அன்புடைய ஆதிக்கமே 22
அன்புடைய ஆதிக்கமே 22
அத்தியாயம் 22
“இவளை உனக்கு தெரியுமா?” என்று புகைத்துக்கொண்டிருந்த புகையிலையை வேகமாக கால்களில் போட்டு நசுக்கியவாறு கேட்டான் வசந்த்.
“உனக்கு தெரியுமா?” என்று மீண்டும் அதே கேள்வியை வசந்தை நோக்கி கேட்டான் அவன். வசந்தின் இணைப்பிரியா தோழன் மாறன். ஜெயக்குமார் வேலைப்பார்க்கும் கல்லூரியின் உரிமையாளன். மத்திய அமைச்சராக இருக்கும் சிவராமனின் ஒரே ஒரு புதல்வன்.
“ம்ம்ம்… ஒரு ஐஞ்சு வருசத்துக்கு முன்னே நம்ம காலேஜ் ஒன்னுல அதிகளவு ட்ரக்ஸ் எடுத்துக்கிட்டதுனால அப்ப ஆளுங்கட்சி எம்.எல்.ஏவா இருந்தவனோட பையன் ஒருத்தன் இறந்தான். அதுல அவன் கூட இருந்த பையனும் பொண்ணும் மாட்டுனாங்க. ரெண்டே நாள்ல அந்த கேஸைக்கூட ஒன்னுமில்லாம ஆக்கி அந்த பையனை வெளிய எடுத்து மறுநாளே ஆக்ஸிடென்ட் மாதிரி செட் பண்ணி போட்டோம்ல. இவளை போடலாம்னு நினைச்சப்ப ஊரைவிட்டே போய்ட்டா. அண்ட் அதுல இவளுக்கு ஒன்னுமே தெரியாது. நம்ம பையன் தான் இவளை லவ் பண்ற மாதிரி ஏமாத்தி இருக்கான்னு கூட விட்டோம்ல அது இவ தான்.” என்று மிக நீண்ட வரலாறை சொல்லி முடித்தான் வசந்த்.
“அப்ப நான் எங்கே இருந்தேன்?”
“ட்ரக் டீலர் கிட்ட பேசனும்னு ஆப்பிரிக்கா வரை போயிருந்த. நீ வரதுக்குள்ள தான் எல்லாம் கிளியர் ஆகிருச்சு”
“ஓஹ்ஹ்ஹ்…” என்றவன் திரையில் சிரித்தவாறு தனதருகிலிருக்கும் ஜெயக்குமாரின் தோளில் கைப்போட்டவாறு இருக்கும் சுருதியை வெறித்து பார்த்தவாறு இருந்தான்.
“சூப்பர் பிகர் என்ன டா வசந்த்? இந்த மாதிரி பொண்ணுங்க எல்லாம் நம்ம கண்ணுல மட்டும் ஏன் தப்பாவே சிக்குறாங்க. நல்ல முறையில பார்த்தா அவளூகளை லவ் பண்ணி நம்ம திருந்தவாச்சும் செய்வோம்ல டா?” என்று சிரிப்புடன் அவளது புகைப்படத்தை ஜூம் செய்தவாறு மாறன் கூற, அவனை புரியாத பார்வை பார்த்தான் வசந்த்.
“இவளை உனக்கு எப்படி தெரியும்?”
“அதுவா? அந்த பொண்ணு அது என்ன நம்ம காலேஜ் சூசைட் சீன் அப்ப நைட் முழுக்க புல் போதையில இருந்துட்டு மதியம் போல ரிட்டன் வரப்ப நம்ம காலேஜ்க்கிட்ட ஒரு ஆக்ஸிடென்ட் ஆச்சுன்னு சொன்னேன்ல. ஒரு பொண்ணுக்கூட கார் கண்ணாடியை உடைச்சுட்டு லெக்சர் அடிச்சான்னு சொன்னேல. அது இவ தான். ரொம்ப நாளா தேடிட்டு இருந்தேன். இன்னைக்கு தான் சிக்கி இருக்கா? பார்ப்போம். பட் சூப்பர் பிகர்…” என்று கூறியவன் எதையோ கண்களை மூடி யோசிக்க ஆரம்பித்துவிட்டான். அடுத்து பேச வந்த வசந்த்தையும் கைநீட்டி அமர்த்தியவன் வெளியே செல்லுமாறு சைகை செய்ய வெளியேற அந்த அறையின் கதவை திறந்தவனை,
“எப்படி உனக்கு இத்தனை வருசம் கழிச்சும் இந்த பொண்ணை ஞாபகம் இருக்கு?” என்று மாறன் கேட்க, வசந்த் என்ன சொல்வதென்று தெரியாமல் முழித்தவாறு தொண்டைக்கூட்டில் எச்சிலை முழுங்கினான்.
சட்டென்று நாற்காலியிலிருந்து எழுந்த மாறன் அவனது சட்டையை கொத்தாக பற்றியிருந்தான்.
“மாறாஆஆ…!”
“ஏந்த காரணத்துகாக வேனும்னாலும் இருக்கட்டும். இனிமேல் அவள் உன் நினைவுல கூட இருக்க கூடாது. அண்ட் மோர் ஒவர் அவளையும் அவ புருசனையும் விட்ரு. அவளுக்கு உன்னால எதாவது ஆச்சுன்னு தெரிஞ்சது கொன்னு புதைச்சுருவேன்.”
“சரி மாறா…”
“பேர் என்ன சொன்ன?”
“சுருதி….”
“சுருதி… நல்ல பேர்…” என்று தனக்குள்ளே சிரித்துகொண்டவன் “இவளுக்கு அவ புருசன்னா ரொம்ப பிடிக்கும் போலயே டா? இந்த போட்டோல அவ கண்ணுல காதல் வழியுது டா… நைஸ்…” என்று கூறி நிற்பாட்டியவன், எதையோ தனது வளர்ந்து அடர்ந்திருந்த ஒரு மாத தாடியை தடவிக்கொண்டே யோசித்துக்கொண்டிருந்தான் மாறன்.
சில நிமிடங்களில் அவனது தலை மேலும்கீழுமாக உதட்டில் உறைந்த சிரிப்புடன் ஆடுவதிலேருந்தே எதோ முடிவெடுத்து விட்டான் என்று தெரிந்தது.
“அவனை இந்த ஆகாடமிக் இயர் முடிஞ்சவுடனே வெளியே அனுப்ப வேணாம். நம்ம காலேஜ்லயே பெர்மணட் ஸ்டாப் ஆக்கிரு…”
“இல்லை மாறா… இது சரியா வராது… அப்பாக்கிட்ட எதுக்கும் ஒரு வார்த்தை பேசிரு…” என்று வசந்த் தயங்கியவாறு கூற,
“சொன்னதை மட்டும் செய் வசந்த். எனக்கு தெரியும்.”
“சரி மாறா…”
“ஹான். சுருதி எந்த ஸ்கூல்?”
“ஜெயராம் ஸ்கூல்…”
“அந்த ஸ்கூல் வாங்க பாரு. முடியாட்டி ட்ரஸ்டில ஒரு ஆளாச்சும் ஆகப்பாரு.” என்று மாறன் கூற,
அவனை வசந்த் அதிசயமாக பார்த்தான். அவனுக்கு தெரிந்த மாறன் இவன் இல்லை. இத்தனை வருடத்தில் அவர்கள் எத்தனையோ தவறுகள் செய்திருந்தாலும் எந்தவொரு பெண்ணையும் நிமிர்ந்து பார்த்ததில்லை. முப்பத்திரண்டு வருடங்களாக கன்னி பையனாகவே வாழ்வை கழிப்பவன். திருமணத்திற்கும் ஒத்துக்கொள்ள மாட்டேன் என்றான். காதல் கன்றாவி என்று எதுவுமே அவனுக்கு வந்ததில்லை.
“மாறா அவளை தூக்கிருவோமா?” என்ற வார்த்தையை வசந்த் முடிக்ககூடவிடவில்லை கன்னத்தை சேர்த்து ஒரு அறையை விட்டிருந்தான்.
“இப்ப தானே டா சொன்னேன். அவ மேல கையை வைக்க கூடாதுன்னு; அவ புருசனையும் ஒன்னும் பண்ணக்கூடாது. எதாச்சும் முட்டாள் தனமா பண்ண; மறுபடியும் சொல்றேன் உன்னை கொன்னு புதைச்சுருவேன் ராஸ்கல்” என்று கூறியவன் மீண்டும் முன்பு போல் அமர்ந்து கண்களை மூடிக்கொண்டான்.
என்னதான் இருவரும் நண்பர்களாக இருந்தாலும் மாறன் தான் முதலாளி. அவனின் பல சட்டத்துக்கு புறம்பான வேலைகளுக்கு வசந்த் தான் ஆல் இன் ஆல். தன் நிழலைக்கூட நம்பாதவன் நம்பும் ஒரே ஆள் வசந்த் தான். தெரிந்தும் தெரியாமலும் இந்தியாவின் தூண்களான மாணவர்களின் வாழ்க்கையை சிதைத்து இருக்கின்றனர்.இவர்களின் போதைமருந்து கடத்தலில் பலியானோர் பலர். இங்கு எல்லாம் அனைவருக்கும் தெரியும் ஆனால் எதையும் நீருபிக்க முடியாது. அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், தீவிரவாதிகள் என்று இதில் பலரின் கைகளும் உள்ளது. மாறன் எங்கயாவது சருக்கினால் மொத்த தமிழகமே ஸ்தம்பிக்கும். அதனால் அவன் இந்த தொழிலில் இறங்கி இத்தனை வருடத்தில் மாட்டியதே இல்லை. மாட்டவும் விடமாட்டார்கள். இதை மாறனின் சாம்ராஜ்ஜியம் என்று கூட சொல்லலாம்.
***************************************************************
சுருதி தனது கைக்கடிகாரத்தையும் அந்த ஹோட்டலின் வாசலையும் பார்த்தவாறே அமர்ந்திருந்தாள். அவளின் அத்தை மகன், கொளுந்தன் , உயிர் தோழன் என்று ஒன்றுக்கு மூன்று பதவிகளை அசால்டாக வகிக்கும் அவளது செல்வா, சுருதி தனது தாய் வீட்டில் இருந்தபொழுது அரைமணி நேரத்திற்கு முன்பு தொலைப்பேசியில் அழைத்து இவளிடம் முக்கியமான விசயம் பேசவேண்டுமென்று சொல்லி இந்த ஹோட்டல் பெயரை கூறி இங்கு அவளை வரச்சொல்லியிருந்தான் அதுவும் தனியாக…
ஜெயக்குமார் இன்று காலைதான் முக்கியமான வேலை என்று தான் முன்பு பணிப்புரிந்துக்கொண்டிருந்த கல்லூரிக்கு அதாவது சென்னைக்கு சென்றிருந்தான். அதனால் தனியாக இருக்கவேண்டாமென்று தனது இல்லத்திற்கு வந்திருந்தாள் சுருதி. செல்வா தன்னுடன் தனியாக பேச வேண்டும் என்று சொல்லவும் வீட்டிற்கு வாடா என்று அழைக்க செல்வாவோ மறுத்து தாங்கள் எப்பொழுதும் குடும்பாக வரும் ஹோட்டலிற்கு வரச்சொல்லிருந்தான்.
“தனியாக பேசவேண்டும்” என்று இந்த வார்த்தையை கேட்டதிலிருந்து சுருதியின் மூளை எப்பொழுதும் போன்று ஒவர் டைம் வேலையை பார்த்து அவளூள் பல யூகங்களை கிளப்பியிருந்தது. ஏனெனில் அவன் தனியாக பேசவேண்டும் என்று சொல்லி அவளுடன் பேசியதெல்லாம் பெரியபெரிய விசயங்கள் தான்.
பத்தாம் வகுப்பு படித்த பொழுது தனியாக பேசவேண்டும் என்று கூட்டிச்சென்று அவர்கள் வீட்டிற்கு அருகிலிருந்த கீதா என்ற பெண்ணை காதலிப்பதாக கூறியிருந்தான்.
அடுத்து கல்லூரி முடித்துவிட்டு கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தான். அது புனேவில் அவனுக்கு வேலை என்றிருக்க லெட்சுமி விடமாட்டார் என்று தெரிந்ததால் அதற்கு தனது தாயிடம் வந்து பேசுமாறு சுருதியை அழைத்தான்.
அதனால் இந்த முறையும் பல யூகங்களுடன் அமர்ந்திருந்தாள். அதில் முக்கியமான மூன்று..
ஒன்று…
ரொம்பநாளாக செல்வாக்கு அவனுடன் வேலைப்பார்க்கும் வடநாட்டுப்பெண்ணான ஷில்பா மீது ஒரு கண்ணு. அதனால் அவளிடம் தன் காதலை வெளிப்படுத்தி ஒரு டூ ஸ்டேட்ஸ் படத்தை தங்களுக்கு காட்டப்போகிறானோ…
இரண்டு…
ஆன்சைட் போவதற்கான அழைப்பு வந்திருக்கலாம். லெட்சுமி அத்தை அதற்கு வேண்டாமென்று கூறியிருக்கலாம் அதனால் தன்னை பேச சொல்வதற்காக கூப்பிட்டு இருக்கானோ?’’
மூன்று…
எதுவும் ஃப்ரண்டு ரன்னிங் மேரேஜ்க்கு உதவுகிறேன் பேர்வழி என்று சைன் போடப்போய் அது எதுவும் பிரச்சினையாகி ரவுடி கும்பல் எதுவும் இவனை துரத்துகிறதோ….
என்று தனது கற்பனை திறமையை செல்வாவின் மீது செலுத்தி நீருபித்துகொண்டிருந்தாள் சுருதி.
அப்போழுது யாரோ “ஜீவா…” என்றழைக்க அங்கு தனது கவனத்தை திருப்பியவளுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு குமாரின் மேல் கோவமாக இருந்து தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருக்கும் போது நடந்ததை மூளை நினைவு மீட்பு செய்ய ஆரம்பித்திருந்தது.
“குகுகு…மார் அது ஜீஜீஜீ..வா தானே…” என்று திக்கிதிணறி தனது அருகில் வந்து நின்றிருந்த ஜெயக்குமாரின் சட்டையை அழுத்தமாக பற்றிக்கொண்டு கேட்டாள் சுருதி.
ஜெயக்குமார் தொலைக்காட்சியில் ஒடிக்கொண்டிருந்த ஜீவக்குமாரின் ஐந்தாம் ஆண்டு நினைவஞ்சலி விளம்பரத்தை வெறித்தவாறு நின்றிருந்தான்.
எது அவளுக்கு தெரிந்து விடக்கூடாதென்று சுருதியின் அப்பாவும், இவனும் நினைத்தார்களோ அது இன்று தெரிந்துவிட்டது.
ஆழ்ந்த மூச்சை எடுத்துவிட்டுக்கொண்டு தன்னை நிலைப்படுத்தியவன் தனது சட்டையை பற்றிக்கொண்டு தன்னை அண்ணாந்து பார்த்து தனது பதிலுக்காக காத்திருக்கும் சுருதியை பார்த்தவன் ஆம் என்பது போல் தலையசைத்தான்.
அவனின் ஆம் என்ற தலையாட்டலில் சுருதிக்கு மயக்கமே வரும் போல் இருந்தது. ஏன்?எப்படி?எதற்கு? என்று ஆயிரம் கேள்விகள் மனதிற்குள் படையெடுக்க ஜெயக்குமாரை இறுக அணைத்துக் கொண்டவள் அவனது முகத்தை பார்க்காமல் எப்படி என்ற கேள்வியை மட்டும் திணறியவாறு கேட்டாள்.
“நீங்க இந்த ஊரை விட்டு போன அன்னைக்கு… ஒரு ஆக்ஸிடன்ட்…”
“எப்படி?”
“என்ன எப்படி? அமைதியா தூங்கு போ…” என்று சத்தமிட்டவன் அவளை விலக்கிவிட்டு விட்டு சமையலறை நோக்கி சென்று விட்டான் ஜெயக்குமார்.
ஜெயக்குமார்க்கு அந்த ஜீவா தன்னிடம் கடைசியாக பேசிய வார்த்தைகள் ஐந்து ஆண்டுகள் கடந்தும் இன்றும் காதிற்குள் எதிரொலித்துக்கொண்டிருந்தது.
“அண்ணா… சுருதிக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.”
“அது எங்களுக்கு தெரியும். உனக்கு என்ன வேனும்? உன்னால தானே அவ இந்த ஊரை விட்டே போயிட்டு இருக்கா. இப்ப எதுக்கு வந்த? ஆமாம் ஜெயிலிருந்து தப்பிச்சு வந்துட்டியா? யார் உன்னை வெளிய விட்டா?” என்று ஜெயக்குமார் அவனை சந்தேகமாக பார்த்துக்கொண்டே கேட்க,
அவனது கேள்விக்கு விரக்தியான சிரிப்பை உதிர்த்தவன் “நாங்க மாட்டிக்கிட்டா அவங்களும் மாட்டனும்ல அதான் எங்களை ரிலீஸ் பண்ணிட்டாங்க. நீங்க அவளை பத்திரமா பார்த்துக்கோங்க. குறைஞ்சது ஒரு மூனு வருசமாச்சும் இங்கே அவளை விடாதீங்க. அப்புறம் நீங்கன்னா அவளுக்கு ரொம்ப பிடிக்கும்.”
“இது உனக்கே ஒவரா தெரியலை. நீ எதோ தருதலைக்கிட்ட பேட் கட்டி இவளை லவ் பண்ண வைச்ச. எதுவோ தெய்வீக காதலன் மாதிரி பேசுற. மரியாதையா ஒடிப்போயிரு செம காண்டுல இருக்கேன். கொலை பண்ணக்கூட தயங்க மாட்டேன்.” என்று ஜெயக்குமார் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க பேசினான் இல்லை கிட்டதட்ட கத்தினான் என்று தான் சொல்ல வேண்டும். சுருதியை இந்த நிலைமைக்கு ஆளாக்கிவிட்டு என்னமோ உத்தமன் மாதிரி பேசிக்கொண்டிருக்கிறான்.
“நான் கெட்டவன் தான். ஆனால் என் காதல் பொய்யானது இல்லை சார். அவளை ரொம்ப ஆழமா காதலிக்கிறேன். அவளுக்காக எல்லாத்தையும் விட்டுட்டு விடலாம்னு நினைச்சாலும் என்னால விட முடியலை. இது புலி வாலை பிடிச்ச கதை தான். வயித்துப்பொழைப்புக்கு இந்த தொழிலுல இறங்கி இப்ப கொலை வரை வந்திருச்சு. சரி நான் போயிட்டு வரேன்.” என்றவன் ஜெயக்குமார் மறுமொழி பேசுவதற்குள் தான் கொண்டுவந்திருந்த இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டான்.
அவன் சென்ற சில மணி நேரங்களிலே ஜீவா இறந்துவிட்டதாக ஜெயக்குமார்க்கு செய்தி வந்தது.
சுருதி வாழ்க்கையில் பிடித்த பீடை இதோடு முடிந்துவிட்டது என்று நினைத்துக்கொண்டனர் ஜெயக்குமாரும் முத்துவேலும்.
இங்கு சுருதியோ அழுது கரைந்துக்கொண்டிருந்தாள். அவளது கசப்பான எதிர்காலம் கண்முன்னே ஒடியது.
சுருதி கல்லூரியில் அடியெடுத்து வைத்த நிமிடமே முதல் அறிமுகமானவர்கள் தான் ஜீவாவும், மாணிக்கமும். தன்னை ரேக்கிங்க் செய்துக்கொண்டிருந்த சீனியர் மாணவர்களிடமிருந்து இவளை காப்பாற்றியவர்கள் இவர்கள் இருவர் தான்.
அதற்கு நன்றி சொல்வதற்காக பேசி அது அப்படியே வளர்ந்து நட்பாக மாற கல்லூரி ஆரம்பித்த இரு மாதத்திலே நட்பு காதலாக பரிணமத்திருந்தது.
எல்லா காதலர்களைப்போன்றும் காலேஜ் கட்டடித்தல் சினிமா, பூங்கா என்று அவளது நாட்களும் வண்ணமயமாக தான் சென்றுக்கொண்டிருந்தது.
அந்த நாள் வரும்வரை… ஒரு நாள் படத்திற்கு சென்றிருந்தப்போது ஜீவா சுருதியை நெருங்கநினைக்க அவளுக்கு அது அருவெருப்பாகி போய்விட அவனை அடித்துவிட்டாள்.
அதிலிருந்தே அவர்களுக்கிடையே இடைவேளை விழ ஆரம்பித்து இருந்தது. அதற்கு பிறகு அவன் தனக்கு ஆசையாக வாங்கி தரும் சாக்லெட்டுகளில் எதுவோ வித்தியாசமாக உணர ஆரம்பித்தாள். அந்த சாக்லெட் உண்டப்பிறகு எதுவோ பறப்பதைப்போன்று தோன்ற ஆரம்பித்தது.
ஜீவாவும் அவளைவிட்டு விலக ஆரம்பித்திருந்தான். எனவே இருவரும் பேசி ஒரு முடிவுக்கு அதாவது பிரேக் அப் செய்துகொள்ளலாம் என்று நினைத்து கடைசி முறையாக செல்வோம் என்று நினைத்துக்கொண்டு மாணிக்கத்தையும் கூட்டிச் சென்ற போது தான் அந்த வீபரிதம் நடந்தது.
மாணிக்கம் வரும்போதே கண்கள் எல்லாம் சிவந்து, முகம் வீங்கிப்போய் தான் வந்திருந்தான். எப்பொழுதும் அவர்கள் செல்லும் இடமான பூங்காவிற்கு செல்ல அங்கு இவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்க மாணிக்கத்திற்கு ஒருமாதிரி இழுவைப்போன்று வர வேகமாக சுருதியை ஒரு ஆட்டோபிடித்து வீட்டுக்கு அனுப்பிவைத்த ஜீவா அவனை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லாமல் யாருடனோ தொலைப்பேசியில் பேசிக்கொண்டிருந்தான்.
அந்தப்புறம் என்ன சொல்லப்பட்டதோ அவனை அங்கயே விட்டுவிட்டு தலைமறைவாகினான் ஜீவா.
வீட்டிற்கு வந்தவளுக்கோ எதுவோ சரியாகப்படவில்லை. மனம் உறுத்திக்கொண்டேயிருக்க மாணிக்கத்திற்கு என்னவானது என்று கேட்பதற்காக ஜீவாவிற்கு அலைப்பேசியில் அழைத்தால் அது அணைத்து வைக்கப்பட்டிருக்கிறது என்று வர குழப்பத்துடன் அமர்ந்திருந்தாள்.
அவளது மனநிலையை மாற்றவோ அங்கு யாருமில்லை. ஏனென்றால் காலாண்டு விடுமுறையென்று குடும்பம் அனைத்தும் அவளது தாய் உட்பட அனைவரும் கொடைக்கானல் சென்றிருந்தனர். சுருதியும் அவளது தந்தை முத்துவேல் மட்டுமே வீட்டில் இருந்தனர்.
அவள் அப்படியே யோசனையில் உறங்கிப்போய்விட மாலை தன் தந்தை மற்றும் ஜெயக்குமாரின் பதட்டமான குரலில் தான் எழுந்தாள்.
அவளது தந்தை பதட்டத்துடன் “பாப்பா உனக்கு ஜீவான்னு யாராவது தெரியுமா?” என்று கேட்க
அவளோ ஒன்றும் புரியாமல் ஆமென்று தலையாட்டி வைக்க அவருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. காவல் நிலையத்திலிருந்து முத்துவேலிற்கு வந்த அழைப்பில் பதறிப்போய் வந்தவருக்கு இவளின் பதில் இடியை இறக்குவதாக இருந்தது.
ஜெயக்குமார் அவனது மாமனை நோக்கி சுருதியை காவல் நிலையத்திற்கு நாமே அழைத்து சென்று விடலாம் என்று கூற அதுதான் அவருக்கும் சரியெனப்பட அவளை அழைத்துக்கொண்டு தனது நண்பனான காவல்துறையில் எஸ் ஐயாக இருந்த ஜானையும் அழைத்துக்கொண்டு இவர்களை அழைத்த காவல்நிலையத்திற்கு செல்ல அங்கு வெள்ளை வேட்டி அணிந்த பலர் கோவத்துடன் நின்றுக்கொண்டிருந்தனர்.
சுருதிக்கு தன்னை சுற்றி என்ன நடக்கிறதென்றே புரியவில்லை. யாரிடமாவது கேட்கலாம் என்று பார்த்தால் இருவரது முகமோ கடினமாக இருந்தது. ஏனோ அவர்களை பார்க்கவே பயமாக இருந்தது.
ஒரு காவல் அதிகாரியுடன் வந்திருந்ததால் சுருதியின் மேல் யாரும் கைவைக்கவில்லை. அவளை சுற்றி அரணாக நின்றுக்கொண்டிருந்தனர் ஜெயக்குமாரும் முத்துவேலும்.
“உன் பெயர் என்ன மா?” என்று ஒரு காவலர் கேட்க,
“சுருதி..”
“உனக்கு மாணிக்கத்தை தெரியுமா? அவனை எப்ப பார்த்த?”
“என் கிளாஸ்மேட் தான். இன்னைக்கு காலையில தான் பார்த்தேன். என்ன ஆச்சு அவனுக்கு?” என்று சுருதி பதட்டத்துடன் வினவ,
“அவன் ரொம்ப பவர்புல்லான கலவை ட்ரக் எடுத்துகிட்டதால வலிப்பு வந்து இறந்துட்டான். அவன் இந்த தொகுதி எம் எல் ஏ பையன். உனக்கு அந்த பொறுக்கி ஜீவாவையும் தெரிஞ்சு இருக்கும் தானே. அவன் தலைமறைவாகிட்டான். நீங்க மூனு பேரும் தான் அந்த பூங்கால இருக்க சிசிடிவி கேமரால ரெக்கார்ட் ஆகியிருக்கு.” என்று கூற சுருதிக்கு பூமி நழுவதைப் போல் இருந்தது.
அவள் மறுமொழி கூறுவதற்குள் அரக்க பரக்க அங்கு வந்து வந்தான் ஜீவா.
“ஸார் இந்த பொண்ணுக்கும் இந்த கேஸ்க்கும் எந்த சம்பந்தமில்லை. எல்லாத்துக்கும் நான் தான் காரணம். அவங்களை விடுங்க சார்” என்று சுருதியை மறைத்தவாறு வந்து நின்றான்.
ஆனால் அவ்வளவு சீக்கிரத்தில் யாரும் அவளைவிடவில்லை. அவளது உடம்பிலும் போதைப்பொருள் கலந்துள்ளதா என்று சோதிக்கவேண்டுமென்று கூறிவிட அதுவும் நடந்தது. அதில் சுருதியின் உடலில் மிக சிறிய அளவில் போதைப்பொருள் கலந்துள்ளது கண்டறியப்பட முத்துவேலும் ஜெயக்குமாரும் உயிரோடு மரித்ததைப் போன்று உணர்ந்தனர். தங்கள் வீட்டுப்பெண் என்ன செய்கிறாள் என்றுக்கூட தெரிந்துக்கொள்ளாமல் என்ன செய்து வைத்திருக்கிறோம்.
முத்துவேலின் நண்பன் அவரைப் பார்த்த பார்வையில் இப்பொழுதே செத்துவிடலாம் என்று தோன்றியது. அவரது வாழ்க்கையில் இப்படியொரு சந்தர்ப்பம் இதுவரை அமைந்ததேயில்லை எங்கும் எப்பொழுதும் நெஞ்சை நிமிர்த்தி கெத்தாக தான் இருப்பார். யாரிடமும் போய் நின்றதில்லை இன்று தனது ஒரே செல்ல மகளுக்காக அனைத்தையும் தாங்கிகொண்டு நின்றார். அவரது தன்மானத்தை விட தனது பெண்ணின் வாழ்க்கை மிகமுக்கியம் என்று பட தனது நண்பனிடம் கெஞ்சல் பார்வையை செலுத்தினார்.
ஜீவா சுருதிக்கு தெரியாமலே அவளது உணவில் போதைமருந்தை மிகச்சிறிய அளவில் கலந்து கொடுத்தாக சொன்னான். எதற்கு என்று கேட்டதுக்கு இப்படி தான் ஒவ்வொருவருக்கும் புதிதாக போதைப்பழக்கத்தை அறிமுகம் படுத்துவோம் என்றும் அவர்க்ளுக்கு தெரியமாலே அவர்களை அதற்கு அடிமையாக்கிவிட்டு அவர்களிடமிருந்து பணம் பறிப்பதைக்கூறினான்.
பலப்போராட்டங்களுக்கு பிறகு மாலை நான்குமணிப்போன்று காவல் நிலையத்திற்கு வந்தவர்களை இரவு ஒரு மணிக்கு தான் வீட்டிற்கு விட்டனர்.
இரண்டே நாளில் அந்த கேசின் ஆரவாரம் அடங்கிவிட முத்துவேலின் நண்பரின் யோசனையின்படி முத்துவேல் குடும்பம் இடம் பெயர்ந்தது.