அன்பின் உறவே…1

அன்பின் உறவே…1
அன்பின் உறவே – 1
‘பிஸ்தா பாரடைஸ்…’ சேலம், ஓமலூர் ரெசிடென்சியல் ஏரியாவில் அமைந்த ஐந்தடுக்கு ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், சிறியதும் பெரியதுமான அலங்கார வண்ண விளக்குகளால் ஜொலிஜொலித்துக் கொண்டிருந்தது.
கிரானைட், மார்பிள்களில் இழைக்கப்பட்ட தரைகளும் சுவர்களும் அந்த வளாகத்தின் செழிப்பினை அழகாக சொல்லிக் கொண்டிருந்தன.
இன்றைய நாகரீகத்திற்கு ஏற்றவாறு, ஒவ்வொரு தளத்திலும் திசைக்கு மூன்றாக நாற்புறங்களிலும் கடைகள் வரிசை கட்டி நிற்க, சுற்றிலும் இழைக்கப்பட்ட கண்ணாடிக் கதவுகள் உள்ளே இருப்பதை வெளியே படம் பிடித்து காட்டிக் கொண்டிருந்தது.
அனைத்து வசதிகளும் கொண்ட, முற்றிலும் குளிரூட்டப்பட்ட ஐம்பது கடைகளை உள்ளடக்கிய வளாகம் அது. அங்குள்ள நான்கு தளங்களிலும் இளைஞர், சிறுவர்களுக்கு தேவையான அத்தனை அம்சங்களும் குவிந்து கிடக்க, நவீனயுகத்தின் ‘நல்லவை’களின் வாணிபம் கனஜோராய் நடைபெறும்.
ஐந்தாம் தளத்தில் மூன்று ஸ்கிரீன்கள் கொண்ட சினிமா தியேட்டரும் அங்கே இணைந்திருந்ததில் கூட்டத்திற்கு பஞ்சமில்லை. வாரநாட்களில் களைகட்டும் திருவிழாக் கூட்டம், வேலைநாட்களில் மிதமான மக்களோடு சலசலத்துக் கொண்டிருக்கும்.
தரைதளத்தில் தனியார் நிறுவனத்தின் பணமெடுக்கும் தானியங்கி இயந்திரத்துடன் இணைந்த நான்கு கடைகளை ‘பிஸ்தா ஜுவல்லர்ஸ்’ மொத்தமாக ஆக்கிரமித்து இருந்தது. தங்கம், வைரம், வெள்ளி, பிளாட்டினம் என ஒவ்வொரு பிரிவும் தனித்தனியாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.
சுமார் நாற்பது ஆண்டுகளாக நகைத் தொழிலில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த கருணாகரனின் தீவிர முயற்சியில் இந்த வணிகவளாகம் தொடங்கி ஐந்து ஆண்டுகள் ஆகின்றது. அவரது சொந்தத் தொழிலான நகை விற்பனையை அவரின் ஓட்டு மொத்தக் குடும்ப உறுப்பினர்களுமே இன்றளவில் தலையெடுத்து நடத்தி வருகின்றனர்.
ஜனக்கூட்டம் திரண்டு, வணிகவளாகம் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் முன்னிரவுப் பொழுது. கடந்த ஒரு மணிநேரமாக நகைக்கடையின் நாற்திசைகளையும் தனது அகலக் கால்களால் அளந்து கொண்டு, பார்வையாளனாக அங்கே சுற்றிக் கொண்டிருந்தான் இருபத்தியைந்து வயதான பிரஜேந்தர்.
ராஜா வீட்டுக் கன்னுகுட்டியென அவனது நடைஉடை பாவனையே பறைசாற்றிட, ‘ஏன் எதற்கென அதட்டி என்னைக் கேள்வி கேட்டிட முடியுமா’ என்ற தெனாவெட்டுத் தோரணையுடன் கண்களைச் சுழல விட்டான் பிரஜன்.
அலட்சியம், திமிர் இரண்டையும் உடல்மொழியாக மட்டுமல்லாமல், தனது இயல்பான சுபாவமாகவும் கொண்டவன். மினிதாதா ரேஞ்சில் அனைவரையும் ஆட்டி வைக்கும் அசகாயசூரன் என தன்னைத்தானே மிடுக்காக நினைத்துக் கொள்ளும் இக்கால இளைஞன். உச்சி முதல் உள்ளங்கால் வரை இன்றைய டிரண்டிங்கில் மிளிரும் ஸ்டைல் யூத் ஐகான்!
முதுகலை கட்டமைப்பு பொறியியல் (structural engineering) முடித்து, உள்ளூரிலேயே பெரிய கன்ஸ்ட்ரக்சனில், சைட் என்ஜினியர் என்ற பெயரில் ஊரையே சுற்றி வரும் முரட்டுக் காளை. கல்லூரிப் படிப்பை எப்படித் தாண்டி வந்தாய் என்று கேட்டால் அவனுக்கே தெரியாது. கடைசி நிமிடத்தில் படித்து எப்படியோ பார்டரில் தப்பித்து வந்து விட்டான்.
கஷ்டம், கவலைகளை காற்றோடு பொறுப்பு துறப்பில் விட்டவன். நிர்வாகம், நிதானம் என்பதெல்லாம் வாழ்க்கையில் அவனுக்குப் பிடிக்காத வார்த்தைகள். யாருக்குமே அடங்கமாட்டேன் என மதயானையாகத் திரிபவன், தன் அன்னை சரஸ்வதியின் பேச்சிற்கு மட்டுமே அவ்வப்போது கட்டுப்படுவான்
இவன் பிறந்த நேரத்தில் இவனின் தந்தை, அவரது முழுமுயற்சியுடன் தனியாக பிஸ்தா ஜூவல்லர்ஸ்சை ஆரம்பித்து வெற்றிக்கொடி நாட்டியிருக்க, வீட்டினில் இவனது செல்லபெயரும் பிஜூ, பிஸ்தா என மாறிப்போனது.
வெளியுலகத்தில் அடாவடி பிஸ்தாவாக வலம் வருபவன், குடும்பத்திற்குள் செல்லப்பிள்ளை பிஸ்தாவாக மாறி, அனைவரையும் தனது ஆளுமைக்குள் கொண்டு வந்து விடுவான்.
அன்றைய தினம் வைர நகைப் பிரிவில் வெறுமனே சுற்றி வந்தவனின் கண்களில் அழகான மெல்லிய வைர பெண்டன்ட் சிக்க, அதை தன் காதலிக்கு அணிவித்து பார்க்கும் அடங்காத ஆசை மனதிற்குள் மின்னலடித்தது. அவனது கற்பனையில் காதலியின் முகமும் பளிச்சிட, அவளின் சங்குக் கழுத்தில் நகையை அணிவித்து அழகுபார்த்தான்.
அவனது ஆசைக்கு நெய்வார்ப்பாய், மறுநாளின் விடியல் அன்புக் காதலியின் பிறந்தநாளாக அமைந்திருக்க, அந்த நகையை பரிசாகத் தருவதென்று முடிவே செய்து விட்டான்.
தான் விரும்பிய நகையினை கைகளில் எடுத்து அழகு பார்த்து விட்டு, கிஃப்ட் பேக்கிங் செய்யும் நேரத்தில் கடுகடுப்புடன் எதிர்ப்பினை காட்டிக் கொண்டு வந்து நின்றான் ரவீந்தர். பிஸ்தாவின் பெரிய அண்ணன். வீட்டிற்கு மூத்த பிள்ளை.
“விளையாடுறியா பிஜூ? இது என்ன உன்னோட டெய்லி பாக்கெட்மணின்னு நெனச்சியா? இங்க எல்லாமே கணக்குதான். உன்னோட உருட்டல், மிரட்டல், கொஞ்சல் எல்லாம் வீட்டோட வச்சுக்கோ! நகை வேணும்னா பணத்தைக் கொடுத்து வாங்கிட்டு போ!” கறாராகப் பேசிய மூத்தவனை, நாகரீகம் கருதியே எதிர்த்துப் பேசாமல் இருந்தான் பிரஜேந்தர்.
தனக்கென தேவைப்படும் எதையும், சற்றும் யோசிக்காமல் தனதாக்கிக் கொள்ளும் நியாயஸ்தனுக்கு, அண்ணனின் கண்டிப்பு தன்மானத்தை சுரண்டி விட்டதைப் போலிருந்தது. பதிலுக்குபதில் கொடுக்காவிட்டால் இவன் பிஸ்தா இல்லையே?
“அண்ணிக்கு, உன் பிள்ளைகளுக்கு வேண்டிய நகையெல்லாம், நீங்க இங்கயிருந்து எடுக்கிறதில்லையோ?” தழைந்த குரலில் திமிருடன் பதில் கேள்வி கேட்டு, தனது உரிமையை நிலைநாட்டி விட்டான் பிஸ்தா.
“அதுவும் இதுவும் ஒண்ணா? என் கணக்கு வேற… இந்த கடைக்காக உன் அண்ணியோட புருஷன் நாளும் பொழுதும் உழைக்கிறான். யாருக்கு என்ன எடுக்கறோம்னு வீட்டுப் பெரியவங்ககிட்ட சொல்லிட்டு, உரிமையா எடுக்கறோம். துரை அப்பப்ப வந்து வேடிக்கை பார்த்துட்டு போறத தவிர வேறென்ன செஞ்சு கிழிச்சீங்க?” தம்பியின் லட்சணத்தை அண்ணன் கடைவிரிக்க, விறுவிறுவென கோபம் ஏறிப்போனது பிரஜனுக்கு.
“நான் ஒன்னும் தெருவுல போறவளுக்கு நகை எடுக்கல… நாளைக்கு நான் கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணுக்கு தான் கொடுக்கப் போறேன்” காட்டமாக அடக்கப்பட்ட கோபத்துடன் சீறினான்.
“அந்தப் பொண்ணு யாருன்னு நம்ம வீட்டுக்கு தெரியுமா? கட்டுன பொண்டாட்டியும், காதலியும் ஒண்ணாகிடுவாளா? மொதல்ல உன் காதல் கரை சேரட்டும். அப்பறமா வியாபாரத்துல உரிமை கொண்டாடலாம். நானே, அப்பாகிட்ட சொல்லி உனக்கும் ஒரு பார்ட்னர்ஷிப் போட்டுத் தரச் சொல்றேன்” உண்மை நிலையை கண்டிப்புடனே நீண்ட சொற்பொழிவாகவே விளக்கி முடித்தான் மூத்தவன்.
“எனக்கு சிபாரிசு பண்ணுன்னு உன்கிட்ட நான் கேக்கவே இல்லையேண்ணா? எதுக்கு தேவையில்லாதத சொல்லிட்டு இருக்க?” மிதப்புடன் கேட்டவனுக்கு அண்ணனின் அறிவுரை வேப்பங்காயாக கசந்தது.
“எனக்கு அப்படிதான் கொடுத்தாங்க பிஜூ… எனக்கு பிறகு கல்யாணமான ராஜேந்தருக்கும் அப்படிதானே நடந்தது” தன்மையாக ரவீந்தர் எடுத்துச் சொல்ல, பிரஜனின் முகம் சுருங்கிப் போனது.
‘சொந்தக்கடையில் காதலிக்காக நகை எடுக்கும் உரிமை கூட உனக்கு இல்லையா பிஸ்தா’ உள்ளுக்குள் அங்கலாய்த்துக் கொண்டு தங்கநகைப் பிரிவில் அமர்ந்திருக்கும் தனது சின்ன அண்ணன் ராஜேந்தரை தேடி வந்தான்.
“நம்ம தலய பத்தி தெரிஞ்சுகிட்டே நீ, ஜுவல் மேல கை வைக்கலாமா? என்னதான் சொந்த ரத்தமா இருந்தாலும் எங்க செக் வைக்கணுமோ அங்க வெச்சிடுவாரு நம்ம அண்ணாத்தே! அதுவும் டைமண்ட்னா சும்மா விட்டுடுவாரா? இது உனக்கே ஓவரா தெரியலையா பிஸ்தா?” நக்கலுடன் தம்பியை இவன் கிண்டல் செய்ய,
“வேணாம்டா அண்ணனுங்களா… இது உங்களுக்கு நல்லதில்ல, சொல்லிட்டேன்!” தனது வழக்கமான இயல்பில் தம்பி எச்சரித்தான்.
“ஏண்டா தேவையில்லாம கோபப்படுற? நீதான் உன் வாலட்ல கலர்கலரா கிரடிட்கார்டு, டெபிட் கார்டுன்னு ரெயின்போ சீரிஸ்ல வரிசையா வைச்சுருப்பியே? அதுல எதையாவது ஒண்ணு ஸ்வைப் பண்ணிட்டு, என்ன வேணுமோ வாங்கிட்டுப் போ!” சர்வசாதாரணமாய் ராஜா சொல்ல, முகத்தில் சோர்வைக் காட்டிய பிஸ்தா,
“புரியாம பேசாத ப்ரோ! ஆயிரம் கார்டு இருந்தாலும் அதுல பேலன்ஸ் இருக்கணுமே… மத்தவங்க முன்னாடி பெரிய இடத்துப் பிள்ளைன்னு ஷோ காமிக்கணும். அந்த பில்ட்-அப்புக்காக மட்டுமே கலர்கலரா கார்டு வச்சுட்டு சுத்துறேன்” தெள்ளத் தெளிவாக போட்டுடைத்தான்.
“என்னடா இப்படி சொல்லிட்ட? உன்னை வைச்சு பெரிய கன்ஸ்ட்ரக்ஷன் ஆரம்பிக்கணும்னு நம்ம அப்பா பெரிய கனவே கண்டுகிட்டு இருக்காரு… நீ என்னடா பொறுப்பில்லாம இருக்க…”
“நம்ம நாட்டாமைக்கு துட்டு பதுக்கி வைக்க இடமில்லாம, என்னை கோர்த்துவிட்டு சிக்கல்ல விடப் பாக்குறாரு! ஒண்ணப் பத்தாக்குற வியாபாரம் எல்லாம் நமக்கு சரிவராது ப்ரோ! சம்பளம் வாங்கி பாக்கெட்ல போட்டோமா, பைசாவ காலி பண்ணோமான்னு இருக்கணும்” அலட்டிக்கொள்ளாமல் பேசியவனை உன்னை திருத்த முடியாது என்ற பாவனையில் அமைதியாகப் பார்த்து பல்லைக் கடித்தான் ராஜேந்தர்.
மூத்தவன் ரவீந்தர் பிகாம் படித்த பட்டதாரி, அமைதியான முறையில் சகலத்தையும் கையாளும் பொறுப்பானவன். இரண்டாமவன் ராஜேந்தர் நிர்வாகம் படித்து விட்டு, தொழிலின் நெளிவு சுளிவுகளை அறிந்த திறமையானவன். ஆனால் சின்னவனோ இன்னதென்று வரையறுக்க இயலாமல் சுற்றும் காட்டாற்று வெள்ளமாக ஓடிக் கொண்டிருக்கிறான்.
கடைக்குட்டி பிரஜேந்தரின் துடிப்பையும், சுறுசுறுப்பினையும் கருத்தில் கொண்டு, கட்டுமானத் துறையில் திடமான கால்பதித்திட வேண்டுமென்பது தந்தை கருணாகரனின் நெடுநாளைய ஆசை. ஆனால், அவனோ ஒற்றையாளாய் சுதந்திரத்தின் பிறப்பிடமாய் ‘எனக்கு நானே ராஜா’ என்ற கர்வத்துடன் தன்னுடைய தனி வழியில் பயணம் செய்து கொண்டிருக்கிறான்.
இப்பொழுதும் அண்ணன்களின் பேச்சுகளை காற்றில் விட்டவனின் மூளை, நகையை வசமாக்க என்ன செய்வதென்று சிந்திக்கத் தொடங்கியிருந்தது.
‘போனவாரம் முழுக்க ஃப்ரண்ட்ஸ் தடியன்களோட ஊர் சுத்தி, குவாட்டரும், பிரியாணியும் விருந்து வைக்காம இருந்திருந்தா, இந்நேரம் உன் பிங்கிக்கு ஜூவல் எடுத்திருக்கலாம்’ மனசாட்சியும் வஞ்சனையில்லாமல் புத்திமதி சொல்ல, பிஸ்தாவின் மனம் சிலிர்த்துக் கொண்டது.
‘என்னோட ஃப்ரெண்ட், ஃப்லாசபரா என் சின்ன அண்ணன் இருக்க, நான் ஏன் கவலபடுறேன்?’ மனசாட்சிக்கு பதில் கொடுத்தவனின் மூளை, புத்தி சொன்ன சின்ன அண்ணனிடமே பிட்டு போட்டால் என்ன என்ற யோசனையை கூறிவிட, மின்னல் வேகத்தில் இறங்கி விட்டான்.
“ராஜாண்ணா… சின்னதா ஒரு அமெளண்ட் கடனா கொடேன்! எப்படியும் ஒன்னாந்தேதி வந்ததும் பாக்கெட்மணி, டிரஸ், ஷூக்குன்னு அம்மாகிட்ட இருந்து பேமண்ட் வாங்கி, உனக்கு செட்டில் பண்ணிடுறேன்” செண்டிமெண்டாய் பேசி அண்ணனிடம் உருகி வைக்க,
“இப்டி சொல்லித்தான் ஆறுமாசத்துக்கு முன்னாடி ஒருலட்சம் வாங்குன… இன்னைக்கு வரைக்கும் நீ திருப்பி தரலடா! உன் அண்ணிக்கு கணக்கு சொல்ல அடிக்கடி நான் காவடி தூக்கிட்டு இருக்கேன். ஆளை விடுடா சாமி!” பெரிதாக கும்பிடு போட்டுவிட்டு அந்த இடத்தை விட்டே நகர்ந்தான் ராஜேந்தர்.
‘எல்லாம் பொண்டாடிக்கு பயந்த பசங்க… கூட பொறந்த பொறப்புக்கு செய்ய கணக்கு பாக்கறாங்க’ உள்ளுக்குள் பொங்கி கொண்டவனின் மனம் அடுத்து யாரைப் பிடிப்பது என்ற தீவிர ஆலோசனையை மேற்கொண்டது.
உள்ளத்தின் விசுவாசியான மூளை, அம்மாவின் பெயரைச் சொல்லி அலாரம் அடிக்க,
அம்மா அம்மா…
நீ எங்க அம்மா!
உன்னை விட்டா…
எனக்காரு அம்மா!
மெட்டு போட்டவாறு, பாவமாய் குரலை தழைத்துக் கொண்டு தன் அம்மா சரஸ்வதியை அழைத்து விட்டான்.
“அம்மா… மம்… மீமீமீ!” அலைபேசியில் ராகமிழுத்தவனின் இழுவையில் கரைந்து உருகியே போனார் சரஸ்வதி அம்மையார்.
“எவன்டா அவன், என் பிள்ளைக்கே நகை இல்லைன்னு சொன்னது? என் தங்கத்துக்கே தங்கம் இல்லைன்னா அந்தக் கடை இருந்தென்ன லாபம்? உன் மனசுபோல எது வேணுமோ எடுத்துக்கோ பிஜூகண்ணா! அங்க சும்மாவே சுத்திட்டு இருக்குற மேனேஜர் ராகவன்கிட்ட ஃபோனை குடு… நான் பேசுறேன்!” வாரிச் சுருட்டிக் கொண்டு, மகனுக்கான கியாரண்டியும் வாரண்டியும் அன்னை கொடுக்க, அவருக்கு கோவில் கட்டி கும்பாபிஷேகமே நடத்தி வைத்தான் செல்லப்புத்திரன்.
‘நான் யாரு… எனக்கே செக் வைப்பீங்களா? பிஸ்தாவா கொக்கா?’ சபாஷ் போட்டு, கையோடு தனக்குத்தானே பாராட்டு விழாவும் நடத்திக் கொண்டான்.
இருபதினாயிரம் தங்கத்திற்கு அன்னையிடம் பாட்டு பாடிவிட்டு, இரண்டு லட்சம் மதிப்பிலான வைர நகையை சர்வ சாதாரணமாய் அள்ளிச் சென்றான் கேடிபிஸ்தா. இந்த உண்மை அம்மா சரஸ்வதிக்கு தெரிய வரும்போது பிஸ்தா பருப்பு துவையலாகுமா துணிந்து நிற்குமா? அடாவடிகாரனின் அதிரடிகளை இனிவரும் பதிவுகளில் காண்போம் தோழமைகளே!!