அன்பின் உறவே…6
அன்பின் உறவே…6
அன்பின் உறவே- 6
அக்னி நட்சத்திர அனலில் கரையும் பனிபோல் பெண்ணவளின் நினைவுகள் மனதில் கரைந்திருக்க, அவளைச் சந்திக்க மாட்டோமா என்று குளுகுளு ஐஸ்க்ரீமுக்கு ஏங்கும் குழந்தையாக பிரஜேந்தர் தவித்துப் போயிருந்தான்.
ஒருநாள் இரவில் அவனுள் முளைத்த காதலின் அவஸ்தையில் இதயமும் அவனில் இருந்து வேரறுந்து விழுந்து விடுவேன் என பயமுறுத்தியது. பெயர் தெரியாத காதலியின் நினைவுகளை மனமெங்கும் அசைபோட்ட நேரத்தில், மின்னல் கீற்றாய் ‘பிஸ்தா?’ என்ற கேள்வி அழைப்புடன் நகைக்கடையில் வந்து நின்றாள் அவனின் தேவதைபெண்.
திடீரென்று அவளைப் பார்த்ததில் தவறான விடையைச் சொன்ன மாணவனாக திருதிருத்தவனின் உள்ளம், சுதாரித்துக் கொட்டமடிக்க தொடங்கியதில் சோர்ந்திருந்தவனின் முகமும் பிரகாசமாகியது.
“ஓ.. யாஹ்!” அசட்டுச் சிரிப்பினை உதிர்த்தவன்,
“உங்களுக்கும் நான் பிஸ்தா தானா?” கேள்வியை இவன் முன்வைக்க,
“நேத்து உங்க இன்ட்ரோ அப்படிதானே!” அலட்டிக்கொள்ளாத பதிலில் அவனின் வாயடைத்தாள் ரவீணா.
“ஓஹ்… ஐயா’ம் பிரஜேந்தர்… ஐடென்டிஃபையிங் பிஸ்தா!” தன்னைப் பற்றி சொல்லி முடிக்க,
“நைஸ் நேம்!”
“எது பிஸ்தாவா? பிரஜேந்தரா?”
“ரெண்டும் தான்”
“யுவர் நேம்?”
“ரவீணா குருமூர்த்தி!” பெயரைக் கேட்டு பிரஜேந்தர் சந்தோஷித்த நேரத்தில்,
“என்னடா ஸெல்ஃப் இன்ரோடக்சன் பலமா இருக்கு…” கேட்டபடியே வந்து நின்ற ரவீந்தர், ரவீணாவைப் பார்த்து,
“வாங்க சிஸ்டர்… என்ன தனியா வந்திருக்கீங்க? குருமூர்த்தி சார் வரலையா?” சம்பிரதாயமாக விசாரித்தான்.
“டாடி அவுட் ஆஃப் ஸ்டேஷன்… அம்மாவுக்கும் ஸ்கூல் இருக்கு, அதான், நான் மட்டும் வந்தேன்!”
“ஓ… குட்! ஜுவல்ஸ் ஏதாவது பார்க்கணுமா?” ரவீந்தர் விற்பனையாளனாய் தொடங்க,
“பார்க்க வரலை. கொடுக்க வந்து இருக்கேன்!” என்றவள் முன்தினம் வாங்கிச் சென்ற பிஸ்தாக்ரீன் ஹாரத்தை அவன் முன்னால் வைத்தாள்.
வண்ணத்திலும் வடிவத்திலும் ஈர்க்கப்பட்டு ஆசை ஆசையாக வாங்கிச் சென்ற மாலையை, இப்போது மாற்ற வேண்டிய நிலை. எல்லாம் இந்த அம்சவேணிப் பாட்டியால் வந்தது.
“என்னடி இது! பாசை பிடிச்ச நகையை இம்புட்டு விலைக் கொடுத்து வாங்கிட்டு வந்திருக்க? ரசனையில உங்கப்பாவ நல்லவனாக்கிடுவ போலயே?” நகையின் நிறத்தை பார்த்தே முகத்தை சுளித்த பாட்டி, அக்குவேறு ஆணிவேராய் அந்த ஹாரத்தை கிழித்து தொங்கவிட்டதில், இப்போது இங்கு நிற்கின்றாள், மீண்டும் நகையை மாற்றுவதற்காக…
“இப்படி அடுத்தடுத்து வந்து நகையை எக்ஸ்சேன்ஜ் பண்ணிக்கக் கூடாது தான்… ஆனா, வீட்டுல பெரியவங்களுக்கு நான் எடுத்துட்டுப் போன டிசைன் பிடிக்கல. சோ…” இறங்கிய குரலில் தனது இயலாமையை எடுத்துரைத்து மன்னிப்பை வேண்டும் பாவனையில், வந்த காரணத்தை சொல்லி முடித்தாள் ரவீணா.
“பிசினெஸ் சர்க்கிள்ல உங்க அப்பாவை எங்களுக்கு பழக்கம்-ங்கிறதால தான், நேத்து நகைக்கு எந்த பேமண்டும் லெஸ் பண்ணாம அப்படியே எக்ஸ்சேன்ஜ் பண்ணிக் கொடுத்தது. ஆனா, அகைய்ன் சேம் ட்ரான்ஸ்சாக்ஷன் எங்களால பண்ண முடியாதுமா…. இதுக்கான லாஸ் பேமண்ட் நீங்க கொடுக்கிறதா இருந்தா எக்ஸ்சேன்ஜ் பண்ணிக்கலாம்” கறார் கண்ணியவானாக ரவீந்தர் வியாபரத்தை பேசி நிற்க, அமைதியாகத் தலையாட்டினாள் ரவீணா.
வேறு வழியில்லை அவளுக்கு… மனம் விரும்பிய நகையையும் சொந்தமாக்கிக் கொள்ள முடியாத பேதையாக தன்னைத்தானே நொந்து கொண்டவள், பெருமூச்சுடன் சகோதர்களின் முகத்தைப் பார்த்தாள்.
“எதனாலே ரிட்டர்ன் பண்றீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா?” ரவீந்தர் கேட்க ‘பாசைக்கலர்’ என வெறுத்த பாட்டியின் வார்த்தையே செவிகளில் ஒலித்து அவளை வெறுப்பேற்றியது.
அதன் தாக்கத்திலேயே, “எனக்கு இந்த பிஸ்தாவை பிடிக்கல…” வெடுக்கென்று கூறி தன் கோபத்தை வெளிக்காட்ட, திடுக்கிட்டு அவளையே பார்த்தான் பிரஜேந்தர்.
“யாரது இந்த க்ரேட் பிஸ்தாவை பிடிக்காதுனு சொன்னது?” சோகமாக கேட்டபடி கண்ணீரை மறைப்பவனாய், சட்டையில் மாட்டியிருந்த கூலர்சை எடுத்து கண்களில் மாட்டிக்கொள்ள, வண்ணப் பிரதிபிம்பமாய் அவன் முன்னே இருந்த பெண்ணின் கண்களில் சிரிப்பு பொங்கியது.
“மிஸ்.ரவீணா! சட்டுன்னு என்னைப் பிடிக்காதுனு சொல்லி சின்னபுள்ள மனசை உடைக்காதீங்க! பிஞ்சு மனசு பாரம் தாங்காது!” நெஞ்சைப் பிடித்தபடி நடிகர் திலகத்திற்கே சவால் விட, பெண்ணின் விழிவழி சிரிப்பு இதழில் இறங்கி கிண்கிணியாய் இசைத்தது.
“மிஸ்டர்… நான், உங்களைச் சொல்லல… இந்த பிஸ்தா கலர் ஹாரத்தை சொன்னேன்!”
“ஓ” என ஆசுவாசபப்டுத்திக் கொண்டவன்,
“பிக் பிரதர்! நீங்க அடுத்த கஸ்டமரைக் கவனிங்க. நான் இவங்களுக்கு அட்டென்ட் பண்றேன்!” நாசூக்காய் அண்ணனை அகலச் சொன்ன பிஸ்தாவைப் பார்த்து ‘நீ நடத்துடா’ என்ற பாவனையில் அங்கிருந்து நகர்ந்தான் ரவீந்தர்.
“சொல்லுங்க மேடம்! ஏன் இந்த பிஸ்தாவைப் பிடிக்காம போச்சு?” பிரஜேந்தர் கேட்க,
“நீங்க நகைய கேட்குறீங்களா இல்ல உங்கள கேட்குறீங்களா?” குழப்பமாக அவனை ஏறிட்டாள் ரவீணா.
“நான் நகையைத் தான் கேட்டேன்”
“அது பாசைக் கலரா இருக்குன்னு எங்க பாட்டி ஒரே அனத்தல். அதான் மாத்த வந்தேன்!”
“ம்ப்ச்… பாசைக் கலர் என்ன பாவம் பண்ணுச்சு? பாசத்துல வழுக்கி விழுற மாதிரி, பாக்கற எல்லார் மனசையும் வழுக்கி விழவைக்கும். பேர் மட்டுமல்ல நிறம், மனம், குணம், திடம் எல்லாத்துலயும் பச்சை புள்ளைங்க!” செண்டிமெண்டாய் பேச்சை தொடர்ந்தவனை இடைநிறுத்தினாள் நங்கை.
“லிசன் மிஸ்டர்! இந்த விளம்பரம் உங்களுக்கா? நகைக்கா?”
“நோ டவுட்! இந்த செல்ஃப் டப்பா சாட்சாத் எனக்கே எனக்கு தான் மேடம்!” காலரை தூக்கி விட்டுக் கொண்டவனை முறைத்துப் பார்த்தாள்.
“இப்படியெல்லாம் முறைச்சு பூச்சாண்டி காமிக்க கூடாது. பச்சபுள்ள மனசு பயப்படுமா இல்லையா?” விடாமல் வம்பிழுப்பவனைக் கண்டு முத்துக்கள் சிதற சிரித்தவளின் முன்பு வரிசையாக ஹாரங்களை அடுக்கினான்.
பொன்நகைகளை பெண்ணவள் பார்க்க, அவளையே கண்களால் களவாடிக் கொண்டிருந்தான் பிரஜேந்தர். இத்தனை அருகாமையில், தானாய் அமைந்த சந்தர்ப்பத்தில் அவள் அழகை துளித்துளியாக ரசித்துக் கொண்டிருந்தான்.
வறட்சியின் வாசமறியாத செழுமையில் முக்குளித்த ரோஜாநிறம், துள்ளும் மீன்களாய் கண்கள்… வில்லாய் வளைந்த புருவங்கள், கூர்மையான நாசி, செவ்வரியோடிய இதழின் கவர்ச்சி என பயணித்தவனின் பார்வை, கழுத்தோடு ஒட்டிக் கிடந்த மெல்லிய தங்கச் சங்கிலியைக் கடந்து அதற்கும் கீழே படர ஆரம்பிக்க, ‘பிஸ்தா யூ ஆர் கிராசிங் யுவர் லிமிட்ஸ் மேன்!’ மனசாட்சி பலமாக கொட்டியதில் சட்டென பார்வையை திருப்பிக் கொண்டான்.
அந்த நிமிடத்து அவஸ்தையில், விற்பனை கூடத்தின் சென்டரைஸ்டு ஏசியிலும் அவனுக்கு முத்துமுத்தாய் வேர்த்திருக்க,
‘பிஸ்தா… சம்திங் ஈட்டிங் யூ… ரவுண்ட் அடிக்காம பிசினஸ் பாருடா தம்பிபையா!’ ரவீந்தரின் அறிவுரையை தாங்கி வந்த அலைபேசியின் குறுஞ்செய்தியில் சுதாரித்துக் கொண்டான். தூரத்தில் நின்று தம்பியை கண்காணித்துக் கொண்டிருந்தான் பெரியவன்.
பார்வைக்கு வைக்கப்பட்ட நகைகள் எதுவும் ரவீணாவிற்கு பிடிக்காமல் போய்விட, எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு அந்தக் கடையையே பார்வையால் ஒரு சுற்று சுற்றி முடித்தவளை, மூச்சு வாங்கப் பார்த்தான் பிரஜன்.
“ஏன் மேடம்? மொத்த கடையையும் உங்க முன்னாடி வெச்சாச்சு. ஆனாலும் எதுவும் செலக்ட் பண்ணாம இப்படி கடையை முறைச்சுப் பார்த்தா என்ன அர்த்தம்?”
“ம்ம்… எனக்குப் பிடிக்கலைனு அர்த்தம்”
“இந்த நகையை விட்டு வேற எந்த நகையையும் பார்க்க கூட பிடிக்கலையா?” பெண்ணைக் கண்டு கொண்டவனாய் கேட்க, பதில் சொல்லத் திண்டாடி விட்டாள்.
ஒவ்வொரு நகையையும் பார்த்து முடிக்கும்போது பெண்ணின் பார்வை, அந்த பிஸ்தா ஹாரத்தின் மீதே மீண்டும் மீண்டும் பதிந்து மீண்டது. அவள் ஆசை ஆசையாய் எடுத்த நகையை, வீட்டினரின் நிர்பந்தத்தால் மாற்ற வேண்டியிருக்கிறதே என நினைக்கும்போதே மனம் வேதனை கொண்டது.
அவள் மேல் அக்கறை கொண்ட உறவுகள்தான்… அவளின் விருப்பத்தினை சிறு விசயத்திலும் கூட ஏற்றுக் கொள்ளாமல், தங்களின் முடிவினை மட்டுமே இவளின் மீது திணித்து வருவதை எப்போது நிறுத்தப் போகின்றனரோ? விடை தெரியாத கேள்வியை மனதிற்குள் ஆயிரமாவது முறையாக கேட்டு சலித்துக் கொண்டவளின் மனதிற்குள் வேறு எந்த நகையும் புகுந்து பிரகாசிக்கவில்லை.
இரண்டு மணிநேரமாக நகையை அலசி ஆராய்ந்து பெண்ணிடம் காட்டியவனுக்கு முகம் முழுக்க அத்தனை சோர்வு.
“மை டியர் யங் லேடி!” ரவீணாவை அழைக்க, “ம்ம்ம்…” என கண்களால் எரித்தாள் அவள்.
“ஓ… சாரி… சாரி மேடம்! உங்களுக்கு பிடிச்ச டிசைன் இந்த கடலிலேயே இல்லையாம். புதுசா தான் வேற்று கிரகத்துல இருந்து இறக்கணும்னு நம்ம டிசைனர் டீம் முடிவா சொல்லிட்டாங்க! நீங்க, உங்க மொபைல் நம்பர் கொடுத்துட்டு போங்க! நியூ டிசைன்ஸ் வந்தா நான் எடுத்து வைக்கிறேன்.” என்றவன் சொல்ல, இவள் தனது அலைப்பேசி எண்ணை அவனிடம் பகிர்ந்தாள்.
இருவரின் ஆதி முதல் அந்தம் வரை ரகசியமாய் பரிமாறிக் கொள்வதற்கான ஆரம்பப்புள்ளி அன்றிலிருந்து ஆரம்பமாகியது.
***********************************
உறக்கத்தின் பிடியில் சுகமாய் ஆட்பட்டிருந்த ரவீணாவை அலைபேசி ஒலி உலுக்கி எழுப்ப, அரக்கப் பரக்க எடுத்துப் பார்த்தாள்.
‘எந்த பக்கி இந்த நேரத்துல கூப்பிடுறது?’ முனுமுனுத்துக் கொண்டே அலைபேசியின் திரையை ஊற்று நோக்க, ட்ரூ காலரில் பிஸ்தா என ஒளிர்ந்து கொண்டிருந்தது.
என்னவென்று விளங்காமல் தூக்கக் கலக்கத்தில் “ஹலோ!” என காதில் வைக்க,
“குட்மார்னிங் மேடம்!” குதூகலமாய் காலை வணக்கத்தை சொன்னவனின் குரலைக் கேட்டு அவளுக்கு அடங்காத கோபம் வந்தே விட்டது.
இந்த நேரத்தில் தட்டியெழுப்பி காலை வணக்கம் கூறுபவனை எதைக் கொண்டு அடிப்பதென்றே அவளுக்குத் தெரியவில்லை. வெகுநேரம் நீடித்த மௌனத்தை, மீண்டும் அவனது “மேடம்” என்ற குரல் கலைத்தது.
“சொல்லுங்க மிஸ்டர்! இந்த மிட்நைட் கம் ஏர்லி மார்னிங் நேரத்துல அப்படி என்ன தலைபோற விஷயத்துக்காக கால் பண்ணி இருக்கீங்க?” பல்லிடுக்கில் வார்த்தைகளை கடித்துக் கொண்டே கேட்டாள்.
“உங்களுக்கு பிடிச்ச மாதிரி ஹாரத்தை நானே டிசைன் பண்ணியிருக்கேன் மேடம்… அதை வாட்ஸ்-அப்ல அனுப்பி இருக்கேனு சொல்லத்தான் கால் பண்ணேன்!” என்றவனது வார்த்தையைக் கேட்டு கடுங்கோபம் அவளுக்குள் மூண்டுவிட, மரியாதையை காற்றில் பறக்கவிட்டு கத்தத் துவங்கிவிட்டாள்.
“யோவ்… கொய்யாகாயி! நகை டிசைன் அனுப்புறதுக்கு நேரங்காலமே இல்லையா? இப்படி பேய் பிசாசு ஜாகிங் போற நேரத்துல தான் ஃபோன் பண்ணி சொல்வியா?” உச்சகட்ட கொதிநிலையை காட்டியது அவளின் பேசசு.
“உங்களுக்கு பிடிச்ச மாடலை வரைய ஆரம்பிச்ச எனக்கு, அதை முடிவுக்குக் கொண்டு வராம தூக்கமே வரலை. ஈவ்னிங்ல இருந்து இப்பவரை சோறு தண்ணியில்லாம, பல மாடலை புரட்டி பார்த்து டிசைனிங் அன்ட் கலரிங் பண்ணி அனுப்பியிருக்கேன். அப்படியாப்பட்ட என்னை இப்படி திட்டிட்டீங்களே! என் பிஞ்சு நெஞ்சு கிழிஞ்சிருச்சு மேடம்… கோபமா, சோகமா நான் போறேன் போங்க!” பரிதாபமான பாவனையுடன் அழைப்பைத் துண்டித்துவிட, இவளுக்கோ மொத்த தூக்கமும் கலைந்து போய் கவலை மேகங்கள் சூழ ஆரம்பித்து விட்டது.
‘ச்சே… எனக்காக கஷ்டப்பட்டு நகை டிசைன் பண்ணினவனை கொஞ்சமும் மரியாதையில்லாம திட்டிட்டோமோ’ வருந்தியபடி வாட்ஸ்-அப்பை திறந்துப் பார்த்தவளின் விழிகள் விரிந்தது.
அவளுக்கு மிகமிகப் பிடித்த பிஸ்தாக்ரீன் ஹாரத்தில் சிலபல மாற்றங்கள் செய்து கருப்புவைரம், முத்து, பவளத்தையும் ஆங்காங்கே ஒட்டி வைத்து அழகிய இரட்டை மாலையாக கோர்த்திருந்தான்.
அவளின் விருப்பமான ஹாரத்தை மனதில் கொண்டு, அதோடு ஒத்துப்போகும் மற்றவைகளையும் இணைத்தே அவன் வடிவமைத்த மாலையை பிடிக்கவில்லையென யாராலும் ஒதுக்கிவிட முடியாது.
முதன்முறையாக தனது ஆசைக்கு மதிப்பளித்த அவனது மெனக்கெடலில் இனம் புரியாத சந்தோசம் பூக்க, பார்த்த இரண்டே நாட்களில் தன்னை அறிந்துக் கொண்டவன் மீது புதியதாய் ஒரு நேசக்கொடி படர ஆரம்பித்தது.
எந்த நேரமென்றும் பாராமல் உடனே அழைப்பு விடுவது இப்பொழுது இவளது முறையாக இருக்க, அவனுடைய அலைப்பேசி ஸ்விட்ச்-ஆஃப் செய்யப்பட்டு இருந்தது.
தான் பேசியதில் மனம் வருந்தி, அலைப்பேசியை அணைத்து வைத்து விட்டானோ என்று காரணத்தை கிரகித்துக் கொண்டவளுக்கு மனம் முழுவதும் அவனை நினைத்தே கனத்துப் போனது.
‘நான் சரியான கிராக்கு… ஒரு தாங்க்ஸ் சொல்லிட்டு அப்பறம் ஹார்சா பேசியிருந்தா, அவனும் கொஞ்சம் சந்தோசப்பட்டிருப்பான். எல்லாத்துலயும் அவசரம் எனக்கு’ தன்னையே கடிந்து கொண்டவளாய் உறக்கத்தை தொலைத்து அவனது வாட்ஸ்-அப் ப்ரோஃபைலைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அதில் மயக்கும் மாயக்கண்ணணாய் வசீகரச் சிரிப்புடன் தனது இரு சக்கர வாகனத்தில் ஆரோகணித்து இருந்தான் பிரஜேந்தர்.
‘பாயசத்துல போடுற பிஸ்தாவப் போல, இந்த பிஸ்தாவும் பார்க்கிறதுக்கு கொஞ்சம் லட்சணமாதான் இருக்கான்’ உள்மனம் தன்னாலே அவனை எடைபோட, இவளும் ஆமென்று அனிச்சை செயலாக தலையாட்டினாள்.
அவள் மனத்திரையில் முதல்நாள், முதல் பார்வையில் தன்னை ஆர்வமாக ஏறிட்ட அவனது விழிகளை எண்ணி மௌனமாய் சிரித்துக் கொண்டாள். அடுத்தநாளே அவனுடைய குறும்பு நிறைந்த வார்த்தைகளை யோசித்தவளின் மனம் முழுக்க மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தது.
அவனது புகைப்படத்தையே பார்த்துக் கொண்டிருந்தவள், அவன் ஆன்லைன் வருவதற்காக இரவு முழுக்க கண் உறங்காமல் அலைபேசியில் காத்துக் கிடந்தாள். அந்த நேரத்தில் அவனிடம் எவ்வாறு மன்னிப்பு கேட்பதென்று ஒத்திகையை மனதிற்குள் அமோகமாக நடத்திக் கொண்டதை எந்த விசயத்தில் சேர்க்க?
ஆனால், அவனோ சாவகாசமாக காலை ஒன்பது மணிக்கு தன் அலைபேசியை உயிர்ப்பித்து ஆன்லைன் வர, அடுத்த நொடியே இவளிடமிருந்து அவனுக்கு அழைப்பு பறந்தது.
தொடுதிரையில் ஒளிர்ந்த அவள் பெயரைப் பார்த்ததும் அவன் கண்களும் மின்னி, “வாவ்… மை பிங்கி!” என உள்ளம் கூத்தாடி கொள்ள, துள்ளலுடன் ஒரு ஆட்டத்தை போட்டுவிட்டு அழைப்பினை ஏற்ற மறுகணம், அவளது குரல் காற்றில் மிதந்தது.
“சாரி பிஸ்தா! நான் அப்படி திட்டியிருக்கக்கூடாது. நீ அந்த நேரத்துல ஃபோன் பண்ணவும் தூக்ககலக்கத்தில திட்டிட்டேன். சோ சாரிடா… என் பேச்சு உனக்கு எவ்வளவு ஹார்ட் பண்ணியிருந்தா, நீ இப்படி வருத்தப்பட்டு ஃபோனை ஸ்விட்ச்-ஆஃப் பண்ணிட்டு போயிருப்ப…” சோகம் இழையோடிய குரலில் இவள் வருத்தத்தை தெரிவிக்க, அதுவே இவனுக்கு போதுமானதாக இருந்தது.
இருக்காதா பின்னே? அவளை அறியாமலேயே பன்மையில் இருந்து ஒருமைக்கு தாவி, மனதிற்கு மிக நெருக்கமானவனாக தன்னை நினைத்ததால் தானே உரிமையுடன் ‘டா’ போட்டு பேசமுடிகின்றது. மனநெருக்கத்தின் முதல்படி இதுதானே… அந்தப் ஏணிப்படியில் மிககெட்டியாக கால் பதித்துவிட்டான் இந்த பிஸ்தா.
“டோன்ட் ஃபீல் ரவீணா! மை பிங்கி பிராமிஸ்… நான் சோகமா எல்லாம் மொபைலை ஸ்விட்ச்-ஆஃப் பண்ணல. சும்மா வருத்தப்படுறா மாதிரி நடிச்சு ஃபோனைக் கட் பண்ணிட்டேன். இப்படி செஞ்சா நெக்ஸ்ட் டைம் என்னை திட்டக் கூட நீ யோசிப்ப தானே…” சீண்டலுடன் தனது வெற்றியை தெரிவிக்க,
“அட ஃப்ராடு பிஸ்தா!” சிரிப்புடன் கடிந்து கொண்டவளின் மனதிற்கு அவனது நேர்மையான பதில் பிடித்திருந்தது.
“அப்பறம் மேடமுக்கு பிஸ்தாவை பிடிச்சிருக்கா?” குறும்புக் குரலில் கேட்க,
“நகைய கேக்குறீயா? உன்னை கேட்குறீயா?”
“ம்ம்… என் மனசுல ஒரு அபிப்ராயம் இருக்கு ரவீ! ஆனா, இன்னும் ப்ரபோஸ் பண்ண முடியல…” தடாலடியாக விருப்பத்தை போட்டு உடைக்க,
“அடப்பாவி! கடைசியில நீயும் ஆவரேஜ்னு ப்ரூஃப் பண்ணிட்டியா? நான் கூட நீ ரொம்ம்பபப நல்லவன்னு நினைச்சேன்!” நக்கலடித்தவள் அவனது ‘ரவீ’ அழைப்பையும் கவனித்தே இருந்தாள்.
“இந்த ரெண்டுநாளா என்னால நிம்மதியா தூங்க முடியல… யூ ஆர் டிஸ்டர்பிங் மீ வெரி மச்! என்னை நானே கண்ட்ரோல் பண்ணிக்க ரொம்பவே கஷ்டபடுறேன். என்னோட பேச்சுலர் லைஃப்க்கு நீ எண்டு கார்டு போட்டுருவியோன்னு பயமா இருக்கு ரவீ!” பிதற்றிக்கொண்டே போக,
“நல்லாவே முத்தி போச்சுடா உனக்கு… விட்டா அலைபாயுதே 2.ஓ எழுதிடுவ போல… இதோட ஸ்டாப் பண்ணிப்போம். பேச ஈசியா வருதுன்னு வாய்க்கு வந்ததை உளறிக் கொட்டாதே”
“இப்ப, இந்த வயசுல ப்ரொபோஸ் பண்ணாமா, நீ அவ்வையார் ஆனதுக்கு அப்பறமாவா சொல்வாங்க?” இவளின் வார்த்தையை கொண்டே, அவளை ஊமையாக்கி விட, கனத்த மௌனத்தில் ஆழ்ந்தாள்.
நிமிடங்கள் மட்டுமே கரைந்து கொண்டிருக்க சட்டென்று,
“ரவீ!” காதோரம் அவன் அழைத்த ரகசிய குரலில், இவளின் உடலும் மனமும் சிலிர்த்துப் போக, ‘ம்ம்…’ என்ற ஹூங்காரம் மட்டுமே வெளிவந்தது.
“யூ ஆர் ஆல்வேஸ் மை ஸ்வீட் ஹார்ட்!” அவன் உதடுகள் முனுமுனுத்த நேரத்தில் அழைப்பினைத் துண்டித்து விட்டாள்.
இதுவரை இப்படியொரு எண்ணம் அவள் மனதில் எழுந்ததில்லை. சந்தித்த இரண்டே நாட்களில் புதிதாக குட்டையை குழப்பி விட்டு போகும் இவனை என்ன சொல்லி தடைபோடுவதென்று புரியாமல் தலையில் கை வைத்தபடி அமர்ந்தாள் ரவீணா.