இரும்புக்கோர் பூ இதயம் -அத்தியாயம் 10

இரும்புக்கோர் பூ இதயம் -அத்தியாயம் 10
Epi 10
நிவியை அனுமதித்திருந்த அறையினுள் ஒவ்வருவராக சென்று பார்த்து வர அனைவரையும் ஒரு பார்வை பார்த்தவள் அவர்களுள் அவள் எதிர் பார்த்தவன் இருக்கவில்லை.மீனா தொடக்கம் விஜயின் அன்னை அருணா வரை அனைவரது வார்த்தையும் இதுவாகவே இருந்தது.
“எதுக்கு அவனுக்காக உயிர விட துணிஞ்ச, எவ்வளவு தைரியமான பொண்ணு நீ. இப்படி பண்ணிட்ட. ஒரு நிமிஷம் நம்மள நீ நினைக்கவே இல்லையே. உயிர் போயிருந்தா நினைக்கவே உடம்பெல்லாம் நடுங்குது. கடவுளுக்குத்தான் நன்றி சொல்லணும் நம்மளுக்கு உன்ன திருப்பி தந்துட்டான்… “
நிவியின் மனதோ இன்னும் நடுக்கமாகவே இருந்தது. தன் உயிர் பிரிந்திருந்தால். கடவுளே! என்ன பைத்தியக்காரத்தனம் பண்ணிட்டேன்.. அவள் இன்னும் பேசியிருக்க வில்லை. அவளுக்கு இன்னும் தெரியவில்லை குரல்வளை சிக்கல் பற்றி. நர்ஸ் அவளை ஓய்வெடுக்க விடுமாறுகூற அனைவரும் வெளியில் வந்தனர். தருண் அப்பொழுதும் அவர்களுடனே இருந்தான். யாரும் அவன் இருப்பது பற்றி வேறாக நினைக்க வில்லை. ஹரியுடன் அமர்ந்திருந்தான்.அவனுக்கு துணையாக விஜய் அவனை இவர்களுடன் இருக்க சொன்னதாகவே நினைத்தனர். வெளியே வந்தவர்களை ராஜ், எல்லாருமா வீட்டுக்கு போய்ட்டு வாங்க. அவ ரெஸ்ட் எடுக்கட்டும்.நாம வெளில இருந்தும் என்ன பண்ண.”
“இல்ல நான் இருக்கேன். நீங்கெல்லாம் கிளம்புங்க.அவ எதுவும் தேவைன்னு கூப்பிட்டாள்னா.” மீனா கூறினார்.
” ஓஹ் அதுவும் சரிதான்.ஹரி நீ அம்மாவை கூட்டி போய் சாப்பிட ஏதும் வாங்கி கொடுத்து இங்கே கொண்டு வந்து விட்டுட்டு அப்புறமா வீட்டுக்கு வா.நாம வீட்டுக்குபோய் அனுப்ப லேட்டாகிடும். நான் இவங்களை அலைத்துக் கொண்டு போகிறேன்.”
“சரி மாமா நான் பார்த்துக்குறேன் நீங்க கிளம்புங்க,’ என்று அவர்களை அனுப்பியவன். ‘தருண் நீங்களும் வரீங்களா?” என கேட்க,
“நீங்க ஆன்டியை கூட்டிக் கொண்டு போய்ட்டு வாங்க. டாக்டர் இடைல எதுவும் வேணும்னு கேட்டாங்கன்னா நா உங்களுக்கு கால் பண்றேன்.” எனவும்,
“அதுவும் சரிதான். பரவல்லயா? ” என,
” அச்சோ அதுக்கென்னங்க. நீங்க அம்மாகூட போங்க. ” எனவும் ஹரி மீனாவை கூட்டிச்சென்றான்.
தருணுக்கோ ‘அப்பாடா’ என்று தான் இருந்தது. வீட்டினர் முன்னே அவளை பார்க்கவும் முடியாது தவித்துக்கொண்டிருந்தவனுக்கு கடவுளாய் பார்த்து தந்த சந்தர்ப்பம்.
அறையில் இருந்தவளோ நன்றாக பயந்திருந்தாள்.அவள் நாற்காலியை விட்டு விலகவுமே அவள் விளையாட நினைத்தது வினையாக போகிறது என்பதை உணர்த்தவள் தடுமாறவுமே அவளது கழுத்தில் இருந்த ஷால் இன்னுமே இருகியது.அந்நொடியே அவள் உயிர் போகும் என நினைத்து நன்கு பயந்துவிட்டாள்.
ஹஸ்ப்பிட்டல் வர வீட்டாரின் அழுகையும் அவர்களின் முகங்களில் இருந்த கவலையும் தான் செய்ததன் வீரியம் புரிந்தது.அதனை யோசித்துக்கொண்டு இருக்க,
தருண் நிவியின் அறையினுள் நுழைவதை கண்டவள் கண்களை மூடிக்கொண்டாள்.
அவள் அருகே போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்தவன், இவ்வளவு நாட்களும் தூர இருந்தே அவளை பார்திருக்க, இன்றோ இவ்வாறானதொரு நிலையில் அவளை அருகே பார்க்க கைகள் நடுங்க அவள் தலை கோதியவன் கண் கலங்க அவள் கைகளை பற்றியவன் அவள் முகம் பார்த்தான்.
கழுத்துப்பகுதியில் கன்றிச்சிவந்திருக்க மூக்கினுள்ளே குழாய் ஒன்று பொருத்தப்பட்டு முகம் பார்க்க சோர்த்து கூந்தல் கலைந்து பொழிவிழந்து இருந்தது.
எப்பவும் பட பட வென பேசும் வாயும் அதற்கு ஏற்ப உயரும் புருவங்களும். என்றும் கலையாத தோள்வரையான கூந்தலும் அவளுக்கு தனி அழகுதான்…
“யேன்டி இப்படி பண்ணின… என் நிலைமையை புரிஞ்சிக்கவே இல்ல நீ. இவ்வளவு பேசுறவள் என்கிட்ட பேசியிற்றுக்கலாமே. என் கண்ல உனக்கான காதலை நீ உணரவும் தானே அதை நா சொல்லணும்னு எதிர் பார்த்த. என் காதலை புரிஞ்சிகிட்ட நீ உன் காதலை ஏன்டி காட்டாம மறச்ச? மறைத்ததும் இல்லாம இப்படி தப்பு தப்பா பண்ணி எல்லோரையும் கஷ்டப்படுத்தி, தேவையா நிவிம்மா? இன்னைக்கும் கூட நீ விஜய தானே எல்லோர் கிட்டயும் கெட்டவனா காட்டிட்ட. உன்தேவைக்காக அவனை யூஸ் பண்ணினது எவ்வளவு பெரிய தப்பு.
அவனும் கூட நானும் அவனை இவ்வளவு நாளா ஏமாற்றினதாக நினைத்திருப்பான். ஒண்ணுமே பண்ணமுடியாம இருக்கேன் இப்போ. இவ்வளவு நாள் ஒன்னாவே அவன் கூட இருக்க நீ அவன்கிட்டயாவது நம்ம காதலை சொல்லி இருக்கலாம்.”
அவள் கைகளிலே முகத்தைப் புதைத்து புலம்பிக்கொண்டு இருக்க மெல்ல மற்ற கையினால் அவன் தலை கோத எழுந்தவன் கண்கள் கலங்கி இருந்தது…
அவள் மனம் சொல்ல முடியா சந்தோஷத்தில். இன்னும் அவள் செய்ததன் வினை அறிந்திருக்க வில்லை.இப்போதாவது உன் மனதை கூறினாயே எனும் எண்ணம் தான் அவளிடம்.
யாரோ வருவதை போல உணர்ந்தவன் அவ்விடம் விட்டு எழுந்துகொள்ள அவள் அவனது கைகளை பற்றி இருந்தாள். அவள் எதுவோ பேசப் பார்க்க அவள் இதழில் பேசாதே என விரல் வைத்தவன், நெற்றியில் இதழ் பதித்து,
” ரொம்ப ஸ்ட்ரைன் பண்ணிக்காத கதைக்க முடியலைன்னா ட்ரை பண்ணாத.பிறகு பார்த்துக்கலாம் அதெல்லாம் பிரச்சினையே இல்லை.ஓகே ” என்றிட,
‘என்ன கூறுகிறான் இவன்?’ என பார்த்தவள் அடுத்து அவன் கூறியது கேட்டு உள்ளம் மகிழ்ந்ததுடன் எதற்கு அப்படி பேசாதே எனக் கூறினான் என்பதை அந்நொடி மறந்தும் விட்டாள்.
“இப்படி என் காதலை உன்கிட்ட சொல்ல வரும்னு நினைக்கல்ல நிவி. உன்னை பார்த்த நொடி முதலே என் மனசுல இருக்க. இப்படி நடந்திருக்கலன்னா என் காதலை உன்கிட்ட சொல்லி இருப்பானான்னு கூட தெரில.நான் விஜயின் நட்பை எந்த காரணத்துக்காகவும் இழக்க விரும்பல்ல. இனியும் விரும்ப மாட்டேன். அதுனாலயே உன்கிட்ட என் மனச மறைச்சுட்டேன்.அவனால தானே உன்னையே பார்த்தேன்.ஐ லவ் யூ நிவி…’
‘நா கிளம்புறேன். வீட்டுக்கு போனதுக்கப்புறம் கால் பண்றேன் டேக் கேர். எது பற்றியும் யோசிக்காதே யார்கூடவும் இது பற்றி பேசக்கூடாதுன்னு விஜய் சொல்லிருக்கான் சரியா? வரேன்.” என அவன் வெளியே வர ஹரி மீனாவுடன் வரவும் சரியாக இருந்தது..
“ஏதும் கேட்டாளா ? ” என்று மீனா கேட்க,
“இல்லை ஆன்ட்டி . நர்ஸ் வந்தாங்க அதான் அவங்க கூட உள்ள போய்ட்டு வந்தேன். அவங்க தூங்குறாங்க.நீங்க போய் பாருங்க.’ என்று விட்டு,
‘அப்போ நான் கிளம்புறேன் ஹரிண்ண. காலைல போக வேண்டியது. சிஸ்டரயும் பாத்துட்டுதான் போகணும். “
அவர்களிடமிருந்து விடை பெற்றவன் வண்டியில் ஏறி அமர்ந்ததும் மனம் சொல்ல முடியா ஓர் நிலையில்.
ஒரு பக்கம் காதல் கிடைத்த சந்தோஷம். இன்னொரு பக்கம் நண்பனின் மனக்கஷ்டம். அது போக்க என்ன செய்ய வேண்டும் என்பதும் அவனுக்கு புரியவில்லை. அவன் உணர்வுகளை யாருடனும் பகிரவும் மாட்டான் விஜய்.மனம் சரியாகும் வரை யாருடனும் கதைக்கவும் மாட்டான் என்பதை தருண் நன்கு அறிந்து வைத்திருந்தான்.ஸ்ரீ குட்டியை பார்த்தால் மனம் கொஞ்சம் லேசாகும் போல இருக்க அவளுக்கு கால் பண்ணியவாறே வண்டியை அவளது ஹாஸ்டலுக்கு விட்டான்.
“ஹலோ, ஸ்ரீ குட்டி அண்ணா உன் ஹாஸ்டலுக்குத்தான் வரேன். கொஞ்சம் வெளில போகணும் அனிதாவை கூட்டி வர வேணாம் கொஞ்சம் தனியா வரியா?” என கேட்க
“ஓகேன்னா கீழ பார்க்கிங்ல வெய்ட் பண்ணு.” எனக்கூறி வைத்தவள் தயாராகி ஹாஸ்டெல் வாசல் வர அவ்விடம் தருணும் வந்து விட்டான்.
வந்தவன் அவளை ழைத்துiக்கொண்டு அருகே இருந்த காபி ஷாப் அழைத்து சென்றான்..
நோர்மலாக அவன் அவளிடம் அவளை பற்றி விசாரித்தாலும் அண்ணனின் மாற்றத்தினை கண்டவள்,
“என்னாச்சு தருண்ணா காலைல நீங்க போய்ட்டதா உங்க பிரென்ட் சொன்னாங்க. நீங்க என்னென்னா இன்னும் ஊருக்கு போகாம இங்கயே இருக்கீங்க. உங்க பிரண்டு கதைக்குறப்ப ஒரு மாதிரி டல்லா தான் இருந்தது.”
“நீ எப்போ விஜய் மீட் பண்ணின? “
“காலைல 11மணி இருக்கும் காலேஜிகிட்ட மீட் பண்ணேன். நீ இருப்பன்னுதான் பேச போனேன் நீ போய்ட்டதா சொன்னாங்க.”
“ஆமா அவன் போகத்தான் சொன்னான். நா ஒரு வேலையா இன்னும் அழஞ்சுக்கிட்டு இருக்கேன்.” என்றவன் தலை குனிந்தவாறே இருக்க,
“அண்ணா என்னாச்சு சொன்னாத்தானே தெரியும்.” என ஆதரவாக அவன் கைகளை பற்றினாள்.
“முடியல ஸ்ரீ…’ என ஆழ மூச்செடுத்தவன் அப்படியே அவளிடம் உள்ளத்தை கொட்டிவிட்டான்…
“என்னண்ணா இப்படி பண்ணிட்டாங்க. எவ்வளவு போல்ட் அவங்க. இப்படி விளையாட்டுத்தனமா நடப்பாங்களா. நானே எத்தனை முறை அவங்களையும் உங்க பிரெண்டையும் லவ் பண்ராங்களோன்னு நினைச்சிருக்கேன். இவ்வளவே தைரியமா துணிஞ்சவங்க அவங்க காதலையும் சொல்லிருக்கலாமே. கடைசியா உங்க பிரெண்ட எல்லோர்கிட்டையும் கெட்டவனா காட்டிட்டாங்க. அவங்க உயிருக்கு எதுவும் ஆகாதனால இப்போ உனக்காகன்னு சொல்லலாம். ஆனால் அப்படி ஏதும் ஆகி இருந்தால் யாருமே உங்க பிரெண்ட நம்பி இருக்க மாட்டார்களே. கடைசிவரை அவராலதனே அவங்க உயிர் போனதாக இருக்கும்.ப்ச்…”
” என்னை வெறுப்பேற்றுவதா எஎண்ணி அவன் கூட அப்படி க்லோசா இருந்திருக்கா. அப்போவாவது நா பேசுரெனான்னு. ஆனால் விஜய் அவள் அவன் கூட பாசமா இருக்காள்னு நினைச்சுதான் அதை கடந்திருக்கான். அதான் அவனால தாங்க முடியல. அவனை யூஸ் பண்ணிகிட்டதா நினைக்கிறான் போல.”
“காலைல அவங்க முகம் பார்க்கவுமே ஒரு மாதிரி தான் இருந்தாங்க. யாருக்கும் அப்படித்தானேண்ணா நினைக்க தோணும். “
“ஹ்ம்ம் அவன் உங்க கூட வண்டிய விட்டு இறங்கி வந்து பேசினான்னு சொல்றதே எனக்கு ஆச்சரியமா இருக்கு.மைண்ட் அப்செட் ஆனான்னா சரியாகுறவரை யார் கூடவுமே கதைக்க மாட்டான். தவறியும் யாரையும் காயப்படுத்த மாட்டான்.’
‘இன்னக்கி அவனை பார்க்கவே முடியல.ஒரு பக்கம் இவ்வளவு சுயநலமானவளையா காதலிச்சேன்னு நினைக்கிறப்ப கோவமா வருது ஸ்ரீம்மா…”
“விடுண்ணா அவங்க காதலால அவங்க பக்கத்துல அவங்களுக்கு சரின்னு தோணுறத பண்ணிருக்காங்க.அவங்களுக்கு அவங்க காதல் மட்டுமே அவங்க கண்ணுக்கு தெரிஞ்சிருக்கு. இனி ரெண்டு பேருமா சேர்ந்து ஒன்னா எதையுமே ஒரே கண்ணுல பார்த்து உங்களை சரிபண்ணிகோங்க…”
வீட்ல சொல்லி பேசலாம்னு இருந்தேன் டா. ஆனால் விஜய் இதை பற்றி யார்கூடவும் பேசக்கூடாதுன்னு சொல்லிட்டான்.”
“சரிண்ணா அவங்க பார்த்துப்பாங்க.விடு…”
“ஹ்ம்ம் அவனுக்கு ஆறுதலாக இருக்க முடியல. ஸ்ரீ வீட்ல ஒருத்தருமே அவன் கூட பேசலடா. அவனும் இனி அவானாகவே பேசுவான்னு தோணல… “
தாரா பேசியவாறே தருணது அலைபேசியிலிருந்து விஜயின் நம்பரை எடுத்திருந்தாள்.
“ஓகே ஸ்ரீ குட்டி நா கிளம்புறேன். காலைல வர்ரதா அப்பாட்ட சொன்னேன். இப்போ போனாதான். ஸ்டோருக்கு போய்ட்டு போகலாம். வா உன்னை ட்ரோப் பண்ணிட்டு கிளம்புறேன்.இன்னும் ரெண்டு மாசம் தானே அப்புறம் நீயும் வீட்லதான் இல்ல. “
“ஹ்ம்ம் ஆமாண்ணா. அண்ணா கொஞ்சநாளைக்கு ஜாப் பண்ணலாம்னு ஆசையா இருக்கு.”
” நல்லது தானே குட்டி.வீட்டுக்கு வாங்களே அப்புறமா நல்ல இடமா பார்த்து, அப்பாகிட்டயும் பேசிட்டு போகலாம் ஓகேவா. “
“சரிண்ணா.”எனவும் அவளை ஹாஸ்டலில் விட்டவன் அவன் வீடு சென்றான்.