எல்லையில்லா இன்பம் நீதான் காதலா – 18

IMG_20221031_134812

எல்லையில்லா இன்பம் நீதான் காதலா – 18

கிஷோரின் கேள்வியில் சித்தார்த் அவனை அதிர்ச்சியாகப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருக்க அவனது தோளில் தட்டிக் கொடுத்தவன், “இப்போ எதற்கு உன் முகத்தை ஏதோ மாதிரி வைத்து இருக்க? நீ சொல்லலேன்னா மாயா பற்றி எனக்குத் தெரியாதா என்ன? ஐந்து வருஷத்துக்கு முன்னாடி நீ ஊட்டியில் பண்ண லூட்டியை லோகேஷ் என்கிட்ட சொல்லிட்டான், அதுவும் இல்லாமல் இப்போ மூணு மாசத்துக்கு முன்னாடி நீ ஊட்டி போயிட்டு வந்ததிலிருந்து ஒரு மார்க்கமாக சுற்றுவதை நான் ஒண்ணும் கவனிக்காமல் இல்லை, மாயாவைப் பார்த்த அப்புறம் தானே இந்த மாற்றம் சாருக்கு வந்தது” என்று கூற,

அவனைப் பார்த்து தன் கைகளை சத்தம் எழுப்பாமல் தட்டியவன், “அடடா கிஷோர், நீ எப்போ இருந்து இவ்வளவு புத்திசாலியாகுன? உன்னை நினைச்சா எனக்கு ரொம்ப பெருமையாக இருக்குடா. ஐ யம் வெரி ப்ரவுட் ஆஃப் யூ” என்று கூற, கிஷோர் அவனது கையில் பட்டென்று அடித்து வைத்தான்.

“டேய், டேய். போதும்டா, ரொம்ப நடிக்காதே. அப்புறம் நீ இன்னும் ஷாக் ஆகுற மாதிரி ஒரு விஷயம் சொல்லவா? மாயா இந்த காஃபி ஷாப்பிற்குள் வரும்போதே நான் பார்த்துட்டேன், மேடம் உன்னைப் பார்த்ததும் அப்படியே பேயறைஞ்ச மாதிரி நின்னாங்க”

“ஏய்! ஒரு நிமிஷம் இரு, நானும் நீ சொல்லுவதை எல்லாம் கேட்டு சும்மா உட்கார்ந்து இருக்கேன், அதுசரி, இதெல்லாம் உனக்கு எப்படிடா தெரியும்? அதுவும் இந்த ஐந்து வருஷத்துக்கு அப்புறம் மாயா தான் அந்தப் பொண்ணுன்னு அடையாளம் கண்டு பிடிக்க என்னாலேயே முடியல, அவ சொல்லித்தான் எனக்கே அது தெரியும், அப்படி இருக்கும் போது நீ என்ன நடந்த எல்லாவற்றையும் பக்கத்தில் இருந்து பார்த்த மாதிரி சொல்லுற. ஒருவேளை நீயும் என்னை பாலோ பண்ணி ஊட்டி வந்தியா? அப்படி இல்லைன்னா நீ பக்கத்தில் இருந்து பார்த்தியா? அதுவும் இல்லைன்னா பக்கத்தில் இருந்து பார்த்த யாராவது தகவல் சொன்னாங்களா?” சித்தார்த்தின் கேள்வியில் இப்போது அதிர்ச்சியாக அமர்ந்திருந்த கிஷோர்,

‘அய்யய்யோ! ஒரு வேகத்தில் அவசரப்பட்டு எல்லாவற்றையும் உளறிட்டேனே. இப்போ எப்படி சமாளிக்கிறது?’ என்றவாறே யோசித்துக் கொண்டிருக்க,

அவனது தோளில் தட்டியவன், “சார் இன்னும் என் கேள்விக்கு பதில் சொல்லலையே?” என்று கேட்க, சரியாக அந்த சந்தர்ப்பத்தில் கிஷோரின் தொலைபேசியும் ஒலித்தது.

சித்தார்த் மற்றும் கிஷோர் எதிரெதிராக அமர்ந்திருந்ததனால் கிஷோருக்கு அழைப்பை மேற்கொண்டது யார் என்பது போல பார்த்துக் கொண்டிருந்த சித்தார்த்தைப் பார்த்து சமாளிப்பது போல சிரித்துக் கொண்டே அங்கிருந்து கிஷோர் எழுந்து கொள்ளப் பார்க்க, அவனை எழும்பவிடாமல் அவனது கையைப் பிடித்துக் கொண்ட சித்தார்த் அத்தோடு விட்டுவிடாமல் அவனது தொலைபேசியை வாங்கி அதில் வந்திருந்த அழைப்பையும் ஆன் செய்திருந்தான்.

‘பேசுடா’ கிஷோரைப் பார்த்து அதட்டுவது போல சித்தார்த் பாவனை செய்ய, அவனைப் பார்த்து திருதிருவென விழித்துக் கொண்டே அவன், “ஹலோ” என்று சொல்ல, மறுமுனையில் யாரோ ஒரு பெண் பேசுவது சித்தார்த்திற்கு தெளிவாகக் கேட்டது.

கிஷோர் பேசி முடிக்கும் வரை அமைதியாக அமர்ந்திருந்தவன் அவன் பேசி முடித்ததும் அவனது ஃபோனை வாங்கி தனக்கு அருகாமையில் இருந்த ஒரு நாற்காலியில் வைத்து விட்டு, “சரி, இப்போ நான் கேட்கப் போகும் கேள்விகளுக்கு எல்லாம் டக்கு டக்குன்னு பதில் சொல்லணும், புரிஞ்சுதா?” என்று வினவ, அவனோ சிறு தயக்கத்துடன் ஆமோதிப்பாக தலையசைத்தான்.

“சரி, இப்போ சொல்லு மூணு மாசத்துக்கு முன்னாடி நான் ஊட்டி போனது மாயாவைப் பார்க்கத்தான்னு உனக்கு எப்படித் தெரியும்?”

“அது…அது… அன்னைக்கு வீட்டில் பேசிட்டாங்க”

“ஓஹ்! சரி. அப்போ ஐந்து வருஷத்துக்கு முன்னாடி மாயாவைப் பார்த்து, பேசிய எனக்கே அவளை இப்போ அடையாளம் கண்டுபிடிக்க முடியல, அப்படி இருக்கும் போது இங்கே காஃபி ஷாப்பிற்குள் வந்தது மாயாதான்னு நீ எப்படி அடையாளம் கண்டுபிடிச்ச? இதற்கு மட்டும் நீ சரியான பதிலை சொல்லலேன்னு வை மவனே அப்புறம் உனக்கு இருக்கு கச்சேரி”

“ஹேய் சித்தார்த்! நீ சும்மா விளையாட்டுக்கு தானே மிரட்டுற? நீ அப்படி என்ன பண்ணிடப் போற?”

“என்ன பண்ணுவேன்னா? இப்போ கடைசியாக கால் பண்ணாங்களே உன்னோட லவ்வர் அவளோட வீட்டுக்கு போய் அவளை லாடம் கட்டிடுவேன்”

“ஹேய்! அவ என்ன பண்ணா? அவளை எதற்காக திட்டுற?”

“பின்ன திட்டாமல் கொஞ்சுவாங்களா? இது எல்லாவற்றுக்கும் அந்தக் கேடி தானே காரணம்? அதோடு உன் ஆளு பேரு, டீடெய்ல்ஸ் எல்லாம் நான் சொல்லவா? தி கிரேட் பிசினஸ் மேன் வைத்தீஸ்வரன் அன்ட் சாவித்திரி தம்பதியோட ஒரே பொண்ணு, என்னோட ராட்சசி தொங்கச்சி சாரி, சாரி தங்கச்சி கௌசல்யா. அவ தானே? அவதானே உன் கிட்ட இதையெல்லாம் சொன்னா? ஏன்டா உன்னை என் பிரண்ட்டாச்சேன்னு நம்பி பழக விட்டால் நீ என்ன வேலை பார்த்துட்டு இருக்க? இதுதான் நீ என் பிரண்ட்சிப்பிற்கு கொடுக்கும் மரியாதையா? சொல்லுடா?” சித்தார்த்தின் கோபமான கேள்வியில் கிஷோர் திடுக்கிட்டுப் போய் அமர்ந்திருக்க,

ஒரு சில நொடிகள் கழித்து அவனைப் பார்த்து சட்டென்று வாய் விட்டுச் சிரித்துக் கொண்டவன், “என்னடா மச்சான் பயந்துட்டியா? நான் சும்மா விளையாட்டுக்கு கோபமாக இருக்கிற மாதிரி ஆக்ட் பண்ணேன், பயந்துட்டியா?” என்று வினவ, அப்போதுதான் கிஷோருக்கு நிம்மதியாக மூச்சே வெளிவந்தது.

“அட போடா! ஒரு பதினைந்து நிமிஷம் என்னை இப்படி பயம் காட்டிட்டியேடா. சத்தியமாக சொல்லுறேன்டா நீ கடைசியாக கேட்ட கேள்வியில் எனக்கே சங்கடமாகிடுச்சு” என்றவன் சிறு தயக்கத்துடன்,

“சாரிடா நான் கௌசிகிட்ட இதெல்லாம் வேண்டாம்ன்னு எவ்வளவோ சொன்னேன், அவதான் பிடிவாதமாக லவ் பண்ணியே ஆகணும்ன்னு சொல்லிட்டா, லவ் பண்ணலேன்னா ஆளு வைச்சு தூக்கிடுவேன்னு எல்லாம் மிரட்டுனா. அப்புறம் அவ அடாவடித்தனத்தைப் பார்த்து நானே அவளை லவ் பண்ண ஆரம்பிச்சுட்டேன், நான் ஆரம்பத்திலேயே இதைப்பற்றி உன் கிட்ட சொல்லி இருக்கணும், ஆனா எங்க நீ தப்பாக நினைச்சுடுவியோன்னு ஒரு பயம். ஆனா சத்தியமாக சொல்லுறேன்டா, இன்னைக்கு உன்கிட்ட இதைப்பற்றி பேசணும்னு தான் இங்கே உன்னை நான் அழைச்சுட்டு வந்ததே, ஆனா நான் நினைச்சது ஒண்ணு நடந்தது ஒண்ணாக மாறிடுச்சு” என்று கூற,

அவனைப் பார்த்து புன்னகை செய்தபடியே அவனது கையை அழுத்திக் கொடுத்தவன், “லவ் பண்ணுவது ஒண்ணும் தப்பில்லையேடா கிஷோர், உண்மையைச் சொல்லப் போனால் முன்ன பின்ன தெரியாத ஒருத்தரை நம்பி எப்படி நம்ம வீட்டுப் பொண்ணை அனுப்புவதுன்னு அம்மாவும், அப்பாவும், ஏன் நான் கூட ரொம்ப பயந்தேன், ஆனா இப்போ என் பிரண்டே எனக்கு மச்சான் ஆகப்போறது எனக்கு அவ்வளவு சந்தோஷமாக இருக்கு. நீங்க இரண்டு பேரும் லவ் பண்ணுற விஷயம் எனக்கு ஆரம்பத்தில் இருந்தே தெரியும், நான் தான் யாரு முதல்ல மாட்டிக்குறீங்கன்னு பார்க்கலாம்ன்னு அமைதியாக இருந்தேன், இப்போ நீ மாட்டிக்கிட்டலே, இதோ இன்னைக்கே இதைப்பற்றி நான் வீட்டில் பேசிடுறேன். ஆனா உளறுவாய் மச்சானே, இந்த விஷயத்தைப் பற்றி அந்த கேடிக்கிட்ட ஒரு வார்த்தை கூட நீ சொல்லக்கூடாது, மீறி சொன்ன உன் கல்யாணத்திற்கான பர்மிஷன் கார்ட்டை தரமாட்டேன் பார்த்துக்கோ, அமைதியான பொண்ணு மாதிரி இருந்துட்டு அந்தக் கேடி இவ்வளவு பண்ணியிருக்களா? இன்னைக்கு பாரு அவளை ஒரு வழி பண்ணிடுறேன்” என்று கூற,

அவனோ சிறு தயக்கத்துடன், “சித்தார்த் அவளை ரொம்ப மிரட்டிடாதேடா அவ பாவம்” என்று கூற, சித்தார்த் அவனை போலியாக முறைத்துப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.

“ரொம்ப தான் வழியுது துடைச்சுக்கோ”

“சரி, அதெல்லாம் நான் துடைச்சுக்கிறேன், நீ உன் விஷயத்திற்கு வா, இப்படியே எத்தனை நாளைக்கு கண்ணால் பேசிட்டு இருக்கப் போற? நீயும் உன் மனதில் இருக்குற காதலை அவகிட்ட சொல்லலாம்லே? நீயும் எவ்வளவு நாளைக்கு இப்படி பிசினஸ், பிசினஸ்னே இருக்கப் போற?”

“வேண்டாம் டா எனக்கு இந்த பிசினஸே போதும். அவ என்னைப் பார்க்கவே கூடாதுன்னு தான் இப்படி ஒதுங்கி ஒதுங்கிப் போற, அதை மீறி நான் அவளை தொந்தரவு செய்யக் கூடாது, அவ சந்தோஷமாக இருக்கிறதைப் பார்த்தாலே எனக்கு சந்தோஷம் வந்துடும். அவ அவ இஷ்டப்படி இருக்கட்டும், நானும் அவ இஷ்டப்படியே அவளை விட்டு விலகி இருந்துட்டு போறேன். அவ்வளவுதான்” என்ற சித்தார்த் மாயாவைப் பார்த்து பெருமூச்சு விட்டுக் கொண்டபடியே அங்கிருந்து எழுந்து கொள்ள, கிஷோரும் அதற்கு மேல் அதைப் பற்றி பேசி அவனை வருத்தி விடக்கூடாது என்பது போல தனது பேச்சை நிறுத்திக் கொண்டான்.

பில் கவுண்டர் அருகில் சென்று தங்களுக்கான பணத்தைக் கொடுத்து விட்டு நடந்து சென்று கொண்டிருந்த சித்தார்த் மீண்டும் ஒரு தடவை மாயாவைப் பார்த்து விட்டு வெளியேறிச் செல்லலாம் என்கிற நோக்கத்துடன் அவளது புறம் திரும்பிப் பார்க்க, அங்கே அவளும் தன் கையிலிருந்த காஃபியை பருகிய படி அவனையே தான் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

மாயாவின் பார்வை தன் மீதிருப்பதைப் பார்த்ததும் சித்தார்த்திற்கு அவனது இயல்பான குறும்புத்தனம் தலைதூக்க, தன் மன எண்ணங்களை எல்லாம் சிறிது நேரம் தள்ளி வைத்தவன் அவளைப் பார்த்து கண்ணடிக்க, அவளுக்கோ அவனது செயலைப் பார்த்து புரைக்கேற ஆரம்பித்தது.

“ஐயோ மாயா! பார்த்து குடிக்கமாட்டியா?” என்றவாறே கீர்த்தனா அவளது தலையில் தட்டிக் கொடுக்க, அவளோ போலியான கோபத்துடன் சித்தார்த்தை முறைத்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.

அவளது செய்கைகளை ஒவ்வொன்றையும் பார்த்து தனக்குள் சிரித்துக் கொண்டவன், ‘காஃபியை மொத்தமாக குடிக்கக்கூடாது, கொஞ்சம் கொஞ்சமாக குடிக்க வேண்டும், இல்லை என்றால் தொண்டையில் இப்படி மொத்தமாக அடைத்துக் கொள்ளும்’ என்று சைகையில் செய்து காட்டிவிட்டு இறுதியாக தனது கழுத்தைப் பிடித்து நாக்கை வெளிநீட்டிக் காட்ட, அவனது சைகைகளைப் பார்த்து மாயா சட்டென்று சிரித்து வைத்தாள்.

தான் கோபமாக பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து மாயா சிரிக்கின்றாள் என்று எண்ணி அவளது தோளில் பட்டென்று அடித்து வைத்த கீர்த்தனா, “இங்கே ஒருத்தி தொண்டைத் தண்ணீர் வற்றிப் போகும் அளவுக்கு கோபமாக பேசிட்டு இருக்கேன், நீ என்னடான்னா சிரிக்கிற? ஒருவேளை லூசாகிட்டியா?” என்று வினவ, அப்போதும் மாயா சிரித்துக் கொண்டே ஆமோதிப்பாக தலையசைக்க, கீர்த்தனா அவளை ஒரு மாதிரியாக பார்த்துக் கொண்டே சற்று தள்ளி அமர்ந்து கொண்டாள்.

சித்தார்த்தைப் பார்க்கும் நொடி வரை ஏதோ ஒரு இனம் புரியாத பதட்டமான உணர்வோடு அமர்ந்திருந்த மாயா அவனைப் பார்த்த பின்பு தனது மனக்குழப்பங்கள் எல்லாம் தீர்ந்து போனவளாக அமர்ந்திருக்க, அந்த இயல்பான மனநிலை அவளுக்கு என்றென்றும் வேண்டும் போலவே இருந்தது.

அவனை மீண்டும் தன் வாழ்வில் சந்திக்க நேர்ந்தால் தனக்கு மேலும் மேலும் சிரமங்கள் தான் ஏற்படும் என்று அவள் நினைத்திருந்ததற்கு மாறாக அவனது அந்த இயல்பான பார்வை பரிமாற்றமும், அவனது விளையாட்டுத்தனமான நடவடிக்கைகளும் அவளுக்கு சற்று மன அழுத்தத்தை குறைப்பது போலத்தான் இருந்தது.

இத்தனை நாட்களாக அவன் மீது தனக்கு எந்தவித அபிப்பிராயமும் இல்லை என்று அவள் நினைத்திருந்ததற்கு மாறாக அவளது ஆழ் மனதில் வேரூன்றி இருந்த காதல் இப்போது மெல்ல தளிர் விட ஆரம்பித்திருக்க, அதைத் தடுக்கும் எண்ணம் எதுவும் அவளுக்குத் தோன்றவில்லை.

மாறாக அந்த உணர்வு அப்படியே இருக்கட்டும் என்றுதான் நினைக்கத் தோன்றியது.

இங்கே மாயா பல்வேறு மன எண்ணங்களுக்குள் மாறி மாறிப் பயணித்துக் கொண்டிருந்த தருணம், அவளது முகமாற்றங்களை வைத்தே அவள் தன் மீதிருந்த கோபத்தை எப்போதோ கை விட்டு விட்டாள் என்று புரிந்து கொண்ட சித்தார்த் அதன்பிறகு சந்தோஷம் கொள்ளாமல் இருக்க முடியுமா என்ன?

ஆனாலும் அவளது வாயால் அந்த விடயத்தைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று தனக்குள் முடிவெடுத்தபடியே தனது கார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்தின் அருகில் சென்று நின்று கொண்டு மீண்டும் அவளது புறம் திரும்பிப் பார்க்க, அவன் தன்னை மீண்டும் திரும்பிப் பார்க்க மாட்டானா என்பது போல அமர்ந்திருந்த மாயா அவனைப் பார்த்ததும் சிறிது உற்சாகமாக நிமிர்ந்து அமர்ந்து கொண்டாள்.

மாயாவின் உடல் மொழியில் தெரிந்த அந்த சாதகமான மாற்றத்தைப் பார்த்ததும் அவளைப் பார்த்து சித்தார்த் தன் கையசைக்க, அவளும் சிறு தயக்கத்துடன் தன் தலைமுடியை சரி செய்வது போல கையை அசைத்து விட்டு சட்டென்று குனிந்து கொண்டாள்.

மாயாவிடம் இத்தகைய மாற்றத்தை எதிர்பார்த்திராத சித்தார்த் தான் காண்பது கனவா? நிஜமா? என்பது போல தன் கையில் கிள்ளிப் பார்க்க அவனருகில் நின்று கொண்டிருந்த கிஷோர், “எல்லாம் நிஜம் தான், நீ ஒண்ணும் கிள்ளிப் பார்க்கத் தேவையில்லை” என்று கூற, அவனைப் பார்த்து சமாளிப்பது போல சிரித்துக் கொண்டே தன் காரில் ஏறி அமர்ந்து கொண்டவன் அதே சந்தோஷமான மனநிலையுடன் தன் வீட்டை நோக்கிப் புறப்பட்டுச் சென்றான்.

மறுபுறம் மாயா தான் ஏன் இப்படி எல்லாம் நடந்து கொள்கிறோம் என்று புரியாமலேயே தனது அறைக்குள் வந்து அடைந்து கொள்ள அவளால், அந்த சந்தர்ப்பத்தில் எந்தவொரு தெளிவான முடிவையும் எடுக்க முடியவில்லை.

தான் அவனை வெறுக்கிறோம் என்று தான் இத்தனை நாட்களாக அவள் தனக்குள் எண்ணிக் கொண்டிருந்தாள், ஏன் எண்ணிக் கொண்டிருக்கிறாள்.

ஆனால் அந்த எண்ணத்திற்கு மாறாக சித்தார்த்தைப் பார்த்ததும் அவளது மனம் சந்தோஷத்தில் பூரித்துப் போவதும், அவளது விழிகள் அவனது விழிகளை சந்திக்க ஏங்குவதும் அவளுக்கு முதன்முதலாக ஊட்டியில் வைத்து அவனை சந்தித்தபோது ஏற்பட்ட உணர்வை மீண்டும் கொடுப்பது போலத்தான் இருந்தது.

‘அப்படி என்றால் தான் மீண்டும் அவனை நேசிக்க ஆரம்பித்து விட்டோமா? ஆனால் அது எப்படி சாத்தியம்? அவனால் தானே தன் வாழ்க்கையில் இத்தகைய சம்பவங்கள் எல்லாம் நடந்து முடிந்தது? அதை எப்படி தன்னால் மறக்க முடியும்?’ என சிந்தித்தபடியே தன் அறைப் பால்கனியில் சென்று நின்று கொண்டவள் தன் முகத்தில் மோதிச் சென்ற காற்றை ஆழ்ந்து சுவாசித்துக் கொண்டாள்.

அந்த மாலை நேரக் காற்றின் புத்துணர்ச்சி அவளுக்குள் ஒரு வித அமைதியைப் பரப்புவது போல இருக்க, அப்போதுதான் அவளுக்கு நிதர்சனம் மெல்ல மெல்ல பிடிபட ஆரம்பித்தது.

சித்தார்த் தனது எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் என்று தான் அன்று தன் காதலை மறுத்து தனக்கு அறிவுரை சொன்னது மட்டுமின்றி, தன் தந்தைக்குப் நிதர்சனத்தை புரிய வைக்க முயற்சி செய்தான்.

ஆனால் ஒரு தந்தையாக மாணிக்கத்திற்குள் ஏற்பட்ட பதட்டம் அவரை சற்று தடுமாற்றம் காணச் செய்திருந்தது.

அந்த தடுமாற்றம் தான் ஏதேதோ பிரச்சினைகளை உண்டு பண்ணியது என்பதைப் புரிந்து கொண்ட மாயா, நடந்த விடயங்களை இனி தன்னால் மாற்ற முடியாது என்பதையும் புரிந்து கொண்டாள்.

ஆனால் அதற்காக சித்தார்த்துடன் இணைந்து தன்னால் வாழ முடியுமா என்று அவளுக்குத் தெரியவில்லை, ஏன் என்றால் ஏற்கனவே தனது திருமண வாழ்க்கையைப் பார்த்து மிரண்டு போயிருந்தவளுக்கு இன்னும் ஒரு முறை அந்த வாழ்க்கைக்குள் நுழைய தைரியம் வரவில்லை என்று தான் கூற வேண்டும்.

அத்தோடு சித்தார்த்திற்கு நல்ல எதிர்காலம் அமைய வேண்டும், அதுவும் சாவித்திரி அம்மாவின் நற்குணத்திற்கு ஏற்றாற் போல் அவருக்கு ஒரு மருமகள் அமைய வேண்டும், அது தன்னால் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்று அவளது மனம் உறுதியாக முடிவெடுத்துக் கொண்டது.

தனக்குள் ஏற்பட்ட முதலும், முடிவுமான சித்தார்த் மீதான காதல் எப்போதும் தனது மனதிற்குள்ளேயே இருந்து விடட்டும், அதை யாரிடமும் வெளிப்படுத்தக் கூடாது, முக்கியமாக சித்தார்த்திடம் வெளிப்படுத்தி விடக்கூடாது என்று உறுதியாக முடிவெடுத்துக் கொண்ட மாயா இனி வரப்போகும் நாட்களில் சித்தார்த்தைப் பார்த்து தனது மனதை இழந்து விடக்கூடாது என்று நினைத்திருக்க, அவள் நினைப்பது எல்லாம் நடந்து விடுமா?????

error: Content is protected !!