இரட்டை நிலவு – 9

eiVCMWU67234-f4028b51

இரட்டை நிலவு – 9

மறுநாள் காலை வெயில் கண்களை கூச செய்ய, கசக்கியபடியே விழிக்க அமீக்காவின் தோள்களில் சாய்ந்தபடி இவள் உறங்கியிருக்க அணைத்தவாறே உறங்கி கொண்டிருந்தாள் அவள்.. அதன் பின்னே நேற்று நிகழ்ந்தவை அனைத்தும் நினைவுக்கு வர, கூந்தலினை அழுந்த கோர்த்து கொண்டு நாக்கை நடித்து கொண்டாள்..

பத்ரியிடம் குற்ற உணர்வை நீக்கி கொள்ள துணிந்த தன்வி ஒரு வேகத்தில் கத்திவிட்டு அமீக்காவின் தோள்களில் சாய்ந்திருக்க தற்பொழுது உண்மை நிலை விளங்குகிறது.. கலங்கிய விழிகளை துடைத்து விட்டு அறைக்குள் சென்றவள் வழக்கமான வாழ்க்கையினுள் நுழைய முற்பட்டாள்.. ஆனாலும் மனமும் உடலும் ஒத்துழைக்காது, “நான் இப்படி பண்ணியிருக்க கூடாது.. இப்போ என்னோட சேர்த்து நாலு பேரோட வாழ்க்கையும் கெட்டு போச்சு..” என தனக்குள்ளே நொறுங்கி கொண்டவள் இறுதியாக படுக்கையில் வீழ்ந்தாள்.. கண்களில் கண்ணீர் சிந்தவில்லை, கைகளில் கோபம் இல்லை.. மனதால் உடைந்து போயிருந்தாள்..

எழுந்த அமீக்கா மெல்ல அறையில் நுழைய, சோகமாக படுக்கையில் விட்டத்தை வெறித்து கொண்டிருந்த தன்வி தான் கண்களில் நிறைந்தாள்.. சிறு புன்னகையோடு அருகே சென்ற அமீக்கா, அருகிலேயே தலை சாய்த்து அவள் பார்வை சென்ற பாதையில் பயணித்து விட்டத்தை நோக்கினாள்..

தனது சிரசின் அருகே எதிர்பதத்தில் கிடத்தப்பட்டிருந்த அமீக்காவின் விரல்களை கோர்த்து கொண்ட தன்வியின் விரல்கள் சில்லிட்டிருந்தது.. அவளின் குரலில் மட்டுமல்ல மூச்சு காற்றில் கூட என்ன உணர்கிறாள் என்பதை அறிந்து கொள்ளும் மாயவித்தையை அமீக்கா நேற்று இரவே கற்று கொண்டிருக்க, “இப்போ எதுக்காக இவ்ளோ நெர்வஸா இருக்குறா??” என கேட்டாள்..

ஒருகண வியப்பின் பின்னாலேயே “மீகா, எனக்கு பயமா இருக்குது.. பத்ரிக்கு உன்னை பத்தின விஷயம் தெரிஞ்சிடுச்சு.. என்னை பத்தியும் தெரிஞ்சிடும்.. என்னோட ஒருத்திக்கு இருக்குற ப்ராப்ளம்னால நீ, ஷ்ரவன், பத்ரி எல்லாரும் அபெக்ட் ஆகுறீங்க.. எனக்கு ரொம்ப கில்ட்டியா இருக்குது..” என மெலிதான குரலில் தனது கலக்கத்தை வெளிப்படுத்தினாள்..

“உன்னோட பயம் எனக்கு புரியுது.. பட் உனக்கு இருக்குறது ப்ராப்ளம் இல்லை தனு.. அதை பர்ஸ்ட் புரிஞ்சிக்கோ.. காதல்ல விழுந்தவங்க எல்லார்கிட்டயும் வியாதி இருக்குதுன்னு அர்த்தமா?? தேவையில்லாம குழப்பிக்காத..” என அமீக்கா சமாதானம் செய்ய முயன்று கொண்டிருக்க, விருட்டென எழுந்து அமர்ந்து தனது மடியில் ஏந்தினாள் தன்வி.. “நீ இப்படி யோசிச்சு பாரு மீகா.. என்னோட பொசசிவ்னெஸ் அண்ட் கிஸ் அன்னைக்கு எக்ஸ்போஸ் ஆகாம இருந்திருந்தா ஷ்ரவனும் நீயும் ஹாப்பி கப்பிள்ஸா இருந்துருப்பீங்க.. பத்ரி கூட அவன் காதலிச்ச பொண்ணு கூட சந்தோசமா இருப்பான்..” என கூறி கொண்டிருந்தவள், “அப்போ நீ??” என்ற அமீக்காவின் கேள்வியில் தடுமாறினாள்..

தன்வியின் இரு கரங்களையும் தன் நெஞ்சோடு அனைத்து கொண்ட அமீக்கா, “தனு, இப்படி மட்டும் இருந்திருந்தான்ற ஒற்றை வரியை வச்சு ஆயிரம் ஆயிரம் கதை கற்பனையிலேயே எழுதலாம்.. பட் ரியாலிட்டி மட்டும் தான் நிஜம்.. அளிக்க முடியாததும் கூட.. குழந்தை மாதிரி உன்னை நீயே திட்டிக்காத.” என இதழ் குவித்து பறக்கும் முத்தத்தை காற்றில் மிதக்க விட்டு, “ஒய், இன்னைக்கும் ஆப் சொல்லலாம்னு ப்ளானா?? சீக்கிரம் ரெடியாகி ஆபீஸ் போடி..” என விரட்டினாள்..

அடம்பிடித்து குழந்தயென சிணுங்கி கொண்டிருந்த தன்வியை அமீக்கா கிளப்பிவிட, உள்ளே நுழைந்தான் ஷ்ரவன்.. புன்னகையுடன் கரங்கள் நிரம்ப மலர்கொத்துக்களோடு நுழைந்தவனை எதிர்கொள்ள தயங்கினாள் தன்வி.. அவள் செய்தது அப்படியொரு காரியம் அல்லவா.. “கங்க்ராட்ஸ் தனு அண்ட் மிஸ்.மாஸ் வுமன்..” என பரிசளிக்க, “வர்ற நேரமா?? உன்னை எப்போ வர சொன்னேன்..” என அமீக்கா செல்லமாக காதை திருகினாள்..

ஷ்ரவன் தன்வியை நோக்கிட, சங்கடமாகி போனது.. “ஷ்.. ஷ்ரவன்.. அன்னைக்கு ஏதோ ஒரு கோபத்துல..” என தயங்கிய தன்வியை தடுத்தவன், “தன்வி.. ஜஸ்ட் டேக் இட் ஈசியா.. இதை எல்லாம் சீரியஸா எடுத்துகிட்டு.. அப்போவே மறந்துட்டேன்..” என்றான்.. “இப்போ ஓகேவா??” என நலம் விசாரித்த தன்வியை நமட்டு சிரிப்போடு, “ஒன் நைட்ல சரியா போய்டும்.. மேடம் தான் கொஞ்சம் கன்பியூஷன் ஸ்டேட்ல இருந்ததால என்னோட அலேர்ஜியை யூஸ் பண்ணிக்கிட்டாங்க..” என்றதும் அமீக்காவை தீவிரமாக முறைத்து வைத்தாள்..

“ஷ்ரவன், எங்க ரிலேஷன்ஷிப்னால உங்களோட பீலிங்க்ஸ் ஹர்ட் ஆய்டுச்சு..” என மன்னிப்பு கேட்டிட, “தனு.. நீங்க வேற.. எனக்கு அமீக்காவை பிடிச்சதும் காதலிச்சதும் மேரேஜ் ப்ரோபோஸல் எல்லாமே உண்மை தான்.. பட் மும்பை வந்ததுக்கு அப்புறம் உங்களை அமீக்கா பாக்குற ஒவ்வொரு நொடியும் பிரகாசமாகுற அந்த முகம் என்னை பார்க்கும் போது நார்மலா தான் இருக்குது.. சோ ஐ கெஸ்ட்.. உங்களுக்குள்ள ஏதோ ஒரு ஸ்பெஷல் பீலிங்ஸ் இருக்குதுன்னு.. வாட் எ வெரைட்டீஸ்.. நம்ம ஊர்ல இருக்குற நேரோ மெயின் பீபில்க்கு மத்தியில ப்ராடா தினக் பண்ற அமீக்கா இப்போவும் என்னோட பிரெண்ட் தான்..” என உத்வேகமாக பேசியவனை வியந்து பார்க்காமல் இருக்க முடியவில்லை..

“தன்வி, நான் பர்ஸ்ட் ஷ்ரவன் கிட்ட போயிட்டு ஐ தினக் ஐ பால் இன் லவ்னு சொன்னதும் தன்வி தானேன்னு கேட்டான் தெரியுமா.. ஓவர் ஸ்மார்ட் கை தான்..” என அவனது சிகை கலைத்து விட, “அதுக்காக பிரெண்டாவும் இருக்க கூடாதுன்னு ஸீ பூட்டை சட்னியில கலந்துட கூடாது..” என கேலியாக கூற, “பண்ண மாட்டேன்..” என இடம் வலமாக தலையசைத்தாள்.. அங்கிருக்கும் மூவரும் சரியான புரிதலுடன் ஒன்றிணைந்திருக்க, தன்வியின் மனமோ பத்ரியை எண்ணி மருகி கொண்டது..

நேற்று ஒரு வேகத்தில் சரமாரியாக பேசிவிட்டு இப்பொழுது வரை சமாதானத்திற்கான ஒரு அடியை கூட எடுத்துவைக்கவில்லை.. ஷ்ரவனை போல அவனும் புரிந்து கொண்டு தன்னை தோழியாக ஏற்று கொள்வானா என்ற ஏக்கம் தோன்றி மறைந்தது.. அமீக்கா இல்லாத இந்த இடைப்பட்ட நாட்களில் நல்ல நண்பனாக அவள் துவண்டு விடாது காத்து கொண்டது அவன் தானே.. அவளின் முகபாவனையே அவளின் கலக்கத்தை அறிவித்திட, “தன்வி, பீல் பண்ணாதீங்க.. பத்ரிக்கும் கூடிய சீக்கிரமே இந்த புரிதல் வரும்..” என்று ஷ்ரவன் நம்பிக்கையளித்திடவே “ம்ம்” என தலையசைத்து கொண்டாள்..

பணியை முடித்து விட்ட தன்வி பத்ரியின் எண்ணிற்கு அழைக்க, தொடர்பு கிடைக்கவில்லை.. பின் முதல்நாள் அவன் தங்கியிருந்த ஹோட்டலின் பெயர் நினைவிற்கு வர, அங்கு சென்றாள்.. வரவேற்ப்பில் விசாரிக்க, சற்று நேரத்திற்கு முன்பு கிளம்பியதாக மட்டும் தகவல் கிடைக்கபெற்றதே தவிர பத்ரியை காணும் வாய்ப்பு கிட்டவில்லை..   

சோர்வாக அறைக்கு திரும்பிய தன்வி, நடந்ததை அமீக்காவிடம் கூறி முடித்தாள்.. “ஓகே.. தனு.. பத்ரிக்கும் சம் ஸ்பேஸ் வேணுமே..” என சமாதானம் செய்ய முயற்சிக்க, “மீகா, உனக்கு இந்த விஷயத்தோட சீரியஸ்னஸ் புரியலை.. பத்ரிக்கு என்னை பத்தி தெரியுமா தெரியாதான்னு கூட தெரியலை.. அடுத்த நிமிஷம் என்ன நடக்குமோன்னு பயமா இருக்குது..” என்றவளின் குரலில் அதிகத்திற்கும் அச்சத்தில் இருந்தது..

“ஓகே.. கூல்.. கூல்.. தனு..” என்றபடியே அவளை அணைத்த அமீக்கா, “அடுத்து என்ன நடக்குமோன்னு எல்லாருக்குமே பயம் இருக்கும்.. ஆனா அதையே நினைச்சிட்டு இருந்தா இந்த நிமிஷத்தை வாழ முடியாதே.. தனு.. பத்ரி ஒரு சேஞ்க்காக ப்ரேக் எடுக்கலாம்.. அவனுக்கும் நாம ஸ்பேஸ் குடுக்கலாம்..” என ஆறுதலாக பேசி கொண்டிருந்தாள்..

அப்பொழுது, மேஜையில் அடுக்கப்பட்டிருந்த மெழுகுவர்த்திகளை கண்ணுற்ற தன்வி, “மீகா, ஏதாவது சர்ப்ரைஸ் ப்ளான் இருக்குதா??” என அப்பாவியாக கேட்க, மாட்டிகொண்ட அமீக்காவோ மழுப்பலாக, “ச்சே..ச்சே.. அப்படி இல்லையே.. ஜஸ்ட் சர்ப்ரைஸ் பண்ணலாமான்னு யோசிச்சிட்டு இருந்தேன்..” என்றிட, “கள்ளி..” என காதினை திருகினாள்..

வேகமாக படுக்கையறையின் கதவை திறக்க, கட்டில் முழுவதும் காகித குப்பைகள் இரைந்து கிடக்க, சுவற்றில் இருவரின் படங்களை இதய வடிவிற்கு அடுக்காக ஒட்டி வைத்து விளக்குகள் ஒளிர்ந்து கொண்டிருந்தது.. “மீகா..” என்ற தன்வியின் விழிகள் விரிந்து வியப்பை வெளிபடுத்தி கொண்டிருக்க, “ப்ச்.. அவ்ளோ தானா?? ஒரு ஹக் கிடைக்கும்னு நினச்சேன்..” என உதடு வளைத்து கொண்டவளை காதலாக அணைத்து கொண்டாள் தன்வி..

“பியூச்சர் எப்படி இருக்கும்னு தெரியலை மீகா.. ஆனா எப்பவும் நான் சாயுரதுக்கு உன்னோட தோள்களும் என் மடியில் தலை சாய்க்குற நீயும் வேணும்..” என்றவளின் கண்கள் பனிமழையில் நனைந்து விட்டிருந்தது.. “ப்ச், தனு.. உன்னோட சுவாசம் இல்லாம என்னால உயிர் வாழ முடியாதுன்னு தான் நான் மும்பை கிளம்பி வந்ததே..” என தலையில் மெல்ல தட்டியவள், “நீ வர்றதுக்குள்ள பெட்டை கிளீன் பண்ணிடலாம்னு தான் இருந்தேன்.. பட் இன்னைக்கு டைமும் சரி இல்லை.. உன்னோட மூடும் சரியில்லை.. இருந்தாலும் எனக்காக கொஞ்சமா..” என இழுத்தாள்..

அவள் என்ன கூற போகிறாள் என தெரிந்தும் கண்களில் ஆர்வத்தை பெருக்கெடுக்க செய்த தன்வி, “உனக்காக..” என நெருங்கினாள்… “எனக்காக கொஞ்சம் பெட்டை கிளீன் பண்ணிடேன்..” என்கவும் தன்வி முறைக்க, பாசாங்காய் பயந்து நடுங்க பாய்ந்து அடிக்க செல்ல அவ்விடமே களேபரமாக தொடங்கியது..

மறுநாள் காலை,

கண்கள் சொருகிய நிலையில் உறக்கத்திலிருந்த தன்வியின் முகத்தில் வீழ்ந்து கிடந்த முடிகற்றைகளை மெல்ல விரித்து விட்ட அமீக்கா மோன நிலைக்கு செல்ல துவங்கினாள்..

“நீ செய்த மாயமென்ன மாயக்காரியே..

மலங்க மலங்க விழிக்கும் மங்கையிடத்திலா

மனம் மல்லாந்து கிடந்து மன்றாடி கொண்டிருக்கிறதடி..

ஒவ்வொரு விடியற்பொழுதிலும் என்கவி

உனை துயில்கலைக்க ரீங்காரமாய் என்னிடம் சண்டையிட

ரகசியமாய் ரசித்த கள்ளத்தனத்தை கண்டுகொண்டேனடி..

காபிகலக்கும் காதலியின் இடைவளைத்து கழுத்தில்

சுவாசம் வெளியிட்டு சிலிர்க்க செய்யவேண்டுமடி..

ஒற்றை நெற்றி பதித்தலுடன் பலதூரம் கடக்க

பதறாது காத்திருப்பின் சுகம் அனுபவிக்கவேண்டுமடி..

கதிரவன் இரவினுள் சங்கமிக்க சாந்தமாய் மடிசாய்த்து

கண்களில் நிறைந்த உன்னுடன் கனவுகளாகிடவேண்டுமடி..

நான்கூறும் அனைத்தும் என்னில் இருக்கும் நீயோ

உன்னில கலந்த நானோ நிறைவேற்றிடவேண்டுமடி.. 

என வடித்து கொண்டிருந்த அமீக்காவின் மீது கரம் வளைத்த கண்களை திறவாத தன்வியை செல்லமாக முறைத்து கொண்டிருக்க, “இப்படியே திரும்பவும் கனவுக்குள்ள போய்டுறேனே.. ப்ளீஸ்..” என்றாள் தன்வி.. “நான் நீன்னு ஆரம்பிக்கும் போதே எழுந்துட்டன்னு தெரியும்.. ஒழுங்கா எந்திரிச்சு கிளம்பு.. என்னோட ஸ்டார்ட்அப்க்கு இன்னைக்கு என்ட்ரி கொடுக்கலாம்னு இருக்குறேன்..” என்ற அமீக்கா போர்வையை அழகாய் மடித்து அடுக்கினாள்..

“ம்ஹும்.. ம்ஹும்..” என்ற சிணுங்கலோடு எழுந்த தன்வி அலுவலகத்திற்கு கிளம்பினாள்.. பாதி வாசலுக்கு சென்ற பின்னரே, நினைவு வந்தவளாக ஐடி கார்டை எடுக்க சென்றாள் தன்வி.. அந்த நேரத்தில் அமீக்காவின் போன் சிணுங்கியது..

“ஹலோ ப்பா..” என உற்சாகத்துடன் தொடங்க, “அமீ, தன்வி பக்கத்துல இருந்தா போனை கொடு..” என்ற குகனின் குரலில் ஒரு அவசரம் தெரிந்தது.. திரும்ப வந்தவளிடம் லவுட் ஸ்பீக்கராக மாற்றியே கொடுக்க, “தன்வி, என்னாச்சு ம்மா?? மாப்பிள்ளை நீ இல்லாம தனியா இங்க வந்துட்டாரு.. அவர் இல்லாம நீ மட்டும் அங்க என்ன பண்ற??” என கேட்டார்..

தைரியமாக தனித்தனியே சாதிக்க வேண்டும் என்று தத்துவம் பேசும் குகன் மறைந்து மருமகளுக்காக தவிக்கும் சராசரி மனிதனாகவே அக்குரலில் உணரப்பட்டார்.. “பத்ரிக்கு வொர்க் முடிஞ்சிது.. என்னோட ஆபீஸ்ல லீவ் அப்ரூவல் நாளைக்கு தான் கிடைக்கும் மாமா..” என அந்நேரத்தில் இருந்த பதட்டத்தில் உளறி கொட்டினாள் தன்வி.. “யோ..” என மெளனமாக தலையிலடித்து கொண்ட அமீக்காவை திருதிருவென விழித்து கொண்டிருந்த தன்வியை, “சரிமா.. நாளைக்கு கிளம்பி வா..” என்ற குகன் போனை அணைத்தார்..

“இப்போ என்ன பண்றது??” என அமீக்கா முற்றும் திடுகிட்டவளாக வினவ, “எதுக்காக அப்படி சொன்ன??” என அமீக்கா கேட்டு கொண்டிருக்கும் போதே தன்வியின் போன் அலறியது.. அழைத்தது பரிமளா தான்.. நடப்பது என்னவென்று சரியாக யோசிக்கும் முன்னரே அடுத்ததடுத்த அடிகள்.. அமீக்காவை அமைதியாக இருக்கும் படி கூறிவிட்டு போனை அட்டென்ட் செய்ய, லவுட் ஸ்பீக்கரே தற்சமயத்திற்கு சரியானதாக தோன்றியது..

“ஹலோ..” என கம்மிய குரலில் கேட்டது தான் தாமதம், “தன்வி, எப்படி இருக்குறம்மா?? பத்ரி வீட்டுக்கு வந்திருக்குறான்.. நாளைக்கு உன்னால இங்க வர முடியுமா?? மறக்காம வந்துடு.. நாங்க உனக்காக வெயிட்டிங்.. வரும் போது அந்த அமீக்கா இல்லாம வந்துடு..” என்கவும் மறுக்க வழியின்றி “சரி..” என்று தலையாட்டி வைத்தாள்..

தன்வியின் இதயமோ வறண்ட தொண்டைக்கு ஈடு கொடுக்கும் விதமாக வேகவேகமாக துடிக்க துவங்க, நெற்றிகளில் வியர்வை வழிந்தோடி கொண்டிருந்தது.. “என்ன நடக்குது தன்வி.. அப்பாவும் வர சொல்றாரு.. ஆண்ட்டியும் சொல்றாங்க.. என்ன தான் நடந்துச்சு..” என குழப்பத்தோடு புருவங்களை தேய்ந்த்திட, “உனக்கு இன்னுமா புரியல மீகா.. எல்லாம் வெளிய வந்துச்சு.. நம்ம உண்மை எல்லாருக்கும் தெரிஞ்சிடுச்சு.. பத்ரி அம்மா சொன்னதை தெளிவா கேட்ட தானே.. எல்லாம் போச்சு..” என வாசலிலேயே அமர்ந்து அரற்ற துவங்கினாள்..

கண்களில் இருந்த நீர் வெளியேறும் முன்னே தன் நெஞ்சோடு அணைத்து கொண்ட அமீக்கா, “ஒண்ணுமில்ல தனு.. நீ நினைக்குற மாதிரி எதுவும் ஆகியிருக்காது.. உண்மை தெரிஞ்சாலும் என்ன?? என்னைக்காவது வெளிய வரவேண்டியது தானே.. இப்போ வந்திருக்குது.. டோன்ட் வொர்ரி.. என்ன ஆனாலும் நம்ம பக்கம் லாபம் தான்.. நீ பீல் பண்ணாத..” என முதுகை நீவி விட்டாள்..

“என்ன லாபம் மீகா, அன்னைக்கு மதியோட ஒருநிமிஷம் பார்த்ததுக்கே அம்மாவோட ரியாக்ஷன் பார்த்த தானே.. வீட்ல இருக்குற எல்லாரையும் எப்படி பேஸ் பண்ணுறது??” என்றிட, அவளின் பயத்தினை அமீக்காவால் உணர்ந்து கொள்ள முடிந்தது.. அவள் அன்று பயத்தில் தவித்தாள் என்றால் இவள் பதைப்பில் அல்லவா தவித்து கொண்டிருந்தாள்..

“தனு, எல்லாரையும் நாம பேஸ் பண்ணித்தான் ஆகணும்.. எவ்ளோ நாளைக்கு இந்த சொசைட்டிய பார்த்து ஓட முடியும்.. ம்ம்.. கஷ்டம் தான்.. நாம இன்னும் நிறைய ஸ்ட்ரகிள் பண்ணனும்.. ஆனா இதெல்லாத்தையும் தனி தனியா செய்ய போறதில்லை.. சேர்ந்து பண்ண போறோம்.. நீ ஞாபகத்துல வச்சிக்கோ தனு.. எல்லா ப்ராப்ளம்லையும் இந்த கை உன்னோட கையை கோர்த்து தான் நிக்கும்.. நாம ரொம்ப ஸ்ட்ராங்கெஸ்ட் கேர்ல்ஸ்.. நாம ஏன் பயப்படனும்.. வா.. ஊருக்கு கிளம்பலாம்.. உன்னோட அம்மா என்னோட அப்பா ரெண்டு பேரையும் பேஸ் பண்ணலாம்..” என அமீக்கா நம்பிக்கையாக பேசிட, அன்றே கிளம்பினர்..

ரயிலில் வரும் வழி முழுவதும் தன்வி மனதில் வீட்டில் என்ன நடந்திருக்குமோ?? உண்மை தெரிந்ததும் எப்படி ரியாக்ட் செய்திருப்பார்கள்?? எப்படி முகத்தில் விழிக்க போகிறோம்?? என்ன சமாதான மொழிகளை கூற போகிறோம்?? இந்த சமூகம் ஏற்று கொள்ளுமா?? ஏற்று கொள்ளவில்லை என்றால் எப்படி எதிர்கொள்ள போகிறோம் என்ற கேள்விகள் சூழ்ந்து கொண்டே இருந்தது..

மும்பையில் இருந்த வரை பலதரப்பட்ட மக்களும் பலவிதமான கலாச்சாராமும் விரவி கிடக்க, தான் செய்வது தவறென்ற உணர்வே இன்றி இருந்து விட்டாள்.. தற்பொழுது வளர்ந்து வரும் கிராமத்தினுள் நுழைந்து தங்களை பற்றி எடுத்து கூறினால் அவர்களின் கருத்து என்னவாக இருக்கும் என்பதையே யூகிக்க முடியவில்லை.. கிராமங்களில் ஒரே கலாச்சாரம் மட்டுமே பின்பற்றி வரும் நிலையில் அவள் யோசித்த சாத்தியகூறுகள் அனைத்துமே சரிந்து கொண்டிருந்தது..

ஆய்வின் படி,

75 சதவீத லெஸ்பியன் ஜோடிகள் குடும்ப மற்றும் சமூக வன்முறையை எதிர்கொள்கிறார்கள்.. ஏற்று கொள்ள மறுப்பதுடன் தூஷித்த வார்த்தைகளையும் வெளியிடுகிறார்கள்.. சில இடங்களில் இந்த உறவுநிலை பாவம் என்றும் தவறு என்றும் ஒதுக்கி வைத்து பார்க்கப்படுகிறார்கள்..

சான்றாக திருவிவிலியத்தில்,

1 கொரிந்தியர் 6: 9-10 – “துன்மார்க்கர் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று அறியீர்களா? நீங்கள் வஞ்சிக்கப்படாதிருங்கள்; பாலியல் ஒழுக்கங்கெட்ட, விக்கிரகாராதனைக்காரரும், விபசாரக்காரரும், விபசாரக்காரரும், கொள்ளைக்காரரும், கொள்ளைக்காரரும், திருடரும், அல்லது அவதூறானவர்களோ, தந்திரக்காரரும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை.  

ரோமர் 1: 26-27 – “இதினிமித்தம் தேவன் அவர்களை இழிவான இச்சைகளுக்கு ஒப்புக்கொடுத்தார், அவர்களுடைய பெண்கள் இயற்கைக்கு மாறானவர்களுடனான இயற்கை உறவுகளை பரிமாறினார்கள், அதேபோல ஆண்களும் பெண்களுடன் இயற்கை உறவுகளை கைவிட்டு, ஆண்கள் மற்றவர்களுடன் தவறான செயல்களை செய்தனர், மேலும் தங்களைத் தாங்களே தங்களின் மோசமான தண்டனையைப் பெற்றனர்.

என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.. புனித நூல்களில் பல இடங்களில் இவ்வகையான உறவுகள் தவறென்று உணர்த்துகிறது.. எது சரி எது தவறு என்ற கேள்விக்கு விடை குழப்பத்திலேயே உலாவுகிறது..    

-அமீக்கா

error: Content is protected !!