு, அவங்களே பேபிஸ பார்க்க கூட்டிட்டு போய் கூட்டிட்டு வருவாங்க. விசிட்டர்ஸ் ஒரு நாளைக்கு ஒரு நேரம்தான் பார்க்கலாம். நீ இப்போ சாப்பிடு அக்கி ஃபீட் பண்ணணும். நாங்களும் கிளம்புறதுக்கு டைம் சரி”
“கவனமா பத்திரமா இரு பியூமா. இந்த ஃபோன வச்சிக்கோ. எதும்னா ஒரு மிஸ்கால் குடு நான் கால் பண்றேன்” என்று தொண்டை அடைக்கும் குரலில் கூறிவிட்டு கிளம்பிருந்தான்.
ஈன்றது மட்டும்தான் குழந்தையின் முகத்தைக் கூட சரியாக பார்க்கவில்லை. கண்ணாடிப் பெட்டிக்குள் வைத்து வேகமாக எடுத்து சென்றிருந்தனரே!
பிரசவத்தின் பின் வரும் இயல்பான பசி உணர்வு அவளுக்கு வர மெதுவாக எழுந்து உதவியாளரை அழைத்து உணவை கையில் எடுத்து தருமாறுக் கேட்டாள்.
உணவின் சுவை நன்றாகத்தான் இருந்தது. பாதிக்கு மேல் அவளால் உண்ண முடியவில்லை. குழந்தைகள் பசியை தான் இன்னும் அமர்த்தவில்லையே என்கிற எண்ணம் தோன்ற மீத உணவு தொண்டைக்குழியில் இறங்கவில்லை.
பின்பு காணும் தாதியர்களிடமெல்லாம் குழந்தைகளைப் பார்க்க வேண்டும் என்றும், அழைத்து செல்லுமாறும் கெஞ்சிக்கொண்டிருந்தாள்.
“உனக்கு ஒரு தடவை சொன்னா புரியாதா, நைட்டு கூட்டிட்டு போவோம். இப்போ நடக்கக் கூடாது. தலை சுத்தும். பேசாம படுமா” என்று கூறிவிட்டு நகர்ந்தார் தாதியர்.
இங்கு புறஞ்சேயனோ, குழந்தை பிறந்த மகிழ்ச்சியைகூட முழுவதுமாய் அனுபவிக்க முடியாமல் சிக்கித்தவித்தான்.
புகழிற்கு அழைப்பை விடுத்து குழந்தைகள் பிறந்ததைக் கூறினான். புகழோ அளவில்லா ஆனந்ததில் அனைவரிடமும் கூற, செல்வத்திற்கு ஆசை வந்தது குழந்தைகளை பார்வையிட.
என்னதான் வெறுத்து ஒதுக்கினாலும் பேரப்பிள்ளைகள் மீது உரிமையான அன்பு இருக்காத?
பிரணவ் பிறந்த நேரம்கூட திட்டி திட்டி சென்று பார்த்தாரே.
இங்கு பியானாவோ, கண்ணீர் மொழியின் பாவையாய் இருந்தாள். தாதியர் குழந்தைகளை பார்க்க பியானாவை சக்கரநாற்காலியில் வைத்து அழைத்து வந்தனர்.
குழந்தைகள் தீவிர பிரிவு அறையின் வாசலில் கொரோனா தொற்று நீக்கியை தெளித்து மேலே வேறொரு ஆடை அணிந்து பின்தான் உள்ளே அனுமதித்தனர்.
உள்ளே சென்றவள் எங்கே என் குழந்தை என்று கேட்க, அவள் கையில் கட்டியிருக்கும் இலக்கங்கள். குழந்தைகளை வைத்திருக்கும் பெட்டிகளில் அதே இலக்கங்கள் ஒட்டப்பட்டிருக்கும் என்று கூற மூன்றாம் மற்றும் நான்காம் இலக்கத்தை தேடிச்சென்றாள்.
மூன்றாம் இலக்க பெட்டிக்கு அருகில் நான்காம் இலக்க பெட்டி இருக்க நிம்மதி அடைந்தாள்.
குழந்தைகளை அருகில் சென்று பார்க்க, இதற்குதான் இத்தனை நேரம் காத்திருந்தோமா என்றானது அவளின் நிலை.
ஆக்சிஜன் முகத்தை மறைத்திருக்க, குழந்தைகளின் இருகைகளிலும் ஊசியின் மூலம் மருந்து செலுத்துவதை அவளால் பார்க்க முடியவில்லை.
“உங்க ரெண்டு பேரையும் இப்படி பார்க்கத்தான் ஓடி ஓடி வந்தேனா?ஐய்யோ ஜீசஸ்! இந்த பிஞ்சு கைக்கு ஊசி குத்தினா வலி தாங்குமா?” என்று பெட்டியின் கீழே குழந்தைகளின் விபரங்களை பார்க்க மேலும் பாவமான அவள் நிலை.
ஒரு குழந்தை ஒரு கிலோ முன்னூற்றி அறுபது கிராமும், மற்றக் குழந்தை ஒரு கிலோ முன்னூற்றி தொன்னூறு கிராமும்தான் இருந்தது.
இரண்டு கைகளால் தூக்கக் கூடிய அளவே இல்லை இரு குழந்தைகளும். அப்படி இருக்கும்போது அவள் முன்னாடி குழந்தைகளுக்கு மருந்தை மாற்றி ஏற்ற இன்னும் ஒரு ஊசியை செலுத்த சின்னஞ்சிறிய பிஞ்சிலும் பிஞ்சுக் குழந்தை சத்தமிட்டு அழுவதுகூட அந்த பெட்டியை விட்டு வெளியே வரவில்லை. அதை பார்த்த தாயின் மனம் கல்லா என்ன? கரையாமல் இருக்க கண்ணீராய் கரைந்தது அவள் உணர்வுகள்.
‘வலில துடிக்கிறாங்க. ஆனா சத்தமா அழக கூட தெரியலயே! எவ்ளோ பாவம் ஊசி போடுற வலிய ரொம்ப கஷ்டப்பட்டு தாங்குதுங்க இந்த சின்ன உசுருங்க’
வைத்தியர் புறஞ்சேயனை காலையில் சந்திக்க வேண்டுமென்று கூறினார் பியானாவிடம்.
குழந்தைகளின் பசியாற்றுகைக்கு ஒரு கிண்ணத்தில் பாலை எடுத்து வைத்தவிட்டு வெளிய வந்து கதறி கதறி அழ ஆரம்பித்தாள் பியானா.
கண்ணாடி குடுவையில் உன்னை இட கண்களால் நான் முத்தம் இட கலங்குதே என் நெஞ்சம் உன் பட்டு மேனியின் ஸ்பரிசம் தொட்டுணர- ஊசி குத்தும் வலியினை நான் பார்த்திட கண்ணீரும் காவிரியே காலமெல்லாம் கண்ணாடியின் மாயமே
இங்கு புறஞ்சேயனோ பியானாவின் குறுஞ்செய்தியை பார்த்து உணவை வெறுத்து, இரவின் தூக்கமெல்லாம் துக்கமாக துணைவியையும் குழந்தைகளையும் நினைத்த வண்ணமிருந்தான்.
வைத்தியர் எதற்கு காலையில் சந்திக்க வேண்டுமென்று கூறினர் என்பதே அவனுக்கு பெரிய குழப்பமாக இருந்தது.
பியானாவிற்கு அழைப்பை விடுத்து குழந்தை பற்றி விசாரிக்கலாமா,
அவள் தூக்கம் கெட்டு விடுமோ மணியோ பத்து சற்று நேரம் பொறுத்திருந்தால் விடிந்து விடும் நேராக சென்றே கேட்டிடலாம் என்று முடிவை செய்து கொண்டு கட்டிலில் புரள, தூக்கம் வரவதாகவுமில்லை. துக்கம் அவனை விட்டு போவதாகவுமில்லை.
ஆழிவாய் சத்தம் ஓயவே இல்லை. அதே நிலை அவன் மனதில் குமுறலும். சேவல் கூவி விடிந்துவிட்டது என்று கூறினால் நன்றாக இருக்குமே. இருள் நீங்கி வெளிச்சம் பிறக்குமா இந்த விடியாத இரவிற்கு.
ஆழிவாய் சத்தம் அடங்காதோ? அவன் வளர்த்த கோழிவாய் மண்கூறு கொண்டதோ? – ஊழி திரண்டதோ? கங்குல் தினகரனுந் தேரும் உருண்டதோ பாதாளத்துள்.
***