உன் காதல் என் தேடல்

உன் காதல் என் தேடல்

தேடல் – 10

 

நிலா ஆஃபிஸ் கிளம்பாமல் எதையோ யோசித்துக் கொண்டிருப்பதைப் பார்த்த யாழினி, “ஏய் நிலா டைம் ஆச்சுடி. இன்னும் நீ கிளம்பாம, பொறியில மாட்டுன எலி மாதிரி பேந்த பேந்த முழிச்சிட்டு உக்காந்திருக்க. என்னடி? என்ன ஆச்சு?”

 

“எனக்கு ரொம்ப பயமா இருக்கு யாழி. நேத்து நா அவ்ளோ பேசுறேன். அந்த துருவ் லூசு என்னனா அது பாட்டுக்கு அடுத்த வாரம் பொண்ணு பாக்க வரேன்னு சொல்லிட்டுப் போகுது. இது கண்டிப்பா நடக்காது, நடக்கவும் கூடாது. ஆனா, அது அவனுக்குத் தெரியாதே‌.? நா அவனை வேணாம்னு சொல்றேன்னு, எங்க நா அவனுக்குக் கெடைக்க மாட்டேன்னு பயந்து, சினிமால வர்ற மாதிரி திடீர்னு எனக்குத் தெரியாம சட்டுன்னு தாலி ஏதும் எடுத்துக் கழுத்துல கட்டிடுவானோன்னு பயமா இருக்குடி” என்ற நிலாவைப் பார்த்துச் சிரிப்பதா அழுவதா என்று யாழினிக்குப் புரியவில்லை.

 

“நிலா குட்டி, நீ இப்பவும் துருவ்வ காதலிக்கிற. அவனை உன்னால மறக்க முடியாதுன்னு எனக்கும் தெரியும், உனக்கும் தெரியும். அப்றம் எதுக்குடி இதெல்லாம்? பேசாம துருவ் கிட்ட உண்மைய சொல்லிடு. அவன் புரிஞ்சுக்குவான்டி.”

 

“இல்ல யாழி, அந்த அபிநந்தன் கிட்ட எனக்குத் தீர்க்க வேண்டிய கணக்கை நா தான் தீர்க்கணும். அபிநந்தன் பத்திய உண்மை தெரியாம என்னால ஒன்னும் செய்ய முடியாது. ஒரு வேள நா இங்க எதுக்கு வந்திருக்கேன்னு துருவ் கிட்ட சொன்னா, அவன் என்ன முடிவெடுப்பான்னு யாருக்குத் தெரியும். அவன் பாட்டுக்கு சுயநலமா எதாவது முடிவெடுத்துட்டா? இந்த விஷயத்தில் என்னால எந்த ரிஸ்க்கும் எடுக்க முடியாது யாழி.”

 

“நானும் இதுவரை துருவ்வை தப்பா தான்டி புரிஞ்சிட்டு இருந்தேன். ஆனா, அவன் உன்னை உண்மையா தான் விரும்பி இருக்கான். ம்ம்ம்…! இவ்ளோ நாள் உனக்காக வருத்தப்பட்டேன். இனி அஸ் ஏ குட் ஃப்ரெண்ட்டா அவனுக்கும் சேர்ந்து வருந்தணும். என்னாமோ போடி, துணிஞ்சு இறங்கியாச்சு. கடைசி வரை போய் ஒரு கை பார்த்துடுவோம். எது நடந்தாலும் நடக்கட்டும். நீ ஆஃபிஸ் கெளம்பு” என்று நிலாவுக்குத் தைரியம் சொன்ன யாழி அவளை அழைத்துக் கொண்டு ஆஃபிஸ் வந்தாள்.

 

இங்கு துருவ், நிலா எப்போது வருவாள் என்று ரூம் வாசலையே பார்த்திருக்க, நிலா ரூமுக்குள் வந்தவள் எதுவும் நடக்காதது போல் அமைதியாகத் தன் சேரில் அமர்ந்து தன் வேலைகளைத் தொடங்கினாள்.

 

அவள் அமைதி துருவ்வை ரொம்பவே சோதித்தது. “ஏய் முகில் உன் மனசுல என்ன தான்டி நெனச்சிட்டிருக்க? நானும் போனாப் போதுன்னு பொறுத்துப் போனா, நீ என் தலைமேல ஏறி டான்ஸ் ஆடுறியா? நேத்து அவ்ளோ நடந்தும் ஒன்னும் நடக்காத மாதிரி வந்து உக்காந்து வேலையப் பார்த்துட்டு இருக்க. நேத்து நா சொன்னதைப் பத்தி யோசிச்சியா இல்லயா? அம்மாகிட்ட பேசிட்டியா? ஏதாவது சொல்லுடி?”

 

“நா என்னோட முடிவை நேத்தே சொல்லிட்டேன். உன்னோட இந்தப் பணக்கார விளையாட்டை வேற எவ கிட்டயாது வச்சிக்க. நா மறுபடியும் உன்ன நம்பி ஏமாறத் தயாரா இல்ல” என்றவளை இழுத்து தன் மார்போடு சேர்த்து பிடித்த துருவ், தன் முகத்திற்கு நேரே அவள் முகத்தைப் பிடித்துத் திருப்பினான். அவள் கண்களோடு தன் கண்களைக் கலக்கவிட்டு, “இப்ப நீ ஏதோ சொன்னயே? அதை இப்ப, என் கண்ணப் பாத்துச் சொல்லுடி. உனக்கு என் மேல நம்பிக்கை இல்ல. நான் உன்னைக் காதலிச்சது எல்லாம் வெறும் உன்னோட உடம்புக்குத் தான். என்னோடது லவ் இல்ல வெறும் லஸ்ட் தான்னு என்ன கண்ணைப் பார்த்து சொல்லுடி. அப்படி மட்டும் நீ சொல்லிடு இந்த ஜென்மத்தில் நா உன் கண் முன்னாடி வரமாட்டேன்டி. இது என் அம்மா மேல நா உயிரையே வச்சிருக்க என் அபி மேல சத்தியம்டி. சொல்லுடி சொல்லு நேத்து நீ சொன்னதத் திரும்பச் சொல்லு” என்றவன் அவளை முகத்தையே இமைக்காது பார்த்திருக்க.

 

‘முடியாதுடா, என்னால சத்தியமா முடியாது’ என்று மனதில் நினைத்தவள் கண்களில் கண்ணீர் கரைகட்டி நிற்க ‘நேத்து அப்படி ஒரு வார்த்தையை உன்னப் பாத்துச் சொல்லும் போதே நான் உன்ன பாதிக் கொன்னுட்டேன். மறுபடியும் என்னால அந்தப் பொய்யை திரும்பச் சொல்லி உன்னை முழுசா சாகடிக்க முடியாது துருவ். என்னோட துருவ்வோட காதல் உண்மை. எங்க அம்மா, யாழினி என் மேல வச்சிருக்க அன்பு எவ்வளவு தூய்மையானதோ அந்த அளவுக்கு என்னோட துருவ்வோட காதல் பரிசுத்தமானதுடா. ஆனா, என் தலையெழுத்து உன் பேருக்கு பக்கத்துல அந்தக் கடவுள் என் பேரை எழுதாம சதி பண்ணிட்டான்’ என்றவள் இதயம் ஊமையாகக் கண்ணீர் விட நிலா அவன் கையை வெடுக்கென தட்டிவிட்டவள்.

 

“இங்க பாருங்க சார், நேத்து நடந்ததைப் பத்தி நா எதுவும் பேச விரும்பல. நா ஒரு காலத்தில உங்களைக் காதலிச்சேன் தான் இல்லைங்கல. பட், இப்ப எனக்குள்ள அப்படி எந்த எண்ணமும் இல்ல. நா உங்களை மறந்து ரொம்ப நாள் ஆச்சு. சோ ப்ளீஸ்! என்னை டிஸ்டர்ப் பண்ணாதீங்க. உங்க காதல் உண்மையினா, அதுமேல சத்தியமா கேக்குறேன் என்ன தொந்தரவு பண்ணாதீங்க” என்றவள் அங்கிருந்து ஓடிவிட்டாள்.

 

“எனக்குத் தெரியும் முகில். உன்னால அந்தப் பொய்யான காரணத்த திரும்பச் சொல்ல முடியாதுன்னு எனக்கு நல்லாவே தெரியும். நீ திரும்பி அப்டி ஒரு வார்த்தை சொன்னா உன்னோட துருவ் உயிர் அவன் உடம்ப விட்டு போய்டும்னு உனக்கும் தெரியும். அதான் என்னென்னமோ காரணம் சொல்லி தப்பிச்சு ஓடுற. நீ என் காதல் மேல சத்தியம் வாங்கிட்டுப் போற இல்ல? இனி நா உன்னைத் தொந்தரவு செய்ய மாட்டேன். அதுக்காக உன்னையும் விடமாட்டேன். இந்த ஜென்மத்தில் உனக்கு நா தான்டி புருஷன்.”

 

நிலா தன் ரூமில் அழுதபடி உறங்கி இருக்க, யாழினிக்கு அவள் முகத்தைப் பார்க்கவே கஷ்டமாக இருந்தது. மெதுவாக அவள் தலை கோதி விட அந்த ஸ்பரிசத்தில் கண்விழித்த நிலா. “சாரி யாழி மனசு சரியில்ல. அதான் உன்கிட்ட கூடச் சொல்லாம லீவ் போட்டுட்டு வந்துட்டேன்” என்ற நிலாவை தவிப்பாகப் பார்த்த யாழினி, 

 

“அபிநந்தன் ஊருக்கு வந்துட்டாருடி” என்று சொல்ல.

 

நிலாவிற்கு ஒரு நிமிடம் இதயம் நின்று துடித்தது. “யா…யாழி நீ உண்மையாவா சொல்ற? அ… அவர் வந்துட்டாராடி” என்று கேட்வள் குரலில் இருந்தது நீண்ட நாள் கோபமா? ஆர்வமா, இல்லை தவிப்பா என்று அவளுக்குமே விளங்கவில்லை.

 

“ஆமாடி, அவர் இன்னைக்கு மதியம் தான் ஊருக்கு வந்தாராம். கார்த்திக் சொன்னான். இனி இங்க தான் இருக்கப் போறாராம்.”

 

“அவர் மட்டும் தான் வந்திருக்காரா யாழி? என்ற நிலா குரலில் அதற்கான பதிலை எதிர்பார்த்து அப்படி ஒரு தவிப்பு.

 

“ம்ம்ம் அவர் மட்டும் தான் வந்திருக்காரு. அப்ப அவரோட” என்று நிலா இழுக்க, “தெரியல” என்று தலையாட்டிய யாழினி “ஆஃபிஸ்ல ஸ்டாஃப்ஸ் குசுகுசுன்னு பேசுறத வச்சுப் பார்த்தா அவரோட ஒய்ஃப் இப்ப” என்று யாழினி இழுக்க நிலாவுக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை.

 

“நாளைக்கு அவர் நம்ம ஆஃபிஸ்க்கு வராரு நிலா. துருவ் கூட நீ செய்ற ப்ராஜெக்ட்டை இனி அவரும் சேர்ந்து பாக்கப் போறாரு. இனி நீ அவருக்கும் பி.ஏவா இருக்கணும்னு கார்த்திக் சொன்னான்.”

 

நிலா விரக்தியாகச் சிரித்தவள் “அட்லாஸ்ட் என்னோட தேடல் ஒரு முடிவுக்கு வரப்போகுது. இனி நடக்கப்போறது எல்லாம் அந்தக் கடவுள் முடிவு தான். எது நடந்தாலும் சரின்னு அதை ஏத்துக்கிட்டு நா வாழப் பழகணும்” என்றவள் யாழினி மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டாள், “துருவ் ரொம்ப பாவம்டி. என்னைக் காதலிச்ச பாவத்துக்கு” என்று ஆரம்பிக்க, யாழினி அவள் வாயைப் பொத்தியவள் “இப்ப எதுவும் பேச வேண்டாம். நீ விதி வழி வாழ்க்கையை நடத்துறதா முடிவு பண்ணிட்ட. இனி மதிக்கு இங்க வேல இல்ல. காலம் ஒரு முடிவை எடுத்து உன் கையில் கொடுக்கும் அதுக்கு ஏத்த மாதிரி வாழப் பழகு. இப்ப தூங்கு” என்றவள் நிலாவை மெல்ல தட்டிக் கொடுக்க, தாய்மடி தந்த அமைதியில் நிலா மெல்ல கண் மூடினாள்…

 

மறுநாள் காலையில் நிலாவும், யாழினியும் ஆஃபிஸ் வந்தனர். நிலாவிற்கு உள்ளுக்குள் சொல்லமுடியாத ஒரு உணர்வு. அபிநந்தனை முதன் முதலில் நேரில் பார்க்கப் போவதை நினைக்கும் போதே அவள் வயிற்றில் அமிலமும், அமுதமும் ஒன்றாகச் சுரந்தது. நிலாவின் பல துன்பங்களுக்கு முக்கியக் காரணம் அபிநந்தன் தான். இருந்தாலும் ஏன்? எதற்கு? என்று தெரியவில்லை முகம் தெரியாத அந்த அபிநந்தன் மேல் நிலாவிற்கு ஏதோ ஒரு பிடிப்பு வருவதை அவளால் தடுக்க இயலவில்லை. ‘என்ன இது? என்னோட எல்லாப் பிரச்சனைகளுக்கும் காரணம் இவரு தான். கடைசியா என்னோட துருவ்வை நா இழக்க காரணமும் இந்த ஆளுதான். இருந்தும் ஏன்? எனக்கு முகம் கூடத் தெரியாத அவர் மேல சொல்லமுடியாத ஒரு உணர்வு வருது. ஒருவேளை அவரு என்னோட’ என்று எதையோ நினைத்தவள் ஃபோன் அடிக்க, அது கார்த்திக் நம்பர்.

 

“சொல்லு கார்த்திக்?”

 

“நிலா மாமா உன்னை ரூம்க்கு வரச் சொன்னாரு. சீக்கிரம் போ” என்க,

 

“ஏய் கார்த்திக் உங்க மாமா எதுக்கு என்னை ரூம்க்கு வர சொல்லனும்?”

 

“ம்ம்ம் ஏன்னா அவர் தான் இந்தக் கம்பெனி ஓனர், மிஸ்டர்.அபிநந்தன். உனக்காக வெய்ட் பண்றாரு சீக்கிரம் போம்மா”.

 

அந்த அறையின் கதவையே உற்றுப் பார்த்துக் கொண்டு இருந்தவள் மனது முதல் நாள் பள்ளி செல்லும் குழந்தை போலப் பயத்தில் அழுது வடிந்தது. அதே சமயம் பள்ளியில் புதிய நட்பு கிடைக்கும் என்று மகிழும் குழந்தையின் ஆர்வமும் அவளிடம் இருந்தது.

 

மெதுவாகக் கதவைத் திறந்து “மே ஐ கம்” என்று அமைதியான குரலில் கேட்க “எஸ் கம்-இன்” என்று கம்பீரமாக வந்த ஆண் குரல் நிலாவை அதிர வைத்தது.

 

அபிநந்தன், வயது நாற்பதுக்கு மேல் இருந்தாலும் இன்னும் இளமையாகவே இருந்தார். லேசாக அங்கங்கு சில நரைத்த முடிகள், அடர் மீசை, தீர்க்கமான கண்ணாடி போடாத கண்கள். ஆறடி உயரத்தில் வெள்ளைச் சட்டை, கருப்புப் பேன்ட்டில் கம்பீரமாகச் சேரில் அமர்ந்திருந்த அபிநந்தனை விழி விரித்துப் பார்த்தது பார்த்தபடி அப்படியே நின்றிருந்தாள் நிலா.

 

அபிநந்தன் நிலாவை நிமிர்ந்து பார்த்தவர், “நீதான் இனி எனக்குப் பி.ஏவாம்மா? துருவ் ப்ராஜெக்ட் நீதான் மூவ் பண்றயாமே, கார்த்திக் சொன்னான்.குட்” என்றவர் ப்ராஜெக்ட் பற்றி ஏதோ கேட்க நிலா அவரை உற்றுப் பார்த்தபடியே இருந்தாள்.

 

“ஹலோ ஹலோ, ஏம்மா குட்டிப் பொண்ணு” என்று அவர் சத்தமாகக் கத்திய பின் தான் நிலாவுக்கு உணர்வே வந்தது. “ச… சாரி சார், என்… என்ன சொன்னீங்க? என்ன கேட்டீங்க?” என்று தத்துப்பித்து என்று உலறி வைக்க.

 

“ம்ம்ம் வெங்காயம் கிலோ என்ன விலைன்னு கேட்டேன்?”

 

“அய்யோ நான் இன்னைக்கு மார்கெட் போகல சார். எப்பவும் சன்டே தான் மார்கெட் போவேன். இன்னைக்கு ரேட் என்னனு எனக்குத் தெரியாது சார்” என்று சிறு மழலை போல் மலங்க மலங்க முழித்த நிலாவைப் பார்த்து நந்தனுக்குச் சிரிப்பு தான் வந்தது.

 

“என்ன பொண்ணுமா நீ? நா தான் ஏதோ வெளையாட்டுக்கு கேட்டா நீ அதுக்குப் போய்” என்று சிரித்த படி, “உன் பேரு என்ன”? எனக் கேட்டார்.

 

“முகில்நிலா” என்று அவள் பெயர் கேட்டதும் அவர் முகத்தில் அதுவரை இருந்த சிரிப்பு எங்கு தொலைந்து போனது என்றே தெரியவில்லை. சில நிமிடங்கள் நிலாவை உற்றுப் பார்த்தவர், தன் சேரில் இருந்து எழுந்து வந்து நிலா தலையை மெதுவாக வருடியபடி “ரொம்ப அழகான பேருமா. எனக்கு ரொம்பப் புடிச்ச பேரு. எனக்கு ஒரு பொண்ணு பொறந்தா இந்தப் பேர் தா வைக்கணும்னு நானும் என்னோட” என்று ஆரம்பித்தவர் “நீ போம்மா, நீ போ” என்று நிலாவை வெளியே அனுப்பியவர் கண்கள் மூடி எதையோ நினைக்க அவர் விழியோரம் கண்ணீர் துளிகள் எட்டிப் பார்த்தது. நிலா அவர் முகத்தையே திரும்பித் திரும்பி பார்த்தபடி அறையை விட்டு வெளியே வந்தவளுக்கு, அவர் கண்களில் நீர் வழிவது நன்கு தெரிந்தது.

 

தன் சீட்டிற்கு வந்து உட்கார்ந்து நடந்ததை யோசித்த நிலாவிற்கு ஒரே குழப்பமாக இருந்தது. ‘ஒரு வேள இவரு நல்லவரோ.? நம்ம தான் தப்பா புரிஞ்சிக்கிட்டோமா? என் பேரை கேட்டதும் ஏன் கண்கலங்கணும்? அப்ப இவரு இன்னும் எதையும்’ என்று என்னென்னமோ யோசித்தவள், ‘கடவுளே! இனி நா என்ன செய்யுறது’ என்று தலையில் கை வைத்தபடி டேபிளில் படுத்து விட்டாள்.

 

 

Leave a Reply

error: Content is protected !!