காதல்போர் 21

ei5FULY94102-208e8d3d

காதல்போர் 21

அன்றே விக்ரமும் வம்சியும் வேலையை கச்சிதமாக முடித்திருக்க, அடுத்தநாள்,

“லக்கி…” வீடே அதிரும் வண்ணம் நரேந்திரன் கத்திய கத்தலில் அடித்து பிடித்து வேதா அறையிலிருந்து ஹோலுக்கு ஓடி வர, அங்கு மார்புக்கு குறுக்கே கைகளை கட்டியவாறு கோபமாக நின்றிருந்தார் அவர்.

அவளோ நேற்று தான் செய்த காரியத்தை கூட மறந்து அவரை புரியாது நோக்க, “என்ன பண்ணி வச்சிருக்க லக்கி? காலையிலிருந்து கட்சிய சேர்ந்தவங்க கோலுக்கு மேல கோல் பண்ணி என்னன்னவோ கேக்குறான்” அவர் சொன்னதும்தான், அவளுக்கு நியாபகமே வந்தது.

திருதிருவென விழித்தவள், “அது அப்பா…” என்று ஏதோ சொல்ல வர, சரியாக “ஏய் ஜான்சிராணி, ஓவர் நைட்ல ஓபாமா ஆன மாதிரி, நம்ம வேலைக்கு மினிஸ்டர் அங்கிளோட அகௌன்ட்ட யூஸ் பண்ணதோட எஃபெக்ட் வேற லெவல். ட்ரென்டிஙே நம்ம வீடியோதான்னா பாரேன்!” உற்சாகமாக சொன்னவாறு வந்த விக்ரம், அங்கு நின்றிருந்த நரேந்திரனை பார்த்ததும், “அய்யோ! ஆபத்து” என்று கத்தியவாறு ஓட போனான்.

ஆனால், அவனை விட்டால் தானே! நரேந்திரன் கண்ணசைக்கவும் வாசலில் நின்றிருந்த காவலர்கள் இருவரும் அவனைப் பிடித்து, அவன் கதற கதற கைத்தாங்கலாக தூக்கி வந்து நரேந்திரனின் முன் நிறுத்த, பாவமாக முகத்தை வைத்து நின்றிருந்தான் விக்ரம்.

இருவரையும் மாறி மாறி முறைத்துப் பார்த்தவர், “இதுக்கு முன்னாடியும் இந்த மாதிரி நடந்திருக்கு, என்னை வச்சு உங்க காரியத்தை சாதிக்குறது. இந்த தடவை அப்படி என்னதான் பண்ணி வச்சிருக்கீங்க? ஆளாளுக்கு கோல் பண்ணி என்னை நினைச்சி பெருமையா இருக்குன்னு சொல்றானுங்க. இப்போ சொல்ல போறீங்களா, இல்லையா?” கிட்டதட்ட அவர் கத்த, அதில் திடுக்கிட்டவன், “அது அங்கிள் நாங்க…” என்று உண்மையை சொல்ல வர, இப்போது “அப்பா…” என்று ஓடி வந்தாள் தீப்தி.

“என்னால நம்பவே முடியல. இதைப்பத்தி நான் கேள்விப்பட்டிருக்கேன். ஆனா, இன்னும் இந்த சடங்கெல்லாம் நடக்குதுன்னு நினைச்சாலே மனசெல்லாம் பதறுது. அப்பா, உங்கள நினைச்சி நான் ரொம்ப பெருமைப்படுறேன். எல்லா டீவி நியூஸ்லேயும் நீங்களும் உங்க போஸ்ட்டும்தான் இன்னைக்கான ஹெட்லைன்ஸ்ஸே!” தீப்தி பேசிக்கொண்டே போக, நரேந்திரனுக்கோ ஒன்றுமே புரியவில்லை.

உடனே தொலைக்காட்சியை உயிர்ப்பித்து அவர் செய்தி அலைவரிசையை வைக்க, அதில் சென்றுக்கொண்டிருந்த செய்தியை பார்த்தவருக்கு அத்தனை அதிர்ச்சி! கூடவே, சத்தம் கேட்டு பதறிக்கொண்டு வந்த வைஷாலிக்கும்தான்.

மாஹியின் முகத்தை மங்கலாக காட்டி அவளுடைய குரல் மட்டும் தெளிவாக கேட்குமாறு செய்த காணொளியோடு, அந்த ஊர்மக்களை தடுக்கப்போய்தான் இந்த காயங்களென விக்ரம் பேசிய காணொளிதான் திரையில் ஓடிக்கொண்டிருந்தது. அதுவும் தமிழ்நாட்டு அமைச்சரே இதை எதிர்த்து தன் தனிப்பட்ட வலைத்தள கணக்கில் பதிவிட்டுள்ளமை செய்திகளுக்காக கழுகுபோல் காத்திருக்கும் மொத்த பத்திரிகையாளர்களுக்கும், தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் கிடைக்க, விடுவார்களா அவர்கள்?

இந்த செய்தி வெளியான அடுத்த சில மணித்துளிகளிலேயே இதை எதிர்த்து பல இளைஞர்கள் மீம்கள் செய்து வலைத்தளங்களில் பரப்பி மேலும் மக்களுக்கு தெரியப்படுத்த, ஒரே இரவில் நாட்டிலுள்ள மக்களிடையே பேசப்படும் முக்கிய செய்தியாக இது மாறிவிட்டது எனலாம்.

திரையில் தெரிந்த செய்தியை பார்த்துக்கொண்டிருந்த வேதாவின் இதழிலோ வெற்றிப்புன்னகை! இதைதானே அவளும் எதிர்ப்பார்த்தாள்!

“நானே அந்த அகௌன்ட்ட யூஸ் பண்றது கிடையாது. ஆனா, நல்லா பண்றீங்கடா நீங்க” என்று இருவரையும் நரேந்திரன் முறைக்க, விசிலடித்தவாறு வேறு எங்கோ பார்ப்பது போல் பாவனை செய்தனர் இரு நட்புகளும்.

அதேநேரம், மாடியில் நின்று திரையில் ஓடிக்கொண்டிருந்த செய்தியைப் பார்த்துக்கொண்டிருந்த ராவணுக்கு ஒரு அழைப்பு! அது யாரென்று அறிந்திருந்தவன், அழைப்பை ஏற்று காதில் வைத்து “பாப்பா…” என்றழைக்க, எதிர்முனையில் பற்களை கோபத்தில் கடித்துக்கொண்டார் சுனில்.

“துரோகி! உன்னை பெத்தவனுக்கும், நீ பொறந்த இடத்துக்கும் பெரிய துரோகம் பண்ணிட்ட. ச்சீ… உன்னை என் புள்ளன்னு சொல்லவே வெறுப்பா இருக்கு” சுனிலின் வார்த்தைகள் அத்தனை கோபத்தோடு வெளிவர, “நான் நல்லதுதான் பண்ணேன் பாப்பா” என்றவனின் இதழில் மெல்லிய கீற்றுப்புன்னகை.

“ஹாஹாஹா…” வீடே அதிர சிரித்தவர், “ராவண் நல்லது பண்றானா? கேக்கவே சிரிப்பா இருக்கு. எப்போதிலிருந்து இந்த நல்லவனுங்கிற அவதாரம். ஆனா, நான் இப்படியே விடப்போறதில்லை. அவ மக்களுக்கு தெரியப்படுத்தினா எல்லா மாறிடும்னு நினைச்சிட்டாளோ? எனக்கு என் ஊரோட கௌரவம் ரொம்ப முக்கியம். உங்க எல்லாரையும்…” என்று சொல்லி முடிக்கவில்லை,

“அதுக்கு நீங்க இருக்கணுமே பாப்பா” என்றான் ராவண் வில்லதனமாக. அவருக்கோ ஒருநிமிடம் எதுவுமே புரியவில்லை.

“உங்களுக்கு இரண்டு ஆப்ஷன் பாப்பா. ஒன்னு, நீங்க இதுவரைக்கும் பண்ண தப்பை ஒத்துக்கிட்டு ஜெயிலுக்கு போகணும். இத்தனைநாள் பண்ணதுக்கும் தண்டனை அனுபவிக்கணும்” ராவண் சொல்லும் போதே அதை குறிக்கிட்டு வாய்விட்டு சிரித்தவர், “நான் உன் அப்பா பேட்டா. என்கிட்ட உன் மிரட்டல வச்சிக்காத! இதோட விளைவு உன்னையும் தாக்கும்” என்று சொல்ல, இப்போது சிரிப்பது ராவணின் முறையானது.

“நீங்க பண்ண மொத்தத்துக்கும் இருக்குற ஒரே ஆதாரம் நான்தான். நீங்க தண்டனைய அனுபவிக்க நான் என்னையே இழக்கணும்னாலும் நான் பண்ணுவேன் பாப்பா” என்றவன், “பட் பாப்பா, நீங்களும் நானும் ஜெயிலுக்கு போனோம்னா மெஹ்ரா குடும்பத்து கௌரவம் என்னாகுறது? அதனால செகன்ட் ஆப்ஷன், அம்மாக்கிட்ட போயிருங்க. நமக்கு கௌரவம்தான் முக்கியம்” கேலியாக சொல்லிச் சிரிக்க, ஆடிப் போய்விட்டார் அவர்.

“பேட்டா, நான் உன்…” அதற்கு மேல் அவர் வார்த்தைகள் பேச முடியாது தடைபட, “அம்மாவ கொன்ன கொலைக்காரன். அவ்வளவு சீக்கிரம் மறந்திருப்பேன்னு நினைச்சீங்களா? அம்மாவ சந்தேகப்பட்டு கௌரவத்துக்காக என் கண்ணு முன்னாடி அவங்களுக்கு நீங்க பண்ண கொடுமைய நான் மறக்க மாட்டேன்” என்ற ராவணுக்கு, தன்னை வைத்து மிரட்டி தன் தந்தை தன் தாயை விஷத்தை குடிக்க வைத்த சம்பவம்தான் மனக்கண் முன் தோன்றியது. அவனுடைய நெற்றி நரம்புகள் புடைக்க, கை முஷ்டியை இறுக்கி கோபத்தை கட்டுப்படுத்திக்கொண்டான் அவன் 

சுனிலுக்கோ பயத்தில் முகம் வியர்க்க, எச்சிலை கூட்டி விழுங்கிக்கொண்டார் அவர். “இப்போ கூட என் கையால உங்களுக்கான தண்டனைய கொடுக்க முடியல்லையேன்னு கடுப்பா இருக்கு. ஆனா, இதை விட சரியான தண்டனையா எனக்கு வேறெதுவும் தோனல. மெஹ்ரா குடும்பத்து கௌரவம் உங்க கையில பாப்பா. ஹேப்பி ஜர்னி” ராவண் சொல்ல,

சரியாக சுனிலுக்கு அருகில் ஓடி வந்த அடியாளோருவன், “ஐயா, நாளைக்கு நம்ம ஊருக்கு பெரிய போலிஸு அப்றம் அந்த கலெக்டர்னு யார் யாரோ வர்றாங்கன்னு பேசிக்கிறாங்க. ஏதாவது பேசப்போய் வேலைக்கு பிரச்சினையாகிரும்னு நம்ம போலிஸும் பின்வாங்கிட்டான்” படபடவென பேச, இங்கு ராவணின் இதழிலோ நிம்மதியுடன் கூடிய புன்னகை.

அழைப்பைத் துண்டித்துவிட்டு கண்ணில் உதிர்த்த விழிநீரை சுண்டிவிட்டவன், ஹோலில் நின்றிருந்த வேதாவை இமை மூடாது பார்க்க, அவளும் மாடியில் நின்றிருந்தவனையேதான் சிரிப்புடன் பார்த்திருந்தாள். பார்வையை திருப்பிக்கொண்டவன், இங்கிருந்து செல்வதற்காக உடைகளை அடுக்க, தனதறைக்குச் செல்ல, அவனை நோக்கி செல்லப் போனவளை தடுத்தது வைஷாலியின் குரல்.

அவளோ “லக்கி…” என்றழைத்த வைஷாலியின் அழைப்பில் திடுக்கிட்டு அவரை நோக்க, ஒருவித தயக்கத்தோடு அவளெதிரே வந்தவர், “அந்த சடங்கால நிறைய பொண்ணுங்க பாதிக்கப்பட்டிருக்காங்க. அதுல நானும் ஒருத்திதான். எந்தளவுக்கு அது வலிய கொடுக்கும்னு எனக்கு தெரியும். இப்படி ஒரு விஷயத்தை தடுக்க நீ இவ்வளவும் பண்ணியிருக்குறதை பார்க்கும் போது அதுவும் என் ஊருக்காக நீ பண்ணதை பார்க்கும் போது பெருமையா இருக்கு லக்கி” என்றுவிட்டு அவள் கன்னத்தை தடவி விட்டுச்செல்ல, வாயைப் பிளந்த தோரணையில் நின்றிருந்தாள் வேதா.

அதே தோரணையில் அவள் நரேந்திரனை நோக்க, “உன்னை நினைச்சி ரொம்ப பெருமைப்படுறேன்டா. ஆனா ஒன்னு, பண்ணுறதை சொல்லிட்டு பண்ணுங்கடா. திடுதிப்புன்னு நீங்க என்னை வச்சு ஏதாவது பண்ணி, எவனாச்சும் அதைப்பத்தி என்கிட்ட கேக்கும் போது திருதிருன்னு முழிக்கிறது என் வயசுக்கும் பதவிக்கும் நல்லா இல்லை” என்றுவிட்டு அவர் சிரிக்க, மூன்று இளசுகளுக்கும் அவருடைய கேலியில் சிரிப்பு வந்துவிட்டது.

“நாம ஜெயிச்சிட்டோம் மாறா” விக்ரம் வேதாவை அணைத்துக்கொள்ள, “நான் ஒரு கதை சொல்லட்டா?” வேதா சிரிப்புடன் கேட்டதும், “பெயருக்கேத்த டயலாக். சொல்லு சொல்லு!” பதிலுக்கு சிரித்தவாறு ஆர்வமாக கேட்டான் விக்ரம்.

“மாஹிய நாளைக்கே வர வைச்சிரலாம். அங்கிள்கிட்ட நான் பேசுறேன்” வேதா கிசுகிசுப்பாக சொன்னதும், அவனுக்கோ தலைகால் புரியவில்லை. சந்தோஷத்தின் உச்சகட்டத்தில் பேன்ட் பாக்கெட்டுக்குள் கையை விட்டு தலையை சிலுப்பிக்கொண்டவன், “அப்போ, ஐயா குடும்பஸ்தனாக போறேன். இதுவும் நல்லாதான் இருக்கு” என்று சொல்லி நிமிர்ந்து நின்ற அவனுடைய தோரணையில் வேதாவுக்கு சிரிப்பை அடக்கவே முடியவில்லை.

அவள் வாய்விட்டு சிரிக்க, தீப்தியும் நரேந்திரனும் அதை அதிசயமாக பார்த்தார்கள் என்றால், தனதறை வாசலிலிருந்து இறுகிய முகமாக பார்த்திருந்தான் ராவண்.

அன்றே மனித உரிமை மீறல் தொடர்பான சங்கங்கள், சிறுவர் பாதுகாப்பு தொடர்பான சங்கங்கள் என்பன இந்த சடங்குக்கு எதிராக, அந்த கிராமத்து மக்களுக்கு எதிராக தமது வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்டு தம் எதிர்ப்பை காட்ட, உள்நாட்டை தாண்டி வெளிநாட்டு மக்களுக்கும் இச்செய்தி பரவிவிட்டது.

வெளிநாட்டு மக்களும் வலைத்தளங்களில் நம் எதிர்ப்பை தெரிவிக்க, இந்தியாவில் ஒவ்வொரு பிரதேசத்திலும் இதை தடை செய்யச் சொல்லி போராட்டங்கள் செய்ய போகிறோம் என்றளவிற்கு மக்கள் கொதித்தெழ ஆரம்பித்துவிட்டனர்.  இங்கோ மக்களின் கருத்துக்களினால் அந்த கிராமத்துக்கு பொறுப்பான அதிகாரிக்கும் அந்த மாநில கலெக்டருக்கும்தான் அரசாங்கம் அழுத்தம் கொடுக்க ஆரம்பித்துவிட்டது.

அடுத்தநாளே விடிந்தும் விடியாததுமாக அந்த கிராமத்துக்குள் ஏகப்பட்ட வண்டிகள் நுழைந்தன. மொத்த ஊர் மக்களும் வீதியோரத்தில் நின்று யாரென வேடிக்கைப் பார்க்க, அந்த கிராமத்திற்கு பொறுப்பான அதிகாரி, அந்த முப்பது வயதேயான அந்த மாநில கலெக்டர் ஆதேஷ் மற்றும் காவல்துறையின் மேலதிகாரிகள் என முக்கிய சிலநபர்கள் வண்டியிலிருந்து இறங்கவும், சற்று பயந்துதான் போனர் அனைவரும்.

அவர்களும் மக்கள் சுதாகரிக்க கொஞ்சமும் அவகாசம் கொடுக்காது ஒவ்வொரு வீடாக நுழைந்து விசாரனை செய்ய, எல்லோரும் பதறித்தான் போனர். சரியாக ஒரு வீட்டினுள் நுழைந்த காவல்துறை அதிகாரி ‘அங்கு சிறுபெண் குழந்தைகள் இருக்கின்றதா?’ என விசாரிக்க, “இங்க குழந்தைங்க எதுவும் இல்லை ஐயா” என்ற அந்த பெண்மணியின் தடுமாற்றமே அவர்களுக்கு சந்தேகத்தை கொடுத்தது.

வீட்டு வாசலை மறைத்தவாறு நின்றிருந்த அப்பெண்மணியை நகர்த்தி உள்ளே அதிரடியாக நுழைந்த அதிகாரிகளின் விழிகளில் சிக்கியது இரு காலையும் விரித்து, வலியில் பாதி கண்களை மூடிய நிலையில் முணங்கிக்கொண்டிருந்த ஒரு பத்துவயது பெண்குழந்தை.

அதைப் பார்த்ததுமே ஏதோ தவறாக தோன்ற, உடன் அழைத்து வந்திருந்த பெண் மருத்துவரிடம் அச்சிறுமியை பரிசோதிக்கச் சொன்னவர்களுக்கு, அடுத்த ஐந்து நிமிடங்களில் அந்த மருத்துவர் சொன்ன செய்தியில் சப்தநாடியும் அடங்கிவிட்டது.

“அந்த குழந்தையோட யோனிவாய் தைக்கப்பட்டிருக்கு” அவர் சொன்னதும், அதிர்ந்து விழித்தவர்களுக்கு இந்த ஊர்மக்கள் மீதுதான் கோபம் தாறுமாறாக எகிறியது. அந்த குழந்தையின் அம்மாவோ பயத்தில் உறைந்தேவிட்டார்.

இரண்டு நாட்களுக்கு முன்தான் அந்த குழந்தைக்கு அச்சடங்கு செய்யப்பட்டது. அதனாலேயே அவர் அதிகாரிகளிடம் பொய் சொல்லியிருக்க, இப்போது உண்மை தெரிந்ததும் அவர்கள் பார்த்த பார்வையில் கூசித்தான் போனாள் அவள்.

அங்கு மொத்த மக்களுக்கும் நடுவில் அந்த கிராமத்துக்கு பொறுப்பான அதிகாரியை ஒரு பிடி பிடித்துவிட்டார் ஆதேஷ்.

“உங்க பார்வைக்கு கீழதான் இந்த மாதிரியான கொடூரத்தை மக்கள் பண்ணிக்கிட்டு இருக்காங்க. இதை கூட கவனிக்காம அப்படி என்ன வேலை பார்க்குறீங்க? அதுவும் இப்போ ஆரம்பிச்சது கிடையாது. பல வருஷங்களா நடக்குது” ஆதேஷ் கத்த, “அது சார்… வெளியாளுங்களுக்கு தெரியாம இதை பண்ணிக்கிட்டு இருந்திருக்காங்க. பொண்ணுங்களுக்கு இங்க முழு சுதந்திரம் இல்லைன்னு தெரியும். ஆனா, இந்த மாதிரி ஒன்னு நானே எதிர்ப்பார்க்கல” என்றார் கிராமத்துக்கு பொறுப்பான அதிகாரி தலைகுனிந்தவாறு.

“இதுக்கப்றம் இந்த மாதிரி ஒன்னு இங்க நடக்கவே கூடாது. இந்த சடங்கை சட்டரீதியா தடை பண்ண என்ன பண்ணணுமோ, அதுக்கான வேலைய நான் இன்னைக்கே ஆரம்பிக்கிறேன். ஆனா, பெண்குழந்தைகளுக்கு இது மாதிரி பண்ண பெண்களே காரணமா இருக்காங்கன்னு நினைக்கும் போது என்னாலயே ஜீரணிக்க முடியல. தங்களுக்கு சொந்தமான சுதந்திரத்தை தாங்களே பறிகொடுத்துட்டு சுதந்திரம் இல்லைன்னு புலம்புறதே இந்த பொண்ணுங்களோட வேலையா போச்சு! இனி இந்த சடங்கு மறுபடியும் நடந்தாலோ, இன்னும் ஒரு பெண் குழந்தை இதனால பாதிக்கப்பட்டாலும் மொத்த ஊர் மக்களையும் கம்பி எண்ண வச்சிடுவேன்” ஆதேஷின் வார்த்தைகள் அத்தனை ஆக்ரோஷத்தோடு வெளிவந்தன.

“ஆமா சார், இத்தனைநாள் நானும் இந்த ஊர் ஆண்கள்கிட்ட மட்டுமே ஊரோட தேவைகள கேட்டுட்டு இருந்திருக்கேன். இனி, பெண்கள் அவங்களோட தேவைய வாய திறந்து கேக்கட்டும். முக்கியமா கல்விய பத்தி. கல்வியறிவு இருந்திருந்தா இந்த மாதிரியான மூடி நம்பிக்கைகள பத்தி முன்னாடியே ஒரு தெளிவு கிடைச்சிருக்கும்” அந்த அதிகாரி சொல்ல, தன் அம்மாவின் சேலையை இறுகப்பற்றியவாறு நடப்பதை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த ஜூஹியின் புருவங்களோ யோசனையில் சுருங்கியது.

ஓடி வந்து அந்த அதிகாரிகளின் முன் நின்றவள், “நான் ஒன்னு கேக்கலாமா?” என்று கேட்க, “ஜூஹி, என்ன பண்ற?” பதறியபடி வந்த மஹிமாவை கை நீட்டி தடுத்தார் ஆதேஷ்.

அந்த சிறுபெண்ணின் உயரத்திற்கு முட்டிப்போட்டு அமர்ந்தவர், “என்ன பேட்டி(மகள்)?” என்று மென்மையாக கேட்க, “வேதா தீ அவங்க ஊருக்கு கூட்டிட்டு போய் என்னை படிக்க வைக்கிறேன்னு சொன்னாங்க. ஆனா, என்னால அம்மாவ விட்டுட்டு போக முடியாது. என்னை மாதிரி நிறைய பேருக்கு படிக்கணும்னு ஆசை. ஆனா, பசங்க கூட படிக்க விட மாட்டாங்க. அதனால இங்கேயே எங்களுக்கு குட்டி ஸ்கூல் ஆரம்பிச்சி தருவீங்களா?” மழலைக்குரலில் அச்சிறுபெண் கேட்ட கேள்வியில்  அதிர்ந்துவிட்டார் அவர்.

அதேநேரம் அங்கு கலங்கிய விழிகளோடு நின்றிருந்த அம்ரிதாவுக்கு எங்கிருந்துதான் வந்ததோ தைரியம்? “நானும் பேசலாமா?” என்று கேட்டவாறு ஆதேஷின் முன் வந்து நின்றாள் அவள்.

“அம்ரி…” சீதா பதறியபடி அழைக்க, அடுத்து அவள் பார்த்த குற்றம் சுமத்தும் பார்வையில் தலை குனிந்துக்கொண்டார் அவர்.

ஏனோ இருந்த மனநிலையில் மொத்த மனக்குறையையும் வெளியில் சொல்ல துடித்தது அவள் மனம். காரணம், வேதா சொன்னதிலிருந்து மும்பையில் நடக்கவிருக்கும் ஓவியப்போட்டியில் கலந்துக்கொள்ள உண்டான ஆர்வத்தில் வீட்டில் மும்பைக்கு செல்வது பற்றி அம்ரிதா பேச, ஆனால், அடுத்த சிலநொடிகளில் அவள் வரைந்த அத்தனை ஓவியங்களும் சீதாவின் செயலால் தீயில் கருகித்தான் போன.

அம்ரிதாவின் குரலில் அவள் புறம் திரும்பிய ஆதேஷின் விழிகளோ சற்று விரிந்து சுருங்கின. முயன்று முகபாவனையை மாற்றி, ஒரு ஆர்வத்தோடு தலையசைத்து அவளை கவனிக்கத் தொடங்கினார் அவர்.

“நான் படிச்சது கிடையாது. ஆனா, என் சொந்த உழைப்புல வாழணும்னு ஆசை இருக்கு. இங்க என் வயதை சேர்ந்த நிறைய பொண்ணுங்களுக்கு ஒரு கனவு இருக்கு. ஆனா, இலட்சியத்தை கூட அடைய முடியாத நிலை” அவள் பேச பேச, கூர்ந்துக் கேட்டவருக்கு அவளுடைய வெள்ளை ஆடையை பார்த்ததும் ‘அவள் ஒரு விதவைப்பெண்’ என்றும் புரிந்துப்போனது.

ஒரு பெருமூச்சுவிட்டவர், “மாற்றத்தை கொண்டு வரலாம். ஆனா, அது என்னோட பதவியாலயோ, இல்லைன்னா என்னாலயோ முடியாது. உங்க தேவைக்கு நீங்க போராடினா மட்டும்தான் கிடைக்கும். புரியும்னு நினைக்கிறேன்” அழுத்தமாக உரைத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்து ஆதேஷ் காரில் ஏறப்போக, அவர் வார்த்தைகளின் அர்த்தம் புரிந்து கலக்கமான முகத்தோடு அவரையே பார்த்திருந்தாள் அம்ரிதா.

கார்கதவை திறந்தவர், ஒருநொடி அப்படியே நின்று அம்ரிதாவைப் பார்த்துப் புன்னகைக்க, அவர் பார்வையில் அவள் என்ன உணர்ந்தாளோ? தயக்கமாக முகத்தை திருப்பிக்கொண்டவளின் கருவிழிகள் அங்குமிங்கும் அலைப்பாய்ந்தன. அதைப் பார்த்து இதழுக்குள் குறும்புச்சிரிப்பு சிரித்தவாறு ஆதேஷ் காரில் ஏறவும், அடுத்த சிலநொடிகளில் அங்கிருந்த வண்டிகள் புறப்பட்டன.

மொத்த வண்டிகளும் அங்கிருந்து நகர, இப்போது வாய்க்கு வந்தபடி பேச ஆரம்பித்துவிட்டனர் அங்கிருந்த ஆண்கள் சிலர்.

“இப்படியெல்லாம் பேசினா, நாங்க இந்த பொட்டச்சிங்கள வீட்டை தாண்டி விட்டுருவோம்னு நினைச்சிட்டாங்களோ? இதுங்க அடுப்பை ஊதவும், புள்ள பெத்து போடவும்தான் லாயக்கு” ஒருவன் சொல்லிச் சிரிக்க, அவனெதிரே வந்து நின்ற பெண்ணொருத்தியோ, “யாரைப் பார்த்து என்ன சொல்ற? நீ எதுக்கு எங்களை அனுமதி தரணும்? பொண்டாட்டியா புருஷனுக்கு எங்க கடமைய செய்றோமே தவிர நாங்க யாருக்கும் அடிமை கிடையாது” நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு கத்தினாள்.

“ஓஹோ! இப்போ அந்த ஆளு பேசிட்டு போனதோட தாக்கமோ? ஒரு அடி விழுந்தா பழையபடி தானா அடங்கிருவீங்க” என்றவாறு ஷர்ட் கையை மடித்து விட்டுக்கொண்டு இன்னொருவன் வர, அந்த பெண்ணோ சற்றும் பயந்து பின்வாங்கவில்லை. கூடவே, ‘முடிஞ்சா கை வைங்க’ என்ற ரீதியில் நான்கைந்து பெண்கள் அந்த ஒருத்தியின் பக்கத்தில் வந்து நிற்க, அதிர்ந்துவிட்டனர் அனைவரும்.

அந்த பெண்கள் ஒரு அடி முன்னே வைக்க, ஒரு அடி அந்த ஆண்கள் அதிர்ச்சியோடு பின்னே நகர, சரியாக “சுஜீப் ஐயா, சுனிலய்யா தூக்குல தொங்கிட்டாரு” என்று ஒருவன் ஓடி வந்து மூச்சு வாங்கியவாறு சொன்னதும், ஆண்கள் அனைவரும் சுனிலின் வீட்டை நோக்கி ஓடினர்.

ஏதோ இருள் மறைந்து வெளிச்சம் கிடைக்கப்பெற்ற உணர்வு அந்த ஊர்மக்களுக்கு!

“வேதஷ்வினி” பத்மாவதியின் இதழ்கள் கர்வப்புன்னகையோடு அவள் பெயரைச் சொல்ல, தான் நினைத்தது நடந்தேறியதை கூட உணராது காதல் வலையில் சிக்கித் தவித்துக்கொண்டிருந்தாள் வேதா.

Leave a Reply

error: Content is protected !!