உன்னை நீங்கி நான் எங்கே செல்வது – 20
உன்னை நீங்கி நான் எங்கே செல்வது – 20
வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக கழிந்து செல்ல இழையினியின் மனதிற்குள் இருந்த ஆதவனின் சிந்தனைகள் மாத்திரம் எவ்விதமான மாற்றமும் இன்றி அவ்வாறே இருந்தது.
ஆதவன் மேல் அவள் மனது ஈர்க்கப்பட்டாலும் எதோ ஒரு சிந்தனை அவளை சுற்றி வளையம் போட்டு அவளை இறுக்கி பிடித்து வைத்துக் கொண்டிருந்தது.
ஏதேதோ சிந்தனைகள், குழப்பங்களோடு வாரத்தின் நான்கு நாட்களையும் நெட்டித் தள்ளியவள் சனிக்கிழமை காலை விஜயாவுடன் பதுளை செல்வதற்காக வேண்டி காலை எட்டு மணி அளவில் பேராதனை புகையிரத நிலையத்தில் விஜியின் பெற்றோர் சகிதம் காத்துக் கொண்டு நின்றாள்.
மறுபுறம் ஆதவன் எவ்வளவோ தூரம் மறுத்து சொல்லியும் அவன் பேச்சை கேட்காமல் ராஜா அவனுக்கு தேவையான பொருட்களை எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டு நின்றான்.
“ராஜா! ப்ளீஸ்டா நான் சொல்ல வருவதைக் கொஞ்சம் கேளுடா! இழையினியை ஒரு மாதமாக பார்க்கவும் இல்லை மனதுக்கு என்னவோ ஒரு மாதிரி இருக்குடா! அவளைப் போய் இன்னைக்கு பார்த்து விட்டு நாளைக்கு கல்யாணத்திற்கு போகலாமே ராஜா! ப்ளீஸ்!”
“நோ! போன தடவை உன்னை தனியாக அனுப்பி வைச்சதற்கே இடுப்பை உடைச்சுட்டு வந்த! இந்த தடவை எங்கேயும் உன்னை அனுப்ப மாட்டேன் இன்டைக்கு நீ என்னோட பதுளைக்கு போக வர்ற! டொட்!”
“ராஜா!”
“ராஜாவும் இல்லை மந்திரியும் இல்லை! நுவரெலியா டூ பதுளை டிரெயின் டிராவல் எவ்வளவு அழகாக இருக்கும்னு தெரியுமா? அதைப் போய் வேணாம்னு சொல்லுற மரியாதையாக எல்லா சாமானையும் எடுத்துட்டு வா! மத்தியானம் பன்னிரண்டு முப்பதுக்கு எல்லாம் ரயில்வே ஸ்டேஷனில் இருக்கணும் அதனால இங்க இருந்து எப்படியும் பன்னிரண்டு மணிக்கு எல்லாம் போகணும் பீ ரெடி மிஸ்டர் ஆதவன்!” ராஜா ஆதவனின் தோளில் தட்டிக் கொடுத்தவாறே கூறி விட்டு அங்கிருந்து சென்றுவிட அவனோ மனமேயின்றி தன் உடைமைகளை எடுத்து வைத்துக் கொண்டு நின்றான்.
கைகள் இரண்டும் அதன் பாட்டிற்கு வேலை செய்து கொண்டிருந்தாலும் மனமோ
‘இழையினி இப்போது என்ன செய்து கொண்டிருப்பாள்? மலையேறச் சென்று விட்டு வந்திருப்பாளா? என்னைப் பற்றி இந்த ஒரு மாதத்தில் நினைத்து பார்த்து இருக்க மாட்டாளா?’ என்று இழையினியைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தது.
ஆதவனின் மனம் முழுவதும்
‘இழையினி! இழையினி! இழையினி!’ என்ற பெயரே எதிரொலித்துக் கொண்டிருக்க மறுபுறம் இழையினியின் மனதிற்குள்ளேயும் ஆதவனின் ஞாபகங்களே அலைமோதியது.
சரியாக ஒரு மாதத்திற்கு முன்பு இதே நேரம் ஆதவனுடன் மலைப்பகுதியில் நடந்து வந்தது, அவனை ரசித்து பார்த்தது, அவன் கை வளைவில் தன்னை மறந்து கட்டுண்டு கிடந்தது, அவனோடு நெருக்கமாக நடந்து சென்றது, தன் வீட்டில் அவனிருந்த நேரம் அவனை, அவன் காதலை எண்ணி வியந்து போனது என ஒவ்வொரு நிகழ்வுகளாக அவள் மனக்கண் முன்னால் வந்து செல்ல அவள் முகத்தில் ஒரு பிரகாசம் குடி கொண்டது.
“இழை! இழை!” விஜயாவின் அதட்டலான குரலைக் கேட்டு திடுக்கிட்டு போய் அவளைத் திரும்பி பார்த்தவள்
“எ…என்ன? என்ன ஆச்சு விஜி?” தூக்கத்தில் இருந்து திடீரென்று எழுந்ததைப் போல தடுமாற்றத்துடன் வினவ
அவளை விசித்திரமாக பார்த்தவள்
“எவ்வளவு நேரமா உன்னை கூப்பிடுறேன்? எங்கேயோ கனவில் இருக்குற மாதிரி அசையாமல் இருக்க? சாப்பிட ஏதாவது வேணுமான்னு அப்பா கேட்க சொன்னாங்க அது தான் வந்தேன் பத்து நிமிஷமா கத்துறேன் உன் காதுக்கு விளங்குதே இல்ல” என்று கூறவும் தன் தலையில் தட்டிக் கொண்டே அவளைப் பார்த்தவள் சமாளிப்பது போல சிரித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.
“சாரி விஜி! அது வந்து ஆதவ… இல்லை ஆபிஸ் கணக்கு விடயமாக யோசித்து கொண்டு இருந்தேன்” தன்னை மறந்து ஆதவனின் பெயரைக் கூறப் போனவள் உடனே தன்னை நிதானித்து கொள்ள எதிரில் நின்றவளோ அதை நன்றாக உள் வாங்கிக் கொண்டாள்.
“ஓஹ்! ஆதவ… இல்லை இல்லை ஆ…பிஸ் விஷயமா? சரி சரி!” ஒவ்வொரு வார்த்தைகளையும் ராகமாக இழுத்துக் கொண்டே சிறு புன்னகையுடன் அவளைப் பார்த்து கொண்டே கூறி விட்டு விஜி அங்கிருந்து சென்று விட இழையினிக்குத் தான் தன் முகச்சிவப்பை மறைப்பது பெரும்பாடாகிப் போனது.
‘சே! நானே உளறி மாட்டிக்கிட்டேன் போல!’ இழையினி சிறு வெட்கப் புன்னகையுடன் தன் தலையில் தட்டிக் கொள்ள சரியாக அந்த நேரம் அவர்கள் செல்வதற்கான புகையிரதமும் வந்து நின்றது.
கொழும்பில் இருந்து வரும் அந்த புகையிரதம் கண்டி புகையிரத நிலையத்தில் இரண்டு முதல் ஐந்து நிமிடங்களே தரித்து நிற்கும் என்பதனால் இழையினி, விஜயா மற்றும் அவளது பெற்றோர் அவசர அவசரமாக அந்த புகையிரதத்தில் இரண்டாம் பிரிவுப் பெட்டியில் ஏறிக் கொள்ள காதைப் பிளக்கும் சத்தத்துடன் அந்த புகையிரதம் மெல்ல மெல்ல ஆடிக் கொண்டே நகர ஆரம்பித்தது.
சுற்றிலும் பச்சைக் கம்பளம் விரித்தாற் போன்றிருந்த மலைகளைத் தாண்டி செல்லும் புகையிரதத்தில் ஜன்னல் புறமாக அமர்ந்திருந்த இழையினி தன்னை சுற்றி இருக்கும் இயற்கை சூழலை ரசித்துப் பார்த்தபடியே அமர்ந்திருந்தாள்.
சிறிது நேரம் அந்த இடங்களையே பார்த்து கொண்டு வந்தவள்
“அங்கிள் அடுத்த ஸ்டேஷன் எப்போ வரும்?” செல்வத்தைப் பார்த்து கேட்க
தன் கடிகாரத்தை ஒரு முறை திருப்பி பார்த்து கொண்டவர்
“பத்து, பதினைந்து நிமிஷத்துக்கு ஒரு தடவை ஸ்டேஷன் வரும் இழைம்மா! ஆனா அங்க எல்லாம் கூட நேரம் டிரெயின் நிற்காது ஹட்டன் ஸ்டேஷனில் தான் கொஞ்சம் கூட நேரம் டிரெயின் நிற்கும்” எனவும்
“ஓஹ்! அப்படியா? அந்த இடம் வர எவ்வளவு நேரம் ஆகும் அங்கிள்?” பதிலுக்கு அடுத்த கேள்வியை கேட்டாள்.
“அது எப்படியும் மூணு மணித்தியாலம் ஆகும் மகள்! ஒரு பதினொரு மணி அப்படி ஹட்டனுக்கு போயிடலாம்”
“அவ்வளவு நேரமா?”
“ஓம் மகள்! பதுளைக்கு கண்டியில் இருந்து போக ஆறு மணித்தியாலத்துக்கு கிட்ட எடுக்கும் ஆனா டிரெயினில் போனா அந்த அலுப்பு காட்டாது!”
“ஓஹ்! ஓகே அங்கிள்!” சிறு புன்னகையுடன் அவரைப் பார்த்து தலையசைத்தவள் மீண்டும் தன் வேடிக்கை பார்க்கும் பணியைத் தொடரத் தொடங்கினாள்.
தாலாட்டு பாடிக் கொண்டே தொட்டிலை ஆட்டுவிப்பது போல புகையிரதம் அசைந்தாடிச் செல்ல ஒன்றரை மணித்தியாலங்களுக்கு மேல் அவளால் நிலையாக இருக்க முடியாமல் போனது.
இயற்கை சூழலில் நிறைந்திருந்த காலை நேரத்துக்காற்று அவள் முகத்தில் வந்து மோத அந்த இனிமையில் மெல்ல மயங்கியவள் கண்களை மூடி தன்னை மறந்து உறங்கி விட தீடீரென ஒலித்த புகையிரதத்தின் ஹார்ன் சத்தத்தில் திடுக்கிட்டு போய் எழுந்து அமர்ந்து கொண்டு சுற்றிலும் திருதிருவென திரும்பி பார்த்தாள்.
“என்ன மேடம் நல்லாத் தூங்கி எழும்புனீங்களா?” விஜியின் கேள்வியில் அசடு வழிய குறுநகை புரிந்தவள்
“சும்மா! லைட்டா! கொஞ்சம் நேரம்” என்றவாறே தன் கடிகாரத்தை திருப்பிப் பார்க்க அதுவோ பதினொரு மணியை நெருங்கி கொண்டிருந்தது.
“அய்யோ! இவ்வளவு நேரமாக தூங்கிட்டேனா? ஏன் விஜி கொஞ்சம் முன்னாடியே எழுப்பி இருக்கலாமே?” இழையினி சற்று வருந்தி கொண்டே கேட்க
அவளருகில் வந்து நெருங்கி அமர்ந்து கொண்டு அவளது தோளில் தன் கையை சுற்றி போட்டு கொண்டவள்
“ஆதவன் வந்து போனதிலிருந்து நீ அவரைப் பற்றியே நினைச்சு தூங்காமல் இருந்திருப்ப! அது தான் இன்டைக்கு அசந்து தூங்கவும் விட்டுட்டேன்” அவளுக்கு மாத்திரம் கேட்கும் வகையில் கூற அவளோ தன் வெட்கத்தை மறைக்க பெரும் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருந்தார்.
“அந்த பெயரைச் சொன்னதுமே முகமெல்லாம் சிவக்குது! இது சரியில்லை!” மீண்டும் விஜி அவளைப் பார்த்து கண்ணடித்து சிரிக்க
அவளோ
“அய்யோ! விஜி! அம்மா, அப்பா எல்லாம் இருக்காங்க” சிறு சங்கடத்துடன் தன் முன்னால் அமர்ந்திருந்தவர்களை நிமிர்ந்து பார்க்க அவர்களோ ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தனர்.
“அம்மாவும், அப்பாவும் தூங்கிட்டு இருக்கவும் தான் உன்னோட விளையாடுனேன் இழை பாப்பா! ஒண்ணும் சீரியஸாக எடுத்துக்காதே! பதுளை தாண்டி நனுஓயா ஸ்டேஷன் வந்த பிறகு செம்ம அழகான இடம் எல்லாம் வரும் அது தான் நான் உன்னை அவசரப்பட்டு எழுப்பல! இப்போ தூங்கி எழும்புனா இனி வரப்போகும் இடத்தை எல்லாம் ரசித்து பார்க்கலாம் இல்லையா?”
“உன் உதவிக்கு ரொம்ப நன்றி தெய்வமே!” விஜியைப் பார்த்து தன் தலைக்கு மேல் கையெடுத்து கும்பிட்டு கொண்டவள் சிரித்துக் கொண்டே அங்கிருந்து எழுந்து சென்று தன் முகத்தை கழுவி விட்டு அவர்கள் அமர்ந்திருந்த பெட்டியின் கதவின் அருகில் சென்று நின்று கொண்டாள்.
கதவின் வெகு ஓரத்தில் சென்று நிற்காமல் பாதுகாப்பான ஒரு பக்கமாக சென்று கொண்டிருந்த இழையினியின் பார்வை அவர்கள் கடந்து செல்லும் அந்த இயற்கை பிரதேசத்திலேயே தங்கி நின்றது.
இயற்கையின் அந்த பசுமை நிறைந்த அழகிற்கு முன்னால் மற்ற எல்லாமே இரண்டாம் பட்சமாக தான் அவளுக்கு தோன்றியது.
ஒரு மாத காலமாக தன் மனதிற்குள் பாறாங்கல்லை வைத்ததைப் போல அவஸ்தைப் பட்டுக் கொண்டிருந்தவள் இப்போது அந்த எண்ணங்கள், பிரச்சினைகள் எல்லாவற்றையும் மறந்து ஒரு அமைதியான உலகத்திற்குள் சஞ்சரித்து கொண்டிருந்தாள்.
‘இப்போது தன் முன்னால் ஆதவன் வந்து நின்றால் எப்படி இருக்கும்?’ தன் மனவோட்டத்தை எண்ணிப் புன்னகைத்த படியே இழையினி நின்று கொண்டிருக்க அவள் எண்ணத்தின் நாயகனோ சிறு குழந்தை முதல் நாள் பாடசாலை செல்வதற்கு அடம் பிடிப்பது போல ராஜாவிடம் கெஞ்சிக் கொண்டு நின்றான்.
“டேய் ராஜா! வயிறு வலிக்குற மாதிரி இருக்கு டா! நான் வரல” ஆதவன் தன் வயிற்றை பிடித்துக் கொண்டு மீண்டும் வீட்டிற்குள் செல்லப் போக
அவனைப் பின்னாலிருந்து இழுத்து பிடித்து கொண்ட ராஜா
“சின்ன பிள்ளை மாதிரி வயிறு வலிக்குது, கால் வலிக்குதுன்னு சாக்கு சொல்லாம வந்து ஒழுங்கா காரில் ஏறு!” தன் பிடியை விடாமல் அவனைக் காரிற்குள் தள்ளி ஏற்றி விட்டு மறுபுறம் சென்று காரை ஸ்டார்ட் செய்தான்.
“அய்யோ! என்னைக் காப்பாற்றுங்க! என்னை இந்த பையன் கடத்திட்டு போறானே! இந்த அநியாயத்தைக் கேட்க யாருமே இல்லையா?” ஆதவன் காரின் சாளரக் கண்ணாடியில் தட்டிக் கொண்டே சத்தமிட
அவனைப் பார்த்து தன் தலையில் அடித்துக் கொண்ட ராஜா
“டேய் ஆதவா! ரொம்ப ஓவரா போறடா நீ! நான் என்னவோ வில்லன் மாதிரி, நீ ஹீரோயின் மாதிரி உன்னை கடத்திட்டு போற மாதிரி சத்தம் போடுற! உன்னோட சத்தியமா முடியலடா! இப்ப என்ன உனக்கு உன் ஆளைப் பார்க்கணும் அவ்வளவு தானே? என் பிரண்ட் கல்யாணம் முடிஞ்சதும் பதுளையில் இருந்து நேரடியா கண்டிக்கு போறோம் உன் இழையினியை பார்க்குறோம் சரியா? இப்ப தயவுசெய்து உன் எஃப்.எம் வாயை மூடிட்டு வா!” விட்டால் அழுது விடுவான் என்ற நிலையில் அவனைப் பார்த்துக் கெஞ்சலாக கூறவும்
“சரி! சரி! பிழைத்துப்போ!” அவனைப் பார்த்து ஆசிர்வதிப்பது போல கூறியவன் காரில் இருந்த ரேடியோவை ஆன் செய்தான்.
அவன் ரேடியோவை ஆன் செய்த நேரம் சரியாக
‘காதல் என்னும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்!’ என்ற பாடல் ஒலிக்க
அவனோ
“அட! அட! என்ன ஒரு சிட்டுவேஷன் சாங்! இதுவல்லவோ பாட்டு!” அந்த பாடலைப் பாராட்டி பேசியபடியே வரவும் ராஜா அவனை விசித்திரமாக திரும்பி பார்த்து விட்டு சிரிக்கத் தொடங்கினான்.
“என்னடா அப்படி பார்த்து சிரிக்குற?”
“இல்லை இவ்வளவு வருஷமாவா நீ அந்த தேர்வை எழுதி முடிக்கல? ஒருவேளை சம்சாரம் அது மின்சாரம் படத்தில் விசு சொல்ற மாதிரி பரீட்சை எழுதினான், எழுதியிருக்கிறான், இன்னும் எழுதுவான்னு சொல்லுவாரே அந்த ரகமான தேர்வா? ஒருவேளை அப்படி இருந்தா எப்படி இருக்கும்னு யோசிச்சு பார்த்தேன் அதுதான் சிப்பு வந்துடுச்சு சிப்பு!”
“ஏய்! என்னடா நக்கலா? மவனே! இருடி நீயும் ஒரு நாள் காதலித்து இப்படி வந்து நிற்பாய் தானே? அப்போ உன்னை கவனித்து கொள்ளுறேன்”
“அய்யோ! ராசா! அப்படி மட்டும் சொல்லாதே டா! ஒருத்தன் காதலிச்சு கண் முன்னாடி படுற அவஸ்தையை எல்லாம் நான் பார்த்துட்டேனே! இனி சத்தியமா காதலிக்குற ஆசை எனக்கு வராது! வரவும் கூடாது!” ராஜா கண்களை மூடி தன் கன்னத்தில் போட்டுக் கொண்டு தங்கள் காரை விட்டு இறங்கி நிற்க ஆதவனும் அவனைப் பார்த்து சிரித்துக் கொண்டே அவனருகில் இறங்கி நின்றான்.
நானுஓய புகையிரத நிலையத்திற்கு முன்னால் கார் பார்க்கிங்கில் தன் காரை நிறுத்தி விட்டு தன் தந்தைக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு ராஜா காரை பற்றிய விபரங்களை கூறிக்கொண்டிருக்க ஆதவனோ அந்த இடத்தை சுற்றிலும் தன் பார்வையை சுழலவிட்டான்.
ஆட்கள் பெரிதாக அந்த இடத்தில் நடமாடாவிட்டாலும் அங்கே இருக்கும் ஒரு சிலர் முகத்திலும் வேலை செய்யும் பரபரப்பு இருந்து கொண்டு தான் இருந்தது.
“ஏதோ பெரிய வர்ணனை எல்லாம் கொடுத்து இந்த டிரெயினில் கூட்டிட்டு போற! நீ சொன்ன மாதிரி போகும் வழியில் எதுவும் வரலேன்னு வை அந்த இடத்திலேயே வைத்து உன்னை டிரெயினில் இருந்து தள்ளி விட்டு விடுவேன் ஜாக்கிரதை!” ராஜாவைப் பார்த்து எச்சரிப்பது போல கூறி விட்டு ஆதவன் முன்னோக்கி நடந்து செல்ல
அவனோ
‘இவன் அன்னைக்கு அந்த மலையில் இருந்து கீழே விழுந்ததில் இடுப்பு தான் அடிபட்டுடுச்சுன்னு நினைச்சேன்! ஆனா அடிபட்டது இடுப்பில் இல்லை இவன் தலையில்!’ மனதிற்குள் மானசீகமாக அவனை வறுத்தெடுத்த படியே அவனைப் பின் தொடர்ந்து நடந்து சென்றான்.
மறுபுறம் இழையினி தன் கைகளை கட்டிக் கொண்டு தன்னைக் கடந்தும் செல்லும் பிரதேசங்களைப் பார்த்து கொண்டு நின்றாள்.
‘இன்னும் எவ்வளவு தூரம் போக வேண்டும் என்று தெரியவில்லையே!’ தன் கையிலிருந்த கடிகாரத்தை திருப்பி பார்த்து விட்டு மறுகையில் இருந்து தன் தொலைபேசியையும் ஒரு தடவை பார்த்து கொண்டவள் தன் இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டு ஹெட்போனை எடுத்து காதில் மாட்டிக் கொண்டு தன் தொலைபேசியில் இருந்த பாடல்களை ஒலிக்க விட்டாள்.
ஒவ்வொரு பாடல்களாக மாற்றிக் கொண்டே வந்தவள் ஒரு பாடலைக் கேட்டதும் தன்னையும் அறியாமல் கண்களை மூடிக் கொண்டு அந்த பாடலை ஆழ்ந்து ரசிக்கத் தொடங்கினாள்.
மழை நின்ற பின்பும் தூறல் போல உன்னை மறந்த பின்பும் காதல்
அலை கடந்த பின்பும் ஈரம் போல உன்னை பிரிந்த பின்பும் காதல்
எனக்கும் காதல் பிறந்திரிச்சு
அதற்கும் பெருமை கிட்டுமா ஒகோய்
எனக்குள் இதயம் கணிச்சிறுச்சே
அதை உன்னிடும் சேர்க்கட்டுமா
மழை நின்ற பின்பும் தூறல் போல உன்னை மறந்த பின்பும் காதல்
அலை கடந்த பின்பும் ஈரம் போல உன்னை பிரிந்த பின்பும் காதல்
ஆதவன் தன்னை சந்தித்து விட்டு சென்ற நாளிலிருந்து அவனைப் பற்றியே சிந்தித்துக் கொண்டு இருந்ததால் என்னவோ அந்த பாடல் வரிகளை கேட்டதும் ஆதவனின் புன்னகை நிறைந்த முகமே அவள் கண்களுக்குள் அழகிய காட்சியாக விரிந்தது.
நீர் துளிகள் நிலம் விழுந்தால் பூக்கள் மெல்ல தலை அசைக்கும்
என் மனதில் நீ நுழைந்தாய் மௌனம் கூட இசை அமைக்கும்
பூங்குயில்கள் மறைந்திருந்தால் கூவும் ஓசை மறைவதில்லை
தாமரையை நான் இருந்தும் தாகம் இன்னும் அடங்கவில்லை
வானும் இணைந்து நடக்கும் இந்த பயணத்தில் என்ன நடக்கும்
வானம் இருக்கும் வரைக்கும் இந்த வானவில் உன்னுடன் இருக்கும்
மழை துளி பனி துளி கலைந்த பின்னே
அது ஒருவரை தினம் தினம் பிரிந்திடுமோ
மழை நின்ற பின்பும் தூறல் போல உன்னை மறந்த பின்பும் காதல்
அலை கடந்த பின்பும் ஈரம் போல உன்னை பிரிந்த பின்பும் காதல்
கண்ணிமைகள் கை தட்டியே உன்னை மெல்ல அழைக்கிறதே
உன் செவியில் விழவில்லையா உள்ளம் கொஞ்சம் வலிக்கிறதே
உன்னருகே நான் இருந்தும் உண்மை சொல்ல துணிவு இல்லை
கைகளிலே விரல் இருந்தும் கைகள் கோர்க்க முடியவில்லை
உன்னை எனக்கு பிடிக்கும் அதை சொல்வதில் தானே தயக்கம்
நீயே சொல்லும் வரைக்கும் என் காதலும் காத்து கிடக்கும்
தினம் தினம் கனவில் வந்து விடு
நம் திருமண அழைப்பிதழ் தந்து விடு
அவள் மன எண்ணங்களை அப்படியே வெளிச்சம் போட்டு காட்டுவது போல இருந்த அந்த வரிகளைக் கேட்டதுமே சட்டென்று தன் விழிகளை திறந்து கொண்டவள் படபடப்புடன் தன் முகத்தை துடைத்து கொண்டும் அந்த வரிகளின் தாக்கம் அவளது மனதை மேலும் மேலும் படபடக்கவே செய்தது.
மழை நின்ற பின்பும்
உன்னை மறந்த பின்பும் காதல்
அலை கடந்த பின்பும் ஈரம் போல உன்னை பிரிந்த பின்பும் காதல்
எனக்கும் காதல் பிறந்திரிச்சு
அதற்கும் பெருமை கிட்டுமா ஒகோய்
எனக்குள் இதயம் கணிச்சிறுச்சே
அதை உன்னிடும் சேர்க்கட்டுமா
மழை நின்ற பின்பும் தூறல் போல உன்னை மறந்த பின்பும் காதல்
அலை கடந்த பின்பும் ஈரம் போல உன்னை பிரிந்த பின்பும் காதல்
மனதிற்குள் ஏதோ ஒரு சொல்லமுடியாத தடுமாற்றம், பதட்டம் என கலவையான உணர்வுகளுக்குள் சிக்கிக் கொண்டிருந்தவள் அந்த புகையிரதம் ஒரு ஸ்டேஷனில் நிற்கவே தன் காதில் இருந்த ஹெட்போனை கழட்டி விட்டு ஜன்னலினூடாக திரும்பி பார்த்தாள்.
அங்கே ஆதவனும், ராஜாவும் ஏதேதோ கதை பேசிக் கொண்டு சிரித்துக் கொண்டே நடந்து வந்து கொண்டிருக்க அதைப் பார்த்த இழையினி அதிர்ச்சியாக தன்னை மறந்து எழுந்து நின்றாள்.
அவள் எழுந்து நிற்பதைப் பார்த்ததும்
“என்ன இழை என்னவும் வேணுமா?” விஜி கேள்வியாக அவளை அண்ணாந்து பார்க்க அவளோ அதை எதையும் காதில் வாங்கிய கொள்ள முடியாத நிலையில் நின்று கொண்டிருந்தாள்.
“ஹேய் இழை என்னடி ஆச்சு?” விஜி மீண்டும் அவள் கை பற்றி இழுக்கையில் அந்த நேரம் சரியாக தங்கள் பின்னால் ஏதோ நிழலாட திரும்பிப் பார்த்தவள் அங்கே நின்று கொண்டிருந்த ஆதவனையும், ராஜாவையும் பார்த்து அதிர்ச்சியடைந்து விழித்துக் கொண்டிருக்க அவர்கள் எதிரில் நின்று கொண்டிருந்த ஆண்கள் இருவருமோ அவர்கள் இருவரையும் விட பன்மடங்கு அதிர்ச்சியோடு அவர்களைப் பார்த்து கொண்டு நின்றனர்…….