உணர்வை உரசி பார்க்காதே! 02

IMG-20211108-WA0067-d9a21b51

உணர்வை உரசி பார்க்காதே! 02

🌼அத்தியாயம் 02

 

நமசிவாயமோ நெற்றியில் நாமம் இட்டதுபோல் அங்கும் இங்கும் தடுமாறிக்கொண்டிருந்தார். 

மீத்யுகா, ‘நம்ம எத்தனையோ பேர ரிஜெக்ட் பண்ணிருக்கோம். அதுக்குதான் இவ்ளோ பெரிய ஆப்பா?’ 

நமசிவாயம் மீண்டும் மீண்டும் விகுஷ்கிக்கு அழைப்பை விட மறு முனையில் எந்த பதிலும் வரவில்லை. அதற்கு பதிலாக திருமண மண்டப வாசலில் டுப் டுப் டுப் என்கிற சத்ததோடு புல்லட்டில் மிடுக்கு பொருந்திய மீசையோடு வருகைத்தந்திருந்தான் அவன். 

“என்னபா இவ்ளோ லேட்டு?” நமசிவாயம் முகம் முழுவதும் விசனக் கோலம் தலைவிரித்தாடியது. 

“ஸாரி மாமா.” என சாதுவாய் கூறினான் அவன். முகத்தில்  பதற்றத்தின் அறிகுறியே இருக்கவில்லை அவனிடத்தே.

“சரிப்பா சரிப்பா, சீக்கிரமா மணமேடைக்கு போ.” திருமணம் முடிந்தால் போதுமென்றானது அவருக்கு. 

அவன் ஆடை மாற்ற செல்ல, “முகூர்த்தம் நேரம் முடிய அஞ்சு நிமிசம்தான் இருக்கு” என்று ஐயர் அறிவுறுத்தல் வழங்க, வேஷ்டி சட்டை அணியாமல் மேலே அணிந்திருந்த கறுப்பு கவுனையும் பாதணியையும் கழட்டிவிட்டு மணவறையில் அமர்ந்தான். 

மீத்யுகாவும் மடிசாரி அணிந்து குனிந்த தலை நிமிராமல் தன் தோழியர்களுடன் குழுமி வந்து நமசிவாயத்தின் மடியில் அமர்ந்தாள். 

தன்னவனை பார்க்க சற்று தலை நிமிர, அவனோ நின்ற நிலையில் இருக்க, ஆண்மைக்குரிய அழகாய் உதடுகளுக்கு மேலும் கீழும் அணல்கள் காடாயிருந்த காட்சியை மட்டுமே அவளால் பார்க்க முடிந்தது. அதற்கு மேல் நிமிர்ந்து பார்த்தால் மணப்பெண்ணுக்கு அழகில்லையென்று தலையை கவிழ்த்தினாள்.

‘ச்சே! கல்யாணத்துக்கு கூட தாடி மீசைய ஷேவ் பண்ணலயே அவரு’ என்று மனதில் எண்ணியவள் தலையில் கையை வைக்காதக் குறைதான்.

மேள வாத்தியங்கள் முழங்க ஐயர் மந்திர உச்சாடனம் செய்ய  மணவாளன் மடிசாரி மாமியாய் மாறியவள் கழுத்தில் மங்கள நாணை ஏற்றினான். 

அதன் பின்னரான சடங்குகளில் மன்னவனின் முகத்தை மங்கை பார்த்திடலாம் என்றிருந்தவள் அந்த சொற்பநொடிக்கு ஏங்க கண்கள் இமைக்கா நொடியானது. 

வெட்கத்தோடு தலை நிமிராமல் கண்களை மட்டும் மேலே உருட்டிப்பார்க்க, அவனோ கைக்குட்டையை எடுத்து அவன் முகத்தில் இருக்கும் வியர்வையை ஒற்றியெடுத்தான். இதிலெங்கே முகம் தெரிவது?

‘ஐயோ இவரு ஏன் இவ்ளோ முடி வளர்த்து இருக்காரு, இன்னும் கொஞ்சம் வளர்ந்தா கண்ணையே மறச்சிடுமே! முடி வெட்டக்கூடவா நேரமில்ல. அவ்ளோ வேலையா?’

இப்படியே ஒவ்வொரு முறையும் முகத்தை பார்க்கா முடியாமல் பரிதவித்தாள். 

உடனே நமசிவாயத்திடம் அவளுடைய கைபேசியை கேட்டு சுயபடம் எடுப்பதற்காக எடுத்தாள். “ம்க்கும், ஒரு செல்ஃபி எடுக்கலாமா?” என்று மெலிதான குரலில் கேட்டு கைபேசியை தலைக்கு மேல் சரிவாய் நீட்ட, அவனுடைய பிம்பம் கைபேசியில் பிரதிபலித்தது. 

மான்நிறமுடைய மன்னவன், விரக்தியான இளநகை கூட இல்லாமல் வீரப்பார்வை பொருந்திய விழிகள் பாவையை  ஈர்த்து கைபேசி வழியே, சுயபடம் எடுத்ததன் பின், ‘என்னைய பார்க்கணும்னு ஒரு சின்ன ஆசை கூட அவர் முகத்துல தெரியலயே!’ மடவாளின் மனம் மன்னவனை எண்ணி சற்று கோணியதுதான் உண்மை. 

வருகை தந்தவர்கள் எல்லாம் பத்து பொருத்தமும் பக்குவமாய் அமைந்திருக்கிறது என்பதுபோல் சலப்பிக்கொண்டனர்.  கடவுளுக்குதான் தெரியும் இருவர்களின் பத்து பொருத்தமும் நெருப்பை போல் பற்றுவது எப்படி என்று.

மண்டபத்திலிருந்து திருமண வைபவம் முடிவடைய மணமகள் வீட்டிற்குத்தான் சென்றனர்.  பால்பழம் உண்ணும் சடங்குகள் முடிய சென்னைக்கு புறப்பட்டனர். 

“ம்மா சென்னை பத்திரிம்.” என்று நமசிவாயம் கூற, “அப்பா முன்ன பின்ன நான் சென்னைக்கு போனதேயில்லையா?” 

“இல்லமா நீ சென்னைக்கு கிளம்புறியா அதான் சென்னை பத்திரம். நீ சென்னைல பத்திரமா இருப்ப, உன்னால சென்னை பத்திரமா இருந்தா போதும்.” 

“அப்பா!” என்று வெகுளியாய் கூறினாள். 

“இங்க பாரு, உன்னோட சேட்டை எல்லாம் அங்க போயி பண்ணாத,  பெத்தவங்களுக்கு நல்ல பேரு வாங்கித்தரணும். அப்பறம் தாய் தகப்பனில்லாத பையன் பார்த்து அணுசரிச்சு நடந்துக்கோ. வீட்ல இருக்கிற மாதிரி வாயாடிக்கிட்டு இருக்காத. ஒழுங்கா சமையல் கத்துக்கிட்டு சமைச்சி போடு.” என்று உமேஷ்வரி அறிவுரை வழங்கினார். 

பரவை முனியம்மா பாட்டியோ கண் கலங்கியிருக்க, “நீ சென்னைல இருக்கும் போதெல்லாம் பெருசா கவலை இருக்காது. இனி நாங்க நினைச்ச நேரமெல்லாம் உன்னைய பார்க்க முடியாது கண்ணு.” என்று அவளை கட்டிக்கொண்டார். 

மீத்யுகாவும் வராத விழிநீரை விழ வைத்து, “பாட்டி எப்பவும் போல பந்த எடுத்துக்கிட்டு ஒடாத, பாயாதனு சொல்லிக்கிட்டு சென்னை பக்கம் வந்துராத, அங்கயாவது என்னைய நிம்மதியா இருக்கவிடு.” 

“அடிக்கழுத, ஏதோ பாசமா பேசுறானு பார்த்தா, சாடமாடயா வீட்டுப் பக்கம் வந்துராதனு சொல்லுறாளே!” 

“பாட்டி, வீட்ல அம்மாவயும் அப்பாவயும் பார்த்துக்கோ உன்ன நம்பிதான் விட்டுட்டு போறேன்.” 

“சரித்தா, சீக்கிராம உண்டாகிரு அப்போ பாட்டி வீட்டுக்கு வந்துரலாம்.” என்று கெள்ளுபேரர்களை பார்க்கும் ஆசையில் கூறினார் பாட்டி. 

“ச்சே, எப்போ பாரு உண்டா குண்டாகுனு சொல்லிக்கிட்டே இருக்க, இதுக்குதான் சென்னைக்கு வரவேனானு சொன்னேன்.” 

“பாட்டியும் பேத்தியும் அப்பறமா பேசுங்க.” என்று தனது தாயின் புறம் நமசிவாயம் கூறிவிட்டு, “ம்மா தம்பி ரொம்ப நேரமா கார்ல வெய்ட் பண்றாங்க. நீ கிளம்புமா.” என்று மனதிலிருக்கும் கவலைகளை எல்லாம் ஒதுக்கி வைத்து தன்னை திடப்படுத்தி தனது செல்வ செல்லமகளை புகுந்த வீட்டிற்கு வழியனுப்பி வைக்க தயாராகினார்.

சகிஷ்ணவியை கட்டியணைத்து அன்பை வெளிப்படுத்தி, “மிஸ் யூ கா.” 

“மிஸ் யூ டூ டா.” என்று அவளும் தங்கை நெற்றியில் முத்தமிட்டாள். 

பாட்டி, அம்மா, அப்பா, அக்கா, அத்தான் என அனைவரிடமும் ஆசிர்வாதம் பெற்று புறப்பட்டாள். 

உமேஷ்வரி மற்றும் பாட்டியின் கண்கள் நிரம்பி காவிரியாய் பெருக்கெடுத்தது.  

மகிழுந்திற்குள், விகுஷ்கி வண்டியை செலுத்த ஆரம்பித்திருந்தான்.  மதுரை மண்ணின் வாசனைக்கு பிரியாவிடை அளிக்கும் நேரமது. 

வீட்டினரின் முன்னால் அவள் அழுதால் வீட்டினருக்கும் அதிக சோகத்தை கொடுக்குமென்று அடக்கி வைத்த சோகங்கள் எல்லாம் மகிழுந்தின் கண்ணாடி வழியே வயல் காட்சிகளைப் பார்த்தபடி இருக்க, உதட்டில் ஏற்பட்ட நடுக்கத்தை மட்டியோடு கடித்த படி மூக்கின் இருதூவாரங்கள் புடைக்க, விசனம் விழி வழியே கண்ணீராய் பெருக கண்ணுக்குள்ளே தேக்கி அடக்கி வைத்தாள். 

வண்டியின் கதவிலிருக்கும் கண்ணாடியில் சாய்ந்திருக்க கரடுமுரடான பாதை என்பதால்  அடிக்கொரு தடவை கண்ணாடி வழுக்க அவளுக்கு தொந்தரவாக இருந்தது. 

தன்னவன் பேசுவான் என்று அதிக எதிர்பார்ப்புடன் இருந்தாள். வண்டி செலுத்துவதை தவிர்த்து வேறு புறம் திரும்புவதாகயில்லை அவன். 

வேறுவழியின்றி இருக்கையிலேயே சாய்த்தமர்ந்தாள். அயர்ந்த நேரத்தில் அவன் மீது சரிந்து அவன் தோளில் மீது அவள் தலை லேசாக தஞ்சமடைந்தது.

அவ்வளவுதான் அடுத்தநொடி வேகமாக சென்ற மகிழுந்து திடீர் ஸ்தம்பிதம் அடைந்தது.  உடனே அவளை உலுக்கி எழுப்பி, அவள் சாய்ந்த இடதுதோள்பட்டையை வலக்கரத்தால் தட்டினான். “ச்சே! அசடு அசடு, வண்டி ஓட்டும்போது மேல்ல சாயுற, உன்ன யாரு என்மேல சாய சொன்னது?” என்று ஒற்றை விரலையும் ஒற்றை புருவத்தையும் ஆட்டி கேட்டுவிட்டு வண்டியை விட்டிறங்கி, அவள் புறமிருக்கும் மகிழுந்தின் கதவை திறந்து, “பின்னாடி போய் உக்காரு போ” என்றான் அதட்டலான உரத்த குரலில். 

பின்னாடி அமர்ந்தவள், “ஸா..ஸாரி, தெரியாம” என்று கூறிவிட்டு, “நான் உங்க வைஃப்தானே? தெரிஞ்சே விழுந்தாகூட தப்பில்ல”  என்ற தோரனையில் குரலை நிமிர்த்தி செப்பினாள். அவனோ முட்டையை பதுக்கிய கண்களால் முறைத்துப் பார்த்தான். 

அவன் முறைப்பில் அடங்கவில்லை அவள். தற்போது நிதானத்துடன் அமைதியானால் அவன் ஏதோ குழப்பத்தில் இருக்கிறான் என்றும் சிந்தனை அவளிடம் மேலோங்கியது.

முதல் முறையே இப்படி பேசுவதற்கு காரணம்  அவளிடம் இயல்பாய் பழகும் குணமும் நாணம் நலிவுகண்டு போனதும்தான்! கணவன் என்கிற ரீதியில் அவளையறியாமல்  அவன் தோளில் விழுந்தது பஞ்சமா பாதகத்தில் ஒன்றானது அவனுக்கு. 

அவன் அப்படி முகத்திற்கு அடித்தாற்போல் பேசியது சலனத்தை ஏற்படுத்தியது அவளுக்கு. 

அரிவைக்கோ பேதை மனம்தான். பல கேள்விகளை வகுத்து இரவுக்காய் காத்திருந்தாள். படத்திலும் கதைகளிலும் பார்த்த படிப்பினைதான். முதலிரைவை எண்ணி அவளகம் வெஃகியது. இருப்பினும் சில நாட்களுக்கு பிறகே புரிதலோடு வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டுமென்று தன்னவனிடம் கலந்தாலோசிக்க எண்ணியிருந்தாள். 

அவளை எங்கு முதலில் பார்த்தான், எதனால் அவளை பிடித்திருந்தது, அவளிடமே கூறாமல் தந்தையிடம் கூறியதற்கு காரணம் என்ன? தான் திருமணத்திற்கே தந்தியடித்தது போல் ஏன் தாமதமாக வரவேண்டும்? இவ்வாறு பல கேள்விகள் அவளகத்தில். 

அடையாரிலிருக்கும் அவர்கள் இல்லத்திற்கே வருகை தந்தனர்.  அவன் வீட்டில் வேலை பார்க்கும்  லட்சுமி ஆரத்தி எடுத்து வரவேற்றார். 

தம்பதியர் ஒருமிக்க ஒரேநேரத்தில் உள்ளே நுழையாமல் அவன் மட்டும் தனித்து விருக்கென்று உள்ளே நுழைந்தான். தனித்து அவள் மட்டும் வலதுகாலை எடுத்து வைத்து உள்ளே நுழைந்தாள். 

வீட்டிற்கு வந்த நேரமோ இரவு என்பதால் விளக்கேற்றிய பிறகு உடையேனும் மாற்றாமல் அசதியில் அமர்ந்திருந்தாள். 

“அம்மாடி தம்பிய கூட்டிட்டு சாப்பிட வாம்மா.” என்று லட்சுமி அழைக்க, ‘ஹாஹா இவங்க வீட்லயும் இப்படி ஒரு ஆள் இருக்காங்களா இது போதுமே!’ என்று உணவருந்த அழைத்ததில் அவளகம் மகிழந்தது. 

“சரிக்கா.” என்று இன்முகத்துடன் கூறிவிட்டு, ‘இப்போ அவர எப்படி கூப்பிடுறது’ என்று யோசித்தவாறு அவர்கள் அறைக்குள் நுழைந்தாள். 

“லட்சுமிமா சாப்பாடு ரெடியா?” என்று குரலை எழுப்பி அவள் இருப்பதையும் பொருட்படுத்தாமல் அவளை கடந்து அன்னமுண்ண வெளியே வந்தான். 

‘தேங் கோர்ட்! எப்படி பேசுறதுண்ணு தடுமாறிக்கிட்டு இருந்தேன்’ என்று மூச்சை இழுத்துவிட்டு அவளும் உணவு உண்ண அமர்ந்தாள் அவனருகில். 

கேசரி, பூரி, பொங்கல், வடையென வகை வகையாய் இருக்க அவளகமெங்கும் ‘நிற்பதுவே.. நடப்பதுவே.. பறப்பதுவே.. நம்ம நாக்கு தேடுற மாதிரி இதுல ஒரு ஐட்டம் கூட இல்லயே’ என வாயும் அகமும் அல்லல்பட்டது. 

வேறுவழியின்றி சைவம் மாத்திரம் உண்பது கடினமென்றாலும் மல்லுக்கு நின்று உணவுப்பைக்குள் உணவை தள்ளினாள். 

வீட்டில் பெற்றவர்கள் இல்லையென்றாலும் வேலை பார்க்கும் லட்சுமி எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செய்வார். “நல்ல நேரம் ஆரம்பிச்சுட்டு பால் காய்ச்சு வச்சிருக்கேன் எடுத்துட்டு போம்மா.” 

“சரி லட்சுமிகா.” என்று தலை குனிந்தவாறு விளம்பி அறையை நோக்கி நடந்தாள். 

மன்னவனோ மடியில் மடிக்கணினி வைத்து தட்டியவாறு வேலை பார்த்துக் கொண்டிருந்தான். மடவாள் அவனருகில் சென்று நிலைதடுமாறிக்கொண்டிருந்தான்.

“ம்க்கும்” என்று தொண்டயை சேருமினாள். பல ஆடர்களின் முன்னே தயக்கமின்றி தைரியமாய் பேசுபவள் தன்னவன் எதிரே இயல்பாய் தோன்றிய கூச்சம் அவளை பேச விடமால் தடுத்தது. 

“என்ன, லட்சுமி கா   குடுத்துவிட்டாங்களா?” கணீரென்ற குரலில் அவன் வினவினான். 

“ஆமா” மெலிதான குரலில் கூறினாள்.

“அப்படி ஓரமா வை.” என்று மடிக்கணினியை தட்டியவாறே கூறினான். 

“இல்ல, இப்போ பால் சாப்பிடுங்க.” வேலை பார்ப்பவன் அசதியாய் இருக்குமென்று அன்பாய் கூறினாள். 

“நான்தான் வேணாம்னு சொல்றேன்ல. பாலக் குடுத்து கவுத்துரலாம்னு உன் அக்கா சொல்லி அனுப்புனாளா, இல்ல அப்படியே கட்டிப்புடிச்சு ரொமான்ஸ் பண்ணுவேனு நினைச்சிட்டியா?”  படாரென்று திமிர் பிடித்த வார்த்தைகள் வீசினான். தமக்கையை இழுத்து பேசியது போதாமல் அவளை மேலும்  விகத்தனமாய்(இகழல்) பேசினான். 

எதற்காக இப்படி எல்லாம் பேசுகிறான் என்று அறியாமல் அவள் முழித்துக்கொண்டிருக்க, ஆணாதிக்கத்தில் அவன் பேசிய வார்த்தைகள் அவள் நெஞ்சை கிழித்தது. இருப்பினும் பொறுமை காத்தாள். மனதில் பூட்டி வைத்த வினாக்களை வாய் திறந்து தொடுக்க ஆரம்பித்தாள். “இப்படி பேசுற நீங்க, உண்மையாவே என்னைய விரும்பிதான் கல்யாணம் பண்ணீங்களா?” 

“ஏன் இப்போ இதெல்லாம் கேக்குற?” என்று உருமும் குரலில் அவன்.

“இல்ல கல்யாணத்துக்கு விருப்பமில்லாத மாதிரி லேட்டா வந்தீங்க. அதான்!” 

“சும்மா வீட்ல ஹாயாதான் இருந்தேன். பேருக்கு கோர்ட்ட மாட்டிக்கிட்டு வந்தேன். லேட்டா வந்தா உங்க அப்பனோட ரியாக்ஷன்ஸ் எப்படி இருக்கும்ணு பார்க்கணும்ல அதான்!” 

அவன் தொனி ஆத்திரத்தை மூட்டினாலும், “ஆயிரம் பேர கூட்டி கல்யாணம் பண்றது உங்களுக்கு விளையாட்டா இருக்கா?” என பணிந்த குரலில் உறுதியாய் வினவி பொறுமை பூண்டாள்.  பொறுமை காத்து நின்றதனால் அவள் ஒன்றும் பொறுமை காத்த சாந்தசொரூபிணியல்ல.

“ஹாஹா… லைட்டா” என்று நகைந்துவிட்டு, “அப்போ எங்களுக்கு எப்படி இருக்கும்?” முழிகளை உருட்டி அதட்டி அவளிடம் சொன்னான். யாரோ செய்த பாவத்திற்கு அசலும் வட்டியும் அவளா?

பதில்களை கேட்டு பொறுமையிழந்தாள் பாவை.  மண்டபத்தில் அவள் குடும்பத்தினர் பட்டபாடெல்லாம் இவனுக்கு கில்லு கீரையாய் தெரிய தீ கிடங்கானது அவள் உள்ளம். “உங்களுக்கு எப்படி இருக்கும்னா, என்ன எப்படி இருக்கும்? இந்தமாதிரி எல்லாம் சுத்தி வளச்சு பேசுனா எனக்கு புடிக்காது. பேஸ் டூ பேஸ் பேசுனா நல்லது.” பதிலுக்கு அவளும் சற்று உரும ஆரம்பித்தாள். 

“…” ஆண் எனும் அதிகாரத்தில் ஆணவம் தலைக்கேறி விரக்தியாய் புன்னகைந்தான். பெண்களை அடக்கி ஆழ்வதே இவன் அகராதி.

“உங்களதான் கேக்குறேன். பதில் சொல்லுங்க. என்னைய புடிச்சிருந்தா எங்கிட்டவே சொல்லிருக்கலாமே! பொண்ணு பார்க்க வரல. ஒரு கால் பண்ணல. 

புடிக்காம ஏன் கல்யாணம் பண்ணீங்க? எதுக்கு என் அப்பாகிட்ட பொண்ணு கேட்டீங்க?” எதற்கும் சளைத்தவள் அல்ல. சரிக்கு சமமாய் அவனிடம் கேள்விகளை தொடுத்துக்கொண்டே இருந்தாள். 

‘உன்னைய வச்சி செய்யணும் அதுக்குதான் டீ’ என்றது அவனகம். 

அவள் பேசிய தோரணையில் பெண்மை சற்று தைரியமானவள் என்பதை உணர்ந்தவன் மேலும் எகிர ஆரம்பித்தான். “எங்கிட்ட எந்த கேள்வியும் கேக்காத உங்க வீட்டு ஆளுங்ககிட்ட கேட்டுக்கோ, இந்த மாதிரி எடக்கு மடக்கா எங்கிட்ட பேசுன பல்ல கழட்டி கைல தருவேன்.” ஒற்றை விரலை ஆட்டி வீம்புரை அளித்தான். 

கண்ணிமைக்காமல் அவனையே பார்த்து, “எனக்கு முப்பத்திரெண்டு பல்லு இருக்கு. எங்க ஒரு பல்ல கழட்டுங்க பார்ப்போம் விஸ்கி, ஸாரி ஸாரி விகுஷ்கி!” ஆண்மைக்கு ஈடாய் அச்சந்தருகிறக் கூறினாள். 

சிறுவயதிலிருந்தே ஆண்களிடம் அடங்கிப்போவது அவள் அகராதியிலேயே இல்லை. 

காதல் திருமணத்தை வெறுத்துவள், திருமணத்திற்கு பிறகு காதல் செய்ய ஆசை கொண்டவள்,  சிறுக சிறுக அன்பை சேர்த்து அவனை புரிந்து, அவன் இவளை புரிந்துகொண்டு சிற்றின்பமாய் ஆரம்பித்து பேரின்பமாய் கொண்டு செல்லலாம் என்று தன்னவோடு கண்ட சொப்பனமெல்லாம் அவன் கூறிய வார்த்தைகளில் கலைந்தது. 

முதலிரவே முட்டுகட்டையானது. அவனின் நாமத்தை வேறு அவள் கூற, இனி என்னவாகுமோ? பாவையின் நிலை பரிதாபமா? 

🌼உணர்வுகள் தொடரும்…

Leave a Reply

error: Content is protected !!