எல்லையில்லா இன்பம் நீதான் காதலா – 14

எல்லையில்லா இன்பம் நீதான் காதலா – 14
சித்தார்த்தை முதன்முதலாக அத்தனை நெருக்கத்தில் பார்த்ததும் மாயாவின் மனதிற்குள் அவன் மீது இத்தனை வருடங்களாக தான் கொண்டிருந்த (அவ்வாறு எண்ணியிருந்த) கோபம் எல்லாம் சூரிய ஒளி பட்ட பனித்துளி போல் விலகிச் செல்வது போல இருந்தாலும், அவளது மூளையோ அத்தனை சீக்கிரத்தில் அவளை அந்தக் கோபத்தை கைவிட்டு விட வாய்ப்பளிக்கவில்லை.
தன் மனது ஏன் அவனைப் பார்த்ததும் இத்தனை பலவீனமாத மாறியது என்றெண்ணியபடி தன்னைத் தானே கடிந்து கொண்டவள் தன்னை விட்டும் அவனை வேகமாகத் தள்ளி விட்டு விட்டு அங்கிருந்து செல்லப் பார்க்க, காலத்தின் விளையாட்டு மீண்டும் அவளை நிலைதடுமாறச் செய்து மறுபடியும் சித்தார்த்தின் பிடிக்குள் அவளைச் சிக்கச் செய்திருந்தது.
மாயாவின் கோபத்தையும், அவளது தடுமாற்றத்தையும் பார்த்து புன்னகைத்துக் கொண்டே அவளது காதருகில் குனிந்தவன், “நீ என்னை விட்டு விலக நினைத்தாலும் அந்தக் கடவுள் அத்தனை சீக்கிரத்தில் அதை நடக்க விடமாட்டாரு அம்மு, மறுபடியும் மறுபடியும் ஏதாவது ஒரு வகையில் உன்னை என் கிட்ட கொண்டு வந்து நிறுத்திட்டே இருப்பாரு, இன்னும் சொல்லப்போனால் உன்னை என்கிட்டயே ஒப்படைச்சுட்டாரு பாரேன் அம்மு” என்று கூற, அவனது ‘அம்மு’ என்கிற அழைப்பில் விருட்டென்று அவனை நிமிர்ந்து பார்த்தவள் இம்முறை தன்னை சரியாக நிலை செய்து கொண்டு அவனிடமிருந்து வெகுவாக விலகி நின்று கொண்டாள்.
“மிஸ்டர் சித்தார்த், நீங்க எந்த விஷயத்தை நினைத்து இவ்வளவு சந்தோஷமாக இருக்குறீங்களோ, நான் அதே விஷயத்தை எண்ணி அத்தனை கோபமாக இருக்கிறேன். அந்தக் கடவுளுக்கு அப்படி என் மேலே என்ன கோபம்ன்னு தெரியல, மறுபடியும் மறுபடியும் என் வாழ்க்கையில் எதற்காக இவ்வளவு கஷ்டத்தை தரணும்? வேண்டாம்னு சொன்னவங்க முன்னாடி என்னை மறுபடியும் மறுபடியும் நிற்க வைப்பது மட்டுமில்லாமல் என்னை இப்படி அவமானப்படச் செய்வதும் எதற்காக? அதுதான் எனக்கு சத்தியமாக புரியல. ஆனா எத்தனை விதமான பிரச்சினைகள் வந்தாலும் ஒரு விஷயத்தை மட்டும் நீங்க மறக்க வேண்டாம், அப்போ உங்களுக்கு வேண்டாத மாயா எப்பவுமே உங்களுக்கு வேண்டாம் தான், அதை மறந்துடாதீங்க” என்று விட்டு மாயா அங்கிருந்து விலகிச் செல்லப் பார்த்த தருணம், அந்த இடத்தை சுற்றிப் பார்க்க சென்றிருந்த சாவித்திரி, கௌசல்யா மற்றும் கௌசிக் அங்கே வந்து சேரவும் சரியாக இருந்தது.
அதன் பிறகு மாயாவும், சித்தார்த்தும் ஒருவருக்கொருவர் எதுவும் பேசிக் கொள்ளவும் இல்லை, பேசிக் கொள்ள முயலவும் இல்லை.
மாயாவின் மனதிற்குள் இருந்த வலிகளை உணர்ந்து அதற்கு மதிப்பளிப்பது போல அவளை விட்டு விலகி இருந்த சித்தார்த் அதன் பிறகு அவளிடம் எந்தவொரு பேச்சும் வைத்துக் கொள்ளவில்லை.
சிறிது நேரத்தில் அந்த இடத்திலிருந்து புறப்பட்டவர்கள் அன்றைய நாளுக்கான அவர்களது திட்டமிட்ட பயணத்தை எல்லாம் முடித்து விட்டு அவர்கள் தங்கியிருந்த இல்லத்தை வந்து சேர்ந்திருந்தார்கள்.
நாளை மறுதினம் சித்தார்த்தின் குடும்பத்தினர் ஊட்டியை விட்டுப் புறப்படுவதாக மாயாவிடம் கூறியிருக்க, இனி சித்தார்த்தை எதிர்கொள்ளத் தேவையில்லை என்கிற உணர்வு ஒருபுறம் அவளுக்கு ஆறுதலாக இருந்தாலும், மறுபுறம் சாவித்திரியை இனி எப்போதும் தன்னால் காண முடியாது என்கிற உணர்வு அந்த ஆறுதலான உணர்வை மொத்தமாக இல்லாமல் செய்வது போல் இருந்தது.
இதற்கு முன்பு பலர் அந்த ஊரைச் சுற்றிப் பார்க்க வந்திருக்கிறார்கள், மாயாவும் அவர்களுடன் நன்றாகப் பழகியிருக்கிறாள், அது போல அவர்களும் அவளோடு நல்ல விதமாக பழகியிருக்கிறார்கள்.
ஆனால் இந்தக் குறுகிய காலத்தில் சாவித்திரியுடன் அவளுக்கு ஏற்பட்ட உறவு மிகவும் வித்தியாசமானது ஏன் ஆழமானதும் கூட.
இன்னும் சொல்லப்போனால் இந்த ஐந்து வருடங்களாக அவள் மனதளவில் வெகுவாக ஏங்கியிருந்த பத்மாவதியுடனான பாசப் பிணைப்பை சாவித்திரியிடம் உணர்ந்து கொண்டாள் என்று தான் கூற வேண்டும்.
ஆனால் இத்தனை நாட்களில் மாயா அதை அவரிடம் காண்பித்துக் கொண்டதில்லை.
ஏன் என்றால் எப்போது அவர்கள் அனைவரும் சித்தார்த்தின் குடும்பத்தினர் என்று அவள் தெரிந்து கொண்டாளோ அப்போதே அவர்களிடமிருந்து முடியுமானவரை விலகியிருக்க வேண்டும் என்று அவள் எண்ணியிருந்தாள், அதனால் தான் ஆரம்பித்திலிருந்து சாவித்திரியிடம் அத்தனை இலகுவாக அவள் பேசியிருக்கவில்லை.
ஆனால் நினைப்பது எல்லாம் நடந்து விடக்கூடுமா என்ன?
அவள் என்னதான் அவர்களை விலக்கி வைக்க நினைத்திருந்தாலும் சாவித்திரியின் கள்ளங்கபடமற்ற பாச உணர்வு அவளை அவரது அன்பிற்குள் வெகு இறுக்கமாக பிணைத்து வைத்திருந்தது.
மாயாவையும் அறியாமல் அவளது மனம் சாவித்திரியின் சாவித்திரியின் அன்பிற்கு அடிபணிந்திருக்க, இப்போது அவரைப் பிரிந்திருக்கப் போகிறோம் என்கிற உணர்வு அவளை வெகுவாக கலக்கமுறச் செய்திருந்தது.
என்னதான் நம் மனதிற்குள் பலவிதமான ஆசைகளும், கற்பனைகளும் இருந்தாலும் அவை எதுவும் நிரந்தரமில்லை என்கிற நிதர்சனத்தை எண்ணிப் பெருமூச்சு விட்டுக் கொண்டவள் அவளுக்குரிய ஊதியத்தைப் பெற்றுக்கொண்டு அவர்கள் அனைவரிடமுமிருந்து விடைபெற்றுக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டுச் செல்லப் பார்த்த தருணம் சிறு தயக்கத்துடன் அவளெதிரில் வந்து நின்ற சாவித்திரி, “மாயாம்மா, என்னம்மோ தெரியலைடா உன்னை விட்டுப் பிரிய மனசே இல்லை, நீ மட்டும் தனியாளாக இருந்திருந்தேன்னா உன்னை இப்போவே என்கூட எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போயிருப்பேன் தெரியுமா? ஆனா அப்படி எல்லாம் பண்ண முடியாது, ஏன்னா உன்னையே நம்பி ஒரு உயிர் இருக்கு, அப்பாவை நல்லாப் பார்த்துக்கோம்மா, அப்புறம் உனக்கு எந்த நேரத்தில், என்ன உதவி தேவைப்பட்டாலும் என் கிட்ட தயங்காமல் கேட்கணும், சரியா? நான் யாரோ மூணாவது ஆளு இல்லை, உன் சொந்தம் மாதிரி தான் என்ன?” என்றவர்,
சற்றுத் தள்ளி நின்று கொண்டிருந்த சித்தார்த்தின் கையிலிருந்த பர்ஸை வாங்கி அதிலிருந்த விசிட்டிங் கார்டு ஒன்றை எடுத்து அதன் பின்னால் எதையோ எழுதி மாயாவின் கையில் வைத்து விட்டு, “இதில் எங்களோட வீட்டு முகவரியும், கம்பெனி முகவரியும் இருக்கு. நீ எப்போதாவது கோயம்புத்தூர் வந்தால் கண்டிப்பாக எங்க வீட்டுக்கு வந்துதான் போகணும். அப்படி வராமல் போனேன்னு மட்டும் வை அதற்கு அப்புறம் நான் உன் கூட பேசவே மாட்டேன் பார்த்துக்கோ” என்று கூற, அவளோ சிறு புன்னகையுடன் அவரை இறுக அணைத்து விடுவித்தாள்.
“உங்களை மாதிரி ஒரு அன்பான அம்மா எனக்கு சொந்தமாக கிடைத்தது ரொம்ப ரொம்ப சந்தோஷம், ஆனா அதற்காக உதவி அப்படி, இப்படி எல்லாம் எதுவும் பண்ண வேண்டாம் ஆன்ட்டி. அப்படி அதையும் மீறி உங்களுக்கு ஏதாவது பண்ணனும்னு தோணுச்சுன்னா காலம் முழுக்க இதே பாசத்தோடு இருங்க அதுவே எனக்குப் போதும். அப்புறம் எனக்கு எப்பவுமே கோயம்புத்தூர் வர வேண்டிய அவசியம் வராது, அதையும் மீறி அங்கே வந்துதான் ஆகணும்ன்னு ஒரு நிலைமை வந்தால் நான் கண்டிப்பாக உங்ககிட்ட சொல்லுவேன், அப்போ நம்ம சந்திக்கலாம், உங்களை மட்டும் சரி நான் சந்திக்காமல் வரமாட்டேன்” என்றவள் ‘உங்களை மட்டும்’ என்கிற வார்த்தையை வெகு அழுத்தமாகக் கூற, அந்த அழுத்தத்தின் அர்த்தத்தைப் புரிந்து கொண்ட சித்தார்த் மெலிதாகப் புன்னகைத்துக் கொண்டான்.
‘மாயா மேடம் அப்போ இனிமேல் நம்மை சந்திக்கவே கூடாதுன்னு உறுதியாக இருக்காங்க போல. சரி, பரவாயில்லை அவளோட விருப்பத்தை இந்தத் தடவையாவது எந்தவொரு தடையும் இல்லாமல் நிறைவேற்றி வைக்கலாம். இனி எக்காரணத்தைக் கொண்டும் என் மாயாவை நான் தொந்தரவு செய்ய மாட்டேன். என்னைப் பிரிந்து இருப்பது தான் அவளுக்கு சந்தோஷத்தைக் கொடுக்கும்ன்னா அதை என் மனதார நான் பண்ணுவேன். இனி மாயாவோட வாழ்க்கையில் நான் ஒரு தொந்தரவாக இருக்கவே மாட்டேன்’ என தனக்குள்ளேயே முடிவெடுத்துக் கொண்ட சித்தார்த் மாயாவின் உருவத்தை தன் மனப்பெட்டகத்தில் பொக்கிஷமாக பதித்துக் கொண்டு படியேறி தன்னறைக்குச் சென்று விட, மாயா அவன் சென்ற வழியைப் பார்த்தபடியே அங்கிருந்து வெளியேறி வந்திருந்தாள்.
சித்தார்த் இறுதியாக தன்னிடம் எதுவும் பேசாமல் சென்றது அவளுக்கு ஏதோ பெரிய இழப்பைச் கொடுத்தது போல இருக்க, சாவித்திரியைப் பிரிய மனமில்லாமல் தான் தனது மனது இந்தளவிற்கு வருத்தம் கொள்கிறது போலும் என்று தனக்குத்தானே சமாதானம் சொல்லிக் கொண்டவள் தன் வீட்டை வந்து சேர்ந்த பிறகு தன் தந்தைக்குரிய கடமைகளில் தன்னை மூழ்கடித்துக் கொண்டு சித்தார்த்தைப் பற்றிய எண்ணங்களை தற்காலிகமாக கைவிட்டிருந்தாள்.
சித்தார்த் மற்றும் அவனது குடும்பத்தினர் அன்று ஊட்டியை விட்டுச் செல்லப் போகும் அன்றைய தினம் வேறு எந்த வேலையும் செய்ய மனமின்றி, வேறு எங்கேயும் செல்ல மனமின்றி தன் அறைக்குள்ளேயே அடைந்து கிடந்த மாயா அந்த நான்கு சுவர்களும் அவள் மூச்சை அடைக்கச் செய்வது போல் இருக்க, எங்கே போவது? என்ன செய்வதென்று தெரியாமல் மனம் நிறைந்த கவலையுடன் தன் தந்தையின் அருகில் சென்று அமர்ந்து கொண்டாள்.
இத்தனை வருடத்தில் மாயா தன் தந்தையைத் தேடி வந்து அமர்ந்திருப்பது இதுவே முதல் முறையாகும்.
பத்மாவதியின் இறப்பின் முன்னர் பலமுறை மாயா அவரோடு பேச முயன்றிருக்கிறாள், ஆனால் மாணிக்கம் பேச முனையவில்லை.
பத்மாவதியின் இறப்பின் பின்னர் மாணிக்கம் பலமுறை மாயாவோடு பேச முயன்றார், ஆனால் அவளுக்கு மனம் வரவில்லை.
இப்படியாக ஆள் மாற்றி ஆள் ஆடிக் கொண்டிருந்த கண்ணாமூச்சி இப்போது ஒரு முடிவுக்கு வந்தது போல இருக்க, மாணிக்கத்தின் அருகில் வந்து அமர்ந்திருந்த மாயா எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க, இத்தனை நாட்களுக்குப் பின்னர் தன்னைத் தேடி வந்த தன் மகளது முகத்தை ஆவலாக பார்த்தவர் அதில் தேங்கியிருந்த கவலையைப் பார்த்ததும் சிறு தயக்கத்துடன் அவளது கரத்தை தன் நடுங்கும் கரங்களால் மெல்ல வருடிக் கொடுத்தார்.
தன் கரத்தின் மீது பட்ட ஸ்பரிசத்தில் மெல்ல தன் தந்தையின் புறம் திரும்பிப் பார்த்தவள் அவரது முகத்தில் தெரிந்த கனிவைப் பார்த்ததுமே அவரது நெஞ்சில் சாய்ந்து கண்ணீர் விட ஆரம்பித்தாள்.
பத்மாவதியின் இறப்பின் பின்னர் என்றுமே தன் கண்ணீரை வெளிக்காட்டாத தன் மகள் இப்போது எதற்காக இப்படி மனம் வருந்திப் போனாள் என்கிற யோசனையுடன் அவளது தலையை மெல்ல வருடிக் கொடுத்தவர், “அம்மு, உனக்கு என்னாச்சு?” சிறு தடுமாற்றத்துடன் வினவ,
அவரது கேள்விக்காகவே காத்திருந்தது போல அமர்ந்திருந்தவள், “அந்த சித்தார்த்தை மறுபடியும் பார்த்தேன் ப்பா” என்று கூற, அவரோ அவள் சொன்ன நபர் யார் என்பது போல அவளைப் பார்த்துக் கொண்டு படுத்திருந்தார்.
“சித்தார்த்?”
“அதுதான் ப்பா, ஐந்து வருஷத்துக்கு முன்னாடி என்னோட வாழ்க்கை மாற காரணமாக இருந்தவன்”
“அந்த தம்பியா?”
“அவனேதான், அவனை மறுபடியும் என் வாழ்க்கையில் சந்ததிக்க கூடாதுன்னு இருந்தேன், ஆனால் விதி இப்படி விளையாடிடுச்சு”
“அந்த தம்பி சொன்ன விஷயத்தை சரியாகப் புரிந்து கொள்ளாமல் நான் தான் அம்மு தப்பு பண்ணிட்டேன், உன்னோட வாழ்க்கையை மொத்தமாக அழிச்சுட்டேன், தயவுசெய்து என்னை மன்னிச்சுடும்மா. நான் செய்தது மன்னிக்ககூடிய அளவிலான தவறு இல்லை தான், உன்னால் என்னை இப்போ மன்னிக்க முடியாவிட்டாலும் எப்போதாவது ஒரு நாள் மன்னிக்க முயற்சி பண்ணும்மா. இத்தனை நாட்களாக நீ என் கூட மனம் ஒத்து பேசாமல் இருந்ததை எண்ணி ரொம்ப கஷ்டப்பட்டேன், ஒரு வேளை நான் சாகும் வரை நீ என் கூட இப்படியே தான் இருப்பியோன்னு நினைச்சேன், ஆனா என் உயிர் போவதற்கு முன்னாடி நீ என் கூட சகஜமாகப் பேசிட்ட, எனக்கு இதுவே போதும் அம்மு. இப்போ, இந்ந நொடி என் உயிர் போனாலும் எனக்கு கவலையில்லை”
“அப்பா! என்ன பேசுறீங்க நீங்க? எப்பவுமே நீங்க என்னைப் பற்றி யோசிக்க மாட்டீங்களா? இப்போ கூட என்னைத் தனியாக தவிக்க விட்டு விட்டு போகலாம்னு பார்க்குறீங்களா? நீங்களும் என்னை விட்டுட்டுப் போனால் நான் எங்கே போவேன் சொல்லுங்க?” மாயா கண்கள் கலங்க தன் தந்தையின் கைகளைப் பற்றிக் கொண்டு வினவ,
அவளைப் பார்த்து மெல்லப் புன்னகைத்துக் கொண்டவர், “சித்…தா…ர்…” என்று சொல்லும் போதே வேக வேகமாக மூச்சு திணற ஆரம்பித்தார்.
இத்தனை நேரமும் நன்றாகப் பேசிக்கொண்டு இருந்தவர் இப்போது திடீரென மூச்சு விட சிரமப்படுவதைப் பார்த்து பதறிப் போன மாயா அவரை அவசர அவசரமாக அருகிலிருந்த வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல, அவரோ தன் வலியையும் மீறி அவளைப் பார்த்து புன்னகைத்த வண்ணமே படுத்துக் கிடந்தார்.
வைத்தியசாலை செல்லும் வழி முழுவதும் மாயாவின் மனது விடாமல் அடித்துக் கொண்டே இருக்க, அவளது ஆழ் மனதோ எதுவோ தவறான காரியம் நடக்கப் போகிறது என்று அவளை எச்சரித்துக் கொண்டே இருந்தது.
ஆனால் அதை எல்லாம் அவள் பெரிதாக எடுத்துக்கொள்ளவே இல்லை, அப்போதைக்கு அவளது தந்தை நன்றாக திரும்பி வந்தால் போதும் என்று மட்டும் தான் அவளுக்குத் தோன்றியது.
மாணிக்கத்தை ஊட்டி ***** ஹாஸ்பிடல் கொண்டு சென்றதுமே அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவரை உடனடியாக அவசர சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டு சென்றிருக்க, மாயாவுக்கு அந்த தருணத்தில் என்ன செய்வது என்று கூடப் புரியவில்லை.
இத்தகைய நேரத்தில் தன் மனக்குமுறலை சொல்லி தோள் சாய்ந்து கொள்ளக்கூட தனக்கு யாருமே இல்லையே என்கிற பச்சாதாப உணர்வோடு அங்கேயிருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டவளுக்கு, மாணிக்கத்தை பரிசோதித்துக் கொண்டிருந்த மருத்துவர்கள் அந்த அறையில் இருந்து வெளியே வரும் வரை தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று கூடப் புரிந்து கொள்ள முடியவில்லை, அத்தனை தூரம் அவள் மனதளவில் வெகுவாக தடுமாறிப் போயிருந்தாள்.
சில மணித்துளிப் பதட்டத்திற்கு பின்னால் அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்து வெளியேறி வந்த மருத்துவரைப் பார்த்ததும் அவரருகில் வேகமாக வந்து நின்றவள், “டாக்டர், அப்பாவுக்கு என்ன ஆச்சு? அவங்களுக்கு எதுவும் இல்லை தானே? இப்போ அவங்க குணமாகிட்டாங்க தானே?” என்று வினவ,
அவளை சிறு தயக்கத்துடன் திரும்பிப் பார்த்தவர், “ஐ யம் ரியலி சாரி மாயா, நான் முன்னாடியே உன் கிட்ட சொல்லியிருந்தேன், மாணிக்கத்தோட மூளையில் இருந்து வர்ற சில நரம்புகள் ரொம்ப டேமேஜ் ஆகியிருக்கு, சீக்கிரமாக ஆபரேஷன் பண்ணணும்னு, இப்போ நாள் ரொம்ப தள்ளிப் போனதால் நல்லா இருந்த சில நரம்புகளும் டேமேஜ் ஆகிடுச்சு. இதற்கு மேலே நம்மால் எதுவும் பண்ண முடியாது மாயா, இனி அந்தக் கடவுள் தான் மாணிக்கத்தைக் காப்பாற்றணும். மனசை தேற்றிக்கோம்மா” என்று விட்டு அங்கிருந்து சென்று விட, அவளுக்கோ அந்த நொடி உலகமே தன் சுழற்சியை நிறுத்தி விட்டது போல இருந்தது.
‘அப்பா! இனிமேல் நீங்களும் என் கூட இருக்க மாட்டீங்களா? நீங்களும் என்னை தனியாக தவிக்க விட்டுட்டு போகப் போறீங்களா? இனிமேல் நான் யாருக்காக இங்கே இருக்கணும்? இனிமேல் நான் என்ன பண்ணுவேன் ப்பா?’ தன் துயர் நிலையை எண்ணி வாய் விட்டுக் கதறியழக்கூடிய முடியாதவளாக அமர்ந்திருந்த மாயா,
“அம்மு!” என்ற அழைப்பைக் கேட்டதுமே சட்டென்று அந்தப் புறம் திரும்பிப் பார்க்க, அங்கே சித்தார்த் வியர்வை பூத்த முகத்தோடு பதட்டமாக நின்று கொண்டிருந்தான்.
சித்தார்த்தை அந்த இடத்தில் அந்த தருணத்தில் பார்த்ததும் அவளுக்கு எந்தவொரு எண்ணமும் அப்போதைக்கு தோன்றவே இல்லை, தாயை பிரிந்த குழந்தை தன் தாயை மறுபடியும் பார்த்ததும் என்ன மாதிரியான மனநிலையை அவரைத் தேடி ஓடிச் செல்லுமோ அதே மனநிலை தான் இப்போது மாயாவின் மனதிற்குள்ளும் நிலவிக் கொண்டிருந்தது.
தான் எங்கே இருக்கிறோம்? யார் தன்னைச் சுற்றி இருக்கிறார்கள் என்பதைப் பற்றி எதுவுமே யோசிக்காமல் அவனைப் பார்த்துக் கொண்டு எழுந்து நின்றவள் அவன் தன் கையை அவளது புறம் நீட்டிய அடுத்த கணமே அவனது மார்பில் சாய்ந்து தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தாள்.
இத்தனை நேரமாக மனதிற்குள் எல்லா வகையான யோசனைகளையும் வைத்துக் கொண்டு யாரிடம் சென்று சொல்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தவள் இப்போது தனக்கென்று சாய்ந்து கொள்ள ஒரு தோள் கிடைத்து விட்டது என்கிற சிறு நம்பிக்கையோடு அவன் மீது சாய்ந்து நிற்க, மறுபுறம் மாயா மற்றும் சித்தார்த்தின் பின்னால் நின்று கொண்டிருந்த சாவித்திரிக்கு அங்கே நடந்து கொண்டிருந்த நிகழ்வைப் பார்த்து மெல்ல மெல்ல எதுவோ புரிய ஆரம்பித்தது……