இதயம் – 11

இதயம் – 11
சக்தியின் வீட்டிற்கு வந்து சிறிது நேரத்திலேயே பூஜா அவனது வீட்டினருடன் இயல்பாக பேச ஆரம்பித்து விட, தன் அலுவலக அறையில் அமர்ந்திருந்து தன் வேலைகளை செய்வது போல அவளை அவளறியாமல் ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தான் சக்தி. அவன் மனதிற்குள் ஏதோ ஒரு உள்ளுணர்வு அவளும் தன்னை அடிக்கடி நோட்டம் விடுகிறாள் என்று அவனுக்கு உணர்த்தினாலும் ஏனோ அவளை நேருக்கு நேராக சந்தித்து இதைப் பற்றி கேட்கும் தைரியம் அவனுக்கு வரவேயில்லை.
பகலுணவை முடித்து விட்டு தான் பூஜா அந்த இடத்தில் இருந்து நகர வேண்டும் என்று சந்திரா அவளை பாசமான கண்டிப்போடு வேண்டுகோள் விடுத்திருக்க, அவரது பேச்சை மீற முடியாமல் சம்மதம் தெரிவித்திருந்த பூஜாவிற்கு தான் ஏனோ சக்தி தன்னைக் கடந்து செல்லும் போதெல்லாம் ஒரு விதமான பதட்டம் தொற்றிக் கொள்வதைப் போல இருந்தது.
அவனை முதல் தடவை பார்த்தபோதோ அல்லது அந்த இன்னல் சந்தர்ப்பத்தில் தனக்காக அவன் திருச்சியில் துணையாக இருந்தபோதோ ஏற்பட்டிராத ஒரு பதட்டம் இப்போது இங்கே கோயம்புத்தூரிற்கு வந்ததன் பிறகு, அதுவும் அவனைத் தினமும் சந்திக்க ஆரம்பித்ததன் பிறகு அடிக்கடி ஏற்படுவதைப் போல இருந்தது.
சக்தி தனக்காக பல உதவிகளை செய்து இருக்கிறான் என்று அவளுக்கு நன்றாகவே தெரியும், அதற்காக அவனுக்கு தன் வாழ்நாள் முழுவதும் தான் கடமைப்பட்டு இருக்கிறோம் என்பது கூட அவளுக்குத் தெரியும், ஆனால் இந்த பதட்டம் எதனால் என்று தான் அவளுக்கு இப்போது வரை புரியவேயில்லை.
அவனது வீட்டினருடன் சிறிது நேரத்திலேயே சகஜமாக பழகத் தொடங்கிய தன்னால் ஏன் சக்தியுடன் மாத்திரம் இயல்பாக பேச முடியவில்லை என்கிற கேள்வி அவள் அந்த வீட்டிற்குள் நுழைந்த கணம் முதல் அவள் மனதை ஒவ்வொரு நிமிடமும் வண்டாக குடைந்து கொண்டு தான் இருந்தது.
தன் பதட்டமும், குழப்பமும் தன்னைச் சுற்றி இருக்கும் யாருக்கும் தெரிந்து விடக்கூடாது என்பதற்காக வேண்டி தன்னை இயல்பாக இருப்பது போல அவள் காட்டிக் கொண்டாலும், ஏற்கனவே சக்தி மற்றும் பூஜாவின் நடவடிக்கைகளைப் பார்த்து தனக்குள் சிறு சந்தேகத்துடன் நடமாடிக் கொண்டிருந்த மீரா அவர்கள் இருவரது இந்த சின்ன சின்ன மாற்றங்களைக் கூட கவனிக்கத் தவறவில்லை.
தானாக முன் சென்று இதைப் பற்றி தன் அண்ணனிடம் கேட்டால் அவனாக எதுவுமே சொல்ல மாட்டான் என்பது மீராவுக்கு தெரியுமாகையால் பூஜாவை வைத்து தான் அடுத்து என்ன செய்வது என்று யோசிக்க வேண்டும் என்பது அவளது திட்டமாக இருந்தது.
இங்கே ஒவ்வொரு நபரும் ஒவ்வொரு விதமான திட்டங்களுடன் தங்கள் பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தாலும், அன்றைய நாளுக்கான இறைவனின் திட்டம் அவர்களை நோக்கி பெரும் எதிர்பார்ப்புடன் வந்து கொண்டு தான் இருந்தது.
சந்திரா தன் சமையல் வேலை முடிவடைந்ததும் எல்லோருக்கும் உணவைப் பரிமாறத் தொடங்க, பூஜாவும் அவருக்கு உதவி செய்ய எண்ணி இன்னொரு புறம் உணவு பரிமாறும் வேலையைப் பார்க்கத் தொடங்கினாள்.
சக்தி மற்றும் மீரா ஒரு புறமும், சண்முகபிரகாஷ் மற்றும் வெற்றி பிரகாஷுடன் அவனது மகள் ஷாலினியும் மறுபுறம் அமர்ந்திருக்க, சந்திரா தன் கணவன் அமர்ந்திருந்த புறமாக உணவைப் பரிமாறத் தொடங்க, பூஜாவோ சக்தியின் புறம் தான் தான் செல்ல வேண்டுமா? என்கிற கேள்வியுடன் தன் கையில் எடுத்த பாத்திரத்தை அப்படியே அந்த மேஜையில் வைத்து விடலாமா? வேண்டாமா? என்கிற யோசனையுடன் நின்று கொண்டிருந்தாள்.
பூஜா அவள் நின்று கொண்டிருந்த இடத்திலேயே நிற்பதைப் பார்த்து சிறிது குழப்பம் கொண்ட சந்திரா, “என்ன ஆச்சும்மா பூஜா? ஏதாவது பிரச்சினையா?” என்று கேட்க, அவரைப் பார்த்து அவசரமாக மறுப்பாக தலையசைத்தவள் ஒருவிதமான தயக்கத்துடன் சக்தி அமர்ந்திருந்த புறமாக நடந்து சென்றாள்.
இங்கே பூஜா எந்தளவிற்கு பதட்டமான மனநிலையுடன் நின்று கொண்டிருந்தாலோ அதை விட பலமடங்கு சந்தோஷமான மனநிலையுடன் சக்தி அவளைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.
தான் பூஜாவைத் திருமணம் செய்ததன் பின்னர் இவ்வாறு அவள் தனக்கு உணவு பரிமாற, அதைத் தான் மனம் நிறைந்த சந்தோஷத்துடன் உண்ண வேண்டும் என்று எத்தனையோ கனவுகள் எல்லாம் கண்டு அவை எல்லாமே இல்லாமல் போய் விட்டது என்று நினைத்திருந்த வேளையில் திடீரென எங்கிருந்தோ வந்து அதிர்ஷ்டம் சேர்வது போல தன் வாழ்க்கையில் பூஜா மீண்டும் வந்து விட்டாலே என்கிற பூரிப்பான மனநிலையே சக்தியை இன்னும் இன்னும் சந்தோஷக் கடலில் மூழ்கிப் போகச் செய்வதைப் போல இருந்தது.
தன் கைகள் நடுங்க சக்தியின் தட்டில் அவசர அவசரமாக உணவை எடுத்து வைத்த பூஜாவைப் பார்த்து சக்திக்கு ஒரு புறம் சிரிப்பாக இருந்தாலும் மறுபுறம் ஒருவேளை அவளுக்கு தன்னைப் பிடிக்கவில்லையோ? என்கிற யோசனையும் வராமல் இல்லை.
தனது வீட்டுக்கு வந்த நொடி முதல் தன்னை நேர் கொண்டு பார்க்கவே அவள் தயங்குகிறாள், அது மட்டுமில்லாமல் தான் அவளைக் கடந்து செல்லும் போதெல்லாம் அவள் ஒரு விதமான பதட்டத்துடனேயே தன்னை எதிர் கொள்கிறாள் என்பதை எல்லாம் சக்தியின் மனம் கணக்கிட்டுப் பார்க்கத் தொடங்க, ‘பூஜா ஏன் என்னைப் பார்த்து இவ்வளவு பதட்டம் அடையணும்? ஒரு வேளை என்னோட மனதில் இருப்பதைப் போல அவள் மனதிலும் ஏதாவது எண்ணங்கள் வந்து இருக்குமா? அதை எப்படி புரிந்து கொள்வது என்று தெரியாமல் தான் இவ்வளவு தூரம் பதட்டமாக இருக்கிறாளா?’ என்று தனக்குள் சிந்தித்தபடியே நிமிர்ந்து பார்த்தவன் அதேநேரத்தில் பூஜாவும் தன்னையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருப்பதைப் பார்த்து ஒரு நொடி தன்னையே மறந்து போனான்.
பூஜா அவன் தன்னைத் திரும்பிப் பார்க்க கூடும் என்று எதிர்பார்க்காமல் அவனைப் பார்த்துக் கொண்டிருந்ததால் என்னவோ சக்தியின் பார்வை தன் புறம் திரும்பியதும் அவளுக்கு சட்டென்று புரையேற ஆரம்பித்தது.
“ஐயோ! பூஜா, பார்த்து சாப்பிட மாட்டியா?” சிறு கண்டிப்புடன் தன் இருக்கையில் இருந்து எழுந்த சக்தி எதிர்ப்புறமாக அமர்ந்திருந்த பூஜாவின் அருகில் வந்து அவளது தலையில் மெல்ல தட்டியவாறே தண்ணீரைப் புகட்ட, அங்கே அமர்ந்திருந்த ஒட்டுமொத்த சக்தியின் குடும்பத்தினரும் அவர்கள் இருவரையும் ஆச்சரியமாக பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தனர்.
சிறிது நேரம் அந்த டைனிங் ஹாலில் எந்தவொரு சத்தமும் இல்லாமல் இருப்பதைப் பார்த்து, ‘என்ன ஆச்சு? எதற்காக இவ்வளவு அமைதி?’ என்றவாறே நிமிர்ந்து பார்த்த சக்தி அப்போதுதான் தன் ஒட்டுமொத்த குடும்பமும் தன்னையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருப்பதை உணர்ந்து கொண்டான்.
‘அய்யய்யோ! அவசரப்பட்டு எமோஷனல் ஆகிட்டியேடா சக்தி. சமாளி ராஜா, சமாளி’ என தனக்குத்தானே முணுமுணுத்துக் கொண்ட படி தன் இருக்கையில் வந்து அமர்ந்து கொண்டவன்,
“பூஜா இனிமேலாவது பொறுமையாக சாப்பிடுங்க. எனக்கு என் எம்ப்ளாயிஸோட ஹெல்த்தும் ரொம்ப முக்கியமானது. அவங்களுக்கு ஏதாவது ஆச்சுன்னா அப்புறம் நான் எப்படி என் பிசினஸைப் பார்க்கிறது? சோ பீ கேர்புல்” என்றவாறே எல்லோரையும் ஒரு முறை மேலோட்டமாக நோட்டம் விட்டு விட்டு தன் உணவை உண்ணத் தொடங்க, மற்ற எல்லோரும் அவனை விசித்திரமாகப் பார்த்துக் கொண்டே தங்கள் உணவை உண்ணத் தொடங்கினர்.
சக்தி அப்போதைய தருணத்தை சமாளிக்க பூஜாவை தன் கீழ் வேலை பார்ப்பவள் என்று கூறி இருக்க, அதைக் கேட்டு பூஜாவுக்கு ஏனோ மனம் தாளவில்லை.
‘அப்போ எம்ப்ளாயிஸோட ஹெல்த்தும் முக்கியம்னு தான் அவங்க இவ்வளவு பதட்டமாக என் கிட்ட வந்தாங்களா? ஆமா, நீ அவரோட எம்ப்ளாயி தானே? எம்ப்ளாயினாலும் இவ்வளவு அக்கறை காட்டணுமா?
அப்போ இந்த அக்கறை, பாசம் எல்லாவற்றுக்கும் காரணம் நான் அவருக்கு கீழே வேலை பார்ப்பவள் என்பது மட்டும் தானா?’ தன் மனம் எதை நினைத்து இப்படி எல்லாம் யோசிக்கின்றது என்று தெரியாமலேயே பூஜா ஏதோ சிந்தனையில் மூழ்கிப் போக,
அவளது முக மாற்றத்தையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்த சக்தி அவளது பார்வை தன் புறம் திரும்பியதைக் கண்டு கொண்டு, ‘ஒண்ணும் யோசிக்க வேணாம். ஆறுதலாக சாப்பிடு’ என்று சைகையில் சொல்ல அவனது அந்த சைகை மொழியே தனக்கு பன்மடங்கு உற்சாகம் அளித்தது போல தலையசைத்தவள் மீண்டும் தன் முன்னால் இருந்த உணவை உண்ணத் தொடங்கினாள்.
தன் மனது எதை எதிர்பார்க்கிறது என்று பூஜாவுக்கு சரியாக புரிந்து கொள்ள முடியாமல் இருந்தாலும் சக்தியின் குடும்பத்தினருடன், அதிலும் முக்கியமாக சக்தியின் அருகாமையில் இருக்கும் போது அவளுக்கு ஏதோ பல வருடங்களாக தான் வாழ்ந்த இடத்தில் இருப்பதைப் போலவே இருந்தது.
ஒரே ஒரு நாளில் தனக்கு இப்படியான ஒரு மனநிறைவான மாற்றத்தை ஏற்படுத்தி தந்த சக்திக்கு நிச்சயமாக இன்று அங்கிருந்து கிளம்புவதற்கு முதல் நன்றி சொல்லி விட வேண்டும் என்று எண்ணி இருந்த பூஜா அதற்கான சரியான நேரத்தை எதிர்பார்த்துக் காத்திருக்க, அவள் எதிர்பாராத ஒன்று அவளுக்காக இன்னும் சிறிது நேரத்தில் நிகழக் காத்திருந்தது.
எல்லோரும் தங்கள் உணவை முடித்து விட்டு அவர்கள் வீட்டு ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த நேரம் சண்முக பிரகாஷின் தொலைபேசி ஒலிக்க, அதை எடுத்துக் கொண்டு சற்று தள்ளி சென்று பேச ஆரம்பித்தவர் சிறிது நேரம் கழித்து முகம் கொள்ளாப் புன்னகையுடன் அவர்கள் முன்னால் வந்து நின்றார்.
தன் கணவரின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியைப் பார்த்து அவரருகில் வந்து நின்று அவரது தோளில் தன் கையை வைத்த சந்திரா, “என்னங்க ஆச்சு? போன் பேச முன்னாடி முகம் எல்லாம் சோர்ந்து போய் இருந்தது, ஆனா ஒரே போன் காலில் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்ப் எரியுதே. என்ன விளக்கம்?” என்று கேட்க,
அவரது கன்னத்தை பிடித்து ஆட்டிய சண்முக பிரகாஷ், “இரண்டு வாரத்திற்கு முன்னாடி என் பிரண்ட் ராஜேஷ் அவன் பையனுக்கு நம்ம மீராவைக் கேட்டு இருந்தாக சொன்னேன் இல்லையா? அது விஷயமாக பேச இன்னைக்கு அவங்க எல்லோரும் நம்ம வீட்டுக்கு ஈவ்னிங் வர்றாங்களாம். பையனும், பொண்ணும் சின்ன வயதில் பார்த்து பேசி இருந்தாலும் இப்போவும் ஒரு தடவை நேரில் பார்த்து அவங்க முடிவை சொல்லட்டுமேன்னு சொன்னான். ராஜேஷோட பையன் கண்ணனுக்கு ஆல்ரெடி ஓகே தான், நம்ம மீரா என்ன சொல்லப் போறான்னு பார்க்கலாம். ஒருவேளை மீராவுக்கும் ஓகேன்னா அப்புறம் டும் டும் டும் தான்” என்றவாறே மீராவைப் பார்த்து கேள்வியாக தன் புருவம் உயர்த்த, அவளோ சிறு வெட்கம் கலந்த புன்னகையுடன் தன் தலையைக் குனிந்து கொண்டாள்.
“ஐயோ! அம்மா நம்ம மீரா வெட்கம் எல்லாம் படுவாளாம்மா?” தன் தங்கையைப் பார்த்து அதிர்ச்சியாகுவது போல சக்தி தன் நெஞ்சில் கையை வைக்க,
“அம்மா, சக்திண்ணாவைப் பாருங்க ம்மா. வேணும்னே கலாய்க்குறான்” என்றவாறே மீரா தன் அன்னையின் தோளில் சாய்ந்து கொள்ள, பூஜாவிற்கு அங்கே இருப்பது ஏனோ சங்கடமாக இருந்தது.
அவர்கள் குடும்ப விடயம் பேசும் இடத்தில் தான் இருப்பது சரியில்லை என்று நினைத்து தன் கைப்பையை எடுத்துக் கொண்டு எழுந்து நின்றவள், “ஆன்டி, ஆங்கிள், மீரா, ஆல்ரெடி நான் வந்து ரொம்ப லேட் ஆகிடுச்சு, நான் கிளம்புறேன். இன்னொரு நாள் நான் வர்றேன் ஆன்டி. ஓகேவா?” என்றவாறே தன் கைக்கடிகாரத்தை திருப்பி பார்க்க,
அவள் முன்னால் சிறு புன்னகையுடன் வந்து நின்ற சந்திரா, “ஏன்மா உனக்கு இங்கே இருக்க விருப்பம் இல்லையா?” என்று கேட்க, அவளோ அவசரமாக மறுப்பாக தலையசைத்தாள்.
“நீ எங்கேயும் போக கூடாது, இன்னைக்கு எனக்கு நீ தான் எல்லா வேலைகளையும் செய்ய உதவி பண்ணணும். சரியா? ஒருவேளை வேலை ஏதாவது சொல்லிவிடுவேன்னு தான் அவசரமாக இங்கே இருந்து போகப் பார்க்குறியா பூஜா?” சந்திரா தன் சிரிப்பை மறைத்துக் கொண்டபடி பூஜாவைப் பார்த்து வினவ,
அவரைப் பார்த்து இடம் வலம் தலையை அசைத்தவள், “ஐயோ! அப்படி எல்லாம் இல்லை ஆன்டி. நான் வந்து ரொம்ப நேரம் ஆச்சு இல்லையா அது தான்” எனவும்,
அவரோ அவளை, ‘அது மட்டும் தான் காரணமா?’ என்பது போல கேள்வியாக பார்த்துக் கொண்டு நின்றார்.
அவரது கேள்வியான பார்வையில் தன் விழிகளைத் தாழ்த்திக் கொண்டவள் எதுவும் பேசாமல் அமைதியாக நிற்க அவளது முகத்தை மெல்ல நிமிர்த்தியவர், “நீ எதை யோசித்து இவ்வளவு தூரம் தயங்குறேன்னு தெரியலை பூஜா, ஆனால் நான் ஒண்ணு சொல்றேன், உன்னைப் பார்க்கும் போது எனக்கு வேறு ஒரு மூணாவது நபர் மாதிரி தோணவே இல்லை. உன்னை முதல் தடவை பார்த்ததிலிருந்து இப்போ வரைக்கும் உன்னை எங்க வீட்டில் ஒருத்தியாக தான் நான் நினைத்து இருக்கேன். அந்த எண்ணத்தோடு தான் ஒரு உரிமையாக கேட்கிறேன், இன்னும் கொஞ்ச நேரம் எங்க கூட இருந்து விட்டு போறியாம்மா?” என்று கேட்க, அவளுக்கு அவரது முகத்தைப் பார்த்து அதற்கு மேலும் மறுக்க முடியாது என்று தோணவே சிறிது தயக்கத்துடன் மீராவைத் திரும்பிப் பார்த்தாள்.
“ஆமா பூஜா, நீங்க கண்டிப்பா இருந்தே ஆகணும். எனக்கு ரொம்ப பதட்டமாக இருக்கு. அண்ணி வேற இன்னைக்கு வீட்டில் இல்லை, நீங்க மட்டும் தான் இப்போதைக்கு எனக்கு ஒரு சப்போர்ட்டா இருக்கீங்க. என் இரண்டு அண்ணனுங்க என்னை ஏதாவது சொல்லி டென்ஷன் பண்ணாலும் எனக்கு ஆதரவாக பேச ஒரு இரண்டு பேராவது வேணாமா? சோ ப்ளீஸ்” பூஜாவின் அருகில் வந்து நின்ற மீரா அவளது தாடையைப் பிடித்து கெஞ்சலாக கேட்க, பூஜா மெல்ல சக்தியின் புறம் திரும்பிப் பார்த்தாள்.
சக்தியும் அதே நேரம் அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்ததனால் பூஜா தன்னைப் பார்த்ததும் அவளைப் பார்த்து, ‘கொஞ்ச நேரம் ப்ளீஸ்’ என்று கண்களால் கெஞ்சுவது போல கேட்க, அதற்கு பிறகு தான் பூஜா அங்கே இன்னும் கொஞ்ச நேரம் இருக்க சம்மதம் தெரிவித்திருந்தாள்.
பூஜா சக்தியிடம் அனுமதி கேட்ட பின்பே அங்கே இருக்க சம்மதம் சொன்னாள் என்பதைக் கண்டு கொண்ட மீரா, ‘ஓஹோ! கதை இவ்வளவு தூரம் போயிடுச்சா? சார் பர்மிஷன் கொடுத்தால்தான் அம்மணி சம்மதம் சொல்லுறாங்க. இன்னைக்கு இருக்கு நம்ம அண்ணனுக்கு சிறப்பு கச்சேரி. எல்லோரும் வந்து விட்டு போகட்டும், அப்புறம் வைக்கிறேன் இந்த கச்சேரியை’ என தனக்குள் நினைத்துக் கொண்டபடி தயாராகச் சென்று விட, பூஜாவும் அவளுக்குத் தயாராக சிறு சிறு உதவிகளை செய்து கொடுக்க ஆரம்பித்தாள்.
மீராவை எளிமையான அலங்காரத்துடன் தயாராகச் செய்த பூஜா அவளைப் பார்த்து திருஷ்டி கழித்து விட்டு, “மீரா உண்மையாக ஒரு விடயம் சொல்லணும்னா இன்னைக்கு நீங்க ரொம்ப அழகாக இருக்கீங்க” என்று கூற,
அவளைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டவள், “அது சரி பூஜா, நீங்க ஏன் இப்படியே இருக்கீங்க? நீங்களும் கொஞ்சம் ரெடி ஆகலாமே” என்று கூற, அவளோ மீராவின் கூற்றுக்கு மறுப்பாக தலையசைத்தாள்.
“இல்லை மீரா, நான் எதற்கு தேவையில்லாமல்? நீங்க தான் இன்னைக்கு முக்கியமான ஆளு, சோ இது எனக்கு போதும்” என்று கூறி விட்டு பூஜா அங்கிருந்து செல்லப் போக,
அவளது கையைப் பிடித்துக் கொண்ட மீரா, “சரி பூஜா, அலங்காரம் எல்லாம் வேணாம், ஆனா இப்படி சின்னதாக கீற்று போல விபூதி மட்டும் தானே வைத்து இருக்கீங்க? கொஞ்சம் குங்குமமும் விபூதியோடு சேர்த்து வைத்துக் கொள்ளலாமே?” என்றவாறே அவளது நெற்றியில் குங்குமம் வைக்கப் போக,
அவசரமாக அவளது கையை விலக்கி விட்டவள், “கீழே எல்லோரும் வந்துட்டாங்க போல. வாங்க போகலாம்” என்றவாறே மீராவின் பேச்சைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் அவளை அங்கிருந்து அழைத்துக் கொண்டு சென்றாள்.
மீரா மற்றும் பூஜா ஒன்றாக படியிறங்கி வருவதைப் பார்த்து சக்தியின் கண்கள் பூஜாவை வட்டமிட, மற்றைய எல்லோரும் இரு பெண்களையும் புன்னகை முகமாக பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தனர்.
எல்லோரும் சிறிது நேரம் இயல்பாக பேசிக் கொண்டு இருந்த வேளை அங்கே அமர்ந்திருந்த சண்முக பிரகாஷின் நண்பரின் மனைவி லீலா அங்கே வந்து அமர்ந்து கொண்ட நொடி முதல் பூஜாவையே குறுகுறுவென பார்த்துக் கொண்டிருந்தார்.
லீலாவின் பார்வை தன் மேல் தான் இருக்கிறது என்பது பூஜாவுக்கு தெரிந்திருந்தாலும் அவர் ஏன் தன்னை இவ்வாறு பார்க்க வேண்டும் என்பது அவளுக்கு புரியவே இல்லை.
தற்செயலாக அவள் அவரைத் திரும்பி பார்த்தால் அவளைப் பார்த்து சிறு புன்னகை செய்பவர் தன்னருகில் அமர்ந்திருக்கும் தன் மகனிடம் ஏதோ ரகசியமாக அடிக்கடி சொல்லிக் கொண்டு தான் இருந்தார்.
லீலா ஏதோ அடிக்கடி ரகசியமாகப் பேசுவதைப் பார்த்து சிறிது குழப்பம் கொண்ட சந்திரா, “என்னாச்சு லீலா? அடிக்கடி பையன் கிட்ட ஏதோ சொல்லுற மாதிரி இருக்கு. எங்க கிட்டயும் சொன்னால் நாங்களும் தெரிந்து கொள்ளலாமே?” என்று கூற,
அவரைப் பார்த்து சமாளிப்பது போல புன்னகை செய்தவர் பூஜாவின் புறம் கை காட்டி, “இந்த பொண்ணு?” என்று கேள்வியாக நிறுத்த,
“அவங்க என் ஆபிஸில் வேலை பார்க்குறவங்க. ஒரு வேலையாக வந்தாங்க, அப்புறம் எங்க அன்பான வேண்டுகோளுக்கிணங்க கொஞ்ச நேரம் மீராவுக்கு சப்போர்டா இருக்காங்க” சக்தி எல்லோரையும் முந்திக்கொண்டு அவரது கேள்விக்கு பதில் சொல்லியிருந்தான்.
“அப்படியா?” சக்தி சொன்னதைக் கேட்டு ஆச்சரியம் அடைவது போல தன் மகன் கண்ணனைத் திரும்பிப் பார்த்த லீலா,
மறுபடியும் பூஜாவின் புறம் திரும்பி, “ஏன்மா உனக்கு சொந்த ஊர் திருச்சி தானே?” என்று கேட்க,
அவரை அதிர்ச்சியாக திரும்பிப் பார்த்தவள், “உங்களுக்கு என்னைத் தெரியுமா?” தன் அதிர்ச்சி மாறாமல் அவரைப் பார்த்து வினவினாள்.
“ஆமா, ஆமா. உன்னைத் தெரியாது இருக்குமாம்மா. அந்த கொலைகாரப் பாவி விஷ்வாவோட பொண்டாட்டி தானே நீ? அவன் எத்தனை பேரை அநியாயமாக கொன்று குவித்து இருப்பான். அவனெல்லாம் மனிதனே கிடையாது, மிருகம்.
என் தங்கச்சி ஒருத்தி திருச்சியில் தான் இருக்கா. நான் மாதத்திற்கு ஒரு தடவை அவ வீட்டுக்கு போய் வருவேன், அப்படி போய் வந்த நேரம் தான் எனக்கு அந்த ரவுடி விஷ்வாவைப் பற்றி தெரியும். அப்படி மாதத்திற்கு ஒரு தடவை போய் வந்த எனக்கே அந்த பாவியைப் பார்த்தால் குலை நடுங்கும், ஆனா நீ எப்படித்தான் அந்த பாவியைக் கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்தினியோ தெரியலை.
இருந்தாலும் நீ அதிர்ஷ்டசாலி தான்டிம்மா, அதுதான் அவன் கிட்ட இருந்து தப்பிச்சுட்ட. அந்த பாவி செத்துப் போயிட்டானாம்மே. ஊரே அவன் செத்துப் போன செய்தி கேட்டு திருவிழா மாதிரி கொண்டாடிச்சாம். இப்போ தான் அந்த திருச்சியில் கொஞ்சம் நிம்மதியாக இருக்கோம்னு என் தங்கச்சி சொன்னா” லீலா தன் பாட்டிற்கு தன் மனதில் பட்ட விடயங்களை எல்லாம் பேசிக் கொண்டு செல்ல சக்தியின் குடும்பத்தினர் அந்த விடயங்களைக் கேட்டு மொத்தமாக அதிர்ச்சியில் உறைந்து போக, மறுபுறம் பூஜா அவர் கூறிய வார்த்தைகளை எல்லாம் கேட்டு மொத்தமாக தனக்குள் நொறுங்கிப் போனவளாக நின்று கொண்டிருந்தாள்.
தங்கள் யாருக்கும் இதுவரை பூஜாவின் வாழ்க்கை பற்றி தெரிந்து இருக்கவில்லை என்பதனால் என்னவோ லீலா சொன்ன விடயங்களை எல்லாம் கேட்டு சக்தியின் குடும்பத்தினர் ஒருவித அதிர்ச்சியான மனநிலையுடன் பூஜாவைத் திரும்பிப் பார்க்க, அவளோ அவர் கூறிய வார்த்தைகளை எல்லாம் தனக்குள் மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்த்து சிலையென உறைந்து போய் நின்றாள்.
பூஜாவின் அதிர்ச்சியான தோற்றத்தைப் பார்த்து மனம் கனக்க அவளது தோளில் தன் கையை வைத்த மீரா அவளது கலங்கிப் போன கண்களைத் துடைத்து விடப் பார்க்க, பூஜாவோ அங்கேயிருந்த அத்தனை பேரின் பார்வையும் தன் மேல் இருப்பதை உணர்ந்தவளாக தன் கண்களில் இருந்து கண்ணீர் துளிகள் சிந்துவதற்குள் அங்கிருந்து சென்று விட வேண்டும் என்று எண்ணிக் கொண்டு வேகமாக அங்கிருந்து வெளியேறச் சென்றாள்.
பூஜாவின் கலங்கிப் போன தோற்றத்தைப் பார்த்து தன் மனதிற்குள் வெகுவாக கவலை கொண்டிருந்த சக்தி அதற்கு மேலும் அவளை விட்டு விலகி நிற்க முடியாமல், யார் என்ன நினைத்தாலும் பரவாயில்லை என்ற முடிவோடு அவளைப் பின் தொடர்ந்து சென்றான்…..
**********
விழிமூடும் போதும் உன்னை பிரியாமல் நான் இருப்பேன்
கனவுக்குள் காவல் இருப்பேன்…
நான் என்றால் நானே இல்லை நீ தானே நானாய் ஆனேன்…
நீ அழுதால் நான் துடிப்பேன்
உனக்கென இருப்பேன்…உயிரையும் கொடுப்பேன்….
உன்னை நான் பிரிந்தால்
உனக்கு முன் இறப்பேன்
**********