இதயம் – 13

இதயம் – 13
காலை விடியல் எப்போதும் போல உற்சாகமாக எல்லோரையும் தட்டி எழுப்ப, என்றுமில்லாத உற்சாகமான மனநிலையுடன் சக்தியும் தன் தூக்கம் கலைந்து எழுந்து அமர்ந்தான்.
நேற்று பலவிதமான மன மாற்றங்களைத் தரும் நிகழ்வுகள் எல்லாம் நடந்து முடிந்திருந்தாலும் பூஜாவைப் பற்றி மீரா சொன்ன விடயங்கள் மாத்திரம் அவன் மனதிற்குள் சுகமான நினைவுகளாய் பதிந்து போய் இருந்தது.
அந்த உற்சாகமான மனநிலையுடன் குளித்து தயாராகி வந்தவன் அவளைக் காணப் போகும் ஆவலுடன் அலுவலகம் நோக்கிப் புறப்பட்டுச் செல்ல, மறுபுறம் பூஜா சக்தியை இனி வரும் நாட்களில் எப்படி எதிர்கொள்வது என்ற யோசனையுடனேயே அலுவலகம் செல்லத் தயாராகிக் கொண்டு நின்றாள்.
நேற்று தானிருந்த மனக்குழப்பத்தில் அவனிடம் என்ன பேசினோம் என்று கூட அவளுக்கு சரியாக நினைவில் இருக்கவில்லை.
மாறாக தன் மனக்குமுறலைப் போக்க அவன் மேலேயே தான் சாய்ந்து நின்ற நிலை தான் அவள் கண்கள் இரண்டிலும் அச்சிட்டாற் போல பதிந்து போய் இருந்தது.
தன் மனவோட்டத்தை எப்படியாவது மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடு தன் மனதை கட்டுப்படுத்திக் கொண்டவள் இனி அந்த சம்பவத்தைப் பற்றி நினைக்கவே கூடாது என்றெண்ணியபடி அலுவலகம் நோக்கிப் புறப்பட்டுச் செல்ல, அவள் எடுத்த சபதங்களும், அவள் தனக்குள்ளேயே ஏற்படுத்திக் கொண்ட வரைமுறைகளும் சக்தியை நேரில் காணும் வரை தான் நீடித்திருந்தது.
தனக்கென ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில் அமர்ந்து தன் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்த பூஜா அவளை சக்தி கடந்து செல்லும் போது எந்தவித தயக்கமும் இல்லாமல் இருக்க வேண்டும் என்று தனக்குள் மீண்டும் மீண்டும் கூறிக் கொண்டிருந்தாலும் அவன் அவளைக் கடந்து செல்லும் போது அவள் இதயத்துடிப்பு வழக்கத்திற்கு மாறாக அதிகரிக்க, அவள் பார்வையோ சக்தியை நேர் கொண்டு பார்க்க முடியாமல் அங்குமிங்கும் அலைபாய்ந்த வண்ணம் இருந்தது.
சக்திக்கு அவளது இந்த புதிய, வித்தியாசமான நடவடிக்கைகளைப் பார்த்து ஒருபுறம் ஆச்சரியமாக இருந்தாலும், மறுபுறம் மீரா சொன்ன விடயங்கள் எல்லாம் நினைவுக்கு வந்து அவனுக்குள் ஏதேதோ மாற்றங்களை ஏற்படுத்துவது போல இருந்தது.
இருந்தாலும் தன் மனநிலையையும், தன் ஆசையையும் எக்காரணத்தைக் கொண்டும் பூஜாவின் மீது கட்டாயப்படுத்தி திணித்து விடக்கூடாது என்கிற முடிவில் உறுதியாக இருந்தவன் தற்காலிகமாக தன் சிந்தனைகளை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு தன் வேலையைக் கவனிக்கத் தொடங்கியிருந்தான்.
அவனது அறைக்கு வெளியே நேர் எதிராக இருந்த கேபினில் அமர்ந்திருந்த பூஜாவின் பார்வை அடிக்கடி அவனது அறையையே நோட்டம் விட்டுக் கொண்டிருக்க, அவளுக்கு எதிரே அமர்ந்திருந்த சுலோச்சனா சிறு புன்னகையுடன் அவளின் அருகில் சென்று, “என்ன ஆச்சு பூஜா மேடம்? நானும் காலையில் வந்ததில் இருந்து பார்க்கிறேன், உன் கவனமும் இங்கே இல்லை, உன் பார்வையும் இங்கே இல்லையே. என்ன சங்கதி?” அவளைப் பார்த்து கண்ணடித்தவாறே கேட்க,
சட்டென்று தன் முகத்தை இயல்பாக இருப்பது போல வைத்துக் கொண்டவள், “நீங்…நீங்க என்ன கேட்குறீங்க? எனக்குப் புரியல. நான்… நான் நல்லாத்தான் இருக்கேன்” என்றவாறே தன் பார்வையை தாழ்த்திக் கொண்டு தன் முன்னால் இருந்த பைலை எடுத்துப் பார்க்கத் தொடங்கினாள்.
“இவ்வளவு நேரம் நான் ஏதோ குத்துமதிப்பாக தான் சந்தேகப் பட்டேன், ஆனா இப்போ உறுதியாகி விட்டது. ஏதோ இருக்கு. என்ன விஷயம் பூஜா?”
“ஐயோ! அக்கா. உண்மையாகவே எதுவும் இல்லை க்கா. நான் எப்போதும் போல தான் இருக்கேன்”
“அப்போ நீ எந்த குழப்பமும், தடுமாற்றமும் இல்லாமல் தான் இருக்க. அப்படித்தானே?”
“ஆமா க்கா. நான் தான் சொல்லுறேனே”
“அப்போ எதற்கு பூஜா போன மாதம் கிளியர் பண்ண பைலை மறுபடியும் எடுத்துப் பார்த்துட்டு இருக்க? அதுவும் எல்லாம் கரெக்ஷன் பண்ணி இனி தேவையில்லைன்னு அங்கே கப்போர்டில் அடுக்கி வைத்த பைலை மறுபடியும் பார்க்கிற. என்னதான் ஆச்சு?” சுலோச்சனாவின் கேள்வியில் சட்டென்று தன் கையிலிருந்த பைலை நன்றாக கவனித்துப் பார்த்த பூஜா,
‘ஐயோ! அவசரத்தில் கைக்கு வந்த பைலை அங்கே இருந்து எடுத்துட்டு வந்து இப்படி சிக்கிட்டேனே. இப்போ என்ன பண்ணுறது? ஏதாவது சொல்லி சமாளிப்போம்’ எனத் தனக்குள்ளேயே பேசிக் கொண்டு சுலோச்சனாவை நிமிர்ந்து பார்த்தாள்.
“அது வந்துக்கா இது ஏற்கனவே கிளியர் பண்ண பைல் தான். இப்போ ஒரு கணக்கு சரி பண்ணும் போது தேவைப்பட்டது அதுதான் எடுத்துப் பார்த்துட்டு இருக்கேன். வேறு ஒண்ணும் இல்லை” பூஜா எப்படியாவது பேசி சமாளித்து அவரை அங்கிருந்து அனுப்பி விட வேண்டும் என்ற எண்ணத்தோடு கூற,
அவளை நம்பாதது போல பார்த்துக் கொண்டு நின்ற சுலோச்சனா, “ஏதோ சொல்லுற, ஆனா நீ வழக்கம் போல இல்லை, அது மட்டும் நான் அடிச்சு சொல்லுவேன்” என்று விட்டு அங்கிருந்து செல்ல எண்ணி திரும்பி ஒரு அடி எடுத்து வைத்து விட்டு,
பின்னர் மறுபடியும் பூஜாவின் முன்னால் வந்து, “ஒருவேளை ஏதாவது விஷேசமா?” என்று கேட்க, அவளோ தன் தலையில் அடித்துக் கொண்டு அவரை நிமிர்ந்து பார்த்தாள்.
“ஏன் க்கா, ஏன்? எனக்கு எல்லாம் என்ன விஷேசம் வரப் போகுது? அதுதான் எல்லாமே முடிந்து போயிடுச்சே, இனி என்ன விஷேசம் என் வாழ்க்கையில் வரப்போகுது?” பூஜா விரக்தியாகப் புன்னகைத்த படியே அவரைப் பார்த்து வினவ,
அவளது தலையில் செல்லமாக தட்டிய சுலோச்சனா, “என்ன ஆச்சுன்னு இப்படி எல்லாம் பேசுற? ஏதோ எல்லாம் வாழ்ந்து முடித்துட்டு நாளைக்கோ, இன்னைக்கோ போகப்போறேன்னு சொல்லுற மாதிரி பேசுற. ஏன் இந்த வயதில் நீ இப்படி எல்லாம் தான் இருக்கணும்னு ஏதாவது சட்டம் இருக்கா என்ன? நான் உன் கிட்ட ஒரு விடயம் ஓபனாக கேட்கிறேன் பதில் சொல்லு. நீ ஏன் உன் வாழ்க்கையில் அடுத்த கட்டத்துக்கு போக கூடாது பூஜா?” என்று கேட்க, பூஜாவோ அவரைப் பார்த்து மறுப்பாக தலையசைத்தாள்.
“இதெல்லாம் வீண் பேச்சுக்கா. நீங்க உங்க நேரத்தையும், சக்தி….”
“என்னம்மா? ஏதோ சொல்ல வந்துட்டு பாதியில் நிறுத்திட்ட?”
“ஆஹ், அது வந்து அது என்னன்னா நீங்க உங்க நேரத்தையும், சக்… க்கும், சக்தியையும் வீணடிக்காமல் ஏதாவது பயனுள்ள வேலை இருந்தால் பாருங்கன்னு சொல்ல வந்தேன்” என்று விட்டு தன் இருக்கையில் இருந்து எழுந்து கொண்ட பூஜா,
“நான் ரெஸ்ட் ரூம் போயிட்டு வர்றேன் க்கா” என்றவாறே ஓட்டமும் நடையுமாக அந்த இடத்தை விட்டு நகர்ந்து செல்லத் தொடங்கினாள்.
சக்தியின் அலுவலகத்தில் வேலைக்கு இணைந்த நாள் முதல் இன்று வரை பூஜாவுடன் பல மணிநேரங்கள் செலவிட்டிருந்த சுலோச்சனா அவளது இந்த புதிய வித்தியாசமான நடவடிக்கைகளை எல்லாம் பார்த்து சிறிது குழப்பம் கொண்டவராக தன் இடத்தில் வந்து அமர்ந்து கொள்ள, மறுபுறம் பூஜா ஓய்வறைக் கதவை சாத்தி தாழ் போட்டு விட்டு தன் கண்களை மூடி அந்த கதவில் தன் தலையை பின்புறமாக சாய்த்தவாறு நின்று கொண்டிருந்தாள்.
“எனக்கு என்ன ஆச்சு? நான் ஏன் சக்தியைப் பார்க்கும் போதெல்லாம் இவ்வளவு பதட்டம் அடையணும்? அவரைப் பார்க்கும் நேரத்தில் பதட்டம் வந்தாலும் பரவாயில்லை, அவரோட பேரை சொல்லும் போதே எனக்கு பதட்டம் ஆகிறதே. இதற்கு எல்லாம் என்ன காரணம்? இல்லை, இல்லை. அது என்ன காரணமாக வேணும்னாலும் இருக்கட்டும், அதைப் பற்றி எல்லாம் யோசிக்க வேண்டாம். இப்போ நான் நடந்து கொள்ளும் விதம் எல்லாம் கொஞ்சம் கூட சரியில்லை. சக்தி எனக்கு வாழ்க்கையை வாழ ஒரு புதிய வழியைக் காண்பித்து தந்து இருக்காரு, அதற்கு எப்போதும் நன்றியோடு இருந்தால் போதும். விஷ்வா இப்போ என் கூட இல்லைன்னாலும் அவனோட நினைவுகள் கடைசி வரை என் கூட இருக்கும், ஷோ பூஜா நீ வேறு எதைப்பற்றியும் யோசிக்காதே, யோசிக்கவும் கூடாது” தனக்குத்தானே அறிவுறுத்திக் கொள்வது போல தன் முன்னால் இருந்த முகம் பார்க்கும் கண்ணாடியைப் பார்த்துக் கூறிக் கொண்டவள் அங்கே வாஷ்பேசினில் இருந்த பைப்பைத் திறந்து கை நிறைய நீரை அள்ளி எடுத்து தன் முகத்தில் அடித்துக் கொண்டாள்.
குளிர்ந்த நீர் முகத்தில் பட்டதும் உடலில் இருந்த சோர்வு எல்லாம் நீங்கியது போல இருக்கவே, சிறிது நேரம் ஆழ்ந்த மூச்சுக்களை எடுத்து விட்டு தன்னை நிதானப்படுத்திக் கொண்டவள் மீண்டும் தன் இடத்தில் சென்று அமர்ந்து கொண்டாள்.
அவளது மனம் சிறிது தெளிவு கொண்டதால் என்னவோ இப்போது அவளது பார்வை அடிக்கடி சக்தி இருந்த புறமாக நகரவில்லை, மாறாக அவளது வேலைகளிலேயே நிலை கொண்டிருந்தது.
மதிய உணவு நேரம் வந்ததும் எல்லோரும் தங்கள் மதிய உணவை எடுத்துக் கொள்வதற்காக வெளியேறி சென்று விட, தான் முடிக்க வேண்டிய வேலைகள் ஒரு சில எஞ்சியிருக்க, அதை முடித்து விட்டு சாப்பிட செல்லலாம் என்று எண்ணியபடி பூஜா தன் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருக்க, தன் கேபினில் அமர்ந்திருந்தவாறே அவளைப் பார்த்துக் கொண்டிருந்த சக்தி அவள் சாப்பிட செல்லாது இருக்கவே சிறிது குழப்பம் கொண்டவனாக அவளை நோக்கி நடந்து சென்றான்.
“ஹாய் பூஜா” தன் முன்னால் கேட்ட குரலில் திடுக்கிட்டு போய் நிமிர்ந்து பார்த்தவள்,
அங்கே புன்னகை முகமாக நின்று கொண்டிருந்த சக்தியைப் பார்த்ததும், “ஹலோ…ஹலோ சக்தி சார்” என்றவாறே தன் இருக்கையில் இருந்து எழுந்து நின்றாள்.
“பரவாயில்லை பூஜா, நீங்க உட்காருங்க. ஆமா எல்லோரும் லஞ்ச் பிரேக் போயிட்டாங்க, நீங்க போகலையா?”
“இல்லை சார், ஒரு சின்ன வேலை இருக்கு, அதை முடித்து விட்டு போகலாம்னு இருந்தேன்”
“ஓஹ், ஓகே நீங்க வேலையை முடிங்க. அப்புறம் நேற்று வீட்டில் நடந்த விடயங்களுக்காக மறுபடியும் ரொம்ப ரொம்ப சாரி. நீங்க லீலா ஆன்டி சொன்ன எதையும் தப்பாக எடுத்துக் கொள்ள வேண்டாம். அவங்க ஏதோ தெரியாமல் அப்படி எல்லாம் பேசிட்டாங்க. அவங்க சார்பாக நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன். ரியலி சாரி பூஜா” என்று கூறியபடியே சக்தி சிறிது தயக்கத்துடன் பூஜாவைப் பார்க்க,
அவனைப் பார்த்து புன்னகைத்தபடியே மறுப்பாக தலையசைத்தவள், “ஐயோ சார், அதை எல்லாம் நான் நேற்றே மறந்து விட்டேன். நீங்க எதுவும் யோசிக்க வேண்டாம். அதை எல்லாம் நான் அப்போவே மறந்துட்டேன். நீங்க வீணாக அதையே நினைத்து ஃபீல் பண்ண வேண்டாம். நேற்று நடந்து முடிந்தது அப்போவே முடிஞ்சாச்சு, நானும் மறந்தாச்சு” எனவும்,
அவனோ, “எல்லா விடயங்களையும் மறந்தாச்சா?” கேள்வியாக அவளைப் பார்த்து புருவம் உயர்த்தினான்.
அவனது கேள்வியின் அர்த்தம் அவளுக்கு முழுமையாக புரியாமல் இருக்கவே, குழப்பத்துடன் அவனது முகத்தையே பார்த்துக் கொண்டு நின்றவள் சிறிது நேரம் கழித்தே அவன் எதைப்பற்றிக் கேட்கிறான் என்பதைப் புரிந்து கொண்டாள்.
எதை தான் மறக்க வேண்டும் என்று நினைத்து இருந்தோமோ அதையே அவன் கேட்கிறானே என்கிற பதட்டத்துடன் தன் பார்வையை வேறு புறமாக திருப்பிக் கொண்டவள் பின்னர் மறுபடியும் அவனின் புறம் திரும்பி, “ஆமா சார், எல்லாவற்றையும் மறந்து விட்டேன். அங்கே நடந்த எதுவும் அவ்வளவு முக்கியமான விடயங்கள் இல்லையே” என்று கூற, அவளது கூற்றில் சக்தியின் முகம் சட்டென்று வாடிப் போனது.
அவனது முக வாட்டம் அவளது மனதைப் பாதித்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் சிறு புன்னகையுடன் அவனைப் பார்த்துக் கொண்டு நின்றவள், “சார், நான் இந்த வேலையை முடித்து விட்டு சாப்பிட போகலாமா? கீழே சுலோச்சனா அக்கா எனக்காக காத்துட்டு இருப்பாங்க” என்று கூறவும், அவளைப் பார்த்து சரியென்பது போல தலையசைத்தவன் வேகமாக அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்றான்.
‘அங்கே நடந்த எதுவும் அவ்வளவு முக்கியமான விடயங்கள் இல்லையே’ என்ற பூஜாவின் கூற்று மீண்டும் மீண்டும் சக்தியின் காதில் எதிரொலிப்பது போல இருக்க, தன் காரில் ஏறி அமர்ந்து கொண்டு, தன் காதுகள் இரண்டையும் இறுக மூடிக் கொண்டவன் தன் கண்களையும் இறுக மூடிக் கொண்டபடி தான் அமர்ந்திருந்த இருக்கையில் சாய்ந்து அமர்ந்து கொண்டான்.
“ஏன் பூஜா அப்படி சொன்ன, ஏன்? நேற்று நடந்த எந்த ஒரு விடயமுமே உனக்கு முக்கியமானதாக தெரியலையா? லீலா ஆன்டி பேசியது தேவையில்லாத விடயங்கள் தான் அதை நான் ஏற்றுக் கொள்கிறேன், ஆனா, ஆனா அதற்கு அப்புறம் நடந்த விடயம், அதுவும் தேவையில்லாத விடயமாக போய் விட்டதா பூஜா? அப்படின்னா நீ உன் கவலையை என் கிட்ட பகிர்ந்து கொள்ள நினைத்து அப்போ அப்படி நடந்து கொள்ளவில்லையா? உன்னையே அறியாமல் தான் அப்படி நடந்து கொண்டாயா? நான் தான் தேவையில்லாத கற்பனை எல்லாம் பண்ணிட்டேனா? அப்படின்னா, அப்படின்னா உன் மனதில் என் மீது எந்த ஒரு எண்ணமும் இல்லையா பூஜா? நான் தான் வீணாக மறுபடியும் மறுபடியும் ஆசையை வளர்த்து ஏமாந்து போகிறேனா?” இன்று காலை வரை எந்த விடயத்தை நினைத்து இந்த உலகிலேயே அதிக சந்தோஷம் கொண்டவன் போல சக்தி தன்னை நினைத்துக் கொண்டிருந்தானோ இப்போது அதே விடயம் அவன் மனதை சுக்கல் சுக்கலாக நொறுங்கிப் போகச் செய்திருந்தது.
பல வருடங்கள் கழித்து அவனுக்கு கிடைத்திருந்த அந்த சிறு சந்தோஷம் கூட அவனிடம் ஒரு நாள் முழுமையாக நிலைத்து நிற்கவில்லை.
அவன் மனதிற்குள் பரவிய ஏமாற்றத்தின் வலி அவன் முகத்தில் அப்பட்டமாகத் தெரிய, இந்த நிலையில் மீண்டும் தனது அலுவலகத்திற்குள் செல்ல முடியாது என்று நினைத்துக் கொண்டவன் தன் காரை எடுத்துக் கொண்டு தன் கை போன போக்கில் செலுத்த தொடங்கினான்.
அவன் பார்வை திரும்பும் பக்கமெல்லாம் பூஜாவின் முகமே தெரிய, அதற்கு மேலும் தன்னால் வண்டியை நிதானமாக ஓட்ட முடியாது என்று உணர்ந்து கொண்டவன் தன் காரை அந்த சாலையின் ஒரு ஓரமாக நிறுத்தி விட்டு கார் ஸ்டியரிங்கில் தலை கவிழ்ந்து படுத்துக் கொள்ள, மறுபுறம் பூஜா தன் முன்னால் இருந்த உணவை வெறித்துப் பார்த்தபடியே அதை அளைந்து கொண்டு அமர்ந்திருந்தாள்.
சாப்பிட வந்து அமர்ந்து வெகு நேரமாகியும் பூஜா ஒரு பருக்கை உணவைக் கூட உண்ணவில்லை என்பதை உணர்ந்து கொண்ட சுலோச்சனா அவளது தோளில் தட்டி, “என்ன ஆச்சு பூஜா உனக்கு? காலையில் இருந்து நீ ஆளே சரி இல்லை, ஆபிஸில் என்னடான்னா பழைய பைலை எடுத்து மறுபடியும் கணக்குப் பார்க்கிற, இங்கே என்னடான்னா வைத்த சாப்பாட்டை சாப்பிடாமல் ஏதோ யோசனையில் மூழ்கிப் போய் இருக்க? அப்படி இந்த மூளையில் என்ன தான் ஓடுது?” என்று கேட்கவும்,
கண்கள் கலங்க அவளை நிமிர்ந்து பார்த்தவள், “எனக்கு என் அம்மா, அப்பாவைப் பார்க்கணும் போல இருக்கு க்கா” என்றவாறே கண்ணீர்த் துளிகள் சிந்த, சுலோச்சனா வேகமாக அவளைத் தன் தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டாள்.
“ஹேய் பூஜா, என்னடா ஆச்சு? ஏதாவது பிரச்சினையா?” சுலோச்சனாவின் கேள்வியில் தன் சிறிது நேரம் அமைதியாக இருந்தவள் பின்னர் நேற்று சக்தியின் வீட்டில் வைத்து லீலா பேசிய விடயங்களை மாத்திரம் குறிப்பிட்டுக் கூற,
அவளது தலையை ஆதரவாக வருடிக் கொடுத்தவள், “ஊர்க் கதை பேச இங்கே பலபேர் எப்போடான்னு காத்துட்டு இருப்பாங்க பூஜா. இதை எல்லாம் நீ கணக்கிலேயே எடுக்கத் தேவையில்லை. முதல்ல ஒழுங்காக சாப்பிடு. எதையும் யோசிக்காதே. உனக்கு ஆறுதலாக இந்த அக்கா இருக்கேன், இல்லையா? சாப்பிடு” என்றவாறே ஒரு பிடி உணவை எடுத்து அவளது வாயில் வைத்து விட, பூஜா கண்கள் கலங்க அவள் தோளில் மீண்டும் சாய்ந்து கொண்டாள்.
சிறிது நேரம் ஏதேதோ கதை பேசி பூஜாவின் மனதை வேறு புறமாக திசை திருப்ப முயன்ற சுலோச்சனா அவள் இயல்பாக இருப்பதைப் பார்த்த பின்னரே சிறிது நிம்மதியாக உணர்ந்தாள்.
இருவரும் தங்கள் இடத்தில் வந்து அமர்ந்து கொண்டு தங்கள் வேலைகளைக் கவனிக்கத் தொடங்க, எப்போதும் போல தன் வேலைகளைப் பார்த்துக் கொண்டே தற்செயலாக சக்தியின் கேபின் புறமாக திரும்பிய பூஜா அங்கே அவன் இல்லாததைக் கண்டு சிறிது குழப்பம் அடைந்து போனாள்.
தான் பார்த்துக் கொண்டிருந்த பைலை அவசர அவசரமாக செய்து முடித்து விட்டு அவனது கேபினை நோக்கிச் சென்றவள் சுற்றிலும் தன் பார்வையை சுழல விட, அந்த அலுவலகத்தின் எந்த ஒரு பக்கத்திலும் அவனை அவளால் கண்டு கொள்ளவே முடியவில்லை.
‘சக்தி எங்கே போய் இருப்பாங்க? நான் சொன்ன விடயங்கள் ஏதாவது அவரை காயப்படுத்தி இருக்குமோ? அதனால் தான் கிளம்பி போயிட்டாரோ?’ தான் அவனிடம் சொன்ன விடயங்களை மீண்டும் தனக்குள் மீட்டுப் பார்த்தபடியே தன் இடத்தை நோக்கி நகர்ந்து சென்றவள் அந்த வழியாக வந்த சக்தியின் பி.ஏ செல்வத்தைப் பார்த்ததும் அவரை நோக்கி நடந்து சென்று, “அண்ணா, செல்வம் அண்ணா. சக்தி சார் எங்கே? அவங்க கேபினில் காணோமே?” என்று கேட்க,
அவரோ, “ஏன் பூஜா, ஏதாவது முக்கியமான விடயம் பேசணுமா?” என்று கேட்டார்.
“ஆஹ், அது வந்து…அது இந்த பைலை இன்னைக்கு முடித்து தர சொல்லி சார் கேட்டு இருந்தாங்க. அது தான் அதைக் கொடுக்கப் போனேன், அவரைக் காணோம்”
“ஓஹ், என்னன்னு தெரியலை, சார் இன்னைக்கு கொஞ்சம் டல்லா இருந்தாங்க, அதோடு இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தலை வலிக்கிற மாதிரி இருக்கு, நான் வீட்டுக்கு போறேன், ஏதாவது முக்கியமான விடயமாக இருந்தால் மட்டும் எனக்கு கால் பண்ணுங்க, இல்லைன்னா நாளைக்கு நான் ஆபிஸ் வந்த பிறகு பேசிக் கொள்ளலாம்ன்னு சொல்லிட்டு கிளம்பி போயிட்டாங்க. ஒருவேளை இது ரொம்ப முக்கியமான பைல்ன்னா நான் சாருக்கு கால் பண்ணி சொல்லவா பூஜா?” செல்வத்தின் கேள்விக்கு அவசரமாக மறுப்பாக தலையசைத்தவள்,
“இல்லைண்ணா. இது ஒண்ணும் அவ்வளவு முக்கியமான விடயம் இல்லை, நாளைக்கு சார் வந்த பிறகும் பார்த்துக் கொள்ளலாம். பரவாயில்லை” சிறு புன்னகையுடன் அவரைப் பார்த்து கூறி விட்டு தன் இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டாள்.
சிறிது நேரத்திற்கு முன்பு சுலோச்சனாவுடன் பேசும் போதிருந்த இயல்பான மனநிலை இப்போது காற்றோடு காற்றாகிப் போனது போல இருக்க, மீதமிருந்த வேலைகளை எல்லாம் கடமைக்கென செய்து முடித்தவள் கடிகாரம் சரியாக ஐந்து மணியைக் காட்ட, தன் கைப்பையை எடுத்துக் கொண்டு அவசர அவசரமாக அங்கிருந்து வெளியேறி சென்றாள்.
வீதியில் அவள் நடந்து சென்று கொண்டிருந்த போது கூட சக்தியின் முகமே அவளுக்கு மீண்டும் மீண்டும் நினைவு வந்து கொண்டிருந்தது.
“எனக்கு என்ன தான் ஆச்சு? எதற்காக நாளும், பொழுதும் நான் சக்தியைப் பற்றியே யோசிக்கணும்? அவருக்கும், எனக்கும் அப்படி என்ன சம்பந்தம்? நான் கஷ்டத்தில் இருக்கும் போது எனக்கு அவரு உதவி பண்ணாரு, அவ்வளவு தான். அப்படியிருந்தும் எனக்கு ஏன் அவர் ஞாபகம் அடிக்கடி வந்து கொண்டே இருக்கு? இது சரியில்லை, கொஞ்சம் கூட சரியில்லை” தன் மனதிற்குள் இருக்கும் குழப்பத்தைப் பற்றி எண்ணியபடியே தன்னைத் தானே கடிந்து கொண்டவள் அவள் சென்று கொண்டிருந்த வழியில் ஒரு கோவில் இருப்பதைப் பார்த்து விட்டு சிறிது நேரம் அங்கே சென்று விட்டு செல்லலாம் என்று எண்ணியபடி அந்த கோவிலை நோக்கி நடந்து சென்றாள்.
கோவில் சந்நிதானத்தில் வந்து நின்று தன் மனதில் இருக்கும் குழப்பம், கவலை என எல்லாவற்றையும் அந்த கடவுளிடம் சொல்வதாக நினைத்து சொல்லி முடித்தவள் சிறிது நேரம் பிரகாரத்தை சுற்றி வரலாம் என்று நினைத்து விட்டு கால் போன போக்கில் மெல்ல மெல்ல நடக்கத் தொடங்கினாள்.
பூஜா அந்த கோவிலுக்குள் நுழைந்த கணம் முதல் இப்போது அவள் பிரகாரத்தை சுற்றி வரும் வரை இரண்டு நபர்கள் அவள் அறியாமல் அவளைப் பின் தொடர்ந்து வந்தது மட்டுமின்றி, அவளை அவளறியாமல் புகைப்படம் எடுத்து விட்டு வேகமாக அந்த கோவிலை விட்டு வெளியேறி சென்று ஒரு தொலைபேசி எண்ணிற்கு அழைப்பை மேற்கொண்டனர்.
அவர்கள் இருவரது பொறுமையை சோதிக்காமல் சிறிது நொடிகளிலேயே மறுபுறம் அழைப்பு எடுக்கப்பட்டு விட, அந்த இரண்டு நபர்களில் ஒருவன், “அண்ணே, ஹலோ அண்ணே. அந்த பொண்ணு, அவ தான் அந்த விஷ்வாவோட பொண்டாட்டி கிடைச்சிட்டா அண்ணே. இங்கே கோயம்புத்தூரில் தான் இருக்கா. என் இரண்டு கண்ணால் பார்த்தேன் அண்ணே” என்று கூற,
மறுமுனையில் இருந்த நபரோ, “சபாஷ் டா ராஜா, சபாஷ். இத்தனை மாசமா நம்மளை அவ ரொம்ப அலைய விட்டுட்டா. இந்த முறை அவளை தவற விட்டு விடவே கூடாது. நீ அவளை விடாமல் ஃபாலோ பண்ணு. அவ எங்கே போறா? எங்கே தங்கி இருக்கா? எல்லாத் தகவல்களையும் சேர்த்து வை. இன்னும் இரண்டு நாளில் நான் சென்னையில் இருந்து கிளம்பி வந்துடுவேன். நாளை மறுநாள் கோயம்புத்தூருக்கு வந்ததும் முதல் வேலை அவ கதையை முடிக்கிறது தான். அந்த விஷ்வாவோட சம்பந்தப்பட்ட யாரையும் நான் விட்டு வைக்க மாட்டேன்” என்று விட்டு அழைப்பைத் துண்டித்திருக்க, அந்த இரண்டு நபர்களும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டே பூஜாவைப் பின் தொடர்ந்து செல்லும் தங்கள் பணியை செவ்வனே ஆரம்பித்து இருந்தனர்……
**********
இதயத்திலே ஒரு வலி
இமைகளிலே பலதுளி
நீ சென்றால்கூட காதல் சுகமாகும்
நீ பிரிந்தால் உலகம் உருகும் மெழுகாகும்
**********