காதல்போர் 27

ei5FULY94102-939e7727

காதல்போர் 27

தோட்டத்தில் அலைப்பேசியை நோண்டியவாறு வேதா நின்றிருக்க, “தீ…” என்ற மாஹியின் குரலில் திரும்பிப் பார்க்காமல், “சொல்லு மாஹி…” என்று அவள் சொல்லவும், “அது…” எப்படி சொல்வதென்று தெரியாது தயங்கினாள் மாஹி.

விழிகளை மட்டும் உயர்த்தி எதிரே நின்றிருந்தவளை ஒரு பார்வைப் பார்த்தவள், “என்ன?” என்று சற்று கண்டிப்புடனே கேட்க, “அது தீ, என்னை தப்பா நினைக்காதீங்க. அன்னைக்கு பையாவ காதலிக்கிறேன்னு சொன்னீங்க, இப்போ என்னடான்னா கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லியிருக்கீங்க. என்னாச்சு? பெங்ளூர்லயிருந்து நீங்க வந்ததுலயிருந்தே சரியில்லை. உங்களுக்கும் பையாவுக்கும் இடையில ஏதாச்சும்…” மாஹி தயக்கமாக இழுத்தாள்.

“அதெல்லாம் ஒன்னுஇல்லை, ஐ அம் ஆல்ரைட். இன்ஃபேக்ட், எனக்கு இப்போதான் எல்லாமே தெளிவாகியிருக்கு. எங்களுக்குள்ள காதல் எல்லாம் கிடையாது. நீ வேணா உன் பையாக்கிட்ட கேட்டுப் பாரு! அவனும் இதையேதான் சொல்வான்” வரவழைக்கப்பட்ட சிரிப்புடன் வேதா சொல்லிச் சிரித்தாலும், அவள் விழிகளில் தெரிந்த வெறுமையை அச்சிறுபெண் உணராமலில்லை.

“தீ, நீங்க ஏதோ தப்பா புரிஞ்சிருக்கீங்கன்னு நினைக்கிறேன். நான்தான் முதல்லயே சொன்னேனே, பையாவுக்கு அன்பை வெளிக்காட்ட தெரியாது. எனக்கு தெரியும், அவர் உங்கள ரொம்ப காதலிக்கிறாரு” மாஹி படபடவென பேசிக்கொண்டேப் போக, “இட்ஸ் ஓவர் மாஹி” அவளை குறுக்கிட்டு அழுத்தமாகச் சொன்னாள் வேதா.

“உன் பையாவுக்கு காதல் தேவையில்லை. அவன் நல்லாதான் இருக்கான். என்ட், நான்தான் உன்கிட்ட மன்னிப்பு கேட்டே ஆகணும், தேவையில்லாத ஆசைய உன் மனசுல வளர்த்ததுக்கு. ராவண பத்தி தெரிஞ்சும் காதல் கீதல்னு அவன் பின்னாடி போயிருக்கக் கூடாது. ஓகே, லீவ் தட்! உன் கல்யாணத்தை பத்தி உன் பையாக்கிட்ட பேசு, கூடவே என் கல்யாணத்துக்கு மறக்காம வந்துட சொல்லிரு” வேதா பேசிவிட்டு அவள் பாட்டிற்கு முன்னே நடக்க, மாஹிக்குதான் என்ன செய்வதென்றே தெரியவில்லை. அதுவும், தன் அண்ணனுடைய தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி அவனிடம் பேசவும் அவளுக்குள் சங்கடம்!

வேதா பேசியதை வைத்து ஒன்றை மட்டும் அவள் புரிந்துக்கொண்டாள், தப்பு தன் அண்ணன் மேல்தான் என்று. ஆனால், பிரச்சினை என்னவெனத் தெளிவாகத் தெரியாது அதை அந்த சிறுபெண்ணால் தீர்க்க முடியுமா என்ன?

அடுத்து வந்த நாட்களில் திருமணத்திற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைப்பெற்றன. ஒரே மாதத்தில் வேதாவின் கல்யாணத்திற்கான திகதி குறிக்கப்பட்டிருக்க, இவள் திருமணம் முடிந்த ஒரு வாரத்தில் தீப்தி, வம்சியின் திருமணத்தை வம்சியின் சொந்த கிராமத்திலேயே நடத்த முடிவு செய்தனர்.

விக்ரமின் தந்தை மோகன், தன் மகன் திருமணத்தை தன் குலதெய்வக் கோவிலில்தான் நடத்த வேண்மென தன் மனதின் ஆசையைச் சொல்லி அடம்பிடிக்க, வேதாவின் திருமணம் முடிந்த ஒரே மாதத்தில் விக்ரம், மாஹியின் திருமணத்தை வைக்க முடிவு செய்யப்பட்டது.

திருமணம் முடிவு செய்யப்பட்டதுமே விக்ரமின் நிலைதான் வம்சிக்கும். சுஜீப்பும் சீதாவும் திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்ய என ஊருக்குச்  சென்றிருக்க, வேதாவின் திருமணத்திற்காக அங்கேயே இருந்துவிட்டான் வம்சி. ஆனால்,  திருமணம் முடியும் வரை ஒரே வீட்டில் தீப்தியும் வம்சியும் இருப்பது நல்லதுக்கில்லை என்பதை உணர்ந்துக்கொண்ட நரேந்திரன், விக்ரமுடன் அவனை தங்க வைத்திருக்க,  தவித்துப் போய்விட்டான் அவன்.

இவ்வாறு இரு ஜோடிகள் தங்கள் துணையுடன் இணையப் போகும் நாளை நினைத்து அத்தனை ஆர்வமாக காத்திருக்க, வேதாவோ திருமணத்தை பற்றி முடிவுகளை மற்றவர்களிடம் ஒப்படைத்தவள், தன் விருப்பமென்று எந்தவிதமான கருத்தையும் சொல்ல முன்வரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

மற்றவர்களும் அவள் திருமணத்திற்கு சம்மதித்ததே போதும் என்று இருக்க, வேதாவின் திருமணத்தைப் பற்றி கேள்விப்பட்டு விக்ரம்தான் திகைத்துவிட்டான். வேதா நரேந்திரனிடம் சம்மதத்தை சொன்ன அடுத்தநாளே அவளை நேரில் சந்தித்தவன், “ஏய் ஜான்சிராணி நீ நல்லாதானே இருக்க? இல்லை… மேடம் கல்யாணத்துக்கெல்லாம் சம்மதிச்சதா கேள்விப்பட்டேன், அதான்…” கேலியாக கேட்டு அவளை கூர்ந்து நோக்கினான்.

ஆனால், அவள் முகத்திலோ எந்த சலனமும் இல்லை. “இதுல ஆச்சரியப்பட என்ன இருக்கு விக்கி?” சாதாரணமாகவே அவள் வார்த்தைகள் வர, “நிஜமாவே இந்த கல்யாணத்துல உனக்கு சம்மதம்தானா?” அழுத்தமாக கேட்டான் விக்ரம்.

அந்த கேள்வியில் அவன் விழிகளை நேருக்கு நேர் நோக்கிய வேதா, “என் விருப்பம் இல்லாம என் விஷயத்துல யாருக்கும் முடிவு பண்ண தைரியம் கிடையாது. சோ, டோன்ட் வொர்ரி!” என்றுவிட்டு அங்கிருந்துச் சென்றிருக்க, அதற்குமேல் விக்ரமால் எதையும் கேட்க முடியவில்லை.

இவ்வாறு நாட்கள் நகர்ந்து திருமணத்திற்கு இன்னும் ஒரே வாரமே இருக்க, கடவுளின் பாதத்தில் பூஜை செய்து டீபாயில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த அழைப்பிதழ்களில் ஒரு அழைப்பிதழை எடுத்த வேதா, அதன் அட்டையில் ‘மிஸ்டர்.ராவண் மெஹ்ரா’ என்று பெயரெழுதி திருமண வேலைகளுக்காக வீட்டிற்கு வந்த வம்சியிடம் நீட்ட, அவனோ புருவத்தை நெறித்து கேள்வியாக நோக்கினான்.

“அட்ரஸ் தெரியும்ல, மறக்காம போஸ்ட் பண்ணிரு. மிஸ்டர்.ராவணுக்கு சொல்லாம எப்படி! அதான்…” ஒருமாதிரிக் குரலில் உரைத்துவிட்டு அவள் தனதறைக்குச் சென்று கதவடைத்திருக்க, அவனோ கலங்கிய விழிகளுடன் தன்னை பார்த்துக்கொண்டிருந்த மாஹியைத்தான் நோக்கினான்.

அவளுக்கோ என்ன செய்வதென்றே தெரியவில்லை. வேதாவிடம் அன்று பேசிவிட்டு தன் அண்ணனிடம் விடயத்தை கூறி அவனிடம் தன் மனதிலுள்ள பதிலை எதிர்ப்பார்த்தவளுக்கு வெறும் ஏமாற்றம் மட்டுமே! வேதாவின் திருமணச் செய்தியை அலட்சியம் செய்துவிட்டு வேறு கதை பேச தொடங்கி விட்டான் ராவண்.

ஆனால், மனதிலுள்ள காதலை எவ்வளவு நாட்கள்தான் வெளிப்படையாக காட்டாது தனக்குள் வைத்திருக்க முடியும் அவனால்? அவள் மீதான அவன் காதலை வெளிப்படுத்த வேதாவின் திருமண அழைப்பிதழ் சரியாக உபயோகமானது.

திருமணத்திற்கு முந்தையநாள் இரவு, அங்குமிங்கும் மதுபோத்தல்கள் உடைந்து சிதற விடப்பட்டிருக்க, முகம் இரத்தமென சிவந்து, நரம்புகள் புடைத்து பற்களை கடித்த வண்ணம் அமர்ந்திருந்தான் ராவண். அவனுடைய ஒரு கரம் மதுக்குவளையை ஏந்தியிருக்க, மற்ற கரம் தன்னவளின் அழைப்பிதழை தாங்கியிருந்தது.

அவனுடைய பார்வையோ அழைப்பிதழிலில் மணமகளின் பெயரிலிருந்த ‘வேதஷ்வினி‘ என்ற பெயரில்தான் நிலைத்திருந்தது. அவனுக்குள் அத்தனை ஆத்திரம்!

“எவ்வளவு தைரியம்டி உனக்கு, இந்த ராவண்கிட்ட உன் விளையாட்டை காட்டுறல்ல? நீ என்னோட மிர்ச்சி, அவ்வளவு சீக்கிரம் உன்னை விட்டுக்கொடுத்துற மாட்டேன்” என்றவனின் வார்த்தைகள் அழுத்தமாக வர, அடுத்தநாள் முகூர்த்தத்திற்கு இன்னும் சில நிமிடங்களே இருக்க, மண்டப வாசலின் முன் தன் புல்லட்டை பெரிய சத்தத்தோடு வந்து நிறுத்தினான் ராவண்.

வாசலில் நின்றிருந்த விக்ரமும் வம்சியும் ராவணை பார்த்ததுமே அதிர்ந்துவிட்டனர். ஒருவரையொருவர் அதிர்ந்து பார்த்துக்கொண்டவர்கள், அவனை நோக்கி வேகமாக செல்லும் முன், வண்டியிலிருந்து இறங்கி அணிந்திருந்த சட்டை கையை மடித்துவிட்டவாறு மின்னல் வேகத்தில் உள்ளே நுழைந்தான் அவன்.

அங்கு மண்டப  வரவேற்பறையில் மாஹியும் தீப்தியும் வருவோருக்கு பன்னீர் தெளித்து வரவேற்றுக்கொண்டிருக்க,  திடுதிப்பென வந்து நின்ற தன் அண்ணனை பார்த்ததுமே தூக்கி வாரிப்போட்டது மாஹிக்கு. “பையா நீங்க…” முயன்று தன்னை மீட்டெடுத்தவாறு அவள் ராவணிடம் செல்ல, அவனோ ஒரு கேள்விதான் கேட்டான்.

“மிர்ச்சி எங்க இருக்கா?”

வந்ததும் வராததுமாக இப்படி சட்டென்று கேட்டதில் அதிர்ந்து விழித்தவள், “அது பையா, முதல்ல நீங்க…” என்று அவன் கேள்வியை விட்டு வேறு ஏதோ பேச வர, “ச்சே!” என்று சலித்தவன், “இப்போ சொல்ல போறியா, இல்லையா?” என்று சுற்றி இருப்போர் திரும்பி பார்க்கும் அளவிற்கு கத்தியேவிட்டான். அவனுடைய கர்ஜனையில் மாஹிக்குதான் பதற ஆரம்பித்துவிட்டது.

கூடவே, அவனுடைய கத்தலில் சுற்றியிருந்த சிலரோடு நரேந்திரனும் சத்தம் வந்த திசையை நோக்கினார். அவனைப் பார்த்ததுமே யோசனையில் அவருடைய புருவங்கள் முடிச்சிட, அவனோ சுற்றியிருந்த எதையும் கண்டுக்கொண்டதாக தெரியவில்லை. திக்கித்திணறி மாஹி வழியைச் சொன்னதுமே மணப்பெண் அறையை நோக்கி கோபமாக, அழுத்தமாக காலடிகளுடன் சென்றான் ராவண்.

‘மணமகள் அறை’ என்ற பலகையை தாங்கிய வண்ணம் இருந்த அறைக்கதவை ‘படார்’ என திறந்துக்கொண்டு உள்ளே சென்றவனுக்கு, அங்கோ எந்த கவலையுமின்றி கண்ணாடியைப் பார்த்து தன்னை அலங்கரித்துக்கொண்டிருந்த வேதாவைப் பார்த்ததும் கோபம் தாறுமாறாக எகிறியது. 

மின்னல் வேகத்தில் அவளை நெருங்கியவன், அவள் முன் கண்ணாடி மேசையிலிருந்த மொத்த பொருட்களையும் சுவற்றில் விசிறியடிக்க, நிதானமாகவே அணிந்துக்கொண்டிருந்த கம்மலை அணிந்துவிட்டு சாதாரண முகபாவனையுடனே அவனெதிரே எழுந்து நின்றாள் வேதா.

முகமெல்லாம் சிவந்து, கலைந்த தலைமுடி என உச்சக்கட்ட கோபத்தில் ராவண் நின்றிருக்க, அவனை மேலிருந்து கீழ் ஒரு பார்வைப் பார்த்தவள், “ஓஹோ!  கல்யாணத்துக்கு கரெக்டா வந்திருக்க. வந்ததும்தான் வந்த… நல்லா சாப்பிட்டுட்டுதான் போகணும்” என்று சொல்லி முடிக்கவில்லை, அடுத்தகணம் அவள் குரல்வளையை பிடித்து சுவற்றில் சாற்றியிருந்தான் அவன்.

“என்னடி நினைச்சிக்கிட்டு இருக்க? நமக்குள்ள என்ன உறவுன்னு மறந்து போச்சா என்ன? இல்லை, நான் நியாபகப்படுத்தணுமா? ஹவ் டேர் யூ, எவனோ ஒருத்தனை கல்யாணம் பண்ண சம்மதிச்சிருப்ப” பற்களை கடித்துக்கொண்டு அவளை நூலிடைவெளியில் நெருங்கி ராவண் கத்த, அவளோ அவன் கையை அலட்சியமாக உதறிவிட்டாள்.

கழுத்தை நீவி விட்டுக்கொண்டவாறு, “நமக்குள்ள அப்படி என்ன உறவு இருக்கு மிஸ்டர்.ராவண் ஆங்? காதலில்லாத காமம் மட்டும்தான் உங்களுக்கு என்மேல இருந்திச்சு. அன்னைக்கே அதுக்கான கணக்கையும் தீர்த்துட்டேன். நான் யாரை கல்யாணம் பண்ணணும், பண்ண கூடாதுன்னு முடிவு பண்ண வேண்டியது நான்தான். என்னோட வாழ்க்கையில சம்மந்தமே இல்லாத உங்களுக்கு என் விஷயத்துல தலையிட எந்த உரிமையும் இல்லை” அழுத்தமாக வந்தன வேதாவின் வார்த்தைகள்.

‘காதலில்லாத காமம் மட்டும்’ என்ற அவளுடைய வார்த்தைகளை கேட்டதுமே அவனுக்குள் ஏதோ ஒரு வலி! அவன்தான் அன்று அந்த வார்த்தைகளை சொன்னது, ஆனால் இன்று அதே வார்த்தைகளை அவளிடமிருந்து கேட்கும் போது இதயத்தை கசக்கி பிழியும் வலியை உணர்ந்தான் ராவண்.

“ஓ! அப்போ எல்லாம் அவ்வளவுதான், அப்படிதானே?” ராவண் கமறிய குரலில் கேட்க, “ஆமா, நமக்குள்ள காமம் தவிர வேறு எதுவும் இல்லை. எனக்குள்ள இருந்த காதலும் அன்னைக்கே செத்துப்போச்சு” என்று எந்தவித சலனமுமின்றி சொன்னவளுக்கு ராவணின் தவிப்புடனான முகமும், கமறிய குரலில் புதிதுதான்.

ஆனாலும் இறுகிய முகமாக, “இதுவரைக்கும் யாரையும் என்னை நான் நெருங்க விட்டது கிடையாது. உன் மேலயிருக்குற காதல் நீ நெருங்கும் போது சம்மதிச்சது. பட், யூ… அதை ஈஸியா மிஸ்யூஸ் பண்ணிட்ட. அவ்வளவு இளக்காரமா போயிட்டேனா என்ன? என்ன வார்த்தை சொன்னன்னு நியாபகம் இருக்கா? இல்லை, நான் நியாபகப்படுத்தணுமா?” வேதா அவனுடைய பாணியிலே கேட்டு  பதிலடிக் கொடுக்க, கலங்கிய விழிகளுடன் அவளை  ஏறிட்டான் அவன்.

“மன்னிப்பு கேட்க மாட்டேன். ஆனா, நான் சொல்ல வேண்டியதை சொல்லிடுறேன். மாஹிய எனக்கு ரொம்ப பிடிக்கும் மிர்ச்சி. நீயும் விக்ரமும் பழகுறதை பார்த்து நிறைய தடவை பொறாமைப்பட்டிருக்கேன், என்னால என் தங்கச்சி கூட இப்படி பழக முடியல்லையேன்னு. ஊர்ல ராவண் பையாவுக்கு பயமே இல்லைன்னு சொல்லிப்பாங்க. பட், ராவணுக்கு பயம் இருக்கே! அன்புன்னாலே பயம். 

என் அம்மா இறந்தது கூட அவங்களோட ஒருதலைக் காதலாலதான். ஒருதடவை அவங்க காதலிச்சது அவங்களோட உயிரையே கொன்னிருச்சு. அப்றம் மாஹி. உன் ஃப்ரென்ட்ட காதலிச்சு அவன் இறந்துட்டான்னு நினைச்சிக்கிட்டு அவ கதறின கதறல் எனக்கு இன்னமும் நியாபகம் இருக்கு.

காதல் ஒரு சுகமான உணர்வுன்னு சொல்வாங்க. அதை நான் இதுவரை ஃபீல் பண்ணது கிடையாது. ஆனா…” அவன் சட்டென நிறுத்த, அவளோ கேள்வியாக நோக்கினாள்.

“என்னால உன்னை விட்டுக்கொடுக்க முடியல. நீ எனக்கானவன்னு என் மனசு சொல்லுது. உன்னை விட்டு விலக முடியல. உன் கண்ணீரை பார்க்கும் போது எனக்கு வலிக்குது. இதுக்கு பேர்தான் காதல்னா, யெஸ் ஐ லவ் யூ மிர்ச்சி. பட், ஐ ஹேட் லவ்” தன் காதலை அவன் வெளிப்படுத்த, அதிர்ந்து விரிந்தன வேதாவின் விழிகள். ஆனால், அதுவும் சற்று நேரம்தான்.

மார்புக்கு குறுக்கே கைகளை கட்டி, “ஆஹான்! இது எப்போதிலிருந்து?” கேலியாக வேதா கேட்க, அவளை நெருங்கி நின்று அவள் விழிகளை நேருக்கு நேராக நோக்கியவன், “நீ என்னை விட்டு விலகி வந்ததுலயிருந்து கூட இருக்கலாம். உன்னோட கண்ணுல எனக்கான காதல நான் பார்த்த போது கூட இருக்கலாம். நம்ம முதல் முத்தம், அப்போ கூட இருக்கலாம். உன்னை கொல்ல போறதா என் அப்பா சொன்னப்போ உனக்கு எதுவும் ஆக விடக் கூடாதுன்னு என் மனசு பதறிச்சு, அப்போ கூட இருக்கலாம். இல்னைன்னா, உன்னை முதல் தடவை பார்த்த போதே உன்னை நான் காதலிக்க ஆரம்பிச்சிருக்கலாம்” என்று சொல்லிக்கொண்டே போக, அவள் விழிகளோ சாரசர் போல் விரிந்தன.

மீண்டும் அவனே தொடர்ந்தான்.

“முதல் பார்வையிலேயே எனக்குள்ள சுவாரஸ்யத்தை ஏற்படுத்தின பொண்ணு நீ. என் முன்னாடி எதிர்த்து பேச கூட பயப்படுற ஆம்பிளைகளுக்கு மத்தியில என் இடத்துல என்னை எதிர்த்து நின்ன உன்னை பார்க்கும் போதே நான் காதலிக்க ஆரம்பிச்சிருக்கலாம் மிர்ச்சி” சொன்னவாறு அவள் கன்னத்தை தாங்கியவன், “மயூரியா உன் பார்த்த போது எனக்குள்ள உண்டான கோபம் வேதாவா பார்க்கும் போது காதலா மாறிடுச்சு” என்று முடிக்க, அவன் கையை தட்டிவிட்டாள் வேதா.

“ஓஹோ! இதை என்னை நம்ப சொல்றியா?” அவள் கோபமாகக் கேட்க,

தன் கட்டுப்பாட்டையும் மீறி  பேசும் போது விழியோரத்தில் துளிர்க்கும் கண்ணீரைத் துடைத்துவிட்டவாறு, “அதான் சொன்னேனே, சின்னவயசுலயிருந்து அன்புன்னாலே ஒருவித பயம். அதை இழக்கும் போது உண்டாகுற வலியை நினைச்சு பயம். அம்மாவ இழந்து என்னோட இயல்பையே தொலைச்சேன். நான் உன்னை காதலிக்குறதை என் பயம் ஏத்துக்க விடல. காதல் ஒருவித பலவீனம். உன் மேல உண்டாகுற உணர்வுக்கு காமம்னு போர்வை போர்த்தி என்னை நான் சமாதானப்படுத்திக்கிட்டேன். உன்னை என் அம்மா மாதிரி இழந்துருவேனோன்னு பயந்தேன் மிர்ச்சி. அதுமட்டுமில்லாம,  என்னோட பாசத்தை, அன்பை வெளிக்காட்ட எனக்கு தெரியாது. அது உனக்கு திருப்தியைக் கொடுக்காதோன்னு நினைச்சு…” தொண்டை அடைத்து வார்த்தைகள் தடைபட, அதோடு நிறுத்தினான்  ராவண்.

அவனையே அதிர்ந்து பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு இந்த ராவண் புதிதுதான். இவனுடைய இந்த கண்ணீர், விழிகளில் தெரியும் காதல், அன்பின் மீதான ஏக்கம் எல்லாமே புதிது. உணர்வுகளை காட்டத் தெரியாதவன் முதல் தடவை தன் காதலுக்காக தன்னவள் முன் உணர்வுகளை வெளிப்பத்திக்கொண்டிருந்தான்.

ஒரு பெருமூச்சுவிட்டவள், “இப்படியெல்லாம் சொன்னா, சமாதானமாகி அப்போ உன் பின்னாடி வந்த மாதிரி காதல் கீதல்னு உன் பின்னாடி நாய்க்குட்டி மாதிரி வருவேன்னு நினைச்சியா? நான் வேதா, என்னை ஒதுக்கினவங்கள ஏறெடுத்தும் பார்க்க மாட்டேன். இன்னும் கொஞ்சநேரத்துல மினிஸ்டர் பையன் கூட எனக்கு கல்யாணம் ஆக போகுது. என் நேரத்தை வீணாக்காம விருந்தாளிங்க கூட உட்கார்ந்திரு போ!” ஏளனமாகச் சொல்லி மீண்டும் தன் அலங்காரத்தை ஆரம்பிக்க போக, அவள் முழங்கையை பிடித்து தன்னை நோக்கி இழுத்தவன், அவளிதழில் அழுந்த முத்தத்தை பதித்திருந்தான்.

அவன் மார்பில் கை வைத்து அவள் தள்ள முயற்சிக்க, அவன் விட்டால் தானே!  ‘எங்கே அவளை இழந்துவிடுவோமோ?’ என்ற அவனின் பயம் அவன் முத்தத்திலேயே அவளுக்கு தெரிந்தது.

அவனிதழிலிருந்து தன்னிதழை கஷ்டப்பட்டு பிரித்தெடுத்து அவனை தள்ளிவிட்டவள், புறங்கையால் இதழை அழுந்த துடைத்து ஒற்றை புருவத்தை உயர்த்தி அவனை முறைத்துப் பார்க்க, மூச்சு வாங்கியவாறு தன்னவளை நோக்கியவன், “உன்னை யாருக்கும் விட்டுக்கொடுக்க மாட்டேன் மிர்ச்சி. பாஸ்ட் இஸ் பாஸ்ட்! நீ எப்போ என்னை மன்னிக்குறியோ, அப்போ என்னை ஏத்துக்க! ஆனா ஒன்னு, அந்த ராவணன் சீதைய கடத்தின மாதிரி இந்த ராவண் இந்த வேதாவை கடத்த கொஞ்சமும் தயங்க மாட்டான்” அழுத்தமாக சொன்னான்.

அதில் அவனை உக்கிரமாகப் பார்த்தவள், “முடிஞ்சா பண்ணு!” என்று அவனுக்கு சற்றும் குறையாத அழுத்தத்துடன் சொல்லி தன்னை அலங்காரம் செய்ய, அவனுக்குதான் தன் மிரட்டல்கள் எல்லாம் இவளின் பிடிவாதம் முன் வீணென்று தோன்றியது.

இடுப்பில் கைக்குற்றி ஆழ்ந்த மூச்சைவிட்டவன், “மிர்ச்சி, ப்ளீஸ்… நான் பண்ணது தப்புதான். அதுக்காக நீ எவனோ ஒருத்தனை கல்யாணம் பண்றேன்னு போறது கொஞ்சமும் சரியில்லை. யூ க்னோ, யூ லவ் மீ. அப்றம் எப்படி? மிர்ச்சிம்மா ஐ லவ் யூ” அவள் தாடையை பற்றி தன்னை நோக்கி திருப்பி கெஞ்சும் குரலில் அவளுக்கு புரிய வைக்க முயல, அவன் கையை உதறிவிட்டவள், “இந்த நடிப்பெல்லாம் வேறு யாருக்கிட்டயாச்சும் வச்சிக்க! ஜஸ்ட் கெட் அவுட்”  கொஞ்சமும் அவன் கெஞ்சலை அவள் பொருட்படுத்தவேயில்லை.

அவள் முழங்கையை பிடித்து தன்னருகே இழுத்து, “என்னடி பிரச்சினை உனக்கு? நான் இதுவரைக்கும் யாருக்கிட்டேயும் இப்படி கெஞ்சினது கிடையாது. இப்போ நீ இப்படியே அடம்பிடிச்சேன்னா அவ்வளவுதான் வேதா, யாரையாச்சும் கல்யாணம் பண்ணித் தொலைன்னு நான் பாட்டுக்கு போயிருவேன்” அவன் சிறுகுழந்தைக்கு மிரட்டுவது போல் மிரட்ட, அதற்கு அசருபவளா அவள்!

“போ!” என்றுவிட்டு தன் வேலையில் அவள் கவனமாக, ஒரு அடி வாசலை நோக்கி வைத்த ராவண், “அய்யோ கடவுளே! இவளை விட்டு போகவும் முடியல்லையே…” என்று வாய்விட்டு புலம்பியவாறு மீண்டும் அவள்புறமே திரும்பி இறைஞ்சும் பார்வையுடன் நோக்க, சலிப்பாக அவனை ஒரு பார்வைப் பார்த்தாள் அவள்.

“ரொம்ப புலம்பாத! இதுக்கு ஒரு வழி இருக்கு” பொடி வைத்து அவள் பேசவும், விழிகளை சுருக்கி அவளை நோக்கியவன், “என்ன வழி?” சந்தேகக் குரலிலே கேட்க, விஷம சிரிப்பு சிரித்தவாறு தன் அலைப்பேசியை எடுத்து ஒரு எண்ணிற்கு அழைத்தாள் வேதா.

எதிர்முனையில் அழைப்பை ஏற்றதுமே, “முன்னாடியே சொன்னேன்ல, அதை கொண்டு வாங்க” என்றுவிட்டு அவள் அழைப்பைத் துண்டிக்க, ராவணுக்கு ஒன்றுமே புரியவில்லை. ஆனால், அடுத்த ஐந்து நிமிடங்களில் தன் முன் நீட்டப்பட்ட தட்டிலிருந்த பச்சை மிளகாய்களை பார்த்தவனுக்கு பக்கென்றானது.

“மி…மிர்ச்சி” அவன் அதிர்ச்சியாக அவளை நோக்க, “என்னையாடா மிர்ச்சின்னு கூப்பிடுற? இதோ இதுலயிருக்குற மொத்த மிர்ச்சியையும் நீ சாப்பிடுற” என்று சொன்னவள், ராவணை பற்றி முன்பே அறிந்துதான் வைத்திருந்தாள்.

அவன் வளர்ந்த சூழலில் காரமான உணவுகள் மக்களிடையே பழக்கப்பட்ட ஒன்றாக இருந்தாலும், இவன் மட்டும் சிறுவயதிலிருந்து காரமான உணவுகளை தொடவும் மாட்டான். இதை மாஹி சொல்லி அறிந்திருந்தவள், தன் வீட்டிலிருக்கும் போது அவன் உண்ணும் முறை வைத்தே உறுதி செய்திருந்தாள்.

“சீக்கிரம் சாப்பிடு! முகூர்த்தத்துக்கு நேரமாச்சு, மாப்பிள்ளை ஸ்டில் எனக்காக வெயிட்டிங்” வேதா அலட்சியமாகச் சொல்ல, விழிகளை அழுந்த மூடித் திறந்து, “இதுக்கெல்லாம் உன்னை வச்சி செய்றேன்டி” என்றுவிட்டு அடுத்தடுத்தென பச்சை மிளகாய்களை சாப்பிட ஆரம்பித்தான் அவன்.

அந்த தட்டிலிருந்த பத்து மிளகாய்களை அவன் விழுங்கி முடியும் முன்னே அவன் விழிகளிலிருந்து விழிநீர் தாரை தாரையாக கொட்ட ஆரம்பித்துவிட்டது. ஆனாலும், தன்னவளுக்காக அழுதவாறே அவன் வேகவேகமாக சாப்பிட, அவனுடைய விழிநீரையும், இரத்தமென சிவந்த முகத்தையும் பார்த்தவளின் இதழில் கேலிப்புன்னகை.

அதிலிருந்த இருபது மிளகாய்களையும் சாப்பிட்டு முடிந்து மூச்சு வாங்கியவாறு அவளை நோக்கியவன், “தண்…தண்ணீர் வேணும்” என்று திக்கித்திணறிக் கேட்க, அப்போதுதான் தண்ணீர் கொண்டு வர சொல்ல தான் மறந்து போனது அவளுக்கு நியாபகத்துக்கு வந்தது.

“அச்சச்சோ சோரி, வெயிட் பண்ணு. இப்போவே வோட்டர் கொண்டு வர சொல்றேன்” வேதா பதறியபடி அலைப்பேசியில் விக்ரமிற்கு அழைக்க, “ஏய் மிர்ச்சி! ராட்சசி! என்னால இந்த எரிச்சலை தாங்க முடியலடி. ஓ கோட்! என்னை காப்பாத்து” காரம் தாங்க முடியாது கத்த ஆரம்பித்துவிட்டான் அவன்.

“ஷ்… கத்தாத! சினிமாவுல எல்லாம் காரம் சாப்பிட்டா கிஸ் கொடுத்துப்பாங்க. பட், அந்த ட்ரீட்மென்ட் வர்க் அவுட் ஆகுமான்னு…” அவள் சொல்லிமுடிக்கவில்லை, அவளை பிடித்து இழுத்து, “அப்போ என்னடி பேசிக்கிட்டு இருக்க? சரியான இம்சைடி நீ” என்று திட்டிவிட்டு அவள் இதழை சிறைப்பிடித்திருந்தான் ராவண்.

ஏற்கனவே அவள் இதழ்தேனில் மோகம் கொண்டவன், இப்போது காரத்திற்கு அவளிதழையே மருந்தாக உட்கொள்ள, அவள்தான் அவன் வேகத்தில் திணறிவிட்டாள். அவனுடைய இதழின் காரம் அவள் இதழிற்கு தாவிவிட்டது போல் அவளுடைய இதழ்களும் இவனுடைய முத்தத்தில் சிவந்து காரத்தில் எரிய ஆரம்பித்துவிட்டன.

அதிகப்படியான காரம் அவனை நிலைகுழையச் செய்ய, அவள் வெற்றிடையை பற்றிக்கொண்டவன், அதில் தன் மொத்த அழுத்தத்தையும் இறக்க, வெண்ணிற அவளிடை கன்றி சிவந்தேவிட்டது எனலாம். ஆனால், அதையெல்லாம் உணரும் நிலையில் இருவரும் இல்லை.

நிமிடங்கள் கடந்து முத்த யுத்தம் நீண்டிக்கொண்டேப் போக, சரியாக, கதவு தட்டும் சத்தத்தில் அவன் விலகாது முரண்டு பிடித்தாலும், வலுக்கட்டாயமாக அவனை விட்டு விலகி நின்றாள் வேதா. அவள் அணிந்திருந்த பட்டுச்சேலை கலைந்து மாராப்பு விலகியிருக்க, மோக விழிகளுடன் அவளை மேலிருந்து கீழ் நோக்கியவனின் பார்வையில் குங்குமப்பூவாய் சிவந்துவிட்டாள் அவள்.

ஆடையைச் சரிசெய்து வேகமாகச் சென்று அவள் கதவைத் திறக்க, புன்னகையுடன் நின்றிருந்த நரேந்திரனோ, பின்னால் ஒருவித தயக்கத்துடன் நின்றிருந்த ராவணை எட்டிப் பார்த்து “மாப்பிள்ளை, சீக்கிரம் தயாராகிட்டு வாங்க. எவ்வளவுநேரம்தான் நாங்களும் காத்திருக்குறது?” என்றுவிட்டு, “லக்கி, நீ சொன்ன மாதிரியே உன்னைத் தேடி வந்துட்டாரு. அம்புட்டு நம்பிக்கை மாப்பிள்ளை மேல”  என்று சொல்லிச் சிரிக்க,

வேதாவோ வெற்றிப் புன்னகை சிந்தினாள் என்றால், அவளை திகைத்து நோக்கினான் ராவண்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!