காதல்போர் 14

eiVVT7962550-a1de99bc

காதல்போர் 14

வேதா, நரேந்திரனிற்கும் வைஷாலிக்கும் பிறந்த பெண்ணில்லை என்ற ரகசியத்தை சுனிலிடம் சொன்ன சுஜீப், அவளை கொல்லச் சொல்லி சொல்ல, ராவணோ தானே வேதாவை கொல்வதாக முன்வந்து சொன்னான்.

இங்கு வேதாவை கொல்ல திட்டம் தீட்டப்படுகின்ற அதேசமயம், தனதறையிலிருந்த வேதாவின் நினைவுகளோ தன் சிறுவயதில் நிகழ்ந்த சம்பவங்களைதான் நினைத்துப் பார்த்துக்கொண்டிருந்தது.

உங்களுக்கொன்னு தெரியுமா தீ, இந்த சடங்கை எல்லா பொண்ணுங்களுக்கும் பண்ணியிருக்காங்க. ஆனா, பதினைஞ்சு வருஷத்துக்கு முன்னாடி ஒரே ஒரு சின்னப்பொண்ணு மட்டும் இந்த சடங்கை பண்றதுக்கான ஏற்பாடு பண்ணப்போ ஊரை விட்டே ஓடிப்போயிருச்சு” என்ற மாஹியின் வார்த்தைகள் அவள் காதில் ஒலிக்க, அவளிதழ்களோ விரக்திப்புன்னகை சிந்தின.

“அந்த பொண்ணே நான்தானே! மயூரி” என்று வேதா வாய்விட்டே சொல்லிக்கொண்டாள்.

இந்த கிராமத்துக்கு பக்கத்து கிராமம்தான் வேதாவின் பிறந்த ஊர். அப்பா, அம்மா இல்லாதவள், தான் வேலை பார்க்கும் வீட்டிலிருந்தவர்களின் கவனிப்பில்தான் வளர்ந்தாள்.

ஆனால், அவள் வளர்ந்த ஊரில் இதே சடங்கை அவளுக்கு செய்வதற்காக அத்தனை ஏற்பாட்டுக்களையும் செய்த சமயம், அந்த சிறுவயதிலும் காதில் கேள்விப்பட்ட விடயத்தில் பயந்துப்போய் ஊரிலிருந்து தப்பித்து பொருட்களை ஏற்றிச்செல்லும் சென்னை செல்வதற்கான லோரியில்  ஏறிக்கொண்டாள் அவள்.

அப்போது போகும் வழியிலே வேதாவை கண்டுகொண்ட சில கெட்டவர்கள், அவளை சில காமுகர்களுக்கு விலைக்கு விற்கவென கடத்திச் செல்ல, அவர்களிடமிருந்து தப்பிக்க படாத பாடுபட்டுத்தான் போனாள் அந்த ஒன்பது வயது சிறுமி.

இயற்கையிலேயே வேதாவுக்கு இருந்த துணிச்சலும், புத்திசாலித்தனமுமே அவர்களிடமிருந்து வேதாவை தப்பிக்க உதவ, அங்கிருந்து தப்பித்தவள், பயத்தில் ஓடி வந்து மோதியது என்னவோ ஒரு காரின் மீதுதான்.

மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்டு தலையில் பலமான அடி விழுந்துவிட, தன் மனைவியுடன் ஆட்டோவில் காத்திருந்த நரேந்திரனுக்கு தூக்கி வாரிப்போட்டது. அவரும் அதற்கு ஒருநாள் முன்புதான் வைஷாலியின் அப்பா இறந்த செய்தியை கேள்விப்பட்டு, அவளின் சொந்த ஊருக்குச் சென்று வந்திருந்தார்.

ரயிலிலிருந்து இறங்கி ஆட்டோவில் சென்றுக்கொண்டிருந்த சமயம்தான் அவர்களிருவரும் வேதாவை பார்த்தது. அடுத்தநொடி கொஞ்சமும் தாமதிக்காது மருத்துவமனையில் அவளை சேர்த்துவிட்டவர்கள், அவள் குணமாகும் வரை உடனிருந்து கவனித்துக்கொண்டனர்.

அதுவும், எட்டு வருடங்களாக குழந்தை இல்லாத வைஷாலிக்கு ஏனோ வேதாவை பார்த்ததுமே ஒருவித ஏக்கம்! தானே வளர்ப்பதற்காக அவர் மனம் ஏங்க, அதற்கு ஒத்துழைப்பது போல் நடந்த விபத்தால் இதற்கு முன் நடந்த அத்தனையையும் வேதா மறந்ததாக வைத்தியர் சொன்ன விடயம் அமைந்துப் போனது.

அவளுக்கும் அந்த ஊருக்குமான தொடர்பே, அவள் சரளமாக ஹிந்தி மொழி பேசுவதற்கான காரணம். அதுமட்டுமன்றி, அன்று முதல்தடவை ஊருக்குள் நுழையும் போது அவளுடைய மனம் ஏதோ பழக்கப்பட்ட உணர்வை கொடுத்ததற்கான காரணமும் அதுவே.

எதுவும் நினைவில் இல்லாது வேதாவாக வாழ்ந்தவளுக்கு அத்தனையும் நியாபகம் வந்நது என்னவோ ஜூஹிக்கான சடங்கை பார்த்த நொடிதான். அதைப் பார்த்ததுமே அவளுக்கு பின்னந்தலையில் வலியெடுத்து இழந்த நினைவுகள் மீண்டும் வர, அன்றிலிருந்து அவள் மனம் உலைக்களமாக கொதித்துக் கொண்டிருக்கிறது.

நடந்த அனைத்தையும் நினைத்துப் பார்த்தவளுக்கு இப்போது கையிலிருக்கும் ஒரே ஆதாரம் மாஹியின் வாக்குமூலம் மட்டும்தான்.

அடுத்தநாள்,

காலையில் வேதா எழும் போதே மணி பத்தை தொட்டிருந்தது. குளித்து முடித்து உடை மாற்றி இவள் வெளியே வர, ஹோலில் ஒரே பரபரப்பு!

‘இன்னைக்கு அப்படி என்ன விசேஷம்? ஆனா ஊன்னா எங்கேயாச்சும் பூஜைன்னு மூட்டை முடிச்ச கட்டிட்டு போக வேண்டியது!’ மனதிற்குள் புலம்பியவாறு ஹோலுக்கு வேதா வர, அங்கு நின்றிருந்த சீதாவோ, “அம்மணிக்கு இப்போதான் விடிஞ்சதோ? வைஷாலி உன்னை நல்லா இலட்சணமா வளர்த்திருக்கா. போ, போய் சீக்கிரம் தயாராகு. பக்கத்து ஊருல ஒரு விசேஷம். இங்க வர்றதுக்கு இரண்டு நாளாச்சும் ஆகும்” என்று படபடவென பேசிக்கொண்டே போனார்.

இருபக்கமும் சலிப்பாக தலையாட்டியவள், “அத்தை, நான்…” என்று தான் வரவில்லை என்பதை சொல்ல வர, அதற்குள் அவளை இடைவெட்டி, “அதெல்லாம் ஒன்னும் வேணாம். நம்ம குடும்பத்தை சேர்ந்தவங்க மட்டும்தான் அந்த விசேஷத்துக்கு போறோம். வெளியாளுங்க கிடையாது” நறுக்கென்று சுஜீப் சொல்ல, அதையெல்லாம் அவள் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்பது அவளின் சாதாரண முகபாவனையிலே அப்பட்டமாகத் தெரிந்தது.

“சேம் ஹியர், நானும் அதேதான் சொல்ல வந்தேன். எனக்கும் வர்றதுக்கு இஷ்டம் இல்லை. நாளைக்கே நான் ஊருக்கு கிளம்புறேன். இப்போ நீங்க கிளம்புங்க”  வேதா சொல்ல, அதிர்ந்த பத்மாவதி, “என்ன சொல்ற நீ? ஏன்ம்மா, அவசரமா போயாகணுமா? நாங்க வந்ததும் போகலாமே! இல்லைன்னா நான் உன் கூட இருக்கவா?” என்று அக்கறையாகவே கேட்டார்.

அதற்கும் வேதா பதில் சொல்வதற்குள் குறுக்கிட்டு, “குடும்பத்துலயிருக்க மொத்தப் பேருமே போயாகணும்னு முன்னாடியே சொன்னேன். பேசி நேரத்தை வீணாக்காம வந்து வண்டியில ஏறுங்க” என்று சொன்ன சுஜீப் விறுவிறுவென வீட்டிலிருந்து வெளியேறியிருக்க, “மறுபடியும் உன்னை எப்போ பார்ப்பேன்னு தெரியல வேதஷ்வினி. ஆனா, நான் பார்த்த இந்த காலத்து ஜான்சி ராணி மாதிரி இருக்க நீ” என்று குறும்புச் சிரிப்போடு சொன்னவாறு அவளை அணைத்து விடுவித்தார் அந்த பெரியவர்.

“உங்களை ரொம் மிஸ் பண்ண போறேன் தீ” என்று அம்ரிதாவும் அவளை அணைத்து விடுவித்துவிட்டு அங்கிருந்து நகர, ‘நாளைக்கு நீ ஊருக்கு போறதுக்கு மொதல்ல உயிரோட இருக்கணுமே’ என்று மனதில் விஷமமாக நினைத்தவாறு கார் ஜன்னல் கதவை சுஜீப் மூட, போகும் அவர்களை வாசலில் நின்றவாறு பார்த்திருந்தாள் வேதா.

அன்று முழுவதும் தனதறையிலேயே இருந்தவள், நாளை ஊருக்கு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்தாள். கூடவே, தன் தோழனுடனான நினைவுகளை நினைத்து அப்போ அப்போ கண்ணீர் வடிக்கவும் செய்தாள்.

அப்படியே இரவாகிவிட, அறைக்கதவு தட்டப்படும் சத்தத்தில் கதவை திறந்தவள், வாசலில் நின்றிருந்த வேலைக்காரப் பெண்ணை கேள்வியாக நோக்க, “அம்மா, சாப்பாடு செஞ்சி வைச்சிட்டேன். நீங்க சாப்பிட்டீங்கன்னா சமையலறைய சுத்தம் பண்ணிட்டு நான் வீட்டுக்கு கிளம்பிடுவேன்” என்று சொன்னார் அந்த பெண்மணி.

“அதெல்லாம் வேணாம், நானே  பார்த்துக்குறேன். நீங்க கிளம்புங்க” என்று வேதா சொன்னதும், அந்த பெண்மணியும் சாப்பாட்டை மட்டும் உணவுமேசையில் வைத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்திருக்க, இப்போது வீட்டில் வேதா மட்டுமே.

ஹோலுக்கு வந்து சோஃபாவில் அமர்ந்தவளுக்கு அந்த தனிமையோ வேப்பங்காயாய் கசந்தது. கசப்பான சம்பவங்களும் விக்ரமின் நினைவுகளும் மீண்டும் மீண்டும் அவள் சிந்தனையை ஆக்கிரமிக்க, அவளால் நிலைக்கொள்ளவே முடியவில்லை.

ஒரு பெருமூச்சுவிட்டவாறு உணவு மேசையில் அமர்ந்தவளுக்கு உணவு உண்ணும் மனநிலை சுத்தமாக இல்லை. சாப்பாட்டை மூடி வைத்தவள், மீண்டும் சோஃபாவில் வந்தமர்ந்து தலையை பின்னால் சாய்த்து கண்களை மூடி அப்படியே சாய்ந்திருந்தாள்.

எவ்வளவு நேரம் அப்படி இருந்திருப்பாளோ? மணியும் பதினொன்றை தொட்டு விட, ஏதோ ஒரு சலசலப்பு!

பட்டென்று கண்களை திறந்தவளுக்கு மனம் எதையோ எச்சரிக்கை செய்வது போல் இருந்தது. இதில் வீட்டு வளாகத்தை சுற்றி காலடி சத்தம் வேறு!

அதில் திடுக்கிட்டவள், வேகமாகச் சென்று ஜன்னல் கதவை மெதுவாகத் திறந்து வெளியே நோட்டமிட, அங்கோ  வாசலில் சில ஆட்கள் நின்றிருப்பதை பார்த்தவளுக்கு தூக்கி வாரிப்போட்டது.

‘யார் இவங்க? என்ன நடக்குது இங்க? ஏதோ தப்பா தோனுதே’ என்று நினைத்தவாறு ஜன்னல்கதவை இவள் சாத்தவும், கதவை யாரோ பெரிய சத்தத்துடன் தட்டவும் சரியாக இருந்தது. அதில் திடுக்கிட்டவளுக்கு பயத்தில் முத்து முத்தான வியர்வைத்துளிகள் நெற்றியில் பூக்க, எச்சிலை கூட்டி விழுங்கிக்கொண்டாள் அவள்.

கதவும் விடாது வேகமாக தட்டப்பட, ஒவ்வொரு தட்டலுக்கும் அவளுடைய இதயம் பயத்தில் எம்பி எம்பி குதித்தது. கதவை பார்த்தவாறே அவள் பின்னோக்கி இரண்டடி நகர, சரியாக பின்னால் மாடிப்படிகளில் கேட்ட காலடி சத்தத்தில் அவளுக்கு சப்த நாடியும் அடங்கி விட்டது எனலாம்.

சட்டென அவள் திரும்பி பார்க்க, மாடிப்படிகளில் கையில் கத்தியுடன் நின்றிருந்தனர் சில அடியாற்கள். “யார்… யார் நீங்க? நீங்க எப்படி உள்ள?” வார்த்தைகள் தந்தியடிக்க, அவர்களை மிரட்சியாக பார்த்தவாறு வேதா நிற்க, சரியாக வாசல் கதவை தட்டிக்கொண்டிருந்த அடியாற்களும் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே வந்துவிட்டனர்.

என்னதான் துணிச்சலாக எதையும்  எதிர்கொள்பவளாக இருந்தாலும், இப்படி ஒரு சந்தர்ப்பத்தில் பெண்களிடத்தில் இயற்கையாக தோன்றும் பயம் அவளுக்கு வரத்தான் செய்தது. ஆனாலும் முயன்று தைரியத்தை வரவழைத்து, “யாருடா நீங்கெல்லாம்? அந்த ராவணோட ஆளுங்கதானேடா நீங்க? மரியாதையா வெளியில போயிருங்க. இல்லைன்னா…” என்று வேதா ஒற்றை விரலை நீட்டி மிரட்ட, “இல்லைன்னா, உன்னால என்ன பண்ணிர முடியும் மிர்ச்சி?” என்ற கணீர் குரல் அந்த வீட்டையே அதிர வைத்தது.

அந்த அடியாற்களோ வாசலை நோக்க, வெளியிலிருந்து சிகரெட் புகையை ஊதியவாறு உள்ளே வந்தான் ராவண். அவனைப் பார்த்தவளுக்கு விக்ரமின் முகம்தான் நியாபகத்திற்கு வர, தன்னை மீறி கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் அவனை நெருங்கி அவன் சட்டையை கொத்தாக பிடித்துவிட்டாள் வேதா.

“உன்னை நான் சும்மா விடமாட்டேன். என் விக்கி ரொம்ப பாவம்டா. அவன கொல்ல எப்படிடா உனக்கு மனசு வந்திச்சு? இதுக்கெல்லாம் நீங்க அனுபவிச்சே தீருவீங்க” சட்டைக்கோலரைப் பற்றி அவள் காட்டுக்காத்து கத்த, அவள் கைகளை உதறிவிட்ட ராவண், வேதாவின் கன்னத்திலே ஓங்கியறைந்திருந்தான்.

அவன் அறைந்த அறையில் அவளுக்கோ இதழோரத்தில் இரத்தமே கசிந்துவிட்டது. கன்னத்தை ஒருகையால் பொத்திக்கொண்டு அவள் அவனை அதிர்ந்து நோக்க, சட்டை கையை மடித்துவிட்டவாறு ஆஜானுபாகுவான தோற்றத்தில் அவளெதிரே நின்றிருந்தான் அவன்.

“அதெப்படி மிர்ச்சி, ஊர் ரகசியத்தை தெரிஞ்சிக்கிட்டு ஊரை விட்டு நீ உயிரோட போகலாம். அது தப்பாச்சே!” ராவண் கேலியாக சொல்லிச் சிரிக்க, அவனெதிரே மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க எழுந்து நின்றவள், “நீ தப்பு பண்ற ராவண்” என்றாள் அழுத்தமாக.

“ஆஹான்!” அவனுடைய பார்வை நக்கலாக அவள் மேல் பதிய, “பையா, இந்த பொண்ணு உங்களை மொதல்ல எதிர்த்து நின்னப்போவே உயிரோட விட்டிருக்க கூடாது. இப்போ சொல்லுங்க” என்று சொன்ன ஒரு அடியாள், தன் தலைவனின் கட்டளைக்காக காத்திருக்க, அவனோ வேதாவை பார்த்தவாறே தலையசைத்தான்.

அதைப் பார்த்ததுமே ஆடிப்போய்விட்டாள் அவள்.

“ரா…ராவண் நான் சொல்றதை கொஞ்சம் கேளு! நீ மறுபடியும் மறுபடியும் தப்பு பண்ற. வே…வேணாம் ப்ளீஸ்” வேதாவின் வார்த்தைகள் தந்தியடிக்க, ராவணின் அடியாள் ஒருவனோ கத்தியோடு அவளை நெருங்கிக்கொண்டிருந்தான்.

ராவணின் முகத்திலோ பாறை போல் அத்தனை இறுக்கம்!

தன்னை நெருங்கி வருபவனை அதிர்ந்துப் பார்த்துக்கொண்டிருந்தவள், அவன் கத்தியை ஓங்கியதும் கண்களை இறுக மூடி முகத்தை திருப்பிக்கொள்ள, “ஆஆ…” என்றொரு அலறல் சத்தம்.

கண்களை பட்டென்று திறந்து வேதா சத்தம் வந்த திசையை நோக்க, அங்கு ஒரு அடியாளின் நெஞ்சில் மிதித்தவாறு அவன் கையை வளைத்துப் பிடித்திருந்தான் ராவண். 

நெற்றி நரம்புகள் புடைத்து, பற்களை கடித்த வண்ணம் ராவண் நின்றிருந்த தோற்றத்தை வேதா திகைத்து நோக்க, அவனுடைய அடியாற்களுக்கோ நடப்பது எதுவும் புரியவில்லை.

“பையா…” அடியாளோருவன் அதிர்ந்த குரலில் அழைக்க, “என்னை மன்னிச்சிருங்க” என்றுவிட்டு அங்கிருந்த மொத்தப் பேரையும் பந்தாட ஆரம்பித்துவிட்டான் அவன். அங்கிருந்த மொத்த அடியாற்களையும் அவன் வெளுக்க, அவர்களால் எதிர்வினை கூட காட்ட முடியவில்லை.

ஏற்கனவே ராவண் தங்களை அடிப்பதில் அதிர்ச்சியில் இருந்தவர்களுக்கு அந்த அதிர்விலிருந்து மீளக் கூட அவன் அவகாசம் கொடுக்கவில்லையே! அப்படியே அவர்கள் சுதாகரித்து பதிலடி அடிக்க தயாரானாலும், ராவணிடம் அவர்கள் மோதுவது என்னவோ கேள்விக்குறிதான்.

அடியாற்களை அடித்தவாறு வேதாவை கவனித்த ராவணுக்கோ கோபம் தாறுமாறாக எகிறியது. “மிர்ச்சி, நான் என்ன வித்தையா காட்டிக்கிட்டு இருக்கேன். கண்ணை உருட்டி பெக்க பெக்கன்னு என்னையே பார்த்துக்கிட்டு இருக்க. போ! போய் உன் பொட்டி படுக்கைய கட்டி தூக்கிட்டு வா” ராவண் கத்த, அப்போதும் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை அவள்.

“இவள…” அவன் பல்லைக் கடிக்க, வேதாவுக்கு அடுத்த அதிர்ச்சியாக வெளியிலிருந்து ஓடி வந்த வம்சி, “பையா, கார் ரெடியா இருக்கு. சுனிலய்யாவுக்கு விஷயம் போகுறதுக்குள்ள இப்போவே கிளம்பிரலாம்” என்று படபடவென சொல்ல, ராவணோ வேதாவைதான் முறைத்தான்.

ராவணுடைய முறைப்பை புரியாது பார்த்துவிட்டு வேதாவின் சாரசர் போல் விரிந்த விழிகளைப் பார்த்த வம்சிக்கு கூட ‘இருக்கும் பதட்டத்தில் இவள் வேறு!’ என்றுதான் இருந்தது.

அவள் தோள்களைப் பற்றி குலுக்கிய வம்சி, “அரே வேதா, நின்னுக்கிட்டு கனவு காணாம கிளம்புற வழிய பாரு!” என்று கத்த, அப்போதுதான் நடப்புக்கு வந்து “ஆங்…” என்று மலங்க மலங்க விழித்தவள், ஏற்கனவே அடுக்கி வைத்திருந்த உடைப்பெட்டியை எடுக்க அறைக்கு ஓடினாள்.

அனைத்தும் சில நிமிடங்களில் நடந்து முடிந்திருக்க, அவளால் இன்னும் பார்த்த காட்சிகளை நம்பவே முடியவில்லை.

அவள் பெட்டியை எடுத்து வந்ததுமே வேதாவின் கையைப் பிடித்து தரதரவென காருக்கு இழுத்துச் சென்ற ராவண், “சீக்கிரம் ஏறு” என்றுவிட்டு கார் கதவை திறக்க, அப்போதுதான் ஏதோ நியாபகம் வந்தவளாய் சுற்றும் முற்றும் பார்த்தவாறு வந்துக்கொண்டிருந்த வம்சியை நோக்கி ஓடினாள்.

அவனோ தன்னை நோக்கி ஓடி வந்து “வம்சி…” என்று ஏதோ பேச வந்தவளை சலிப்பாகப் பார்த்து, “இப்போ என்ன, நீ என்னை ரிஜெக்ட் பண்ணதுக்கு சோரி கேக்க போற. அதானே? அதெல்லாம் உன்னை மன்னிச்சிட்டேன். உயிரோட ஊருக்கு போய் சேருர வழிய பாரு! உன்னை காப்பாத்தின பாவத்துக்கு நானும் உங்க கூடதான் வந்தாகணும். சீக்கிரம்” என்று பெருந்தன்னையாக சொல்ல,

‘ஙே’ என அவனை ஒரு பார்வைப் பார்த்த வேதா, “உன் மூஞ்சு! போய் டீபாயில இருக்குற என் ஃபோன எடுத்துட்டு வா! அதுலதான் எவிடென்ஸே இருக்கு” என்று தெனாவெட்டாகச் சொன்னாள்.

மூக்குடைப்பட்ட கோபத்தில் அவளை முறைத்தவன், அவளின் அலைப்பேசியை எடுக்க விறுவிறுவென வீட்டிற்குள் நுழைய, ‘மன்னிப்பு கேக்கலாம்னு வந்தா ரொம்ப ஓவராதான் பேசுறான். யாருகிட்ட?’ என்று இல்லாத கோலரை தூக்கி விட்டுக்கொண்டாள் வேதா.

கார் பின்சீட்டில் வம்சி அமர, ஓட்டுனர் இருக்கையில் காத்திருந்த ராவண் தன் பக்கத்தில் வந்தமர்ந்தவளை முறைத்துப் பார்த்து, “சின்னவயசுலயிருந்து நான் வெறுக்குற ஒரே பொண்ணு நீதான் மயூரி” என்று பற்களை கடித்துக்கொண்டுச் சொல்ல,

“மறந்திருப்பேன்னு நினைச்சேன் ஜோக்கர்” என்ற வேதாவின் கேலியான பதிலில், “மறக்கக் கூடிய ஆளா நீனு?” கடுப்பாக கேட்டவாறு சென்னை நோக்கி வண்டியை உயிர்ப்பித்தான் அவன்.

Leave a Reply

error: Content is protected !!