எல்லையில்லா இன்பம் நீதான் காதலா – 20 (Pre- Final)

IMG_20221031_134812

எல்லையில்லா இன்பம் நீதான் காதலா – 20 (Pre- Final)

தன் இருக்கையில் சாய்ந்து கண்மூடி அமர்ந்திருந்த சித்தார்த்தின் அருகில் அமர்ந்திருந்த கிஷோர் தன் கைக்கடிகாரத்தைப் பார்ப்பதும், தன்னருகே அமர்ந்திருப்பவனைப் பார்ப்பதுமாக இருந்து விட்டு இப்படியே அமர்ந்திருந்தால் எதுவும் நடக்காது என்பதைப் புரிந்து கொண்டு தன் நண்பனின் தோளில் மெல்லத் தட்டி, “சார், சித்தார்த் சார். நீங்க உங்க கனவில் டூயட் பாடி முடிச்சுட்டீங்கன்னா காரை கொஞ்சம் எடுக்குறீங்களா? அங்கே கிளையண்ட் நமக்காக வெயிட்டிங்” என்று கூற, அவனது குரல் கேட்டு தன் கண்களைத் திறந்து பார்த்த சித்தார்த்திற்கு அப்போது தான் தன்னருகே கிஷோர் அமர்ந்திருந்ததே நினைவுக்கு வந்தது.

“டேய் கிஷோர்! நீ இங்கே தான் இருக்கியா? சாரிடா மறந்தே போயிட்டேன்” என்று கூறிய சித்தார்த்தை முறைத்துப் பார்த்தவன்,

“ஏன்டா சொல்ல மாட்ட? சன்டே அதுவுமா வீட்டில் நல்லா மூக்குப்பிடிக்க சாப்பிட்டுட்டு செவனேன்னு இருந்தவனைக் கதறக் கதற இழுத்துட்டு வந்துட்டு நீ இதுவும் சொல்லுவ, இதற்கு மேலேயும் சொல்லுவ” என்றவன்,

“கொஞ்சம் இதைக் கொடு” என்றவாறே சித்தார்த்தின் கையிலிருந்த பொக்கேவை வாங்கி ஆராய்ந்து பார்க்கத் தொடங்கினான்.

“அதில் என்னடா தேடுற?”

“இல்லை இந்த பொக்கே கொஞ்சம் வெயிட்டாக இருக்கே, அதுதான் பார்க்கிறேன்”

“என்னது வெயிட்டா இருக்கா? எங்கே கொடு” என்றவாறே கிஷோரின் கையிலிருந்த பொக்கேவை வாங்கிப் பார்த்தவன்,

“ஏன் சார் இதுதான் உங்க ஊரில் வெயிட்டா? கையில் பொக்கே இருக்கிறதே தெரியலை, அவ்வளவு லேசாக இருக்கு, இதைப்போய் வெயிட்ன்னு சொல்லுற” எனவும் அவனைப் பார்த்து சிரித்துக் கொண்டவன்,

“அது உனக்குத் தெரியாதுடா சித்தார்த், ஏன்னா நீ மாயா கூட கடலை போட்டுட்டிருக்கும் போது ஒருசில கடலை அந்த பொக்கே உள்ளேயும் விழுந்ததை நான்தானே பார்த்தேன், நீ பார்க்கல இல்லையா? அதுதான்” என்று கூற, சித்தார்தோ அவனது தோளில் தாறுமாறாக அடிக்கத் தொடங்கினான்.

“லூசுப்பயலே! நான் கூட நீ ஏதோ முக்கியமான விஷயம் சொல்லப்போறேன்னு ஆர்வமாக இருந்தால் நீ என்னை வைச்சுக் காமெடி பண்ணுற இல்லை? இருடா மவனே, உன்னைக் கௌசி கிட்ட மாட்டி விடுறேன், அப்போ தெரியும் யாரு கடலை ஜாஸ்தி போடுறாங்கன்னு” என்று கூறிய சித்தார்த்தைப் பார்த்து அவசரமாக தன் இரு கரம் கூப்பி கும்பிட்டுக் கொண்டவன்,

“ஐயா ராசா! மகாபிரபு, நீங்க உங்க திருவாயில் இருந்து எதுவும் சொல்லிட வேண்டாம் சாமி. இந்தப் பச்ச மண்ணு தாங்காது. இப்போ என்ன இங்கே நடந்த அந்தக் கடலை போடும் சம்பவத்தை”

“ஏய்!”

“சாரி, சாரி அந்த சம்பவத்தை நான் அப்படியே மறந்துடுறேன் போதுமா?” என்று வினவ, சித்தார்த் சிரித்துக் கொண்டே அவனது தோளில் தட்டிக் கொடுத்து விட்டு தன் புன்னகை மாறாமல் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றான்.

வெகுநேரமாக சித்தார்த்தின் கார் ஒரே இடத்தில் நின்று கொண்டிருந்ததைப் பார்த்து ஏதாவது பிரச்சினையாக இருக்குமோ என்றெண்ணியபடி அவனது காரை நோக்கி நடந்து சென்ற மாயா காரிற்குள் சித்தார்த்துடன், இன்னுமொரு நபர் அமர்ந்திருந்து சிரித்துப் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்து சிறு நிம்மதியுடன் அங்கிருந்து திரும்பிச் செல்லப் பார்க்க, அவளது கால்களோ அங்கிருந்து நகர மறுத்தது.

சித்தார்த்தின் புன்னகை தவழும் முகத்தைப் பார்த்ததும் மாயாவின் மனம் அவனுடான தன் இனிய தருணங்களை எண்ணிப் பார்க்க ஆரம்பிக்க, இப்போது அவளது முகத்திலும் புன்னகை வந்து குடி கொண்டிருந்தது.

தான் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்று புரியாமலேயே சிறிது நேரம் அப்படியே நின்று கொண்டிருந்தவள், தன் உரிமையாளரின் அழைப்பின் பின்னரே தன் சுயநினைவுக்கு வந்திருந்தாள்.

தன் மனது எதை எதிர்பார்க்கிறது என்று அவளால் புரிந்து கொள்ளவே முடியவில்லை.

அவளால் முழுமையாக சித்தார்த்தை வேண்டாம் என்று ஒதுக்கி வைத்து விடவும் முடியவில்லை, அதற்காக முழு மனதுடன் அவனை ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை.

அந்தப் பக்கம் செல்வதா? இந்தப் பக்கம் செல்வதா? என்று புரியாமலேயே மாயாவின் ஒவ்வொரு நொடிகளும் அந்தக் கணத்திலிருந்து நகர ஆரம்பித்திருக்க, அந்தக் குழப்பத்திற்கான தீர்வு எப்போது கிடைக்கும் என்று தெரியாமலேயே மாயாவும், சித்தார்த்தும் காலத்தின் ஓட்டத்தில் நகர்ந்து செல்ல ஆரம்பித்திருந்தனர்.

காலம் அதன்பாட்டிற்கு நகர்ந்து செல்ல ஆரம்பித்திருக்க, அவர்கள் இருவரது வாழ்விலும் குழப்பத்தை உண்டு பண்ணிய காரண கர்த்தாவே அதற்கான தீர்வையும் அவர்களுக்கு வழங்க முடிவெடுத்திருக்க, அது கௌசல்யா மற்றும் கிஷோரின் நிச்சயதார்த்த நிகழ்வின் போது தான் நடக்க வேண்டும் என்று விதிக்கப்பட்டிருந்ததும் அவனது செயல்தான் போல.

கௌசல்யாவின் நிச்சயதார்த்த நிகழ்விற்கு மாயா கண்டிப்பாக வந்தே ஆகவேண்டும் என்று சாவித்திரி அவளிடம் கெஞ்சுதலாக வேண்டுகோள் விடுத்திருக்க, அவளால் அந்த சந்தர்ப்பத்தில் அதை மறுத்துப் பேச முடியவில்லை.

காரணம் அவள் மனதிற்குள் மீண்டும் துளிர் விட்டிருந்த சித்தார்த் மீதான காதல் தான்.

இதுவே கோயம்புத்தூர் வந்த புதிதில் இருந்த மாயாவாக இருந்திருந்தால் ஏதாவது காரணம் சொல்லி அதைத் தட்டிக் கழித்திருப்பாள், ஆனால் இப்போது அவளது மனது முழுவதும் அவன் வசம் ஆகிவிட்டதே.

அப்படி இருக்கும் போது அவளது மனது அந்த சந்தர்ப்பத்தை நழுவ விட்டு விடுமா என்ன?

என்னதான் ஒரு வேகத்தில் அவரது வீட்டிற்கு வருவதாக மாயா சொல்லியிருந்தாலும் அவளது சிந்தனைகள் எல்லாம் சித்தார்த்தை எப்படி எதிர்கொள்வது என்கிற விடயத்தில் தான் தேங்கி நின்றது.

இதற்கு முன்னர் அவன் மீது கொண்டிருந்த கண்மூடித்தனமான கோபம் காரணமாக அவனைப் பார்ப்பதைத் தவிர்திருந்தவள், இப்போது தன் மண எண்ணங்களை அவன் கண்டு கொண்டு விடக்கூடாது என்பதற்காக அவனைப் பார்ப்பதை தவிர்க்க எண்ணியிருந்தாள்.

என்னதான் நாம் ஒன்று நினைத்து அதற்கேற்ப எல்லாம் நடக்க வேண்டும் என்று எண்ணியிருந்தாலும், அவை எல்லாம் அப்படியே நடந்து விடுமா என்ன?

அதுபோலவே மாயா நினைத்ததற்கு மாறாக எல்லாம் நடக்க விதித்திருக்க, அந்த சம்பவங்கள் எல்லாம் நிச்சயமாக மாயா மற்றும் சித்தார்த்தின் வாழ்வில் சந்தோஷத்தைத்தான் அள்ளி வழங்கப் போகிறது.

**********
கௌசல்யாவின் நிச்சயதார்த்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளில் சித்தார்த் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்க, மறுபுறம் மாயா அங்கே செல்வதற்காக வேண்டி தயாராகிக் கொண்டிருந்தாள்.

மஞ்சள் நிறத்தில் சிவப்பு நிற ரோஜாப்பூக்கள் அச்சிடப்ப சுடிதார் அணிந்து அதற்கேற்றாற்போல் எளிமையான ஒப்பனையுடன் தயாராகி வந்தவள், கண்ணாடியில் தன் உருவத்தைப் பார்த்து விட்டு காரணம் எதுவும் அறியாமலேயே ஒருவிதமான சந்தோஷமான மனநிலையுடன் சித்தார்த்தின் வீட்டை நோக்கிப் புறப்பட்டுச் சென்றாள்.

வீடு முழுவதும் சொந்தபந்தங்களும், நட்புக்களும் ஒன்று கூடியிருக்க, அத்தனை பேரின் நடுவே சாவித்திரியை எங்கே சென்று பார்ப்பது என்று தெரியாமல் அவர்கள் வீட்டின் வாயில் அருகே மாயா தடுமாறிக் கொண்டு நின்ற தருணம், “ஹாய் மாயா! இந்த டிரெஸ் உனக்கு ரொம்ப அழகாக இருக்கு” என்று ஒரு குரல் அவள் காதருகே கேட்க, அந்தக் குரல் கேட்டதும் தூக்கி வாரிப் போட திரும்பிப் பார்த்தவள், அங்கே புன்னகை முகமாக நின்று கொண்டிருந்த சித்தார்த்தைப் பார்த்ததும் சட்டென்று முகம் சிவந்து போனாள்.

மாயாவின் முகச்சிவப்பைப் பார்த்ததும் சித்தார்த்தின் மனம் ஏதேதோ எண்ணங்களை எண்ணி அலைபாய ஆரம்பிக்க, அவனது கைகளோ அவனையும் அறியாமல் மாயாவின் புறம் நீளத் துடித்தது.

இருந்தாலும் தான் இருக்கும் இடம், நிலை என்பவற்றைக் கவனத்திற் கொண்டு தன் மனதை சிரமப்பட்டு கட்டுப்படுத்தியவன், “என்ன மாயா இங்கே நிற்கிற? உள்ளே வர மாட்டியா?” என இயல்பாக அவளைப் பார்த்து வினவ,

அவனைப் பார்த்து மறுப்பாக தலையசைத்தவள், “இல்லை, அப்படி எல்லாம் எதுவும் இல்லை. நிறைய பேரு இருந்தாங்க, அதில் சாவித்திரி ஆன்டி எங்கேன்னு பார்த்துட்டு இருந்தேன்” என்று கூற,

“அம்மா உள்ளே தான் வேலையாக இருக்காங்க, வா மாயா” என்றவன் அவளை உள்ளே அழைத்துக்கொண்டு செல்ல, அவளும் புன்னகை முகமாக அவனைப் பின்தொடர்ந்து சென்றாள்.

நிச்சயதார்த்த நிகழ்வுக்கான வேலைகளைச் செய்தவாறே சமையலறைக்கும், ஹாலுக்கும் மாறி மாறி நடந்து கொண்டிருந்த சாவித்திரி சித்தார்த்துடன் நடந்து வந்து கொண்டிருந்த மாயாவைப் பார்த்ததும், “அடடே மாயா! வாம்மா, எப்போ வந்த? ரொம்ப நேரம் ஆச்சா?” என்று வினவ,

அவரைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டே மறுப்பாக தலையசைத்தவள், “இல்லை ஆன்ட்டி, இப்போதான் வந்தேன், சாரி கொஞ்சம் லேட் ஆகிடுச்சு, நானும் உங்களுக்கு உதவி பண்ணவா?” என்று கேட்க,

அவளது தலையை ஆதரவாக வருடிக் கொடுத்தவர், “இதற்கு எதற்காக சாரி சொல்லுற? நீ எப்போ வேணும்னாலும் இங்கே வரலாம், போகலாம். ஏன்னா இது உன் வீடு” என்றவர் மாயாவின் அதிர்ந்த பாவனையைக் கவனிக்காதது போல அவளுக்கு வேலை ஒன்றைக் கொடுத்து விட, அவளும் வேறு வழியின்றி அதைப்பற்றி பிறகு பேசலாம் என்கிற எண்ணத்துடன் தனது வேலையைக் கவனிக்கத் தொடங்கினாள்.

சிறிது நேரத்தில் கௌசல்யா மற்றும் கிஷோரின் நிச்சயதார்த்த நிகழ்வுகள் ஆரம்பித்து விட, சொந்த பந்தங்களும், நட்புக்களும் ஒருமனதாக வாழ்த்துத் தெரிவிக்க, அவர்களது நிச்சயதார்த்த நிகழ்வு இனிதாக நிறைவு பெற்றிருந்தது.

கௌசல்யாவும், கிஷோரும் மோதிரம் மாற்றிக் கொள்ளும் போது மாயா தன்னையும் அறியாமல் சித்தார்த்தின் புறம் திரும்பிப் பார்க்க, அதே சமயம் அவனும் அவளையே தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

இருவரும் ஒருவருக்கொருவர் மனம் திறந்து தங்கள் காதலை அந்த தருணத்தில் சொல்லிக் கொள்ளாவிட்டாலும் அவர்கள் விழிகளில் நிறைந்திருந்த ஏக்கமும், ஆசைகளும் அவர்களையும் மீறி அவர்களை வெகு நேரமாக கண்காணித்துக் கொண்டிருந்த சாவித்திரிக்குத் தெள்ளத் தெளிவாகப் புரிந்தது.

‘இவ்வளவு ஆசைகளை மனதில் வைத்துக் கொண்டு இந்த இரண்டு பிள்ளைகளும் எதற்காக தங்களைத் தாங்களே வருத்திக் கொண்டு இருக்காங்களோ தெரியலையே! மாயா ஒரு நல்ல முடிவை எடுக்கணும்னு தான் இத்தனை நாட்களாக நானும் இதைப்பற்றி அவளிடம் எதுவும் பேசாமல் இருந்தேன், ஆனா எப்போ அவ கண்களில் சித்தார்த் மீதான ஏக்கத்தைப் பார்த்தேனோ இனிமேலும் இதைத் தள்ளிப் போடுவதில் அர்த்தம் இல்லை. இந்த பங்ஷன் முடிந்ததும் மாயவிடம் இதைப்பற்றி பேசிடலாம்’ எனத் தனக்குள் உறுதியாக முடிவெடுத்துக் கொண்ட சாவித்திரி மாயாவை அன்றிரவு அங்கேயே தங்கி விட்டு நாளை காலையில் ஹாஸ்டல் செல்லும் படி கேட்டிருக்க, ஆரம்பத்தில் தன்னால் முடியாது என்று மறுத்திருந்தவள் அதன்பிறகு எல்லா நிகழ்வுகளும் முடிந்து ஹாஸ்டல் செல்லலாம் என்று எண்ணி நேரத்தைப் பார்க்க, அதுவோ மணி ஒன்பதை நெருங்கிக் கொண்டிருந்தது.

“அய்யய்யோ! இவ்வளவு நேரம் ஆச்சா?” என்றவாறே பதட்டத்துடன் தன் தொலைபேசியை ஹாஸ்டல் வார்டனுக்கு அழைத்தவள் தான் வரத் தாமதமாகி விட்டதையும், இன்னும் சிறிது நேரத்தில் வந்து விடுவதாகவும் சொல்லியிருக்க, அவரோ அப்படி தாமதாகுமானால் நேரத்திற்கே அவர்களிடம் அறிவித்திருக்க வேண்டும் என்றும், இவ்வளவு நேரத்திற்கு பிறகு ஹாஸ்டலுக்குள் அவளை அனுமதிக்க முடியாது என்றும், நாளை காலையில் அவளை வருமாறும் சொல்லியிருந்தார்.

ஒரேயொரு நாள் நேரத்திற்கு செல்ல முடியாமல் போனதற்காக இப்படி எல்லாம் அவர் பேசுவார் என்று எதிர்பார்த்திராத மாயா சிறு கவலையுடன் சாவித்திரியின் அருகே சென்று அமர்ந்து கொள்ள, அவளது கையை ஆதரவாக அழுத்திக் கொடுத்தவர், “எல்லாம் நன்மைக்கே மாயா. நான் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்னு தான் உன்னை ராத்திரி இங்கேயே இருக்கக் கேட்டேன், ஆனா நீ முடியாதுன்னு சொல்லிட்ட. இப்போ அந்தக் கடவுளே ஒரு சந்தர்ப்பத்தை எனக்கு ஏற்படுத்திக் கொடுத்துட்டாரு, இப்போ நான் பேச வர்ற விஷயத்தைக் கேட்பியா?” என்று வினவ,

அவரைப் பார்த்து புன்னகையுடன் ஆமோதிப்பாக தலையசைத்தவள், “நிச்சயமாக கேட்பேன் ஆன்ட்டி, சொல்லுங்க” என்று கூற,

அவரோ, “நீ சித்தார்த்தை இப்போதும் விரும்புற தானே?” என்று கேட்க, அவரது நேரடிக் கேள்வியில் மாயா திகைத்துப்போய் அமர்ந்திருந்தாள்.

“ஆன்ட்டி! நீங்க இப்படி…”

“எனக்கு எல்லாம் தெரியும் மாயா, ஊட்டியில் இருந்து நாங்க வரும் போது தான் சித்தார்த் உனக்கும், அவனுக்கும் இடையே எப்படி பழக்கம் ஆச்சுன்னு சொன்னான். உண்மையைச் சொல்லப் போனால் எனக்கு ஆரம்பத்தில் இருந்தே உன்னை ரொம்ப பிடிக்கும், நீ என் வீட்டு மருமகளாக வந்தால் ரொம்ப நல்லா இருக்கும்ன்னு நான் ஆசைப்பட்டது உண்மை”

“என்னோட வாழ்க்கையில் என்ன நடந்ததுன்னு உங்களுக்குத் தெரியும் தானே ஆன்ட்டி, அதற்கு அப்புறமும் எப்படி?”

“என்ன? அப்படி என்ன நடந்து போச்சு உன் வாழ்க்கையில்?”

“என்ன ஆன்ட்டி எதுவுமே தெரியாத மாதிரி கேட்குறீங்க? எனக்குத் தான் ஏற்கனவே கல்யாணம் ஆகி, விவாகரத்தும் ஆகிடுச்சே”

“அதனால இப்போ என்ன? ஏன் விவாகரத்து ஆனவங்க மறுபடியும் கல்யாணம் பண்ணிக்க கூடாதா?”

“நான் அப்படி சொல்ல வரல ஆன்ட்டி, நீங்க உங்க பசங்க வாழ்க்கையைப் பற்றி எவ்வளவோ கனவு கண்டிருப்பீங்க, அப்படி இருக்கும் போது நான் எப்படி…” மாயா சிறு தயக்கத்துடன் தன் தலையைக் குனிந்து கொள்ள,

அவளது முகத்தை மெல்ல நிமிர்த்தியவர், “அது எல்லாம் ஒரு விஷயமே இல்லை மாயா, நான் பார்க்கிறது உன்னோட குணங்களையும், பழக்க வழக்கங்களையும் தான், மற்றபடி வேறு எதுவும் எனக்குத் தேவையில்லை. உன் அப்பா கடைசியாக உன்கிட்ட ஒரு விசயம் ஆசையாக கேட்டார் இல்லையா? அதைப் பற்றி அப்போவே நான் உன்கிட்ட கேட்டிருப்பேன், ஆனால் சித்தார்த் தான் என் வாயை அடைச்சுட்டான், நான் எப்போ இந்த விஷயத்தைப் பற்றி உன் கிட்ட பேச நினைப்பேனோ அப்போ எல்லாம் மாயாவை அவ விருப்பப்படி வாழ விடும்மா, இது அவ வாழ்க்கைன்னு சொல்லி வாயை அடைச்சுடுவான், ஆனா இன்னைக்கு உங்க இரண்டு பேரு கண்ணிலேயும் அவ்வளவு ஏக்கத்தை நான் பார்த்தேன். இதற்கு அப்புறமும் உங்களை விட்டால் நீங்க கண்ணாலேயே பேசிப் பேசி காலத்தை ஓட்டிடுவீங்க, அதனால் தான் உன்கிட்ட இதைப்பற்றி பேச முடிவெடுத்தேன். இப்போ சொல்லு மாயா நீ சித்தார்த்தை விரும்புற தானே? அவனைக் கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைப்படுற இல்லையா?” என்று வினவ,

அவரைப் பார்த்து ஆமோதிப்பாக தலையசைத்தவள், “ஆமா ஆன்ட்டி, எனக்கு சித்தார்த்ன்னா ரொம்ப இஷ்டம் தான், ஆனா ஏதோ ஒரு விஷயம் என்னை அதை தைரியமாக சொல்ல விடாமல் தடுக்கிறது, அது என்னன்னு புரியாமல் தான் நான் அவரை விட்டு விலகி விலகிப் போறேன்” என்று கூற, அவளது மனக்குழப்பத்தை புரிந்து கொண்ட சாவித்திரி அவளைத் தன் தோளோடு சேர்த்து அணைத்து விடுவித்தார்.

“அது என்னன்னு எனக்குப் புரிஞ்சு போச்சு மாயா?”

“என்ன ஆன்ட்டி அது?”

“உன்னோட கடந்த திருமண வாழ்க்கை தான் அது”

“…..”

“நீ அமைதியாக இருப்பதே அதுதான் சரின்னு சொல்லிடுச்சு. நீ இவ்வளவு யோசிக்கும் அளவுக்கு அது ஒண்ணும் அவ்வளவு பெரிய விஷயம் இல்லை மாயா. இன்னும் சொல்லப்போனால் அது ஒரு விபத்து தான். ஏன் என்னையே எடுத்துக்கோ சித்தார்த்தோட அப்பாவை நான் கல்யாணம் பண்ணிக்க முன்னாடி ஏற்கனவே நானும் கல்யாணம் பண்ணேன் தான்”

“என்ன?” மாயா அதிர்ச்சியாக சாவித்திரியைப் பார்க்க,

அவளைப் பார்த்து ஆமோதிப்பாக தலையசைத்தவர், “ஆமா மாயா, எங்க ஊரில் ஒரு நாற்பத்தைந்து வருஷத்துக்கு முன்னாடி செங்கல் சாமி வைத்து நாகலிங்கப்பூ மாலை மாற்றி நானும், ஒரு பையனும் கல்யாணம் பண்ணிக்கிட்டோம், தெரியுமா?” என்று கூற, மாயாவோ அவரைப் பார்த்து சட்டென்று சிரித்து வைத்தாள்.

“போங்க ஆன்ட்டி, நான் கூட நீங்க சீரியஸாக சொல்லுறீங்கன்னு நினைச்சேன், ஆனா நீங்க பொம்மைக் கல்யாணத்தைப் பற்றி சொல்லுறீங்க. உங்களுக்கு நடந்ததும், எனக்கு நடந்ததும் எப்படி ஆன்ட்டி ஒண்ணு ஆகும்?”

“ஆமா ஒண்ணு தான். அப்போ அந்த வயதில் கல்யாணம்ன்னா என்ன? அதோட கடமைகள் என்ன? அதோட விளைவுகள் என்னன்னு எதுவுமே தெரியாமல் நாங்க விளையாட்டாக கல்யாணம் பண்ணிக்கிட்ட மாதிரி தான் உனக்கும் கல்யாணம்ன்னா என்ன, அதோட விளைவுகள் என்னன்னு எதுவுமே தெரியாமல் கல்யாணம் பண்ணி வைச்சாங்க. அப்போ இரண்டும் ஒண்ணு தானே?” சாவித்திரியின் கேள்வியில் மாயாவின் முகம் சற்றுத் தெளிவானது போல இருக்க,

அவளது கைகளை எடுத்து தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டவர், “நான் உன்னை எப்போதும் கட்டாயப்படுத்த மாட்டேன் மாயா, அதற்காக உன்னோட ஆசைகளை அப்படியே விட்டு விடவும் மாட்டேன். நீ டைம் எடுத்து நல்லா யோசி, சித்தார்த் என் பையனாக இருந்தாலும் எனக்கு உன் சந்தோஷமும் ரொம்ப ரொம்ப முக்கியம்” என்றவர் அவளை அவளுக்கென ஒதுக்கப்பட்ட அறையில் விட்டு விட்டுச் சென்று விட, அவர் சொன்ன விடயங்களை மீண்டும் மீண்டும் மீட்டிப் பார்த்துக் கொண்ட மாயா தான் முதன் முதலாக சித்தார்த்தை சந்தித்த அந்த தருணங்களை நினைத்துப் பார்த்தாள்.

இந்த ஐந்து வருடங்களில் அவள் அந்தத் தருணங்களை மீட்டிப் பார்க்காத நாட்களே இல்லை, ஒரு நாளைக்கு ஒரு தடவையேனும் அதைப்பற்றி நினைத்துப் பார்த்து விடுவாள்.

ஆனால் அவளது வாழ்க்கையில் நடந்த அந்த கசப்பான சம்பவங்களை அவள் ஒரு தடவை கூட நினைத்துப் பார்த்ததில்லை, ஏன் நினைத்துப் பார்க்கக் கூட எண்ணியதில்லை.

அப்படி என்றால் அவள் மனது விரும்புவது எப்போதுமே சித்தார்த்தை மட்டும் தான்.

இத்தனை நாட்களாக அவள் மனதிற்குள் சூழ்ந்து அவளை ஒரு தீர்மானமான முடிவை எடுக்க விடாமல் தடுத்து வைத்திருந்த குழப்பங்கள் எல்லாம் ஒரே நொடியில் காணாமல் போனது போல இருக்க, இப்போதே சித்தார்த்தை சென்று பார்க்க வேண்டும் என்கிற ஆவல் அவளுக்குள் மெல்ல மெல்ல தலைதூக்க ஆரம்பித்தது.

இந்த நேரத்தில் அவனை எங்கே சென்று பார்ப்பது என்று தெரியாமல் அவனை ஃபோனில் அழைக்கலாம் என்று எண்ணித் தன் ஃபோனை எடுத்துப் பார்த்தவள் அதில் வந்திருந்த செய்தியைப் பார்த்து அதிர்ச்சியில் சிலையென உறைந்து போய் நின்றிருந்தாள்…..

error: Content is protected !!