காதல்போர் 16

eiVDDA31797-06cbc0c9

காதல்போர் 16

“லக்கி, ஊருல என்னாச்சு? அதுவும் சுஜீப் கோல் பண்ணி வம்சிய பார்த்துக்க சொல்லி கெஞ்சுறாரு? அப்படி என்னதான் ஆச்சு?” நரேந்திரன் படபடவென கேட்க, வேதாவிடமோ பதிலேயில்லை. 

“என்ன பிரச்சினைன்னு சொன்னா தானே, என்னாலேயும் முடிஞ்ச உதவிய பண்ண முடியும்? என்னாச்சுன்னு சொல்லும்மா” தன் மகளுக்கு என்ன பிரச்சினை என்ற பதட்டத்தில் நடந்ததை தெரிந்துக்கொள்ள நரேந்திரன் கிட்டதட்ட கெஞ்ச, “அவ எப்படி சொல்லுவா? ஏதோ ஏழரைய இழுத்துட்டு வந்திருக்கா, அது மட்டும் புரியுது” கடுகடுவென வந்தன வைஷாலியின் வார்த்தைகள்.

நரேந்திரனோ மனைவியை முறைத்துவிட்டு வேதாவை ஆழ்ந்து நோக்க, அவளிடம் அப்போதும் அமைதிதான். ஒரு பெருமூச்சுவிட்டவர், ‘அவளாக வாய் திறந்து சொல்லும் வரை எதையும் தெரிந்துக்கொள்ள முடியாது’ என்பதை புரிந்து கொண்டார் போலும்!

“லக்கி, நீ உன் ரூமுக்கு போ!” அமைதியாக அவர் சொன்னதும், அங்கிருந்து நகர்ந்து மனஅமைதியை தேடி அவள் சென்று நின்றது என்னவோ வெள்ளை ரோஜாக்கள் நடப்பட்டிருந்த அந்த பூந்தோட்டத்திற்குதான்.

மனஆறுதலைத் தேடி அவள் நாடும் ஒரே இடம்! நரேந்திரன் தன் மகளுக்காக பார்த்துப் பார்த்து செதுக்கிய தோட்டம் அது!

அங்கிருந்த பூக்களை வெறித்தவாறு வேதா நின்றிருக்க, “விக்ரமை பத்தி ஏன் சொல்லல்ல? உண்மைய மறைக்கிறது தப்பில்லையா?” என்ற கணீர் குரலில் நிதானமாகவே தன் பின்னால் நின்றிருந்தவனை திரும்பிப் பார்த்தாள்.

அவளெதிரே ராவண் நின்றிருக்க, “ஓஹோ! உண்மைய சொல்லி உன்னை கொன்னு, இந்த வீட்டுலயே புதைக்க எனக்கு ஒரு நிமிஷம் ஆகாது. ஏன்னா, இது என்னோட இடம். ஆனா, நான் சொல்ல மாட்டேன். உன் ஊரைப் பத்தி வெளியுலகத்துக்கு தெரியப்படுத்தி அந்த கொடூரமான சடங்கை சட்டரீதியா தடை பண்ண வைச்சதுக்கு அப்றம் சொல்லிக்கிறேன். உன் ஊருக்கு தண்டனை வாங்கி கொடுக்குறதுதான் என் விக்கியோட சாவுக்கு நான் பண்ற பரிகாரம்” என்ற வேதாவின் வார்த்தைகள் அத்தனை ஆக்ரோஷத்தோடு வெளிவந்தன.

ஆனால், ராவணிடமிருந்து எந்த எதிர்வினையும் இல்லை. அவனுடைய உணர்ச்சிகள் துடைத்த முகத்திலிருந்தும் அவளால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

சிறிதுநேரம் அவளை ஆழ்ந்து நோக்கியவன், “ஓ…” என்றுமட்டும் சொல்லிவிட்டு அவன் பாட்டிற்கு முன்னேச் செல்ல, அவனுடைய அலட்சியப்பாவனையில் கடுப்பாகிவிட்டாள் வேதா.

“நீயெல்லாம் மனுஷனே இல்லைடா. மிருகம்! சேவேஜ்!” வேதா காட்டுக்கத்து கத்த, அதையெல்லாம் கண்டுக்கொள்ளாது முன்னே சென்றவன், பின் சட்டென நின்று திரும்பிப் பார்க்காமலேயே “லுக், எனக்கு ரொம்ப நாள் எல்லாம் இங்க இருக்க முடியாது. நான் போயாகணும். சீக்கிரம் உன் வேலைய முடிக்குற வழியப் பாரு!” என்றுவிட்டுச் செல்ல,

“உன்னை இருக்க சொல்லி யாரும் உன்கிட்ட கெஞ்சல்ல. தொலைச்சிப் போ! மனசாட்சியே இல்லாதவன்! ச்சீ… போய்த் தொலைடா!” என்ற அவனை நோக்கிய வேதாவின் கத்தல்கள் எல்லாம் காற்றில் கரைந்த கற்பூரம்தான். ஆனால், அவன் அறிவான், தற்போதைய நிலையில் அவளுடன் தான் இருப்பதன் முக்கியத்துவத்தை.

ஏனோ, அவளுக்கு இருக்கும் ஆபத்தை அறிந்திருந்தவனுக்கு அவளை விட்டு விலகத்தோன்றவில்லை. ஏற்கனவே அவன் மனதில் பல குழப்பங்கள்! இதில் அவள் மேல் அவனுக்கு இருக்கும் உணர்வில் மேலும் மேலும் குழம்பித்தான் போனான். ஆனால், மன உணர்வுகளை முகத்தில் காட்டினால் அவன் ராவண் அல்லவே!

அடுத்தநாள்,

“என் அக்கா வந்திருக்காடி. அவளைப் பார்க்குறதுக்காக இப்போதான் நானே வீட்டுக்கு வந்திருக்கேன். என்னால இப்போ வெளில வர முடியாது” என்று தன் தோழியுடன் பேசியவாறு வீட்டுக்குள் நுழைந்த தீப்தி, வேதாவின் அறையை நெருங்கியதும் அழைப்பைத் துண்டித்துவிட்டு, “வேத்…” என்ற கத்தலுடன் கதவை பட்டென்று திறக்க, அவளின் கருவிழிமணிகள் அங்கு பார்த்த காட்சியில் சாரசர் போல் விரிந்துக்கொண்டன.

அவளெதிரே அப்போதுதான் குளித்து முடித்து வந்த வம்சி, உடை மாற்ற எண்ணி இடுப்பிலிருந்த டவலை உருவப்போக, அதேநேரம்தான் இவளும் சரியாக கதவைத் திறந்தது.

அவன் செய்யும் காரியத்தில் அதிர்ந்து “ஆஆ…” என்று தீப்தி கத்திவிட, அவள் சத்தத்தில் வாசலை நோக்கியவனும் அவளைப் பார்த்து பயந்து, “ஆஆ…” என்று கத்தியவாறு கழிவறைக்குள் ஓடிவிட, இங்கு கதவை அறைந்து சாத்தியவளுக்கு ஒரே சங்கடமாக போய்விட்டது.

‘ச்சே! மானமே போச்சு’ தன்னைத் தானே கடிந்துக்கொண்டவள், வாசலில் கைகளை பிசைந்துக்கொண்டு ஒருவித சங்கடத்துடன் நின்றிருக்க, சரியாக “தீப்…” என்ற குரலில் அத்திசையை நோக்கிய தீப்திக்கு அங்கு நின்றிருந்த வேதாவைப் பார்த்ததுமே இதற்கு முன் நடந்த அனைத்தும் மறந்து போய்விட்டது.

“வேத்…” என்று உற்சாகமாக கத்தியவாறு வேதாவை நோக்கி ஓடியவள், அவளை தாவி அணைத்து செல்லம் கொஞ்ச, “இப்போதான் வந்தியா?” சற்றும் ஆர்ப்பாட்டமில்லாமல் சாதாரணமாகவே வந்தது வேதாவின் கேள்வி. அவளைப் பற்றி தீப்தி அறியாததா? மனதிலுள்ள பாசத்தை அவள் வெளிப்படையாக காட்டினால்தான் ஆச்சரியமே!

“ஆமா வேத்…” என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே கதவை திறந்துக்கொண்டு வம்சி விறுவிறுவென தீப்தியை நோக்கி வர,  அவனைப் பார்த்தவளுக்கு தூக்கி வாரிப்போட்டது.

“வேத், இது அவன் தானே! இவன் உன் ரூம்ல என்ன பண்றான்? நீ இருப்பேன்னு நினைச்சிக்கிட்டு… ரூம்ம நான் திறந்து…” தீப்தி திக்கித்திணறி வேதாவின் காதில் கிசுகிசுப்பாக சொல்லிக்கொண்டிருக்கும் போதே அங்கு வந்த வைஷாலி, “வம்சி, இதுதான் என் பொண்ணு தீப்தி, உன் முறைப்பொண்ணு. டாக்டருக்கு படிக்குறா” என்று வாய் முழுக்க புன்னகையோடு அறிமுகப்படுத்தி வைக்க, “ஹாய்” என்று மட்டும் சொன்னவள், அவனை நிமிர்ந்தும் பார்க்கவில்லை.

தலைகுனிந்து திருதிருவென முழித்துக்கொண்டு அவள் நிற்க, அதைப் பார்த்தவனுக்கு ஏனோ சிரிப்புதான் வந்தது. கூடவே, ஒரு ரசனையும்.

வைஷாலி சொல்லி முடிக்க, “ஒரு சின்ன திருத்தம். எங்க இரண்டாவது பொண்ணு” அங்கு வந்த நரேந்திரன் தன் மனைவியை முறைத்தபடி அழுத்திச்சொல்ல, “க்கும்! இன்னும் ஒன்னும் சொல்லல்லையேன்னு பார்த்தேன்” என்று நொடிந்துக்கொண்டவாறு அங்கிருந்து நகர்ந்தார் வைஷாலி.

“அவளுக்கு ஏன்த்தான் உன்னை பிடிக்காம போச்சோ! அதை விட்டுத் தள்ளும்மா, எப்போவும் என் மூத்த பொண்ணு நீதான், என்னோட லக்கி” நரேந்திரன் வேதாவின் தலையை தடவியபடி சொல்ல, “எனக்கு தெரியும்ப்பா, அம்மா இப்படி நடந்துக்குறது என்ன புதுசா? அவங்களே மறுத்தாலும் நான் அவங்க பொண்ணுதான்” என்று அவர் தோளில் சாய்ந்தபடி சொன்னாள் வேதா.

அவரும் அங்கிருந்து நகர்ந்துவிட, “நமஸ்தே” வம்சி அடக்கப்பட்ட புன்னகையுடன், உண்டான சங்கடத்தில் அங்குமிங்கும் அலைப்பாய்ந்துக்கொண்டிருந்த தீப்தியின் விழிகளை குறும்பாக பார்த்தவாறுச் சொல்ல, “ஹிஹிஹி… வணக்கம்” ஓரக்கண்ணால் அவனை பார்த்தவாறு அசடுவழிந்தாள் அவள்.

சரியாக, “ஹ்ர்ம் ஹ்ர்ம்…” என்ற செறுமலில் மூவரின் பார்வையும் செறுமல் வந்த திசையை நோக்க, தீப்தியின் விழிகள் மட்டும் அங்கு நின்றிருந்தவனின் கட்டுக்கோப்பான படிக்கட்டு தேகத்தைப் பார்த்து சாரசர் போல் விரிய, “வாவ்…!” என்று அவளிதழ்கள் ஆச்சரியமாக முணுமுணுத்தன.

அங்கு உடலை இறுக்கிப்பிடித்த குர்தாவில் நெற்றியில் வழக்கமாக வைக்கும் திலகத்துடன்  கழுகுப்பார்வை கொண்டு தீப்தியை கேள்வியாக நோக்கியவாறு ராவண் நின்றிருக்க, அவனை மேலிருந்து கீழ் வாயைப்பிளந்துக்கொண்டு பார்த்து, “யார் வேத் இது? இவ்வளவு ஹேன்ட்ஸமா இருக்கா?” என்று தீப்தி கேட்க, ‘ஙே’ என தன் தங்கையை ஒரு மார்கமாக பார்த்து வைத்தாள் வேதா.

ஆனால், தீப்தியின் ராவணை நோக்கிய ரசனைப்பார்வையில் கடுப்பானது என்னவோ வம்சிதான்.

ராவணோ அவர்களுக்கு அருகில் வர, “வாவ்! நீங்க பார்க்க அப்படியே ஹீரோ மாதிரி இருக்கீங்க? இஃப் யூ டோன்ட் மைன்ட், நான் உங்க நேம் அ தெரிஞ்சிக்கலாமா?” கைகளை நீட்டிக் கேட்ட தீப்தி, புருவத்தை நெறித்து ராவண் புரியாது பார்க்கவும்தான் உணர்ந்து, “சோரி சோரி, மேரா நாம் தீப்தி(என்னோட பெயர் தீப்தி)” என்று தன்னை ஹிந்தியில் அறிமுகப்படுத்தி அவனைப் பற்றி கேட்டாள்.

அவனும், “ராவண்” என்று சிறுசிரிப்புடன் சொல்ல,  தீப்தியோ அப்பட்டமாக அவனை விழுங்குவது போல் பார்த்துக்கொண்டிருந்தாள். ஆனால், இந்தக் காட்சியை பார்க்கப் பார்க்க வம்சியோடு சேர்த்து இன்னொருவருக்கும் காதில் புகை வராத குறைதான். அது வேறு யாரும் அல்ல, வேதாவேதான்.

ஏனோ அவளால் தீப்தியின் ராவணை நோக்கிய ரசனைப் பார்வையை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. ராவண் முன் சொடக்கிட்டவள், “கீழ வெயிட் பண்ணு, முக்கியமான வேலையா வெளியில போகணும்” என்று இறுகிய குரலில் சொல்லிவிட்டு அவனை முறைத்தவாறு தனதறைக்குச் செல்ல, ராவணுக்கு ஒன்றுமே புரியவில்லை.

அவன் பாட்டிற்கு தோளை குலுக்கிவிட்டு ஹோலில் அவளுக்காக காத்திருக்க, இங்கு மார்புக்கு குறுக்கே கைகளை கட்டியவாறு தீப்தியைதான் முறைத்துக்கொண்டு நின்றிருந்தான் வம்சி. ராவண் சென்றதும், “இப்படி ஒரு பையன் என் வீட்டுல இருக்கான்னு தெரிஞ்சாலே என் ஃப்ரென்ட்ஸ் வயிறெரிஞ்சு செத்துருவாங்க” என்று சொல்லிச் சிரித்த தீப்தி, கோபமாக முகத்தை திருப்பிக்கொண்டு சென்ற வம்சியை புரியாது ஒரு பார்வை பார்த்து வைத்தாள்.

அடுத்த சில நிமிடங்கள் கழித்து, சென்னையில் பிரசித்துப் பெற்ற அந்த பத்திரிகை நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ராமனின் முன் ஒரு ஆர்வத்தோடு வேதா அமர்ந்திருக்க, அந்த அறைக்கு வெளியில் பல பெண்களின் பார்வை தன் மீது மொய்ப்பதை கண்டும் காணாதது போல் நின்றிருந்தான் ராவண்.

“எப்படி இருக்க வேதா? ஊருக்கு எப்போ வந்த? நீ வந்ததும் நல்லதா போச்சு, இப்போதைக்கு நிலைமை சரியான மாதிரிதான் இருக்கு. நீ பழையபடி வேலைய கன்ட்னியூ பண்ணலாம்” அவர் பேசிக்கொண்டே போக,

“தேங்க் யூ சார், நானும் அதே ஐடியாலதான் வந்தேன். அதுவும் ஒரு நியூஸ்ஸோட” வேதா சொன்னதும், அவரோ புருவத்தை நெறித்து கேள்வியாக நோக்கினார்.

அவளும் மாஹி பேசிய அந்த காணொளியை அவருக்கு போட்டுக்காட்ட, அதைப் பார்த்தவருக்கு மாஹி சொன்ன விடயங்களைக் கேட்டு விழிகள் அதிர்ச்சியில் விரிந்தன. வேதாவை அதே அதிர்ச்சியோடு நோக்கியவரின் வார்த்தைகள், “இப்படியெல்லாம் இங்க நடக்குதா என்ன?” என்று அத்தனை திகைப்போடு வந்தன.

“ஆமா மிஸ்டர்,ராமன், இதைப் பத்தி நாம வெளியிட்டே ஆகணும். இந்த மாதிரியான சடங்குகளை பாவம் பச்ச குழந்தைகளுக்கு போய் பண்ணிக்கிட்டு இருக்காங்க. இதைப்பத்தி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திட்டா போதும். இதுக்கு எதிரான மக்களோடு குரலால இந்த சடங்கை கவர்மென்ட் தடை செய்ய கூட வாய்ப்பிருக்கு” வேதா தன் திட்டத்தை ராமனிடம் விவரிக்க, யோசனையோடு நெற்றியை நீவி விட்டுக்கொண்டார் அவர்.

அவளோ அவரின் பதிலுக்காக ஆர்வமாக நோக்க, “நோ வேதா, ஏற்கனவே நீ பண்ண வேலையால உண்டான களவரமே இப்போதான் அடங்கியிருக்கு. இது ரொம்ப சென்ஸ்ஸிடிவான விஷயம். உன் பேச்சை கேட்டு மறுபடியும் வம்பை விலைக்கு வாங்க நான் தயாரா இல்லை” அவர் சொல்லி முடிக்க, பொங்கி எழுந்துவிட்டாள் அவள்.

“என்ன பேசுறீங்க நீங்க? எப்போவும் நீங்க சொல்வீங்கல்ல, நம்ம நோக்கமே மக்களுக்கு நல்லதை போய் சேர்க்குறதுதான்னு. அப்போ அதெல்லாம் வெறும் பேச்சு தானா?” வேதாவின் வார்த்தைகள் காட்டமாக வர, “லுக் வேதா, அந்த நோக்கம் எங்களுக்கு இருக்கு. ஆனா, அதை பண்றதுக்கு கம்பனி இருக்கணும். உன்னால கம்பனிக்கு எந்தளவுக்கு பிரச்சினை வந்திச்சுன்னு உனக்கே தெரியும்” என்ற ராமன், “சரி, இப்போதைக்கு இந்த விஷயத்தை கொஞ்சம் ஓரந்தள்ளி வை! பழையபடி வேலைக்கு வா, வெளியில நியூஸ் கலெக்ட் பண்ண நீ போக தேவையில்லை. எல்லாம் கொஞ்சநாளைக்குதான்” என்று சொல்ல, வேதாவுக்கோ வெறுத்துப் போய்விட்டது.

“தட்ஸ் ஓவர்” மேசையில் இரு கைகளையும் அடித்து எழுந்தவள், அதற்குமேல் அங்கு நிற்காது விறுவிறுவென வெளியில் சென்றுவிட, “வேதா…” என்ற அவரின் அழைப்புக்களை அவள் சற்றும் மதிக்கவில்லை.

அறையிலிருந்து வெளியில் வந்தவள், அங்கு ராவண் நின்றிருப்பதை கூட மறந்து அவள் பாட்டிற்கு நிறுவனத்திலிருந்து வெளியேறி கோபத்தில் கால் போன போக்கிற்கு நடக்க, செல்லும் அவளை புரியாமல் பார்த்தவன், பின் அவள் பின்னால் கிட்டதட்ட ஓடினான்.

“அரே மிர்ச்சி, நில்லு! ஊர் பெயர் தெரியாத ஊர்ல உன் பாட்டுக்கு விட்டுட்டு போற. எல்லாம் ஓகே தானே?   என்னாச்சுன்னு மொதல்ல சொல்லு” ஓடிச்சென்று அவளின் கையை பிடித்து நிறுத்தி ராவண் பேசிக்கொண்டே போக, அவன் கையை உதறிவிட்டவள், “உன் ஊரை சேர்ந்தவங்கதான் ரொம்ப மோசனமானவங்கன்னு நினைச்சேன். ஆனா, இவங்கெல்லாம் அதுக்கும் மேல, ச்சே!” வேதா சலித்துக்கொள்ள, அவனுக்கோ ஒன்றுமே புரியவில்லை.

“என்ன நடந்திச்சுன்னு தெரிஞ்சிக்கலாமா?” அவனுடைய கேள்வி அழுத்தமாக வர, நடந்த பேச்சு வார்த்தையை சொல்லி முடித்த வேதாவுக்கு, அடுத்து ராவண் சட்டை கையை மடித்துவிட்டவாறு உள்ளே செல்வதை பார்த்ததும் தூக்கி வாரிப்போட்டது.

வேகமாக அவனைப் பிடித்து நிறுத்து, “என்ன? இல்லை என்னன்னு கேக்குறேன். நீயும் போய் பிரச்சினை பண்ண போறியா? சோதீக்காதீங்கடா என்னை” வேதா கடுகடுவென பேச, அவளை சலிப்பாக ஒரு பார்வை பார்த்த ராவண், “நீ அடக்க ஒடுக்கமா இருந்திருந்தா ஏன் இதுக்கு முன்னாடி இவ்வளவு பிரச்சினை வந்திருக்க போகுது?” என்று அலட்சியமாக சொன்னவாறு காரை நோக்கிச் சென்றான்.

“யூ இடியட், ஹவ் டேர் யூ? நீ எப்படிடா என்னை அப்படி சொல்லலாம்? ஓஹோ! புரிஞ்சிப்போச்சு. பொண்ணுங்களை அடிமை மாதிரி நடத்தின உன் கண்ணுக்கு எல்லாம் என்னை பார்த்தா அடக்கமில்லாத பொண்ணு மாதிரிதான் தெரியும்” அவனுடைய பேச்சில் உண்டான கோபத்தில் வேதா கத்திக்கொண்டே அவன் பின்னால் சென்று ஓட்டுனர் இருக்கையில் அமர, அவனோ அப்போதும் அலட்சியமாக காதை சுட்டுவிரலால் குடைந்தவாறு அவளுக்கு பக்கத்தில் அமர்ந்துக்கொண்டான்.

கார் ஸ்டியரிங்கை இறுகப் பிடித்துக்கொண்டு அவனை எரிக்கும் பார்வை பார்த்தவாறு அமர்ந்திருந்தவள், அடுத்து ராவண் காருக்குள் வைத்து சிகரெட்டை பற்ற வைப்பதில் கொதித்தெழுந்துவிட்டாள்.

“அறிவில்லையா உனக்கு?” என்று கேட்டவாறு அதை பிடுங்கி ஜன்னல் வழியாக அவள் வெளியே வீசியிருக்க, இப்போது அவளை முறைப்பது அவனின் முறையாயிற்று.

வேதாவின் முழங்கையை பிடித்து இழுத்தவன், “என்னடி, விட்டா ரொம்ப ஓவராதான் போற? என்னை பத்தி நல்லாவே தெரியும் உனக்கு” பற்களை கடித்துக்கொண்டுச் சொல்ல, அவளும் அதற்கு சற்றும் குறையாத கோபத்தில், “என் முன்னாடி எனக்கு பிடிக்காததை பண்ணா இப்படிதான் பண்ணுவேன்” என்றாள் அழுத்தமாக.

இருவரின் மூச்சுக்காற்றும் ஒன்றோடு ஒன்று கலக்கும் அளவிற்கு இருவரும் ஒருவரையொருவர் முறைத்தவாறு இருக்க, ஏனோ ஒரு கட்டத்திற்கு மேல் ராவணால் அவள் கண்களை காண முடியவில்லை. முதல்முறை அவள் அருகாமையில் ஒரு ஆண்மகனாக தடுமாறினான் அவன்.

வேதாவுக்கும் அவன் பார்வையின் வித்தியாசம் புரிந்தது போலும்! இத்தனைநேரம் கோபமாக பார்த்துக்கொண்ட இருஜோடி விழிகள், இப்போது என்ன உணர்வென்றே பிரித்தறிய முடியாத ஒரு சுகமான உணர்வில் மிதந்தன.

அவனை ஆழ்ந்து பார்த்துவிட்டு இருவருக்குமான இடைவெளியை பார்த்தவள், பட்டென விலகி அமர்ந்துக்கொள்ள, அவளிதயமோ ஏனென்றே தெரியாது படபடவென அடித்துக்கொண்டது.

“இடியட்!” தன்னைத்தானே கடிந்தவாறு வண்டியை அவள் உயிர்ப்பிக்க, இதழோர மெல்லிய சிரிப்புடன் முகத்தை திருப்பிக்கொண்டான் ராவண்.

Leave a Reply

error: Content is protected !!