இதயம் – 17

இதயம் – 17
சக்தியின் அன்னை சந்திரா, அவனது தந்தை சண்முக பிரகாஷ் மற்றும் அவனது அண்ணா வெற்றி பிரகாஷ் அவர்கள் வீட்டு ஹாலில் அதிர்ச்சியாக ஒருவரை ஒருவர் பார்த்தபடி என்ன பேசுவது என்று தெரியாமல் அமர்ந்திருக்க, சக்தி அவர்கள் மூவருக்கும் முன்னால் தவறு செய்த குழந்தை போல தலை குனிந்து நின்று கொண்டிருந்தான்.
அதேநேரம் அவனுக்கு அருகில் பக்கப்புறமாக நின்று கொண்டிருந்த மீரா மற்றும் வெற்றி பிரகாஷின் மனைவி மலர்விழி சக்தியையும், தங்கள் வீட்டுப் பெரியவர்களின் முகத்தையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருக்க, அந்த இடத்தில் கடிகாரத்தின் முள் அசையும் ஓசை மாத்திரமே பெருஞ்சத்தமாக கேட்டுக் கொண்டிருந்தது.
“அம்மா, அப்பா ஏதாவது பேசுங்க. ஏன் எல்லோரும் இப்படி அமைதியாக இருக்கீங்க?”
“என்னடா பேச சொல்லுற? ஏதோ ஸ்கூலில் தெரியாமல் ஒரு பையன் பென்சிலை உடைச்சுட்டேன், ரப்பரை எடுத்துட்டேன்னு சொல்லுற மாதிரி நான் பூஜாவைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு வந்த சொல்லுற. அப்படி உனக்கு நாங்க என்ன டா குறை வைத்தோம்? உன் கிட்ட நான் எப்போதாவது கண்டிப்பாக பேசி, உன்னை கட்டுப்படுத்தி வைத்து இருப்பேனா சொல்லு? உன் கல்யாணத்தை எப்படி எல்லாம் செய்யணும்னு ஆசை வைத்து இருந்தேன் தெரியுமா?
சரி, அதெல்லாம் போகட்டும். நீ அந்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிற மனநிலையோடு தான் இத்தனை நாளாக இருந்தேனா அதையாவது என் கிட்ட சொல்லி இருக்கலாமே சக்தி. எத்தனை தடவை அந்த பொண்ணைப் பற்றி நான் உன் கிட்ட பேசி இருப்பேன்? அப்போ எல்லாம் இந்த அம்மா கிட்ட இதைப் பற்றி சொல்ல உனக்குத் தோணவே இல்லையா? இவ்வளவு பெரிய விடயத்தை செய்ய முதல் ஒரு தடவையாவது எங்களை எல்லாம் நீ யோசித்துக் கூடப் பார்க்கலையா சக்தி? உன் சந்தோஷத்தை எப்போதாவது நாங்க வேண்டாம்னு சொல்லி இருப்போமா சொல்லு? இதை எல்லாம் எங்க கிட்ட முன்னாடியே சொல்லி இருந்தால் நாங்களே இந்த கல்யாணத்தை ஊரெல்லாம் அழைத்து சிறப்பாக செய்து இருப்போமே. எங்களை நீ இப்படி வேறு யாரோ மாதிரி நடத்துவேன்னு நான் கொஞ்சம் கூட நினைக்கல”
“ஐயோ, அம்மா அப்படி எல்லாம் எதுவும் இல்லை ம்மா. உங்களுக்கு இன்னைக்கு நடந்த விடயங்கள் எல்லாம் தெரிந்தால் நீங்க இப்படி எல்லாம் பேசவே மாட்டீங்க. நான் சொல்ல வரும் விடயத்தை முழுமையாக கேட்காமல் நீங்க இப்படி எமோஷனல் ஆகினால் எப்படி ம்மா?” சக்தி தன் அன்னையின் முன்னால் முழங்காலிட்டு அமர்ந்தபடி அவரது கைகள் இரண்டையும் எடுத்து தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டபடி அவரைப் பார்த்து வினவ,
“அப்படி என்ன நடந்ததுன்னு இவ்வளவு அவசரமாக நீ கல்யாணம் பண்ணிக்கிட்ட சக்தி?” அத்தனை நேரம் அமைதியாக அமர்ந்திருந்த அவனது தந்தை சண்முக பிரகாஷ் இப்போது அவனைப் பார்த்து தன் கேள்விகளை கேட்க ஆரம்பித்தார்.
அத்தனை நேரமாக எந்த விடயத்தைப் பற்றி தன் வீட்டில் உள்ளவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று சக்தி காத்துக் கொண்டு இருந்தானோ இப்போது அந்த சந்தர்ப்பம் கிடைத்து விட, தன் மனதிற்குள் வெகு நேரமாக அழுத்திக் கொண்டிருந்த அந்த திருமணம் நடந்த சந்தர்ப்பம் மற்றும் சூழ்நிலை பற்றிய விடயங்களை எல்லாம் அவன் தன் குடும்பத்தினரிடம் ஒன்று விடாமல் சொல்லி முடித்தான்.
“அண்ணா, என்னண்ணா சொல்லுற? துப்பாக்கி காட்டி மிரட்டுனாங்களா?” மீரா பதட்டத்துடன் சக்தியின் தோளில் கை வைக்க,
அவளைப் பார்த்து சிறு புன்னகையுடன் தலையசைத்தவன், “துப்பாக்கி மட்டுமில்ல, பெரிய பெரிய அருவாள், கத்தின்னு எல்லா வகையான ஆயுதங்களும் வைத்து இருந்தாங்க. ஏன் உனக்கு வேணுமா?” என்றவாறே அவளைப் பார்த்து கண்ணடிக்க,
அவனது தோளில் அடித்தவள், “பாருங்க ம்மா இந்த அண்ணனை, சின்ன வயதில் இருந்து படத்தில் வர்ற சண்டைக்காட்சியைப் பார்த்தாலே பத்து கிலோமீட்டர் தூர ஓடுற ஆளு இன்னைக்கு ஒரு பொண்ணுக்காக இந்த அளவிற்கு ரிஸ்க் எடுத்து இருக்கான். இந்த அதிசயத்தை எங்கேன்னு போய் சொல்லுறது?” தன் கன்னத்தில் கை வைத்து அதிர்ச்சியாக நிற்பது போல நின்று கொண்டிருந்தாள்.
“என்னடா சக்தி என்னென்னமோ சொல்லுற? உனக்கு எதுவும் ஆகல தானே?” சக்தியின் கை, தலை, முகம் எல்லாம் தொட்டுப் பார்த்தபடியே அவனை மேலிருந்து கீழாக ஆராய்ந்து பார்த்த சந்திரா,
“எனக்கு ரொம்ப பயமாக இருக்குப்பா. நீ ஏதோ தேவையில்லாத பிரச்சினையை உன் பக்கம் தானாக இழுத்து விட்டுட்ட போல இருக்கு” கவலை தோய்ந்த முகத்துடன் அவனைப் பார்த்து கண் கலங்கிப் போக,
அவனோ, “ஐயோ, அம்மா. எனக்கு எதுவும் ஆகாது ம்மா” என்றவாறே அவரைத் தன் தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.
“அந்த நேரத்தில் பூஜாவோட உயிரைக் காப்பாற்றணும்னு ஒரு எண்ணம் மட்டும் தான் என் மனதில் இருந்தது, அது தான் இப்படி ஒரு முடிவை அவசரமாக அந்த நேரத்தில் எடுக்க வேண்டியதாக போயிடுச்சு ம்மா. சத்தியமாக நான் உங்களை எல்லாம் காயப்படுத்தி பார்க்கணும்னு இந்த முடிவை எடுக்கல. நீங்க எல்லோரும் என்னைப் புரிந்து கொள்ளுவீங்கன்னு நம்புறேன்”
“நாங்க உன்னைப் புரிந்து கொள்ளுவது எல்லாம் எப்போதும் இருக்கும் சக்தி, என்னவோ இப்படித்தான் எல்லாம் நடக்கும்னு இருந்து இருக்கு போல, அதனால இனி அதைப்பற்றி பேசி எதுவும் மாறப்போவதில்லை. பூஜா தான் இந்த வீட்டு மருமகள்ன்னு ஆகிடுச்சு, அதை ஏற்றுக் கொள்ள எல்லோருக்கும் கொஞ்ச நாள் ஆகும். அவ்வளவு தான், ஆனா இப்போ பூஜா என்ன மனநிலையில் இருப்பா? நீ அதைப்பற்றி யோசித்துப் பார்க்கலையா சக்தி? என்ன இருந்தாலும் நீ அந்த பொண்ணை அப்படியே விட்டுவிட்டு வந்து இருக்கக்கூடாது ப்பா. நீ இங்கேயே பூஜாவை அழைச்சுட்டு வந்து இருக்கலாமே” என்றவாறே சண்முக பிரகாஷ் சக்தியின் தோளில் தன் கையை வைக்க,
அவரது கையை ஆதரவாக அழுத்திக் கொடுத்தவன், “அவ மனநிலையை யோசித்து தான் நான் அவளை அங்கேயே விட்டுட்டு வந்தேன் ப்பா. ஏற்கனவே இந்த திடீர் கல்யாணத்தினால் அவ ரொம்ப மனஅழுத்தத்தில் இருப்பா, இந்த நேரத்தில் நான் அவளை இங்கே கூட்டிட்டு வந்து அவ இங்கே இருக்கும் நிலைமையைப் பார்த்து இன்னமும் தனக்குள்ளேயே ஒடுங்கிப் போய் விடக்கூடாதுன்னு தான் நாளைக்கு காலையில் என் அம்மா, அப்பாவோடு வந்து அவளை அழைச்சுட்டு வருவதாக சொன்னேன்.
அவ என் மேல் கோபத்தில் இருந்தாலும் நீங்க போய் பேசும் போது கொஞ்சம் நார்மலாக ஃபீல் பண்ணுவா. நான் இப்போ உங்களுக்கு என்ன நடந்தது, ஏது நடந்ததுன்னு எடுத்து சொன்னதால் நீங்க எல்லோரும் நிலைமையைப் புரிந்து கொண்டீங்க. ஒருவேளை நான் பூஜாவோடு இந்த நேரத்தில் இங்கே வந்து நின்றால் நான் இப்போ சொல்றதை எல்லாம் நீங்க கேட்கிற மாதிரி அப்போ அந்த பொறுமையும், நிதானமும் இருந்து இருக்குமா? கல்யாணம் தான் அவசரமாக முடிந்து விட்டது, அதுதான் மற்ற விடயங்களையாவது பொறுமையாக, நிதானமாக செய்ய நினைத்தேன்” என்று கூற,
அவனைப் பார்த்து புன்னகை செய்தவர், “நீ இப்போ பண்ணது வேணும்னா அவசரமாக முடிவெடுத்துப் பண்ண கல்யாணமாக இருக்கலாம், ஆனா இனி உன் வாழ்க்கை முழுவதும் அந்த பொண்ணு கூட தான் அது ஞாபகம் இருக்கு இல்லையா சக்தி? ஏதோ அந்த பொண்ணு உயிரைக் காப்பாற்ற தாலி கட்டிட்டோம்னு கடமைக்காக வாழும் வாழ்க்கை இல்லை இது, உன்னை நம்பி ஒரு பொண்ணு வர்றா. அதை மனதில் எப்போதும் நினைவு வைத்துக் கொள்” எனவும் சக்தி அவரைப் பார்த்து புன்னகையுடன் தன் தலையை அசைத்தான்.
“அண்ணா இந்த கல்யாணம் பண்ணிக்கிட்டது வேணும்னா அவசரமாக எடுத்த முடிவாக இருக்கலாம், ஆனா பூஜாவோடு தான் அவன் வாழ்க்கைன்னு எடுத்த முடிவு ஐந்து வருடங்களுக்கு முன்னாடியே எடுத்தது. அதனால அண்ணா பூஜா அண்ணியை ரொம்ப சந்தோஷமாகவே பார்த்துப்பான். இல்லையா ண்ணா”
“என்னது? ஐந்து வருடமா?” மீரா சொன்ன விடயத்தைக் கேட்டு சக்தியின் ஒட்டுமொத்த குடும்பத்தினரும் அவனைப் பார்த்து மறுபடியும் அதிர்ச்சியாகி நிற்க, அவனோ தன் தலையில் கை வைத்துக் கொண்டு மீராவை தன் பார்வையினாலேயே கொன்று விடலாமா என்பது போல பார்த்துக் கொண்டு நின்றான்.
“அது வந்து… அது… எதுக்கு எல்லோரும் இப்படி பார்க்குறீங்க? எதுவாக இருந்தாலும் சக்திண்ணா கிட்ட கேளுங்க. சக்தி ண்ணா அது தான் கல்யாணமே முடிஞ்சுடுச்சே, இன்னும் எதற்கு உண்மையை மறைச்சு வைச்சுக்கிட்டு? ஷாக்கோடு ஷாக்காக திருச்சியில் என்ன நடந்ததுன்னும் சொல்லிடுண்ணா” என்று விட்டு மீரா தன் அன்னையின் பின்னால் சென்று நின்று கொள்ள,
“உனக்கு இருக்கு கச்சேரி” அவளைப் பார்த்து மிரட்டுவது போல கூறியவன் தன் பெற்றோரின் புறம் திரும்ப, அவர்களோ அங்கே என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியாதவர்களாக குழப்பத்தோடு அவனைப் பார்த்துக் கொண்டு நின்றனர்.
“அம்மா, அப்பா, அண்ணா, அண்ணி என்னை எல்லோரும் தயவுசெய்து மன்னிச்சுடுங்க. உங்களுக்கு இன்னைக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியான விடயங்களை எல்லாம் நான் சொல்லிட்டு இருக்கேன். இப்போ சொல்லப்போற விடயத்தை நான் கொஞ்ச நாள் போனதும் உங்க எல்லோர் கிட்டயும் சொல்லணும்னு தான் வெயிட் பண்ணேன், ஆனா சூழ்நிலை இப்படி ஒரு சந்தர்ப்பத்தில் சொல்ல வேண்டியதாக போயிடுச்சு. ஒரேநாளில் எல்லாவற்றையும் ஒட்டுமொத்தமாக சொல்லி உங்களைக் கஷ்டப்படுத்தி விடக்கூடாதுன்னு இந்த விடயத்தை அப்புறமாக சொல்லலாம்னு இருந்தேன்”
“சக்தி நீ பில்டப் பண்ணது எல்லாம் போதும். முதல்ல உன் லைஃப்ல என்ன நடக்குது? முதல்ல அதை சொல்லு” சக்தியின் அண்ணா வெற்றி பிரகாஷ் தன் பொறுமை இழந்து சிறிது கோபத்துடன் அவனைப் பார்த்து அதட்டலாக வினவ,
“வெற்றி கொஞ்சம் பொறுமையாக இருப்பா. சக்தி நீ சொல்லு” வெற்றியை சிறிது நிதானப்படுத்திய சண்முக பிரகாஷ் சக்தியை மேலே சொல்லும்படி சைகை செய்தார்.
“அது வந்து எனக்கு பூஜாவை ஐந்து வருடங்களுக்கு முன்னாடியே தெரியும். மீராவோட எக்ஸாம் விடயமாக ஒரு முறை நான் அவ கூட திருச்சி போனேன், அப்போதான் முதல்முறையாக பூஜாவைப் பார்த்தேன்” தன் வாழ்வில் பூஜாவை சந்தித்தது முதல், திருச்சியில் விஷ்வாவிற்கு இறுதி சடங்குகள் முடித்து விட்டு அவளைத் தன்னோடு அழைத்து வந்து இன்று அவளிடம் தன் காதலை சொல்லி அவள் அதற்கு மறுப்பு சொன்னது வரை கூறி முடித்த சக்தி தன் அன்னை மற்றும் தந்தையின் முகத்தைப் பார்க்க,
சிறிது நேரம் அவனையே கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டு நின்ற சந்திரா, “டேய் சக்தி, சத்தியமாக என்னால முடியல டா. நீ எங்க கிட்ட சொல்லாமல் விட்ட விடயங்கள் இவ்வளவு தானா? இல்லை இன்னும் எதுவும் இருக்கா? ஒருவேளை எங்களுக்கு பேரப்பசங்க யாராவது இருந்தால் அதையும் சொல்லிடுடா. எல்லா அதிர்ச்சியையும் ஒரே நாளில் கேட்டு முடிச்சுடுறேன்” என்றவாறே தன் தலையில் கை வைத்துக் கொண்டு அமர்ந்து விட, சக்தி தன் முகம் வாடிப் போக அவரை அமைதியாகப் பார்த்துக் கொண்டு நின்றான்.
“இவ்வளவு பெரிய பிரச்சினையை எல்லாம் நீ எப்படிடா தனியாக சமாளிச்ச? ஒரு வார்த்தை எங்க கிட்ட சொல்லி இருந்தால் நாங்களே உனக்கு உதவியாக இருந்து இருப்போமேடா. இரண்டு தடவை உயிர் போற சந்தர்ப்பத்தை தேடித் தேடி போய் மாட்டி இருக்க. ஏன்டா சக்தி உனக்கு இந்த தேவையில்லாத வேலை?” என்று கேட்டபடியே வெற்றி தன் தம்பியின் உயிருக்கு வந்த ஆபத்தை எண்ணி கவலை கொண்டவனாக அவனை இறுக அணைத்து விடுவிக்க,
பதிலுக்கு அவனைப் பார்த்து புன்னகை செய்த சக்தி, “ஏன்னா பூஜாவை நான் அந்தளவுக்கு நேசிக்கிறேன் ண்ணா” என்று கூற, அவனது ஒட்டுமொத்த குடும்பத்தினரும் அவனை ஆச்சரியமாக நிமிர்ந்து பார்த்தனர்.
“என்ன எல்லோரும் இப்படி பார்க்குறீங்க? நானும் லவ் பண்ணுவேன். நம்புங்க” சக்தி சிரித்துக் கொண்டே அவர்கள் எல்லோரையும் பார்த்து கண்ணடிக்க, சண்முக பிரகாஷ் மற்றும் வெற்றி அவனது தோளில் செல்லமாக தட்டி விட்டு அவனின் இருபுறமும் நின்றவாறு அவனைத் தங்கள் தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டனர்.
“அப்புறம் உங்க எல்லோர் கிட்டயும் இன்னொரு முக்கியமான விடயம் சொல்லணும்”
“அய்யய்யோ! இன்னும் என்ன டா?” சண்முக பிரகாஷ் அதிர்ச்சியாக தன் நெஞ்சில் கை வைக்க,
“ஐயோ! அப்பா ஷாக் ஆகும் அளவுக்கு எதுவும் இல்லை. நான் இன்னைக்கு பண்ண வேலைக்கு பூஜா என் மேல செம்ம கோபத்தில் இருப்பா, அதனால நீங்க எல்லோரும் அவளோடு வழக்கம் போல இருந்தா அவ கொஞ்சம் நார்மலாக இருப்பா. நான் செய்தது தப்பு தான், அதற்கு பூஜா தண்டனை அனுபவிக்க கூடாது. நீங்க என்ன கோபப்படுவதாக இருந்தாலும், திட்டுவதாக இருந்தாலும் எனக்கு மட்டும் கொடுங்க. இதைத்தான் சொல்ல வந்தேன்” என்று கூற, சந்திரா அவனை தன்னருகில் வரும்படி சைகை செய்து விட்டு சட்டென்று அவனது கன்னத்தில் அடித்து வைத்தார்.
“அம்மா”
“போடா, இப்போ தான் அம்மா, அப்பா நினைவு வருதா? அதுதான் நீ சொன்னியே என்ன தண்டனையாக இருந்தாலும் எனக்கு கொடுங்கன்னு. அதுதான் கொடுத்தேன்”
“அம்மா அதற்காக இப்படியா?”
“பேசாதேடா. இனி உன்கிட்ட நான் பேச மாட்டேன். எதுவாக இருந்தாலும் என் மருமகள் வரட்டும், அவளை வைத்து உன்னை ஒரு வழி பண்ணிடுவேன். இதுதான் நீ பண்ண தப்புக்கு தண்டனை”
“அம்மா” சக்தி கண்கள் கலங்க தன் அன்னையின் மடியில் தலை சாய்த்து கண்ணீர் வடிக்க,
அவனது தலையை ஆதரவாக வருடிக் கொடுத்தவர் மலர்விழியின் புறம் திரும்பி, “மலர் எல்லோருக்கும் சாப்பாடு எடுத்து வைம்மா. இந்த வாலுப்பையன் என்ன என்னவோ எல்லாம் சொல்லி எல்லோரையும் ஒரு வழி பண்ணிட்டான். மறுபடியும் இவனைத் திட்ட உடம்பில் கொஞ்சம் சக்தி வேணும் இல்லையா?” என்று கூறவும்,
அவனோ, “அதுதான் எல்லாவற்றையும் விட பெரிய சக்தி நான் இருக்கேனேம்மா” என்று விட்டு இன்னும் இரண்டு, மூன்று அடிகளை அவரிடமிருந்து தாராளமாக பெற்றுக் கொண்டான்.
பல்வேறு விதமான உணர்வுப் போராட்டங்களை கொண்ட பொழுதாக அன்றைய இராப்பொழுது கடந்து சென்று விட தங்கள் இரவுணவை முடித்து விட்டு வெற்றியும் மலர்விழியும் தங்கள் அறைக்குச் சென்று விட, ஹாலில் சக்தி மற்றும் மீரா அவர்களது பெற்றோருடன் அமர்ந்திருந்தனர்.
வழக்கமாக சக்தி மற்றும் மீரா ஒன்றாக இருந்தால் அந்த இடத்தில் அமைதி என்ற பேச்சுக்கே இடம் இருக்காது, ஆனால் இன்று வழமைக்கு மாறாக அவர்கள் இருவரும் அமைதியாக இருப்பதைப் பார்த்து விட்டு சக்தியின் அருகில் வந்து அமர்ந்து கொண்ட சந்திரா, “சக்தி, என்னடா கண்ணா ஆச்சு? அதுதான் எல்லாம் சரியாகிடுச்சே. இன்னும் ஏன்பா கவலையாக இருக்க?” என்று கேட்க,
சட்டென்று அவரது மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டவன், “நான் இன்னைக்கு பண்ண வேலைக்கு உங்களுக்கு கோபம் வரலையாம்மா?” என்று வினவ,
அவரோ, “எதற்கு கோபம்?” மீண்டும் அவனைப் பார்த்து அடுத்த கேள்வியைக் கேட்டார்.
“என்னம்மா இப்படி கேட்குறீங்க? உங்க பையன் கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்து நிற்கிறேன். நீங்க என்னடான்னா இவ்வளவு கூலாக எதற்கு கோபம்ன்னு கேட்குறீங்க?”
“சரி. நீ சொல்ற மாதிரி கோபப்பட்டு கத்தி, சத்தம் போட்டு, ஊரைக் கூப்பிட்டால் மட்டும் நீ நடந்த கல்யாணத்தை இல்லைன்னு சொல்லிடுவியா?”
“சேச்சே. வாய்ப்பே இல்லை”
“அப்புறம் கோபப்பட்டு என்ன செய்ய? கோபப்படுவதால் நடந்த விடயங்களை மாற்றலாம்னா கோபப்படலாம், ஆனா எந்த பலனும் இல்லாமல் வீணாக கோபப்பட்டு என்ன மாறப் போகிறது? அதோடு எங்களுக்கு உன் சந்தோஷம் தான் முக்கியம். என்ன உன் கல்யாணத்தை நான் நினைத்த மாதிரி செய்ய முடியலையேன்னு சின்னதாக ஒரு வருத்தம் அவ்வளவு தான். ஆனா அந்த கவலை எல்லாம் என் பையனோட சந்தோஷத்திற்கு முன்னாடி எதுவுமே இல்லை.
அதோடு முதல் தடவையாக பூஜாவைப் பார்த்ததும் எனக்கு அவளை அப்போவே பிடித்து போயிடுச்சு. அந்த பொண்ணை வேறு வீட்டு பொண்ணாகவே எனக்குப் பார்க்கத் தோணல. இன்னும் சொல்லப்போனால் அவளோட கடந்த காலம் பற்றி லீலா அன்னைக்கு சொன்னதற்கு அப்புறம் எனக்கு இன்னும் அந்த பொண்ணைப் பிடித்துப் போயிடுச்சு. அதனால்தான் என்னவோ நீ பூஜாவைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு சொல்லவும் எனக்கு உண்மையாகவே அந்தளவுக்கு கோபம் வரல. எங்க கிட்ட நீ ஒரு வார்த்தை சொல்லலேன்னு கோபம் தானே தவிர மற்றபடி பூஜா மீது எனக்கு எப்போதும் ஒரு பாசம் இருந்துகிட்டே தான் இருக்கும். ஆனா நீ பண்ண வேலை தான் கொஞ்சம் கவலையாக இருந்தது”
“ஐயோ! மை டியர் அம்மா, கவலைப்படாதீங்க. உங்களுக்கு கவலை தர்ற மாதிரி இனி எதுவும் நான் பண்ண மாட்டேன். போதுமா?” சந்திராவின் மடியில் இருந்து எழுந்து அமர்ந்தவாறு அவரது கன்னத்தைப் பிடித்து ஆட்டியவன்,
“அப்புறம் ம்மா, அப்பா நான் முன்னாடியே பூஜா பற்றி சில விடயங்கள் சொல்லி இருந்தேன். பூஜாவுக்கு ஏற்கனவே கல்யாணம்…” தான் சொல்ல வந்த விடயத்தை சொல்லி முடிக்காமல் இழுக்கவும்,
அவனது தோளில் தட்டிய சண்முக பிரகாஷ், “ஏன் சக்தி உன் மனதில் அந்த கல்யாண வாழ்க்கை பற்றி ஏதாவது குழப்பம் இருக்கா?” என்று கேட்க, அவனோ அவசரமாக மறுப்பாக தலையசைத்தான்.
“ஐயோ! நான் அதைப்பற்றி எல்லாம் எதுவுமே யோசிக்கல. நான் விரும்புவது பூஜாவைத் தான் அவ கடந்த காலத்தில் என்ன நடந்து இருந்தாலும் அவளுக்கு துணையாக நான் இருப்பேன்”
“அப்புறம் என்ன சக்தி? இதேபோல எப்போதும் பூஜாவுக்கு நீ துணையாக இரு. அதுதான் அவளுக்கு தேவை. நீ வீணாக எதையும் யோசிக்காமல் போய்த்தூங்கு. நாளைக்கு நேரத்திற்கு போய் நம்ம வீட்டு மருமகளை கூட்டிட்டு வரணும்” என்று விட்டு சந்திரா மற்றும் சண்முக பிரகாஷ் தங்கள் அறைக்குச் சென்று விட, மீராவும், சக்தியும் சிறிது நேரம் பேசி விட்டு தங்கள் அறையை நோக்கி புறப்பட்டுச் சென்றனர்.
தன்னறைக்குள் வந்து தன் கட்டிலில் மல்லாந்து படுத்தபடி தன் தொலைபேசியை எடுத்துப் பார்த்த சக்தி அதில் சேமிக்கப்பட்டிருந்த பூஜாவின் எண்ணிற்கு இப்போது அழைப்பு மேற்கொள்ளலாமா? வேண்டாமா? என்று யோசித்தபடியே அப்போதைய நேரத்தைப் பார்க்க, அதுவோ நள்ளிரவு பன்னிரண்டு மணியை நெருங்கிக் கொண்டிருந்தது.
“இல்லை, இல்லை. இந்த நேரத்தில் போன் பண்ணுவது சரியில்லை. நாளைக்கு காலையில் முதல் வேலையாக பூஜாவைத் தானே பார்க்கப் போறேன். அதனால் கொஞ்சம் பொறுமையாகவே இருக்கலாம்” கட்டுக்கடங்காமல் அலைபாய்ந்த தன் மனதை அடக்கி விட்டு தூங்க எண்ணி சக்தி தன் கண்களை மூட, அவன் மூடிய விழிகளுக்குள்ளும் கனவாக பூஜாவின் நினைவுகளே அணிவகுத்து நின்றது.
மனதிற்குள் பலவிதமான ஆசைகளை சுமந்த படி சக்தி தூக்கத்தை தழுவிக் கொள்ள, மறுபுறம் பூஜா அவன் கட்டிய தாலியை தன் கையால் பிடித்து வெறித்துப் பார்த்தபடி தன் கண்களில் இருந்து வழிந்து கொண்டிருந்த கண்ணீரைத் துடைக்கவும் மனமின்றி கீழே தரையில் சுருண்டு படுத்துக் கிடந்தாள்.
“ஏன் என் வாழ்க்கையில் மட்டும் எதுவும் நான் நினைத்த மாதிரி நடப்பதே இல்லை? விஷ்வாவோடு கடைசி வரைக்கும் வாழணும்னு நினைத்தேன், அது நடக்கவே இல்லை. சக்திக்கு நல்ல ஒரு வாழ்க்கை அமையணும், என்னால் அவர் வாழ்க்கை பாழாகி விடக்கூடாதுன்னு நினைத்தேன், அதுவும் நடக்கல. ஆனா நான் எதிர்பார்க்காத எல்லாம் நடக்கிறதே. ஏன்? ஏன்?” தன்னைச் சுற்றி நடந்த விடயங்களை எல்லாம் எண்ணியபடியே பூஜா மெல்ல மெல்ல தூக்கத்தை தழுவிக் கொள்ள அந்த இறைவன் ஏற்படுத்தி வைத்த விளையாட்டில் அவர்கள் எல்லோரது ஆட்டமும் இப்போது ஒருவழியாக சரியான இடத்தை வந்து சேர்ந்திருந்தது.
இரவு வெகு நேரமாக அழுது கொண்டே தூங்கியதால் என்னவோ பூஜா தன்னை மறந்து தூங்கிக் கொண்டிருக்க, அவளுக்கு அந்த இடத்தை சுற்றி எந்த ஒரு சத்தமும் அவளது செவிகளை சென்று அடையவில்லை.
கனவில் யாரோ ஒருவர் தன் அறைக்கதவை தட்டுவது போல சத்தம் கேட்க, மெல்ல மெல்லத் தன் விழிகளைத் திறந்து பார்த்தவள் அப்போதுதான் தான் தரையில் இருந்தவாறே உறங்கி இருக்கிறோம் என்பதையே உணர்ந்து கொண்டாள்.
வெகுநேரமாக தரையில் உறங்கியதாலும், இதற்கு முன்னர் தரையில் உறங்கி அவளுக்கு பழக்கம் இல்லாததாலும் சிறிது தடுமாற்றத்துடன் தன்னருகில் இருந்த கட்டிடலைப் பிடித்துக் கொண்டு எழுந்து நின்றவள் சுவற்றில் மாட்டப்பட்டிருந்த கடிகாரத்தை திரும்பிப் பார்க்க, அதுவோ காலை பத்து மணியைக் காட்டிக் கொண்டிருந்தது.
“அச்சச்சோ! பத்து மணி ஆச்சா? சக்தி நேரத்திற்கே வர்றேன்னு சொன்னாங்களே. ஒரு வேளை வந்து காத்துட்டு இருப்பாரோ தெரியலையை” என்றவாறே அவசர அவசரமாக தன் மாற்றுடைகளை எடுக்கப் போனவள் சட்டென்று ஏதோ நினைவு வர அந்த இடத்திலேயே அப்படியே நின்றாள்.
“இப்போ எதற்காக நான் இவ்வளவு அவசரப்படணும்?” தன் மனப்போக்கை எண்ணித் தன்னைத் தானே கடிந்து கொண்டவள் சோர்வுடன் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து கொள்ள, திடீரென அவளது அறைக்கதவை யாரோ வேகமாக தட்டும் சத்தம் கேட்டது.
“யாரு அது?” பூஜாவின் குரல் அந்த கதவு தட்டும் ஓசையினால் வெளியே கேட்காது போகவே,
மறுபடியும், “யாருன்னு கேட்கிறேன்லே? எதற்காக இப்படி கதவு உடையுற மாதிரி தட்டுறீங்க?” என்றவாறே சிறிது கோபத்துடன் தன் அறைக்கதவைத் திறந்தவள் அங்கே வியர்த்து கொட்டியபடி மூச்சு வாங்க நின்று கொண்டிருந்த சக்தியையும், பதட்டத்துடன் ஒருவரை ஒருவர் மாறி மாறிப் பார்த்துக் கொண்டு நின்ற அவனது குடும்பத்தினரையும், ஹாஸ்டல் வார்டன் பெண்மணியையும் பார்த்து குழப்பமடைந்து போனாள்.
‘எதற்காக எல்லோரும் என்னை இப்படி பார்க்குறாங்க?’ பூஜா அங்கே நின்று கொண்டிருந்த நபர்களின் முக பாவனைகளைப் பார்த்து யோசனையுடன் சக்தியின் புறம் திரும்ப,
அவனோ, “பூஜா, உனக்கு எதுவும் இல்லை தானே? இவ்வளவு நேரமாக உன்னைக் காணோம்னு ரொம்ப பயந்நுட்டேன்டா” என்றவாறே அவளைத் தாவி அணைத்துக் கொள்ள, அவளோ அவனது செய்கையில் அதிர்ச்சியில் தன்னை மறந்து சிலையென உறைந்து நின்றாள்…..
**********
விழிமூடும் போதும் உன்னை
பிரியாமல் நான் இருப்பேன்
கனவுக்குள் காவல் இருப்பேன்
நான் என்றால் நானே இல்லை
நீ தானே நானாய் ஆனேன்
நீ அழுதால் நான் துடிப்பேன்
**********