அனல் நீ குளிர் நான் -அத்தியாயம் 12

IMG-20220627-WA0025-69114189

அனல் நீ குளிர் நான் -அத்தியாயம் 12

An kn-12 

“ஹாய் மயூரி எப்படி இருக்கீங்க?” 

“ஹாய் க்கா.நல்லாருக்கேன் க்கா.ரொம்ப நாளைகப்றமா வறீங்க.” அவர் கை பிடித்து தன் இருக்கை அருகே இருந்த இருக்கையில் அமர வைத்துக்கொண்டாள்.” 

“ஆமாடா. நேரமே இப்போல்லாம் இல்லவே இல்லை. ஜனனி கூட அவ  ஸ்கூல்,கிளாஸ் ஒர்க்னு அப்படியே நேரம் போயிடுது. விஷ்வா இருக்கதால திங்ஸ்லாம் அவன்கிட்ட சொல்லியே வாங்கிப்பேன், இல்லன்னா அப்பா கொண்டுவந்து கொடுப்பாங்க.” 

“ஜனனிய அப்பா கூட்டி போக மாட்டாங்களா?” 

“ரெண்டுபேரும் மாறி மாறித்தான் போவோம். இல்லன்னா விஷ்வாவும் அப்பப்ப கூட்டி போறதுதான்.” 

“அப்பப்ப கொஞ்சம் வெளில வரலாமே அக்கா. வீட்டுக்குள்ளேயே எவ்ளோ நாளைக்கு தான் இருப்பீங்க?” 

புன்னகைத்தாள். “என்னவோ தெரில முன்ன போல முடில.” சற்று கண்களும் கலங்கியதோ. 

“பேசாம எங்கூட வந்து இருங்களேன், எனக்கும் ஹெல்ப்பா இருக்கும்.” 

“ஐயோ வேலைக்கு போறேன்னு சொன்னா, என்னை திட்டித் தீர்த்திடுவான் விஷ்வா .” 

“ஏன் அதுலென்ன தப்பு? எப்போவும் அவர் கையவே எதிர்பார்த்துட்டு இருக்க முடியுமா?அவரும் அவருக்குன்னு ஒரு குடும்பம் அமைச்சுக்க வேணாமா?” 

“அதே தான் நானும் தினம் சொல்லிட்டு இருக்கேன் மயூரி. கேட்கவே மாட்டேங்குறான்.” 

“உங்களை வச்சுட்டு அவரால எப்டி அவரை பத்தி யோசிக்க முடியும். உங்களை தப்பா சொல்லலக்கா. வர்ரவங்க எப்டி நடந்துப்பாங்கலோன்னு அவர் யோசிக்கலாமே. அதுனாலதான்  யோசிக்கிறாங்களோ என்னவோ. எல்லாரும் ஒரே போல இருக்க முடியாதே.” 

“தப்பா சொல்ல இதுல என்ன இருக்கு மயூரி. நானும் அதேதான் சொல்றேன். இப்போ எங்க வீட்ல மேல் மாடி வாடகைக்கு விட்டிருக்கு. அதை எனக்கு கொடு, அதுல நானும் பொண்ணும் இருக்கோம்னு  சொன்னாலே கேட்க மாட்டேங்குறான். எத்தனை  தரகர்கிட்ட சொல்லி வச்சிருக்கோம். எனக்கும் புரியாம இல்லை. இவன் ஒன்னுக்குமே பிடி கொடுக்க மாட்டேங்குறான்.” 

“இப்போல்லாம் பசங்க இருபத்தஞ்சுலேயே கல்யாணம் பண்ணிட்ராங்க. இன்னும் லேட் பண்ணா நல்லாவா இருக்கும்.” 

“அதுன்னா சரிதான்.” 

“நீங்க விருப்பம்னா சொல்லுங்க. நான் வேணும்னா  விஷ்வாகூட பேசுறேன் க்கா.” 

“எனக்கும் கைக்கு உதவியாதான் இருக்கும்டா. நானும் நினைச்சட்டேதான் இருக்கேன். ஜனனிகும் இப்போ பதினஞ்சு ஆகுது. அவளும் எப்போவும் எதுவுமே ஆசைனு ஒன்னும் கேட்டதில்லை. மாமாவை கேட்கணும்னு சங்கடப்பட்றலோன்னு அப்பப்ப தோணும். ஆனால் காட்டிக்க மாட்டா. நானே விஷ்வாகிட்ட கேட்டுப்பார்க்குறேன். என்ன சொல்வானோ தெரில.” 

“ஓகேக்கா. திங்ஸ் எடுக்கணும்னா போய் எடுங்கக்கா.இல்லன்னா லிஸ்ட் கொடுங்க பசங்க எடுத்து கொடுப்பாங்க.” 

“இல்லடா கொஞ்சம் தான் நானே பார்த்து எடுத்துக்குறேன்.” கூறி அவளே எழுந்துச் சென்றாள்.

கீதாவிற்கு பன்னிரண்டு ஆண்டுகள் தான் அவர்களது திருமண வாழ்க்கை. மகளுக்கு பத்து வயதாகும் போதே கணவர் மாரடைப்பில் இறந்துவிட்டார். சொல்லிக்கொள்ளும் அளவில் வசதியாக வாழ்ந்திருக்கவில்லை, மாமியார் வீட்டில் கூட்டாக  வாழ்ந்ததனால், கணவரின்  மறைவுக்கு பின் அவரால் அங்கே தனியாக சமாளிக்க முடியவில்லை. ஆனாலும் இருவரும் சந்தோஷமாக, நிம்மதியான வாழ்க்கையினை வாழ்த்திருந்தார்கள்.

அதன் பின் அப்பாவோடு வந்து சேர்ந்தவர் தான். விஷ்வா அப்போதுதான் கல்லூரி முடித்து அவன் தொழில் ஆரம்பித்த நேரம். நாட்கள் செல்ல தொழிலில் ஏறுமுகம் தான். அதனால் அக்கா அவனுக்கு சுமையாக இருக்கவில்லை.

வீட்டுக்குச் செல்லும் போதே விஷ்வா வாசலில் அமர்ந்திருந்தான். 

“எங்கிட்ட சொல்லிருந்தா நானே கொண்டுவந்திருப்பேன்ல.” 

“எவ்ளோண்ணு தான் வீட்டுக்குள்ளேயே இருக்கது, அதான் போய்ட்டு வந்தேன்.” 

அவனருகே அமர்ந்தவர், “டேய் விஷ்வா,நான் மயூரியோட சூப்பர் மார்க்கெட்க்கு வேலைக்குப் போகலாம்னு இருக்கேன்.” 

“எதுக்கு இப்போ? ” 

“எதுக்குன்னா, எப்போவும் இப்படியே என்னால இருக்க முடியுமா?நீயும் பொண்டாட்டி பிள்ளைன்னு செட்ல் ஆக வேணாமா?” 

“அதுக்கும் நீ வேலைக்கு போறதுக்கும் என்ன சம்பந்தம்? ” 

“எனக்குன்னு தேவைகள் இருக்கு விஷ்வா. எப்போவும் உங்க கையே பார்த்துட்டு இருக்க முடியுமா? அதான் அங்க போலாம்னு இருக்கேன். தெரிஞ்ச இடமும் தானே.” 

“வேலைக்கு போகலாம். ஆனா அங்கெல்லாம் போக வேணாம். எப்போவும் ஆளுங்க வந்து போற இடம்.” 

“கடைனா பொருள் வாங்க ஆளுங்க வரத்தான் செய்வாங்க.” 

“அக்கா அதெல்லாம் சரியா வராது.

லேடீஸ்கு அதெல்லாம் செட் ஆகாது. வேலைக்கு போகணுமேன்னா வேற இடம் பார்க்கலாம்.” 

“சரி அப்போ நீயே ஏதாவது நல்ல இடமா பார்த்து சொல்லு.” 

“ஆமா,இந்த ஐடியா யாரு கொடுத்தா? திடீர்னு வந்து சொல்ற?” 

“இல்ல, மனசுக்குள்ள இருந்தது தான், மயூரிகூட பேசவும் அவ சொல்றதும் சரின்னு பட்டுச்சு.”

“ஓஹ்! சரி. வெளில கொஞ்சம் வேலை இருக்கு நான் வரேன்.” எனக் கூறிக்கொண்டு கிளம்பிச்சென்றான். 

விஷ்வா செல்லவும், கீதா மயூரிக்கு  அழைத்தாள். “சொல்லுங்கக்கா.” 

“மயூரி,வர்றப்பவே வீட்ல விஷ்வா இருந்தான். அவங்கிட்ட கேட்டேன் வேலைக்கு போறேன்னு.”

“ஹ்ம், என்ன சொன்னாங்க?” 

“முதல்ல விருப்பம் இல்லாத  போலத்தான் பேசினான். அப்றம் சரி போகலாம், ஆனா அங்க வேண்டாம், வேற இடம் நானே பார்க்குறேன் சொன்னான்.” 

“ஓஹ்! ஏன் இங்க வேணாமாம்? ” 

“அங்க ஆளுங்க  நிறையா வந்து போற இடமாம். லேடீஸ்கு சரியா  வராதாம் சொல்றான். இந்தளவுக்கே இறங்கி வந்ததே பெருசு. அதுனால  சரி சொல்லிட்டேன்.” 

“ஓஹ் சரிக்கா. ” 

“சரிடா வச்சுர்றேன்.” 

கீதாவிடம் விஷ்வா கூறிய  வார்த்தைகள் அவளுள் கேள்வி கேட்டது. ‘அப்போ நான் பொண்ணில்லையா?’ 

இரவு 8மணியிருக்கும். எப்போதும் அன்றைய நாளின் கணக்கு வழக்குகளை அந்நேரம் தான் பார்த்துக்கொண்டிருப்பாள் மயூரி. கடை வெளியில் மூடப்பட்டதாய்  போர்ட் ஏழுமணிக்கே போட்டுவிடுவார்கள். அந்நேரம் வந்த விஷ்வா இவளைக் காண உள்ளே வந்தான். ஆங்காங்கே வேலை செய்வோர் பொருட்களை  ஒழுங்குப்படுத்திக் கொண்டிருந்தனர். 

அவன் வந்து அமரவும் லேப்டாப்பில் இருந்து கண் எடுக்காதவள், “சொல்லுங்க விஷ்வா முக்கியமான விஷயமா?” 

‘ஹாய்! என்ன சார் என்ன விஷயம்?’ இதுதான் எப்போதும் அவன் வரும்பொழுதுகளில் ஆரம்பிக்கும் அவளின் வார்த்தைகளாய் இருக்கும். ஆனால் அது இப்போது காணாமல் போயிருந்தது. 

“அக்கா பகல் வந்திருந்தாளா? “

“ஆமா வந்தாங்க விஷ்வா.”

“என்ன சொன்னீங்க அவகிட்ட? “

“என்ன சொன்னீங்கன்னா? “

“நான் எங்கக்காவை பார்த்துக்கிறேன் அதுல எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. உங்களுக்கு என்னங்க அதுல?” 

“எனக்கு என்னன்னா?” 

“எங்க வீட்டு பிரச்சினை அது. சொல்லப்போன அது எனக்கு பிரச்சினையே இல்லை மயூரி. நீங்க அது பத்தி பேசியிருக்க தேவை இல்லைனு நினைக்குறேன். திடீர்னு வேலைக்கு போகணும்னு வந்து நிக்கிறா.” 

“ஓஹ்! அன்னைக்கு நீங்க என் வாழ்க்கை நல்லா இருக்கணும்னு ஒரு பிரெண்டா எந்த உரிமைல  பேசுனீங்களோ அது எனக்கும் இருக்கும்னு நினச்சு நானும் பேசிட்டேன். மன்னிச்சிருங்க விஷ்வா. ஒன்ஸ் ஒருத்தங்க எழுதின வரிகள் ஞாபகம் வருது. என்னன்னா,

‘உரிமை அது எடுக்கப்பட வேண்டியது இல்லை கொடுக்கப்படவேண்டியது’னு சொல்லிருந்தாங்க. கரெக்ட்தான்ல. எனக்கும் இப்போதான் அது புரிஞ்சது.” 

அங்கிருக்கும் பணியாளர்களில் ஒருவர் அவளின் கண்ணாடிக் கதவுகளை தட்டி அவளை கொஞ்சம் வருமாறு அலைக்க, “இருங்க வரேன் விஷ்வா.” என எழுந்து வெளியே செல்லப் போனாள். 

“இல்ல நான் கிளம்புறேன்.” அவனும் எழுந்தான். அவள் இறுதியாய்  சொன்ன வார்த்தைகளுக்கு அவனிடம் பதில் இருக்க வில்லை. கதவருகே சென்றவள் திரும்பி,

“பொண்ணுங்களுக்கு இங்க வேலை  செய்றது சரியா இருக்காதுன்னு சொன்னிங்களாம் விஷ்வா. என்னை பார்த்தா பொண்ணா தெரிலயா? இல்ல என்னை பத்தி பேசுனதை வச்சு இவ எங்கேயும் இருப்பான்னு நினைச்சுட்டீங்களா?”  கேட்டவள்  அவன் பதிலுக்காக காத்திருக்கவில்லை சென்றுவிட்டாள். 

அவன் வார்த்தைகளின் பொருள்? ‘அச்சோ இந்த அக்காவ’

அவன் அப்படி நினைத்துக் கூறவில்லை தான். மயூரி இங்கே இருப்பது முதலாளி எனும் இடத்தில். அவளுக்கென ஒரு அறை. அது அவளுக்கு மரியாதையும் அவள் தரத்தையும் காட்டும். ஆனால் வேலை ஆட்கள் அப்படியில்லையே. தன் அக்காவை அப்படி பார்க்க பிடிக்கவில்லை விஷ்வாவிற்கு . அதைத்தான் அப்படிக் கூறியிருந்தான்.

அக்கா இவளிடம் கூறுவாள், அதுவும் இவள் இப்படி எடுத்துக்

கொள்வாள் என நினைக்கவே இல்லையே.

அவள் வரும் வரை அப்படியே அமர்ந்துவிட்டான். அவள் கலங்கிய  கண்கள் அவனை ஏதோ செய்தது. 

மயூரி மீண்டும் உள்ளே வர, அவன் அதே இருக்கையில் அமர்ந்திருந்தான். 

“கிளம்பலையா விஷ்வா டைமாச்சு. நானும் கிளம்பப் போறேன்.”

“அக்காகிட்ட நான் வேற அர்த்தத்துல சொன்னது, உங்கிட்ட சொல்வான்னு எதிர்பார்க்கல. நீ அதை தப்பா புரிஜிட்ட மயூரி.” 

‘ங்க’ போட்டுத்தான் இருவருமே  பேசிகொள்வார்கள். அவ்வப்போது அவர்களே அறியாது ஒருமையில் பேசிக்கொள்வார்கள். 

பரவால்ல விஷ்வா. அவங்களுக்கு தேவை இருக்கும். அவங்க பொண்ணுக்கு ஆசை இருக்கும். அம்மாகிட்ட சொல்லி அவங்க உங்ககிட்ட கேட்டுத்தான் வாங்கி தரணும்னு அந்தப்பொண்ணு எதுவுமே அவங்ககிட்ட கேட்காம கூட  இருக்கலாம். அவங்களுக்குன்னு ஏதாவது வருமானம் இருந்தா அவங்க தேவைகள்  பார்த்துப்பாங்களே. அதோட  நீங்களும் பார்த்துக்கத்தான் போறீங்க. அப்போ உங்களுக்கும் உங்க லைப் சிக்கல் இல்லாம பண்ணிக்கலாமே?”

“சாரிங்க. திரும்ப அதையேதான் பேசுறேன் பாருங்க. உங்க குடும்ப விஷயம் நான் சொல்லக்கூடாதுல.”

அவன் முன் கலங்கிய கண்களில் இருந்து துளி கண்ணீர் சிந்திடக் கூடாதென்று அவள் நாற்காலியை சுவர் பக்கம் திருப்பிக் கொண்டாள். 

“கிளம்புங்க, நாளைக்கு பேசிக்கலாம் விஷ்வா. இனி உங்க விஷயத்துல  தலை இடல.”அப்படியே இருந்துகொண்டு கூறினாள். அவன் பக்கம் திரும்ப வில்லை. அவனுக்காகத்தானே பேசினாள்.ஆனாலும், 

“சாரி மயூரி. நான் அப்டில்லாம் மீண் பண்ணவே இல்லை. தப்பா எடுத்துட்டீங்க. எனக்கு அக்கா இப்டி ஒர்க் பண்றது பிடிக்கல. அவளுக்கு பொண்ணு இருக்கு. அவ லைப் பாதிக்கும். அம்மா கடைல வேல  பார்க்குறான்னு தானே சொல்வாங்க. அதுக்காகத்தான். அதோட  தம்பிக்காரன் இருக்க அக்காவை வேலைக்கு அனுப்புறான்னு சொல்வாங்களே. வேறொன்னும் இல்லை. உன் பொசிஷன் இங்க வேற. அதைத்தான் மீண்பண்ணுனேன்.’

உன்னை தப்பா நினைச்சிருந்தா உன்கூட பேசியே இருக்க மாட்டேன். எங்கிட்ட நீ உரிமை எடுத்துக்கிட்டது பிடிக்கலன்னு எப்போவும் சொல்லல. பிடிக்கலைன்னா நா உங்கிட்டயும் அதுபோலத்தான் நடந்திருப்பேன். உன்னை ஹர்ட் பண்ணும்னு நினைக்கவே இல்லை சாரி.” 

“அக்காவ எங்கூட வந்து வேல  பார்க்குறீங்கலான்னு தான் கேட்டேன் விஷ்வா. இங்க வந்து அடுத்தவங்க போல வேல தரேன்னு சொல்லல. உங்க மரியாதை என்னாகும் அவங்க இங்க வேலை பார்த்தாங்கன்னா. எனக்கு ஹெல்ப்க்கு கூப்பிடலாம்னு கேட்டேன்.”

அவன் மரியாதையை பற்றி யோசித்திருக்கிறாள்.

“அவ அப்டி சொல்லல மயூரி.” 

“சரி விடுங்க விஷ்வா. உங்களுக்கு தெரிஞ்ச இடமா பார்த்து சேர்த்துவிடுங்க. நான் கிளம்புறேன்.”சொல்லிக்கொண்டு தன் சூழல் நாற்காலியை அப்போதுதான் அவன் பக்கம் திருப்பி எழுந்தாள். மேசையின் மீதிருந்த அலைபேசியை கைக்கு எடுத்துக்கொண்டவள், “கிளம்புங்க நான் கிளோஸ் பண்ணனும்.” 

அவள் முகம் சற்று சிவந்து போயிருந்தது. நாசியை  அவ்வப்போது மேலிழுத்துக் கொண்டாள். அவன் கைக்குட்டையை நீட்டினான். அதைப்பார்த்தவள் அவனை முறைத்தாள். 

“இன்னும் சாப்பிடல மயூரி. வெளில சாப்பிட்டு வீட்டுக்கு போலாமா?” 

அதற்கு மேலும் அவனோடு  கோபத்தை இழுத்துப்பிடிக்க முடியாதவளாய் சரியென்று ஒப்புக் கொண்டாள்.

அவள் ஸ்கூட்டியை அங்கேயே வைத்துவிட்டு அவன் வண்டியில் இருவரும் கிளம்பிச் சென்றனர். வண்டிக்கு ஏறியதும் தந்தைக்கு அழைத்து விஷ்வாவோடு வெளியில் செல்வதாகக் கூறினாள். 

இருவரும் உண்டுவிட்டு அவளை  அழைத்துக்கொண்டு வந்தவன், அவள் வீட்டின் முன்னே வண்டியை நிறுத்தினான். அவள் பக்கம் திரும்பி அமர்ந்தவன்,

“நீ எங்கிட்ட உன்னை பத்தி சொன்னது எதுக்காக? நான் அதை வச்சு உன்னை கார்னெர் பண்ணனும்னா? ஏதோ உன் மன  ஆறுதலுக்காக,அது உன்னை உறுதிட்டே இருக்குனு தானே எங்கிட்ட இறக்கி வச்ச? அதை அத்தோட நான் மறந்துட்டேன். நீயாத்தான் இப்போ இன்னிக்கு ஞாபகப் படுத்தின.’

‘சும்மா அதையே எல்லாத்துக்கும் சேர்த்து வச்சு யோசிக்காத மயூரி. 

‘நானும் ஒரு சில முடிவுகள் எடுத்துதான் இருக்கேன். பட் அக்கா எப்டி எடுத்துக்குவான்னு தான் நானும் யோசிச்சிட்டு இருந்தேன். நீயும் அதையேதான் அக்கா கூட பேசியிருக்க. நான் எனக்குன்னு ஒரு வாழ்க்கை அமைச்சதுக்கப்றமா  முடிவெடுக்குறப்ப வர்ற பொண்ணுக்கும் சேர்த்து பிரச்சினை ஆகலாம்ல.

ஆனாலும் அவ வேலைக்கு போகனுமான்னுதான் தள்ளி போட்டுட்டே வரேன். வேறொன்னும் இல்லை. அதோட அவகூட என் முடிவை எப்டி எடுத்துப்பான்னு தான்.”

“அப்போ பொண்ணு பார்த்து பிக்ஸ் பண்ணியாச்சா? ” 

“நா என்ன பேசுறேன் நீ என்ன கேட்குற? ” 

“இல்லை முடிவெல்லாம் எடுக்குறேன் யோசிக்கிறேன்னு தீவிரமா பேசிட்டிருக்கீங்க அதான்…” 

“உன்ன… ‘அவள் தலையில் தட்டியவன் ‘எப்டின்னாலும் பண்ணித்தானே ஆகணும்.” 

“அட இப்போவாவது தோணுச்சே. நானும் அறுபதாம் கல்யாணம்தான்னு நினச்சேன்.” 

“இப்போவே அரைக்கிழவன் ஆகிட்டேன். இதோ அங்க இங்கன்னு ஒன்னு ரெண்டு வெள்ளை முடியா தெரியுது.” 

“ரொம்பத்தான். உங்களுக்கு இருக்க டிமாண்ட் தெரில மிஸ்டர்.” 

“நீதான் மெச்சிக்கணும் உன் பிரெண்ட.’

சரி, இறங்கு டைமாச்சு.” 

“ஆமாமா. வண்டி வந்து இவ்ளோ நேரம் என்னைக் காணோம்னு என் சின்ன அண்ணி இந்நேரத்துக்கு பத்து பக்கத்துல கதையே எழுதிருப்பா.” 

இருவரும் சிரித்துக்கொண்டே விடைப்பெற்றனர். 

வண்டியை கிளப்பியவனுக்கு இரண்டு மாதங்கள் முன்னே மயூரியின் தந்தை அவனோடு பேசியவை நினைவிற்கு வந்தது. 

அன்று மயூரியோடு பேசிவிட்டு இரண்டு நாட்களில் மனோகரை  சந்தித்து மயூரி பற்றி பேசியிருந்தான் விஷ்வா. இருவரும் முன்பிருந்தே வயதுக்குரிய  மரியாதையோடு அனைத்தும் பகிர்ந்துக் கொள்வார்கள். அத்தோடு விஷ்வாவின் வளர்ச்சிக்கு பெரிதும் துணையாக இருந்தார் மனோகர். அது  இன்றுவரை மயூரிக்குமே தெரியாது. 

“அவ இப்போவே ஓகே சொல்லுவா நினச்சேன் விஷ்வா.” 

“அப்டில்லாம் அவசரப்பட்டு  முடிவெடுக்க மாட்டா அங்கிள். ஏற்கனவே பண்ணுன தப்பை நினச்சு இன்னுமே வருத்திட்டு இருக்கா. அதுனாலதான் அவங்களாவே முடிவு பண்ணட்டும்னு டைம் கொடுத்திருக்கோம். அதுக்கப்றம் நீங்க என்ன சொன்னாலும் கேட்கத்தானே போறாங்க.” 

“திரும்ப அதையே வேணும்னு நின்னுட்டா? ” 

“இப்போ அவ சின்ன பொண்ணில்லையே. இப்போ அதுவே வேணும்னு முடிவு பண்ணிட்டா இனி அவங்களுக்கு அது சரியா வரும்னு தோணுனா  மட்டுமே தான் அந்த முடிவை எடுக்கப்போறாங்க. சோ நாம  சந்தோஷமா ஏத்துக்க தானே வேணும்.” 

“சரிதான் விஷ்வா, ஆனாலும்… “

“அவங்க சந்தோஷம் தானே நம்மளுக்கு வேணும் அப்றம் என்ன.” 

“அதுக்கப்புறமும் அவளால முடிவு எடுக்க முடில, அது சரியா வரலைன்னா, அதுக்கப்றம் நான் எடுக்கப்போற முடிவுக்கு நீங்கதான் எனக்கு உதவியா இருக்கணும்.” 

“கண்டிப்பா அங்கிள். என்னால முடிஞ்ச உதவியை கண்டிப்பா பண்ணுவேன்.” 

“இல்ல அவ உங்க இஷ்டம்ப்பான்னு சொல்லணும் தம்பி. எனக்கு அதான் அவ முடிவா இருக்கணும்.” 

“அப்டி நினைக்க வேணாம் அங்கிள். அப்படி நினைச்சுட்டு நீங்க இருக்க கடைசில அவங்க முடிவை  உங்களால ஏத்துக்க முடியாம  போனால் சங்கடம் ரெண்டு பேருக்கும்.’

‘சரி நீங்க அவரோட நம்பர் கொடுங்க, நான் பேசி பார்க்குறேன்.அவரோட  எண்ணம் என்னவாக இருக்கும்னு நாம தெரிஞ்சிக்கலாமே.” 

“நானே பேசலாம்னு தான் யோசிச்சேன் தம்பி.”

“நீங்க அவங்க அப்பா கூட பேசுங்க. அவர்கூட நீங்க பேசுறது உங்களுக்கு அவ்வளவு மரியாதையா இருக்காது.” 

“சரிங்க தம்பி, பேசிட்டு என்னனு சொல்லுங்க. இன்னும் கொஞ்சநாள் தானே. பார்ப்போம் கடவுள் அவளுக்கு என்ன வச்சிருக்கார்னு.” 

அவரோடு பேசிவிட்டு, அவர் தந்த  நம்பருக்கும் அழைத்து பேசினான். 

“ஹலோ, நான் விஷ்வா, மயூரியோட பிரென்ட்.” 

“சொல்லுங்க விஷ்வா? ” 

“உங்க கூட பேசணுமே.”

“ஓஹ் தாராளமா மீட் பண்ணலாம். எங்கன்னு நீங்க சொல்லுங்களேன்.” 

“கண்டிப்பா மீட் பண்ணி பேச வேண்டியது தான். ஆனால் இப்போதைக்கு என்னால மீட் பண்ண வரமுடியாத சூழ்நிலை. இப்போதைக்கு ஜஸ்ட் போன்ல பேசுனாலே போதும்.” 

“ஓஹ் தட்ஸ் ஓகே விஷ்வா. சொல்லுங்க, என்ன விஷயம்?” 

“இல்லை மயூரி கல்யாண விஷயமா?” 

“சொல்லுங்க விஷ்வா, நீங்க கல்யாணம் பண்ணிக்கப் போறீங்களா?” 

“ச்சே ச்சே இல்லங்க. அவ என் பிரென்ட். அவ லைப் பத்தி என்ன டிசைட் பண்ணிருக்கீங்கன்னு தெரிஞ்சுக்கலாமேன்னு தான் கால் பண்ணுனேன்.” 

“என்ன விஷ்வா இவ்ளோ சீக்கிரம் கேட்டுடீங்க. அஞ்சு வருஷமாகுது.” 

“கரெக்ட்தான். நான் அவங்க லைப் பத்தி பேசுறதுக்கு இப்போதான் சந்தர்ப்பம் அமஞ்சது.’

‘அப்போ இருந்த நிலைமைல ரெண்டுபேருக்குமே முடிவு எடுக்குறதுல தடுமாற்றம்  இருந்திருக்கலாமே. அவங்களும் இப்போதான் ஒரு நிலைக்கு வந்திருக்காங்க. இப்போதான் அவங்களும் அவங்க லைப் பத்தி நினைக்கிறாங்க.” 

“நானா எப்போவும் அவளை விடல விஷ்வா. அவளா முடிவு பண்ணி அவளா விலகிப்போனா. ஏன்னு காரணம் கூட சொல்லல. நானா விளங்கிப்பேன்னு நினைச்சாளோ என்னவோ.

நான் இன்னும் நானாகத்தான் இருக்கேன் விஷ்வா. உங்க பிரெண்டுக்கு நல்லா யோசிச்சு முடிவு பண்ணச் சொல்லுங்க. திரும்ப இந்த வாழ்க்கையை வாழப்போறோமா என்ன, ஒன்லி ஒன்ஸ்.” 

“புரிதுங்க. இப்போதான் அவ அவளுக்காக வாழணும்னு முடிவு பண்ணிருக்கா. பண்ணுன தப்புல இருந்து இப்போதான் மீண்டு வந்திருக்கா. இவ்வளவு நாளும் வேஸ்ட் ஆனது இனிவரப்போற வாழ்க்கை மூலமா அவங்களுக்கு கிடைக்கணும்னு நினைக்குறேன்.” 

“அது அவங்க கைலதான் இருக்கு விஷ்வா. பண்ணுனது தப்புனு அவளாவே நினைச்சுக்கிட்டா நான் ஒன்னும் பண்ண முடியாது. இந்த லிவிங் ஸ்டைல் எல்லாமே எல்லாரும் வாழுறது தான். இதுவே கல்யாணம் ஆகியிருந்தா இன்னிக்கு உங்களால பேச முடிஞ்சிருக்குமா? சோ அது பிளஸ் தானே.” 

‘என்னடா இவன் இத்தனை சாதாரணமாய்க் கூறுகிறான்.’ வியப்பாக இருந்தது விஷ்வாவிற்கு. அவர்கள் சமூகத்தில் அத்தனை சகஜமான விடயமா இது. 

“என்ன விஷ்வா இவ்ளோ சாதாரணமா பேசுறேன்னு பார்க்குறீங்களா?” 

“இல்லை அதுவந்து…”

“நாம இருக்க சமூகத்துக்கு ஏற்று மாதிரி நாமதான் மாறிக்கணும்.சரி சொல்லுங்க விஷ்வா, நான் என்ன பண்ணனும்னு நினைக்குறீங்க.” 

“இல்ல நீங்களும் ஒரு முடிவெடுத்துதானே இருப்பீங்க. ஐ மீண், இத்தனை நாள் நீங்களும் தனியாவேதான் இருக்கீங்க. சோ உங்களுக்கும் இன்னும் அதே எண்ணம் இருக்கான்னு.” 

“விஷ்வா, நான் தனியா இருக்கதுக்கு அதுவும் ஒரு காரணம். ஆனால் அதுதான் காரணம் இல்லை. அதை நீங்கா சரியா புரிஞ்சிக்கனும். அவளை ஒரு மூனு வருஷமா தெரியுமா உங்களுக்கு?” 

“ஹ்ம் யெஸ்.” 

“நான் காலேஜ்ல தர்ட் இயர் இருக்கப்ப ஜோஇன் பண்ணுனா. எனக்கும் அவளை மூனு வருஷ பழக்கம் தான். ஆப்டர் அவளாவே போய்ட்டா. அதுக்கப்றம் இப்போ வரை டச் இல்லை. ஆனால் என் மனசு நல்லா புரிஞ்சவ இவமட்டும் தான். எனக்கே என்னால என்னை புரிஜிக்க முடியல. என்ன வேணும்னு எனக்கே தெரில. அவ போய்ட்டா நான் புரிஜிருப்பேன்னு நினைச்சாளோ என்னவோ, கண்டிப்பா கூட இருந்திருந்தா புரிஜிருக்கும்னு நினைக்குறேன்.”

“சொல்லிருக்காங்க எல்லாமே.”

“அந்தளவுக்கு கிளோஸ் பிரெண்டா? “

“ஆமாங்க.”

“ஹாப்பி டு ஹியர் விஷ்வா. ஓகே தென், எதுவும்னா கால் பண்ணுங்க.”

“நான் கால் பண்றது மயூரிக்கு  தெரியாது.”

“அது நமக்குள்ளேயே இருக்கட்டுமே. அவங்களா முடிவு பண்ணட்டுமே. எல்லோருக்கும் அதையேதான் சொல்லிருக்கேன். வி ஹாப் போர் குட்.”

“ஓகே, வச்சிடறேன்.” 

‘அவ முடிவுக்கு ஒத்துக் கொள்வேங்குறானா இல்லங்குறானா?’ ஒண்ணுமே புரில.அவனோடு  பேசிவிட்டு குழம்பியதென்னவோ விஷ்வாதான்.

‘அதன் பின் இன்று வரை என்ன, இனி இன்னும் மூன்றே மாதங்கள் தானே மயூரியின் முடிவுக்காய் துணை இருக்கலாம். அவளாகவே அவளுக்கு தேவையானதை தேர்ந்தெடுக்கட்டும்.’ என மனதில்  எண்ணிக்கொண்டான் விஷ்வா. அதன் பின்னே தன் வாழ்க்கையையும் அமைத்துக் கொள்ளலாம் என முடிவெடுத்தான். 

**** 

அகில் ஐராவுடனான பேச்சை நிறுத்தி ஒரு வாரக் காலமாகிறது. தேவைக்கு மட்டுமே அவளோடு பேசினான். ஏதோ அவன் உள்ளுக்குள் போராட்டம், அவனால் உணர்ந்திட முடியாத போது எப்படி உணர்த்துவான், ஆக ஒதுங்கிக் கொண்டான். வீட்டுக்கு வர முன்னே எப்படி இருந்தார்களோ மீண்டும் அதேபோல இருக்கப் பலகிக் கொண்டான் அகில். கெளதமோடும் நெருக்கத்தை குறைக்கிறானோ எனும் சந்தேகமும் ஐராவிற்கு உள்ளுக்குள் எழாமல் இல்லை. ஆனாலும் அவளும் அதுவே அவன் வாழ்க்கைக்கு சரியென விட்டுவிட்டாள். 

திடீரென மாலை ஐந்து மணிப்போல அழைத்தான். கெளதம் விளையாடிக் கொண்டிருக்க அவள் வெளியே தோட்டத்தில் இருந்த இருக்கையில் அமர்ந்து அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள். 

“ஐரா எனக்கு நைட் செவன் ஓ கிளாக் சிங்கப்பூர்க்கு பிளைட் இருக்கு.”

“என்ன திடீர்னு?” 

“அப்பாக்கும் சேர்த்து வந்த இன்விடேஷன். அவரால போக முடியாது. சோ நான் கண்டிப்பா அட்டென்ட் பண்ணியே ஆகணும்.” 

“ஹ்ம்.”

“வர மூனு நாள் ஆகும். அதோட ப்ரேம் என்கூட வரான். “

“ஓகே.”

“அங்க வந்து ஏர் போர்ட் போக டைம் இருக்காது. இப்படியே கிளம்புறேன்.”

“ஹ்ம்.”

“நாளைக்கு ரெண்டு அப்பொய்ன்மெண்ட் இருக்கு. கேன்சல் பண்ண முடியாது. உன்னால மேனஜ் பண்ணிக்க முடியுமா?”

“ஹ்ம்.”

“கெளதம் என்ன பண்றான்?”

“இதோ விளையாடிட்டு இருக்கான்.” 

“சரி நான் அப்றம் பேசுறேன்.” 

அவன் அழைப்பை துண்டித்ததும் அழைபேசியின் திரையையே பார்த்திருந்தாள் ஐரா.

ஐரா கை உயர்த்தி எடுத்த செல்ஃபீ அது. ஐராவின் மடியில் அகில் படுத்திருக்க, அவன் வயிற்றில் கெளதம் அமர்ந்திருந்தான். மூவரின் முகத்திலும் அத்தனை பொலிவும் குறும்பும்.தன் விரல் கொண்டு தடவிக்கொடுத்தவள் ‘இடியட்’ என அவனைய செல்லமாய் திட்டவும் மறக்கவில்லை.

Leave a Reply

error: Content is protected !!