இதயம் – 14

eiHJN6N67051-94a345a0

இதயம் – 14

***** லேடீஸ் ஹாஸ்டல் – கோயம்புத்தூர்

தான் தங்கியிருக்கும் ஹாஸ்டல் வாயிலை வந்து சேர்ந்த பூஜா தன் அறை சாவியை எடுக்க எண்ணி தன் கைப்பையைத் துழாவ, அவளது கையினுள் சிக்கிய சாவி அவள் கையை வெளியே எடுக்கும் போது தவறுதலாக கீழே விழுந்து விட, “இது வேற” சிறு சலிப்புடன் அந்த சாவியை எடுக்க எண்ணி கீழே குனிந்தவள் சற்று தள்ளி ஒரு மரத்தின் கீழ் நின்று கொண்டிருந்த இரண்டு நபர்கள் அவளையேப் பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்து சட்டென்று நிமிர்ந்து அவர்கள் நின்று கொண்டிருந்த புறமாக திரும்பிப் பார்த்தாள்.

பூஜாவின் பார்வை தங்கள் புறம் திரும்பியதைக் கண்டு கொண்ட அந்த இரு நபர்களும் அவசரமாக தங்கள் பார்வையை அவளை விட்டு நகர்த்தி விட்டு தங்களுக்குள் ஏதோ தீவிரமாக பேசுவது போல பாவனை செய்து கொண்டிருக்க, சிறிது நேரம் அவர்கள் இருவரையுமே பார்த்துக் கொண்டு நின்றவள் அவர்கள் இருவரும் வெகு மும்முரமாக எதைப்பற்றியோ பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து விட்டு, “அவங்க சும்மா அங்கே நின்று பேசிட்டு இருக்காங்க. நான் தான் தேவையில்லாமல் வீணாக யோசிச்சுட்டு இருக்கேன் போல. முதல்ல இந்த மூளைக்கு ஒரு சிகிச்சை பண்ணணும். எப்போ பாரு தேவையில்லாத விடயங்களாகவே யோசித்து நம்மளை டென்ஷன் ஆக்கிடுது” தன் தலையில் தட்டியபடியே உள்ளே சென்று விட, அவள் ஹாஸ்டலினுள் நுழைந்து கொண்டதை உறுதிப்படுத்தியவர்களாக அந்த இரண்டு நபர்களும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

தன் அறைக்குள் வந்து சேர்ந்த பூஜா அங்கிருந்த சாய்வு நாற்காலியில் சிறிது நேரம் கண் மூடி அமர்ந்திருக்க, அப்போதுதான் அவளுக்கு சிறிது மனதளவிலும், உடலளவிலும் உற்சாகம் வந்தது போல இருந்தது.

நேற்று சக்தியின் வீட்டிற்கு சென்று வந்ததில் இருந்து பல்வேறு யோசனைகளில் உழன்று கொண்டிருந்தவளுக்கு இன்று கடவுள் முன்னிலையில் தன் மனக்குமுறல்களை எல்லாம் ஒன்று விடாமல் ஒப்புவித்ததால் என்னவோ மனதிற்குள் வெகு நேரமாக அழுத்திக் கொண்டிருந்த பாரம் ஒன்று அவளை விட்டு அகன்று சென்றதைப் போல இருந்தது.

இனி எதைப்பற்றியும் தேவையின்றி யோசிக்க கூடாது என்று தன்னைத் தானே தேற்றிக் கொண்டபடி குளித்து உடை மாற்றி விட்டு வந்தவள் அந்த அறையின் மூலையில் வைக்கப்பட்டிருந்த ஒரு பெட்டியைத் திறக்க, அதற்குள் இறுதியாக விஷ்வாவின் நினைவுகளாக அவளிடம் ஒப்படைக்க பொருட்கள் அனைத்தும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.

கண்கள் கலங்க மெல்ல அந்த பொருட்களை எல்லாம் வருடிக் கொடுத்தவள் அதற்குள்ளிருந்த அவளினதும், விஷ்வாவினதும் பாதி எரிந்து போயிருந்த புகைப்படத்தை எடுத்துக் கொண்டு அந்த அறையின் பால்கனியில் சென்று அமர்ந்து கொண்டாள்.

“விஷ்வா, நீ இப்போ ரொம்ப அமைதியான ஒரு இடத்தில் இருப்ப இல்லையா? இப்படி ஒரு அமைதியான வாழ்க்கையை வாழணும்னு தானே என்கிட்ட அடிக்கடி சொல்லுவ. நாம இரண்டு பேரும் எப்போவும் ஒன்றாகவே இருக்கணும்னு சொல்லிட்டு இப்போ நீ மட்டும் அந்த நிம்மதியான இடத்திற்கு போயிட்டலே? ஒரேநாளில் எல்லாமே என்னை விட்டுப் போனாலும் அந்த கவலையை எல்லாம் மறப்பது போல ஒரு வாழ்க்கையை எனக்கு சக்தி ஏற்படுத்தி தந்து இருக்காரு. அவரு எப்படி நம்ம வாழ்க்கையில் வந்தாருன்னு இப்போ வரைக்கும் எனக்குத் தெரியலை, ஆனா அவரு வந்த பிறகு என் வாழ்க்கையே வேறு ஒரு பாதைக்கு போயிடுச்சு. நான் திருச்சியில் இருந்திருந்தால் கண்டிப்பாக இந்தளவிற்கு தைரியமாக இருந்திருக்க மாட்டேன்.
இப்போ எல்லாம் அடிக்கடி அம்மா, அப்பா ஞாபகம் வருது. அவங்களைப் பார்க்கணும் போல ஆசையாக இருக்கு, ஆனா என்னைப் பார்க்கக் கூட அவங்களுக்கு விருப்பம் இல்லையே. இத்தனை நாட்களாக நான் அவங்களை விட்டு வேறு ஊருக்கு வந்த பிறகும் என்னைப் பற்றி அவங்க நினைத்துக் கூட பார்க்கவில்லை போல இருக்கு.
எனக்கு அம்மா மடியில் தலை வைத்து தூங்கணும் போல இருக்கு விஷ்வா. அப்பா கையைப் பிடித்து கதை பேசிட்டே அம்மாவோட சின்ன சின்ன சேட்டை பண்ணுற அந்த நாட்களை எல்லாம் நான் ரொம்ப ரொம்ப மிஸ் பண்ணுறேன். அடுத்த வாரம் அம்மா, அப்பாவோட கல்யாண நாள் வருது. என்ன நடந்தாலும் சரி, அவங்க என்னை கழுத்தைப் பிடித்து வீட்டை விட்டு வெளியே அனுப்பினாலும் சரி நான் அவங்க இரண்டு பேரையும் நேரில் போய் பார்த்து விட்டு தான் வருவேன். அவங்களுக்கு வேணும்னா என் மேல் கோபம் இருக்கலாம், ஆனா எனக்கு அவங்க மேலே எப்போதும் அளவில்லாத பாசம் இருக்கு. அது எந்தக் காலத்திலும் மாறாது இல்லையா?” அந்த எரிந்து போயிருந்த புகைப்படத்தை வருடிக் கொடுத்தபடியே அங்கிருந்த சுவற்றில் சாய்ந்து அமர்ந்து கொண்ட பூஜா தன் கண்களை மூடி அமர்ந்திருந்த படியே அந்த புகைப்படத்தை தன்னோடு அணைத்துக் கொள்ள, சிறிது நேரத்தில் தூக்கம் வந்து அவளைத் தழுவிக் கொண்டது.

இங்கே பூஜா நிம்மதியாக தன் தூக்கத்தை தழுவியிருக்க, மறுபுறம் சக்தி தன் அறையின் பால்கனியில் போடப்பட்டிருந்த கயிற்று ஊஞ்சலில் அமர்ந்து கொண்டு நட்சத்திரங்கள் கொட்டிக் கிடந்த வானத்தை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தான்.

இன்று காலை தன் அலுவலகத்திற்கு கிளம்பி செல்லும் போது எத்தனை ஆசைகளுடனும், உற்சாகத்துடனும் அவன் புறப்பட்டுச் சென்றிருப்பான்.

அப்படி இருக்கும் போது பூஜா கூறிய, ‘அங்கே நடந்த எதுவும் அவ்வளவு முக்கியமான விடயங்கள் இல்லையே’ என்ற வார்த்தைகள் அவனை ஏனோ வெகுவாகப் பாதிக்கச் செய்வது போல இருந்தது.

அவள் ஒருவேளை லீலா கூறிய விடயங்களை மாத்திரம் அவ்வாறு குறிப்பிட்டுக் கூறியிருப்பாலோ என்று கூட அவன் மனம் சில சமயங்களில் யோசிக்காமல் இல்லை, ஆனால் தான் குறிப்பிட்டு அடிக்கோடிட்டு நடந்த விடயங்களைப் பற்றி கேட்ட பின்னரும் அவள் அவ்வாறு கூறியிருந்தாலே என்பது தான் அவனது கவலைக்குரிய பெரும் காரணம்.

ஐந்து வருடங்களுக்கு முன்பு தான் திருச்சி சென்றிருக்காவிட்டால், அப்படி சென்றிருந்தாலும் பூஜாவின் புறம் ஈர்க்கப்பட்டு இருக்காவிட்டால் இன்று இத்தனை தூரம் தான் கவலை கொள்ளத் தேவையில்லையே என்ற யோசனையுடன் தன் தலையை அழுந்தக் கோதிக் கொண்டவன் மெல்ல எழுந்து சென்று பால்கனிச் சுவற்றில் தன் இரு கைகளையும் ஊன்றிக் கொண்டு சுற்றியிருக்கும் இருளடர்ந்த சூழலைக் கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டு நின்றான்.

“ஏன் கடவுளே என்னை மட்டும் இப்படி வைத்து விளையாடுறீங்க? பூஜாவை மறுபடியும் ஏன் என் கண்ணில் காட்டுனீங்க? அவ அப்பா பூஜா இறந்து போயிட்டான்னு சொன்னதும் அப்படியே ஊருக்கு கிளம்பிப் போக எண்ணியிருந்த என் கண்ணில் ஏன் அவளைக் காட்டுனீங்க? அதற்கு அப்புறம் அவளை விட்டு விலகிப் போக நினைத்த போதும் அவ்வளவு பெரிய ஆபத்தான நிலைமையில் அவளை என் கண் முன்னால் மறுபடியும் நிற்க வைத்தீங்க. சரி, எல்லாம் ஏதாவது காரணத்திற்காகத் தான் இருக்கும்ன்னு நம்பி நான் என் மனதில் ஏதேதோ ஆசைகளை வளர்க்கும் போது அது எல்லாம் ஒண்ணுமே இல்லை என்பது போல அடுத்தடுத்த விடயங்கள் எல்லாம் நடக்கிறது. இதற்கு எல்லாம் என்ன முடிவு?
இப்படியே மனதிற்குள் இருக்கும் ஆசைகளை மறைத்து மறைத்து பூஜாவின் முன்னாடி சாதாரணமாக என்னால் நடிக்க முடியல. இதற்கு மேலேயும் இந்த கஷ்டத்தை என்னால் சமாளிக்க முடியல. நான் நாளைக்கே என் மனதில் என்ன இருக்குன்னு பூஜா கிட்ட வெளிப்படையாக பேசப் போகிறேன், அவ ஏத்துக்கிட்டா சந்தோஷமாக அவளை என் வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொள்ளுவேன். ஒருவேளை அவ முடியாது என்று சொன்னால் அவளை விட்டு நான் எப்போதும் விலகியே இருப்பேன், அவளோட நினைவுகள் மட்டும் எனக்குப் போதும்” நாளை விடியல் அவனுக்கு வழங்கக் காத்திருக்கும் அதிர்ச்சியைப் பற்றி அறியாதவனாக சக்தி தன் மனதிற்குள் ஏதேதோ திட்டங்கள் தீட்டிக் கொண்டிருக்க, அவன் நினைப்பது போல எல்லாம் இயல்பாக நடந்து விடுமா என்ன?

***************

இன்று எப்படியாவது பூஜாவிடம் தன் மனதிற்குள் இருக்கும் காதலைப் பற்றி சொல்லி விட வேண்டும் என்ற உறுதியான முடிவோடு தயாராகி வந்த சக்தி அவள் தன் காதலை ஏற்றுக் கொள்வாளா? மாட்டாளா? என்கிற பலத்த யோசனையுடன் தன் அலுவலகத்தை நோக்கிப் புறப்பட்டுச் சென்றான்.

வழமைக்கு மாறாக இன்று நேரம் ஆமை வேகத்தில் நகர்வது போல் இருக்க, தன் கடிகாரத்தைப் பார்ப்பதும் பூஜாவின் இருக்கையைப் பார்ப்பதுமாக தனது அறைக்குள் குறுக்கும், நெடுக்கும் நடந்து கொண்டிருந்தவன் தூரத்தில் பூஜா நடந்து வருவதைப் பார்த்ததும் அவளையே மெய் மறந்து நின்று பார்க்கலானான்.

சாம்பல் நிறத்தில் சிவப்பு நிறப் பூக்கள் வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருந்த காட்டன் சுடிதாரில் எப்போதும் போல எவ்விதமான ஒப்பனையுமின்றி நடந்து வந்து கொண்டிருந்தவளைப் பார்த்து அவனின் மனம் என்றும் போல இன்றும் ஆட்டம் காண ஆரம்பித்தது.

ஐந்து வருடங்களுக்கு முன்பு அவளை முதன்முதலாக பார்த்த போதும் சரி, இன்று அவளை ஒவ்வொரு நாளும் பார்க்கும் போதும் சரி அவனின் இதயம் அவளின் வசம் நித்தமும் தொலைந்து கொண்டே தான் இருந்தது.

இப்போதே அவளிடம் சென்று தன் காதலைக் கூறி விடலாமா என்று யோசித்தவன் தான் இருக்கும் சூழலைக் கருத்திற் கொண்டு இன்று அலுவலக வேலைகள் முடிந்து வீடு செல்வதற்குள் அவளைத் தனிமையில் சந்தித்து எப்படியாவது பேசி விட வேண்டும் என்று எண்ணியபடியே அதற்கான தகுந்த தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தான்.

வழமையாக சக்திக்கு அவனது அலுவலகத்தில் அத்தனை அதிகமான வேலைகள் இருந்தது இல்லை, வாரத்தில் ஒன்றிரண்டு நாட்கள் தான் அதிகமான வேலைகள் அவனைச் சூழ்ந்து கொண்டு அவனை ஒரு வழி செய்து விடும்.

அதேபோல இன்றும் பல வேலைகள் அவன் முன்னால் குவிந்து நிற்க, அந்த வேலைகளை எப்படியாவது முடித்து விட வேண்டும் என்று எண்ணியவன் மும்முரமாக அந்த வேலைகளை எல்லாம் பார்க்கத் தொடங்கியிருந்தான்.

அவன் தன் வேலைகளில் மூழ்கியிருந்த தருணம் காலை நகர்ந்து சென்றதற்கு எதிர்மாறாக நேரம் ஜெட் வேகத்தில் சென்றதை சக்தியால் உணரவே முடியவில்லை.

ஒருவழியாக பெரும்பாலான வேலைகள் எல்லாவற்றையும் முடித்து விட்டு தன் இருக்கையில் சாய்ந்து அமர்ந்து கொண்டவன் தன் கைக்கடிகாரத்தை திருப்பி பார்க்க, அதுவோ மணி ஐந்தைத் தாண்டி நகர்ந்து கொண்டிருந்தது.

“அய்யய்யோ! மணி ஐந்து ஆயிடுச்சா? பூஜா?” பதட்டத்துடன் தன் இருக்கையில் இருந்து எழுந்து கொண்ட சக்தி தன் உடைமைகளை எடுத்துக் கொண்டு பூஜா இருக்கும் இடத்தை நோக்கிச் செல்ல, அந்த இடமோ வெற்றிடமாக காணப்பட்டது.

“சே, மிஸ் பண்ணிட்டேனே” சிறு தவிப்புடன் தன் தலையை கோதிக் கொண்டவன் சோர்வோடு தன் காரை எடுத்துக் கொண்டு தன் வீட்டை நோக்கிப் புறப்பட்டுச் செல்ல, அங்கே அவன் வீட்டு வாயிலில் மீரா இவனது வருகைக்காக காத்து நின்றாற் போல சக்தியைப் பார்த்ததும் வேகமாக அவனருகில் ஓடி வந்து நின்றாள்.

“ஹேய் மீரா, எதற்காக இப்படி ஓடி வர்ற? ஏதாவது பிரச்சினையா?”

“எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை, உனக்குத் தான் பெரிய பிரச்சினை வீட்டிற்கு உள்ளே காத்துட்டு இருக்கு”

“என்ன சொல்லுற? வீட்டுக்குள்ள பிரச்சினையா?”

“ஆமா. நம்ம அண்ணியோட அம்மாவும், அப்பாவும் வந்து இருக்காங்க. அவங்க இரண்டாவது பொண்ணு அதுதான் அந்த உலக வாயாடி வனஜா, சாரி வளர்மதிக்கு உன்னைக் கல்யாணம் பண்ணி வைக்க கேட்டு வந்து இருக்காங்க”

“என்ன?” மீரா சொன்ன விடயங்களைக் கேட்டு அதிர்ச்சியடைந்து நின்ற சக்தி,

“அண்ணா, சக்தி ண்ணா” என்ற அவளது அதட்டலான குரலிலேயே கனவில் இருந்து விழிப்பவனைப் போல அவளைப் பார்த்து விழித்துக் கொண்டு நின்றான்.

“என்ன ண்ணா இப்படியே நிற்கிற? முதல்ல உள்ளே போய் இதையெல்லாம் நிறுத்த சொல்லு. உன் மனதில் பூஜா தான் இருக்காங்கன்னு எல்லார்கிட்டயும் சொல்லுண்ணா”

“என்ன மீரா விளையாடுறியா? இன்னும் என் மனதில் என்ன இருக்குன்னு பூஜாவுக்கே தெரியாது, அப்படி இருக்கும் போது வீட்டில் உள்ளவங்க கிட்ட நான் என்ன சொல்ல முடியும்? அதோடு பூஜா மனதில் என் மேல் காதல் இருக்கா? இல்லையான்னு கூட தெரியலை”

“அது எல்லாம் நிறையவே இருக்கும் ண்ணா. நீ அதை எல்லாம் நினைத்துக் கவலைப்படவே தேவையில்லை. முதல்ல உள்ளே…”

“மீரா, சக்தி. வாசலில் நின்னுட்டு இரண்டு பேரும் என்ன பேசிட்டு இருக்கீங்க? ஏன்டீ மீரா, உன்னை சக்தி வந்ததும் அவசரமாக அழைச்சுட்டு வான்னு சொல்லித் தானே அனுப்பி வைத்தேன். அதற்கிடையில் எந்த நாட்டைக் கைப்பற்ற அண்ணனும், தங்கையும் திட்டம் போடுறீங்க?” வெகு நேரமாக சக்தியை அழைத்து வரச் சென்ற மீராவைக் காணாது வீட்டு வாயிலை நோக்கி நடந்து வந்த சந்திரா அங்கே தனது பிள்ளைகள் இருவரும் கடும் தீவிரமாக எதைப்பற்றியோ பேசிக் கொண்டிருப்பதை பார்த்து விட்டு சிறிது அதட்டலுடன் கேள்வி கேட்டவாறே அவர்கள் இருவரின் முன்னாலும் வந்து நின்றார்.

“அது ஒண்ணும் இல்லைம்மா, நான் அண்ணா கிட்ட குருவி ரொட்டியும், குச்சி மிட்டாயும் கேட்டு இருந்தேன். அதுதான் அண்ணா வாங்கிட்டு வந்தான்னா இல்லையான்னு கேட்டுட்டு இருந்தேன். இல்லையா ண்ணா?” மீராவின் கேள்வியில் அவளை முறைத்துப் பார்த்தவன், பின்னர் அவளின் அருகில் வந்து அவளது தலையை வருடிக் கொடுத்தபடியே, “அண்ணா உனக்காக குருவி ரொட்டியும், குச்சி மிட்டாயும் மட்டுமில்லை குங்ஃபூ ரொட்டியும் வாங்கி வந்து இருக்கேன் ம்மா மீரா. அதை யாருக்கும் கொடுக்காமல் நீயே தான் சாப்பிடணும். சரியா?” என்றவாறே தன் சட்டைக் கையை மடித்து விட,

அவர்கள் இருவரையும் பார்த்து தன் தலையில் கையை வைத்துக் கொண்டு நின்ற சந்திரா, “உங்க இரண்டு பேருக்கும் எப்போ பாரு விளையாட்டு தான். எந்த குங்ஃபூ ரொட்டியோ, கராத்தே ரொட்டியோ எதுவாக இருந்தாலும் கொஞ்ச நேரம் கழித்து நீயே அவளுக்கு ஊட்டி விடு, இப்போ உள்ளே வா. உன்னைப் பார்க்கத் தான் உன் அண்ணியோட அம்மாவும், அப்பாவும் ரொம்ப நேரமாக காத்துட்டு இருக்காங்க. சீக்கிரமா வா” என்றவாறே சக்தியின் கையை விடாமல் பிடித்துக் கொண்டு வீட்டுக்குள் அவனை அழைத்துச் சென்றார்.

அங்கே அவர்கள் வீட்டு ஹாலில் சக்தியின் அண்ணனும், அண்ணியும் ஒரு புறமாக நின்று கொண்டிருக்க, மறுபுறம் அவனது அண்ணி மலர்விழியின் அன்னை லட்சுமியும், அவளது தந்தை கோவிந்தனும் அவர்களுக்கு நடுவில் அவளது தங்கை வளர்மதியும் அமர்ந்திருந்தனர்.

அவர்கள் எல்லோரையும் பார்த்து பொதுவாக ஒரு முறை புன்னகை செய்தவன் இரண்டிரண்டு படிகளாகத் தாவி ஏறி தன்னறையை நோக்கி சென்று விட, மறுபுறம் வளர்மதி வைத்த கண் வாங்காமல் சக்தி சென்ற திசையையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.

‘இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி ஓடி ஒளியப் போறீங்கன்னு பார்த்துடலாம் சக்தி. இன்னும் கொஞ்ச நாள் தான், அதற்கு அப்புறம் என்னை விட்டுட்டு உங்களைப் போகவே விட மாட்டேன். நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் முதல் வேலை உங்களை இந்த வீட்டில் இருந்து கூட்டிட்டு போறது தான். என் அக்கா தான் விவரம் இல்லாதவ, மாமாவோட தனிக்குடித்தனம் போகத் தெரியாமல் இங்கேயே இந்த குடும்பத்துக்கு சேவகம் பண்ணிட்டு இருக்கா, ஆனால் நான் அப்படி எல்லாம் இல்லை. இந்த கூட்டுக்குடும்பத்தைப் பார்த்தாலே வெறுப்பாக இருக்கு. இன்னைக்கு நம்ம கல்யாணத்துக்கு எல்லோரும் எப்படியும் சம்மதம் சொல்லிடுவாங்க, அதற்கு அப்புறம் இருக்கு கச்சேரி’ சக்தியின் வீட்டையும், அவனது குடும்பத்தினரையும் நோட்டம் விட்டபடியே வளர்மதி தன் மனதிற்குள் கற்பனைக் குதிரையை ஓட விட, அவளது கற்பனை எல்லை தாண்டி செல்வதற்குள் சக்தி தன்னை சிறிது புத்துணர்ச்சியாக்கியவனாக படியிறங்கி வந்து கொண்டிருந்தான்.

சக்தி வருவதைப் பார்த்ததும் அவன் புறம் ஜாடை காட்டிய லட்சுமி, “வாங்க மாப்பிள்ளை. பார்த்து எவ்வளவு நாள் ஆச்சு? எப்படி இருக்கீங்க?” என்று கேட்க,

“பரவாயில்லை அத்தை, நான் இதுவரைக்கும் நல்லாத்தான் இருந்தேன், இனிமேல் எப்படி இருப்பேனோ தெரியலை” என்றவாறே சக்தி தன் அன்னையைப் பார்த்து சிரித்து வைக்க மலர்விழியின் குடும்பத்தினர் அவனது பதிலில் ஒருவரை ஒருவர் சங்கடமாக பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தனர்.

அவர்களது சங்கடமான பார்வைப் பரிமாற்றத்தை பார்த்து விட்டு சக்தியைத் திரும்பிப் பார்த்து எச்சரிப்பது போல முறைத்து பார்த்த சந்திரா மறுபடியும் லட்சுமியின் புறம் திரும்பி, “இந்த பையனுக்கு எப்போதும் விளையாட்டு தான். நீங்க எதுவும் தப்பாக எடுத்துக்க வேண்டாம் சம்பந்தி” எனவும், அவரோ கண் ஜாடையில் வளர்மதியைப் பற்றி பேசுமாறு அவரிடம் சைகை காட்டினார்.

“சக்தி நம்ம வளர்மதி வந்து இருக்கா ப்பா. நீ அவளைப் பார்க்கலையே. முன்னாடி பார்த்ததை விட இப்போ ரொம்ப வளர்ந்துட்டா. நீ அவ கூட ஏதாவது பேசணும்னா போய் பேசிட்டு வாடா கண்ணா” சந்திரா சொன்ன விடயத்தை தன் காதிலேயே வாங்கிக் கொள்ளாதது போல அமர்ந்திருந்த சக்தி சிறிது நேரம் தன் தொலைபேசியையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருக்க, சந்திராவிற்கு தான் அங்கே இருந்த எல்லோரையும் நேர் கொண்டு பார்க்க பெரும் தயக்கமாக இருந்தது.

சக்தி இதுநாள் வரை எந்த ஒரு உறவினர்கள், பெரியவர்களின் முன்னிலையிலும் இவ்வாறு நடந்து கொண்டதில்லை என்பது சந்திராவிற்கு மிகவும் நன்றாக தெரிந்திருக்க, இவனது இந்த புதிய நடவடிக்கை அவர்கள் பேச வந்திருக்கும் விடயத்தில் அவனுக்கு எந்தவொரு ஈடுபாடும் இல்லை என்பதை மிகவும் தெளிவாக அவருக்கு உணர்த்தியது.

சக்தியின் விருப்பமின்மையை இப்போது நேரடியாக அவர்கள் முன்னிலையில் சொல்ல சிறிது தயக்கம் கொண்ட சந்திரா இன்று அல்லது நாளை சக்தியிடம் இந்த விடயத்தை பற்றி பேசிப் பார்ப்பதாக கூறியிருக்க லட்சுமி, கோவிந்தன் மற்றும் வளர்மதி தாங்கள் நினைத்து வந்த விடயம் நடக்கவில்லையே என்ற ஏமாற்றத்தோடு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

அவர்கள் வீட்டை விட்டு சென்றதை உறுதிப்படுத்திய பின்பு தன் அன்னையின் முன்னால் கோபமாக வந்து நின்ற சக்தி, “அம்மா நான் உங்க கிட்ட எத்தனை தடவை சொல்லி இருக்கேன். எனக்கு இப்போதைக்கு கல்யாணம் பண்ணிக்க எந்த எண்ணமும் இல்லை, அதுவும் அந்த வளர்மதி மாதிரி ஒரு வாயாடி பொண்ணை சத்தியமாக நான் கல்யாணம் பண்ணிக்கவே மாட்டேன். ஏதோ அண்ணியோட முகத்திற்காகத் தான் அவங்களை எதுவும் பேசாமல் விட்டேன். மறுபடியும் அவங்களை இது மாதிரி எண்ணத்தோடு இங்கே வருவதாக இருந்தால் வர வேண்டாம்னு சொல்லிடுங்க” என்று விட்டு அவரது பதிலைக் கூட எதிர்பாராமல் தன்னறைக்குள் வந்து அடைந்து கொண்டான்.

“நாளாக நாளாக எனக்கு பதட்டமும், புதிய புதிய பிரச்சினைகளும் அதிகரித்துக் கொண்டே போகிறது. இது சரியில்லை. நாளைக்கு என்ன நடந்தாலும் சரி, பூஜாவிடம் என் காதலை சொல்லியே தீருவேன்” தன் மனதிற்குள் காதலை பூஜாவிடம் நாளை கண்டிப்பாக தெரியப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தோடு தன் தூக்கத்தை தழுவிக் கொண்ட சக்தி, அடுத்த நாள் காலை பூஜாவை சந்திக்கும் அந்த ஒரு தருணத்திற்காக வெகு ஆவலுடன் தயாராகி தன் அலுவலகத்தை நோக்கிப் புறப்பட்டான்…..

**********
இதழின் ஓரம் இழைந்து ஓடும் அவள் சிரிப்பில் விழுந்து விட்டேன்
அவள் கூந்தல் எனும் ஏணி அதை பிடித்தே எழுந்து விட்டேன்
கடந்து போகும் காற்றிலாடும் அவள் மூச்சில் கரைந்து விட்டேன்
இது போதும் இது போதும் என் வாழ்வை வாழ்ந்து விட்டேன்
**********

Leave a Reply

error: Content is protected !!