உன் காதல் என் தேடல்

உன் காதல் என் தேடல்

தேடல் – 15

 

நிலா இத்தனை நாள் எதற்காக, எந்த லட்சியத்துக்காக இங்கு வந்து காத்திருந்தாளோ, அதை இன்று கேட்டுவிட்டாள். கடைசியாகக் கேட்டே விட்டாள். ஆனால், அதற்கான பதிலைச் சொல்வது தான் யாருக்கும் அவ்வளவு சுலபமானதாக இல்லை. அது நிலாவுக்கு நன்கு புரிந்தது.

 

 

 

 

நிலா மதியின் மகள் என்பது எல்லோருக்கும் அதிர்ச்சி என்றாள், அவள் இப்படி ஒன்றைக் கேட்டது அனைவருக்கும் பேரதிர்ச்சி… நிலாவையே பார்த்துக்கொண்டிருந்த யாரிடமும் நிலாவின் கேள்விக்கான பதில் இல்லை.

 

 

 

 

அபிநந்தன் நிலாவை ஒரு மிரட்சியோடு பார்த்திருக்க‌,

 

துருவ்வும் “இதுக்காகத் தான் நீ என்னை விட்டு விலகி போனீயா முகில்? உனக்கு உன் அம்மா முக்கியம்னு இவ்வளவு யோசிச்சு இருக்கயே? ஒரு நிமிஷம்! ஒரே ஒரு நிமிஷம்… நீ ஏன்டி என்ன நெனைக்காம விட்ட? நீ இல்லாம நா உயிரோட இருப்பேன்னு எப்டி நெனச்ச முகில்”? என்றவன் ‘ஏன்டி இப்டி செஞ்ச’? என்று பார்வையாலேயே அவளைத் தாக்க அவன் பார்வையின் தாக்குதலை தாங்க முடியாமல் நிலா தலைகுனிந்து கொண்டாள். “என்னை மன்னிச்சிடு துருவ். நீ எனக்கு உலகம்னா எங்கம்மா தான் எனக்கு உயிர். அவங்கள விட எனக்கு எதுவும் பெருசு இல்ல. ஐ அம் சாரி துருவ் ஐ அம் ரியலி வெரி சாரி… என் ஆசப்படி அபிநந்தன் சார் கூட என் அம்மாக்குக் கல்யாணம் நடந்தா என்னோட சேர்த்து உன்னோட காதலும் அழிஞ்சு போய்டும். ஒரு வேள எனக்கும் உனக்கும் கல்யாணம் நடந்த, அம்மா என்னைப் பாக்க இந்த வீட்டுக்கு அடிக்கடி வரவேண்டி இருக்கும். அபி சாரை பார்க்க வேண்டி வரும். இவ்ளோ நாள் அவங்க அனுபவிச்ச வலி பத்தாதுன்னு இனி அபி சாரை பாக்குற ஒவ்வொரு நிமிஷமும் அவங்க செத்து செத்து பொழைக்கணும். வேணாம், வேணாவே வேணாம். என் அம்மாக்கு அந்த நெலம வரக்கூடாது. எனக்குத் நீ வேணாம்” என்று முதல் முறை ஆஃபிஸில் அபிநந்தன் மகன் துருவ் என்று தெரிந்த போதே அன்று அவள் எடுத்த முடிவில் இப்போதும் அவள் உறுதியாக இருக்க, சத்தம் வராமல் தான் இதழ்களை மட்டும் அசைத்து துருவ்விடம் மன்னிப்பு வேண்டினாள்.

 

 

 

 

 

 

 

இதுவரை நடந்த அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த கார்த்திக்கின் அம்மா ரம்யா, “சோ! நீ உங்க அம்மாவ நந்து அண்ணா கல்யாணம் செஞ்சுக்கணும் தான் துருவ்வை விட்டு விலகிப் போற இல்ல நிலா”? என்று புருவம் உயர்த்தி, எதையோ நினைத்து நிலாவை ஆழம் பார்க்க ரம்யா கேட்ட கேள்விக்கு நிலா தலைகுனிந்து “ஆமா ஆன்ட்டி” என்க 

 

 

 

 

“நீ என்ன கேக்குறேன்னு நல்லா புரிஞ்சு தான் கேக்குறயா நிலா? இதெல்லாம் நடக்குற காரியமா? இதெல்லாம் சரியா வருமா சொல்லு?”

 

 

 

 

“ஏன்? ஏன்? ஏன் நடக்காது? ஏன் சரி வராது? ஏன் நீங்களும் உங்க அப்பா அந்த வில்லன் மாதிரி அந்தஸ்து பாக்குறீங்களா? அப்படி இருந்தா சொல்லுங்க. எனக்கு இப்ப கூட ஃபாரின்ல லட்சக் கணக்குல சம்பளம் கொடுக்கத் தயார இருக்காங்க. நா வாங்குற சம்பளத்துல கொஞ்சம் மட்டும் வச்சிக்கிட்டு மீதிய மொத்தமா அப்படியே எங்க அம்மாக்கு வரதட்சணையா மாச மாசம் உங்ககிட்ட தந்துடுறேன்” என்று குழந்தை போல் வாக்குவாதம் செய்பவளை அனைவரும் வியந்து பார்க்க.

 

 

 

 

நிலாவோ ஒரு எதிர்பார்ப்போடு நந்தனை பார்த்திருந்தாள்.

 

 

 

 

“நாங்க அந்தஸ்து பாத்த உன்ன துருவ்வுக்குக் கட்டி வைக்க நெனச்சிருப்போமா நிலா? நா அத சொல்லல, நீயும் துருவ்வும் ஒருத்தரை ஒருத்தர் உயிருக்கு உயிரா விரும்புறீங்க. நீ சொல்ற மாதிரி என் அண்ணாக்கு மதியோட கல்யாணம் நடந்தா உனக்கும் துருவ்வுக்கும்” என்று ரம்யா ஏதோ சொல்ல வர.

 

 

 

 

காதை இறுக்கி மூடிக்கொண்ட நிலா., “ப்ளீஸ் ஆன்ட்டி அதப் பத்தி பேசாதீங்க. ஆமா, நா துருவ்வை விரும்பினேன் தான். ரெண்டு வருஷமா காணாம போன அவனை நெனச்சிட்டு தான் ஒவ்வொரு நாளும் இருந்தேன். இப்ப அவன் திரும்பி வந்துட்டான். அவன் மேல எந்த தப்பும் இல்லன்னும் தெரிஞ்சு போச்சு. சப்போஸ்!? துருவ் திரும்பி வராம போயிருந்தா? உண்மையாவே அவன் என்னைக் காதலிச்சு ஏமாத்தி இருந்த? நா என்ன செஞ்சிருப்பேன்? காலம் முழுக்க அவன நெனச்சிட்டு அழுதுட்டு தான இருந்திருப்பேன். இப்பவும் நா அப்படியே நெனச்சிட்டு போறேன்” என்று குழந்தை போல் வாதம் செய்து, தன் தாய்க்குத் தாயாக இருந்து திருமணம் பேசும் அன்பு மகளை யாருக்குத் தான் தன் வாழ்க்கையில் இருந்து விலக்கி வைக்கவும் விட்டுக் கொடுக்கும் மனது வரும்? இங்கு ரம்யா, அவளின் அக்கா அகல்யாவின் நிலையும் கூட அது தான்.

 

 

 

 

“சரியோ தப்போ உன் அம்மா பாதி வாழ்க்கையைக் கடந்து வந்துட்டாங்க நிலா. அவங்க அந்த வாழ்க்கைக்குப் பழகி இருப்பாங்க. இனியும் அவங்க அப்டியே இருக்குறது அவங்களுக்குப் பெரிய காரியம் இல்ல. ஆனா, நீ சின்னப் பொண்ணும்மா. இப்ப தான் வாழ்க்கையோட முதல் ஸ்டேஜ்ல நிக்குற. நீ உன் எதிர்காலத்தப் பத்தி யோசிம்மா”.

 

 

 

 

“நீங்க சொல்றது கரெக்ட் தான் ஆன்ட்டி. நா லைஃப்ல முதல் ஸ்டேஜ்ல தான் நிக்கிறேன். என்னால என்னோட வாழ்க்கையை என் இஷ்டப்படி அமைச்சுக்க முடியும். ஆனா, அம்மா தன்னோட முக்கால்வாசி வாழ்க்கையை வாழாமயே கடத்திட்டாங்க. இனியாவது அவங்க, அவங்க வாழ்க்கையை வாழட்டுமே ஆன்ட்டி” என்று நந்தனைப் பார்த்தவள் “அவங்க விரும்புன அவங்க அபியோட, கையோட கைகோர்த்து மீதி வாழ்க்கைப் பயணத்தை ஒன்ன கடக்கட்டுமே ஆன்ட்டி. இதுல என்ன தப்பிருக்கு? ஒருவேள துருவ் அம்மா உயிரோட இருந்து நா இப்படிக் கேட்டா அது தப்பு மட்டும் இல்ல… பாவம். ஆனா, அவங்க தான் இல்லயே. அப்றம் என்ன ஆன்ட்டி”? என்று ரம்யாவை மடக்கியவள் “ஆன்ட்டி ஒருவேள நீங்க என்னை நெனச்சு இந்தக் கல்யாணத்தை வேணாம்னு சொல்றீங்களா? என்னடா இவ்ளோ பெரிய பொண்ணை வச்சிருக்க ஒருத்திய போய் எப்டி இந்த வீட்டுக்கு மருமகளா கொண்டு வர்ரதுன்னு யோசீங்கன சொல்லுங்க ஆன்ட்டி. நா எங்கயாது கண்காணாத எடத்துக்கு ஓடிப் போய்டுறேன். எப்டி பாத்தாலும் நா அப்பா, அம்மா இல்லாத அனாதை தானே. நா போன தான் எங்கம்மா நல்லா இருப்பாங்கன்னா நா போய்டுறேன் ஆன்ட்டி” என்று தொண்டை அடைக்கப் பேசியவள், தேம்பி அழுதபடி சிறுபிள்ளைபோல் தன் முழங்கை கொண்டு கண்ணை அழுத்தித் துடைத்துக் கொண்டாள்.

 

 

 

 

அபிநந்தன் மெல்ல அவள் அருகில் வந்தவர், “இன்னொரு முறை அனாதைன்னு ஒரு வார்த்தை உன் வாயில் வந்துது, பொண்ணுன்னு கூடப் பாக்க மாட்டேன் செவுலு பிஞ்சிடும். நீ ஒன்னும் அனாதை இல்ல. நீ என் மதியோட பொண்ணு, என் பொண்ணு இந்த அபிநந்தன் பொண்ணு” என்று அவள் கண்களைத் துடைக்க நிலா மிரட்சியோடு அவரையே இமைக்காமல் பார்த்த நிலா.

 

 

 

 

 

 

 

“அப்போ”?

 

 

 

 

“நீங்க அம்மாவ கல்யாணம் பண்ணிக்குவீங்களா?” என்று குழந்தை போல் கேட்க, நந்தன் தன் தலையை மேலும் கீழும் ஆட்டி தன் சம்மதத்தை உறுதி செய்தார்.

 

 

 

 

“அதெப்படி முடியும்? நா இதுக்கு ஒத்துக்க மாட்டேன்” என்று நிலா சந்தோஷத்திற்கு ஃபுல் ஸ்டாப் போட்டார் ரம்யா.

 

 

 

 

“ஏன் ஆன்ட்டி? அதான் அபி சார் ஓகே சொல்லிட்டாரே? அப்றம் என்ன ஆன்டி? ஏன் ஆன்ட்டி ஒத்துக்க மாட்டீங்க”? என்றவள் கண்கள் கண்ணீர் அருவியாகக் கொட்டியது.

 

 

 

 

நிலா கண்ணீரைப் பார்த்து ரம்யா சிறிதும் அசையவில்லை. “இங்க பாரு நிலா உங்க அம்மா இந்த வீட்டு மருமகளா வரணும்னு நீ ஆசப்பட்டா நா சொல்றதை நீ செய்யணும். அதுக்கு நீ சம்மதிச்சா நாங்களும் இந்தக் கல்யாணத்துக்கு ஒத்துக்குறோம்” என்றவரை நந்தன் “என்ன”? என்பது போல் பார்க்க ரம்யா இமைமூடி திறந்தவர் “நீ கொஞ்சம் அமைதியா இருண்ணா” என்று அவரை அடக்கிவிட்டாள்.

 

 

 

 

“சொல்லு நிலா? நா சொல்றத நீ செய்வீயா?”

 

 

 

 

“கண்டிப்பா ஆன்ட்டி. நீங்க என்ன சொன்னாலும் செய்றேன். என் உயிர கேட்டக் கூட தரேன் ப்ராமிஸ்” என்று தன் தலையில் கைவைத்துச் சொல்ல.

 

 

 

 

“நீ உன் உயிர எல்லாம் தரவேணாம். மதிநிலா இந்த வீட்டுக்கு மருமகளா எனக்கு அண்ணியா வரணும்னா, இந்த முகில்நிலா எனக்கு மருமகளா என் புள்ளைக்குப் பொண்டாட்டியா இந்த வீட்டுக்கு வரணும்” என்று பெரிய அணுகுண்டைத் தூக்கிப் போட, “நோ” என்று துருவ், கார்த்திக் அலறும் சத்ததோடு “ஆன்ட்டி” என்று நிலா அலறும் சத்தமும் “இல்லாஆஆஆ” என்று இன்னொரு குரலும் கேட்டது. அது வேறு யாரும் இல்ல, நாம் யாழினியே தான்.

 

 

 

 

ரம்யா குழப்பமாக யாழினியைப் பார்க்க கார்த்திக் ஒருவித சந்தோஷம் கலந்த தவிப்போடு அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

 

 

 

 

“இல்ல ஆன்ட்டி, இது நடக்காது. என்னால சத்தியமா முடியாது ஆன்ட்டி. துருவ் என் வாழ்க்கையில இல்ல தான். ஆனா, என் லைஃப்ல அவனோட எடத்துத்கு வேற யாரும் வரமுடியாது. வரவே முடியாது. நான் என் அம்மா மேல எவ்வளவு பாசம் வச்சிருக்கனோ அதே அளவு பாசம் யாழி மேலயும் வச்சிருக்கேன். அவ வாழ்க்கையில பிரச்சனை வர நா ஒரு நாளும் காரணமா இருக்கமாட்டேன். ப்ளீஸ் ஆன்ட்டி ப்ளீஸ்” என்று அவள் கெஞ்ச.

 

 

 

 

“இரு… இரு நீ என் பையனை கல்யாணம் பண்றதுக்கும் உன் ப்ரண்டுக்கும் என்ன கனெக்ஷன்? எனக்குப் புரியலயே”? என்ற ரம்யாவை பயந்த பார்வை பார்த்த நிலா “ஏ… ஏன்…ஏன்னா கார்த்திக், யாழினியை விரும்புறாங்க ஆன்ட்டி. யாழி கூட அவர விரும்புற தான். எனக்காகத் தான் அவ கார்த்திக் மேல இருக்க காதலை மறைக்கிற” என்று யாழினின் காதலை நடு வீட்டில் போட்டு உடைக்க கார்த்திக் யாழினியைக் கோவமாகப் பார்க்க யாழினி திருட்டு முழி முழித்தவள் கார்த்திக்கைப் பார்க்காமல் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள்.

 

 

 

 

 

 

 

ரம்யா, கார்த்திக் முகத்தைப் பார்த்து “உண்மையா”? என்று கேட்க அவன் தலை தானாக ‘ஆமாம்’ என்று ஆடியது.

 

 

 

 

“என்ன நடக்குது இங்க”? என்று பெரியவர்கள் அனைவரும் சோர்ந்து போய் அமர்ந்து விட்டனர்.

 

 

 

 

“என்னக்கா கிணறு வெட்ட பூதம் கெளம்புன கதையா இருக்கு” என்று அகல்யா காதைக் கடித்த ரம்யா “முதல்ல அபி அண்ணா காதல் பிரச்சனை பல வருஷம் கழிச்சு இப்ப கெளம்பி வெளிய வந்துச்சு. அடுத்து துருவ், நிலா காதல் பிரச்சனை. இது ரெண்டுக்கே இன்னும் ஒரு முடிவு தெரியல. அதுக்குள்ள இன்னொரு காதல் பூதம். கேப்பு விடாம அடிச்சா எப்படிக்கா சமாளிக்கிறது” என்ற ரம்யா நிலாவைப் பார்த்து “இங்க பாரு நிலா, நா சொன்னா சொன்னது தான். நீ என் பையனைக் கட்டிக்கோ. நந்தன் அண்ணா மதி கல்யாணம் நடக்கும் அவ்ளோதான்.”

 

 

 

 

“என்ன ஆன்ட்டி? நா இவ்ளோ சொல்றேன். நீங்க திரும்பத் திரும்ப இப்டியே சொன்னா எப்டி? என்னமோ, ஒன்னு வாங்குனா ஒன்னு ஃப்ரீ. ஒன் பிளஸ் ஒன் ஆஃபர் மாதிரி இல்ல கேக்குறீங்க” என்றவள் திரும்பி துருவ்வைப் பார்த்து ‘எதாவது செய் டா’ என்று கண்களால் கெஞ்ச அவன் முகம் உணர்ச்சியற்று இறுகி இருந்தது. நந்தனைப் பார்த்து “என்ன சார் இது? நீங்ளாது ஒரு வார்த்தை சொல்லக் கூடாதா? அப்டியே நிக்குறீங்களே?”

 

 

 

 

“சாரி நிலாம்மா. எனக்கும் ரம்யா சொல்றது சரின்னு தோணுது. என் பொண்ணு இந்த வீட்டுக்கு மருமகளா வரணும்னு நானும் ஆசப்படுறேன்மா” என்று சொன்னதைக் கேட்டு நிலா திகைத்து நின்றவள்.

 

 

 

 

“நீங்க ஏன் ஆசப்பட மாட்டீங்க சார்? நீங்க ஆசப்படுவீங்க.! ஆனா, என்னால உங்ள மாதிரி எல்லாம் இருக்க முடியாது. உருகி உருகி ஒரு பொண்ணைக் காதலிச்சிட்டு அப்பாவுக்கு பயந்து வேற பொண்ணைக் கல்யாணம் செஞ்சிக்கிட்டு, ஒரு புள்ளையும் பெத்துட்டு, இன்னும் பழைய காதலியை நெனச்சிட்டு இருக்க உங்க தைரியம் எனக்கு வராது சார். நா அப்படிப்பட்ட பொண்ணில்ல. நா மதிநிலா பொண்ணு அவங்க வளர்ப்பு. ஒருத்தரை மனசுல நெனச்சா நெனச்சது தான். உங்கள மாதிரி மனச மாத்திக்கிறவ நா இல்ல” என்றவள் கன்னத்தில் துருவ்வின் கைரேகை ஆழப் பதிந்திருந்தது.

 

 

 

 

 

 

 

அந்தக் கல்யாண மண்டபம் விளக்குகள் வெளிச்சத்தில் ஜொலித்தது. மணமகள் அறையில் நிலா திருமணப் பொண்ணுக்கான முழு அலங்காரத்தில் வானில் இருந்து இறங்கி வந்த தேவதை போல் ஜொலிக்க அவள் கண்களில் கண்ணீர், மனதில் ஏதோ ஒரு தவிப்பு, நெஞ்சம் நிற்காமல் வேக வேகமாக அடித்துக் கொண்டிருக்க, அருகில் இருந்த யாழினி கையை இறுக்கிப் பிடித்துக் கொண்டாள்.

 

 

 

 

யாழினிக்கும் உள்ளுக்குள் ஏதோ ஒருவித பதட்டம், சொல்ல முடியாத ஒருவித தவிப்பு. அதை வார்த்தையில் அவளால் வர்ணிக்க முடியவில்லை. “பயப்படாத நிலா. இனி நம்ம கையில ஒன்னு இல்ல. எல்லாம் விதிப்படி நடக்கட்டும்” என்று அவளுக்கு ஆறுதல் சொல்ல நிலா யாழினியைக் கட்டி அணைத்து அழுது விட்டாள்.

 

 

 

 

இங்கு கார்த்திக் முகத்தைப் பார்க்கவே சகிக்கவில்லை. முகமெல்லாம் இருண்டு, பத்து நாள் பட்டினி கிடந்தவன் போல் சோர்ந்து போய் இருந்தான்.

 

 

 

 

ரம்யாவும், அகல்யாவும் பரபரப்பாகக் கல்யாண வேலைகளைப் பார்த்தாலும் அடிக்கடி மதிநிலாவையும் ஒரு பார்வை பார்த்துக் கொண்டிருந்தனர்.

 

 

 

 

“அவங்க ரொம்ப அழகா இருக்காங்க இல்ல ரம்யா?”

 

 

 

 

“ம்ம்ம் ஆமாக்கா, நம்ம அப்பன் மட்டும் வில்லங்கம் பண்ணாம இருந்திருந்தா இவங்க நமக்கு அண்ணியாக வந்திருப்பாங்க. அந்த வெளங்காத மனுஷன் திமிர்ல செஞ்ச ஒரு காரியம் இன்னைக்கு நம்ம புள்ளைங்க வாழ்க்கையைச் சுத்தி சுத்தி அடிக்கிது.”

 

 

 

 

“விடு ரம்யா. எது எப்படியோ இனியாச்சும் எல்லாம் நல்ல படியா நடக்கணும். சரி சரி முகூர்த்த நேரமாச்சு, நீ போய் நிலாவ அழச்சிட்டு வா” என்றவர் மணமகன் அறைக்குச் சென்றார்.

 

 

 

 

வானில் உலவும் நிலாவு, பகலில் பூமி இறங்கி வந்ததோ என்று வியக்கும் வகையில் மெதுவாகத் தரைக்கு நோகாமல் அழகு பதுமை போல் நடந்து வந்த நிலா மணமேடையில் அமர்ந்து சபையைக் கையெடுத்து கும்பிட்டவள், தலை குனிந்து கொள்ள “நேரமாச்சு மாப்பிள்ளையை வரச் சொல்லுங்க” என்று ஐயர் பரபரக்க பட்டு வேட்டி சட்டையில் ராஜகுமாரன் போல் நடந்து வந்து மணமேடையில் நிலா அருகில் அமர்ந்தான்… துருவ்…

Leave a Reply

error: Content is protected !!