எல்லையில்லா இன்பம் நீதான் காதலா – 17

IMG_20221031_134812

எல்லையில்லா இன்பம் நீதான் காதலா – 17

மூன்று மாதங்களுக்கு பிறகு…..

சித்தார்த் ஊட்டியில் இருந்து வந்திருந்த அந்த மூன்று மாதங்களில் ஒவ்வொருவரது வாழ்க்கையிலும் சிற்சில மாற்றங்கள் நிறைவேறியிருந்தது.

சித்தார்த் தனது வேலையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டது மட்டுமின்றி பல புதிய ஆர்டர்களை தன் கைவசப்படுத்தி அதில் வெற்றிகரமாக தன் திறமையைக் கையாண்டு கொண்டிருந்தான்.

அதேபோல் கௌசல்யாவிற்கு வரன் பார்க்கும் படலம் ஆரம்பித்திருக்க, கௌசிக் தனது படிப்பில் வெகுவாக கவனத்தை செலுத்த ஆரம்பித்திருந்தான்.

இவை‌ எல்லாவற்றுக்கும் மேலாக மாயா கோயம்புத்தூரில் உள்ள பிரபலமான கல்லூரி ஒன்றில் ஃபேஷன் டிசைனிங் கற்கைநெறியை தெரிவு செய்து அங்கேயே ஒரு ஹாஸ்டலில் தங்கிப் படிக்க ஆரம்பித்திருந்தாள்.

ஆரம்பத்தில் ஊட்டியை விட்டு வேறு எந்த இடத்திற்கும் செல்ல அவளுக்கு விருப்பமில்லை, ஆனால் அவள் படிக்க நினைத்த கற்கைநெறியை இந்தக் கல்லூரியில் தான் நன்றாக கற்பிப்பார்கள் என்று பலர் கருத்துச் சொல்லியிருக்க வேறு வழியின்றி தான் இங்கே வந்திருந்தாள்.

மாணிக்கத்தின் மருத்துவச் செலவிற்கென அவள் சேமித்து வைத்திருந்த பணத்தை வைத்து அப்போதைக்கு தனது செலவுகளை சமாளித்து வந்தவள் அந்தப் பணத்தை மட்டுமே தான் படிக்கும் இந்த மூன்று வருடங்களுக்குப் பயன்படுத்த முடியாது என்று புரிந்து கொண்டு தன் ஹாஸ்டல் அருகாமையில் உள்ள ஒரு பிளவர் ஷாப்பில் உதவியாளராக, பகுதிநேரமாக வேலை செய்ய ஆரம்பித்திருந்தாள்.

வார நாட்களில் கல்லூரி முடிந்ததிலிருந்து இரவு எட்டு மணி வரை வேலை செய்பவள், வார இறுதி நாட்களில் காலையில் இருந்து இரவு வரை வேலை செய்து வருகிறாள்.

அவள் கோயம்புத்தூர் வந்த விடயத்தை சாவித்திரியிடம் சொல்வதா? வேண்டாமா? என்று தயங்கியிருந்த சமயம் சாவித்திரியே அவளுக்கு தொலைபேசி அழைப்பு மேற்கொண்டிருக்க, அவரிடம் உண்மையை மறைக்க மனமின்றி அதைப்பற்றி சொல்லியவள் அவர் பலமுறை அழைத்தும் அவரது வீட்டிற்குச் செல்லவே இல்லை.

ஒரு நிலைக்கு மேல் அவளைக் கட்டாயப்படுத்த மனமின்றி அதைப்பற்றி பேசுவதைத் தவிர்த்தவர்‌ அவ்வப்போது அவளை வெளியில் எங்கேயாவது சென்று சந்தித்து விட்டுத்தான் வருவார்.

ஆனால் அவள் இங்கே வந்திருக்கும் விடயத்தையோ, வெளியில் வேலை செய்யும் விடயத்தையோ யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று சொல்லியிருக்க, அவளது ‘யாரிடமும்’ என்கிற மேற்கோள் யாருக்கானது என்று புரிந்து கொண்டவர் அவளைப் பற்றி யாரிடமும் பேசிக் கொள்ளவில்லை.

என்னதான் மாயா தன்னைப் பற்றி சித்தார்த்திடம்‌ சொல்ல வேண்டாம் என்று மறைமுகமாக சொல்லியிருந்தாலும் அவ்வப்போது சாவித்திரி தவறுதலாக உளறி வைப்பதை வைத்து மாயா கோயம்புத்தூரில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகிறாள் என்பதை நன்றாகவே அறிந்து கொண்டான்.

அதிலும் அந்தக் கல்லூரி அவனது அலுவலகம் இருக்கும் பகுதியில் தான் இருக்கிறது என்று தெரிந்து கொண்டதும் அவனுக்கு அத்தனை சந்தோஷமாக இருந்தது.

இனி தன் வாழ்நாளில் மாயாவைப் பார்க்கவே முடியாது என்று தவித்துக் கொண்டிருந்தவனுக்கு தன் பார்வை வீச்சில் இன்னும் மூன்று வருடங்களுக்கு மாயா இருப்பாள் என்று தெரிந்தால் சந்தோஷம் ஏற்படாமல் இருக்குமா என்ன?

ஆனாலும் அந்த சந்தோஷத்தை அவனால் முழுமையாக அனுபவிக்கவே முடியவில்லை, தான் தவறுதலாக மாயா எதிரில் சென்று அது அவளுக்கு சிரமத்தை ஏற்படுத்தி விட்டால் அதைத் தன்னால் தாங்கிக் கொள்ள முடியாது என்று புரிந்து கொண்டவன் அந்தக் கல்லூரியைக் கடந்தும் செல்லும் போதெல்லாம் தன் காரின் வேகத்தைக் குறைத்து தன் மனம் நிறைந்தவள் எங்கேயாவது தென்படுகிறாளா? என்று பார்க்காமல் சென்றதே இல்லை.

அதேபோல் மாயாவிற்கும் சித்தார்த்தின் அலுவலகம் தன் கல்லூரியின் அருகில் தான் இருக்கிறது என்று தெரிந்ததிலிருந்து ஒருவிதப் பதட்டம் இருந்து கொண்டேதான் இருக்கும்.

அன்று ஹாஸ்பிடலில் வைத்து மாணிக்கத்திடம் தான் சித்தார்த்தை இன்னமும் நேசிப்பதாக மாயா சொல்லியிருந்தாலும் அதை அவள் தன் மனதார உணர்ந்து சொன்னதாக அவனுக்குத் தெரியவில்லை, மாறாக தன் தந்தையை இழந்து விடக்கூடாது என்கிற ஒரு தடுமாற்றத்தில் சொன்ன வார்த்தைகளாகவே தென்பட்டது.

அதனால் என்னவோ சித்தார்த் அவளை அதன் பிறகு தொந்தரவு செய்ய விரும்பவில்லை, என்றாவது ஒரு நாள் தனக்கான காதலை அவளிடம் மீண்டும் உணர்ந்து கொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்தால் அந்த தருணத்தில் இருந்து அவளைத் தன் இமை போல் காக்க வேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டவன் அந்த ஒரு தருணத்திற்காக இன்று வரை காத்துக் கொண்டிருக்கிறான்.

இங்கே சித்தார்த் மாயாவின் காதலுக்காக காத்துக் கொண்டிருக்க, மறுபுறம் அவளோ எக்காரணத்தைக் கொண்டும் அவனை சந்தித்து விடவே கூடாது என்பதில் உறுதியாக இருந்தது மட்டுமன்றி அவனது அலுவலகம் இருக்கும் பக்கமாக‌ மறந்தும் கூட செல்வதில்லை, அப்படியே அவளையும் மீறி அந்தப் பக்கம் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டால் மின்னல் வேகத்தில் அந்த இடத்தைக் கடந்து சென்று விடுவாள்.

இப்படியாக சித்தார்த்தும், மாயாவும் ஆள் மாற்றி ஆள் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிக் கொண்டிருக்க, அந்தக் கண்ணாமூச்சி ஆட்டத்திற்கான முற்றுப்புள்ளியை அவர்களது விதியை எழுதிய நாயகன் அன்று நடத்தி வைக்க தீர்மானித்து இருந்தான்.

அன்றைய நாள் மாயாவுக்குரிய வகுப்புகள் நேரத்திற்கே முடிவடைந்திருக்க அவளது தோழிகள் எல்லோரும் சேர்ந்து வெளியே எங்கேயாவது செல்லலாம் என்று முடிவெடுத்திருந்தனர்.

ஆரம்பத்தில் தன்னால் முடியாது என்று மறுத்த மாயா அதன்பிறகு அவர்களுடன்‌ செல்ல சம்மதித்திருக்க, அவர்கள் கல்லூரியின் அருகில் உள்ள காஃபி ஷாப்பிற்கு அவர்கள் அனைவரும் சென்றிருந்தனர்.

தன் தோழிகளில் ஒருத்தியான கீர்த்தனாவுடன் பேசியபடியே அந்த காஃபி ஷாப்பிற்குள் நுழைந்தவள் பார்வையோ முதலில் கண்டு கொண்டது அங்கே யாரோ ஒரு நபருடன் அமர்ந்து சிரித்துப் பேசியபடி காஃபி அருந்திக் கொண்டிருந்த சித்தார்த் தான்.

யாரைப் பார்த்து விடக்கூடாது என்று இத்தனை மாதங்களாக அவள் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிக் கொண்டிருந்தாளோ அந்த ஆட்ட நாயகனே இப்போது தன்னெதிரில் அமர்ந்திருக்க, ஒரு சில விநாடிகள் அவளுக்கு உலகமே தன் சுழற்சியை நிறுத்தி விட்டது போல இருந்தது.

சித்தார்த் பார்ப்பதற்குள் அங்கிருந்து சென்று விடலாம் என்று எண்ணியபடி மீண்டும் வாயில் பக்கமாக நடந்து செல்லப் பார்த்த மாயாவின் கைகளை எட்டிப் பிடித்துக் கொண்ட கீர்த்தனா, “ஹேய் மாயா! எங்கேடி போற? காஃபி ஷாப்பிற்குள் போகும் வழி இந்தப் பக்கம், அது இல்லை” என்று கூற,

முயன்ற மட்டும் தன் முகத்தை இயல்பாக வைத்துக் கொண்டு அவளைத் திரும்பிப் பார்த்தவள், “அதில்லைடி கீர்த்தி, என் நோட்டு ஒண்ணை கிளாஸிலேயே விட்டுட்டு வந்துட்டேன் போல, அதுதான் அதை எடுத்துட்டு வரலாம்ன்னு போறேன்” என்று கூற, அவளோ மாயாவின் கையிலிருந்த நோட்டுக்களை வாங்கிப் பார்க்க ஆரம்பித்தாள்.

“நீ இன்னைக்கு எடுத்துட்டு வந்ததே மூணு நோட்டு தான், அந்த மூணும் இதோ இருக்கு, அப்புறம் எந்த நோட்டை மேடம் எடுக்கப் போறீங்க?”

“அது எப்படி நான் மூணு நோட்டு தான் கொண்டு வந்தேன்னு உனக்குத் தெரியும்?”

“ஆமா, இது பெரிய சிதம்பர ரகசியம் பாரு. காலையில் நீ குளிக்கப் போகும் போது என்னைத் தானே உன் நோட்டை எடுத்து வைக்கச் சொன்ன? நான் வைத்த அதே நோட்டைத் தான் நீயும் எடுத்துட்டு வந்த”

“அப்படியா?”

“அப்படியே தான். ஒரு வேளை எனக்குத் தெரியாமல் நீ வேறு ஏதாவது எடுத்து வந்து அது நம்ம கிளாஸில் இருந்தாலும் அதை யாரும் எடுக்க மாட்டாங்க, அப்படியே ஒரு வேளை அதை யாராவது எடுத்திருந்தால் அதில் எதுவுமே இருக்காது, ஏன்னா நமக்கு நோட்டில் எழுதி வைக்கும் அளவுக்கு எந்தக் கிளாசும் நடக்கல. அதனால இந்த மாயா மேடம் கம்முன்னு வந்து அங்கே உட்காரு” என்ற கீர்த்தனா அத்தோடு விட்டு விடாமல் மாயாவின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு சென்று அவர்களுடன் அமர்ந்து கொள்ளச் செய்தாள்.

தன்னுடைய இக்கட்டான சூழ்நிலையை வெளியே சொல்ல முடியாமல் வெகுவாக தவித்துப் போய் அமர்ந்திருந்த மாயா, சித்தார்த் தன்னைக் கண்டு விடக்கூடாது என்பது போல தன் தோழியின் அருகில் வெகுவாக மறைந்தவாறு அமர்ந்து கொண்டாள்.

அவ்வப்போது கீர்த்தனாவுடன் பேசியபடியே சித்தார்த் அமர்ந்திருந்த புறமாக நோட்டம் விடுபவள் அவன் தன்னைக் கண்டு கொள்ளவில்லை என்று தெரிந்ததும் இயல்பாக மூச்சை விட்டுக் கொள்ளுவாள்.

மாயாவின் வாய் மாத்திரம் ஏதோ கதை பேசிக் கொண்டிருந்தாலும் அவளது மனமோ, ‘சித்தார்த் தன் புறம் திரும்பி விடக் கூடாது, இங்கிருந்து அவன் வெளியே செல்லும் வரை தன்னைப் பார்த்து விடக்கூடாது’ என்று ஜெபம் போல சொல்லிக் கொண்டே இருந்தது.

இங்கே மாயா வெகுவான தடுமாற்றத்துடன் இயல்பாக பேசுவது போல அமர்ந்திருக்க, அவளது தோழிகளோ யாரோ ஒரு நபரைப் பார்த்து தங்களுக்குள் ஜாடை காட்டியபடி சிரித்துப் பேசிக் கொண்டிருந்தனர்.

அத்தனை நேரம் கலகலப்பாக, சிறிது சத்தமாக பேசிக் கொண்டிருந்த தன் தோழிகள் இப்போது திடீரென ரகசியம் பேசுவது போல அமர்ந்திருந்ததைப் பார்த்து தன் சிந்தனைகளை எல்லாம் தன் அருகில் இருந்த கீர்த்தனாவின் தோளில் இடித்து, “என்னாச்சு கீர்த்தி? இத்தனை நேரமும் வயலண்டாக பேசிட்டு இருந்த நம்ம பார்ட்டி இப்போ இப்படி திடீர்னு சைலண்ட் ஆகிட்டாங்க? என்ன சங்கதி?” என்று வினவ,

மாயாவின் காதின் அருகில் மெல்ல குனிந்து கொண்டவள், “ஒரு பையனைக் காட்டுறேன், டக்குன்னு பார்க்காதே சரியா? சும்மா கேசுவலா திரும்பிப் பாரு. உன் ரைட் சைட் பக்கமாக அந்தக் கானர் டேபிளில் இரண்டு பசங்க இருக்காங்க, அதில் மெஜன்டா கலர் சர்ட் போட்டு, கொஞ்சம் லைட் சாக்லெட் கலரில் ஸ்மார்ட்டா ஒரு பையன் இருக்கான் பாரு, அவனைத்தான் நாங்க எல்லாரும் பார்த்து சைட் அடிக்கிறோம்” என்று கூற, அவள் சொன்ன பக்கம் திரும்பிப் பார்த்தவள் அவள் சொன்ன அடையாளத்தில் அமர்ந்திருந்த சித்தார்த்தைப் பார்த்ததும் வாய் பிளந்து அமர்ந்திருந்தாள்.

“அந்தப் பையனா?” என்றவாறே மாயா சித்தார்த்தின் புறம் தன் கையை நீட்ட,

சட்டென்று அவளது கையைப் பிடித்து இறக்கி விட்டவள், “உன்னைக் கேசுவலாப் பார்க்கச் சொன்னா இப்படி வம்பில் மாட்டி விடப் பார்க்குறியேடி” என்றவள் மீண்டும் சித்தார்த்தின் புறம் திரும்பி விட, மாயாவுக்குத்தான் அதைப் பார்க்கும் போது என்னவோ போல் இருந்தது.

அங்கே அமர்ந்திருந்த ஏழு பெண்களும் தங்களை மறந்து பார்க்கும் அளவுக்கு அவன் என்ன அத்தனை பெரிய ஆணழகனா என்பது போல அமர்ந்திருந்தவள், எதற்கும் ஒரு முறை நம் கண்ணால் பார்த்து அதை உறுதி செய்து கொள்ளலாம் என்று எண்ணிக் கொண்டே மெல்ல அவனது புறம் திரும்பிப் பார்த்தாள்.

காலையில் இருந்து வேலை செய்திருந்த களைப்பில் அவனது தலைமுடி சிறிது களைந்து போயிருக்க, அவனது முகமும் சிறு சோர்வோடு காணப்பட்டது.

ஆனாலும் அந்த சோர்வையும் மீறி அவனது முகத்தை புத்துணர்ச்சியாகக் காண்பித்துக் கொண்டிருந்தது அவனது புன்னகை, அதுவும் வசீகரிக்கும் புன்னகை.

ஆம், அது வசீகரப் புன்னகை தான். ஏன் என்றால் மாயா முதன் முதலாக அவனைப் பார்த்து ஈர்க்கப்பட்டதே அந்தப் புன்னகையினால் தானே.

அதிலும் இந்த ஐந்து வருடங்களில் அவனது புன்னகைக்கும் முகம் மேலும் தேஜஸாக மாறியிருந்தது.

ஆறடி உயரத்தில், ஆஜானுபாகுவான உடற்கட்டமைப்பு என்று சித்தார்த்தின் உடலமைப்பு இல்லாவிட்டாலும் முதன்முறையாகப் பார்ப்பவர்களுக்கு அவனைப் பிடித்துத்தான் போகும்.

யாரைப் பார்த்து விடக்கூடாது என்று மாயா அத்தனை நாட்களாக கங்கணம் கட்டிக் கொண்டிருந்தாளோ இப்போது அந்த நபரையே பல நிமிடங்களுக்கு மேலாக கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்பதை மறந்து அமர்ந்திருக்க, அவளைப் பார்த்து புன்னகைத்தபடியே அவளது தோளில் இடித்த கீர்த்தனா, “என்ன ஆளு செம்ம ஸ்மார்ட் இல்லை?” என்று வினவ,

சட்டென்று தன்னை சுதாரித்துக் கொண்டவள், “அப்படி எல்லாம் எதுவுமே இல்லை, நீதான் ஓவரா பில்டப் பண்ணிட்ட” என்று கூற, அவளோ சிறு ஏமாற்றத்துடன் சித்தார்த்தின் புறம் திரும்பிப் பார்த்து விட்டு, பின்னர் சிறு புன்னகையுடன் மாயாவின் புறம் திரும்பி அவளது தோளில் மெல்லமாக அடித்து வைத்தாள்.

“சரியான கேடி தான்டி நீ, எதுவுமே இல்லை இல்லைன்னு சொல்லிட்டே பத்து நிமிஷமா வைச்ச கண்ணு வாங்காமல் அவரைப் பார்த்த, அப்போ ஒரு வேளை ஏதாவது இருந்தால் எவ்வளவு நேரம் பார்த்து இருப்பியோ?”

“சீச்சீ! தப்பாகப் பேசாதே, ஏதோ நீ சொன்னியேன்னு தான் அந்தப் பக்கம் பார்த்தேன், மற்றபடி எனக்கு எல்லாம் எதுவுமே தோணல. என்ன பார்க்க டீசண்டா டிரஸ் பண்ணியிருக்காங்க, அதற்காக டிரஸ்ஸை வைத்து ஒருத்தரை எடை போட முடியுமா? ஏதோ சிரிக்கும் போது முகம் கொஞ்சம் நல்லா இருக்கு, அதற்காக சைட் அடிக்கணுமா என்ன? பார்ப்பதற்கு பெரிய இடத்து பையன் போலத்தான் இருக்கு, அதற்காக எல்லோரையும் நல்லவங்கன்னு நம்பலாமா? சர்ட்டை முழங்கை வரை மடித்து விட்டிருக்காங்க, அது ஏதோ கொஞ்சம் பார்க்க நல்லா இருக்கு, அதற்காக மொத்தமாக ஸ்மார்ட்ன்னு சொல்லிட முடியுமா? அந்த மெஜண்டா கலர் கொஞ்சம் ரிச் லுக்கைக் கொடுக்குது தான், அதற்காக இதை எல்லாம் வைத்து ஓவர் ஸ்மார்ட்ன்னு எல்லாம் சொல்ல முடியாது” சித்தார்த்தைப் பார்க்கவே கூடாது என்றிருந்த தான் அவனை இந்தளவிற்கு கவனித்திருக்கிறோம் என்பதை மறந்து மாயா பேசிக் கொண்டிருக்க,

அவளைப் பார்த்து தன் வாயில் கை வைத்துக் கொண்ட கீர்த்தனா, “அடிப்பாவி, நல்லா இல்லை, நல்லா இல்லைன்னு சொல்லிட்டே இவ்வளவு சொல்லுறியே. நானாச்சும் அவங்க முகத்தைத்தான் அப்பப்போ லைட்டா திரும்பிப் பார்த்தேன், ஆனா நீ டாப் டூ பாட்டம் வரை அலசி ஆராய்ந்து இருக்கியே. சும்மா சொல்லக்கூடாது, பலே ஆளுடி நீ. உண்மையாக சொல்லு நீயும் அவரை சைட் அடிக்குற தானே?” என்று கேட்க, அவளோ அவசரமாக மறுப்பாக தலையசைத்தாள்.

“அய்யய்யே! எனக்கு வேறு வேலை இல்லை பாரு. நீதான் மெச்சிக்கணும் அவரை”

“ஆமா, ஆமா. நீ ஒண்ணுமே தெரியாத பச்சை மண்ணு பாரு. எதுவுமே இல்லாமல் தான் பல நாள் பட்டினி கிடந்தவன் பிரியாணிப் பொட்டலம் கிடைத்ததும் அதை வெறிக்க வெறிக்கப் பார்க்கிற மாதிரி ‘ஙே’ன்னு பார்த்துட்டு இருந்த போல” கீர்த்தனா தான் பேசியது போல பாவனையும் செய்து நடித்துக் காட்ட, மாயா அவளது முகபாவனைகளைப் பார்த்து தன்னை மறந்து வாய் விட்டுச் சிரித்திருந்தாள்.

அவளது சிரிப்பு சத்தம் கேட்டு அந்த காஃபி ஷாப்பிற்குள் இருந்த அனைவரும் அவளது புறம் திரும்பிப் பார்க்க, சட்டென்று தன் வாயை மூடிக்கொண்டு தலை குனிந்து கொண்டவள் அப்போதுதான் அங்கே சித்தார்த்தும் இருக்கிறான் என்பதை நினைவு படுத்திக் கொண்டாள்.

‘ஐயோ! சித்தார்த் திரும்பி பார்த்தாரோ தெரியலையே?’ என்றவாறே தன்னருகே அமர்ந்திருந்தவ கீர்த்தனாவின் பின்புறமாக மெல்ல சாய்ந்தவள் சித்தார்த் அமர்ந்திருந்த புறமாக திரும்பிப் பார்க்க, அங்கே அவள் எண்ணியது போலவே அவன் அவளையே தான் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.

இந்த மூன்று மாத காலப் பிரிவுக்குப் பின்னர் இன்றுதான் சித்தார்த் அவளைக் காண்கின்றான், அதுவும் சிரித்த முகமாக.

அவளைப் பார்த்த போது அவனது மனதிற்குள் ஏற்பட்ட உணர்வை அவனால் வார்த்தைகளால் விவரிக்க முடியாது, அதேபோல அந்தத் தருணத்தை கடக்க அவனுக்கு விருப்பமே வரவில்லை.

அத்தனை நேரம் இயல்பாகப் பேசிக்கொண்டிருந்த சித்தார்த் இப்போது சட்டென்று அமைதியாக அமர்ந்திருப்பதை அவனது கையைத் தட்டிய கிஷோர், “ஹேய் சித்தார்த்! என்னாச்சுடா? ஏன் திடீர்னு அமைதியாகிட்ட? ஏதாவது பிரச்சினையா?” என்று வினவ,

அவனது தொடுகையில் தன் சுயநினைவுக்கு வந்தவன் அவனைப் பார்த்து சிறு வெட்கத்துடன் புன்னகைத்துக் கொண்டே, “சாரி கிஷோர், ரொம்ப நாள் கழித்து மனசுக்குப் பிடித்த ஒருத்தரைப் பார்த்தேன், அதுதான் என்னைச் சுற்றி என்ன நடந்ததுன்னே மறந்து போய் இருந்துட்டேன்” என்று கூற,

அவனோ சிறு புன்னகையுடன், “யாரு மாயா தானே?” என்று வினவ, இப்போது அவனது கேள்வியில் அதிர்ச்சியாகி அமர்ந்திருந்தான் சித்தார்த்…….

error: Content is protected !!