இதயம் – 22

இதயம் – 22
அன்றோடு பூஜா மற்றும் சக்தியின் திருமணம் முடிந்து முழுதாக ஐந்து மாதங்கள் நிறைவு பெற்றிருந்தது.
இந்த ஐந்து மாதங்களுக்குள் பூஜா சக்தியின் குடும்பத்தினருடன் முழுமையாக ஒன்றிப் போகாவிட்டாலும் ஒரு சுமுகமான உறவைப் பேணி வந்து கொண்டிருந்தாள்.
அதே நேரம் அவளது பெற்றோரும், சக்தியின் பெற்றோரும் ஒட்டுமொத்தமாக இந்த புதிய உறவுகளை ஏற்று இயல்பாக பேசிக் கொள்ளாவிட்டாலும், ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது நலம் விசாரிக்கும் அளவிற்கு ஒரு உறவைப் பேணி வந்து கொண்டிருந்தனர்.
சக்தியின் வீட்டில் இருந்த எல்லோரும் பூஜாவைத் தங்கள் குடும்பத்தில் ஒருத்தியாக ஏற்றுக் கொண்டிருக்க, மலர்விழி மாத்திரம் அவளை தன் குடும்பத்தில் ஒருத்தியாக பார்க்க விரும்பவில்லை.
ஒரு வேளை தன் தங்கை இருக்க வேண்டிய இடத்தில் பூஜா இருக்கிறாள் என்ற எண்ணம் அவளை இந்த உறவை ஏற்றுக் கொள்ள செய்யாமல் செய்ததா? இல்லை வேறு எதுவும் காரணமா? என்று அந்த இறைவனுக்குத் தான் வெளிச்சம்.
இப்படி ஒவ்வொரு நபர்களும் ஒவ்வொரு விதமான மனநிலையும் இருப்பதைப் போல நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக நாட்கள் நகர்ந்து செல்ல, அந்த ஐந்து மாதக் காலத்திற்குள் பூஜா மற்றும் சக்தியின் ரிஷப்சன் நிகழ்வுகளும் எளிமையாக எந்தவொரு பிரச்சினையும் இல்லாமல் நடந்து முடிந்திருந்தது.
அந்த நிகழ்வுக்குப் பின்னர் சக்தி பூஜாவை எந்தவிதத்திலும் தொந்தரவு செய்யவில்லை.
அன்று இறுதியாக தங்கள் அறையில் வைத்து சக்தி தன் மனதிற்குள் இருக்கும் காதலை பூஜாவிடம் சொல்லி விட்டுச் சென்ற பிறகு மீண்டும் அதைப் பற்றி அவளிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
எப்போதும் போல இயல்பாக அவளைப் பார்த்து புன்னகை செய்து விட்டு அவளைக் கடந்து செல்பவன் அவளை எந்தவிதத்திலும் தொந்தரவு செய்து விடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தான்.
தன் பேசும் சிறு வார்த்தை கூட தன்னை அறியாமல் அவளைக் காயப்படுத்தி விடும் என்று நினைத்துக் கொள்பவன் தான் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் நிறுத்தி நிதானமாக யோசித்துப் பார்த்த பின்னரே அவளிடம் பேசுவான்.
ஏற்கனவே தான் அவளைக் காப்பாற்ற செய்த ஒரு காரியம் தன் மேல் அவள் கொண்டிருந்த நம்பிக்கையை ஆட்டம் காணச் செய்து விட்டது எனும் போது இன்னும் இன்னும் தவறுகள் செய்து அவள் தன் மேல் மீதமாக வைத்திருக்கும் அந்த சிறு நம்பிக்கையையும் இழந்து விடக்கூடாது என்பது தான் இப்போதைய அவனது ஒரே நோக்கமாக இருந்தது.
சக்தி எந்தளவிற்க்கு பூஜாவைப் பற்றி யோசித்து அவளிற்காக எல்லா விடயங்களையும் செய்து வந்து கொண்டிருந்தானோ அதேபோல பூஜாவும் தன் மனதிற்குள் சக்தியைப் பற்றி நினைக்காமல் இல்லை.
தான் அவனை முதன்முதலாக திருச்சியில் சந்தித்தது முதல் இப்போது வரை தனக்காக அவன் ஒவ்வொரு விடயத்தையும் யோசித்து செய்வதைப் பார்க்கும் போது அவளுக்கு சில சமயங்களில் குற்றவுணர்ச்சியாக கூட இருக்கும்.
தன் மேல் வைத்திருக்கும் நேசத்திற்காக சக்தி இவ்வளவு தூரம் எந்தவொரு பலனையும் எதிர்பாராமல் இருக்கும் போது அவனுக்கு தான் இதுவரை என்ன செய்து இருக்கிறோம் என்று யோசித்துப் பார்ப்பவளுக்கு அந்த கேள்விக்கு இதுநாள் வரை பதிலைக் கண்டறிய முடியவில்லை.
அவன் காதலுக்கு பதிலாக தன்னால் காதலைக் கொடுக்க முடியுமா? இல்லையா? என்பது கூட அவளுக்குத் தெரியாது, ஆனால் இனி வரும் நாட்களில் அவன் காதலுக்கு தன்னால் முடிந்த மட்டும் மரியாதையாவது கொடுக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டவள் தன் முன்னால் இறைந்து கிடந்த ஆடைகளை மடித்துக் கொண்டிருந்த வேளை, “பூஜா சீக்கிரமாக ரெடியாகிட்டு வாம்மா. அவசரமாக ஒரு இடத்திற்கு போகணும்” படபடவென்று பேசிக் கொண்டபடியே அந்த அறைக்குள் மின்னல் வேகத்தில் நுழைந்த சக்தி அவசர அவசரமாக அவள் முன்னால் கிடந்த ஆடைகளை எல்லாம் அள்ளி கப்போர்டில் அடைத்து விட்டு அவளின் புறம் திரும்பி,
“போகலாமா?” என்று வினவினான்.
“எங்கே போகணும் சக்தி? எதற்கு நீங்க இவ்வளவு பதட்டமாக இருக்கீங்க? ஏதாவது பிரச்சினையா?”
“பிரச்சினை எல்லாம் எதுவும் இல்லை ம்மா. ஏற்கனவே ரொம்ப நேரம் ஆகிடுச்சு. நீ என்ன வேணும்னாலும் கேளு, ஆனா இப்போ இல்லை, கொஞ்ச நேரம் கழிச்சு. சரி, சரி லேட் ஆகுது, வா பூஜா”
“ஆனா சக்தி வீட்டில் எல்லோரும் வெளியே போய் இருக்காங்க. யாருகிட்டயும் சொல்லாமல் திடுதிடுப்புன்னு எப்படி போறது?”
“ஐயோ! பூஜாம்மா, நான் அப்பாகிட்டயும், வெற்றி கிட்டயும் ஒரு அவசர வேலையாக நீயும், நானும் வெளியே போறோம்னு சொல்லிட்டேன், அவங்க எப்படியும் அம்மா கிட்ட சொல்லுவாங்க. இப்போ தயவுசெய்து கிளம்பும்மா” என்றவாறே சக்தி கெஞ்சலாகப் பூஜாவைப் பார்க்க, மனதிற்குள் பல கேள்விகள் இருந்தும் அதை இப்போது அவனிடம் கேட்க முடியாது என்பதை உணர்ந்து கொண்டவளாக பூஜா அவனைப் பின் தொடர்ந்து சென்று காரில் ஏறி அமர்ந்து கொண்டாள்.
காரில் ஏறி அமர்ந்து கொண்ட நொடி முதல் சக்தியிடம் எந்தவொரு கேள்வியும் கேட்காமல் அமைதியாக அமர்ந்திருந்தவள் அவர்களது கார் திருச்சி செல்லும் சாலையில் திரும்புவதைப் பார்த்து விட்டு பதட்டத்துடன் சக்தியைத் திரும்பிப் பார்க்க, அவனோ தன் முழுக்கவனத்தையும் சாலை மீது வைத்திருந்தான்.
சாலை மீது கவனமாக இருப்பவனிடம் பேச்சுக் கொடுப்பதா? வேண்டாமா? என்ற யோசனையுடன் பூஜா தன் கைவிரல்களை பிரிப்பதும் கோர்ப்பதுமாக அமர்ந்திருக்க, தன் ஓரப்பார்வையால் அவளை அவதானித்துக் கொண்டிருந்த சக்தி எதுவும் பேசாமல் அமைதியாக வண்டியை செலுத்திக் கொண்டிருந்தான்.
இன்னும் இரண்டரை மணி நேரத்தில் திருச்சியை சென்றடைந்து விடுவோம் என்கிற நிலையில் சக்தி தன் காரை செலுத்திக் கொண்டிருக்க அதற்கு மேலும் பொறுமை காக்க முடியாது என்று நினைத்துக் கொண்ட பூஜா, “சக்தி, இப்போ எதற்கு இவ்வளவு அவசரமாக நாம திருச்சிக்கு போறோம்?” என்று வினவ,
அவளைப் பார்த்து புன்னகை செய்தவன், “உன்னைக் கடத்திக்கிட்டு எல்லாம் போகல பூஜா, பயப்படாதே” எனவும், அவளோ அவனை கொலைவெறியோடு முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“ஓகே, ஓகே கூல் டவுன் பூஜா. திருச்சியில் ஒரு முக்கியமான வேலை ஒன்று. அந்த வேலைக்கு நீ தான் கண்டிப்பாக இருக்கணும், அதுதான் இவ்வளவு அவசரமாக அங்கே போறோம். நல்ல வேளை காலையில் நேரத்திற்கே அந்த வேளை ஞாபகம் வந்திடுச்சு. எப்படியும் மதியம் சாப்பிடும் நேரத்திற்குள் நாம அங்கே போயிடலாம்”
“ஏன் உங்களுக்கு திருச்சிக்கு போய்த்தான் மதியம் சாப்பிடணுமா? கோயம்புத்தூரில் சாப்பிட்டா ஆகாதா?”
“இன்னைக்கு சாப்பிட்டால் ஆகாது பூஜாம்மா” சக்தி அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டே கண் சிமிட்ட, கோபமாக அவனைப் பார்த்து வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டு தன் முகத்தை திருப்பிக் கொண்டவள் சிறிது நேரத்தில் தன்னையும் அறியாமல் அப்படியே கண்ணயர்ந்திருந்தாள்.
எந்தவொரு இடத்திலும் தங்கள் வாகனத்தை நிறுத்தாமல் திருச்சியில் தாங்கள் வர வேண்டிய இடத்தின் முன்னால் தங்கள் காரை நிறுத்திய சக்தி பூஜா அமர்ந்திருந்த புறமாகத் திரும்பி அவளைத் தட்டி எழுப்ப, தன் கண்களை கசக்கிக் கொண்டு தூக்கத்தில் இருந்து எழுந்து கொண்டவள் தாங்கள் இருந்த இடத்தைப் பார்த்து விட்டு அதிர்ச்சியாக காரில் இருந்து இறங்கி நின்றாள்.
‘அன்னை காப்பகம்’ வெண்ணிறப் பலகையில் பொன்மஞ்சள் நிறத்தில் பெயர் பொறிக்கப்பட்டிருந்த அந்த ஆசிரமத்தின் பெயர்ப் பலகையைப் பார்த்ததுமே பூஜாவிற்கு அவளது கடந்த கால நிகழ்வுகள் எல்லாம் கண் முன்னால் வந்து செல்வதைப் போல இருந்தது.
தான் திருச்சியில் இருந்த நாள் வரை இந்த ஆசிரமத்திற்கு ஒவ்வொரு நாளும் வந்து செல்வது அவள் வழக்கம், அதிலும் தான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது ஒவ்வொரு நாளும் தன் செலவு போக மீதிப் பணத்தை அங்கிருக்கும் உண்டியலில் போட்டுச் செல்வதை அவள் மறப்பதேயில்லை.
அப்படி தன் வாழ்வில் ஒரு அங்கமாக மாறிப் போன இடத்தை இத்தனை நாட்களுக்குப் பிறகு பார்க்கும் போது அவளுக்கு பேச்சு வரவில்லை என்று தான் கூற வேண்டும்.
‘இது நான் ஒவ்வொரு நாளும் திருச்சியில் இருக்கும் போது வரும் ஆசிரமம் ஆச்சே. என்னோட சந்தோஷம், கவலை, பயம், அதிர்ச்சி எல்லா உணர்வுகளையும் நான் வெளிப்படையாக காண்பிக்கும் ஒரே இடம் இது தானே? இந்த இடம் எப்படி சக்திக்கு தெரியும்?’ தன் மனதிற்குள் எழுந்த பெரும் கேள்விகளுடன் தன்னருகே நின்று கொண்டிருந்தவனைத் திரும்பிப் பார்த்தவள்,
“சக்தி, இது? இந்த இடம் உங்களுக்கு?” தன் வாய் வரை வந்த வார்த்தைகளை முழுமையாக சொல்ல முடியாமல் தடுமாற்றத்துடன் நின்று கொண்டிருக்க,
அவளைப் பார்த்து புன்னகை செய்தவன், “வா பூஜா, உள்ளே போகலாம்” என்று அழைக்க, அவளோ சிறு தடுமாற்றத்துடன் அவனைப் பின் தொடர்ந்து நடந்து சென்றாள்.
விஷ்வாவுடனான திருமணத்தின் பின்னர் இங்கே வந்து செல்ல அவளுக்கு சந்தர்ப்பம் பெரிதும் கிடைக்கவில்லை.
இத்தனை நாட்களின் பின்னர் அங்கே இருப்பவர்கள் தன்னை அடையாளம் கண்டு கொள்ளுவார்களா? இல்லையா? என்று கூட அவளுக்குத் தெரியவில்லை.
மனமும், கால்களும் தடுமாற ஒருவித தயக்கத்துடன் சக்தியைப் பின் தொடர்ந்து சென்று கொண்டிருந்தவள், “பூஜா அக்கா” என்ற குழந்தைகளின் சத்தம் கேட்டு சட்டென்று நின்று விட, அவள் நின்று கொண்டிருந்த இடத்தின் நாலாபுறமும் இருந்து பல சிறுவர்கள் ஓடி வந்து அவளை அணைத்துக் கொண்டனர்.
இருபது, இருபத்தைந்து சிறுவர்கள் ஒரே நேரத்தில் அவளை வந்து அணைத்துக் கொண்டதில் சிறிது தடுமாறிப் போனவள் கால் தடுமாறி விழப்போக, அதற்குள் சக்தி அவளது கையைப் பிடித்து அவளை விழ விடாமல் தாங்கிக் கொண்டான்.
அங்கே நின்று கொண்டிருந்த சிறுவர்கள் அனைவரும் பூஜாவிடம் மாறி மாறி கேள்விகளாக கேட்க, அவர்கள் கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாமல் திணறிப் போனவள் சக்தியைத் திரும்பிப் பார்க்க, அவனோ அங்கிருந்த குழந்தைகளை எல்லாம் ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டு நின்றான்.
சக்தியின் முகத்தில் தெரிந்த ஏக்கத்தைப் பார்த்ததும் பூஜாவிற்கு மனதில் ஏதோ ஒரு பாறாங்கல்லை வைத்து அழுத்துவது போல் இருக்க, சட்டென்று அங்கிருந்து விலகிச் சென்றவள் யாரும் இல்லாத ஒரு மரத்தின் கீழ் சென்று நின்று கொண்டாள்.
‘இப்படி எல்லாம் நீங்க கஷ்டப்படக் கூடாதுன்னு தானே சக்தி நான் அன்னைக்கு அவ்வளவு தூரம் உங்களுக்கு எல்லாவற்றையும் எடுத்துச் சொல்லிப் புரிய வைத்தேன். என் உயிரைக் காப்பாற்றணும்னு நினைத்து கடைசியில் உங்க வாழ்க்கையை வீணாக்கிட்டீங்களே சக்தி. எனக்கு புதிதாக வாழ்க்கையைக் காட்டித் தந்தவங்க நீங்க, ஆனால் நான் உங்க வாழ்க்கையையே மொத்தமாக அழிச்சுட்டேனே’ சக்தியின் வாழ்க்கை தன்னால் தான் இந்த நிலையில் இருக்கிறது என்று தன்னைத் தானே கடிந்து கொண்டவளாக பூஜா தன் மனதிற்குள் மருகிக் கொண்டிருந்த வேளை அவளது தோளில் ஒரு கரம் ஆதரவாகப் பதிந்தது.
தன் தோளில் பட்ட ஸ்பரிசத்தில் சட்டென்று திரும்பிப் பார்த்தவள் அங்கே நின்று கொண்டிருந்த பெண்ணைப் பார்த்ததும், “வசந்திம்மா” என்றவாறே அவரைத் தாவி அணைத்துக் கொண்டாள்.
“பூஜா எப்படிடாம்மா இருக்க?” பூஜாவினால் வசந்தி என்ற அழைக்கப்பட்ட பெண்ணின் கேள்வியில் அவரை மெல்ல நிமிர்ந்து பார்த்தவள்,
“எனக்குத் தெரியலையே வசந்திம்மா” என்று கூற, அவரோ அவளது தலையை புன்னைகையுடன் மெல்ல வருடிக் கொடுத்தார்.
“இவ்வளவு நாளாக நீ இங்கே வராமல் இந்த இடம் சந்தோஷமாகவே இல்லை தெரியுமா? இன்னைக்கு தான் இந்த இடத்திற்கு மறுபடியும் ஒரு உயிர்ப்பு வந்த மாதிரி இருக்கு” என்று விட்டு வசந்தி பூஜாவின் கையைப் பிடித்துக் கொண்டு அங்கிருந்த மர நாற்காலியில் அமர்ந்து கொள்ள,
“இவ்வளவு நாளாக நான் இங்கே வராமல் இருந்ததைப் பார்த்து நீங்க எல்லோரும் என்னை மறந்து இருப்பீங்கன்னு நினைத்தேன்” என்றவாறே பூஜா சிறிது தயக்கத்துடன் அவரைப் பார்த்து கூறினாள்.
“உன்னை எப்படி டா நாங்க மறப்போம்? இந்த ஆசிரமத்தைக் கண்காணிக்கும் பொறுப்பு எனக்கு இருந்தாலும், நீ இல்லாமல் எனக்கு எதுவுமே ஓடாது. கொஞ்ச நாள் முன்னாடி தான் நீயும், விஷ்வாவும் காதலித்து கல்யாணம் பண்ணிக்கிட்ட விடயமே எனக்குத் தெரியும். அதுவும் நீ கொஞ்ச நாளாக இங்கே வரல, அதைப்பற்றி விசாரிக்கும் போது தான் இந்த விடயம் எனக்குத் தெரிய வந்தது. அந்த விடயத்தைப் பற்றி கூட நீ என் கிட்ட இதுவரைக்கும் ஒரு வார்த்தை சொன்னது இல்லை”
“அது, வசந்திம்மா நான் வேணும்னு…”
“பரவாயில்லை டா கண்ணா, நீ சந்தோஷமாக இருந்தால் அதுவே எனக்குப் போதும்னு தான் இருந்தேன், ஆனா மறுபடியும் ஒரு கெட்ட செய்தியைக் கேட்டதும் எனக்கு என் உயிரே போயிடுச்சு. ரவுடிங்க தகராறில் விஷ்வா…” அதற்கு மேல் தான் சொல்ல வந்த விடயத்தை சொல்ல முடியாமல் வசந்தி தன் கண்களை மூடிக் கொள்ள பூஜா அவரது கையை ஆதரவாக அழுத்திக் கொடுத்தாள்.
“நீ எப்படி பூஜா இதெல்லாம் தாங்கிட்டு இருந்த? உன்னை அப்படி ஒரு நிலையில்…” என்றவாறே மேலும் பேசப் போனவர் பூஜாவின் நெற்றியில் இருந்த குங்குமத்தையும், கழுத்தில் கிடந்த தாலியையும் பார்த்து விட்டு சட்டென்று அவளை இறுக அணைத்து விடுவித்தார்.
“எனக்கு… எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கு பூஜா. உன்னை இப்படி பார்க்கும் போது இத்தனை நாட்களாக நான் உனக்காக அந்த கடவுள் கிட்ட வேண்டிக்கிட்டது வீண் போகலன்னு புரிஞ்சுடுச்சு. ஆமா உன் வீட்டுக்காரர் எங்கே?” வசந்தி பூஜாவின் நெற்றியில் முத்தமிட்டு விட்டு தன் பார்வையை சுழல விட்ட நேரம்,
“மேடம் நான் வரலாமா?” என்றவாறே சக்தி அங்கு வந்து சேர்ந்திருந்தான்.
“நீங்க சக்தி தானே? அஞ்சு வருஷ…”
“ஆஹ், ஆமா, ஆமா. நான் சக்தி தான் மேடம். பூஜாவோட ஹஸ்பண்ட்” வசந்தியை அடுத்த வார்த்தை பேச விடாமல் அவரது கையைப் பிடித்து குலுக்குவது போல பாவனை செய்தவன் எதுவும் பேச வேண்டாம் என்பது போல ஜாடை காட்ட, அவரும் அவனது கண் ஜாடையைப் புரிந்து கொண்டு அவனைப் பற்றி மேலும் எதுவும் பேசவில்லை.
“மேடம் பசங்க எல்லோருக்கும் லஞ்ச் கொடுக்கணும். ஏற்கனவே ரொம்ப நேரம் ஆகிடுச்சு, பசங்க எல்லோரும் பசியோடு இருப்பாங்க, உள்ளே போகலாமா?” என்று சக்தி அவரைப் பார்த்து வினவ, அவனைப் பார்த்து ஆமோதிப்பாக தலையசைத்தவர் பூஜாவையும் அழைத்துக் கொண்டு அந்த ஆசிரமத்தின் சாப்பாடு பரிமாறும் இடத்தை நோக்கி நடந்து சென்றார்.
“பூஜா இன்னைக்கு உன் கையால் தான் எல்லோருக்கும் சாப்பாடு பரிமாறணும். போம்மா, போய் பரிமாறு” என்றவாறே வசந்தி அவளது கையில் பாத்திரம் ஒன்றை வைக்க,
சிறிது குழப்பத்துடன் அவரைத் திரும்பிப் பார்த்தவள், “ஆனால் ஏன்?” கேள்வியாக அவரை நோக்கினாள்.
“என்ன சக்தி? உங்க வைஃப்க்கு அவங்க பிறந்தநாள் கூட ஞாபகம் இல்லை போல” வசந்தி கேலியாக சிரித்துக் கொண்டே சக்தியின் புறம் திரும்ப,
அவரைப் பார்த்து சமாளிப்பது போல புன்னகை செய்தவன், “சின்னக் குழந்தைங்களோடு பழகி பழகி என் மனைவியும் சின்ன குழந்தையாகவே மாறிட்டா, அதுதான் அவளுக்குப் பதிலாக எல்லாவற்றையும் நானே நினைவு வைத்திருக்கேன்” என்று கூற, அவரும் சிரித்துக் கொண்டே பூஜாவைப் பார்த்து கேலியாக புருவம் உயர்த்தினார்.
அவரது கேலியில் சக்தியை முறைத்துப் பார்க்க முயன்று முடியாது போனவள், முகம் சிவக்க அங்கிருந்து நகர்ந்து சென்று உணவு பரிமாறும் வேலையைத் தொடங்கி விட, சக்தியும் தன் சிரிப்பை மறைத்துக் கொண்டபடி உணவு பரிமாறும் வேலையில் தன்னால் முடிந்த மட்டும் அவளுக்கு உதவிகளை செய்து கொடுக்கத் தொடங்கினான்.
சிறிது நேரத்தில் சாப்பாடு பரிமாறும் வேலைகளை முடித்து விட்டு பெயருக்கு இரண்டு, மூன்று பருக்கைகளை சாப்பிடுகிறேன் என்ற பெயரில் உண்டு முடித்தவள் அந்த இடத்தில் அதற்கு மேலும் இருப்பதற்கு மனமின்றி அந்த ஆசிரமத்தின் பின் புறமாக இருந்த குளத்தின் அருகே சென்று அமர்ந்து கொண்டாள்.
சிறிது நேரம் அந்த குளத்தின் நீரையே கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தவள், “பூஜா இங்கே என்ன பண்ணுற?” என்ற வசந்தியின் கேள்வியில் அவசர அவசரமாக தன் முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டு எழுந்து நின்றாள்.
“பூஜா நீ அழுதியா?”
“இல்… இல்லை வசந்திம்மா”
“பூஜா, பொய் சொல்லாதே. நீ உண்மையை மறைத்தாலும் உன் முகம் எல்லாவற்றையும் காட்டிக் கொடுத்து விடும். சரி சொல்லு, எதற்காக இங்கே வந்து தனியாக இருக்க?”
“எனக்குத் தெரியலை வசந்திம்மா. கொஞ்ச நேரம் தனியாக இருக்கணும் போல இருந்தது”
“சக்திக்கும், உனக்கும் ஏதாவது பிரச்சினையா?”
“……”
“அப்போ ஏதோ இருக்கு”
“அப்படி எல்லாம் எதுவும் இல்லை ம்மா”
“வாய் தான் இல்லைன்னு சொல்லுது, ஆனா கண்ணிலும், பேச்சிலும் தடுமாற்றம் அதிகமாகவே இருக்கு”
“…..”
“நான் இப்போ தான் சக்தி கிட்ட உங்க கல்யாணத்தைப் பற்றி பேசிட்டு இருந்தேன். உன்னை இப்படி அவசரமாக கல்யாணம் பண்ணிக்கணும்னு சக்தி கூட நினைத்து இருக்கல, ஆனால் என்ன பண்ண? அந்த கடவுளோட விளையாட்டு இப்படித்தான் எல்லாம் நடக்கணும்னு இருக்கு”
“அவங்க அந்த சந்தர்ப்பத்தை தனக்கு ஏற்ற மாதிரி பயன்படுத்திட்டாங்க, அதற்கு இப்படி ஒரு காரணப்பேரு வேற” பூஜா சிறிது சலிப்புடன் அவரைப் பார்த்துக் கூறவும்,
அவளது கூற்றில் சற்று அதிர்ச்சியாக அவளைப் பார்த்துக் கொண்டு நின்ற வசந்தி, “அப்போ உனக்கு இந்த கல்யாணத்தில் கொஞ்சம் கூட விருப்பம் இல்லையா?” என்று வினவினார்.
“எனக்கு விருப்பம் இல்லை, என்னால் இன்னொரு வாழ்க்கையை நினைத்துக் கூட பார்க்க முடியாது வசந்திம்மா”
“அப்படியா? அப்போ எதற்கு இவ்வளவு கஷ்டப்பட்டு நீ சக்தி கூட வாழணும்? உனக்குப் பிடித்த வாழ்க்கை வேணும்னு உன் அம்மா, அப்பாவை எதிர்த்து வீட்டை விட்டுப் போக உனக்குத் தைரியம் இருக்கும் போது, இந்த பிடிக்காத கல்யாணத்தை விட்டுப் போக மட்டும் உனக்குத் தைரியம் இல்லையா என்ன?” வசந்தியின் கேள்வியில் பூஜாவிற்கு வாயடைத்துப் போக திருதிருவென விழித்துக் கொண்டு நின்றவள் அவரது கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தலை குனிந்து நின்றாள்.
“என்னம்மா பூஜா அமைதியாகிட்ட? பதில் சொல்லும்மா. எல்லாக் கேள்விகளுக்கும் ஒரு பதில் வைத்து இருப்பியே, இதற்கு என்ன பதில் சொல்லப் போற? சரி, உன் அம்மா, அப்பா ஆபத்தில் இருக்காங்கன்னு நீ அமைதியாக இருந்தேன்னு வைத்தாலும் இப்போ தான் அவங்க பாதுகாப்பாக இருக்காங்களே. இதற்கு மேலேயும் நீ ஏன் கஷ்டப்படணும்? சக்திக்கு நல்ல வாழ்க்கை அமையணும்னு நீ அவரை விட்டுக் கொடுத்து போகலாமே?”
‘சக்தியை விட்டுட்டு போகணுமா? நான், நான் எங்கே போவேன்? சக்தியை விட்டால் எனக்கு வேறு யாரு துணையாக இருப்பாங்க? எந்தவொரு பிரச்சினை வந்தாலும் அவங்க தானே முதல் ஆளாக எனக்குப் பக்கபலமாக வந்து நிற்பாங்க. நான் திருச்சியை விட்டுப் போன நாளிலிருந்து இன்னைக்கு வரைக்கும் எனக்கு நிழலாக இருப்பது சக்தி தானே? அவரை விட்டு என்னால் போக முடியுமா? இந்த கல்யாணம் நடந்து ஐந்து மாதங்கள் தான் முடிந்து இருக்கு, ஆனால் இதற்கு முன் வந்த நாட்கள் எல்லாம் அவரோடு தானே எனக்கு கழிந்து இருக்கு. இதையெல்லாம் யோசிக்காமல் நான் எப்படி அவரை விட்டு விலகிப் போக நினைப்பேன்? என்னால் அவரை விட்டு போக முடியுமா? இல்லை, இல்லை. முடியாது’ தன் மனதிற்குள் சக்தியைப் பற்றி என்ன வகையான எண்ணங்கள் இருக்கிறது என்பது அப்போது தான் பூஜாவிற்கு மெல்ல மெல்ல பிடிபடத் தொடங்க, அந்த நிலையை முழுமையாக ஏற்றுக் கொள்ளவும் முடியாமல், ஒட்டுமொத்தமாக விலக்கவும் முடியாமல் தன் தலையை இரு கைகளாலும் பிடித்துக் கொண்டவள் அப்படியே முழங்காலிட்டு அமர்ந்து கொண்டாள்.
“நான் ஒரே ஒரு கேள்வி தான் உன் கிட்ட கேட்டேன், அதற்கே உன்னிடம் பதில் இல்லை. இன்னும் என் மனதில் இருக்கும் எல்லாக் கேள்விகளையும் கேட்டால் இப்போவே நீ சக்தியை தேடி ஓடிடுவ” என்றவாறே அவளை மெல்ல எழுந்து நிற்கச் செய்தவர்,
“வாழ்க்கையில் பல பேருக்கு இரண்டாவது வாய்ப்பு கிடைப்பது இல்லை பூஜா. நாம எப்போதோ பண்ணிய புண்ணியம் தான் அப்படியான ஒரு வாய்ப்பைத் தரும். இது உனக்குக் கிடைத்திருக்கும் ஒரு அரிய வாய்ப்பு, இதை தயவுசெய்து அவசரப்பட்டு இழந்து விடாதே. நீ என்னை எப்படி அம்மான்னு நினைத்து பேசிப் பழகுறியோ அதே மாதிரி தான் நானும் உன்னை என் பொண்ணாக நினைத்து இதை எல்லாம் சொல்லுறேன். சரி, வா போகலாம். சக்தி ரொம்ப நேரமாக உனக்காக காரில் வெயிட் பண்ணுறாங்க” என்றவாறே அவளை சக்தி அமர்ந்திருந்த கார் வரை அழைத்துச் சென்றவர், மனம் நிறைந்த சந்தோஷத்துடன் அவர்களை வழியனுப்பி வைத்தார்.
திருச்சியில் இருந்து கோயம்புத்தூர் வந்து சேரும் வரை சக்தியிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல் அமைதியாக அமர்ந்திருந்த பூஜா வீட்டிற்கு வந்த பின்னரும் அவனிடம் எதுவும் பேசாமல் தங்கள் அறைக்குள் சென்று விட, சக்தி குழப்பத்துடன் அவள் சென்ற வழியையே பார்த்துக் கொண்டு நின்றான்…….
**********
பாறையில் செய்தது என் மனம் என்று
தோழிக்கு சொல்லியிருந்தேன்
பாறையின் இடுக்கில் வேர் விட்ட கொடியாய்
நீ நெஞ்சில் முளைத்து விட்டாய்
**********